இந்தோனேசியக் கடலில் தொடரும் தமிழ் படகு அகதிகளின் போராட்டம் : த ஜெயபாலன்

Boat Refugeesஇந்தோனேசிய அரசு படகு அகதிகளின் தஞ்ச உரிமையை அங்கிகரிக்க வேண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டிய மனிதத்துவ உதவிகளைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி பிரித்தானியாவில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை தமிழ் சொலிடாரிட்டி – தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்தோனேசியவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகு அகதிகள் தொடர்பான தொடர்ச்சியான கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் தமிழ் சொலிடாரிட்டி மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

கவனயீர்ப்புப் போராட்டம்
Indonesian Embassy
Grosvenor Square (nearest tube: Bond Street)
4pm Friday 4 December 09.

ஒக்ரோபர் 10 மலேசியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் இந்தோனேசிய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங்க்கு விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து ஜகார்ற்றா அருகில் உள்ள மேர்க் துறைமுகத்தில் 250 இலங்கைத் தமிழ் படகு அகதிகள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி வரும் படகு அகதிகளை அவுஸ்திரேலிய கடற்பரப்பினுள் நுழைவதற்கு முன்னரே தடுத்து அவர்களை இந்தோனேசியாவிலேயே தஞ்சம்பெற வைக்கின்ற ‘இந்தோனேசியத் தீர்வு’ என்ற திட்டத்தை அவுஸ்திரேலியா கடைப் பிடிக்கின்றது. இதன் மூலம் தனக்கு வரும் அகதிகள் பிரச்சினையை கைகழுவி விட்டு வருகின்றது.

Alexஇலங்கைப் படகு அகதிகளின் பேச்சாளராகியுள்ள அலெக்ஸ் என்றறியப்பட்ட குகனேந்திரராஜா சஞ்சீவ் (27)வின் தாயார் சத்தியா ராஜரட்ணம் (46) சென்றவாரம் கனடா வன்கூவரில் இருந்து இந்தோனேசியா சென்று தனது மகனை விடுவிக்க முயற்சி செய்தார். அதற்காக ஐநா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் ஆலயம், இந்தோனேசிய அதிகாரிகள், கனடிய தூதரகம் ஆகியவற்றுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த முயன்றார். ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை.

எவ்வித நிபந்தனையும் இன்றி படகில் இருந்து வெளியே வரும்படி கேட்டதாக இலத்திரனியல் வியாபாரப் பெண்மணியான அலெக்ஸின் தாயார் சத்யா ராஜரட்ணம் தி குளோப் அன்ட் மெயில் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். ‘எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை’ என்றும் ‘வேதனையாக உள்ளது’ என்றும் தெரிவித்துள்ள அவர் ‘எனக்கு எதுவும் செய்ய முடியவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார். ‘இந்தோனேசிய அரசினை நம்ப முடியாது’ எனத் தெரிவித்த அலெக்ஸின் தாயார் மேலும் தெரிவிக்கையில் ‘அவர்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கும்படியும் சமூகமான வாழ்வுக்கான உத்தரவாதத்தையும் வழங்கினால், அவர்கள் தரையிறங்குவது பற்றி ஆராய்வார்கள். ஆனால் யாரும் அந்த உத்தரவாதத்தை வழங்கமாட்டார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

அந்த ‘இந்தோனேசியத் தீர்வு’ திட்டத்தில் தற்போது 250 இலங்கைத் தமிழ் அகதிகள் சிக்கி உள்ளனர். தற்போது மேர் துறைமுகத்தில் உள்ளவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுக்கின்றனர். நேரடியாக இலங்கையில் இருந்து புறப்படாத இப்படகுக் கப்பல் மலேசியாவில் இருந்தே புறப்பட்டு உள்ளது. இலங்கையில் இருந்து ஏற்கனவே மலேசியா, இந்தோனேசியாவிற்கு புலம்பெயர்ந்திருந்த பலரும் அங்கு சமூகமான ஒரு வாழ்வை மேற்கொள்ள முடியாத நிலையில் இக்கப்பலில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லப் புறப்பட்டு இருந்தனர். மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான ஜெனிவா உடன்பாட்டில் கைச்சாத்திட்டு இருக்கவில்லை. இங்கு வாழும் அகதிகள் மிகவும் நெருக்கடியான இக்கட்டான இருண்ட எதிர்காலத்தையே கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டனர். அதற்கு ஒருவருக்கு 12000 வெள்ளிகள் கட்டணம் செலுத்த வேண்டியும் இருந்தது.

இவ்வாறு இக்கப்பலில் ஏறியவர்களில் ஒருவரான அலெக்ஸின் கடந்த காலம் சர்ச்சைக்கு உரியது. 5 வயது முதல் கனடாவில் வளர்ந்த அலெக்ஸ் அங்கு பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏ கெ கண்ணன் குழுவைச் சேர்ந்தவர். இவர் கொலை மிரட்டல், வாள், செமி ஓட்டோமற்றிக் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தமைக்காக கனடாவில் சிறைத் தண்டனை பெற்றவர். 2003ல் இவர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்ட்டு இருந்தார். ஊடகப் பேச்சாளராக இவரது ஆங்கிலப் பேச்சு கனடியச் சாயலுடன் வெளிவந்தவுடன் இவரது கடந்தகாலம் வெளிச்சத்திற்கு வந்தது. http://www.scribd.com/doc/22355905/Kulaendrarajah-Sanjeev-a-k-a-SANJEEV-KUHENDRARAJAH-a-k-a-Alex அது கப்பலில் இருந்த அகதிகள் மீதும் தவறான பார்வையை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது.

Boat Refugees250 இலங்கைப் படகு அகதிகளின் இருண்ட எதிர்காலம் இரண்டாவது மாதமாகவும் தொடர்கிறது. இலங்கை அரசு மனித உரிமைகளை மீறுகிறது, யுத்தக் குற்றங்களைப் புரிந்துள்ளது என்றெல்லாம் சர்வதேச நாடுகள் குரல் எழுப்பிய போதும் இந்த அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற போக்கே இந்த மேற்கு நாடுகளிடம் காணப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த பிரித்தானியாவின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி டெஸ் பிரவுணி இலங்கைப் படகு அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். ‘தமிழர்கள் உட்பட இலங்கையர்களைத் திருப்பி அனுப்புவதற்கு இலங்கை பாதுகாப்பானது என்று நாங்கள் கருதுகிறோம்’ என்று நவம்பர் 10ல் கன்பராவில் டெஸ் பிரவுணி தெரிவித்து இருந்தார்.

இந்தோனேசிய கடற்படையினர் இதுவரை பலாத்காரமாக அவர்களை வெளியேற்றுவதில்லை என்ற நிலையிலேயே உள்ளனர். ஆனால் அவர்கள் தாங்களாக வெளியேறுவதற்கான நெருக்கடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அவுஸ்திரேலியா முழுமையாகத் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ள நிலையில் இரண்டாவது மாதமாகவும் அவர்களின் அவுஸ்திரேலியா செல்வதற்கான போராட்டம் தொடர்கின்றது.

 இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகள்:

8வது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் அவலமும் பதட்டமும்.

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்!

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

 • பார்த்திபன்
  பார்த்திபன்

  கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட அலெக்ஸ், பின்பு இந்தியா சென்று அங்கு புலிகளுக்காக பல கிரிமினல் செயற்பாடுகளை செய்து அங்கும் கைது செய்யபட்டு சிலகாலம் உள்ளே இருந்திருக்கின்றார். கப்பலிலுள்ள அகதிகளிடம் பணம் பெற்று, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கூட்டிச் செல்வதாக அழைத்து வந்தவரும் இவரே. அத்துடன் கப்பலிலுள்ள எவரும் இல்கையிலிருந்து வந்தவர்களல்ல, இவர்கள் ஏற்கனவே இந்தோனேசியா போன்ற நாடுகளில் அகதித் தஞ்சம் பெற்றவர்களென்பதும் பல வாரங்களின் முன்பே வெளிவந்து விட்டது. இவை சம்மந்தமாக சில வாரங்கள் முன்பு பிபிசி தமிழோசை அலெக்ஸிடம் கேள்வியெழுப்பிய போது, அவர் அவைபற்றி பதிலளிக்க மறுத்திருந்தார்.

  Reply
 • NEIL PANDRA
  NEIL PANDRA

  What will happen to those 250 lives? we all exprienced SORRY whenever unplesant things happend but these are humans and their have no secure for their lifes.international community being engaging their winter season activites and found something to cheer them up.those people in the ship like us and they are our people.we have a duty to do.

  IN UK SOLICITORS CHARGE UNRESONABLE MONEY EVERYTIME YOU VISIT THEM THAN THEY LET YOU DOWN AND REPLIED SAYING TRY A ANOTHER SOLICITOR.ITS NOT LIKE THAT. ITS THEIR LIFE AND WE NEED TO HELP THEM WHEN THEY NEED HELP.

  WE ALL HAVE VERY BAD EXPRIENCED WITH OUR SRILANKAN SOLICITORS SO WE SHOULDNT TAKE THE SORRY WORD TO THOSE PEOPLE WHOM LOOKING FOR A HELP.

  Reply
 • Anonymous
  Anonymous

  கப்பலில் புலியா, புலி சார்ந்தோர் அணியா என்று வாத,விவாதம் நடத்துவதை இலங்கை அரசாங்கம் செய்யட்டும். இங்கே முக்கியமாக ஆராயப்பட வேண்டியது மேற்கத்தைய நாடுகளின் மனிதாபிமானமற்ற செயற்பாடு. ஒரு பூனைக்கு, நாய்க்கு கிடைக்கின்ற கருணை கூட இந்த தமிழனுக்கு இல்லை என்பதுதான் தெளிவான விடயம். உங்களால் தமிழனாக பார்க்க முடியாவிட்டாலும், ஒரு மனிதனாகப் பாருங்கள். கப்பலில் இருப்பவரை உங்கள் தாயாக, தந்தையாக, சகோதர, சகோதரியாக நினைத்துப் பாருங்கள். அந்த வலி தெரியும். ஒரு சிறிதளவேனும் மனிதாபிமானமற்ற கருத்துகளை வெளியிடுவதிலிருந்துதான் துப்பாக்கி கலாச்சாரம் எம் மண் மீது தளிர் விட்டது. அது இன்று ஆல விருட்சமாக வளர்ந்து நிற்பதற்கு இது போன்ற எழுத்துகளும் காரணம்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  Anonymous,
  தாங்கள் குறிப்பிடும் அந்த மனிதாபிமானம் முதலில் இவர்களை கடத்தி வந்து பணம் பார்த்த கூட்டத்திற்கு இருந்ததா?? இப்படி பொருளாதார அகதிகளாக ஏற்கனவே வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றிருந்தும் அந்த நாடுகளிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கூட்டமாக மாறுவதை எந்த நாடு அனுமதிக்கும்??

  Reply
 • sivam
  sivam

  மனிதாபிமானம் என்பது மனிதர்கள் கெட்டவர்கள், நல்லவர்கள் என்ற வித்தியாசத்தில் இருந்து தொடங்குவது இல்லை

  புலி அதரவாளர்கள், புலி எதிர்ப்பு என்ற அரசியல் வட்டத்திற்குள் நின்றுகொண்டு, அனைத்து அரசுகளின் அதிகாரங்களை நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டு மனிதாபிமானம் என்றால் என்ன என்று வரையறுப்பது கடினம்.

  மனிதாபிமானத்திற்கு ஒரு வரலாறு இருக்கின்றது, அது மனித நாகரிகத்தின் மிகவும் ஆரம்ப காலத்தில் இருந்தே தொடங்குகின்றது. நீங்கள் யாராவது இது பற்றி வாசிக்க விரும்பினால் பின் வரும் இணைப்பில் தொடங்கலாம்:
  http://en.wikipedia.org/wiki/Humanism

  Reply