இலங்கை தமிழர் பிரச்சினை என்பது, விடுதலைப்புலிகளை விட பெரியதாகும் என்று கூறியிருக்கின்ற இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள், தமிழர்களின் நியாயமான கவலைகளை தீர்த்து வைப்பதற்கு இலங்கை அரசாங்கம், புதிய சிந்தனைகள் மற்றும் துணிச்சலுடன் செயற்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய இந்தியப் பிரதமர், இலங்கை தமிழ் மக்கள் சம உரிமைகளைப் பெற்ற மக்களாக வாழ வழி செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
“இலங்கையின் மக்களுடன் எமக்கு பல நூற்றாண்டுகால உறவுகள் இருக்கின்றன. அங்குள்ள தமிழ் மக்களின் நலன் குறித்து எமக்கு ஆழமான மற்றும் பிணைப்புடனான ஆர்வங்கள் இருக்கின்றன. தமிழ் பிரச்சினை என்பது விடுதலைப்புலிகளை விட பெரியதாகும். இலங்கை மக்கள் சம உரிமை பெற்ற குடிகளாக, கௌரவத்துடன் வாழ்வதற்கான அவர்களது அபிலாசைகளை தீர்த்துவைக்க புதிய சிந்தனைகளையும், துணிச்சலையும் காண்பிக்கும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார் மன் மோகன் சிங்.
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றும் மன்மோகன் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் செயற்திறன் மிக்க பங்கை ஆற்றியிருப்பதாகவும், இந்த தேவைகளுக்காக இந்தியா ஏற்கனவே 500 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் கூறினார்.