பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவத்தை கவனத்திற்கொண்டு திருவனந்தபுரத்திலுள்ள தென்பிராந்திய விமானப்படை கட்டளைத் தலைமையகத்தில் தாழ்ந்த மட்ட வீச்சுகளை எதிர்கொள்ளும் ஆற்றலுள்ள ஏரோசற் ராடர்களை பொருத்துவதற்கு இந்திய விமானப்படை திட்டமிடுவதாக பி.ரி.ஐ.செய்திச்சேவை நேற்று சனிக்கிழமை தெரிவித்தது.
விடுதலைப்புலிகள் ஆச்சரிய மூட்டும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் இந்திய விமானப்படையின் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு தென்பிராந்திய விமானப் படை கட்டளை தலைமையகத்தில் இருவிடங்களுக்கு தாழ்ந்த மட்ட வீச்சைக் கொண்ட ஏரோசற் ராடர்கள் பொருத்தப்படுமென இந்திய விமானப் படை அதிகாரி ஏயார்மார்ஷல் எஸ்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை இரவு புலிகள் நடத்திய விமானத்தாக்குதல்களுக்கு சிலமணிநேரத்திற்கு முன்பாக இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, கடல்வழி, வான் மார்க்க நடவடிக்கைகள் தற்போது மேற்குப்பிராந்திய விமானப்படை கட்டளை தலைமையகத்தின் பொறுப்பில் இருப்பதாகவும் அது திருவனந்தபுரத்திலுள்ள தென்பிராந்திய விமானப்படை கட்டளை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
2007 இல் விடுதலைப் புலிகள் முதலாவது விமானத் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்பகுதி கரையோரம் இடத்துக்குகிடம் கொண்டு செல்லும் ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ராடர்களும் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு முறைமைகளும் நாள் முழுக்க இயங்கிவருகின்றன.
மும்பைத் தாக்குதல்களைத் தொடர்ந்து வான்வழியிலும் தாக்குதல்கள் நடத்தப்படலாமென எதிர்பார்த்து இந்திய விமானப்படை வான்வழிப் பாதுகாப்பு முறைகளை நாடளாவிய ரீதியில் செயற்பட வைத்திருக்கிறது.