அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யாழ் மாநகர சபையின் மேயராக யோகேஸ்வரி பற்குணராசா தெரிவு

jaffna_mayor-2009-08-11.pngயாழ் மாநகர சபையின் மேயராக யோகேஸ்வரி பற்குணராசாவும்,  துணை மேயராக துரைராஜா இளங்கோவும் (றீகன்) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த யாழ் மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களாகிய இந்த இருவரும் வெற்றியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறந்த கல்விமானாகிய யோகேஸ்வரி பற்குணராஜா சுமார் 28 வருட காலமாக கிளிநொச்சி யாழ்ப்பாணம் கொழும்பு மாவட்டங்களிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் அமைச்சுக்களில் உயரிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார். சர்வதேச லயன்ஸ் கழகம் இவருக்கு சிறந்த ஆலோசகர் என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது. யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராஜா இளங்கோ (றீகன்) சிறந்த சமூக சேவையாளர். சகல சமூக மக்கள் மத்தியிலும் தனது சேவையால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

அந்தமான் நில நடுக்கத்தால் இலங்கையில் சுனாமி ஆபத்தில்லை – தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவிப்பு

tsunami111.jpgஅந்த மானில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஏற்படும் ஆபத்தில்லையென இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீண் பதற்றம் இன்றி அமைதியாக இருக்குமாறும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் அங்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் நாகை,  கடலூர் மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

ஜப்பானிலும் ‘சுகுரு’ என்ற தீவுக்கு அருகே நேற்று பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.6 ஆக பதிவாகி இருந்தது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. பொருட்கள் கீழே விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். கட்டங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலும் நேற்று  5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கே.பி.யை நாடு கடத்துமாறு இந்தியா உடனடியாகக் கோரும் சாத்தியம் இல்லை – விசாரணை விபரத்தைக் கடிதம் மூலம் கோரும்

kp00.jpgகைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை நாடு கடத்துமாறு உத்தியோகபூர்வமாக இலங்கையைக் கோருவதற்கு காலம் எடுக்கக்கூடும் என்பதால் அவர் மீதான விசாரணை தொடர்பான விபரங்களைக் கடிதம் மூலம் கொழும்பிடம் இந்தியா விரைவில் கோரக்கூடும் என்று ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கே.பி.யின் கைது தொடர்பாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக பதிலளித்துள்ள வட்டாரங்களே இதனைக் கூறியுள்ளதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தருணத்தில் நாடு கடத்தும் கோரிக்கை உடனடியாக விடுக்கப்படுமெனத் தோன்றவில்லை. முதலாவதாக கே.பி. விவகாரத்தை இலங்கை கையாள்வதற்கே சர்வதேச சாசனங்கள் இடமளிக்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டு கே.பி.யை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை இந்தியா உடனடியாக விடுக்காது. சென்னையில் கே.பி.யை கைது செய்வதற்கான ஆணையை இந்தியா விடுத்திருந்தது. ராஜீவ்காந்தி படுகொலை சதியின் பின்னணி தொடர்பாக அதிகளவு விபரங்களைப் பெற்றுக்கொள்ள கடிதம் மூலம் விபரங்களை இந்தியா பெற்றுக்கொள்ளும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடிதத்தில் கேட்டல் (Letter Rogatory) என்பது உள்ளூர் நீதிமன்றத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப்படும் விடயமாகும். இது சட்ட ரீதியான வழிமுறையாகும். வெளிநாட்டில் சில தொடர்புகள் இருந்தால் வழக்கு விசாரணைக்கு உதவியாக ஒரு நாடு மற்றொரு நாட்டிலிருந்து உதவி பெறுவதற்கு இது இடமளிக்கிறது.

கே.பி.யை நாடு கடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்வதற்கு முன்பாக பூர்வாங்க விசாரணைகளை நடத்த வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை தெரிவித்திருந்தது.  இந்தியா கே.பி.யை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்தால் இலங்கை தனது விசாரணைகளை நிறைவு செய்த பின் சர்வதேச விதிமுறைகளுக்கு அமையச் செயற்படும் என்று பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தார்.

இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் பல்தரப்பு ஒழுக்காற்று கண்காணிப்பு முகவரமைப்புக்கு கே.பி. தேவைப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பல்தரப்பு ஒழுக்காற்று கண்காணிப்பு முகவரமைப்பே ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னாலுள்ள பாரிய சதியில் கே.பி.யின் பங்களிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக முன்கூட்டியே கே.பி.க்கு தெரியுமென்ற சந்தேகம் விசாரணை முகவரமைப்புகளிடம் உள்ளன.

கோமிஸ் ஆண்டகைக்கு முத்திரை வெளியீடு

mainpic2.jpgகொழும்பு மறை மாவட்டப் பேராயராகப் பதவி வகித்து அண்மையில் ஓய்வு பெற்ற அதி வணக்கத்துக்குரிய பேராயர் பேரருட்திரு ஒஸ்கோல்ட் கோமிஸ் ஆண்டகைக்கு அரசாங்கம் முத்திரை வெளியிட்டு கெளரவித்தது. அத்துடன் சமய அலுவல்கள் பண்பாட்டுத்துறை அமைச்சும், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களமும் சேவை பாராட்டு விருதுகளை வழங்கி கெளரவித்தன.

அத்துடன் தபால் தொலைத் தொடர்பு அமைச்சு விசேட தபால் முத்திரை யொன்றையும் வெளியிட்டு ஒஸ்வோல்ட் ஆண்டகையின் சேவையைக் கெளரவித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற புதிய பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கெளரவிக்கும் நிகழ்வில் மேற்படி கெளரவமளிப்பும் இடம் பெற்றது.

புதிய மற்றும் முன்னாள் பேராயர்களுக்கு மத அலுவல்கள் அமைச்சும், கிறிஸ்தவ சமய விவகார திணைக்களமும் நினைவு விருதுகளை வழங்கி கெளரவித்தன. அமைச்சர்கள் பண்டு பண்டாரநாயக்க, ஜீ. எல். பீரிஸ் ஆகியோர் இவ்விருதுகளை வழங்கியதுடன் அமைச்சர்கள், முக்கியஸ்தர்களுடன் பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி பேரருட்திரு ஜோசப் ஸ்டப்ஸனும் இந் நிகழ்வில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சக்திகளின் ஆதரவுடன் “தமிழீழ மன்னராக’ பிரபாகரன் விரும்பினார்’

mahinda_raajapakse11.jpg
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கைக்கு அப்பாற்பட்ட நோக்கங்களைக் கொண்டிருந்ததாகவும் தென்னிந்தியாவில் உள்ள சில சக்திகளின் ஆதரவுடன் “தமிழ் ஈழத்தின் மன்னராக’ வருவதற்கு விரும்பி இருந்ததாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.  புலிகளின் தலைவர் சேகரித்து இருந்த பெருந்தொகையான ஆயுதங்கள் தனது சொந்த தேசத்தை நிர்வகிப்பதற்கு அப்பால் அதாவது இலங்கைக்கு அப்பாற்பட்ட விருப்பத்தை அவர் கொண்டிருந்ததை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.  அவர் (பிரபாகரன்) பெரிய கனவை கொண்டிருந்தார். இலங்கை… நான் நினைக்கவில்லை. (இது இலங்கை மட்டுமென) அவர் பாரிய நோக்கத்தை கொண்டிருந்தார். அவர் தமிழ் ஈழத்தின் மன்னராக வர விரும்பியிருந்தார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இல்லாவிடில் எமது இலங்கை இராணுவத்துடன் சண்டையிட இவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவருக்கு தென்னிந்தியாவில் சில அனுதாபிகள் இருந்தனர். அவருடைய திட்டம் இலங்கைக்கு அப்பாற்பட்டது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கே.பி.கைதானமை இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை நவீன ஆயுதங்கள் எவ்வாறு புலிகளுக்கு கிடைத்தன என்பது தொடர்பாக அவர் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த தலைவர்கள் சிலர் இவற்றுக்கு பதில் கூறக் கூடும் என்று நான் நினைக்கிறேன். கே.பி.இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

யார் ஆயுதங்களைப் பெற்றனர்?, யார் அவர்களுக்கு பணம் கொடுத்தனர்?, யார் அவர்களுடன் பேசினர்? அவரால் எமக்கு கூறமுடியும். முழு கட்டமைப்பு தொடர்பான உண்மையும் வெளிவரும் என்று நான் நினைக்கிறேன். ஆகக்குறைந்தது இந்த விபரமாவது வெளிவரும் என்று நான் கருதுகிறேன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

முக்கிய பல தகவல்கள் கே.பியிடமிருந்து அம்பலம்

pathmanathan.jpgபுலிகள் இயக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்தும் பொருட்டு பெரும் தொகையான உதவிகளையும் ஆரவையும் வழங்கிய உள்நாட்டு, வெளிநாட்டு நபர்களை பற்றியும் அமைப்புக்கள் பற்றியும் இப்பொழுது கைதாகி உள்ள கே. பியிடமிருந்து பல தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டி பொல்கொல்லை கூட்டுறவு பயிற்சிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். பிரதேச செயலகப் பிரிவுடன் இணைக்கப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள குடும்பங்களின் நலன்கள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக தெளிவுறுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசும்பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, புலிகள் அமைப்பு கடந்த காலத்தில் மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவு, போதைப் பொருள் கடத்தல், நிதி மோசடி போன்றவை தொடர்பான பல தகவல்கள் இப்பொழுது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் எனக் கருதப்படும் கே. பி. என்ற குமரன் பத்மநாதன் இப்பொழுது தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். இந்த அமைப்புக்கு உதவி ஒத்தாசை புரிந்த உள்ளூர், வெளியூர் பிரமுகர்கள், அமைப்புக்கள் என்பன பற்றி தகவல்கள் கிட்டியுள்ளன. பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இவற்றில் அடங்குகின்றன.

விசாரிக்கப்பட்டு வருகின்ற கே. பி இந்தியாவிடம் இப்போதைக்கு ஒப்படைக்கப்பட மாட்டார். பதிலாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து அரசிடம் விசாரணைகளை மேற்கொள்ளலாம். சர்வதேச புரிந்துணர்வு அடிப்படையின் கீழ் இது அமையும். பல தசாப்தங்களாக பதுங்கியிருந்த பிரபாகரனை மகாவீரன் என பூதாகரமாகக் காட்டி உலகை ஏமாற்றிய பலர் உள்ளனர். இதே நிலைக்கு கே. பி. யையும் கொண்டுவர பலர் முயற்சித்த விபரங்களையும் நாம் அறிவோம்.

பிரபாகரன் மரணித்த பின்னர் அதன் தலைமைப் பீடத்தை ஏற்றுக்கொள்ள இருப்பவரென கே. பி.யை உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் பிரபல்யப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் யாவும் பொய்த்துவிட்டன என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது. இவ்வாறு புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் களையும் பூதாகரமாகக் காட்டியதை எமது புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் நிர்மூலமாக்கிவிட்டனர்.

உலகுக்கு அதன் உண்மையை வெளிக்காட்டியதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கை முக்கிய இடத்தைப் பெறுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் ஆறு பேர் பலி

ah1n1.jpg
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்திருப்பதாக இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

சென்னை நகரில், திங்கட்கிழமை நான்கு வயது சிறுவன் ஒருவர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளார்.  தென் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள முதல் மரணம் இது. குழந்தைகளுக்கு இந்த நோய் தொற்றக் கூடும் எனும் அச்சத்தில் நாடெங்கிலும் உள்ள பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மரணம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் எண்ணூற்றுக்கும் அதிகமானோர் எச் 1 என் 1 கிருமியினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சையளிக்க போதுமான மருந்துகளும், சோதனை செய்ய போதுமான வசதிகளும் கையிருப்பில் உள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத் துறையின் செயலர் வி கே சுப்புராஜ் தெரிவித்தார்.

‘இனம், மதம் என்ற வகையில் மட்டுமல்ல எத்தகைய பிளவுக்கும் இனிமேல் இடமில்லை’ – ஜனாதிபதி

mainpic2.jpgபிளவுக்கோ, துண்டாடுவதற்கோ இனி இந்த நாட்டில் இடமில்லை. இனம், மதம் என்ற வகையில் மட்டுமல்ல வேறு எத்தகைய பிளவுக்கும் இந்நாட்டு மக்கள் அங்கீகாரம் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதனால் முழு உலகிற்கும் எம்மால் முன்னுதாரணமாகத் திகழ முடிந்துள்ளது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று உலகம் சமாதானத்திற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள நவீன முன்னோடியாக எமது நாடு உள்ளதெனவும் தெரிவித்தார்.

நாம் இந்த நாட்டை புதிய யுகமொன்றை நோக்கி இட்டுச் செல்கிறோம். இனம், மதம் உட்பட சகல பேதங்களுக்கும் அப்பால் இன்று நாடு ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. முழுநாடும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு மறைமாவட்டப் புதிய பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள், மதத்தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

மூன்று தசாப்தங்கள் இந்த நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ்ந்த யுத்த சூழல் இருந்தது. இன்றைய புதிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்போதெல்லாம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எம்மோடு ஒத்துழைத்தார். அது எமக்கு பாரிய பலமாக அமைந்தது.

அதேபோன்று மத சுதந்திரத்தை நாட்டில் ஏற்படுத்த நாம் மேற்கொண்ட அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகளிலும் அவர் தெளிவுடன் எமக்குப் பலம் சேர்த்தார்.

அன்று மடுத்திருப்பதிக்குச் செல்வதற்காக பயங்கரவாதிகளுக்கு கப்பம் கொடுக்க வேண்டியிருந்தது. மனிதாபிமான நடவடிக்கை மூலம் எமது படையினர் மடுத்தேவாலயத்தைப் பாதுகாக்க முற்பட்டபோது அங்கு பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளே இருந்துள்ளன. “வாள் எடுத்தவன் வாளால் மடிவான்” என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. அது போன்ற சமாதான நோக்கத்தைப் போற்றுகின்ற சமயத் தலத்தில் பதுங்கு குழிகளை வைத்திருப்பதென்பது அந்த மதத்திற்கே ஏற்படுத்தும் பாரிய களங்கமாகும்.

எனினும், மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட எமது படையினர் அவ்வாலயத்தின் ஒரு கூரை ஓட்டையாவது சேதப்படுத்தாமலேயே அதனை மீட்டெடுத்தனர். மடுத்தேவாலயம் மட்டுமின்றி எந்தவொரு சமய வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே படையினர் அவற்றை மீட்டெடுத்தனர். இதன் மூலம் மதங்களின் மீதுள்ள எமது கெளரவத்தை நாம் வெளிக்காட்டியுள்ளோம்.

இன்று கத்தோலிக்க மக்களுக்கு மடுத்திருப்பதிக்குச் செல்ல சுதந்திரம் கிடைத்துள்ளது. சுதந்திரம் மட்டுமன்றி கெளரவத்துடன் விசுவாசிகள் அங்கு பயணிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மடுமாதாவின் ஆசீர்வாதத்தை கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமன்றி முழு தாய்நாட்டிற்கும் பெற்றுக்கொடுத்துள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இதனால் எதிர்கொள்ளும் தந்தார் பண்டிகை மிகவும் விசேடமானதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

புதிய பேராயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி: பேராயரவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு பதவிகளை வகித்தவர். புதிய யுகமொன்றில் தடம்பதித்துள்ள தாய்த்திரு நாட்டின் இன்றைய சூழலில் பேராயராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்குப் பெரும் உறுதுணையாகிறது.

எமது நாட்டிற்குப் பெரும் கீர்த்தியைப் பெற்றுத்தந்துள்ள ஆயர்களில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிடத்தக்கவர். குறிப்பாக எமது நாட்டை வெளிநாடுகளில் பெருமைப்படுத்த அவர் மேற்கொண்ட பணிகள் பாராட்டுக்குரியவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் பேராயர் பேரருட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகையின் சேவையைப் பாராட்டி கெளரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய இந்நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி உட்பட பெருமளவிலான குருக்கள் கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இடம்பெயர்ந்த மக்களுக்கு அமெரிக்கா 15 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப் பொருட்கள்

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென 1.724 பில்லியன் ரூபா (15 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்கா முன்வந்துள்ளது. இதற்கேற்ப யு. எஸ். எயிட் நிறுவனம், உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கவிருக்கின்றது.

மூன்று இலட்சம் மக்களுக்கு சுமார் நான்கு மாத காலத்துக்குத் தேவையான கோதுமை, அவரை வகைகள் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகியன உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கப்பல் மூலம் இலங்கைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் உலக உணவுத் திட்ட அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணக் கிராமங்களிலுள்ள கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கான விசேட போஷாக்குத் திட்டம்

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மாருக்கென விசேட போஷாக்குத் திட்டமொன்றைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தைத் துரிதகெதியில் செயற்படுத்துமாறு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்கு அமைய எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு இந்த விசேட போஷாக்குத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான ஒழுங்குகளை குடும்ப சுகாதாரப் பணியக அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.

இத்திட்டம் தொடர்பாக அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிடுகையில், வவுனியாவி லுள்ள நிவாரணக் கிராமங்க ளிலும், நலன்புரி நிலையங்க ளிலும் தங்கியுள்ள ஐந்து வயதுக்குக் குறைந்தவர்களுக்கு சின்னமுத்து மற்றும் போலியோ நிர்ப்பீடன மருந்துகளும் வயிற்றுப் புழு நோய்க்கான தடுப்பு மருந்தும் அண்மையில் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

இத்திட்டத்தின் மூலம் அதிக பயனைப் பெற்றுக் கொள்ளுவதில் பெற்றோர் ஆர்வம் காட்டியதுடன், 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் நன்மை பெற்றனர்.

இத்திட்டம் வெற்றியளித்ததைத் தொடர்ந்தே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மாருக்கென விசேட போஷாக்குத் திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள், தாய்மாருக்கென திரிபோஷா சந்துணவு, விட்டமின் மாத்திரைகள், வயிற்றுப் பழு உபாதைக்கான தடுப்பு மருந்து என்பன பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. அத்தோடு குடும்பத் திட்ட ஆலோசனைகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் இருபதினாயிரம் தாய்மாரும், 2500 கர்ப்பிணிகளும் நன்மை பெறுவர் என்றார்.