::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்: வைகோ

india-election.jpgவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு, கருணாநிதி முன்கூட்டியே இரங்கல் கவிதை எழுதி வைத்திருப்பார். ஆனால், அவரது கனவு பலிக்காது. பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார் என்று வைகோ பேசினார். அமைந்தகரையில் நடந்த தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

இலங்கை தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த மூன்று பேருக்கு மட்டுமே கருணாநிதி இரங்கல் தெரிவித்தார். தற்போது, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாளர் என்பது போல கபடநாடகம் ஆடுகிறார். சேது சமுத்திர திட்டம் குறித்து நான் சொன்ன கருத்தை வைத்து, அ.தி.மு.க.,வுடன் நெருடல் இருப்பதாக ஒரு ‘டிவி’ பொய் பிரசாரம் செய்கிறது. ஆனால், அதற்கு அடுத்த கேள்விக்கு இந்திய பிரதமராக வர அனைத்து தகுதியும் உள்ளவர் ஜெயலலிதா என்று நான் கூறிய கருத்தை வெளியிடவில்லை.

தற்போது, தனித்தமிழ் ஈழம் அமைய அ.தி.மு.க., பாடுபடும் என்று அ.தி.மு.க., அறிவித்திருப்பது மிக முக்கியமான விஷயம். முடிவெடுத்தால் அந்த முடிவில் உறுதியாக இருக்கக்கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும். பிரபாகரன் பிடிபட்டால் போரஸ் மன்னனை போல் நடத்த வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்தார். ஆனால், தற்போது தனியார் ‘டிவி’ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பிரபாகரன் எனது நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்டால் வருத்தப்படுவேன்,’ என்று கூறியிருக்கிறார். பிரபாகரன் எப்போது சாவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் கருணாநிதி

ஈழத்தமிழர் பிரச்னைக்காகவே மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டவர் அவர். முன்கூட்டியே பிரபாகரனுக்கு இரங்கல் கவிதையை கருணாநிதி எழுதி வைத்திருப்பார் என்பது எனக்கு தெரியும். அவர் எண்ணம் பலிக்காது; பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்.எனக்கு மரண தண்டனை விதித்தாலும், பிரபாகரனுக்கு ஆதரவாகத் தான் பேசுவேன்.

சோனியாவே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா? – கருணாநிதி

20-karunanithi.jpgசோனியா காந்தியே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியின் இன்னொரு பகுதியை அந்த டிவி வெளியிட்டுள்ளது.

அதில், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, நளினியை விடுதலை செய்வது என்பது மாநில அரசின் கையில் இல்லை. அந்த அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்றார்.

பின்னர், கொள்கை அடிப்படையில், அனுதாபத்தின் அடிப்படையில் நளினி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்களா என்ற கேள்விக்கு, சோனியா காந்தி அவர்களே நளினியிடம் இரக்கம் காட்டியபோது, நான் காட்டாமல் இருக்க முடியுமா என்றார் கருணாநிதி.

இதற்கிடையே, சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த ஒரு பேட்டியில், ராஜீவ் காந்தி படுகொலையை நான் மன்னிக்க மாட்டேன். அதை செய்த இயக்கத்தையும் நான் மன்னிக்க மாட்டேன் என்றார் கருணாநிதி.

இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட பிரிட்டன் வலியுறுத்தல்

front.jpgஇலங்கையின் வடக்கில் ஏற்பட்டுவரும் உக்கிர மோதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள பிரித்தானிய அரசு, அங்கே சிவிலியன்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உடனடி யுத்தநிறுத்தமொன்று ஏற்படவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.

இலங்கையில் போர் நிறுத்தம் வர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்து அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளும் கோரிவருகின்றன என்றும் ஐ.நா.மன்றமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரால் சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களை விடுவிக்கும் நோக்கில் இலங்கை அரசுடனும் விடுதலைப் புலிகளுடனும் உடன்பாடொன்றை எட்டும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தற்போது ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடும் அந்த அறிக்கை, இது தொடர்பில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. தலைமை செயலரின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார், தனது பயணம் குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா.மன்றப் பாதுகாப்பு சபையில் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இலங்கை குறித்து விவாதிக்க டேஸ் பிரவுண் அமெரிக்கா செல்கிறார்

இலங்கை தொடர்பில் ஐ.நா.மன்றத்தில் விவாதிக்க பிரிட்டிஷ் பிரதமரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி டேஸ் பிரவுண் நியூயார்க் செல்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.  இலங்கையில் சமாதானம் ஏற்பட தன்னாலான சகல முயற்சிகளையும் பிரிட்டன் மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தூதரக உறவை சோனியா காந்தி துண்டிப்பதாக 20-ந் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் கண்டன போராட்டம் நடத்தப்படும் : பாரதிராஜா

bharathi-raja.jpgஇலங்கை தூதரக உறவை துண்டிப்பதாக 20-ந் தேதிக்குள் சோனியா காந்தி அறிவிக்காவிட்டால், 23-ந் தேதி முதல் தொடர் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என்று டைரக்டர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் பாரதிராஜா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது, அனைத்து கட்சிகள் கேட்டன, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், வக்கீல்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் போராடினார்கள். பலர் தீக்குளித்து மாண்டனர்.

ஆனால் மத்திய அரசு நினைத்திருந்தால் உடனடியாக போரை நிறுத்த முடியும். அதனால் திரையுலகின் பல சங்கங்கள் இணைந்து ஒரு கோரிக்கையை சோனியா காந்திக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். அவர் முயற்சித்தால் இலங்கையில் செத்து மடியும் உயிர்களை காப்பாற்ற முடியும். திரையுலக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் மற்றும் தமிழ் இன உணர்வுள்ள பல்வேறு அமைப்புகள் எங்கள் இயக்கத்தில் அங்கம் வகிப்பார்கள்.

சோனியா காந்தி, தமிழ்நாட்டுக்கு வாருங்கள், வாருங்கள் என்று இருகரம் கூப்பி வரவேற்கிறோம். எங்கள் சொந்தங்கள் இன்னலில் இருந்து விடுபட, உயிர்கள் காப்பாற்றப்பட உத்தரவிட்டுவிட்டு வாருங்கள். இல்லை என்றால் உங்களை எதிர்த்து எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.

எவ்வளவோ போராடி விட்டோம், நெருக்கடி நேரத்தில் தான் விடிவு பிறக்கும் என்பதால் தான் தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இனி மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் இனத்தால் ஒன்றுபடுவான், சாதிப்பான் என்பதை புரிந்து கொள்ளும் விதத்தில் எங்கள் போராட்டம் இருக்கும். வரப்போகிற மத்திய அரசு தமிழன் சொன்னால் செவி சாய்க்கும். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

சென்னை அருகே விடுதலைப்புலி கைது: விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள்

images-army.jpg இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது. இதனால் விடுதலைப்புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாகவும், எந்த நேரத்திலும் அவர்கள் ஊடுருவலாம் என்றும் மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் போலீசாரும், கடலோர காவல்படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 3-ந் தேதி அன்று திருவான்மியூரில் சயந்தன் என்ற விடுதலைப்புலியும், அவரது கூட்டாளிகளான குகன், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சயந்தன் லண்டனில் இருந்து சென்னை வந்திருந்தார். இங்கிருந்து விடுதலைப்புலிகளுக்காக இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த தகவல் தெரிந்து கியூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். சயந்தனை கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தார்கள். அப்போது, இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக பொருட்களை கடத்துவதற்கு மூர்த்தி என்ற முத்தண்ணா (வயது 39) என்ற நபர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. முத்தண்ணா கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரை சென்னையில் உள்ள கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடமிருந்து ஜி.பி.எஸ். தகவல் தொடர்பு கருவி ஒன்றும், 2 செயற்கைகோள் செல்போன்களும், 4 சாதாரண செல்போன்களும், இந்தியா-இலங்கை இடையிலான கடல்வழி வரைபடமும் கைப்பற்றப்பட்டது. ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

முத்தண்ணாவிடம் விசாரித்தபோது, அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். தனது 26-வது வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாகவும், விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்ததாகவும், தற்போது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக மருந்து போன்ற பொருட்களை கடத்தி செல்வதற்காக தமிழகம் வந்ததாகவும் முத்தண்ணா தெரிவித்தார். அவர், இலங்கையில் உள்ள விசுவமடு என்ற இடத்தை சேர்ந்தவர். தீவிர விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் முத்தண்ணா சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இலங்கை விவகாரம் குறித்து 29இல் ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஆராய்வு

hller.jpgஐ.நா. பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்øகப் பிரச்சினை குறித்து ஆராயப்படவுள்ளது. ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் விவகாரங்களுக்கான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் செயற் குழு எதிர்வரும் 29 ஆம் திகதி சந்திக்கும்போது இலங்கை, மியன்மார் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவரும் பாதுகாப்புச் சபையின் ஏப்ரல் மாதத்திற்கான தலைவருமான குளோட் ஹெல்லர் தெரிவித்துள்ளதாக இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறுவதை அனுமதிக்கும் எண்ணம் எதுவும் மெக்ஸிகோவிடம் இல்லை என மெக்ஸிகோவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கொமஸ் ரொபெல்டோ தன்னிடம் கூறியதாக இலங்கை வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கொஹென அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் அது சரியான தகவல் அல்ல என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவர் ஹெல்லர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை விடயத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கான கடப்பாடு தொடர்பான கரிசனை உள்ளது என நாம் மிகத் தெளிவாக உள்ளோம். எந்தவொரு நாடும் தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் அல்லது பாதுகாக்காவிட்டால் அதை செய்தவற்கு சர்வதேச சமூகம் தலையிட முடியும் என்ற “பாதுகாப்பதற்கான கடப்பாடு’ (R2P) எனும் கோட்பாடு ஐ.நா. பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என ஹெல்லர் கூறியுள்ளார்.

பிரபாகரன் பயங்கரவாதி அல்ல எனது நல்ல நண்பர்- கருணாநிதி : பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

karunanidhi-prabhakaran.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. ஒரு வேளை அவர் கொல்லப்பட்டால் நான் மிகவும் வருத்தப்படுவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு (என்டிடிவிக்கு) அளித்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழ ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

அந்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது ..

விடுதலைப் புலிகளின் நோக்கம் உன்னதமானது. நல்ல தீர்ப்புக்காக உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அற்புதமான கொள்கை. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மையால் அது தவறான பாதைக்கு திரும்பி விட்டது. அவர்களது லட்சியம் பெரிது. ஆனால் கையாண்ட முறை தவறாகி விட்டது.

பிரபாகரன் எனது நல்ல நண்பர், பயங்கரவாதி அல்ல. அவருடைய இயக்கத்தி்ல் பயங்கரவாதிகள் இருக்கலாம். அது பிரபாகரனுடைய தவறு அல்ல.

தீவிரவாதம் வேறு, இது வேறு. பிரபாகரனைப் பொறுத்தவரையில் எனக்கும், அவருக்கும் இடையே ஒரே ஒரு முறைதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிரன்ட்லைன் இதழுக்கு அவர் பேட்டி அளித்தபோது, நீங்கள் வெற்றி பெற்று தமிழ் ஈழம் மலர்ந்தால் ஜனநாயக ஆட்சியை நடத்துவீர்களா என்று கேட்டனர். அதற்கு பிரபாகரன், இல்லை, சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் என்றார். அது மட்டும்தான் எனக்கு கருத்து மாறுபாடாக அமைந்தது.

இலங்கையில் தாக்குதலில் உயிரிழப்புகளை கேள்விப்படும் போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஈழத்தமிழர் வாழ்வில் விரைவில் விடிவெள்ளி பிறக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

jayalalitha.jpgஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார்.

சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப்பின் தெரிய வரும் என்றார்.

இரானிய அமெரிக்க செய்தியாளருக்கு 8 ஆண்டுகள் சிறை

rokchana.jpgஉளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரானிய அமெரிக்க செய்தியாளரான ரோக்ஸானா சபரிக்கு இரானிய நீதிமன்றம் ஒன்று 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதாக, அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.

இந்த வழக்கு தனியறையில் நடத்தப்பட்டது. வழக்கின் ஆதாரங்கள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்த தண்டனையை மிகவும் கடுமையான தண்டனை என்று பிபிசி கூறியிருக்கின்றது. சபரி முன்னர் பிபிசிக்காக செய்திகளை வழங்கியிருந்தார்.இந்த வழக்கின் முடிவுகள் குறித்து இரானிய நீதியமைச்சில் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை.

கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்ட சபரி அவர்கள், முதலில் சட்டவிரோதமாக பணியாற்றுவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு அமெரிக்காவுடனான உறவுகளில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று இரானில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினை: அன்னிய நாட்டு பிரச்சினை. அன்னிய நாட்டு பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. – ஐகோர்ட்டில் வழக்கு

india-election.jpgஇலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி செய்தியாளர்நகரை சேர்ந்தவர் வி.கண்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். மதுரை ஐகோர்ட்டில் அவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. தேர்தலின் போது முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நிலையான அரசு வேண்டும் என்று தேர்தலின் போது ஓட்டு கேட்கின்றனர். தேர்தல் முடிந்த பின்பு தங்களை எதிர்த்து போட்டியிட்ட அணியுடன் சேர்ந்து கொள்கின்றனர். அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு சேவை செய்வதை விட்டு விட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். மக்கள் நலனில் அரசியல் கட்சியினருக்கு அக்கறை இல்லை.

ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் போடப்படுகிறது. இந்த தொகையை கொண்டு மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று எந்த கட்சிகளும் வாக்குறுதி கொடுப்பது இல்லை. தற்போது அரசியல் கட்சியினர் இலங்கை தமிழர் பிரச்சினையை தேர்தல் பிரசாரத்தின் ஆயுதமாக எடுத்துள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தமட்டும் அன்னிய நாட்டு பிரச்சினை. அன்னிய நாட்டு பிரச்சினையில் இங்குள்ள அரசியல் கட்சியினர் தலையிட முடியாது. இலங்கை பிரச்சினையில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை அறிந்த அரசியல்வாதிகள் அந்த பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். தமிழ் பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் கற்பழிக்கப்படுகின்றனர். இதற்காக பலமுறை வக்கீல்களும், தமிழ் அமைப்புகளும் போராட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில தேர்தல் கமிஷனுக்கு 11.4.2008 அன்று மனு அனுப்பினேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கிருஷ்ணன், டி.ராஜா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.கோபால்சாமி ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது நீதிபதிகள், “மனுதாரர் தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பி 6 நாட்கள் தானே ஆகிறது. அந்த மனு தேர்தல் அதிகாரிகளுக்கு இன்னும் கிடைத்து இருக்காதே. அதற்குள் எப்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்” என்றனர். அதன்பின்பு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஈழத்துக்கு குரல் கொடுக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள்: வைகோ

india-elc-2009.jpgஈழத் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். விருதுநகர் தொகுதி மதிமுக வேட்பாளர் வைகோ சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. ஈழத்தமிழர்களை அழிக்க ராஜபக்சே முடிவு எடுத்து உள்ளார். இப்போது போரை நிறுத்துங்கள் என்றால் அவர் எப்படி நிறுத்துவார். பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு அக்கறை காட்டுகிறது. எனவே ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்றார்.