ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக விமான போக்குவரத்தில் நீடித்த தடைக்குப் பின்னர் வட ஐரோப்பிய வான்போக்குவரத்து பாதை பெரும்பாலும் வழமைக்குத் திரும்பியுள்ளது. ஒரு வாரத்துக்குரிய முழுமையான எண்ணிக்கையில் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் குறைந்தளவான சேவை ரத்துகளே எதிர்பார்க்கப்படலாம் எனவும் ஐரோப்பிய வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் நோர்வேயும் சுவீடனும் தமது வான் போக்குவரத்து மார்க்கத்தில் சில பகுதிகளை மீண்டும் மூடியுள்ளன. காற்றில் புதிய சாம்பல் மேகங்கள் அள்ளுண்டு வந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்கள் பல முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடையை விமர்சித்துள்ளன. இரண்டு பில்லியன் டொலர்கள் வரை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறும் இந்த நிறுவனங்கள் நிதி ரீதியான உதவிகளை கோரியுள்ளன.