கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் எந்தவிதமான பாரபட்சமுமின்றி நிவாரண உதவிகளைத் துரிதமாகப் பெற்றுக் கொடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் வெள்ளப் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு உடனடியாக நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், இதுவரை சுமார் 80 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 500 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளன. இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, உலருணவு, நிதியுதவி போன்றவற்றை எதுவிதமான பாரபட்சமுமின்றிப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அதிகாரிகளைப் பணித்துள்ளதாக முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார். பட்டிப்பளை, வவுணதீவு பிரதேசங்களில் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகரை யில் 500 குடும்பங்கள் இடம்பெயர நேரிட்டதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
நிர்க்கதி நிலைக்குள்ளானவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது. வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கப்படுவதுடன் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுவதாக அரச அதிபர் தெரிவித்தார்.