அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மட்டு. மாவட்டத்தில் மெய்வல்லுநர் போட்டிகள்

மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் இம்மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட மட்டத்தில் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சியொன்றினை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் அனுசரணையுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் விளையாட்டு வீரர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று சங்கத்தின் செயலாளர் த. சோமஸ் காந்தன் அறிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்காகவும், திறந்த போட்டியாகவும் இரண்டு பிரிவுகளாக மெய்வல்லுநர் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டியில் பங்கு கொள்வதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 22 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்குமாறும் சங்கத்தின் செயலாளர் கேட்டுள்ளார். குறுந்தூர ஓட்டப் போட்டி கள், மரதன் ஓட்டம் மற்றும் அஞ்சலோட்டம் உட்பட 16 வகை யான போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நேற்று அரச இலக்கிய விருது விழா – செங்கை ஆழியானுக்கு உயர் விருது வழங்கி கெளரவம்

mahinda-rajapaksha.jpgஅரச இலக்கிய விருது விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

2009ம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது தமிழில் 15 நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் உயர் இலக்கிய விருதான சாகித்திய ரத்னா விருது “செங்கை ஆழியான்” கலாநிதி க. குணராசாவிற்கு வழங்கப்பட்டு ள்ளது.

நேற்றைய இவ்விழாவில் கலாநிதி க. குணராசாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாகித்திய ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார். அத்துடன் சிங்கள மொழி இலக்கியவாதி பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், ஆங்கில இலக்கியத்துக்காக பேராசிரியர் ஏஸ்லிஹெல்பேவுக்கும் ஜனாதிபதியினால் சாஹித்திய ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவர்கள் மூவருக்கும் விருதுகளுடன் தலா 75,000ரூபா பணப் பரிசும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

பொகவந்தலாவையில் பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!

150909police22.jpgபொகவந்த லாவைப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று பொகவந்தலாவை நகரில் நடத்திய பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தோட்டப் பகுதிகளில் இன்று 500 ரூபா சம்பள உயர்வு கோரி பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தெழிலாளர்கள் மறியல் போராட்டம் ஒன்றையும் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கட்டம் ஒன்றுக்கு கல் வீசியதையடுத்து இவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் பெற்றோலிய ஆராய்ச்சியில் இந்தியாவின் அம்பானிக் குழுமம் ஆர்வம்!

oil_research.jpgமன்னார் பிரதேசத்தின் பெற்றோலிய ஆய்வு நடவடிக்கைகளில்  இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமான முகேஷ் அம்பானி குழுமத்தின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துப்  பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக  முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவின் திசாநாயக்க நாளை மும்பாய் பயணமாகவுள்ளார்.

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் இலங்கையில் பெற்றோலிய ஆய்வு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டிவருவதாகவும்  அதற்கான எண்ணெய் ஆராய்ச்சிப் பகுதிகள் மன்னார் மாவட்டத்தில் இனங்காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

ஐ.நா. சபை அமர்வில் பிரதமர்

1509sri-lankan-prime-minister.jpgஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 64 ஆவது வருடாந்த அமர்வில் இம்முறை இலங்கை சார்பில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 64 ஆவது வருடாந்த அமர்வுகள் இன்று 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகின்றன. இந்த அமர்வுகளின் பொதுவான விவாதங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதிவரையும் மேலும் 28 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளின் தலைவர்கள் இந்த அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குறித்த அறிக்கை அமெரிக்க காங்கிரஸ் ஆராயும்

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் பற்றி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தயாரித்த அறிக்கை ஒன்று அடுத்தவாரம் அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது என்று யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பான அமெரிக்க தூதுவர் ஸ்ரெபன் றெப் தெரிவித்துள்ளார்.
 

இடம்பெயர்ந்திருப்பவர்களுக்கும் ஏனையவர்களைப் போன்று வசதிகளும் உரிமைகளும் வழங்கப்படும் -ஐ.நா. பேரவையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க உரை

mahinda-samarasinha.jpgநாட்டில் வாழும் ஏனையவர்களைப் போல் உள்ளூரில் இடம்பெயர்ந்திருப்பவர்களுக்கும் சகல வசதிகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் என ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் 12 ஆவது கூட்டத் தொடரில் நேற்று உரையாற்றிய அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள்,  இடம்பெயர்ந்த மக்களுக்கான அரசாங்கத்தின் உதவிகள் ஆகியன பற்றி அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள், சரணடைந்த புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகள்,  செனல் – 4 அலை வரிசை வீடியோ ஆகியன குறித்தும் அமைச்சர் தனது உரையின் போது தெளிவுபடுத்தினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து நிவாரணம், மீள்கட்டுமானம், மீள்குடியமர்த்தல்,  மீள் ஒருங்கிணைத்தல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய 05 கட்டங்களின் கீழ் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புலிப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்தும் மோதல்களிலிருந்தும் சுமார் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் புலிகளினால் இயக்கத்துக்கு வேலை செய்யுமாறு பலவந்தப்படுத்தப்பட்டவர்கள். புலி பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதையடுத்து இவர்கள் தற்காலிகமாக பாடசாலைகளிலும் பொதுக் கட்டடங்களிலும் தங்க வைக்கப்பட்டு பின்னர் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களுக்குத் தேவையான அவசர உணவுகள்,  கூடாரங்கள், மருத்துவ வசதிகள், குடிநீர்,  மலசல கூட வசதிகள் ஆகியன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் பெய்யக்கூடிய பருவப் பெயர்ச்சி மழையினால் நிவாரணக் கிராமத்தில் வெள்ளம் ஏற்படாத வகையில் அனர்த்த நிவாரண முகாமைத்துவ அமைச்சு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மீள்கட்டுமானப் பணிகள்

மோதல்களின் போது சேதமடைந்த உட்கட்டமைப்புகளின் மீள்கட்டுமானப் பணிகளுக்காக அரசாங்கம் இதுவரையில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது.கடந்த செப்டெம்பர் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 75.009 குடும்பங்களைச் சேர்ந்த 167.908 பேர் இடம்பெயர்ந்தவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக 110.000 தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மே மாதமளவில் 14.500 இற்கும் அதிகமானோர் தமது உறவினர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பிரிந்த தமது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.

மீள்குடியேற்றம்

ஓகஸ்ட் மாதமளவில் 695 குடும்பங்களைச் சேர்ந்த 5.331 பேர் வவுனியா,  அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்,  திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மீள குடியமர்த்தப்பட்டனர். இன்னும் 9.994 பேர் எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதியினுள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 60 மாணவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரச நிறுவனங்களுடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற அமைப்புக்கள் இணைந்து நிவாரணக் கிராமங்களில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

சுகாதாரம்:

நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருப்போரின் சுகாதாரத்துக்கு அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. வவுனியாவில் நிவாரணக் கிராமங்களில் 81 வைத்தியர்கள் சேவையாற்றி வருகின்றார்கள். சுகாதார அமைச்சு இதனை 100 வைத்தியர்களாக அதிகரிப்பதற்கும் செட்டிக்குளம் வைத்தியசாலையில் 28 வைத்தியர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கு நடமாடும் மருத்துவ முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.

கல்வி:

வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் மாணவர்களின் கல்வி முக்கியத்துவம் கருதி தேசியக் கல்வித் திணைக்களம் க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 1236 மாணவர்களுக்காக 10 விசேட பரீட்சை நிலையங்களை வவுனியாவில் அமைத்திருந்தது. கடந்த மாதம் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில் 166 முன்னாள் புலி உறுப்பினர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

கண்ணிவெடி அகற்றல்:

மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்த முடியும். இதற்காக ஐ. நா. அமைப்புகள் உட்பட பல நிறுவனங்கள் எமக்கு உதவி வருகின்றன. நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக புதிதாக பெறப்பட்டுள்ள 10 இயந்திரங்களின் உதவியுடன் எதிர்வரும் வாரங்களில் அதற்கான வேலைகளை துரிதப்படுத்தவுள்ளோம்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம்:

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்போது கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கை ஊடகவியலாளர் ஜே. எஸ். திஸ்ஸநாயகம் இலங்கை சட்ட திட்டங்களுக்கு அமையவே தண்டனை பெற்றுள்ளார்.

செனல் 4

வடக்கிலிருந்த தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் கொலைசெய்வது போன்று வெளியான வீடியோ போலியானதென்பது விசாரணைகள் உறுதி செய்துள்ளன. இது போன்ற போலியான வீடியோ அலைவரிசைகள் இனிமேலும் ஒளிபரப்பப்படாமலிருப்பதற்கான முன்னேற்பாடுகளை நாம் மேற்கொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார். 

பாலித கோஹண – பான் கீ மூன் சந்திப்பு

1409kohona-banki.jpgஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர பிரதிநிதி பாலித கோஹணவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடைலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

தமது புதிய பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர், பான் கீ மூனை முதன் முறையாக பாலித கோஹண சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

தொழிற்சங்க நடவடிக்கையால் பெருந்தோட்டத்துறைக்கு ரூ.800 மில். இழப்பு : அமைச்சர் ஜயரத்ன

150909dimujayarathna2.jpgமலையக தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 14 நாட்களாக மேற்கொண்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு 800 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி. எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் நலனை முன்நிறுத்துவதாகக் கூறும் சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைப் பலிகொடுத்து, தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம், இரகசியமாக செயற்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது

mono.jpgதோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம், தொடர்ந்து இழுபறிபடுவதால் அரசின் பகிரங்க தலையீட்டை நாம் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் கோரினோம். நானும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் ஜே.வி.பி.யின் அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் இது தொடர்பில் வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால், பகிரங்கமாக தலையிட்டு நியாயமான சம்பளத்தை பெற்றுத்தர வேண்டிய அரசாங்கம், இரகசியமாக செயற்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மனோ எம்.பி. மேலும் கூறுகையில்,

“கடந்த சனிக்கிழமை நள்ளிரவில், தொழிலாளர்களுக்கு 405 ரூபா சம்பள உயர்வு என்பதாக ஊடகங்களுக்கு இ.தொ.கா. அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்திற்கும், தொழிற்சங்க கூட்டு கமிட்டிக்கும் அறிவிக்கப்படவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்குப் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளத்தை தோட்டக் கம்பனிகளால் வழங்க முடியாவிட்டால் மானியம் அல்லது வரிச்சலுகைகள் வழங்கி இந்த 500 ரூபா தொகையை நாட் சம்பளமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் வழி ஏற்படுத்த வேண்டும். இத்தகைய ஒரு தலையீட்டையே நாம் அரசாங்கத்திடம் கோரினோம்” என்றார்