::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

காஸாவைக் கட்டியெழுப்ப அமெரிக்கா 900 மில்லியன் டொலர் நிதியுதவி

hamas.jpgகாஸாவைப் புனரமைக்க 900 மில்லியன் அமெரிக்க டொலரை உதவியாக அமெரிக்கா வழங்கவுள்ளது.  மார்ச் மாதம் 2ம் திகதி எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்ப மாகவுள்ள காஸாவைப் புனரமைக்கும் மாநாட்டில் பங்கேற்கவுள்ள அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த நிதி உதவிபற்றி அறிவிப்பார். ஆனால் இது எப்போது வழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. இதற்கான அனுமதி காங்கிரஸில் கிடைத்தவுடன் இந்நிதி பற்றிய ஏனைய விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.

காஸாவைப் புனரமைக்க வழங்கப்படவுள்ள இந்நிதி ஹமாஸிடம் கையளிக்கப்பட மாட்டாது. அமெரிக்காவுக்கும் ஹமாஸ¤க்குமிடையே உறவுகள் இல்லை. இதனால் அமெரிக்க சார்பு அமைப்பிடம் அல்லது அரசிடம் இது கையளிக்கப்படலாம். காஸா புனரமைப்பு மாநாட்டில் பங்கேற்கவரும் ஹிலாரி கிளிண்டன், இஸ்ரேல் மேற்குக் கரைக்கும் விஜயம் செய்யவுள்ளார். ஹிலாரி கிளிண்டனின் விஜயத்தை இஸ்ரேல் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அங்கு புதிய அரசாங்கம் இதுவரை அமைக்கப்படாத போதும் பெரும்பாலும் பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்படும் பென்ஜமின் நெதன்யாஹு உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் ஹிலாரி கிளிண்டன் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் புதிய அரசாங்கத்தில் வெளிநாட்டமைச்சரான ஹிலாரி கிளிண்டன் மத்திய கிழக்கிற்கு செய்யும் முதல் விஜயம் இதுவாகும். புஷ்ஷின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரபு அமைச்சர்கள் மாநாடு அனோபெலிஸ் மாநாடுகள் தோல்வியுற்ற பின்னர் மீண்டும் மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவின் இந் நிதியுதவி உள்ளது. காஸாவில் கட்டுமானப் பணிகள், மருத்துவ உதவிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.  காஸா மீது 22 நாட்களாக இஸ்ரேல் தொடுத்த தாக்குதல்களை அமெரிக்கா கண்டுகொள்ளாமல் நடந்தது.

இதனால் அரபுலகின் அதிருப்தியை அமெரிக்கா ஈட்டிக்கொண்டமை தெரிந்ததே. யுத்தம் நடந்த காலப் பகுதியில் (2008 டிசம்பர்) ஒபாமா பதவி யேற்காதபோதும் காஸாவில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியானதைக் கண்டிக்க உடனடியாக முன்வரவில்லை. பின்னர் அரபுலகில் கொதிப்பும், ஆத்திரமும் அதிகரிக்கவே அப்பாவிகள் கொல்லப்படுவது கவலையளிப்பதாகச் சொன்னார். அரபுலகிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் நல்லெண்ணத்தை உருவாக்கும் முயற்சியாக இந்நிதியை அமெரிக்கா வழங்கவுள்ளபோதும் காஸாவை ஆளும் ஹமாஸ் அமைப்பிடம் இந்நிதி வழங்கப்படமாட்டாது. மேற்குக் கரைக்குச் செல்லவுள்ள ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி மஃமூத் அப்பாஸையும் சந்திப்பார். இஸ்ரேல் மேற்கு க்கரை மற்றும் அரபு நாடுகளின் மேற்பார்வையில் காஸா புனரமைக்கப்படலாம்.

135 பேருடன் துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது.

flight_.jpg135 பயணிகளுடன் சென்ற துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் 3 துண்டுகளாக நொறுங்கியது.

இந்த விபத்தில் ஒருவர் பலியானர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். விமானம் தீ பிடிக்காததால் விமானத்தில் பயணம்  செய்த பயணிகள் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருதுநகர் திமுக தொண்டர் தீக்குளித்து சாவு

இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி திமுகவைச் சேர்ந்த தொண்டர் கோகுல்ரத்தினம் என்பவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். கடந்த சில நாட்களில் இதுபோல தீக்குளித்து உயிரிழந்த இரண்டாவது திமுக தொண்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு, சென்னை தரமணியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்ற திமுக தொண்டர், சென்னையில் திமுக இளைஞர் அணி நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், இன்னும் ஒரு திமுக தொண்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவகாசி அருகே உள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் கோகுல்ரத்தினம் (44). தி.மு.க. தொண்டரான இவர் இன்று மதியம் விருதுநகர் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். கையில் மண்ணெண்ணையை வைத்திருந்தார். உள்ளே வந்த அவர் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீப்பற்றிய உடலுடன் தி.மு.க. கொடியை பிடித்தபடி ஓடி வந்தார். அப்போது அந்தப் பகுதி வழியாக ரோந்து வந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்து கோகுல்ரத்தினத்தை காப்பாற்ற முயன்றனர்.  ஆனால் உடல் முழுவதும் கருகிப் போன கோகுல் ரத்தினம் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

இலங்கைத் தமிழருக்கு நிவாரணம் திரட்ட சோனியா அறிவுறுத்தல்

soniya2.jpgஇலங்கையின் வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்குமாறு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது கட்யின் தென்மாநிலப் பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தூர விலகி நிற்பதாக ஆத்திரமடைந்துள்ள தமிழ்நாட்டின் விசனத்தைத் தணிப்பதற்காகவே அவர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பப்படுகின்றது.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு அமைச்சுடன் இணைந்து பணியாற்றும்படி தனது சகாக்களுக்கும் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாக தமிழ் நாட்டில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்: மருத்துவர்கள்

karunanithy.jpgமுதல்வர் கருணாநிதி அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தற்போது உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்றும், அவரோடு சேர்ந்த அரசியல் தொண்டாற்றுகிற அவரது நெருங்கிய நண்பர்கள் தான் பொறுப்பேற்று அவரை நல்ல முடிவெடுக்கத் தூண்ட வேண்டும் என்றும் முதல்வரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 26ஆம் தேதியன்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தாங்க முடியாத முதுகு வலியுடன் உள்நோயாளியாக சேர்ந்த முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு பரிசோதனைகளை செய்து பார்த்து, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற சோதனைகளை நடத்திப் பார்த்து, அவரது முதுகுத் தண்டில் எல்.2 – எல்.3 இவற்றுக்கிடையே தசைப் பிடிப்பு இருப்பதை அறிந்து அதற்கு அறுவை சிகிச்சை செய்வது ஒன்றுதான் சரியான வழி என்பதை மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர்.

டெல்லியில் இருந்து டாக்டர் அரவிந்த் ஜெயஸ்வால் அவர்களையும் வரவழைத்து கலைஞரைப் பரிசோதிக்கச் செய்தோம். ராமச்சந்திரா மருத்துவ மனையில் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மார்த்தாண்டம் அவர்களை தலைமையில் 14 மருத்துவர்களை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அனைவரும் இணைந்து எடுத்த முடிவின்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்தபோது, முதல்வர் கருணாநிதி அவர்களின் இந்த வயதில் இவ்வளவு அபாயகரமானதும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதுமான அறுவை சிகிச்சையை மேற்கொள்வது பற்றி அய்யப்பாடுகள் தோன்றிய போதிலும், வேறு வழியில்லாத நிலையில் அறுவை சிகிச்சையை கடந்த 11ஆம் தேதி மேற்கொண்டோம்.

சுமார் மூன்றரை மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்று அனைவரும் மகிழத் தக்க வண்ணம் முதல்வர் கலைஞரின் முதுகு வலி நீங்கியது. இதுபற்றி அன்றையதினமே செய்தியாளர்களைச் சந்தித்து விவரங்களைக் கூறினோம்.

அறுவை சிகிச்சைக்கு பின் செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் அனைத்தும் முழுமையாக நடைபெற்று அவரது உடல்நிலை தேறி வந்தது. அறுவை சிகிச்சையின்போது போடப்பட்ட ஐந்து தையல்களில் (23.02.09) இரண்டு தையல்கள் பிரிக்கப்பட்டு விட்டன. இன்னும் மூன்று தையல்கள் பிரிக்கப்பட வேண்டும். (25.02.09) டெல்லியில் இருந்து டாக்டர் ஜெயஸ்வால் அவர்கள் மீண்டும் சென்னைக்கு வரவிருக்கிறார்.

அப்போது எஞ்சிய மூன்று தையல்களும் பிரிக்கப்பட உள்ளன. அதன் பின்னரே முதல்வர் இல்லம் திரும்புவது பற்றி முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையே வெளியே நடைபெறும் அரசியல் சூழ்நிலைகள் முதல்வர் கருணாநிதியை, மனோரீதியாகப் பெரிதும் பாதிப்பதும், அந்தப் பிரச்சினைகளிலே அவர் அதிக அக்கறை செலுத்துவதும், ஓய்வெடுக்காமல் அதைப்பற்றியே அதிகாரிகளையும், கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுவதும, திடீரென்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருப்பதும் நன்றாக தேறி வருகின்ற அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தை எங்களிடையே தோற்றுவித்துள்ளது.

எனவே அவர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டு, உடல்நலம் முழுவதுமாக தேறிய பின்னர் உண்ணாவிரதம் பற்றி யோசித்து முடிவெடுப்பது உசிதமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இது அவருடைய உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை என்பதால், இதில் அவரோடு சேர்ந்த அரசியல் தொண்டாற்றுகிற அவரது நெருங்கிய நண்பர்கள் தான் பொறுப்பேற்று அவரை நல்ல முடிவெடுக்கத் தூண்ட வேண்டும். எங்களுக்கும் மேலாக, எங்களையும் கடந்து தரப்படக் கூடிய நல்ல மருந்தாக அதுதான் இருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய விசா தடைகள்; விரைவில் அறிமுகப்படுத்துகிறது பிரிட்டன்

uk.jpgபிரிட்டனில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளிலிருந்து தொழில் நிமித்தம் வந்து குடியேறுபவர்களுக்கென புதிய கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.  வேலை வாய்ப்புகளில் உள் நாட்டவர்களுக்கு முதலிடம் வழங்கும் பொருட்டே தொழில்சார் நிமிர்த்தமான குடியேற்றத்துக்கான இந்த புதிய கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்படவிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புள்ளிகள் அடிப்படையிலான குடியேறுதல் முறையின் முதலாவது வரிசைப் படுத்தல் பகுதியின் கீழ் பிரிட்டனில் குடியேறுவதற்குத் தேவையான அடிப்படை தகைமைகள் உயர்த்தப்படவிருக்கின்றன.

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவமல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் தற்போது நடைமுறையிலிருக்கும் தகைமை மற்றும் குறைந்தப்பட்ச சம்பள மட்டங்களாக இருந்த பட்டதாரி கல்வி கற்பவர் மற்றும் 17 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸ் புதிய விதிமுறைகளின் பிரகாரம் முழுநிலை பட்டதாரி மற்றும் 20 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸாக உயர்த்தப்படவிருக்கிறது.

பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஜெக்கியூ ஸ்மித் வெகு விரைவில் இந்த புதிய நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளார். அடுத்த வருடம் முதல் அனைத்து மட்டங்களிலுமான குடியேற்றங்களையும் மட்டுப்படுத்தும் நோக்கத்திலான திட்டத்தின் கீழேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரிட்டனுக்கு வேலைக்கு வருபவர்கள் தெரிந்தெடுக்கப்பட வேண்டியது முக்கியமென நாம் எப்போதுமே கூறி வந்திருக்கிறோம். ஐரோப்பாவிற்கு வெளியிலிருந்து தகைமை குறைவானவர்கள் வேலைவாய்ப்புப் பெற்று பிரிட்டன் வருவதை நாம் ஏற்கனவே நிறுத்தியிருந்தோம். எனினும், தற்போது ஏற்பட்டிருக்கும் உலக பொருளாதார வீழ்ச்சி பிரிட்டன் தொழிலாளர்களை பாதிப்பதால், நாம் எமது தெரிவு நடவடிக்கையை எப்படி மேலும் இறுக்கப்படுத்துவது என்பது பற்றி செயற்பட்டு வருகிறோம்’ என்று பிரிட்டனின் உள்துறை செயலாளர் ஸ்மித் சண்டே ரெலிகிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.

மன்மோகன் சிங் பூரண குணம்: பணிக்கு திரும்ப டாக்டர்கள் அனுமதி

india-man-mogan.jpgஇதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த ஒருமாதமாக ஓய்வில் இருந்து வரும்  பிரதமர் மன்மோகன்சிங் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும், பணிக்கு  அவர் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடந்த மாதம்,  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் ஒரு வாரமும் அதனைத் தொடர்ந்து வீட்டிலும் அவர் ஓய்வு பெற்று வந்தார். டாக்டர்கள் குழு ஒன்று பிரதமர் வீட்டில் தங்கி அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தது. மருத்துவ ஆலோசனை அடிப்படையில் ஒரு சில உடற்பயிற்சிகளை மன்மோகன் சிங் செய்துவந்தார்.

மேலும் வீட்டில் இருந்தபடியே பைல்களையும் பார்க்க தொடங்கினார்.  இந்நிலையில் பிரதமரின் உடல்நிலை நன்கு தேறிவிட்டதாகவும், முழுநேர பணிக்கு திரும்ப  அவர் தயாராகி விட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் விஜய் டி சில்வா  நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், இதய அறுவை சிகிச்சைக்குப் பின் காயங்கள் அனைத்தும் முழுமையாக குணமடைய 4 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயம். பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அறுவை சிகிச்சை முடிந்து 4 வாரங்கள் முடிந்து விட்டன.

அவரது உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர் தனது பணியை தொடங்கலாம் என்றார்.

அமெரிக்க மக்களிடையில் யேசுவைவிட ஒபாமாவுக்கே உயர்ந்த இடம்

obama.jpgஅமெரிக்க மக்கள் மத்தியில் யேசு கிறிஸ்துவைவிட முக்கியமானதொரு இடம் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கிடைத்துள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 2 ஆயிரத்து 634 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

அதன்படி ஜனாதிபதி ஒபாமா முதலாம் இடத்திலும் யேசு கிறிஸ்து இரண்டாம் இடத்திலும் மார்ட்டின் லூதர் கிங் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

தொடர்ந்து 4 ஆம் இடம் ரொனால்ட் றீகன், 5 ஆம் இடம் ஜோர்ஜ் டபிள்யூ புஷ், 6 ஆம் இடம் ஆபிரகாம் லிங்கன், 7 ஆம் இடம் ஜோன் மெக்கெய்ன், 8 ஆம் இடம் ஜோன் எப்.கென்னடி, 9 ஆம் இடம் செஸ்லி சுல்லென் பேர்கர் மற்றும் 10 ஆம் இடத்தில் அன்னை தெரேசாவும் உள்ளனர்.

2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இதே வாக்கெடுப்பில் யேசு கிறிஸ்து முதலாம் இடத்திலும் மார்ட்டின் லூதர் கிங் இரண்டாம் இடத்திலும் கொலின் பவல் மூன்றாம் இடத்திலும் கென்னடி 4 ஆம் இடத்திலும், அன்னை தெரேசா 5 ஆம் இடத்திலும், இருந்தனர்.

ஆனால் அந்த வாக்கெடுப்பில் 19 ஆம் இடத்திலிருந்த ஜோர்ஜ் புஷ் தற்போது 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை 2001 ஆம் ஆண்டில் முதல் இருபது பேருக்குள் வராத மெக்கெய்ன் 7 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய மருத்துவர்களை அனுப்புமாறு கருணாநிதி கோருகிறார்

karunanithy.jpgதமிழக முதல்வர் கருணாநிதி, இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் மோதலின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க இந்தியாவிலிருந்து மருத்துவர்கள் போர் பிரதேசத்திற்குச் செல்லவேண்டும் என்றும், தமிழகமும் அவ்வாறு மருத்துவர்களை அனுப்பத் தயார் என்றும் கூறி இருக்கிறார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் இன்று எழுதி உள்ள கடிதத்தில், ”கடந்த ஜனவரி 15ஆம் நாளிலிருந்து இதுவரை 36,000 தமிழர்கள் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வந்து, அவர்களெல்லாம் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர், பலர் காயமுற்றிருக்கின்றனர், மற்றவர் உடல்நலக்குறைவுற்றிருக்கின்றனர். தற்போது போர் பிராந்தியத்தில் சிக்கியுள்ள 1 லட்சம் மக்களில் மேலும் பலர் வெளியேறக்கூடும் என பல்வேறு வெளிநாட்டு அமைப்புக்கள் கூறி இருக்கின்றன, இந்நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவேண்டும், எனவே மத்திய அரசு உடனடியாக இலங்கையுடன் தொடர்புகொண்டு இந்தியாவிலிருந்து தேவையான மருத்துவர்கள், உதவியாளர்கள் மற்றும் மருந்துகள் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரை சென்றடைய ஆவன செய்யவேண்டும்” என்று பாக்ஸ் மூலம் பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரி இருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் ஏரோசற் ராடர்களை பொருத்துகிறது இந்திய விமானப்படை

பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவத்தை கவனத்திற்கொண்டு திருவனந்தபுரத்திலுள்ள தென்பிராந்திய விமானப்படை கட்டளைத் தலைமையகத்தில் தாழ்ந்த மட்ட வீச்சுகளை எதிர்கொள்ளும் ஆற்றலுள்ள ஏரோசற் ராடர்களை பொருத்துவதற்கு இந்திய விமானப்படை திட்டமிடுவதாக பி.ரி.ஐ.செய்திச்சேவை நேற்று சனிக்கிழமை தெரிவித்தது.

விடுதலைப்புலிகள் ஆச்சரிய மூட்டும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் இந்திய விமானப்படையின் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு தென்பிராந்திய விமானப் படை கட்டளை தலைமையகத்தில் இருவிடங்களுக்கு தாழ்ந்த மட்ட வீச்சைக் கொண்ட ஏரோசற் ராடர்கள் பொருத்தப்படுமென இந்திய விமானப் படை அதிகாரி ஏயார்மார்ஷல் எஸ்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை இரவு புலிகள் நடத்திய விமானத்தாக்குதல்களுக்கு சிலமணிநேரத்திற்கு முன்பாக இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, கடல்வழி, வான் மார்க்க நடவடிக்கைகள் தற்போது மேற்குப்பிராந்திய விமானப்படை கட்டளை தலைமையகத்தின் பொறுப்பில் இருப்பதாகவும் அது திருவனந்தபுரத்திலுள்ள தென்பிராந்திய விமானப்படை கட்டளை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

2007 இல் விடுதலைப் புலிகள் முதலாவது விமானத் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்பகுதி கரையோரம் இடத்துக்குகிடம் கொண்டு செல்லும் ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ராடர்களும் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு முறைமைகளும் நாள் முழுக்க இயங்கிவருகின்றன.

மும்பைத் தாக்குதல்களைத் தொடர்ந்து வான்வழியிலும் தாக்குதல்கள் நடத்தப்படலாமென எதிர்பார்த்து இந்திய விமானப்படை வான்வழிப் பாதுகாப்பு முறைகளை நாடளாவிய ரீதியில் செயற்பட வைத்திருக்கிறது.