::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

வடகொரியா இரண்டாவது அணுகுண்டு பரிசோதனை

statetv_grab-korutroket.jpgவட கொரியாவினால் செய்யப்பட்ட இரண்டாவது அணுகுண்டு சோதனையை அதன் நெருக்கமான இராஜதந்திர கூட்டாளி நாடான சீனா விமர்சித்துள்ளது.நிலத்தடியில் வைத்து செய்யப்பட்டுள்ள இந்த அணுகுண்டு சோதனையை தாம் திட்டவட்டமாக எதிர்ப்பதாக சீனா கூறியுள்ளது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அணுகுண்டு சோதனை வெற்றிகரமானது என்று வடகொரியா புகழ்ந்துள்ளது.

அந்த வெடிப்பின் சக்தியானது 1945ல் நாகசாக்கியில் போடப்பட்ட அணுக்குண்டுக்கு ஒப்பானது என்று ரஷ்ய இராணுவ அறிக்கை மதிப்பிட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வடகொரியாவின் அணுச் சோதனையை விட இது பெரியதாகும். சிறிது நேரத்தின் பின்னர் வடகொரியா மூன்று குறுந்தூர ஏவுகணைகளையும் பரிசோதித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பஞ்சாப்பில் வன்முறை – 2 பேர் பலி

punjab1.jpgஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இரு சீக்கிய பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சீக்கிய மதகுரு சந்த்ராம் நந்த் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. வன்முறைக்கு
இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ராணுவம் விரைந்துள்ளது. கொல்லப்பட்ட சந்த்ராம் நந்த் மற்றும் குருசந்த் நிரஞ்சன் தாஸ் என்ற மதகுருவும் இணைந்து குருத்வாராவில் ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென 6 பேர் உள்ளே நுழைந்து கத்திகள், துப்பாக்கிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை மோதல் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வியன்னாவில் நடந்த தாக்குதல் பஞ்சாபில் எதிரொலித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை மற்றும் கலவரம் மூண்டுள்ளது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஜலந்தரில் பஸ்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் வேன்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. அங்கு துணை ராணுவப்படை விரைந்துள்ளது. ராணுவமும் விரைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லம்ப்ரா கிராமத்தில், ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர். அதேபோல ஜலந்தர் கன்டோன்மென்ட் பகுதியில், போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். பக்வாரா பகுதி வழியாக சென்ற கன்னியாகுமரி – ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயிலை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரயிலின் 3 பெட்டிகள் எரிந்து போய் விட்டன.

மும்பை விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு

Gun 01மும்பை விமான நிலையத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடந்தது. 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை விமான நிலைய சரக்குப் பிரிவு வளாகத்திற்குள் இன்று காலை 3 ஆயுதம் தாங்கிய கும்பல் உள்ளே நுழைந்து சரமாரியாக சுட்டது.இதில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 3 பேரும் காரில் வந்ததாக தெரிகிறது. யார் அவர்கள், எதற்காக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து தெரியவில்லை.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரித்திரியாவை தடை செய்யுமாறு ஐ.நாவிடம் கோரிக்கை

somaliaauforce.jpg எரித்திரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை தண்டனைத் தடைகளை விதிக்க வேண்டும் என்று ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தனது உறுப்பு நாடுகளில் ஒன்றுக்கு எதிராக ஆப்பிரிக்க ஒன்றியம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது இதுவே முதல் முறை.

சோமாலியாவின் இஸ்லாமியவாத கிளர்ச்சிக்காரர்களுக்கு எரித்ரியா ஆயுதங்கள் வழங்கிவருவதாக ஆப்பிரிக்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. சோமாலியாவில் இடைகால அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆப்பிரிக்க ஒன்றியம் நான்காயிரம் துருப்பினரை பணியமர்த்தியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை எரித்ரியா மறுத்துள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் ”திறனற்ற மற்றும் வலிமையற்ற ஓர் அமைப்பு” என்று கூறி அதனைப் புறக்கணித்துள்ள எரித்ரிய தகவல் தொடர்பு அமைச்சர் அலி அப்து, எரித்ரியா அவ்வமைப்பிலிருந்து தனது உறுப்புரிமையை இடைநிறுத்திக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சோனியாவுக்கு விசேஷ கைத்தறி சேலை; மம்தா பானர்ஜி வழங்கினார்

mamta-banerjee.jpg டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அண்மையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போது, அவருக்கு மேற்கு வங்காளத்தின் பிரசித்தி பெற்ற டோனேகாலி கைத்தறி சேலை ஒன்றை பரிசாக வழங்கினார்.

வெளிறிய நிறம் கொண்ட இந்த கைத்தறி சேலையை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கும் நாளன்று அணிந்து கொண்டு வருமாறும் சோனியாவிடம் அப்போது மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்துக்கு இந்த கைத்தறி சேலையை சோனியா அணிந்து வந்தால் டோனேகாலி ரக சேலைகள் மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி நாட்டின் பிறபகுதி பெண்களையும் ஈர்க்கும். இதன் மூலம் நலிவடைந்துள்ள மேற்கு வங்க கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சி ஏற்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி விவாதித்து அறிவிப்போம்: கலைஞர்

karunanidhi.jpgமத்திய அமைச்சரவையில் தி.மு.க. சேருவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 20 கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

இந்த புதிய அரசில் தி.மு.க.வுக்கு எத்தனை அமைச்சர்கள், எந்தெந்த இலாகாக்களை தருவது? என்பது குறித்து டெல்லியில் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தி.மு.க. தலைவர், முதல் அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டார்.

ஆனால் இதில் சுமுக முடிவு ஏற்படவில்லை. மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்றும், காங்கிரஸ் கூறிய  பார்முலா’ குறித்து செயற்குழு அல்லது உயர்நிலை செயல்திட்டக்குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு, கருணாநிதி சென்னை புறப்பட்டு வந்துவிட்டார். சென்னை வந்த பின் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தி.மு.க.வின் முன்னணி தலைவர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த விஷயங்கள் குறித்து முதல் அமைச்சர் கருணாநிதி, கட்சியின் முன்னணி தலைவர்களுடன் ஆலோசித்தார். அதன் பின்னர் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கருணாநிதி கூறியிருப்பதாவது:  15 வது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அமைச்சரவை அமைக்கும் காலக் கட்டத்தில் டெல்லியிலே உள்ள சில தொலைக்காட்சிகளில் வேண்டுமென்றே திட்டமிட்டு, தி.மு.க. அமைச்சர்களைப் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்ததை டெல்லி நிருபர்கள் கூட்டத்தில் பிரதமரே விளக்கமளித்து மறுத்திருப்பதற்கும், அதைத் தொடர்ந்து பிரதமரே மத்திய அமைச்சரவையில் தி.மு.க. பங்கு பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்ததற்கும் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.அமைச்சரவையில் பங்கேற்பது பற்றியும் விவாதித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அழகிரி, தயாநிதி, ராஜாவுக்கு கேபினட் – டி.ஆர். பாலு துணை சபாநாயகர்?

karunanidhi.jpgமத்திய அமைச்சரவையில் சேர திமுக முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது. டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக அவர் லோக்சபா துணை சபாநாயகராக நியமிக்கப்படலாம்.

திமுக சார்பில் யாரை அமைச்சராக அறிவித்தாலும் ஏற்கத் தயார் என காங்கிரஸ் தரப்பு கூறி விட்டது. மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக்கப்படுவார்கள். கனிமொழிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும். அவருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மன்மோகனுடன் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து – தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி

pm-manmogan.jpg2வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மன்மோகன் சிங்குக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் செயல்படுவோம் எனவும் அவரிடம் தெரிவித்தார். இன்று காலை மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒபாமா அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உலகளாவிய தீவிரவாதம் , பொருளாதார சீர்குலைவு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மேலும், தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்தும், இந்திய, அமெரிக்க இரு தரப்பு உறவை மேலும் வலுவாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

தீவிரவாதத்தை ஒழிப்பதில் உறுதியுடன் செயல்படவும் இரு தலைவர்களும் உறுதி கூறிக் கொண்டனர். இந்தப் பேச்சின்போது மன்மோகன் சிங்கை அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்காகவும், மன்மோகன் சிங்கின் முந்தைய அரசு கடைப்பிடித்த கொள்கைகளுக்கு மக்கள் அளித்துள்ள பாராட்டே இந்த வெற்றி என்றும் ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.

திமுகவுடன் பிரச்சனையில்லை:விரைவில் தீர்வு ஏற்படும் – குலாம்நபி ஆசாத்

gulam-azad_.jpgமத்திய மந்திரிசபையில் திமுகவுக்கு எத்தனை மந்திரிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மந்திரி பதவியேற்க திமுக மறுத்து விட்டது.  காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிப்பது என்று தி.மு.க. முடிவு செய்தது. மத்திய மந்திரிசபையில் திமுக இடம் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரதமரும் அழைப்பு விடுத்து இருந்தார்.

மந்திரிசபையில் சேர்வது தொடர்பாக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் மந்திரி சபை விஸ்தரிப்புக்கு முன்பு திமுகவுடன் உடன்பாடு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ’’தி.மு.க.வுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதனால் நான் சென்னை செல்லவில்லை. மந்திரிசபை விஸ்தரிக்கப்படுவதற்கு முன்பு (செவ்வாய்க்கிழமை) தி.மு.க.வுடன் தீர்வு ஏற்பட்டு விடும்’’ என்று தெரிவித்தார்.

தென்கொரிய முன்னாள் அதிபர் தற்கொலை

_roh_mourninggetty.jpgதென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ ஹியுன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தோன்றும் சம்பவம் தொடர்பில் இந்நாள் அதிபர் லீ முயுங் பாக் ஆழமான அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

2008ல் தான் பதவிக்கு வருவதற்கு முன்பாக, ஐந்து ஆண்டு காலம் பொறுப்பில் இருந்த ரோ உயிரிழந்தமையை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், அது பெரும் கவலையைத் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தனது வீட்டின் அருகில் இருந்த ஒரு மலை முகட்டிலிருந்து கீழே விழுந்ததில் ரோ உயிரிழந்துள்ளார். தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார் என்று பொலிசார் கூறுகின்றனர்.

ரோ ஒரு எளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கல்லூரி சென்று படித்ததில்லை, ஊழலற்ற ஆட்சி, வடகொரியாவுடன் சமாதானம் போன்றவற்றை முன்னிறுத்தி நாட்டின் அதிபரானவர் அவர். அண்மைய மாதங்களாக அவர் மீது ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அவர் மறுத்திருந்தார்.