கெப் வண்டி ஒன்றில் வந்த நால்வர் பொரளை பிரதேசத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார். புதன் இரவு கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காணாமல்போன நால்வரும் வந்த கெப் வண்டி பொரளை தேவி பாலிகா பாடசாலைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நால்வர் கெப் வண்டியில் சென்றுள்ளனர். இவர்கள் நால்வரும் வீடு திரும்பாத நிலையில் கெப் வண்டி உரிமையாளரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பொரளை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கெப் வண்டியை கண்டெடுத்துள்ளனர்.
தற்பொழுது நால்வரும் காணாமல் போன நிலையில் இவர்களை கண்டு பிடிக்கும் பொறுப்பு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொரளை பொலிஸாரும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.