தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை நடத்த வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கைக் கிரிக்கட் அணி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில் கே.பி.யிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாகிஸ்தானிய அதிகாரிகள் கோரியுள்ளனர்.
அண்மையில் லிபியாவில் வைத்து ஜனாதிபதி மஹிந்தவிடம், இலங்கை கிரிக்கெட் அணி மீது லாகூரில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஹிலார்னி தெரிவித்திருந்தார்.
இதன்படி, குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பாகிஸ்தானிய உயரதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு எதிர்வரும் வாரத்தில் விஜயம் செய்யக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இந்தியா ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்மநாதனை விசாரணை செய்யும் இந்திய புலனாய்வுக் குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.