அமுதுப் புலவர் என எம்மவரால் அன்புடன் அழைக்கப்படும் இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 அன்று காலை 11.00 மணியளவில் தன் உலகவாழ்வைவிட்டு நீங்கிய செய்தி என் இதயத்தைக் கனக்கச் செய்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுவைப் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமுதுப் புலவர். தம்பிமுத்து – சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர்.
ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்.
சுமார் ஏழு தசாப்தங்களாக இலக்கியத்துறையில் வேரோடி விழுதெறிந்து ஆலமரமாக வீற்றிருக்கும் அமுதுப்புலவரின் முதலாவது ஆக்கம் 1938ம் ஆண்டு சத்தியவேத பாதகாவலனில் மாதா அஞ்சலி என்ற தலைப்பில் பிரசுரமாகியிருந்தது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் தூதன் என்ற சஞ்சிகையின் ஆண்டுமலருக்கு மலராசிரியராகப் பணியாற்றியும் இளவயதிலேயே தன் திறமையை அமுதுப்புலவர் வெளிப்படுத்தியிருந்தார். இளம் பத்திரிகையாளராக 1940ம் ஆண்டில் இளைஞர் அமுதசாகரன், போதினி என்ற பத்திரிகையையும் நடத்தியிருந்தார். அன்றுமுதல் இன்றுவரை இலங்கையின் அனைத்துத் தேசிய பிராந்திய தமிழ்ப் பத்திரிகைகளிலும், பெரும்பாலான சஞ்சிகைகளிலும், உலகெங்கும் வெளியாகியுள்ள பல்வேறு சிறப்பு மலர்களிலும் அமுதுப் புலவரின் படைப்புக்கள் வெளிவந்திருக்கின்றன.
நூலுருவில் வெளிவந்த இவரின் வெளியீடுகளான நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை தெரேசா, மடுமாதா காவியம் அல்லது மருதமடு மாதா காவிய மல்லிகை, அன்னம்மாள் ஆலய வரலாறு, அமுதுவின் கவிதைகள், இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள், ஆகிய நூல்கள் ஈழத்துத் தமிழ் மக்களின் இல்லம் தோறும் வலம் வந்து மனதைத் தொடும் வசனங்களாலும் மரபுக்கவிதைகளாலும் அவர்களிடையே இலக்கிய மணம் பரப்பி வருகின்றன.
அன்னை திரேசாவின் வாழ்க்கை வரலாற்று நூலும் மடுமாதா காவியம் என்ற ஈழத்து மருதமடுத் திருத்தலம் பற்றிய காவிய நூலும் கடந்த காலங்களில் பரவலாக விதந்து பேசப்பெற்றவை. அமுதுவின் கவிதைகள் நூல் அமுதுப்புலவரின் கவிதாபுலமையை கச்சிதமாகப் பதிவுசெய்துவைத்திருக்கும் ஒரு இலக்கியப் பெட்டகமாகும். இன்று வளரும் இளம் கவிஞர்களின் கைகளில் தவழ்ந்துவரும் இந்த நூலும் அண்மைக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.
தனது தொன்னூற்றிரண்டு வயதினைக் கடந்து இதுவரை திடகாத்திரமான முதிய இளைஞனாக நம்மிடையே வலம்வந்த அமுதுப் புலவர் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தியை மனது என்னவோ நம்பவே மறுக்கின்றது.
அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்” என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக நடந்தேறியிருந்தது.
முத்தமிழ் அறிஞர் தாசீசியஸ் அவர்களின் தலைமையில் இலக்கிய விழாக்களின் வழமைக்கு மாறாக மண்டபம் நிறைந்த அரங்கில் (Greenford Hall) லண்டனில் வாழும் இலக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துக்கூற, அமுதுப் புலவர் 92 வயதிலும் தளராத உறுதியுடன் அங்கு மேடையில் புன்முறுவலுடன வீற்றிருந்ததை இனி வாழ்வில் மறக்கமுடியாது.
அந்த மேடையிலே, இலங்கையிலிருந்து வந்திருந்த வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ கஜன் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடமும், பத்து நிமிடமும் கறாராக பேச வழங்கிக்கொண்டிருந்த தலைவர் – அமுதுப் புலவருடைய பேச்சை மட்டும் நிறுத்தவேயில்லை. சலிப்பையே தராத – நகைச்சுவையும், நெகிழ்வும், கிண்டலும் கலந்த அந்த உரை இன்னமும் எனது காதுகளில் ரீங்காரமிடுகின்றன. 45 நிமிடங்களுக்கும் அதிகமாகப் பேசியிருப்பார். குறுக்கீடில்லாத அந்த உரையே அவரது இறுதி உரை என்பதை அவரே அன்று மேடையில் கூறியவேளை சிரித்தவர்களும் சிரிப்பை மறந்தனர். அன்றைய மேடையில் நான் உரையாற்ற வாய்ப்புக் கிட்டவில்லை. அதனை அவர் நன்றாக உணர்ந்துமிருந்தார். தனது உரையிலேயே அதனைக் குறிப்பிட்டதுடன், பின்னர் மேடையில் அவரது நூலைப் பெற்றுக்கொள்ளச் சென்ற வேளையில் ஒரு தந்தையின் பரிவுடனும், பாசத்துடனும் என்னைக் கட்டியணைத்து உச்சிமோந்து- நூலை வழங்கியமை என்னை மெய்சிலிர்க்கவைத்ததுடன் கண்களில் நீரையும் வரவழைத்தது.
அன்றைய நிகழ்வினை ஒழுங்குசெய்த அமுதுப் புலவரின் குடும்பத்தினரும் விழாக் குழுவினரும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு பாரிய திருப்திகரமான சேவையைச் செய்திருக்கிறார்கள். தன் வாழ்நாளில் வளமுடனும், நிறைவுடனும் ஒரு கவிஞராக வாழ்ந்து முதுமையை எட்டிய ஒரு முழமையான மனிதரை அவர் வாழ்ந்த தமிழ் அறிவோர் சமூகம் வாழ்த்தி மன நிறைவுடன் வழியனுப்பி வைத்துள்ளது. இத்தகைய திருப்திகரமானதும் மன நிறைவானதுமான வழியனுப்புதல்கள் எங்கள் அனைவருக்கும் வாய்ப்பதில்லை.
மறைந்தும் மறையாத அமுதுப்புலவர் அடைக்கலமுத்து அமுதசாகரன் – கலாபூசணம் புன்னியாமீன்
அமுதுப் புலவர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த இளவாலை அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் 23.2.2010 இலண்டனில் தன் உலக வாழ்வைவிட்டு நீங்கிய செய்தி எம் இதயங்களைக் கனக்கச் செய்தது. அன்னாரின் மறைவையிட்டு இந்தக் கட்டுரை இடம்பெறுகின்றது.
வடமாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவுக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்கள் ‘இளவாலை அமுது’ எனும் பெயரில் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும், புலம்பெயர்ந்த இலக்கியப் பரப்பிலும் நன்கு அறிமுகமான மூத்த எழுத்தாளரும், கவிஞருமாவார். அமுது, மறைமணி எனும் பெயர்களிலும் எழுதி வந்த ‘அமுதுப் புலவர்’ 1984ம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம்பெயர்ந்து தனது குடும்பத்துடன் லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் வாழ்ந்து வந்தார்;
தம்பிமுத்து, சேதுப்பிள்ளை தம்பதியினரின் புதல்வாரன இவர் யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் வித்தியாலயம், யாழ். சேன் பற்றிக்ஸ் கல்லூரி, கொலம்பகம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த் துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ‘வித்துவான்’ பட்டமும் இலங்கை கல்வித்தணைக்களத்தில் ‘பண்டிதர்’ பட்டமும் பெற்ற இவர், ஓய்வுபெற்ற முதலாம்தர ஆசிரியருமாவார்.
சுமார் 7 தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்துறையில் முனைப்புடன் செயற்பட்டு வரும் அமுதுப் புலவரின் கன்னியாக்கம் 1938ம் ஆண்டு இலங்கையில் முதலாவது தமிழ்ப் பத்திரிகையெனக் கருதப்படும் ‘சத்தியவேத பாதுகாவலன்’ எனும் பத்திரிகையில் ‘மாதா அஞ்சலி’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் ‘தூதன்’ என்ற சஞ்சிகையின் 100வது ஆண்டு மலருக்கு ஆசிரியராக நின்று பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி, புதினம், அஞ்சல், தொடுவானம், ஈழமுரசு போன்ற பல்வேறு சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பல வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.
இத்தகைய இவரது ஆக்கங்களில் சில இதுவரை 11 நூல்களாக வெளிவந்துள்ளன. 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘மாதா அஞ்சலி’ எனும் நூல் இவரின் முதலாவது நூலாகும். இதைத் தொடர்ந்து வெளிவந்த இவரின் நூல்கள் பின்வருமாறு:
நெஞ்சே நினை (வரலாறு)
இவ்வழி சென்ற இனிய மனிதன் (சிறுகதைத் தொகுதி)
காக்கும் கரங்கள்
அமுதுவின் கவிதைகள்
அன்பின் கங்கை அன்னை திரேசா
மருத மடு மாதா காவிய மல்லிகை
அமுதுவின் கவிதைகள் (திருத்திய இரண்டாம் பதிப்பு)
அன்னம்பாள் ஆலய வரலாறு
இந்த வேலிக்குக் கதியல் போட்டவர்கள்.
“இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்”
அமுதுப் புலவரின் முன்னைய படைப்புகளின் ஒருங்கிணைந்த தொகுப்பாக 1600 பக்கங்களில் வெளியாகிய “இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள்” என்ற நூலின் வெளியீடும், அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் இம்மாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக லண்டனில் அவரது 92வது வயதில் நடந்தேறியமையும் குறிப்பிடத்தக்கது.
இவரின் ‘அமுதுவின் கவிதைகள்’ என்ற நூலின் முதற்பகுதி சில்லாலை வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற ‘தம்பி’ தமிழ் அரங்கத்தினால் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் இவர் தெரிவித்திருந்த சில கருத்துக்கள் அனைவரினதும் மனங்களை நெருடக்கூடியவை. அதனை அவரின் வரிகளிலேயே தருவது பொருத்தமானதாக அமையும்.
“….வீட்டிலும், நாட்டிலும் இரத்தத்துளிகள். தமிழன் என்ற வேருக்கே கோடாரி வைக்கப்பட்டது. இடம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வரவேண்டியதாயிற்று. ஒரு ஒற்றைத் தாளைத் தானும் உடன் கொண்டு வந்தால், இடையே உள்ள இருபது தடைமுகாம்களிலும், ஆபத்தை விலைக்கு வேண்டுவதாய் முடியும். இந்த நிலையில் நான் நீண்ட காலமாகத் தேடித் திரட்டிய நூல்களையும், எனது கவிதைக் கோவைகளையும், என் இல்லத்தில் பக்குவமாய் வைத்து விட்டுப் பிறநாடு வந்து சேர்ந்தேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு என் இல்லத்துக்குச் சென்ற போது அங்கே சுடுகாட்டின் மௌனம் தோன்றியது. கடுகு மணியொன்றைக் கண்டெடுத்தாலும், காகிதத் துண்டு ஒன்றைக் காணமுடியவில்லை. திருடர்கள் திருவிழா நடத்தியிருக்க வேண்டும.; வாழ்ந்த சுவடுகள் கூடத் திருடப்பட்டு விட்டன…..”
இது அமுதுப் புலவரின் முகவுரை வரிகள். இந்த வரிகள் அமுதுப்புலவரின் சொந்த வரிகள் அல்ல. தாயகத்தை விட்டுப் புகலிடம் வந்த பலரின் ஆத்மாவின் குரல்கள் இளவாலை அமுதுவின் தொலைந்து போன கவிதைகள் கூட இன்று நூலுருவில் வெளியாக அவருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். சட்டத்தரணி இரா. ஜெயசிங்கம் அவர்கள் அமுதுவின் கவிதைகளை பத்திரிகைகளில் இருந்து தனது ஆர்வத்தின் காரணமாகத் தொகுத்து வைத்திருக்கின்றார். அந்தக் கவிதைகளும் சேர்ந்தே முதலாவது பதிப்பாக ‘அமுதுவின் கவிதைகள்’ வெளிவந்தன.
இளவாலை அமுதுவின் சில நூல்கள் பற்றி பிரபல எழுத்தாளரும், நூலாசிரியருமான என். செல்வராஜா அவர்கள் தனது நூல் தேட்டம் பாகம் 1இல் 508, 874வது பதிவுகளாகவும், பாகம் 3 இல் 2098, 2867வது பதிவுகளாகவும் பாகம் 4இல் 3648 வது பதிவாகவும் பதிவாக்கியிருந்தார். அக்குறிப்புகளைப் பின்வருமாறு அவதானிக்கலாம்.
அன்பின் கங்கை, அன்னை திரேசா: இளவாலை அமுது (இயற்பெயர்- அமுதசாகரன் அடைக்கலமுத்து) லண்டன்: தமிழரங்கம், மே 1997. (லண்டன்: வாசன் அச்சகம்)
(16),230 பக்கம், புகைப்படங்கள். விலை: ஸ்டேர்லிங் பவுண் 5.00. அளவு: 20X14.5 சமீ.
அன்னை திரேசா என்ற பெயர் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் அந்தப் பெயருக்குள் இருக்கும் அன்னையின் பணிகளைத் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. அவர் வாழ்க்கை இனிய தமிழில் நூலுருவாகியுள்ளது. கத்தோலிக்கத் துறவியாக அழைப்புப்பெற்று ஆசிரியராக இந்து முஸ்லீம் மக்களிடையே கடமையாற்றிய வேளை வாழ்வின் விளிம்பில் நின்று தவிப்போருடன் தொடர்பு கொண்ட அன்னை திரேசாவின் கதையை இளவாலை அமுது நூலாகப் படைத்துள்ளார். இக்கதை ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக மட்டு மின்றி ஒரு தொண்டர் நிறுவனத்தின் வரலாறாகவும் அமைகின்றது.
நெஞ்சே நினை: சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை வரலாறு. ச.அடைக்கலமுத்து, (புனைபெயர்: இளவாலை அமுது). யாழ்ப்பாணம்: யாழ். மறைமாவட்ட இலக்கியக் கழகம், ஆயர் இல்லம், 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
(16), 210 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 21X14 சமீ.
மானிப்பாயில் பிறந்து, அச்சுவேலியில் வளர்ந்து நல்லூரிலிருந்து முழு உலகிற்கும் தொண்டாற்றி 1947 தைத்திங்கள் 22ம் நாள் மறைந்த பன்மொழிப்புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் வாழ்வும் பணியும் இங்கு இலக்கியச் சுவை சொட்டக் கூறப்பட்டுள்ளது.
இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள்: இளவாலை அமுது. லண்டன் SW17 7EZ: புதினம் 10ஆவது ஆண்டு நிறைவு வெளியீடு, 38, Moffat Road , 1வது பதிப்பு, மே 2006. (யாழ்ப்பாணம்; புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான வீதி).
213 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 5., அளவு: 21X14.5 சமீ.
புலவர்மணி கலாநிதி இளவாலை அமுது அவர்கள் லண்டன் புதினம் இருவாரப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்த வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. தமிழ் வளர்த்த சான்றோர்கள் மாத்திரமன்றி, சமகால ஊடகத்துறையினர், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் என்று 44 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை முதல் மறைந்த மனிதகுல மாணிக்கம் இரண்டாம் யோவான் பவுல் (பாப்பாண்டவர்) வரை விரிந்துள்ள இத்தொடரில், சமகால புகலிடக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
மருத மடுமாதா காவிய மல்லிகை. அமுதசாகரன் அடைக்கல முத்து (புனைபெயர்: அமுது). லண்டன்: தமிழ் அரங்கம், 87, Hazelmere Walk, Northolt, Middlesex, UB5 6UR. 1வது பதிப்பு, 1998 (கொழும்பு 13: லங்கா பப்ளிசிங் ஹவுஸ்)
(32),162 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21ஒ13.5 சமீ.
இலங்கையில் மருதமடுத்திருப்பதியில் வீற்றிருக்கும் மடுமாதா பேரில் பாடப்பெற்றதும், மரபுக்கவிதைகளில் எழுதப்பெற்றதுமான காவிய நூல். அட்டையில் மடுமாதா காவியம் என்ற தலைப்புடன் வெளிவந்துள்ளது.
அமுதுவின் கவிதைகள். இளவாலை அமுது. இலண்டன்: Tamil Literary Society 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1991. (சென்னை 17: Manimekalai Prasuram, T. Nagar).
240 பக்கம், விலை: இந்திய ரூபா 100, அளவு: 21.5X14.5 சமீ.
வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற பண்டத்தரிப்பு தம்பி தமிழ் அரங்கத்தின் முதலாவது பதிப்பாக 1991இல் வெளியான அமுதுவின் கவிதைகளின் திருத்திய மறு பதிப்பு இதுவாகும். அமுதுப்புலவர், இளவாலை அமுது என்று நம்மிடையே அறிமுகமாகியுள்ள அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்களின் இத்தொகுதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசியபானம் என்ற தலைப்பில் 17 கவிதைகளையும், சிந்தனைச் சந்தனம் என்ற பிரிவில் 35 கவிதைகளையும், முல்லையில் கிள்ளிய மொட்டுக்கள் என்ற தலைப்பில் 20 கவிதைகளையும், நெஞ்சில் தோன்றிய நினைவுச் சுடர்கள் என்ற தலைப்பில் தமிழ்ப் பெரியார்கள் பற்றிய 27 கவிதைகளையும், கதிரொளியில் சில துளிகள் என்ற தலைப்பில் 11 கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளன.
தமிழ்மொழிக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்பு, தமிழர் பண்பாட்டுக்கு இவரின் பணி, சமயத்துக்காக இவரின் சேவைகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு 2004ம் ஆண்டில் உரோமா புரியில் பரிசுத்த பாப்பாண்டவர் அவர்களினால் “செவாலியர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தம் வாழ்வில் கிடைத்த மாபெரும் கௌரவமாக கருதி வரும் இளவாலை அமுது அவர்களுக்கு, ஸ்ரீ லங்கா அரசு 2005ம் ஆண்டில் ‘கலாபூஷணம்” விருது வழங்கியும், யாழ் பல்கலைக்கழகம் ‘கலாநிதி’ பட்டம் வழங்கியும் கௌரவித்துள்ளன. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது. அத்துடன் தாயகத்திலும் புகலிடத்திலும், பல்வேறு அமைப்புக்கள் கவிமாமணி, தமிழ் கங்கை, மதுரகவி, சொல்லின் செல்வர், புலவர் மணி, செந்தமிழ்ச் செல்வர் போன்ற பட்டங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
எத்தகைய பட்டங்களைப் பெற்றாலும், எதுவித கர்வமுமின்றி இனிதாகப் பழகும் சுபாவம் கொண்ட இம்முதுபெரும் ‘தமிழ் வித்தகர்” ஆரம்ப காலங்களில் தான் இலக்கியத் துறையில் ஈடுபடுவதற்கும், அதே போல பல்வேறுபட்ட மனச்சோர்வுகளுடன் புலம்பெயர்ந்த பின்பு தனது எழுத்துத் துறை ஆர்வத்தைத் தூண்டி, எழுத மீண்டும் ஊக்கமளித்தவர்கள் என்ற அடிப்படையிலும், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, புலவர் இளமுருகனார், ஆயர் தியோகிப்பிள்ளை, கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வந்தார்.
மரபுக் கவிதையே வழிவழி தொடர வேண்டும் என்ற அவாக் கொண்டிருந்த இவரின் அன்பு மனைவி ஆசிரியை திரேசா ஆவார். எழுத்துத்துறையிலும், கவிதைத்துறையிலும் பல்வேறு பட்ட சாதனைப் புரிந்துள்ள, இளவாலை அமுது அவர்கள் சுமார் அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிகையாளராக ‘இளைஞர் போதினி’ எனும் பத்திரிகையை (1940ம் ஆண்டில்) நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
அமுதுப் புலவர் – இளவாலை அமுது இன்று காலமானார்!
அமுதுப் புலவர் இளவாலை அமுது ஆகிய பெயர்களால் அறியப்பட்ட அடைக்கலமுத்து இன்று (பெப்ரவரி 23) காலமானார். பல்வேறு சிறப்புப் பட்டங்களைப் பெற்ற இவரின் ஆக்கங்களின் தொகுப்பு சில வாரங்களுக்கு முன்னதாக லண்டனில் வெளியிடப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களான கலாநிதி சந்திரகாந்தன் கலாநிதி வசந்தன் ஆகியோரின் தந்தையார் ஆவர். கலாநிதி வசந்தன் லண்டனிலும் கலாநிதி சந்திரகாந்தன் கனடாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.