டெங்கு காய்ச்சலினால் இதுவரை நாடளாவிய ரீதியில் 125 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 ஆயிரம் பேர் பீடிக்கப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வமான தகவல்கள் தெரிவிப்பதாக சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ரேணுகா ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரேணுகா ஹேரத் இந்த தகவல்களை வெளியிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
“உத்தியோகபூர்வ தகவல்கள் அவ்வாறிருக்க சுமார் 15 ஆயிரம் பேர் வரை டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருக்கலாமென வைத்தியர்கள் கருதுகின்றனர். இலங்கை வரலாற்றில் எப்போதுமே இருந்திராத வகையில் தற்போது டெங்கு காய்ச்சல் நாடு முழுவதும் பரவியுள்ளது.
எனவே, டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய உடனடி நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு எடுக்க வேண்டும்.
கடந்த 5 மாதங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. எனினும் 3 மாதங்களுக்கு முன்னரே தடுப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்?
ஏனெனில் யுத்தத்திலேயே அரசாங்கத்தின் அவதானம் இருந்தது. யுத்தமும் அதன் வெற்றியும் முக்கியமானது தான். எனினும் சுகாதார அமைச்சு தனக்குரிய கடமையில் கவனமாக இருந்திருக்க வேண்டும். அதை உரிய முறையில் செய்யாததால் தான் இன்று டெங்குடன் யுத்தம் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது.
அதாவது, பொதுமக்கள் பாதுகாப்புச் செயலணியைக் கூட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது வருடத்தின் 365 நாட்களையும் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தி செயற்பட வேண்டியிருக்கிறது.
இதேநேரம், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு பெறப்பட வேண்டியது முக்கியம். ஏனெனில், கொழும்பு மாநகர எல்லைப் பகுதிக்குள்லேயே வடிகாலமைப்புகள் சீராக இல்லாமையால் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதுடன் குப்பை கூளங்களும் நிரம்பி கிடப்பது இதற்கு சிறந்த உதாரணம்.
எனவே, டெங்கு ஒழிப்புக்கு சுகாதார அமைச்சின் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்கள், கல்வி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றையும் இணைத்துக் கொண்ட ஒன்றிணைந்த வேலைத் திட்டமொன்று அவசியம். அத்துடன் தோட்டப்புறங்கள் மீதும் இதன் போது கவனம் செலுத்தப்பட வேண்டும்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இனிமேலும் தாமதிக்கும் ஒவ்வொரு நாளிலும் உயிரிழப்புகளும், டெங்கினால் பீடிக்கப்படுபவர்களது எண்ணிக்கையும் அதிகரித்தே செல்லும் என்றார்.