ஒரே வீட்டை பலர் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற புதிய உத்தரவு ஒன்றை டுபாய் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் பலர் வீடுகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டுபாயில், ஒரே வீட்டில் ஒரு குடும்பத்திற்கும் அதிகமானவர்களோ அல்லது திருமணமாகாத இளைஞர்கள் பலரோ சேர்ந்து தங்கலாம் என, அந்நாட்டு அரசு முன்னர் அனுமதித்திருந்தது. எனினும் தற்போது அந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வீட்டில் ஒரு குடும்பத்திற்கு மேல் யாரும் தங்கக் கூடாது என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டுபாயில், விலா என அழைக்கப்படும் வீடுகளின் வாடகை அளவுக்கு அதிகமாக உள்ளது. அதனால், ஏராளமான வெளிநாட்டுக் குடும்பங்கள் மற்றும் திருமணமாகாத இளைஞர்கள் பலர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இப்படி சேர்ந்து வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, ஒரு வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்க வேண்டும். இதை மீறும் விலா உரிமையாளர்களுக்கு; அபராதம் விதிக்கப்படும் என, கடந்தாண்டு மத்தியில் அந்நாட்டு அரசு அறிவித்தது.
இந்த விதிமுறை, அடுத்த மாதம் முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு காலநீட்டிப்போ அல்லது விதிவிலக்கோ கிடையாது என துபாய் நகராட்சி அதிகாரி உசேன் நாசர் லூட்டா கூறியுள்ளார்.