அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஆறுமுகம் தொண்டமான் அமைச்சரவையில் இடம்பெறாதமை குறித்து ஆச்சரியம்

arumugam.jpgஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ஆறுமுகம் தொண்டமானுக்கு முக்கியமான அமைச்சுப் பதவி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும் நேற்று வெள்ளிக்கிழமை பதவியேற்ற அமைச்சரவை பட்டியலில் அவர் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனால், ஜனாதிபதிச் செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வில் ஆறுமுகம் தொண்டமான் கலந்து கொண்டிருந்தார்.அவரின் கட்சியைச் சேர்ந்த முத்துசிவலிங்கத்துக்கு முக்கிய பொறுப்பான பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சுப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லையா? என்று கேட்கப்பட்டபோது அவருக்கு முக்கியமான அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் அவர் பதவியேற்பார் என்றும் அரச உயர்மட்டத்துடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் ஆறுமுகம் தொண்டமானுக்குக் கால்நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டதாகவும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் சில வட்டாரங்கள் ஊகங்களை வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக இ.தொ.கா.வட்டாரங்களிடம் கேட்டபோது, முக்கிய அமைச்சுப்பதவி ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்கப்படும் என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பெரும்பாலும் அடுத்த இரு தினங்களில் ஆறுமுகம் தொண்டமான் முக்கியமான அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் அந்த வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன

தனித்து இயங்குவதா? அரசுக்கு ஆதரவளிப்பதா? மனோ

ranil-mano.bmp  தனித்து இயங்குவதா? அரசுக்கு ஆதரவளிப்பதா? மனோ கணேசனின் கட்சி இன்று தீர்மானம் தனித்து செயற்படுவதா? அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதா? என்பது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழுவும் மத்திய குழுவும் இன்று சனிக்கிழமை கூடித் தீர்மானம் எடுக்கவுள்ளது.

“எமது இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக நாளை (இன்று) பிற்பகல் நாங்கள் சந்திக்கவுள்ளோம் ” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து தான் வெளியேறுவதாக ஜனநாயக மக்கள் முன்னணி வியாழக்கிழமை கூறியிருந்தது. ஜனநாயக மக்கள் முன்னணிக்கு உறுதியளித்ததன் பிரகாரம் தேசியப் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர் இடம் வழங்காததால் ஐக்கிய தேசிய முன்னணியுடனான உறவை ஜனநாயக மக்கள் முன்னணி முறித்துக்கொண்டது

சரத் பொன்சேகா கன்னி உரை

sarath_.jpgஇலங் கையில் சட்டத்தின் ஆட்சி நிலைபெற வேண்டும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.  இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த 12 தினங்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து சரத் பொன்சேகா அவர்கள் பொது இடத்தில் பேசிய முதலாவது தருணம் இதுதான்.

சுருக்கமான தனது உரையில், முதலில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை வாழ்த்திய பிறகு, பொன்சேகா அவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தாக்கிப் பேசினார். இலங்கைக்கு, ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும், தனிநபர் மற்றும் ஊடக சுதந்திரமும் தேவை என்று அவர் கூறினார். தான் வருத்தத்துடன் பேசுவதாக கூறிய அவர், பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வெள்ளை உடையில் வந்திருந்த பொன்சேகா அவர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன், பார்வையாளர் அமரும் பகுதியை நோக்கி கையசைத்தார்.

இலங்கையராக ஒருங்கிணைந்து எமது சக்தியை வெளிப்படுத்துவோம் – சபையில் பிரதமர்

dm-jayaratna.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பை வழங்கி இலங்கையராக ஒன்றிணைந்து எமது சக்தியை உலகுக்கு வெளிப்படுத்துவோம் எனப் புதிய பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று (22) பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையில் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தைச் சரியாக வழிநடத்துவதற்குப் பாரிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டிய பிரதமர் ஜயரட்ன, சபாநாயகரைத் தெரிவு செய்ய ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று அடுத்த ஆறு வருட காலத்திற்கும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று ஆரம்பமானபோது புதிய சபாநாயகரைத் தெரிவுசெய்த பின்னர் பிரதமர் ஜயரட்ன உரையாற்றினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :-

‘முழு நாட்டு மக்களுக்கும் சேவையாற்றக் கூடிய ஒரு வாய்ப்பு இப்போது கிடைக்கின்றது. புதிய சபாநாயகர் (சமல் ராஜபக்ஷ) புரிந்துணர்வுடன் செயற்படக்கூடியவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தந்தையாரின் அரசியல் வழியைப் பின்பற்றி 30 வருட கால யுத்தத்தை ஒழித்துக்கட்டி நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறார். அவரது சகோதரர் சபைக்குத் தலைமைதாங்குவது சிறப்பானதாகும்.

இந்த நாட்டில் ஐந்து இனத்தவர்கள் வாழ்கிறார்கள்.  அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே இலங்கையர்கள் என்ற ரீதியில் செயற்படுவோம். எமது மக்கள் அனைவரும் எந்தப் பாகுபாடும் இன்றி வாழ வழிசமைக்க நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். மக்களின் ஆணையை நடைமுறைப்படுத்தும் போது நாம் எமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இலங்கையை உலகின் உன்னத நாடாக்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் இலக்கை அடைய நாம் பாடு படுவோம்’ என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

சபையின் கெளரவம் பேணப்பட வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

ranil.jpgஎதிர்க் கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துகளைச் சுதந்திரமாகக் கூறுவதற்கான உரிமை பேணப்படுவதுடன் சபையின் கெளரவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய சபாநாயகரைப் பாராட்டி உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். “நாம் எல்லோரும் சேர்ந்து சபாநாயகரைத் தெரிவு செய்துள்ளோம். 1989 முதல் உங்களுடன் (சபாநாயகருடன்) பழகி இருக்கிறேன்.

இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. நான் சபையில் இல்லாதபோது தான் எங்கள் கட்சியினர் உங்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள். நீங்கள் இங்கு ஒரு கட்சியின் சார்பில் அமரவில்லை. முழுப் பாராளுமன்றத்தின் சார்பிலும் தெரிவாகியுள்Zர்கள்.

எனவே நீங்கள் இந்தப் பாராளுமன்றத் தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். எமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சுதந்திரமும் உரிமையும் இருக்க வேண்டும். 1835 இலிருந்து ஆசியாவின் பழைமையான பாராளுமன்றமாக இது விளங்குகிறது.

இந்தச் சபையின் உரிமைகளைப் பாதுகாப்பீர்கள் என நம்புகிறேன். புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் முன்னாள் பிரதமருக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன். புதிய உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

வட ஐரோப்பா வழமைக்கு திரும்பியது

srilankan-airlines.jpgஐஸ்லாந்து எரிமலை சாம்பல் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக விமான போக்குவரத்தில் நீடித்த தடைக்குப் பின்னர் வட ஐரோப்பிய வான்போக்குவரத்து பாதை பெரும்பாலும் வழமைக்குத் திரும்பியுள்ளது. ஒரு வாரத்துக்குரிய முழுமையான எண்ணிக்கையில் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் குறைந்தளவான சேவை ரத்துகளே எதிர்பார்க்கப்படலாம் எனவும் ஐரோப்பிய வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் நோர்வேயும் சுவீடனும் தமது வான் போக்குவரத்து மார்க்கத்தில் சில பகுதிகளை மீண்டும் மூடியுள்ளன. காற்றில் புதிய சாம்பல் மேகங்கள் அள்ளுண்டு வந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்கள் பல முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடையை விமர்சித்துள்ளன. இரண்டு பில்லியன் டொலர்கள் வரை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறும் இந்த நிறுவனங்கள் நிதி ரீதியான உதவிகளை கோரியுள்ளன.

முஸம்மிலுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படாமை குறித்து விமல் வீரவன்ச அதிருப்தி

wimal-weerawansa.gifதேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஹமட் முஸம்மிலுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படாமை குறித்து கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். தேசியப் பட்டியல் மூலம் முஹமட் முஸம்மில் மற்றும் அசல ஜாகொட ஆகியோரை நியமிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்த போதிலும், இறுதி நேரத்தில் அசல ஜாகொடவிற்கு மட்டுமே தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து காதர் இராஜினாமா

cadar.jpgஐ. தே. கவின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய கண்டி மாவட்ட எம்.பி. ஏ. ஆர். எம். அப்துல் காதர் முடிவு செய்துள்ளார். அடுத்தடுத்து கட்சியில் அவர் வகிக்கும் ஏனைய பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்யவும் காதர் எம்.பி. தீர்மானித்துள்ளார்.

இராஜினாமாக் கடிதங்களை அடுத்துவரும் ஓரிரு தினங்களுக்குள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காதர் எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அப்துல் காதர் எம்.பி. :- கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் ஐ. தே. க. சார்பில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாமென்று கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

தேர்தல்களில் மாவட்டம் தாவும் ஹக்கீமை கண்டியில் நிறுத்த வேண்டாம் என்றும் சுட்டிக்காட்டினேன். சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை இதன்மூலம் தோற்றம் பெறும் என்ற உண்மையையும் விபரித்தேன். ஆனால், அவர் எனது கருத்தை ஏற்கவில்லை. மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றதன் மூலம் முஸ்லிம்கள் மீது நம்பிக்கையற்ற தன்மை இன்று சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் எனது கருத்தை கட்சித் தலைவர் ஏற்கவில்லை. அதனால் பொம்மையாக அப்பதவியில் இருக்க நான் தயாரில்லை. 21 வருடமாக ஐ. தே. க. எம்.பியாக இருந்த எனக்கு இப்போது கட்சியின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது. தலைமை எதேச்சதிகாரமாக செயற்படுகிறது. கடந்த காலங்களில் சிங்கள மக்களின் வாக்குகள் சுமார் 40000 வரை எனக்கு கிடைத்து வந்துள்ளது. இந்த முறை 10,000 வாக்குகளே எனக்கு கிடைத்தன. சிங்கள மக்கள் முஸ்லிம்கள் மிது நம்பிக்கையற்றுப் போனமையே இதற்குக் காரணம்.

அதுமட்டுமன்றி முஸ்லிம்களும், மூன்று முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கவில்லை. முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு வித்தியாசம் இதற்குச் சான்று. முஸ்லிம் – சிங்கள மக்கள் மத்தியிலான இந்த மனப்போக்குக்குக் காரணம் ஹக்கீம் கண்டியில் போட்டியிட்டதே. மட்டுமன்றி ஹக்கீம் போட்டியிடாவிட்டிருந்தால் ஐ. தே. க. 5 ஆசனங்களைப் பெற்றிருக்கும். கட்சிக்கு ஆசனம் குறைந்ததற்கும் ஹக்கீமே காரணம்.

ஐ. தே. க தனக்குக் கிடைத்த தேசியப் பட்டியலையும் பொருத்தமாக செய்யவில்லை. கட்சித் தலைமை எதேச்சதிகாரமாக செயற்பட்டுவிட்டது.

கொழும்பு முஸ்லிம்களுக்காக முன்னாள் எம்.பி. மஹ்ரூபை தேசியப் பட்டியல் மூலம் நியமித்திருக்க வேண்டும். கட்சிக்காக நிறைய அர்ப்பணிப்புக்களைச் செய்தவர் அவர். மு. காவுக்கு இரண்டு பேரை வழங்கியதை கண்டிக்கின்றேன். இதில் ஒன்றை மஹ்ரூபுக்கு வழங்கியிருக்க முடியும் என்றார்.

60 வருட காலத்திற்குப் பின்னர் பாராளுமன்றத்தில் புதிய அணுகுமுறை – இரா.சம்பந்தன்

Sambanthan_R_TNAஅறுபது வருட காலத்திற்குப் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் புதியதொரு நிலைமை தோன்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பாராளுமன்றமாவது நியாயமானதும் நீதியானதுமான தீர்வைக் காணுமெனத் தாம் நம்புவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார். ஏழாவது பாராளுமன்றத்திற்கான முதலாவது அமர்வு நேற்று ஆரம்பமான போது புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகரைப் பாராட்டி உரை யாற்றினார்கள். இதன்போது சம்பந்தனும் உரையாற்றினார்.

சம்பந்தனின் உரை நேற்று முற்றிலும் வித்தியாசமான ஓர் அணுகுமுறையை வெளிப்படுத்தியது. விபரம் வருமாறு :-

‘சபாநாயகர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு எனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்ற பாராளுமன்றம் முதன் முறையாகக் கூடியபோது சபாநாயகர் தெரிவு எவ்வாறு இடம்பெற்றது என்பது என் ஞாபகத்திற்கு வருகிறது. ஆளுந் தரப்புக்கும் எதிர்த் தரப்புக்கும் இடையில் போட்டி ஏற்பட்டதால் முழு நாளும் வாக்கெடுப்பு நடந்தது.

இறுதியில் ஒரு வாக்கில் சபாநாயகர் தெரிவானார். நாம் 22 வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தோம். இம்முறை நீங்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்Zர்கள். இது இந்தச் சபை உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. நான் உங்கள் தெரிவை வரவேற்கிறேன். உங்களின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கிறேன்.

30 வருடகால யுத்தம் முடிவடைந்த நிலையில், சபை கூடுவதாகப் பிரதமர் உரையாற்றும் போது கூறினார். அது பொருத்தமான கருத்து. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது உண்மை. நாட்டு மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததை நாம் வரவேற்கின்றோம்.

அதே சமயம், நாட்டில் சமாதானம், நீதி, நேர்மை ஏற்பட்டுவிட்டதாக நாம் கருத முடியாது, ஏற்க முடியாது. நீதி, நியாயம் மக்களுக்குக் கிடைக்க இந்தப் பாராளுமன்றம் பணியாற்ற வேண்டும். இதற்கு முன் இருந்த பாராளுமன்றங்கள் அந்த நிலையில் இருக்கவில்லை. கடந்த 60 வருட காலமாக நியாயமான, நீதியான தீர்வைக்காண்பதற்கு முடியவில்லை. புதிய பாராளுமன்றம் அதனை நிறைவேற்றும் என நம்புகிறேன். அரசியல் சாசனத்தையும் நிலையியற் கட்டளைகளையும் பாதுகாப்பது மாத்திரமன்றி மரபுகளும் உள்ளன.

பாராளுமன்றத்தின் கெளரவம் முழுமையாக உங்களில் (சபாநாயகரில்) தங்கியிருக்கிறது. உங்களின் கெளரவம் பாராளுமன்ற கெளரவத்தில் தங்கியிருக்கிறது. இதனைப் பிரிக்க முடியாது’ என்றும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

பிரதி சபாநாயகர் பிரியங்கர; குழு. பிரதி தலைவர் சந்திரகுமார்

paa.jpgஏழாவது பாராளு மன்றத்தின் பிரதி சபா நாயகராக பிரியங்கர ஜயரட்ன ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க ப்பட்டார். அதேநேரம் குழுக்களில் பிரதித் தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபை நடவடிக்கைகள் புதிய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று (22) ஆரம்பமானபோது காலை 9.50 மணியளவில் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.

சபாநாயகரின் அறிவிப்பை யடுத்து முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க, பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்னாள் பிரதி சபாநாய கராகவிருந்த பிரியங்கர ஜயரட்னவின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஜோன் அமரதுங்க வழிமொழிந்தார்.

வேறு பெயர்கள் முன்மொழியப்படாததால் பிரதி சபாநாயகரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து குழுக்களின் பிரதித் தலைவரைத் தெரிவு செய்யுமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டதும் சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசின் பெயரை முன்மொழிந்தார். அவரது பெயரை ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழிமொழிந்தார். குழுக்களின் பிரதித் தலைவரும் ஏகமனதாகத் தெரிவானார்.

பொதுவாக ஏழாவது பாராளுமன்றத்தின் ஆரம்பம் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகவே அமைந்திருந்தது. ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் இணக்கப்பாட்டுடன் நாட்டு நிர்வாகத்தை ஆரம்பித்தமை விசேட அம்சமாக இருந்தது.