அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
அமெரிக்காவில் பெண்ணொருவர் சிறுமியாக இருந்தபோது கடத்தப்பட்டு பதினெட்டு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த இடம் எனத் தெரியும் வீடொன்றை பொலிசார் சோதனையிட்டு வருகின்றனர்.
11 வயதிருந்தபோது இந்தப் பெண் காணாமல் போயிருந்தார். ஜெய்சி டூகர்ட் என்ற இந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகள் இருவரும் இவ்வளவு காலமும் கட்டடங்கள் மற்றும் கூடாரங்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்தப் பிள்ளைகள், ஜெய்சியைக் கடத்தி அடைத்துவைத்திருந்தவருக்கு பிறந்த குழந்தைகள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஜெய்சியின் குழந்தைகளுக்கு தந்தையென குற்றஞ்சாட்டப்படுபவர்
இந்தப் பிள்ளைகள் ஒருபோதும் பள்ளிக்கூடமோ மருத்துவமனையோ சென்றதில்லை என பொலிசார் கூறுகின்றனர். 1991ஆம் ஆண்டு பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ஜெய்சீ காரில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
ஜெய்சி,கடத்தியதாகக் குற்றம்சாட்டப்படுபவருடன் பிள்ளைகளோடு அவர்கள் தங்கியிருந்த சான்ஃபிரான்ஸிஸ்கோ பொலிஸ் நிலையம் வரும் வரை அவர் பற்றி எந்தத் தகவலும் இல்லாதிருந்தது.
ஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படுகின்ற பிலிப்பைன்சில் வழங்கப்படும் ராமன் மகசேசே விருதுக்கு இவ்வருடம் ஆசிய நாடுகளைச் சோந்த ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டுக்கான ராமன் மகசேசே விருதுக்கு யூ ஷியோகாங் (சீனா) தீப் ஜோஷி (இந்தியா) கிரிசனா கிரைசிந்து (தாய்லாந்து), மா ஜுன் (சீனா), அன்டானியோ அபோஸா ஜூனியர் (பிலிப்பின்ஸ்), கா ஹிஸா வா (மியான்மர்). ஆகியோர் தெரிவாகயுள்ளனர்.
பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் மறைந்த ராமன் மகசேசேவை கௌரவித்து இந்த விருது அரசுப்பணி, சமூக சேவை உள்ளிட்ட 6 துறைகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிய நாட்டவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.
பதக்கம் மற்றும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு அடங்கியது இந்த விருது. ஆசியாவின் நோபல் பரிசு என்றே இது கருதப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த தீப் ஜோஷி சிறந்த சமூக சேவகராக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வரும் 31-ம் தேதி முறைப்படி வழங்கப்படுகிறது.
கொழும்பு, புதுக்கடையில் அமைந்துள்ள மேல் நீதிமன்ற கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்துள்ளது. சம்பவத்தின்போது உச்ச நீதிமன்றம் மூடப்பட்டிருந்தமையினால் யாரும் காயங்களுக்கு உள்ளாகவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். கட்டடத்தின் நான்கு தூண்கள் முறிந்து வீழ்ந்தமையினாலேயே கூரையின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்திருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
புலிகளின் வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்கி அவற்றை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.
இது தொடர்பாக உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் பிரத்தியேகமாக எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்; சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும் புலிகளின் வலைப்பின்னல்களை தடைசெய்வது குறித்து வெளிநாடுகளின் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை வெளிநாடுகளிலிருக்கும் புலிகளின் சொத்துக்களை இனங்கண்டு அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொள்ள உதவ முன்வர வேண்டுமென சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரக்கை விடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் செயற்பட்டு வருகின்றது. அதனை தடை செய்து வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்குவது குறித்து தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதுடன் அதற்கு உலக நாடுகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.
அதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளினூடாக காணக்கூடியதாக இருக்கின்றதெனவும் அமைச்சர் போகொல்லாகம மேலும் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் நேற்று நடந்த தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 50 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானின் எல்லைப்புறத்தில் இருக்கும் பாகிஸ்தானின் கைபர் பகுதியில் நேற்று சோதனை சாவடி ஒன்றில் தீவிரவாதிகள் தற்கொலை படைதாக்குதல் நடத்தினர்.
அந்த தீவிரவாதி, ஆப்கானிஸ்தான் போலீசார் நேற்று ரமலான் நோன்பை முடித்துவிட்டு உணவு அருந்தும் நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் அந்த தீவிரவாதி உட்பட 22 பேர் பலியானார்கள். இதில் பெரும்பான்மையோனோர் போலீசார் தான். மேலும், 27 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
இந்த சம்பவத்துக்கு தாலிபான்களுடன் தொடர்புடைய அப்துல்லா அசம் சாகீத் படை என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க விமானங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 8 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். தாலிபான் அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹகிமுல்லா மசூத்தை கொல்ல அமெரிக்கா இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாகிஸ்தான் போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 35 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.அதேபோல் மாலகன்ட் பகுதியில் 4 தீவிரவாதிகளும், பனர் மாவட்டத்தில் 7 தீவிரவாதிகளையும் போலீசார் சுட்டு கொன்றனர்.
தமிழர் களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செயத்தாகக் கூறப்படும் செயலைக் கண்டித்து கரூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்களை பாதுகாப்பு வளைத்திற்குள் வைத்து இலங்கை ராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து படுகொலை செய்து வருவதாக தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை ராணுவத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலங்கை வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில், வழக்கறிஞர்கள் செயலாளர் நடேசன், இராஜேந்திரன், நன்மாறன் முன்னிலையில் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து தீ வைத்து கொழுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
மற்றுமொரு முக்கிய பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதவக்க தெரிவித்துள்ளார். பாஜி என்றழைக்கப்படும் நபரும் அவரது உதவியாளர்கள் இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை பிரதேசத்தில் இந்த பாதாள உலகக் கோஷ்டியினர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து விசேட அதிரடிப் பொலிஸார் தேடுதல் நடத்திய போது இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் இம்மூவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித் தானிய கன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நிழல் வெளிவிவகார அமைச்சருமான லியாம் பொக்ஸ் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அமைச்சர் மிலிந்த மொரகொட பிரித்தானியாவுக்கு சென்று திரும்பியதன் பின்னர், இவர் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் உண்மைக் காரணம் எவையும் வெளியாகவில்லை
கொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கும் வணங்காமண் நிவாரணம் காலாவதியாகியோ அல்லது பழுதடைந்தோ கடலில் கொட்டப்படும் அபாயம் தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கையில்,
கொலராடோ கப்பலில் எடுத்து வரப்பட்ட நிவாரணப் பொருட்களை அங்கிருந்து வெளியகற்றுவதற்காக சகலவித அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், துறைமுக அதிகார சபைக்கு 6.5 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால் நிவாரண பொருட்களை விநியோகிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்.
இத்தொகையை அரசாங்கம் செலுத்துவதற்கு முன்வரும் என தாம் நம்புவதாக தெரிவித்த அவர், இன்றைய தினத்திற்குள் அதற்கான இணக்கம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்நடவடிக்கை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மேலும் தகவல் தருகையில்,
நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தில் சுமார் ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன. எனவே இந்த பொருட்களில் சில காலாவதியாகி இருக்கக்கூடும் அல்லது பழுதடைந்திருக்கக்கூடும் என கருதப்படுகின்றபோதிலும் அதனை உறுதிப்படுத்த எம்மால் முடியவில்லை.
இவற்றை வவுனியாவுக்கு கொண்டு சென்று விநியோகிக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதிலும் புதிய புதிய தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்போது நிவாரணப் பொருட்களை கொண்டு சென்று விநியோகிப்பதற்கான சகலவிதமான அங்கீகாரங்களையும் நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். ஆயினும் கொலராடோ கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றமைக்கான தாமதக் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் தோன்றியுள்ளது.