அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தென் மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது

election000.jpgதென் மாகாண சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரச அச்சகக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாகாண சபையின் பதவிக் காலம், எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடைய இருக்கின்ற நிலையிலேயே நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட தென் மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வது மற்றும் தேர்தல் நடத்துவதற்கான திகதி குறித்து இன்னும் சில தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தவிர,  ஏனைய 7 மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே அந்த மாகாண சபைகள் கலைக்கப்பட்டு,  அவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டதுடன்,  அதில் 6 மாகாண சபைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம்

rajanikanth.jpgரஜினி காந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்திரன் படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்ன தானம் வழங்க வந்த அவர் பேட்டி அளிக்கையில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கேயோ பிறந்து,  தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார்.  இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய்,  தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்றார் அவர்.

ஆசனம் ஒன்றையேனும் பெறாத கட்சிகளின் விருப்புவாக்குகள் எண்ணப்பட மாட்டாது – தேர்தல்கள் திணைக்களம் தீர்மானம்

election000.jpgதேர்தல் வாக்களிப்பின் போது,  ஓர் ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகளை எதிர்காலத்தில் எண்ணாமல் விடுவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை ஊவா மாகாண சபை, யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய தேர்தல்களிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல்களில்,  கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளை எண்ணியதன் பின்னர் அவற்றுக்குக் கிடைத்துள்ள ஆசனங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். அதற்கு பின்னரே சகல கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் உறுப்பினர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும்.

எனினும் எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்று தேர்தல்களின் போது ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்படமாட்டாது.

மொத்த வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ளாத கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய மருத்துவ சேவை நீடிப்பு – இந்திய அரசாங்கம் தெரிவிப்பு

sri-lankan-doctors.jpgஇடம் பெயர்ந்த மக்கள் நலனுக்காக் வவுனியா முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வைத்திய உதவிச் சேவை மேலும்; இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே மருத்துவமனையின் சேவைகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் இந்திய ஆயுத படையினர் தங்களது சேவைகளை செய்து வருகின்றனர். இந்த வெளிக்கள மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,  குழந்தைகளுக்கான மருத்துவ நிபுணர்கள், பெண் மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் உட்பட 60 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்

கடந்த மார்ச் மாதத்திலிருந்து பணியாற்றி வந்த முதலாவது மருத்துவர் குழுவை மாற்றிய இந்திய அரசாங்கம் ஜூலை மாதம் மற்றுமொரு குழுவை அனுப்பி இருந்தது. இதுவரை இக்குழுவினர் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளது.

ஐ.நா சமூக, பொருளாதார ஆணைக்குழு தலைவராக லலித் வீரதுங்க நியமனம்

lalith.jpgதாய் லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கான தலைமைப் பொறுப்பு மீண்டும் இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றது.

அதற்கேற்ப ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உலக பொருளாதார மற்றும் சமூக சங்கத்தின் தகவல் தொழில் நுட்ப குழுவுக்கான தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஏனைய நாடுகளின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் பிரகாரம் லலித் வீரத்துங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கத்துவ நாடுகளின் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் தொடர்பான கொள்கையாக்கங்களில் தகவல் தொடர்பாடல் உத்தி முறைகளை உள்வாங்கிக் கொள்தல், பிராந்திய அடிப்படையில் கணினி விண்ணப்பங்களைப் பயன்படுத்தல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மனிதவளத்தைக் கட்டியெழுப்புதல், அனர்த்த முகாமைத்துவம் போன்றவற்றில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்தல் என்பனவற்றில் கூட்டாகச் செயற்படுதல் என்பன இக்குழுவின் நோக்கமாகும்.

கடந்த ஆண்டும் அங்கத்துவ நாடுகளின் ஏகோபித்த அபிப்பிராயத்தின்படி இக்குழுவுக்கான தலைமைத்துவப் பொறுப்பு இலங்கைக்குக் கிடைத்தது. இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைக்குக் கிடைத்த கெளரவமாக இது அமைகின்றது.

இலங்கை கடந்த காலங்களில் காட்டிய அடைவுகள் இப்பதவி இலங்கைக்குக் கிடைத்தமைக்கான காரணமாகும் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். இதன் உறுப்புரிமை நாடு என்றவகையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் இலங்கை முக்கியமான கட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். சில ஆண்டுகளாக மஹிந்த சிந்தனை திட்டத்தில் உள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மிகவும் அக்கறையாக அவதானித்து வருகின்றன.

கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் இலங்கையில் பல தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கான ஒரு சர்வதேச அங்கீகாரமாக லலித் வீரதுங்கவின் நியமனம் கருதப்படுகின்றது.

வவுனியாவுக்கு இடம் பெயர்ந்துள்ள மக்களின் நலன்கருதி – செட்டிகுளம் வைத்தியசாலையை மேம்படுத்த அரசு துரித நடவடிக்கை

sri-lankan-doctors.jpgவவுனி யாவுக்கு இடம் பெயர்ந்துள்ள மக்களின் நலன் கருதி செட்டிக்குளம் ஆஸ்பத்திரியை சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக மேம்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது. தாய் – சேய் ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆஸ்பத்திரி துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுவதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த வகையில் 35 மில்லியன் ரூபா செலவில் இவ்வாஸ்பத்திரியில் நிர்மாணிக் கப்பட்டுள்ள சத்திர சிகிச்சை கூடம் நேற்று முன்தினம் முதல் செயற்படத் தொடங்கியதாகவும், பத்து மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கும் எக்ஸ் கதிர் பிரிவு அடுத்துவரும் ஒரு சில வாரங்கள் முதல் செயற்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் நூறு மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படும் தாய் – சேய் ஆரோக்கிய சேவைக்கான சகல வசதியையும் கொண்ட வார்ட்டுத் தொகுதி எதிர்வரும் நவம்பர் மாதம் திறந்து வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். வவுனியாவுக்கு இடம் பெயர்ந்திருக்கும் மக்களுக்கு சிறந்த ஆரோக்கிய சேவையைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

திட்டமிட்டு மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது அரசு – ரணில்

srilanka-refugees.jpgமுகாம் களிலுள்ள மக்களை அரசாங்கம் திட்டமிட்டு அடைத்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் மக்களை விடுவித்து அவர்கள் சுதந்திரமான காற்றை சுவாசிக்கும் சூழலை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். அதேவேளை, ஆட்கள் இல்லாத பிரதேசத்தில் புனர்நிர்மாண, அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

முகாம்களிலுள்ள மக்கள் தற்போது கோருவது ஒரு போக விவசாயத்துக்கான உதவியை மட்டுமேயாகும். இதற்கு அரசு செவிசாய்க்காது இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தயோகபூர்வ வாசஸ்தலமான கேம்பிரிஜ் டெரசில் சனிக்கிழமை விசேட அறிக்கையொன்றை அவர் விடுத்திருக்கிறார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

அகதி முகாம்களிலுள்ள மக்களை அரசாங்கம் திட்டமிட்டே அடைத்து வைத்துள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு 6 மாதத்தில் 80% முதல் 90% பேரை மீளக் குடியமர்த்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக எதுவித ஆக்க பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இடம்பெயர்ந்துள்ள மக்களின் வீடுகளில் 70% மானவை சிறியளவில் சேதமடைந்தவையாகும். இந்நிலையில் ஏன் அம்மக்களை மீளக் குடியமர்த்த முடியாதுள்ளது. இந்த மக்கள் வேண்டி நிற்பது தமது ஒரு போக விவசாயத்துக்கான உதவியையேயாகும்.

இதன் பின்னர் தமக்கு எந்த உதவியும் தேவையில்லையென அவர்கள் கூறியிருப்பதுடன், தமது வாழ்க்கையைத் தாமே கட்டியெழுப்ப முடியுமெனத் தெரிவித்துள்ளனர். அதனால் அரசு இதற்கு செவிசாய்க்காதுள்ளது.  இந்நிலையில் முகாம்களில் இம்மக்கள் தொடர்ந்து இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏன் இவர்களை ஒன்றிணைக்க முடியாது? முகாம்களில் மரணங்கள் அதிகரிக்கின்றன. இதனையிட்டு அரசாங்கத்திடம் கேட்கும் போது சனநெருக்கடி மிக்க பிரதேசங்களில் மக்கள் இறப்பார்கள் என்று கூறுகிறது.

ஏனைய பிரதேசங்களில் மக்கள் இயற்கை மரணத்தை அடைகின்ற நிலையில், முகாம்களில் மக்கள் செயற்கை மரணத்தை தழுவுகின்றனர். இதற்கு உணவு, குடிநீர் பற்றாக் குறையாகக் காணப்படுவதுடன், போசாக்கின்மை மற்றும் சுகாதார வசதி குறைபாடே காரணமாகும். இவற்றை மூடி மறைப்பதற்காகவே எதிர்க் கட்சியினரை முகாம்களுக்குச் செல்லவிடாது அரசு தடுக்கின்றது.

இங்குள்ள சுகாதார நிலைமைகளைக் கூறுவதற்கு வைத்தியர்கள் அஞ்சுகின்றனர். முகாம்களில் புலிகள் இருப்பார்களாயின் அவர்களை இனம்கண்டு புனர்வாழ்வு முகாம்களில் பராமரிக்க வேண்டும். இதனைச் செய்யாது ஒட்டு மொத்தமாக சகல மக்களையும் முட்கம்பி வேலிக்குள் அடைக்கின்றனர்.

இந்தியாவிலிருந்தும் ஏனைய சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் மக்களின் மீள் புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்காக உதவிகளைப் பெறுகின்ற நிலையில் இப் பணத்துக்கு என்ன நடக்கின்றதென தெரியாதுள்ளது. இந்நிலையில் மறுபுறத்தில் வரிச் சுமையை மக்கள் மீது சுமத்துகின்றது. முகாம்களில் மக்களை அடைத்து வைத்துக்கொண்டு எவ்வாறு அபிவிருத்தியைச் செய்ய முடியும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படாமல் தடுப்பதற்கு முகாம் மக்களை மீளக் குடியேற்றுமாறு கேட்கிறேன்.

தற்போது சவுதிப் பெண்களும் வீட்டுப் பணியாளர்களாக..

housemaids.jpgசவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிவது என்பது எவரும் பார்த்து பொறாமைப் படக்கூடியதொன்றல்ல.சவுதி வீசா அனுசரனை நடைமுறைகளின் படி அவர்கள் தமது கடவுச்சீட்டினை வேலை வழங்குனரிடம் ஒப்படைக்க வேண்டும்.

நாளொன்றுக்கு 20 மணித்தியாலங்கள் வரை அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட முடியும்.வீட்டு உரிமையாளர்ளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் இந்த வீட்டுப்பணிப்பெண்கள் உள்ளாக்கப்படக்கூடும்.

அவர்களின் சம்பளங்கள் வழமையில் ஊதிய ஆவணங்களில் பதியப்படுவதுமில்லை.இவர்கள் சட்ட ரீதியாக வேலையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமானால் கூட அவர்களிடம் எந்த விதமான ஆவணங்களும் இல்லாத காரணத்தால் அதுவும் சாத்தியமில்லை.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து தப்பியோடி தத்தமது நாட்டு தூதரகங்களில் தஞ்சமடைகின்றனர்.கடந்த வருடம் அறிக்கையொன்றை வெளியிட்ட ஹியுமன் ரைட்ஸ் வொச் அமைப்பு, சவுதி ஆரேபியாவிலுள்ள வீட்டுப் பணியாட்கள் நடத்தப்படுகின்ற விதம் அடிமைத் தனத்தை ஒத்தது என சுட்டிக்காட்டியது.

சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற வாக்குறுதியை நம்பி சுமார் 2 மில்லியன் பெண்கள், அனேகமாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பெரும் ஆபத்துகளுக்குள் தள்ளப்படுகின்றார்கள்.

ஆனாலும் சவுதியில் மக்கள் மத்தியில் தற்போது அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, உள்நாட்டவர்களுக்கு தொழில் வழங்குவதற்கான புதிய வழிவகைகள் குறித்து சிந்திப்பதற்கு அரசகாங்கத்தைத் தூண்டியுள்ளது.

சவுதிப் பெண்கள் வீட்டுப் பணியாளர்களாக தொழிற்புரிவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அனுமதியளிக்கப்பட்டது.இவர்களில் முதலாவது குழுவினர் தற்போது தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்கள் நாளொன்றுக்கு 8 மணிநேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுவார்கள். இவர்களின் சம்பளத் தொகை ஒப்பீட்டு அளவில் உயர்வானதும் நிலையானதும் கூட. இவர்கள் வேலை முடிந்ததன் பின்னர் அங்கேயே தங்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனாலும் இந்த தொழிலை தகுதி குறைந்தது என பார்க்கும் அனேகமாக சவுதிவாசிகள் மத்தியில் இவ்வாறு உள்ளுர்ப் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு கிளம்பிய வண்ணமே உள்ளது..

மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த கண்ணிவெடி அகற்றும் பணி துரிதம் – பல்வேறு வெளிநாடுகளும் அரசின் திட்டத்துக்குதவி

இடம் பெயர்ந்த வட பகுதி மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதற்காக வடக்கில் புதைக்கப்பட்டு ள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் செயலாளர் டபிள்யு. கே. குமாரசிறி தெரிவித்தார். தற்பொழுது இந்தியா உட்பட 8 உள்நாட்டு வெளிநாட்டுக் குழுக்கள் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை 180 நாள் திட்டத்தின் கீழ் துரிதமாக மீள்குடியேற்ற அர சாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மீள் குடியேற்றம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ். மாவட்டங்களில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தேர்ச்சி பெற்ற குழுக்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செயலாளர் கூறினார்.

கண்ணி அகற்றும் பணிகள் பூர்த்தியடைவதற்கு அமைய மீள்குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதோடு வவுனியா மாவட்டத்தில் இந்த மாத முடிவுக்குள் மீள்குடியேற்றப்பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு பல நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.

‘த.ம.வி.பு கட்சியின் பெயர் மாற்றப்படும்’ முதலமைச்சர் சந்திரகாந்தன் கூறுகிறார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலை வரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தமது கட்சியின் பெயர் மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மட்டு. வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் விளையாட்டுப் பயிற்சி பாடசாலையினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தமது கட்சியின் பெயர் மாற்றுவது தொடர்பாக தாம் ஆரம்பகாலத்தில் இருந்து சிந்தித்ததாகவும் இது தொடர்பில் மத்திய குழு கூடி பரிசீலித்ததாகவும் தெரிவித்த அவர், புதிய பெயர் ஒன்றினை தமது கட்சிக்கு வைப்பது தொடர்பாக புத்திஜீவிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில் தமது கட்சியில் இருக்கின்ற புலி என்கின்ற சொல் அகற்றப்பட வேண்டும். அதேநேரம் தனித்துவமான இனங்களுக்கான அடையாளங்களைக் குறித்த கொள்கைகளை மாற்றுவதாகவும் தமது உயர் மட்டக் குழு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.  நடக்கவிருக்கின்ற பேராளர் மாநாட்டில் தமது புதிய பெயரை அறிவிப்பதாகவும் தலைவர் தெரிவித்தார்