லெப னானில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சாத் ஹரிரி தலைமையிலான கூட்டணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் தமது கூட்டணியான 14 மார்ச் முன்னணி தொடர்ந்தும் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்குமென அதன் ஹரிரி தெரிவித்துள்ளார். வேளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின்படி ஹரிரி தலைமையிலான கூட்டணி 128 மொத்த ஆசனங்களில் 71 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஹிஸபுல்லா அமைப்பு 57 ஆசனங்களையே பெற்றுள்ளதுடன் அதன் தலைவர் ஹஸன் நஸ்ருல்லா தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 128 ஆசனங்களில் ஹரிரியின் கூட்டணி 70 ஆசனங்களையும் ஹிஸ்புல்லாஹ் முன்னணி 58 ஆசனங்களையும் கைப்பற்றுமென எதிர்பார்க்கப்பட்டபோதிலும்; வெற்றிபெற்ற அணி எதிர்பார்த்ததைவிட ஒரு ஆசனத்தைக் கூடுதலாக பெற்றுள்ளது.
இங்கு வெற்றி பெற்றவர் தோல்வியடைந்தவர் என எவருமில்லை. லெபனானும் ஜனநாயகமுமே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதெனத் ஹரிரி தெரிவித்துள்ளார். 30 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த அதேவேளை, 50 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லெபனானின் அதிகாரப்பகிர்வு அரசியல் முறைமையின் கீழ் பாராளுமன்றத்தின் 128 ஆசனங்களும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையில் சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.