அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இடம்பெயர்ந்து புத்தளத்திலுள்ள மக்கள் அடுத்தகட்டமாக மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்

basil.jpgமீள் குடியேற்றம் செய்யப்படுவதில் அடுத்தகட்டமாக மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்திலுள்ள மக்கள்  விரைவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். இதற்காக ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மன்னார்,  முசலி பிரதேச செயலக பிரிவின் அபிவிருத்தி,  உட்கட்டமைப்பு வசதிகளுக்கென 800 மில்லியன் ரூபாவை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அத்துடன் நானாட்டான்,  முசலியை இணைக்கும் அருவியாறு பாலத்தின் நிர்மாணப் பணிகளை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்..

முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஏழு கிராமசேவகர் பிரிவுகளிலும் 561 குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முசலி,  அரிப்பு கிராமத்திலுள்ள புனித செங்கோல் அன்னை தேவாலய முன்றலில் நடைபெற்ற வைபவத்தில் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மீள்குடியேற்ற,  அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தெற்கையும், வடக்கையும் இணைக்கும் முதலாவது நகரமாக முசலி திகழ்கிறது. புத்தளம் முதல் எழுவன்குளம் வழியாக வரும் பாதையில் முதலாவதாக சந்திக்கும் பிரதான நகரமாக முசலி நகரம் அமைவது. சந்தோசத்தை கொடுக்கிறது.

முசலி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு சற்று தாமதங்கள் ஏற்பட்டன. இதற்காக ஜனாதிபதி உங்கள் அனைவரிடமும் தனது கவலையை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இதற்கு ஈடுசெய்யும் வகையில் மன்னார் அரச அதிபரினால் முன்வைக்கப்பட்ட முசலி பிரதேச செயலக பிரிவு அபிவிருத்தி, உட்கட்ட மைப்புக்காக மதிப்பீடு செய்யப்பட்ட 800 மில்லியன் ரூபாவையும் குறைவின்றி உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கிவிட்டார்.

இடம்பெயர்ந்தாலும், அகதிமுகாம்களில் தங்கியிருப்பதும் இன்று நேற்று நடைபெற்றதல்ல. 20, 30 வருடங்களாக மாறி மாறி மக்கள் அகதி முகாம்களில் இருக்கின்றனர். மலையக மக்களும் கடந்த காலங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் குடிபுகுந்தனர். அவர்களும் அகதிகளாக இடம்பெயர்ந்து வவுனியா பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர். இதனை சில மலையக தலைவர் இன்று மறந்திருந்தாலும் நாம் மறந்துவிடவில்லை என பஸில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தாh

கனேடிய எம்.பி பொப் ரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைப்பு

bob-rae.jpgகனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் இலங்கைக்கு நேற்று இரவு வந்திறங்கிய சமயம் விடுதலை புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவரை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது..

தமிழர் நிலை நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது : சுஷ்மா

sushma.jpgஈழத்தில் தமிழர்கள் படும் பாட்டையும், வேதனையையும் நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது என்று ராஜ்யசபாவில் பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் வேதனையுடன் குறிப்பிட்டார். ராஜ்யசபாவில் திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் சார்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து முக்கியமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் சார்பில் பேசிய ஜெயந்தி நடராஜன், ஈழத் தமிழர் நிலை குறித்து கவலை தெரிவித்தார். அதிகாரப்பகிர்வை இலங்கை அரசு செய்தே ஆக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அகாஷி வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்

yasusiakasi.jpgநான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்தடைந்த ஜப்பானிய விஷேட தூதுவர் யசூசி அகாசி நேற்று காலை வவுனியா மெனிக் பாமிற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை அவர் கேட்டறிந்ததோடு அரச அதிகாரிகளுடனும் பேச்சு நடத்திய தாக வவுனியா மாவட்டச் செயலகம் கூறியது.

அனர்த்த நிவாரண மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம். பி. உயர்படை அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ஸ் மற்றும் ஜப்பானிய தூதரக அதிகாரிகள் ஆகியோரும் ஜப்பானிய தூதுவருடன் முகாம்களுக்கு விஜயம் செய்தனர்.

நிவாரணக் கிராமங்களை பார்வையிட்ட ஜப்பானிய விசேட தூதுவர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் தொடர்பில் திருப்தி தெரிவித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக வட்டாரங்கள் கூறின. ஜப்பானிய தூதுவர் இன்று (10) வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்த இருதரப்பு உறவுகள் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், ஜப்பானினூடாக வழங்கப்படவுள்ள உதவிகள் என்பன குறித்து பேச்சு நடத்த உள்ளார்.நாளை (11) அவர் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து யசூசி அகாசி நாடு திரும்பவுள்ளார். ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி 18வது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு புதிய எம்.பீக்கள் நேற்று சபையில் சத்தியப்பிரமாணம்

06arliament.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் சந்திம வீரக்கொடியும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நந்திமித்ர ஏக்கநாயக்கவும் நேற்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட மற்றும் மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. அலிக் அலுவிஹார ஆகியோரின் மறைவையடுத்து நிலவிய வெற்றிடங்களுக்கே இவ்விருவரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடிய போதே இவ்விருவரும் எம்.பீக்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வடபகுதிக்கு துரிதமாக மின்சாரம் வழங்க ரூ.9550 மில்லியன் ஒதுக்கீடு

cey-elc.jpgவட பகுதிக்கு துரிதமாக மின்சார வசதி அளிப்பதற்காக 9550 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு நேற்று கூறியது. வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வடபகுதிக்கு துரிதமாக மின்சார வசதி அளிக்க 3650 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு, சகல கிராமங்களுக்கும் மின்சார வசதியளிக்கவென 5200 மில்லியன் ரூபாவும், மின் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்க 700 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

வடபகுதிக்கு மின்சார வசதி வழங்குவதற்கான சில திட்டங்கள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய திட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் அனுமதியுடன் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதோடு இதன் கீழ் 30 வருடங்களாக பயங்கரவாதிகளால் சேதமாக்கப்பட்ட மின்மாற்றிக் கோபுரங்கள் மின் விநியோக உப நிலையங்கள் என்பன அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் கிராமிய மின்சாரத் திட்டங்கள் பலவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது-

ஜப்பான் பொருளாதார ஒத்துழைப்பு வங்கியின் 1400 மில்லியன் ரூபா கடனுதவியுடன் 132 கிலோ வோர்ட் மின் மாற்றிக் கோபுரத் தொகுதியொன்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை நிர்மாணிக்கப்பட உள்ளது. இது தவிர 2250 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியில் இருந்து சுண்ணாகம் வரை 132 கிலோ வோர்ட் மின் மாற்றிக் கோபுரத் தொகுதியொன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

வடபகுதிக்கான மின் விநியோக திட்டங்களை மேம்படுத்துவதற்காக 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மூன்று வருட திட்டத்தின் கீழ் வடக்கிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிப்பதற்காக 5200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டபிள்யு டி. ஜே. செனவிரத்ன கூறினார். துரிதமாக மின்சார வசதி அளிக்கும் வகையில் 400 கிராமங்களில் கிராமிய மின்சார திட்டங்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினை என்பது, விடுதலைப்புலிகளை விட பெரியதாகும்- இந்தியப் பிரதமர்

10manmohan.jpgஇலங்கை தமிழர் பிரச்சினை என்பது, விடுதலைப்புலிகளை விட பெரியதாகும் என்று கூறியிருக்கின்ற இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள், தமிழர்களின் நியாயமான கவலைகளை தீர்த்து வைப்பதற்கு இலங்கை அரசாங்கம், புதிய சிந்தனைகள் மற்றும் துணிச்சலுடன் செயற்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய இந்தியப் பிரதமர், இலங்கை தமிழ் மக்கள் சம உரிமைகளைப் பெற்ற மக்களாக வாழ வழி செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

“இலங்கையின் மக்களுடன் எமக்கு பல நூற்றாண்டுகால உறவுகள் இருக்கின்றன. அங்குள்ள தமிழ் மக்களின் நலன் குறித்து எமக்கு ஆழமான மற்றும் பிணைப்புடனான ஆர்வங்கள் இருக்கின்றன. தமிழ் பிரச்சினை என்பது விடுதலைப்புலிகளை விட பெரியதாகும். இலங்கை மக்கள் சம உரிமை பெற்ற குடிகளாக, கௌரவத்துடன் வாழ்வதற்கான அவர்களது அபிலாசைகளை தீர்த்துவைக்க புதிய சிந்தனைகளையும், துணிச்சலையும் காண்பிக்கும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார் மன் மோகன் சிங்.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றும் மன்மோகன் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் செயற்திறன் மிக்க பங்கை ஆற்றியிருப்பதாகவும், இந்த தேவைகளுக்காக இந்தியா ஏற்கனவே 500 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் கூறினார்.

கூட்டமைப்பு எம்.பி கிஷோர் நடுநிலை

06arliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கு பாராளுமன்றம் நேற்று (09) அங்கீகாரம் வழங்கியது.

சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக ஏழு வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க முன்வைத்த பிரேரணை மீதான விவாதம் நிறைவடைந்ததும், வாக்கெடுப்புக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா சபாநாயகரிடம் கோரினார்.

எனினும் வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் மாத்திரமே எதிராக வாக்களித்தனர். கூட்டமைப்பைச் சேர்ந்த சிவநாதன் கிஷோர் எம்.பி. வாக்களிக்காது நடுநிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அவருக்கு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து பாராட்டைத் தெரிவித்தனர்.

வீதிகளைப் புனரமைக்க கடந்த மூன்று வருடங்களில்; 9400 மில்லியன் செலவு

06arliament.jpgநாட்டின் பல பகுதிகளிலும் வீதிகளைப் புனரமைக்க கடந்த மூன்று வருடங்களில் 9444.5 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியதாக அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலா பிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தம் ஒன்று இடம்பெற்ற போதும் வீதிப்புனரமைப்பு வேலைகள் நூறு வீதம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக் காட்டினார். வீதிப் பராமரிப்பு நிதியத்திலிருந்து வீதி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு கடந்த 2006 இல் 2934 மில்லியன் ரூபாவும்,  2007 இல் 3410 மில்லியன் ரூபாவும்,  2008 இல் 3103.5 மில்லியன் ரூபாவும்,  ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

கல்வியை முடிந்த மாணவிகளுக்குத் தொழிற்பயிற்சி

மன்னாரில் பாடசாலைக்கல்வியை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் பிரதேசச் செயலாளரின் தலைமையில் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.

பாடசாலைக் கல்வியை தொடராத நிலையில் கடற்கரைப்பகுதியில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 20 மாணவர்களுக்கே மேற்படி தொழிற் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சின் நிதி அனுசரணையில் மேற்படி தொழில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கும் கடற் தொழிலுடன் சம்பந்தப்பட்ட வெளி இணைப்பு இயந்திரம் திருத்துதல் (அவுட் மோட்டர்) தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் சிறப்பு விருந்தினராக ஈ.பி.டி.பி அமைப்பின் மாவட்ட பொருப்பாளர் லிங்கேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி 20 தொழிற்பயிற்சியாளர்களுக்கும் மாதம் ஒன்றிற்கு 4000/= கொடுப்பணவுகள் வழங்கப்படும் எனவும் 06 மாதங்களைக் கொண்டதாக பயிற்சி அமையும் என்றும் மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.