அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

களனி பல்கலைக்கழக மாணவர்கள்-பிரதேசவாசிகள் மோதல்

university-of-kelaniya.jpgகளனி பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பிரதேசவாசிகளுக்கும் இடையே இன்று காலை மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மோதலின் போது வீதியில் சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து பிரதான வீதி வழியான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு, பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதல் சம்பவத்தையடுத்து, களனிப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிவிக்கப்படுகிறது. எனினும் மருத்துவ பீடம் வழமைபோல் இயங்குமென பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன

வடக்கில் விவசாயத்துறை அபிவிருத்திக்கு இந்தியா உதவ வேண்டும் – பேராசிரியர் சுவாமிநாதனிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

mahi-suwamy.jpgஎல்.ரீ.ரீ.ஈ. யுடனான மோதலின்போது சின்னாபின்னமாக்கப்பட்ட வட பகுதியின் விவசாயத்துறையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியா உதவ வேண்டுமென இந்திய பேராசிரியர் சுவாமிநாதனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையெனக் கருதப்படும் பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் ஜனாதிபதியை நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வட பகுதியில் விவசாயத்துறையில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையிலான புதிய உந்து சக்தியொன்று அவசியமென பேராசிரியர் சுவாமிநாதனிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,  புலிகளுடனான மோதல்கள் காரணமாக சீர்குலைக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களின் வாழ்வாதார தொழில்கள் மீளவும் கட்டியெழுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

எல்.ரீ.ரீ.ஈ.யினரின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் மிகவும் துயரங்களுக்குள்ளான வடக்கு வாழ் மக்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகுமெனக் கூறிய ஜனாதிபதி,  வடக்கில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மக்கள் அவர்களது வாழ்வாதார தொழிலான விவசாயத்துறையில் பின்பற்ற வேண்டிய உத்திகளை திட்ட வரைபாக சமர்ப்பிக்குமாறு பேராசிரியர் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுத்தார்

அனைத்துக் கட்சிக்குழு முகாம்களுக்கு செல்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் – சபையில் ஜயலத் எம்.பி.கோரிக்கை

parliament-of-sri-lanka.jpgபாராளு மன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றை வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களுக்கு சென்று பார்வையிட அரசு அனுமதிக்க வேண்டுமென ஐ.தே.க. எம்.பி.ஜயலத் ஜயவர்த்தனா கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரசின் அழைப்பிற்கிணங்கவே இலங்கையில் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அவர்களின் மனிதாபிமானப் பணிகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பதும் ஒன்று.

ஆனால், வவுனியா அகதிகள் முகாம்களில் உள்ளவர்களின் பல உறவினர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களைக் கண்டு பிடித்துக் கொடுக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.

சர்வதேச செஞ்சிலுவைச் சர்வதேசத்திற்கு அரசு இவ்வாறு தடை விதித்திருப்பது ஒரு பாரதூரமான மனித உரிமை மீறல். எங்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் காணாமல் போனால் நாம் எப்படித் துடிப்போம் அதே நிலைதான் தமிழ் மக்களுக்கும் இருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மக்களின் வேதனைகளை உணர்ந்து கொள்ளவேண்டும்.

வவுனியா அகதி முகாம்களில் குடிநீர், போஷாக்கு, மருத்துவம் உணவு விடயங்கள் தொடர்பில் நாம் திருப்திப்படமுடியாத நிலையே காணப்படுகின்றது. அந்த முகாம்களில் தினமும் 10 முதல் 15 வரையான முதியவர்களும், சிறுவர்களும் மருத்துவ வசதிகளின்றி உயிரிழக்கின்றனர். இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த முகாம்களில் 3500 கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளனர். இவர்கள் பிரசவத்திற்குப் பின்னரும் மீண்டும் அந்த முகாம்களுக்கே அனுப்பப்படுகின்றனர். அங்குள்ள நிலைமையில் அந்தக் குழந்தையை பராமரிக்கவோ, அரவணைக்கவோ முடியாது.

அகதிமுகாம்களுக்கு செல்வதற்கு எமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. நான் பல முறை முயன்றும் எனக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே, பாராளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அகதிமுகாம்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட அரசு அனுமதி வழங்க வேண்டும்.

சப்ரகமுவ மாகாண ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் – ஜனாதிபதியுடனான பேச்சையடுத்து ஆறுமுகன் உறுதி

arumugam-thondaman.jpgஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண மலையக ஆசிரியர்கள் எவரும் மீண்டும் பாடசாலைக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் வழமைபோல் தமது இரு வருட உள்ளக பயிற்சியை தொடர முடியுமென்று இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

சப்ரகமுவ மாகாண பாடசாலைக்கு நியமனம் பெற்ற மலையக ஆசிரியர்களில் சிலர் இரு வருட உள்ளகப் பயிற்சிக்காக ஆசிரியர் பயிற்சி நெறிக்கு தெரிவு செய்ய ப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் சிலருக்கு சப்ரகமுவ மாகாண சபை இரு வருட விடுமுறை வழங்க மறுப்புத் தெரிவித்ததுடன் மீண்டும் பாடசாலைக்கு வருகை தந்து தமது கடமையை பொறுப்பேற்க வேண்டும்.

இல்லையேல் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதாக வலயக் கல்விப் பணிமனையினூடாக கடிதம் மூலம் அறிவித்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை நேரில் சந்தித்து அவரது கவனத்தில் கொண்டு வந்தனர்.

உடனடியாக செயற்பட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடி உரிய பணிப்புரையை விடுத்துள்ளார். இதன்படி ஆசிரியர் கல்லூரிக்கு சென்று பதிவு செய்யப் பட்ட சப்ரகமுவ மாகாண மலையக ஆசிரியர்கள் தொடர் ந்து இருவருட உள்ளக பயிற்சியை தொடர முடியும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழறுபடிகள் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதற்கு இப்பகுதி தமிழ் அதிகாரிகள் தான் பிரதான காரணம். தமிழ் மக்களுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் தமது கடமையை சரிவர செய்தால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை என்றும் கூறினார்.

வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் வானொலி சேவைகள் ஆரம்பம் – கொக்காவிலில் 150 மீட்டர் உயரமான கோபுரம் அமைக்கப்படும்

வடக்கின் ‘வசந்தம் தொலைக்காட்சி’ மற் றும் ‘வசந்தம் வானொலி’ சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமை ச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (10) நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வடக்கில் தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுயாதீன தொலைக்காட்சி சேவையின் கீழ் உள்ள வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வசந்தம் வானொலி என்பன வடக்கு பகுதிமக்களுக்காக அங்கு ஆரம்பிக்க உள்ளோம்.

இதற்காக 150 மீட்டர் உயரமான தொலைத் தொடர்பு கோபுரமொன்று கொக்காவில் பகுதியில் அமைக்கப்படும். இதற்காக ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

சர்வதேச நாணய நிதியக்கடன் மாத இறுதியில் கிடைக்கும் சாத்தியம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருந்த 1.9 பில்லியன் டொலர் கடனுக்கான அனுமதி ஜூன் இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். நாம் பெற்றிருக்கும் தரவுகளின் பிரகாரம் இந்த மாத இறுதிக்கு முன்பாக அது இடம்பெறும் என்று கப்ரால் நேற்று புதன்கிழமை ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது சர்வதேச நாணய நிதியக்கடன் தொடர்பான அவசர நிலைமையானது சிறிதுசிறிதாக குறைவடைந்து வருகிறது. இதனால் அது தேவையில்லை என்று நாம் கூறவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் பொருளாதாரப்பின்னடைவால் ஏற்பட்ட அச்சுறுத்தலிலிருந்தும் இலங்கை சிறிதளவு விடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுக்காக காத்திருக்கும் அதேசமயம், இருதரப்பு ரீதியான கடன் பெறும் பேச்சு வார்த்தையை மத்தியவங்கி ஏற்கனவே ஆரம்பித்திருக்கிறது. லிபியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை தற்போது மேற்கொண்டு வருகிறோம். மற்றொரு நாட்டிடமிருந்து மேலும் 500 மில்லியன் டொலர் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டில் நாம் ஈடுபட்டு வருகிறோம் என்றும் கப்ரால் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் இது தொடர்பாக உடனடியாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பான தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என்று கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 14 நாட்களுக்குள் தமது கடமையைப் பொறுப்பேற்காதவர்களின் நியமனங்கள் ரத்து

11edu-min.jpgஅரசாங் கத்தினால் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 14 நாட்களுக்குள் தமது கடமையைப் பொறுப்பேற்காதவர்களின் நியமனங்கள் உடனடியாக ரத்துச் செய்யப்படுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அண்மையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 957 பேரில் 200 பேரே கடமைக்குச் சமூகமளித்துள்ளமை தெரியவந்துள்ளது. தமக்கு வசதியான பாடசாலைகளைத் தேடி ஏனையோர் அலைந்து திரிகின்றனர். எனினும் எக்காரணத்திற்காகவும் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு கற்பிக்கும் நடவடிக்கைகளில் 49824 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரெனவும் அமைச்சர் தெரிவித்தார். இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவர்களுள் 80 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளதாகவும், க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் இம்முறை 4,000 பேர் தோற்றியதுடன் இவர்களில் 80 வீதமானோர் சித்தியடைந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அமை ச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பதிரன எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்.யூ.ஜே.எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான வேளையில் ரணவீர பதிரண எம்.பி. தமில் மொழிமூலம் கற்பிக் கும் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாகக் கேள்வியெழுப்பினார்.

இக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்:-

தமிழ் மொழிமூல ஆசிரியர்கள் 13,213 பேர் சேவையில் உள்ளதுடன் கடந்த ஜூன் மாதம் நியமனம் வழங்கப்பட்ட 959 பட்டதாரி ஆசிரி யர்களிலும் 150 தமிழ் பட்டதாரிகள் உள்ளனர். அத்துடன் 110 ஆங்கில மொழிமூல ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு வாரங்களுக்குள் ஆராய்ந்து தேவைப்படும் ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான விளம்பரங்களை பிரசுரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச் சர் தெரிவித்தார்.அதேவேளை கடந்த ஜூன் முதலாம் திகதி 957 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனரெனினும் அதில் இருநூறு பேரே கடமைக்குச் சமுகமளித்துள்ளனரென்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிவாரணக் கிராமங்களில் கண் சிகிச்சை முகாம் – ஸ்டாண்டட் சார்ட்டட் வங்கி ஒரு மில். அமெ. டொலர் உதவி

வடக்கு வசந்தத்தின் கீழ் வவுனியா நிவாரணக் கிரா மங்களில் தங்கியுள்ள மக்களுக்கென இலவச கண் சிகி ச்சை முகாம்களை நடாத்துவதற்கு ஸ்டேண்டட் சார்ட்டட் வங்கி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கு முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுடன் ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கிப் பிரதி நிதிகள் இணக்கப்பாட்டு உடன்படிக்கையிலும் கைச் சாத்திட்டுள்ளார்கள்.

இந்நிதியுதவியின் மூலம் இலவச கண் சிகிச்சை முகாம்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கொண்டுள்ளார். கண் சிகிச்சை முகாம்களில் கண் பரிசோதனை, மூக்கு கண்ணாடி வழங்குதல் உட்பட கண்ணோடு தொடர்பான குறைபாடுகளுக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரான்ஸின் பல மில்லியன் ரூபா உதவியில் ஏ15 வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

trincomalee.jpgஏ15 என அழைக்கப்படும் திருகோணமலை மட்டக்களப்பு நெடுஞ்சாலை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் ஒருங்கிணைந்த திருகோணமலை உட்கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பல மில்லியன் ரூபா இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை கொழும்பு வீதியிலுள்ள 4 ஆம் மைல் கல் சந்தியிலிருந்து ஓட்டமாவடியிலுள்ள திருக்கொண்டியா மடு சந்தி வரையான வீதிப் புனரமைப்பும், அதன் கீழ் வருகின்ற 5 பாலங்கள் நிர்மாணமும் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது 4 ஆம் கட்டைச் சந்தியிலிருந்தும், திருக்கொண்டியாமடு சந்தியிலிருந்தும் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறால்குழி பால நிர்மாணத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா, மூதூர், வெருகல், வாகரை ஊடாகவே ஏ15 நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டம் நிறைவடைந்ததும் இப்பகுதிகள் அதிக வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைனா ஹாபர் பொறியியல் நிறுவனம் இந்தப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் மருதானை விடுதியில் தற்கொலை

மருதானையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஒருவர் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மருதானையிலுள்ள விடுதியிலிருந்து மருதானை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சவூதியைச் சேர்ந்த 50 வயதுடைய அல்சாரி இப்ராஹிம் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவருகிறது.

இந்தச் சவூதி பிரஜை கடந்த 7 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். தனது பிள்ளைகள் மற்றும் மனைவி தன்னை கொலை செய்ய முயற்சிப்பதால் தான் இலங்கைக்கு வந்ததாக உயிரிழந்த சவூதி அரேபிய பிரஜை தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த மருத்துவர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கையில் பெண்ணொருவரை தேடியே தாம் இங்கு வந்த தாகவும் அவர் கூறியுள்ளார். விடுதி அறையில் சவூதி பிரஜை விழுந்து கிடப்பதைக் கண்ட விடுதி ஊழியர்கள் அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமல் எதிரிமான தலைமையில் விசாரணை நடைபெறுகின்றது.