தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம்: ஆனந்தசங்கரி

007anandasangaree.jpg“தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பதில் சொல்ல வேண்டும். தமிழர்களின் முதல் எதிரி, தமிழ் தேசிய கூட்டமைப்பே” என ஜனநாயக தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையைச் சீரழித்து, அவர்களை அநாதைகளாகவும், விதவைகளாகவும், ஊனமுற்றோர்களாகவும் ஆக்கி அகதி முகாம்களுக்குள் முடக்கியுள்ள பாவத்தையும், பழியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்கவேண்டும்.

புலிகளின் பிடியிலிருந்த அப்பாவித் தமிழர்களை விடுவிக்க முயற்சிக்காமல் புலித் தலைமைகளைக் காப்பாற்றவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபட்டது. ஐரோப்பிய யூனியன், ஐ.நா. என்பன எவ்வளவோ வேண்டியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் யுத்தத்தை நிறுத்தும்படி கோரி,பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கும் புலிகளின் தந்திரத்துக்குத் தாளம் போட்டது.

இதனால் தமிழ் மக்கள் உயிர்களையும் சொத்துக்களையும், இருப்பிடங்களையும், உறவுகளையும் இழந்துள்ளனர். என்றோ ஒருநாள் முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறுதலான அணுகுமுறைகளை மக்கள் புரிந்துகொள்வர். புலிகளின் பிடியிலிருந்து நாங்கள் விடுபட்டிருந்தால் இந்த இழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என உணர்ந்து கொள்வர்.

தமிழர்களின் உயிர்களும் உடைமைகளும் காவு கொள்ளப்படுவதற்குக் காரணமாகவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கொள்ள எவ்வித அருகதையும் கிடையாது. அவ்வாறு இணைந்தால் உயிரிழந்த, காயமடைந்த, அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, புலிகளை ஏகப் பிரதிநிதிகளாகக் கொண்டோர் குறையாக எடைபோடக்கூடாது. மேயர் பதவிகளுக்காகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காகவோ தமிழ்க் கூட்டமைப்பைப் போல் விலைபோக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு தடியால் தொடுவதற்குக் கூட நாங்கள் தயாரில்லை.

புலிகள் அழிந்துவிட்டதால் புலிகளின் பிரதிநிதிகள் எனக் கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் கெளரவமாக பதவி விலகவேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் ஜனநாயகத்தை காப்பாற்ற ஐந்து வருடம் தனியாக நின்று போராடினேன். இதனால் துரோகி என விமர்சிக்கப்பட்டேன். ஆனால் நான் இன்று சரியான பாதையில் உள்ளேன். அதை நிரூபித்தும் விட்டேன்” என்றார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • ராபின் மெய்யன்
    ராபின் மெய்யன்

    தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமை எனத் தம்மைக் கூறிக் கொள்வோர் இனிமேலாவது ஒருவர் குடுமியை ஒருவர் பிடித்துச் சண்டையிடுவதை நிறுத்தி, அபலநிலையில் இருக்கும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இலங்கைத் தீவின் சிறுபான்மை மக்கள் அனைவரினதும் மனித உரிமைகளுக்கும் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் பெற்றுக் கொடுக்குமாறு ஏனைய தமிழ், முஸ்லிம் அரசியல் அமைப்புக்களுடன் ஒன்று சேர்ந்து இந்தியாவை ஒரே குரலில் வற்புறுத்த வேண்டும். இதை விடுத்து ஒவ்வொருவரும் தனித்தனியாக இந்தியாவுக்கு காவடி எடுத்து எதையும் சாதிக்கப் போவதில்லை. தயவு செய்து இனிமேலாவது உங்கள் குறுகிய மனப்பான்மையைக் கைவிட்டு ஒரு இன அழிவைத் தடுத்துநிறுத்துங்கள். இதற்கு சஙகரி அவர்கள் தமது அரசியல் அனுபவத்தினூடாக வழி காட்ட வேண்டும.

    Reply
  • msri
    msri

    தமிழ்மக்களின் பிரதான பாசிச சர்வாதிகார எதிரிக்கு> கைகட்டி வாய்பொத்தி அடிமை குடிமை வேலை செயயும்> உங்களுக்கு பிரதான எதிரி பற்றிய> சமூக விஞ்ஞானப் பகுப்பாய்வும் தெரியுமோ? உங்களுக்கு மகிந்தச் சக்ரவர்த்தியைத் தவிர மற்றெல்லோரும் எதிரிகளே!

    Reply