::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்

indonesiya.jpgஇந்தோ னேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இன்று காலை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் அளவு 6.1 ரிக்டராக பதிவாகியுள்ளது. இருப்பினும் இது 6.2 என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.  இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வனாட்டு தீவிலும்…

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் உள்ள வனாட்டுத் தீவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் இந்த தீவில் இருந்த கட்டடங்கள் அதிர்ந்தன. நில நடுக்கம் ரிக்டர்கோளில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் முதல் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்

ins-arihant.jpgஇந்தியா வின்  முதலாவது,  முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணு சக்தியில் இயங்கக் கூடிய, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய ஐஎன்எஸ் அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். விசாகப்பட்டனத்தில் இன்று நடந்த இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில், பிரதமரின் துணைவியார் குர்சரண் கெளர் நீர்மூழ்கியைத் தொடங்கி வைத்தார்.

பல்வேறு கடல் பரிசோதனைகளுக்குப் பின்னர் இந்த நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் இணைக்கப்படும். இதேபோல மூன்று கப்பல்களை இந்தியா வடிவமைத்து வருகிறது. அதில் முதல் கப்பல்தான் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அரிஹாந்த் நீர்மூழ்கிக் கப்பல் 112 மீட்டர் நீளமுடையது. 6000 டன் எடையுடன் கூடியது. 2 ஆண்டுளுக்கு இது கடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னர் இது கடற்படையில் சேர்க்கப்படும். அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா உருவாக்கி தொடங்கியிருப்பதன் மூலம், இத்தகைய கப்பல்களை வைத்துள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கியைத் தொடங்கியிருப்பதன் மூலம் வான், நிலம் மற்றும் கடல் மார்க்கமாக அணு ஆயுதங்களைக் கையாளக் கூடிய வல்லமையை இந்தியா பெற்றுள்ளது என்பது முக்கியமானது.

ஈரான் பயணிகள் விமானம் ஓடுபாதை சுவரில் மோதி விபத்து – 17 பேர் பலி

25-iran-plane-crash.jpgஈரானில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையின் சுவற்றில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 153 பயணிகளுடன் மாஷாத்வந்த விமானம் ஒன்று மாஷாத் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.

எதிர்பாராவிதமாக ஓடு பாதையின் நடுப்பகுதியில் விமானத்தை விமானி தரை இறக்கியதால் குறைந்த தூரமே உள்ள ஓடுபாதையில் வேகமாக சென்ற அந்த விமானம் சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்து தீப்பிடித்தது. அவர்களில் முன்பகுதியில் அமர்ந்திருந்த 17 பேர் விபத்தில் சிக்கி பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் மீட்கப்பட்டு பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

டுபாய் அரசின் புதிய அறிவிப்பால் பலர் வீடு இழக்கும் அபாயம்

dubai_flag.pngஒரே வீட்டை பலர் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற புதிய உத்தரவு ஒன்றை டுபாய் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் பலர் வீடுகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டுபாயில்,  ஒரே வீட்டில் ஒரு குடும்பத்திற்கும் அதிகமானவர்களோ அல்லது திருமணமாகாத இளைஞர்கள் பலரோ சேர்ந்து தங்கலாம் என, அந்நாட்டு அரசு முன்னர் அனுமதித்திருந்தது. எனினும் தற்போது அந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி  ஒரு வீட்டில் ஒரு குடும்பத்திற்கு மேல் யாரும் தங்கக் கூடாது என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டுபாயில்,  விலா என அழைக்கப்படும் வீடுகளின் வாடகை அளவுக்கு அதிகமாக உள்ளது. அதனால்,  ஏராளமான வெளிநாட்டுக்  குடும்பங்கள் மற்றும் திருமணமாகாத இளைஞர்கள் பலர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.  இப்படி சேர்ந்து வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு,  ஒரு வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்க வேண்டும். இதை மீறும் விலா உரிமையாளர்களுக்கு; அபராதம் விதிக்கப்படும் என,  கடந்தாண்டு மத்தியில் அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்த விதிமுறை, அடுத்த மாதம் முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு காலநீட்டிப்போ அல்லது விதிவிலக்கோ கிடையாது என துபாய் நகராட்சி அதிகாரி உசேன் நாசர் லூட்டா கூறியுள்ளார்.

பூகம்பத்தால் நியூஸிலாந்தின் தென்பகுதி அவுஸ்திரேலியா நோக்கி நகர்வு – விஞ்ஞானிகள் தெரிவிப்பு

new-zealand.jpgநியூஸி லாந்தின் தெற்குப் பகுதியிலுள்ள ரிசொல்யூஷன் தீவுக்கருகில் கடலுக்கடியில் கடந்த வாரம் ஏற்பட்ட பூகம்பத்தினால் தெற்கு நியூஸிலாந்து அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதி நோக்கி நகர்ந்துள்ளதாக பூகம்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிச்டர் அளவு கோலில் 7.8 என்று பதிவான இந்த பூகம்பத்தினால் தெற்குத் தீவு சுமார் 12 அங்குல (அதாவது 30 செ.மீ.) தூரம் மேற்காக நகர்ந்து அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சென்றுள்ளதாக பூகோள விஞ்ஞானி கென்கிளெட்ஹில் தெரிவித்துள்ளார்.

இந்த புவியியல் மாற்றம் பூமிக்கு அடியில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது என்று கூறியுள்ள கிளெட்ஹில் நியூஸிலாந்து அதனைத் தாக்கும் பெரும்பாறையின் எல்லையில் இருப்பதால் நாட்டின் நிலப்பகுதி அடிக்கடி மாறுதலுக்குள்ளாகிறதெனத் தெரிவித்துள்ளார்.

அதாவது 12 அங்குலம் ஒரு நாடு நகர்ந்திருப்பது என்பது ஏதோ ஆண்டாண்டு காலமாக நிகழவில்லை. ஒரு சில வினாடிகளில் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் நினைவில் நிறுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த புதனன்று ஏற்பட்ட இந்த பூகம்பம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பூகம்பம் என்பதும் நியூஸிலாந்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்டள்ள கடுமையான பூகம்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே அளவில் உலகின் வேறு எந்த நாட்டிலாவது பூகம்பம் ஏற்பட்டிருந்தால் அது ஒரு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் நியூஸிலாந்தின் தெற்குத் தீவுப் பகுதியில் மக்கள் தொகை அதிகம் இல்லை என்பதால் அழிவு அவ்வளவாக இல்லையென கிளெட்ஹில் கூறியுள்ளார்.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மற்றொரு விஞ்ஞானி மார்டின் ரெய்னர்ஸ், இரண்டு பெரும்பாறைகளுக்கு நடுவே உள்ள “மென் பாறைகளில்’ இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் ஆற்றல் கட்டுப்படுத்தப்பட்டது. இல்லையேல் பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

விமான தாக்குதலில் பின்லாடனின் மகன் பலி!

osama_son.jpgஒசாமா பின்லாடனின் மகன்களில் ஒருவரான சாத், அமெரிக்க விமான தாக்குதலில் பலியானார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான கூறப்படும் ஒசாமா பின்லாடன், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் உள்ள மலைப் பகுதிகளில் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக பாகிஸ்தான் எல்லையில், அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன. கடந்த ஓராண்டில் 50க்கும் அதிகமான தாக்குதல்களில், 470 பேர் பலியாகியுள்ளனர்.

இது போன்று அமெரிக்க விமானம் குண்டு வீசிய போது, அந்த வழியாக எதேச்சையாக வந்த ஒசாமாவின் மகன் சாத், குண்டு வீச்சில் சிக்கி பலியானதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக, அமெரிக்க வானொலி தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த சாத் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தனது தந்தை ஒசாமாவை பார்க்க வந்த போது குண்டு வீச்சில் சிக்கி பலியானதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஒசாமாவின் மகனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றும் அவரை கொல்லும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் குண்டு வீச்சில் தற்செயலாக அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. சாத் கொல்லப்பட்ட பகுதி அருகே தான் ஒசாமா பதுங்கி இருக்க வேண்டும் என சந்தேகிப்பதாக அமெரிக்க அதிகாரிகள சந்தேகிக்கின்றனர்

நெருக்கடி நிலை வழக்கு; முஷர்ரப் ஆஜராக வேண்டுமென்று ஆணை

பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரபை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது.

நெருக்கடி நிலை, நீதிபதிகள் பதவி நீக்கம் தொடர்பான தனது நடவடிக்கை குறித்து ஜுலை 29ல் நீதிமன்றத்தில் ஆஜராகி முஷாரப் தனது விளக்கத்தை அளிக்குமாறும் தலைமை நீதிபதி இப்திகர் செளத்ரி தலைமையிலான பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

முஷாரப் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்பதில்லை. தனது தரப்பில் வழக்கறிஞரைகூட ஆஜர்படுத்தி உரிய விளக்கத்தை அளிக்கலாம் என்றும் அந்த நோட்டீஸில் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முஷாரப் அதிபராக இருந்த போது திடீரென நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார். இதற்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி இப்திகர் செளத்ரி உட்பட நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் அனைவரையும் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார்.

இதையடுத்து ஜர்தாரி அதிபரானதும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் வலியுறுத்தலால் இப்திகர் கெளத்ரி உட்பட பதவிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் முஷாரப் தனது ஆட்சியில் எடுத்த நடவடிக்கை குறித்து இப்திகர் செளத்ரி தலைமையிலான பெஞ்ச், மறுஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரிட்டனில் முஷாரப்: முஷாரப் தற்போது பிரிட்டனில் உள்ளார். அவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்காகச் சென்றுள்ளார். இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தன்னை தூக்கிலிட வேண்டும் என்கிறார் கசாப்

இந்தியாவில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு பாகிஸ்தான் ஆயுததாரியான அஜ்மல் கசாப், தான் மரண தண்டனைக்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தன்மீது கருணை காட்டக்கூடாது என்றும், தன்னை தூக்கிலிடவேண்டும் என்றும் நீதிமன்ற விசாரணையின் போது, அஜ்மல் கசாப் நீதிபதியிடம் கூறினார்.

தாக்குதல்களில் பங்கெடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர், தாம் வழிநடத்தப்பட்டவிதம் குறித்த முழுமையான விபரங்களையும் நேற்று வழங்கியுள்ளார்.

மரண தண்டனையை தவிர்ப்பது மற்றும் தாக்குதலுடன் தொடர்புடைய, பாகிஸ்தானிலுள்ள ஏனைய சூத்திரதாரிகளை பாதுகாப்பதுமான தனது கோரிக்கையை கசாப் கைவிட்டுள்ளதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

‘ஆசியான்’ அமைப்பிலிருந்து மியான்மர் நாட்டை வெளியேற்ற வேண்டும் : ஹிலாரி

hillary_clinton.jpgவீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூகியை விடுதலை செய்யாவிட்டால் ‘ஆசியான்’ அமைப்பிலிருந்து மியான்மர் நாட்டை வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். தாய்லாந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மியான்மரில் மனித உரிமைகள் நிலவரம் கவலையளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆங் சாங் சூகியை அமெரிக்கர் ஒருவர் சந்தித்துப் பேசியது தொடர்பான விவகாரத்தில் சூகி மீது மியான்மர் இராணுவ அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இது மியான்மரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆசியான் அமைப்பிலிருந்து மியான்மரை வெளியேற்ற வேண்டும் என்று ஹிலாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மியன்மார் எதிரணி தலைவி சூகிக்கு மகாத்மா காந்தி அமைதி விருது

miyanmar_s.pngஅமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூ கி பெற்றுள்ளார்.  இவ்விருது தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மகாத்மா காந்தி நிதியத்தினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு டர்பன் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏப்ரகிம் இஸ்மைல் ஏப்ரகிம்மால் வழங்கப்பட்ட இவ்விருதை ஆங் சாங் சூ கியின் சார்பாக மியன்மாரின் நாடு கடந்த அரசின் பிரதமர் தெய்ன்வின் பெற்றுக் கொண்டார்.

சூகி இராணுவ அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு அந்நாட்டிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட 20 ஆவது ஆண்டை நினைவு கூரும் வகையிலேயே இவ்விருது ஜூலை 20 ஆம் திகதி வழங்கப்படுவதாக அந்நிதியத்தின் உறுப்பினரான ப்படி கேர்னேய் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா மற்றும் மார்டின் லூதர் கிங் போன்று இவரும் அகிம்சை வழியை கடைப்பிடிக்கும் தலைவர். இவர் அகிம்சாவாதம், நீதி மற்றும் அமைதி என்பவற்றை உறுதியாகக் கடைப்பிடித்தமையினாலேயே இவ்விருது வழங்கப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விருது தனக்கு கிடைத்துள்ளது பற்றி ஆங் சாங் சூ கி அறிவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எமது தலைவர் எல காந்தி இது தொடர்பாக அறிவித்தலை மியன்மார் உயர்ஸ்தானிகர் மூலமாக அனுப்பியிருந்தார். இருப்பினும் அக்கடிதம் பிரித்துப்படிக்கப்படாமலே திருப்பியனுப்பப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆங் சாங் சூ கியிற்கும் மியன்மார் மக்களின் போராட்டத்திற்கும் முழு ஆதரவை தென்னாபிரிக்கா வழங்குமெனவும் தெரிவித்தார்.  இவ்விருதை ஆங் சாங் சூ கி சார்பாகப் பெற்றுக் கொள்ள முடிந்தமை தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமென மியன்மாரின் நாடு கடந்த பிரதமர் தெரிவித்தார்.