கொழும்பு- பதுளை ரயில் பாதையில் ஒஹியவுக்கும் ஹிதல்கஸ்ஹின்னவுக்கு மிடையிலுள்ள சுரங்கப் பாதை நேற்று முன்தினமிரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் எச். எம். என். பி. பண்டார நேற்றுத் தெரிவித்தார்.
இதனால் கொழும்புக்கும் பதுளைக்குமிடையிலான ரயில் சேவை நானுஓயா வரையே இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் மேலும் கூறுகையில், பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு நேற்று முன்தினமிரவு ஏற்பட்டுள்ளது என்றார்.
இதனால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்ட தபால் ரயில் அப்புத்தளை ரயில் நிலையத்தில் தரித்து நிற்கிறது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் நானுஓயாவில் நிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார். கொழும்பு- பதுளை ரயில் போக்குவரத்து சேவையை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவர சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.