அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 738 தமிழ் கைதிகள் இந்தவாரம் விடுதலை

முன்னாள் குழந்தைப் போராளிகள்இறுதி யுத்தத்தின் பின்னர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்ககப்பட்டுள்ளவர்களுள் 738 பேர் இவ்வார இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவார்களென சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.  நிவாரணக் கிராமங்களில் இருந்த போது விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் 38 பேருமே இவ்வாறு விடுவிக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார்.

சி. ஐ. டி.யினரால் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளவர்களுள் 55 பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விடுவிக்கப்பட்டவர்கள் எவ்வித குற்றச் செயல்களிலும் சம்பந்தப்படாதவர்கள் என்பது நிரூபணமாகியிருப்பதாகவும், ஏற்கனவே 100 பேர் இவ்வாறு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சட்ட மாஅதிபர் கூறினார்.

தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுபவர்களைத் துரிதமாக விடுவிப்பதோடு, ஒரு மாதத்தில் குறைந்தது 100 பேரையாவது விடுவிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். புலிகள் இயக்க உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 11,500 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது.  இவர்கள் தவிர இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்தவர்களுள், பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களுள் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், 700 பேர் இவ்வாரம் விடுதலையாகின்றனர்.  இவர்களை மீளக்குடியர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருமகனின் ஆயுதக் கொள்வனவு பற்றி தொலைக்காட்சி விவாதம் நடத்த பொன்சேகாவுக்கு விமல் அறைகூவல்

vimal-weera.jpgசரத் பொன்சேகாவின் மருமகன் தாருக்க வெளிநாடுகளில் ஆயுதம் கொள்வனவு செய்து இலங்கைக்கு விற்பனை செய்தமை, இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அவர் வாங்கிய சொத்துக்கள், அவரது கம்பனி மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பணம் ஆகியவை சம்பந்தமாக ஒரு வாரத்துக்குள் சரத்பொன்சேகாவோ அல்லது அவரது பிரநிதிகளோ நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்கு வருமாறு அழைக்கிறேன்.  அவ்வாறு வராவிட்டால் இவை பற்றிய சகல விபரங்களையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவோம். என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இந்த நாட்டில் வீண்விரயம், லஞ்சம், களவு இடம்பெறுவதாக சொல்லித்திரியும் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்து கொண்டு ஆயுதக் கொள்வனவில் சேர்த்த சொத்து க்களை பற்றி அரசு மக்களுக்கு வெளிப் படுத்தும். பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளர் என பிரேரித்தவர் ஜே.வி.பி. என்றும் இன்னொரு இடத்தில் ரணில் விக்கிரமசிங்க என்றும் கூறுகின்றனர். ஆனால் ரவூப் ஹக்கீம் சரத் பொன்சேகா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் என்றும் அவரை பிரேரித்தது அவரது கட்சியே என்றும் அட்டாளைச்சேனையில் கடந்த வாரம் கூறியுள்ளார்.

சரத்பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் வெள்ளைக் கொடி கொண்டுவரும்போது சுடும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்தார் எனச் சொல்லியிருந்தார். அடுத்த நாள் நான் அடிப்படிச் சொல்லவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்தார்.  ஆனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளரே சுடும்படி உத்தரவு பிறப்பித்துள்ளதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.

இவரது உரை கடந்த 25 ஆம் திகதி தெரன தொலைக்காட்சியில் செய்தியின்போது ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறாக நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கும் அமெரிக்க மற்றும் மேலைத்தேய நாடுகளுக்கும் நியாயபூர்வமாக யுத்தத்தை காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தத்துக்கும் மனோ, ஹக்கீம், ரணில், மங்கள, சோமவன்ச ஆகியோரின் நிகழ்ச்சி நிரல்களுக்கும் அவர் சோரம் போகியுள்ளார் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த சமயத்தில் சீன நாட்டுக்குச் சென்று 330 கோடி ரூபாவுக்கு ஆயுதம் கொள்வனவு செய்திருந்தார். பாதுகாப்புச் செயலாளர் யுத்தம் முடிவுற்றதும் பாகிஸ்தான், சீனா நாடுகளுக்கு ஆயுதம் கொள்வனவை நிறுத்தியிருந்தார். இதன் விளைவாகவே இந்தக் கப்பல் திருப்பியனுப்பப்பட்டது. சரத் பொன்சேகா மேற்கொண்ட இந்த ஆயுதக் கொள்வனவில் சீன அரசுக்கு 330 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வீரவன்ச மேலும் கூறினார்.

ஏப்ரல் முதல் யாழ்தேவி ஓமந்தை வரை செல்லும்

railroad-tracks.jpgயாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் முதல் ஓமந்தை வரை நீடிக்கப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் பி.பி. விஜேசேகர தெரிவித்தார்.தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோ மீட்டர் நீளமான ரயில் பாதைகள் மீளமைக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதோடு ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 2 தசாப்தங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் ஓமந்தை வரை பயணிக்க உள்ளதாக பொது முகாமையாளர் பி.பி. விஜேசேகர கூறினார்.

400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தை ரயில் நிலையத்தை மீளமைக்கும் பணிகளை பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி பொறுப்பேற்று முன்னெடுத்து வருகிறார். மோதல் காரணமாக கொழும்பில் இருந்து வவுனியா வரையே ரயில் சேவைகள் இடம்பெற்றன. புலிகளின் பிடியில் இருந்து வட பகுதி முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரை சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

30 வருடகாலம் நீடித்த மோதல்களின்போது வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள் என்பன புலிகளினால் நாசமாக்கப்பட்டதாகவும் ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்பதற்காக புலிகளினால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார். யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதையடுத்து இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே திணைக்களம் துரிதமாக முன்னெடுத்து வருகிறது.

கொழும்பு – பதுளை ரயில் சேவை நானுஓயா வரையே : ஒஹிய – ஹிதல்கஸ் ஹின்னவுக்கு இடையில் சுரங்கப்பாதையில் மண் சரிவு

up-country-sri.jpgகொழும்பு-  பதுளை ரயில் பாதையில் ஒஹியவுக்கும் ஹிதல்கஸ்ஹின்னவுக்கு மிடையிலுள்ள சுரங்கப் பாதை நேற்று முன்தினமிரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் எச். எம். என். பி. பண்டார நேற்றுத் தெரிவித்தார்.

இதனால் கொழும்புக்கும் பதுளைக்குமிடையிலான ரயில் சேவை நானுஓயா வரையே இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் மேலும் கூறுகையில், பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு நேற்று முன்தினமிரவு ஏற்பட்டுள்ளது என்றார்.

இதனால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்ட தபால் ரயில் அப்புத்தளை ரயில் நிலையத்தில் தரித்து நிற்கிறது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் நானுஓயாவில் நிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார். கொழும்பு- பதுளை ரயில் போக்குவரத்து சேவையை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவர சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அபிவிருத்தி ஏற்பட்டு வரும்போது மாற்றம் தேவையென கூறுவது வேடிக்கை

bhayees.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாட்டில் அபிவிருத்தி துரிதகெதியில் முன்னெடுத்துச் செல்லப்படும் போது இதைவிட சிறந்த மாற்றம் தேவையென ரவூப் ஹக்கீமும் அவரது ஜனாதிபதி வேட்பாளரும் கூறுவது வேடிக்கையாக உள்ளது என பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலையொட்டி புத்தளம் நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் பாயிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பாயிஸ் மேலும் கூறியதாவது, எந்த அடிப்படையில் அந்த மாற்றம் அமைய வேண்டும் என சகோதரர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கவில்லை. யுத்தம் ஒழிக்கப்பட்டு அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழும் இத்தருணத்தை மாற்றம் செய்து விட்டு மீண்டும் நாட்டில் யுத்தப் பீதியையும் அமைதியின்மையும் ஏற்பட வேண்டும் என்ற மாற்றத்தை ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?

இந்த நாட்டில் நிலவுகின்ற ஜனநாயகத்தையும், சுபீட்சத்தையும் குழிதோன்றிப் புதைத்துவிட்டு இராணுவ மயமான ஆட்சியை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற மாற்றத்தை ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா? என்று பாயிஸ் கேள்வி எழுப்பினார். இந்த நாட்டில் ஜனநாயகவாதிகளும் அரசியலில் பாண்டித்தியமும் பெற்றவர்களை ஒழித்துவிட்டு அரசியல் என்ன என்றே தெரியாத இராணுவ ஆட்சியில் விருப்பம் கொண்ட சரத் பொன்சேகாவை ஆட்சியில் அமர்த்தும் மாற்றம் வேண்டும் என ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?

கடந்த 18 வருடங்களாக புத்தளம் தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாததை மாற்றி புத்தளத்தின் உயர் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்து எமது மாணவ்கள் பட்டதாரியாக மாறிக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் மாற்றம் ஏற்படுத்தி மீண்டும் எமது மாணவர்களுக்கு துரோகம் செய்யும் நடவடிக்கையை அவர்கள் ஏற்படுத்தப் போகின்றார்களா?

நாட்டிலுள்ள வளங்களை மேற்கு நாட்டினர் சூரையாடவும், மன்னர் பகுதியில் கண்டெடுக்கப்படும் பெற்றோல் வளங்களை அப்படியே அள்ளி தமது நாடுகளுக்கு கொண்டு செல்லும் மேற்குல நாடுகளின் சதித் திட்டத்தை விரும்பும் சரத் பொன்சேகாவுக்கு இந்த மாற்றம் மூலம் வழிவகுத்து கொடுக்க ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?

நாட்டுக்கு என்ன மாற்றம் வேண்டும் என்பதை ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யூகித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றார். இது இவ்வாறு இருக்க ரவூப் ஹக்கீமும் அவரது குழுவினரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை எந்த விதமான மாற்றமும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று பாயிஸ் மேலும் குறிப்பிட்டார்.

கிழக்கில் தொடர்ந்து மழை – 80 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

satellite-dec.jpgகிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் எந்தவிதமான பாரபட்சமுமின்றி நிவாரண உதவிகளைத் துரிதமாகப் பெற்றுக் கொடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் வெள்ளப் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு உடனடியாக நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், இதுவரை சுமார் 80 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 500 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளன. இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, உலருணவு, நிதியுதவி போன்றவற்றை எதுவிதமான பாரபட்சமுமின்றிப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அதிகாரிகளைப் பணித்துள்ளதாக முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார். பட்டிப்பளை, வவுணதீவு பிரதேசங்களில் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகரை யில் 500 குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது. வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கப்படுவதுடன் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுவதாக அரச அதிபர் தெரிவித்தார்.

தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் அமில தேரர் நேற்று கைது: வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரிடம் பண மோசடி

amila.jpgதேசப் பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் வண. தம்மபர அமில தேரர் நேற்றுக் காலை சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார். தலங்கமவில் வைத்து நேற்றுக் காலை 10 மணியளவில் இவரைக் கைது செய்த சி.ஐ.டி.யினர் விசாரணைகளுக்காக அழைத்துச் சென்றிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அமில தேரருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சி.ஐ.டி.யினருக்கு கிடைக்கப் பெற்றதையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்மை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி தேரர் பண மோசடி செய்ததாக ஹொரணை, குளியாப்பிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சி.ஐ.டி. யினருக்கு வழங்கிய முறைப் பாடுகளை அடிப்படையாக வைத்தே நேற்று அமில தேரரை கைதுசெய்திருப்பதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ. எம். கருணாரட்ன கூறினார்.

பண மோசடி தவிர்ந்த பல்வேறு குற்றச்சாட்டுக்களும் அமில தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருப்பதனால், சி.ஐ.டி.யினர் இது குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர் ஆரம்ப விசாரணைகள் இடம்பெறுகின்றன.

பொதுமக்களின் பார்வைக்கு புலிகள் இயக்கத்தின் கப்பல் – காலி துறைமுகத்தில் 28 முதல் 31 வரை

ltte-ship.jpgகடற் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளுக்குச் சொந்தமான பிரின்ஸஸ் கிரிஸான்டா என்ற கப்பல் பொதுமக்களின் பார்வைக்காக இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை காலி துறைமுகத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

புலிகளின் கப்பலுடன் கடற்படைக்குச் சொந்தமான ‘சயுர’ என்ற கரையோர ரோந்து கப்பலும் பொதுமக்களின் பார்வைக்காக காலி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

காலியில் நடைபெறும் சீசன் – 2009 கண்காட்சியிலேயே இந்தக் கப்பல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அத்துடன் கொழும்பிலுள்ள பொதுமக்கள் இந்தக் கப்பலை காண்பதற்காக கொழும்பு காலி முகத்திடலில் கப்பல் நேற்றுக் காலை தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பாரிய குளங்களின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு

நாட்டில் கடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் அடைமழை காரணமாக உடைப்பெடுக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பாரிய குளங்களின் வான் கதவுகள் நேற்று திறந்து விடப்பட்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன நேற்று தெரிவித்தார்.

இதேநேரம் பல குளங்கள் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வட கீழ் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காரணமாக கடந்த சில தினங்களாக தொடராக மழை பெய்து வருகின்றது. இதனால் பொலன்னறுவை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பாரிய குளங்கள் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. அதனால் அக்குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப் படுகின்றன.

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று மீண்டும் திறந்துவிடப்பட்டன. ஏற்கனவே இதன் பத்து வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்ட போதிலும் இவ்வான் கதவுகள் யாவும் நேற்று முன்தினம் மூடப்பட்டன. என்றாலும் மீண்டும் கடும் மழை பெய்வதால் இச் சமுத்திரத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.

மின்னேரிய குளத்தின் நான்கு வான் கதவுகளும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உறுகாமம் குளத்தின் இரு வான் கதவுகளும் நவகிரி குளத்தின் இரு வான் கதவுகளும், உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகளும், புனாணை குளத்தின் பத்து வான் கதவுகளும், ஹம்பாந்தோட்டை, மெளஆர குளத்தின் இரு வான் கதவுகளும், அனுராதபுரம் ராஜாங்கணை குளத்தின் நான்கு வான் கதவுகளும், குருநாகல, இம்புல்வானை குளத்தின் மூன்று வான் கதவுகளும் என்றபடி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனால் பிரதேசவாசிகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் அவர்களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை கிரித்தல குளம், திருமலை மாவட்டத்திலுள்ள வான் அல குளம், மகா திபுல்வெவ குளம், சோரமடு குளம், அம்பாறை மாவட்டத்தின் நாமல் ஓயா குளம் என்பன நிரம்பி வழிகின்றன.மன்னார், கட்டுக்கரைக்குளம், பதுளை மாவட்டத்தின் சொரபொர குளம், சந்தி எல குளம் போன்றனவும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன என்றார்.

புலிகளுடன் உடன்படிக்கை செய்து முஸ்லிம்களை ஏமாற்றியவர் ஹக்கீம். முஸ்லிம்கள் அவரை ஆதரிக்கக் கூடாது – பசில்

basil.jpgஅனைத்து அரசாங்கங்களிலும் அமைச்சராக விருந்து பிரபாகரனுடன் உண்டு குடித்து உறவாடி சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்ட ரவூப் ஹக்கீமிற்கு வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற முடியாமற் போனதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற அ. இ.மு.கா. கட்சியின் மாநாட்டில் சிறப்பதிதி யாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றிய மு. கா. தலைவருக்கு ஒருபோதும் முஸ்லிம்கள் ஆதரவளிக்க கூடாது. உங்கள் எதிர்காலத்தை சபீட்சமயமாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதிக்கு உங்கள் பூரண ஆதரவினை வழங்குங்கள்.