அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கண்டிக்கு அழைத்து வரப்பட்ட நலன்புரி நிலைய சிறுமிகள்

kandy-parahara.jpgவவுனியா அகதிகள் முகாமிலிருந்து ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவினால் பொறுப்பேற்கப்பட்டு வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களில் 73 சிறுமிகளை நாமல் ராஜபக்ஷ தலைமையிலான “இளைஞர்களின் நாளை’அமைப்பினர் மத்திய மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் கண்டிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கண்டிக்கு அழைத்துவரப்பட்ட சிறுமிகளை கண்டி மகா மாயா தேசியக் கல்லூரி மாணவிகளும் அதிபர் ஐ.விதானாச்சியும் வரவேற்றதுடன், அங்கு கலை நிகழ்வுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன. மாலை தலதாமாளிகைக்கு விஜயம் செய்து தரிசித்ததோடு இரவு பெரஹராவையும் கண்டு கழித்தனர். நாமல் ராஜபக்ஷவும் இவர்களோடு கலந்துகொண்டார்.

நேற்று புதன்கிழமை காலை பேராதனைப் பூங்காவிற்குச் சென்ற இவர்களை கண்டிப் பெண்கள் பாடசாலைகளின் மாணவிகள் வரவேற்றனர். கண்டிப் பெண்கள் சாரணியர் மாணவிகள் கலை நிகழ்வுகளை நடத்தினர்.

கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை, சொர்ணாலி பேராதனை கனிஷ்ட வித்தியாலயம், அந்தெஸ்ஸ மகா வித்தியாலயம், தீரானந்த மகா வித்தியாலயம் ஆகியவற்றிலிருந்து தலா 10 மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த ஒன்று கூடலின் போது விசேட அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் கலந்து கொண்டு பராமரிப்பு சிறுமிகளுக்கு புத்தகங்கள், உடைகள், பாதணிகள், உணவுப் பண்டங்கள் வழங்கினார்.

“இளைஞர்களின் நாளை’ அமைப்பினர் மற்றும் இவர்களைப் பராமரிக்கும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்தினைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். தாய், தந்தை, உறவினர்களை இழந்து செஞ்சோலையில் பராமரிக்கப்பட்டவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாளை வெளியாகவுள்ள தீர்ப்பு குறித்து ஆங் சான் சூ கி அச்சம்

miyanmar_s.pngமியன்மார் எதிரணித் தலைவி ஆங் சான் சூ கிக்கு எதிரான விசாரணை குறித்த தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்தீர்ப்பு வலி மிகுந்ததாக இருக்குமென தான் அச்சமடைந்துள்ளதாக ஆங் சான் சூ கி தெரிவித்துள்ளார்.  நாளை வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பில் சூ கிக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ரங்கூனின் இன்செய்ன் சிறை வளாகத்திலுள்ள நீதிமன்றத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையின் இறுதிக்கட்ட வாதத்தை சூ கியின் வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். முன் அனுமதி எதுவுமின்றி அமெரிக்கரொருவரைத் தனது வீட்டில் தங்க அனுமதித்ததன் மூலம் வீட்டுக்காவல் விதிகளை மீறியதாக சூ கி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இறுதிநாள் விசாரணைகளை பார்வையிடுவதற்கு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் கவலையைத் தரும் தீர்ப்பே வழங்கப்படுமெனத் தான் அச்சமடைந்துள்ளதாக சூ கி தூதுவர்களுக்குக் கூறியதாக அங்கு பிரசன்னமாயிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத தூதுவரொருவர் தெரிவித்துள்ளார். மேலும், துரிதமாகத் தீர்ப்பு வெளிவர முயற்சித்தமைக்காக தூதுவர்களுக்கு சூ கி நன்றியும் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் சட்டரீதியாகக் கையாளப்பட்டால் தீர்ப்பில் சாதகமான மாற்றம் வருமெனத் தாம் சிறிது நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சூ கியின் வழக்கறிஞர்கள், இவ்வழக்கு அரசியலுடன் தொடர்புடையது என்பதால் நீதிமன்றத்தின் தீர்மானத்தை தம்மால் புரிந்துகொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன், அரசியல் வழக்குகளில் எந்தவொரு பிரதிவாதியும் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியங்களைத் தான் ஒருபோதும் பார்த்ததில்லையெனத் தெரிவித்துள்ள வழக்கறிஞரும் சூ கியின் கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் பேச்சாளருமான நியான் வின் எம்மால் முடிந்தளவு நாம் சிறப்பாகப் பணியாற்றியுள்ளோம். மோசமான முடிவுகளைச் சந்திப்பதற்கு அவரும் (சூ கி) தயாராகியுள்ளாரெனத் தெரிவித்துள்ளார்.
 

இ.ஒ.கூ. தாபனத்தில் டிஜிட்டல் கலையக தொழில்நுட்பம் – அமைச்சர் யாப்பா திறந்து வைப்பு

images-radio.jpgஒலிநாடா, இசைத் தட்டுகள், இறுவட்டுகள், யாவற்றையும் டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் சுவடி கூடத்தில் சேகரித்து தேவையான நேரத்தில் எடுத்து கலையகத்தின் ஊடாக நேரடியாக ஒலிபரப்பு செய்வதற்கான கணனி தொடர்பு முறையில் செயல்படும் புதிய கலையகத் தொடரை ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உத்தி யோகபூர்வமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று திறந்து வைத்தார்.

ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் சகலவற்றையும் சுவடிக் கூடத்திற்குள் உட்புகுத்துவதற்கு 33 வருட காலம் தேவைப்படும் என்று தொழில்நுட்ப பொறியியலாளர்கள் தெரிவித்தாலும், இங்குள்ள அனைத்தையும் கட்டிக் காக்க முழு மூச்சுடன் செயல்பட வேண்டும். இது எங்கள் சொத்து இதனை இரவு பகலாக பாதுகாப்பது எங்கள் கடமை என்றார்.

10580 பாடல்கள் அடங்கிய “ஹாட் டிஸ்க்” அமைச்சர் பிரியதர்ஷன யாப்பாவிடம் முன்னாள் ஊழியரும், கலைஞருமான ஆரியதாச பீரிஸ் கையளித்தார். அத்தோடு ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட 99 வருட பழைமை வாய்ந்த இசைத் தட்டு ஒன்று தலைவர் ஹட்சன் சமரசிங் கவிடம் ஆரியதாச பீரிஸால் வழங்கப்பட்டது.

இலங்கையின் நடுநிலை கொள்கைக்கு பஹ்ரெய்ன் பிரதமர் பாராட்டு

kalifa-shik-binsalman.jpgஅரபு நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடுநிலையான கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றமையைப் பாராட்டுவதாக இலங்கை வந்துள்ள பஹ்ரெய்ன் இராச்சியத்தின் பிரதமர் ஷேய்க் கலிபா பின் சல்மான் அல்- காலிஃபா தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் அரபு நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டையும், நடுநிலைக் கொள்கையையும் கொண்டுள்ளமை பாராட்டுக்குரியதென்று அவர் தெரிவித்தார். பஹ்ரெய்ன் பிரதமர் தமது இல ங்கை விஜயம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமது இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், நீண்டகால ஆழமான உறவின் ஒரு புதிய மைல் கல்லாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் பரஸ்பர வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பில் இணக்கம் கண்டிருப்பதாகத் தெரிவித்த பஹ்ரெய்ன் பிரதமர், பஹ்ரெய்ன் இராச்சியத்தின் மேம்பாட்டுக்காகப் பங்களிப்புச் செய்துவரும் இலங்கை யர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

வவுனியா நகரில் பஸ் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் நாளை முதல் தளர்வு – அமைச்சர் டளஸ் அழகப்பொரும தகவல்

dallus_allahapperuma.jpgவவுனியா நகரில் இரவு 7:30 மணியுடன் நிறுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைகள் நாளை 31 ஆம் திகதி முதல் அதற்குப் பின்னரும் தொடர்ந்து நடத்தப்படும். இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பொரும இன்று வவுனியாவில் தெரிவித்தார்.

இன்று காலை வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சும் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வவுனியா மக்களுக்கு சிறந்த போக்குவரதது சேவையை வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரஜரட்ட ரயில் சேவை நாளை 31 ஆம் திகதி மீண்டும் வவுனியா ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த ரயில் நாளை அதிகாலை 3:15 மணிக்கு வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் இதற்கு முன்னர் வவுனியா வரை நடத்தப்பட நகரங்களுக்கிடையிலான  ஐந்து கடுகதி ரயில் சேவைகளும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டன. இப்போது அவை அநுராதபுரம் வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் இச்சேவைகளும் வவுனியாவரை நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். 

இந்திய பஸ் வண்டிகள் இலங்கையில் தண்டவாளத்தில் ஓடுகின்றன. – இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் வியப்பு

rail_bus000.jpgதரையில் ஓடும் இந்திய பஸ் வண்டிகள் இலங்கையில்; தண்டவாளத்தில் ஓடுகின்றன. இந்தியாவில் கூட நாம் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை.  இலங்கையில்தான் முதற் தடவையாக எமது நாட்டுத் தயாரிப்பான அசோக்லேலண்ட் பஸ்கள் இப்படி மாற்றப்பட்டு ரயில்பஸ் ஆக சேவையில் ஈடுபட்டுள்ளது. எனவே இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் இப்படி ரயில்பஸ்களைத் தயாரிக்க வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் கூறினார்.

கிழக்கு மாகாண சபைக்கு இந்தியா உதவியாக வழங்கிய பஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது ‘ரயில்பஸ்’ சேவையின் ஆரம்ப வைபவம் நேற்று மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே  அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்குமிடையில் சேவையில் ஈடுபடுவதற்கும்,  கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் சேவையில் ஈடுபடுவதற்கும் 5 ரயில் பஸ்களை தயாரிப்பதற்காக இந்தியா 44 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 10 பஸ்களை வழங்கியது.

அத்தோடு தயாரிப்புச் செலவாக இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு 22 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.  இதற்காக மொத்தம் 66 மில்லியன் ரூபாவை இந்தியா செலவிட்டுள்ளது.

இந்தச் சேவையானது இந்திய – இலங்கை நட்புறவுக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும்.  இந்நிகழ்வின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பஸ்கள் இலங்கையில், தண்டவாளத்தில் ஓடும் ரயில் பஸ்களாக தற்போது மாற்றப்பட்டு சேவையில் ஈடுபடுவதுதான் என்றார்.

பாக். உயர் நீதிமன்றத்தில் முஷாரப் ஆஜராகவில்லை

musharap.jpgபாகிஸ் தான் முன்னால் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு எதிரான வழக்கு நேற்று பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முஷாரபோ அல்லது அவர் சார்பாகவோ எவரும் ஆஜராகவில்லை. பாகிஸ்தானில் அவசர நிலையை அமல்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்கும்படி உயர் நீதிமன்றம்; உத்தரவிடடிருந்தும் முஷாரப் சார்பில் நேற்று யாரும் ஆஜராகவில்லை.

பாகிஸ்தானில் கடந்த 99ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து அதிபரானவர் முஷாரப். தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி உள்ளிட்ட 60க்கும் அதிகமான நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து, 2007ம் ஆண்டு அவசர நிலையை பிறப்பித்தார்.

முன்னாள் பிரதமர்கள் பெனசிர் புட்டோவும், நவாஸ் ஷெரீப்பும் இணைந்து பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்ததன் விளைவாக, முஷாரப் ஆதரவு கட்சிகள் தோல்வியைத் தழுவின. பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக முஷாரப் பதவி விலகினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட இப்திகார் அலி சவுத்ரி மீண்டும் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் அவசர நிலையை கொண்டு வந்ததை எதிர்த்தும்,  நீதிபதிகளை பதவி நீக்கம்  செய்ததைக் கண்டித்தும்,  வக்கீல் சங்கங்கள்; உயர் நீதிமன்றத்தில்; கடந்த வாரம் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி தலைமையிலான 14 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு விசாரித்தது.
 

படைப்பிரிவு தளபதிகளுக்கு பதவி உயர்வு

brigadier_prasanna_silva.jpgவடக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது படைப் பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளாக கடமையாற்றிய மூன்று தளபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ_லுகல்ல தெரிவித்தார்.

அதன்படி  கட்டளைத் தளபதிகளான பிரிகேடியர் பிரஸன்ன சில்வா, பிரிகேடியர் சவேந்ர சில்வா மற்றும் பிரிகேடியர் சாகி கால்லகே ஆகிய மூவரும் மேஜர் ஜெனரல்களாக  பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

வன்னி நடவடிக்கைகளின் போது 55 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரசன்ன சில்வா கடமையாற்றினார். 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக  பிரிகேடியர் சவேந்ர சில்வா கடமையற்றியதுடன் குடும்பி மலையை மீட்ட பிரிகேடியர் சாகி கால்லகே 59 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக வன்னி நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

இதேவேளை 53 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான கமல் குணரத்ன மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் பல கேர்ணல்கள் பிரிகேடியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பிரபல நடிகர் ராஜன் பி. தேவ் காலமானார்

rajan_actor.jpgபிரபல இந்திய  திரைப்பட நடிகர் ராஜன் பி. தேவ் (58) புதன்கிழமை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

தமிழ; மலையாளம்,  தெலுங்கு, கன்னடம், என பல துறைகளில் நடித்துவந்த அவருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர். ஈரல் கோளாறு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ராஜன் பி.தேவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், அவரது உடல்நிலை மோசமாகவே புதன்கிழமை அவர் உயிரிழந்தார்.

ஆலப்புழை மாவட்டம், சேர்தலாவில் பிறந்த ராஜன், ஒரு நாடக நடிகராக வாழ்க்கையைத் தொடங்கினார். காட்டுக்குதிரை என்னும் நாடகத்தில் “கொச்சுவாவ’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்த நாடகம் ஆயிரம் முறை அரங்கேற்றப்பட்டது.

சினிமாவில் “இந்திரஜாலம்’ இவருக்கு முதல் படம். சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்துவந்த ராஜன்,  விரைவிலேயே பிரபலமானார். 30 ஆண்டுகளில் மலையாளம், தெலுங்கு,  கன்னடம், தமிழ் என மொத்தம் 180 படங்களில் அவர் நடித்துள்ளார்

பேருவளை மோதல் சம்பவம்; 131 சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்; ஓகஸ்ட் 6ம் திகதி வரை விளக்கமறியல்

beruwela.jpgபேருவளை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதான 131 சந்தேக நபர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பாக கைதான மற்றும் பொலிஸில் சரணடைந்த சந்தேக நபர்கள் நேற்று (29) களுத்துறை நீதவான் நீதிமன்ற த்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன் போதே 131 சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட களுத்துறை மேலதிக நீதவான் சாந்தினி டயஸ் சம்பவத்துடன் தொடர்புடை யதாகக் கூறப்படும் ஏனைய பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்தார்.

பேருவளை மஹகொட பகுதியில் கடந்த சனியன்று இடம்பெற்ற மோதலில் மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வாசல் தாக்கப்பட்டதோடு இருவர் கொல் லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கைதான சந்தேக நபர்கள் கடந்த 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதோடு இவர்கள் நேற்று வரை (29) விளக்கமறிய லில் வைக்கப்பட்டி ருந்தனர்.

சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிக ளான சிரில் பெரேரா, கனிஷ்க ஆகியோர் ஆஜரானதோடு மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக சட்டத்தரணி பிரேமரத்ன ஆஜரானார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் புஹாரி தக்கியா பிரதான சேகிற்கும் தொடர்பிருப் பதாக ‘பி’ அறிக்கை மூலமும் சாட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளதாகவும், எனவே பிரதான சந்தேக நபர்களை கைதுசெய்யுமா றும் சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், பொலி ஸார் விசாரணைகளை வேறு பக்கம் திருப்ப முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், சந்தேக நபர்கள் சார்பாக ஆஜ ரான சட்டத்தரணி சிரில் பெரேரா இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததோடு சம்பவ நேரம் இரவு 12.30 மணியளவில் பிரதான சேக் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலில் இருந்ததாகவும் சம்பவத்துக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறினார். பொலிஸாரும் இதே கருத்தையே நீதிமன் றத்தில் முன்வைத்தனர்.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்குப் பணித்தார். வழக்கு விசாரணையை பார்வையிட பெருந்திரளான மக்கள் நீதிமன்ற வளாகத் திற்கு வருகை தந்திருந்ததோடு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, தாக்கப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலை சுத்தப்படுத்தும் பணிகள் நேற்று (29) இடம்பெற்றன. பள்ளி வாசலில் சிந்தியிருந்த இரத்தக் கறைகள் கழுவப்பட்டதோடு தீ வைக்கப்பட்ட இடங் களும் சுத்தப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப் படுகிறது.