நாட்டின் பல பிரதேசங்களில் பரவியுள்ள புதிய இன்புளுவென்சா ஏ (எச் 1 என் 1) வைரஸ் நோய் காரணமாக நேற்று முன்தினம் வரையும் பத்து பேர் உயிரிழந்திருப்பதாக நோய் பரவுகைத் தடுப்பு பிரிவின் தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம், புதிய இன்புளூவன்சா ஏ (எச் 1என் 1) வைரஸ் தனது கட்டமைப்பை காலத்திற்குக் காலம் மாற்றிக் கொள்வதால் இது எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக வளர்ச்சி பெறக் கூடிய ஆபத்து நிலவுவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இது புது வகையான ஒரு வைரஸ். பன்றிகளில் இன்புளுவென்சா காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸின் குண இயல்பும், பறவைகளுக்கு இன்புளுவென்சா காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸின் பரம்பரை இயல்பும், மனிதனுக்கு சாதாரண சளிச்சுரத்தை ஏற்படுத்துகின்ற வைரஸின் பரம்பரை இயல்பும் இந்த புதிய இன்புளுவென்சா ஏ(எச் 1 என் 1) வைரஸில் காணப்படுகின்றது.
இது காலத்திற்குக் காலம் தனது கட்டமைப்பை மாற்றிக் கொள்ளக் கூடியதாக விளங்குகின்றது. அதனால் இது இப்போது சாதாரண வைரஸாக இருந்தாலும் எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக வளர்ச்சி பெறக் கூடிய அச்சுறுத்தல் நிலவுகின்றது. இந்நாட்டில் இவ் வைரஸ் காரணமாக நேற்று முன்தினம் வரையும் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரம், குருநாகல், கண்டி, இரத்தினபுரி, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தான் இந்த உயிரிழப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இந் நோய்க்கு இற்றைவரையும் 345 பேர் உள்ளாகியுள்ளனர். புதிய இன்புளுவென்சா ஏ (எச் 1 என் 1) நோய் ஒரு தொற்று நோயாகையால் அதனைத் தவிர்ந்து கொள்ளுவதில் பொது மக்கள் கூடிய கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.