வட மாகாண முஸ்லிம்கள் மீது உண்மையான பற்றும் பாசமும் உள்ள அவர்களின் எதிர்கால வாழ்வில் அக்கறையும் தன்மானமுள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த எவரும் ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்லமாட்டார்களென தெரிவித்துள்ள மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீன், எதிர்க் கட்சியில் இருந்து நாம் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் எமது சமூகம் எங்கு சென்றிருக்கும் எனவும் கேள்வியெழுப்பினார்.
புத்தளம் வேப்பமடு றஹ்மத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்படைகளினதும் பொலிஸாரினதும் கௌரவிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவ்வாறு கூறினார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் விழா, கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது;
இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடியாது என்று வெளிநாட்டு சக்திகளின் தயவை நாடி சில கட்சிகளும் அமைப்புகளும் செயற்பட்ட போது அதற்கு எதிராகப் பயங்கரவாதிகளைத் தேடி அழிக்கும் பணியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்று செயற்பட்டதன் பிரதிபலனை எமது மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். மூதூரிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், கந்தளாய் பிரதேசத்தில் தஞ்சமடைந்தனர். இம் மக்கள் வெளியேறி வந்த போது பட்ட துன்ப, துயரங்களை நான் நேரடியாகக் கண்டவன்.
இம் முஸ்லிம் மக்களின் நிலையை நான் ஜனாதிபதிக்கு நேரடியாக எடுத்துக் கூறியதையடுத்து அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்ட போது இவர்களைக் குடியமர்த்த வேண்டாம். முதலில் சாம்பூர் மக்களைக் குடியேற்ற வேண்டும் என்றே ரவூப் ஹக்கீம் பேசினார். முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை, உரிமைகளை உணர்ந்து கொள்ள முடியாத தலைமைத்துவமான ஸ்ரீ.ல.மு.கா. எப்படி வடமாகாண முஸ்லிம்களினதும் விடிவுக்கு செயற்படப் போகின்றது? தமது பதவியையும் அரசியல் தலைமைத்துவத்தையும் பாதுகாக்கும் சுயநலப் போக்குக் கொண்ட தலைமைத்துவத்தின் பின்னால் நாம் சென்றிருப்போமெனில் வடமாகாண முஸ்லிம்கள் அடிமைகளாக மாற்றப்பட்டிருப்பார்கள்.
பிரதேசவாதமும், ஊர்வாதமும், தெளிவற்ற கொள்கையும், பேசி மக்களை ஏமாற்றி, ஒற்றுமையைக் குலைத்து அதன் மூலம் சுய நலத்தைத் தக்க வைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.
எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பைப் பேணி அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தும் போது தனிப்பட்ட சுயநலன்களை அடைந்து கொள்ளும் வகையில் சமூகத்தின் விடிவுக்காக பாடுபடுவதைப் போன்று முகம் காட்டுபவர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டிய தேவை சகலருக்கும் ஏற்பட்டுள்ளது.
வடமாகாண முஸ்லிம்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும் மதிப்பிடப்படமுடியாதவை அவற்றுக்கு எதனைக் கொடுத்தாலும் ஈடாக மாறிவிடாது. எவ்வித அரசியல் அதிகாரமுமின்றி எதிர்க் கட்சியில் அமர்ந்து கொண்டு ரவூப் ஹக்கீமினால் முஸ்லிம் சமூகத்துக்கென சாதித்தவை பெற்றுக் கொடுத்தவை, எதுவும் இல்லை.
மறைந்த தலைவர் அஷ்ரப் தமது ஆளுமையினால், இலங்கை அரசியலில் முக்கியமான நிலையில் இருந்து இலங்கை முஸ்லிம்களுக்கு ஆற்றிய பணிகள் பல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சோரம் போகும் தற்போதைய ஸ்ரீ.ல.மு.கா. தலைமைத்துவம் தவறான பாதையில் செல்கின்றது என்பதை அறிந்தும் அதன் பின்னால் செல்வதில் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.