ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாட்டில் அபிவிருத்தி துரிதகெதியில் முன்னெடுத்துச் செல்லப்படும் போது இதைவிட சிறந்த மாற்றம் தேவையென ரவூப் ஹக்கீமும் அவரது ஜனாதிபதி வேட்பாளரும் கூறுவது வேடிக்கையாக உள்ளது என பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலையொட்டி புத்தளம் நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் பாயிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
புத்தளம் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பாயிஸ் மேலும் கூறியதாவது, எந்த அடிப்படையில் அந்த மாற்றம் அமைய வேண்டும் என சகோதரர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கவில்லை. யுத்தம் ஒழிக்கப்பட்டு அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழும் இத்தருணத்தை மாற்றம் செய்து விட்டு மீண்டும் நாட்டில் யுத்தப் பீதியையும் அமைதியின்மையும் ஏற்பட வேண்டும் என்ற மாற்றத்தை ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?
இந்த நாட்டில் நிலவுகின்ற ஜனநாயகத்தையும், சுபீட்சத்தையும் குழிதோன்றிப் புதைத்துவிட்டு இராணுவ மயமான ஆட்சியை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற மாற்றத்தை ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா? என்று பாயிஸ் கேள்வி எழுப்பினார். இந்த நாட்டில் ஜனநாயகவாதிகளும் அரசியலில் பாண்டித்தியமும் பெற்றவர்களை ஒழித்துவிட்டு அரசியல் என்ன என்றே தெரியாத இராணுவ ஆட்சியில் விருப்பம் கொண்ட சரத் பொன்சேகாவை ஆட்சியில் அமர்த்தும் மாற்றம் வேண்டும் என ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?
கடந்த 18 வருடங்களாக புத்தளம் தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாததை மாற்றி புத்தளத்தின் உயர் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்து எமது மாணவ்கள் பட்டதாரியாக மாறிக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் மாற்றம் ஏற்படுத்தி மீண்டும் எமது மாணவர்களுக்கு துரோகம் செய்யும் நடவடிக்கையை அவர்கள் ஏற்படுத்தப் போகின்றார்களா?
நாட்டிலுள்ள வளங்களை மேற்கு நாட்டினர் சூரையாடவும், மன்னர் பகுதியில் கண்டெடுக்கப்படும் பெற்றோல் வளங்களை அப்படியே அள்ளி தமது நாடுகளுக்கு கொண்டு செல்லும் மேற்குல நாடுகளின் சதித் திட்டத்தை விரும்பும் சரத் பொன்சேகாவுக்கு இந்த மாற்றம் மூலம் வழிவகுத்து கொடுக்க ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா?
நாட்டுக்கு என்ன மாற்றம் வேண்டும் என்பதை ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யூகித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றார். இது இவ்வாறு இருக்க ரவூப் ஹக்கீமும் அவரது குழுவினரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை எந்த விதமான மாற்றமும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று பாயிஸ் மேலும் குறிப்பிட்டார்.