வவுனி யாவுக்கு இடம் பெயர்ந்துள்ள மக்களின் நலன் கருதி செட்டிக்குளம் ஆஸ்பத்திரியை சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக மேம்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது. தாய் – சேய் ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆஸ்பத்திரி துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுவதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த வகையில் 35 மில்லியன் ரூபா செலவில் இவ்வாஸ்பத்திரியில் நிர்மாணிக் கப்பட்டுள்ள சத்திர சிகிச்சை கூடம் நேற்று முன்தினம் முதல் செயற்படத் தொடங்கியதாகவும், பத்து மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கும் எக்ஸ் கதிர் பிரிவு அடுத்துவரும் ஒரு சில வாரங்கள் முதல் செயற்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் நூறு மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படும் தாய் – சேய் ஆரோக்கிய சேவைக்கான சகல வசதியையும் கொண்ட வார்ட்டுத் தொகுதி எதிர்வரும் நவம்பர் மாதம் திறந்து வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். வவுனியாவுக்கு இடம் பெயர்ந்திருக்கும் மக்களுக்கு சிறந்த ஆரோக்கிய சேவையைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.