அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வவுனியா நகர சபை: தெரிவான உறுப்பினர்கள் 11 பேரும் இன்று பதவியேற்பு

வவுனியா நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப் பினர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெறும். பிரதான வைபவம் நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெறும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள். நகர சபைத் தலைவராக முன்மொழியப்பட்டுள்ள எஸ். என். ஜி. நாதனும் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி ஐந்து உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மூவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருவர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருவர் சபைக்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

அமைச்சர் ரிசாட் பதிவுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், வவுனியா முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களும், வைபவத்திற்கு அழைக்கப் பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பெரியவட்டுவான் 25 கிலோ எடையுள்ள ரீ.என்.ரீ. வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு

udaya_nanayakkara_brigediars.jpgமட்டக்களப்பு, பெரியவட்டுவான் பிரதேசத்திலிருந்து 25 கிலோ எடையுள்ள ரி. என். ரி. அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள இராணுவத்தின் 233வது படையணியினர் நடத்திய பாரிய தேடுதல்களின் போதே இந்த வெடிமருந்துகளை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவின் பல்வேறு பிரதேசங்களில் படையினர் நடத்திய தேடுதல்களில் ஆயுதங்களுடன் பெருந்தொகையான தொலைத் தொடர்பு கருவிகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

பெரியவட்டுவான் பிரதேசத்தில் நடத்திய தேடுதல்களில் ரி-56 ரக துப்பாக்கிகள் – 2, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் – 60, ஆர். பி. ஜி. குண்டுகள் – 07, கைக்குண்டுகள் – 05, மிதிவெடிகள் – 20 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

யாழ். லொறிகள் வவுனியாவில் பொருட்களை இறக்குவதற்கு ஏற்பாடு

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 வீதி வழியாக தென்பகுதிக்கு, யாழ். குடாநாட்டின் உற்பத்திப் பொருட்களை ஏற்றி வரும் லொறிகள் தம்புள்ள மற்றும் கொழும்பு சந்தைகளிலேயே அவற்றை இறக்கி வருகின்றன. இந்த லொறிகளில் இருந்து வவுனியாவில் பொருட்களை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வவுனியாவில் பொருட்களை இறக்க முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கமைய, ஜனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு அல்லது தம்புள்ள சந்தைகளுக்குச் செல்லும் லொறிகளில் இருந்து பொருட்களை இறக்க முடியாது என்றும், வவுனியா சந்தைக்கென பொருட்களை ஏற்றி வரும் லொறிகள், அந்தப் பொருட்களை முழுமையாக வவுனியாவில் இறக்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதாக பசில் ராஜபக்ஷ தம்மிடம் உறுதியளித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

கள்ள நோட்டுகளுடன் சந்தேக நபர் கைது

மூன்று இலட்சத்து 18 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அலவ்வ பொலிஸார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து கள்ள நோட்டுக்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி உட்பட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க நேற்றுத் தெரிவித்தார்.

பிரதான சந்தேக நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கள்ள நோட்டுக்களை அச்சிடும் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை கள்ள நோட்டு அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அலவ்வை பிரதேசத்திலுள்ள சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்த ஒருவர் 1000/- ரூபாவை கொடுத்துள்ளார். அந்த நோட்டு தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து குறித்த நபரை மடக்கிப் பிடித்து அலவ்வை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவரை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை நடத்தியுள்ளனர். தனது வீட்டில் மேலும் கள்ள நோட்டுக்கள் மறைத்து வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நபரின் வாக்கு மூலத்தையடுத்து சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் போலியாக அச்சிடப்பட்ட (1000/-) ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் 318. (இந்த போலி நோட்டுக்களின் பெறுமதி 3 இலட்சத்து 18 ஆயிரம்) மீட்டெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸாருடன் இணைந்து இரகசிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

குழந்தை வயிற்றில் குழந்தை

130909baby.jpgசீனாவில் ஒரு வயதுடைய காங் மெங்ரூ என்ற பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள ஆபூர்வம் நடந்துள்ளது.

அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது.

சட்டவிரோதமாக சென்ற மற்றுமொரு படகு அவுஸ்திரேலியாவில் தடுத்து வைப்பு

இலங்கையர்களும் உள்ளடங்குவதாக சந்தேகிக்கப்படும் அரசியல் தஞ்சம் கோரியோர்களை  ஏற்றிச் சென்ற படகு ஒன்றை அவுஸ்திரேலிய கடற்படையினர் தடுத்து வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அரசியல் தஞ்சம் கோரிய 83 பேரை  ஏற்றிச் சென்ற இந்த படகு, அவுஸ்திரேலியாவின் அஸ்மோர் தீவுக்கு அருகில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகுடன், 83 அரசியல் தஞ்சம் கோரியவர்களையும், குறித்த படகோட்டிகள் நான்கு பேரையும் அவுஸ்திரேலிய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரியவர்களை  ஏற்றிச் சென்ற  20 வது படகே இன்று மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது கிரிஸ்மஸ் தீவில் உள்ள இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ப்ரண்டன் ஓ கோனர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு 405 ரூபா நாளாந்தம் சம்பளம்:தொழிற்சங்கங்கள்-முதலாளிமார் சம்மேளனம் நேற்றிரவு இணக்கம்

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக இ.தொ.கா. உபதலைவர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 405ரூபா சம்பளத்தைப் பெறுவார்கள்

பத்மநாதனிடம் பாகிஸ்தான் அதிகாரிகளும் விசாரணைகளை நடத்தவுள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை நடத்த வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கைக் கிரிக்கட் அணி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில் கே.பி.யிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகள் கோரியுள்ளனர்.

அண்மையில் லிபியாவில் வைத்து ஜனாதிபதி மஹிந்தவிடம், இலங்கை கிரிக்கெட் அணி மீது லாகூரில்  நடத்தப்பட்ட தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஹிலார்னி தெரிவித்திருந்தார்.

இதன்படி, குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பாகிஸ்தானிய உயரதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு எதிர்வரும் வாரத்தில் விஜயம் செய்யக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்தியா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் பத்மநாதனை விசாரணை செய்யும் இந்திய புலனாய்வுக் குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலுக்கும் பணத்திற்கும் ஏமாந்து தாய்நாட்டை காட்டி கொடுக்க வேண்டாம் -ஜனாதிபதி வேண்டுகோள்

mahinda-rajapaksha.jpgஅரசியல் நிகழ்ச்சித் திட்டங்களுக்கும், பணத்திற்கும் ஏமாந்து தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்க வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (11ம் திகதி) காலியில் வேண்டுகோள் விடுத்தார்.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டும் நோக்கில் மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட தாயகத்திற்கு எதிராக பலவகைகளிலும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் நாட்டுக்கு எதிராக இடம்பெறுகின்ற சூழ்ச்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்த ஒருசிலர் தகவல்களைத் திரட்டி நாட்டைக் காட்டிக் கொடுக்க முயற்சி செய்கின்றார்கள். பெற்றுள்ள வெற்றியைப் பேணிப் பாதுகாப்பதென்பது பெரும் சிரமமான காரியம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

காலி, யட்டகல ரஜமகா விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற் கண்டவாறு குறிப்பிட்டார். மெட்டரம்ப ஹேமரத்ன தேரருக்கு சங்க நாயக்கர் பதவி வழங்கும் வைபவமும், ‘புனருதய’ கலை விழா – 2009 நிகழ்வும் யட்டகல ரஜமகா விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொட ர்ந்தும் உரையாற்றுகையில் :- மனிதாபிமான நடவடிக்கை மூலம் பயங்கரவாதம் முழு மையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எந்தவொரு இனத்திற்கும், மதத்திற்கும் எதிராக முன் னெடுக்கப்பட்டதல்ல. மாறாக புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன் பயனாக சகல தரப்பினரதும் ஒத்துழைப்புடன் பயங்கரவா தம் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழிக்கப்பட்டு நாட்டுக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

தாயகத்திற்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற் காக படைவீரர்கள் 26 ஆயிரம் பேர் தங்களது உயிர்களை அர்ப்பணித்தார்கள்.

இவ்வாறு பாரிய அர்ப்பணிப்புடன் அடையப் பெற்றி ருக்கும் இவ்வெற்றியை அரசியல் லாபம் பெறுவதற்காக குறைத்து மதிப்பிட வேண்டாம். பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட்டு நாடு ஐக்கியப் படுத்தப்பட்டுள்ளது. நாட்டைத் துண்டாட இடமளிக்க முடியாது.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்டிருக் கும் நாட்டை இன, மத, கட்சி, மொழி, நிற பேதங் களுக்கு அப்பால் ஒன்றுபட்டு பாதுகாக்க வேண் டும். இது சகலரதும் பொறுப்பாகும்.

புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக மனிதாபிமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், அதன் பின்னரும் எமது தாயகத்திற்கு எதிராகச் சூழ்ச்சிகள் முன் னெடுக்கப்படுகின்றன. அற்ப அரசியல் லாபம் பெற்றுக் கொள்ளுவதற்காக சிலர் நாட்டைக் காட்டிக்கொடுக்க முய ற்சி செய்கின்றனர். ஆனால், நாம் அரசியல் செய்வதற்கு நாடு இருக்க வேண்டும் என்பதை இவர்கள் முதலில் உணர்ந்துகொள்வது அவசியம். அதனால் ஒவ்வொருவரும் தாய் நாட்டுக்கே முதலிடமளிக்க வேண்டும். நாட்டைக் காட்டிக்கொடுக்கக் கூடாது.

பாராளுமன்றத்தில் சிலர் எழுப்புகின்ற கேள்விகள் என்ன நோக்கத்திற்காக? யாருடைய தேவையை நிறை வேற்றுவதற்காக எழுப்பப்படுகின்றன என்பதை நாமறிவோம். சிலர் பணத்திற்காக எதையும் செய்யத் தயாராக இரு க்கின்றார்கள். அவர்களுக்கு பணமே முக்கியம். இவ் வாறான சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். பாதாள உலகம் கூட பணத்திற்காகவே இயங்குகின்றது.

இந்நாட்டுக்கு எதிராக தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் சூழ்ச்சிகள் இடம்பெறக் காரணம் எமது படையினர் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து அடைந்திருக்கும் வெற்றியேயாகும். இதனை ஒவ்வொரு வரும் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது நாட்டு மக்கள் மத்தியில் தாயகம் மீதான பற்று அதிகரித்திருக் கின்றது. தேசியக் கொடிக்கு முன்னொருபோதுமே இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

தாயகத்தின் மீது அன்பும், பற்றும் கொண்டவர்களாக குழந்தைகளை உருவாக்க வேண்டும். அவர்களை நற்பண்புகள் நிறைந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் என்ன அபிவிருத்தி செய்தாலும் அவை பிரயோசனமற்றதாகிவிடும் என்றார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்களான டப்ளியூ. டி. ஜே. செனவிரட்ன, பியசேன கமகே, ஹேமகுமார, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க, தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, பிரதியமை ச்சர் லயனல் பிரேமசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

7334 முதியோர் வெளியேற அனுமதி

வவுனியாவில் உள்ள மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் உட்பட இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள பல்வேறு முகாம்களில் இருந்து இதுவரையில் 7334 முதியவர்கள் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முதியவர்கள் உறவினர்களிடம் செல்வதற்கும், உறவினர்கள் அல்லது உற்றார் இல்லாத முதியவர்கள் பலர் பல்வேறு முதியோர் இல்லங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வவுனியா மன்னார் வீதியில் சனசமூக சேவைகள் அமைச்சினால் நடத்தப்பட்டு வரும் முதியோர் இல்லத்திலும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.