அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கொழும்பில் ஆட்கடத்தல் சம்பவம்

கெப் வண்டி ஒன்றில் வந்த நால்வர் பொரளை பிரதேசத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார். புதன் இரவு கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காணாமல்போன நால்வரும் வந்த கெப் வண்டி பொரளை தேவி பாலிகா பாடசாலைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நால்வர் கெப் வண்டியில் சென்றுள்ளனர். இவர்கள் நால்வரும் வீடு திரும்பாத நிலையில் கெப் வண்டி உரிமையாளரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பொரளை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கெப் வண்டியை கண்டெடுத்துள்ளனர்.

தற்பொழுது நால்வரும் காணாமல் போன நிலையில் இவர்களை கண்டு பிடிக்கும் பொறுப்பு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொரளை பொலிஸாரும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

மஹிந்தவுக்கு சந்திரகாந்தன் குழு நிபந்தனையற்ற ஆதரவு

pilleyan_mahinda.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது என்ற முடிவை தற்போது மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன், பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஷ்வரராஜா, மாகாண சபை உறுப்பினர்களான சோமசுந்தரம் புஷ்பராஜா மற்றும் நாகலிங்கம் திரவியம் உட்பட 7 பேர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

புலிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க ஏற்பாடு – கெஹெலிய ரம்புக்வெல்ல

k-rambuk.jpgஇலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புலிகளிடம் 14 கப்பல்கள் இருக்கின்றன. அவற்றில் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் பெயரில் மாத்திரம் ஐந்து கப்பல்களும் 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கே.பியின் பெயரிலுள்ள ஐந்து கப்பல்களில் மூன்று கப்பல்களை இலங்கைக்கு எடுத்துவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்த சொத்துக்களை சுவீகரிப்பது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.  இதன்போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள குழுக்களிடமும் தனி நபர்களிடமும் தற்போது இருக்கும் புலிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள புலிகளின் சொத்துக்களை அரசாங்க புலனாய்வுத் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். தற்பொழுது தனி நபர்களினதும், குழுக்களினதும் கட்டுப்பாட்டிலுள்ள சொத்துக்களை அரசு சுவீகரிக்கவுள்ளது.

கே.பி.யின் பெயரில் உள்ள சுமார் 600க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. புலிகளின் நிதி மார்க்கங்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப் பதற்காகவே கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றார். கே.பி.யின் வங்கிக் கணக்குகளின் மொத்த பெறுமதி தொடர்பாக இன்னும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ்.மாவட்டத்தில் 7லட்சத்து 21ஆயிரத்து 359 வாக்காளர்கள்!

எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 7 இலட்சத்து 21 ஆயிரத்து 359 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரியவருகிறது.

இதன்படி ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் 53111 பேரும் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 63991 பேரும் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 69082 பேரும் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 71114 பேரும் கோப்பாய் தேர்தல் தொகுதியில் 65798  பேரும் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் 56426 பேரும் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 48613 பேரும் சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 65141 பேரும் நல்லூர் தேர்தல் தொகுதியில் 72558 பேரும் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் 64 714 பேரும் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 90811 பேரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

விஜேதாஸ ராஜபக்ச, ஐக்கிய தேசிய கட்சியில்..

wijedasa_rajapakse.jpgநாடாளு மன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வந்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ  ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அவர் (02) எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார். இந்தநிலையில் விஜேதாஸ ராஜபக்ச, கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் தெரிவானார். அத்துடன் கட்சியின் மஹரகம அமைப்பாளராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலியின் இடத்திற்கே விஜேதாஸ ராஜபக்ச, கட்சியின் செயற்குழுக்கு தெரிவானார்.

வாக்காளர் இடாப்புக்களில் 80 ஆயிரம் இரட்டைப் பதிவுகள்

மேல் மாகாணத்தின் வாக்காளர் இடாப்புகளில் கிட்டத்தட்ட 80 ஆயிரம் இரட்டை பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 60 ஆயிரம் இரட்டை பதிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரம் இரட்டை பதிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் 8000 இரட்டை பதிவுகளும் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக திணைக்களம் மேலும் கூறியது.

A (H1 N1) இன்புளுவன்சா பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்து – இது வரை 10 பேர் பலி – மருத்துவ நிபுணர் தகவல்

influenza-a.jpgநாட்டின் பல பிரதேசங்களில் பரவியுள்ள புதிய இன்புளுவென்சா ஏ (எச் 1 என் 1) வைரஸ் நோய் காரணமாக நேற்று முன்தினம் வரையும் பத்து பேர் உயிரிழந்திருப்பதாக நோய் பரவுகைத் தடுப்பு பிரிவின் தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம், புதிய இன்புளூவன்சா ஏ (எச் 1என் 1) வைரஸ் தனது கட்டமைப்பை காலத்திற்குக் காலம் மாற்றிக் கொள்வதால் இது எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக வளர்ச்சி பெறக் கூடிய ஆபத்து நிலவுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இது புது வகையான ஒரு வைரஸ். பன்றிகளில் இன்புளுவென்சா காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸின் குண இயல்பும், பறவைகளுக்கு இன்புளுவென்சா காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸின் பரம்பரை இயல்பும், மனிதனுக்கு சாதாரண சளிச்சுரத்தை ஏற்படுத்துகின்ற வைரஸின் பரம்பரை இயல்பும் இந்த புதிய இன்புளுவென்சா ஏ(எச் 1 என் 1) வைரஸில் காணப்படுகின்றது.

 இது காலத்திற்குக் காலம் தனது கட்டமைப்பை மாற்றிக் கொள்ளக் கூடியதாக விளங்குகின்றது. அதனால் இது இப்போது சாதாரண வைரஸாக இருந்தாலும் எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக வளர்ச்சி பெறக் கூடிய அச்சுறுத்தல் நிலவுகின்றது. இந்நாட்டில் இவ் வைரஸ் காரணமாக நேற்று முன்தினம் வரையும் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரம், குருநாகல், கண்டி, இரத்தினபுரி, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தான் இந்த உயிரிழப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந் நோய்க்கு இற்றைவரையும் 345 பேர் உள்ளாகியுள்ளனர். புதிய இன்புளுவென்சா ஏ (எச் 1 என் 1) நோய் ஒரு தொற்று நோயாகையால் அதனைத் தவிர்ந்து கொள்ளுவதில் பொது மக்கள் கூடிய கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.

யாழ். குடாவிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு வசிக்குமிடத்தில் வாக்களிக்க வசதி

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து கொழும்பு உட்பட அதன் சுற்றுப் புறங்களில் வசிக்கும் வாக்காளர்களுக்கு தாம் தற்காலிகமாக வசிக்கும் பகுதிகளில் வாக்களிக்க வசதி அளிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையாளருக்கு விண்ணப்பிக்குமாறு தேர்தல் திணைக்களம் கோரியுள்ளது. யாழ். தேர்தல் மாவட்ட வாக்காளர் இடாப்புக்கள் இன்று (3) முதல் வெள்ளவத்தை தபால் நிலையத்தில் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

சுற்றுலா பயணிகளைக் காக்க மத்திய மாகாணத்தில் பொலிஸ் நிலையங்கள்!

kandy-city.jpgமத்திய மாகாணத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பொலீஸ் நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரெத்ன தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மத்திய மாகாணத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிவதோடு,  சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்படி இந்தப் பொலீஸ் நிலையங்கள் தம்புள்ள, சீகிரிய மற்றும் கண்டலம ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன. இதேவேளை நாட்டின் சட்டவிதிகளை மீறும் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக இந்தப் பொலீஸ் நிலையங்களின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். பஸ் பயண அலுவலகம்: தேக்கம் காட்டுக்கு மாற்றம்

யாழ்ப்பாண பஸ் பயண அலுவலகம் வவுனியா நகருக்கு அருகாமையில் உள்ள தேக்கம்காடு விளையாட்டு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்று முதல் யாழ். பஸ்கள் இங்கிருந்தே புறப்படுகின்றதென வவுனியா செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை காலமும் ஈரற்பெரியகுளம் இராணுவ முகாமிற்கு அருகாமையிலிருந்து யாழ். பஸ்கள் புறப்பட்டன. இது மக்களுக்கு பலத்த அசெளகரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இதுவரைகாலமும் மக்கள் அனுபவித்த அசெளகரியங்கள் இனி மேலும் இருக்காது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.