கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை.” :பொதுநலவாய நாடுகளின் குழு

kamale-shsharma.jpgகடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான மைல்கல்லாக இல்லை.” என கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட பொதுநலவாய நாடுகளின் குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குழுவின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இவ்வறிக்கையில், தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்திருந்தாலும், தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் ஜனநாயக இலக்குகளை அடைவதற்கான ஒன்றான மைல்கல்லாக இல்லை.” எனத் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் இடம்பெற்ற பலசம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் இடம்பெற்றவையே.இவற்றை தேர்தல் ஆணையாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.இவை குறித்து உடனடியாக கவனம்செலுத்தப்பட வேண்டும். கோரிக்கைகள் விடும் பட்சத்தில் பொதுநலவாய நாடுகளின் ஒன்றியம் இவ்விடயத்தில் உதவ தயாராகவுள்ளது எனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளிர்கு முறையான நிர்வாக ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையாளரும் தேர்தல் உத்தியோகத்தர்களும் வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான ஒழுங்குமுறைகளை சீராகச் செய்திருந்ததாகவும் கமலேஷ் கான் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உல்லாசப் பயணத்துறையின் எதிர்காலம் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Jaffna_Mayorதமிழ் பிரதேசங்களின் மீள் புனரமைப்பு முன்னேற்றம் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு குறித்து 12.01.2010 அன்று உயர்மட்ட மாநாடு யாழ். புல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ மற்றும் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Shanmugalingam_Profபேராசிரியர் என் சண்முகலிங்கன், பேராசிரியர் எஸ் சத்தியசீலன், கலாநிதி நொயல் நடேசன் (அவுஸ்திரேலியா), கலாநிதி என் நரேந்திரன் (அவுஸ்திரேலியா), பேராசிரியர் எம் சின்னத்தம்பி, திரு ரி கொன்ஸ்ரன்ரைன் (ஜக்கிய இராட்சியம்), திரு எம் இராமதாசன், பேராசிரியர் வி பி சிவநாதன் ஆகியோர் விஷேட உரைகளை ஆற்றினர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் உல்லாச விடுதிகள் பயணத்துறை தொடர்பாக ரி கொன்ஸ்ரன்ரைனின் உரையும் அதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் www.dailymirror.lk/print/index.php/opinion1/3405

Jaffna_Univercity_Templeவடக்கு கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத் துறையையும் அதனை சந்தைப்படுத்தும் விதி முறைகளையும் எடுத்துக் கொண்டால் அவை வடக்கு மாகாணம் அல்லது கிழக்கு மாகாணம் அல்லது வட-கிழக்கு மாகாணம் என்று ஒரு தனி அலகாகப் பிரித்தெடுத்து சந்தைப்படுத்தவோ இயக்கவோ முடியாது. அதற்குரிய பாரிய தனிப்பட்ட சந்தை இல்லை என்பதே எனது அபிப்பிராயம். எனவே உல்லாசப் பயணத்துறையைப் பொறுத்தவரை தமிழ்ப் பிரதேசங்களின் வியாபாரத் திட்டங்கள் சந்தைப்படுத்தும் திட்டங்கள் முழுவதும் முழுமையான சிறீலங்காவையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

கடந்த வருடம் மட்டும் சிறீலங்காவிற்கு வருகைதந்த உல்லாசப் பயணிகளின் தொகை 439 000 ஆக இருந்தது. சிறீலங்காவின் உல்லாசப் பயணத்துறை வரலாற்றில் 2004ம் ஆண்டே அதிகமான உல்லாசப் பயணிகள் வருகை தந்தனர். இத்தொகை 5666 202 ஆக இருந்தது. இதன்மூலம் 2004ம் ஆண்டு நாட்டிற்கு 416 மில்லியன் USடொலர்கள் வருவாயாகக் கிடைத்தது.

அத்துடன் 2004ம் ஆண்டு 112 000 பேர் உல்லாசப் பயணத்துறை தொடர்பான தொழில்வாய்ப்பை பெற்றிருந்தனர். இலங்கை உல்லாசப் பயணத்துறை அமைச்சின் திட்டத்தின்படி 2011ம் ஆண்டு 2.5 மில்லியன் உல்லாசப் பயணிகள் நாட்டிற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இக்கணிப்பு எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்றொரு கேள்வி எழுகின்றபோதிலும் World Tourist Organisation போன்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் கணிப்பின்படி சிறீலங்காவின் பயணத்துறை பெரிய வளர்ச்சியை வருங்காலங்களில் அடையும் என திட்டவட்டமாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதாவது ஒரு விடயத்தை நாம் சந்தைப் படுத்தும்போது அல்லது தூரநோக்கான வழிமுறைத் திட்டங்களை வகுக்கும்போது அதன் பலம் – பலவீனங்களை ஆராய்வது முக்கிய விடயமாக அமைகின்றது. உலகிலுள்ள பல நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறீலங்காவிற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.

North_and_Eastசிறீலங்கா தனது 65 525 சதுர கிலோமீற்ரர் குறுகிய நிலப்பரப்பினுள் சகலவிதமான இயற்கை வழங்களையும் வெப்ப நிலைகளையும் உள்ளடக்கி இருக்கின்றது. மலைப்பிரதேசம், குளிர் பிரதேசம், உலர் பிரதேசம், வனவிலங்குகள் பிரதேசம், மலைப்பிரதேசம், காடுகள், சிற்ப ஓவியங்கள், இயற்கைக் காட்சிகள், குளங்கள், ஆறுகள் என பல தரப்பட்ட வித்தியாசமான விடயங்களை ஒரு குறுகிய நிலப்பரப்பினுள் உள்வாங்கி அமைந்துள்ளது. எனவே வடகிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறை வியாபார சந்தைப்படுத்தும் அணுகுமுறைகள் சகல விடயங்களையும் உள்வாங்கி அதன் சிறப்புக்களை ஒட்டுமொத்தமாக பிரதிபலிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சந்தைப்படுத்துதல் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. சிறீலங்காவின் உல்லாசப் பயணத்துறை படத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணம் ஒரு பெரிய வெற்றிடமாக இருக்கின்றது. இக்கால கட்டத்தில் இச்சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பிற்கும் உல்லாசப் பயணத்துறையை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தமிழ்ப் பிரதேசங்களின் கலை, கலாச்சாரம், இயற்கைக் காட்சிகளை மையப்படுத்தி அதற்குரிய நிகழ்ச்சிகள் திட்டமிட்டு அமைக்கப்படல் வேண்டும்.

சிங்களப் பிரதேசங்களின் உல்லாசப் பயணத்துறை 1966ம் ஆண்டிலிருந்து திட்டமிட்ட முறையில் முன்னேற்றப் பட்டுள்ளது. எசல பெரகரா, Navam Perhera, Kelenyia Duruthu Perhera, New Year Celebration, Vesak, Sri Lanka Pilgremade, போயா தினங்கள் உலக உல்லாசப் பயணத்துறை சந்தைகளில் முதன்மை படுத்திக்கொண்டன.

சிறீலங்காவின் ஏனைய பிரதேசங்களைப்போல வடக்கு கிழக்கு மாகாணமும் உல்லாசப் பயணத்துறையில் ஒரு முக்கிய இடமாக திகழ இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது: புலம்பெயர்ந்த தமிழர்களில் அதிலும் குறிப்பாக இரண்டாவது தலைமுறை தமிழர்களின் பிரயாணமும் அதன் மூலமாக உள்வாங்கப்படும் அந்நிய செலவாணியும்.

இரண்டாவது: இன்று சிறீலங்காவின் அதிகூடிய உல்லாசப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தருகின்றனர். எனவே இந்திய உல்லாசப் பயணிகளை தமிழ்ப் பிரதேசங்களுக்கு வரவழைப்பதற்கு வரலாறு ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அதிக வழிமுறைகள் இருக்கின்றன.

தமிழ்ப் பிரதேசங்களின் உல்லாசப்பயண வளர்ச்சியைப் பொறுத்தவரை இப்பகுதியின் அரசியல்வாதிகளும் கல்விமான்களும் ஆரம்பத்திலேயே இருந்து மத்தியுடன் முழுமையாகப் பங்கெடுத்து இப்பிதேசங்கள் சர்வதேச சந்தையில் முக்கியப்படுத்த அரசிற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். எமது பிரதேசங்களின் இயற்கை வளங்கள் இயற்கைக் காட்சிகள் எம்மவருக்குத்தான் அதிகம் தெரியும்.

இன்று சிறீலங்காவிற்கு வருகை தருபவர்களில் 99.9 வீதமானோர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாகவே நாட்டினுள் வருகின்றனர். அமைச்சின் திட்டத்தின்படி வருகின்ற 6 வருடங்களில் உல்லாசப் பயணிகளின் வருகை 8.2 மடங்காக அதிகரிக்க திட்டங்கள் உள்ளது. இத்திட்டம் யதார்த்தமாகக் கருதுமிடத்து 2.5 மில்லியன் உல்லாசப் பயணிகள் விமானம் ஊடாக மட்டும் நாட்டிற்குள் வரமுடியாது. எனவே கடல் மார்க்கமாக போக்குவரத்துகள் விஸ்தரிப்பது இன்றியமையாது.

கடற்பரப்பிலான போக்குவரத்து விஸ்தரிக்கப்படும் போது முதலில் தமிழ்ப் பிரதேசங்கள்தான் இதன்மூலம் பயனடையப் போகின்றது. இலங்கை ஒரு தீவாக இருக்கின்ற போதிலும் 99.9 வீதமான மக்கள் விமானம் மூலம் நாட்டிற்குள் வருவது வழமைக்கு மாறானது.

இந்த நிலைமை அரசியல் காரணங்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதும் இந்நிலைமை வருங்காலங்களில் மாறுவதற்கு அதிக சந்தர்ப்பம் இருப்பதையும் நாம் முற்றாக உணர வேண்டும்.

உல்லாசப் பயணத்துறையில் உள்ள நன்மைகளை நாம் ஆராயும்போது அதன் பின்னடைவுகளையும் தீமைகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். இன்று சிறுவர்களின் பாலியல் செயற்பாடுகளில் சிறீலங்காவின் பெயர் முன்னிலையில் இருக்கின்றது.

போதைவஸ்து விபச்சாரம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்முறைகள் உலக உல்லாசப் பயணத்துறையின் வளர்ச்சியின் கடுமையான விளைவுகள். சட்டங்கள் ஆயிரம்தான் ஏற்படுத்தினாலும் மக்களின் பூரண ஒத்துழைப்பு இன்றி இவற்றைத் தடுக்க முடியாது.

அண்மையில் வெளிவந்த கணிப்பின்படி சிறீலங்காவில் 10 000க்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவை மூர்க்கத்தனமாகக் கட்டுப்படுத்தப்படல் வேண்டும்.

Tourist_Map_of_SLஎந்தவொரு வளர்ச்சியும் நாட்டு மக்களின் சுபீட்சத்திற்கு வழிசமைக்க வேண்டுமே தவிர அந்த நாட்டில் அரசியல் பொருளாதார நிலைமையை தகாத முறையில் பாவிக்க இடமளிக்கக் கூடாது. இவ்வாறான குற்றச் செயல்கள் பல நாடுகளை தொடர்புபடுத்தி கூட்டாக செயற்படுவதினால் இவற்றைத் தடுப்பதிலும் நாம் ஏனைய நாடுகளுடன் கூட்டாக செயற்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்வதில் இங்கு தொடர்ச்சியாக வாழ்ந்த மக்களுக்குத்தான் பூரண உரிமை இருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்த பணத்தை முதலீடு செய்பவர்கள் இங்குள்ள சட்ட திட்டங்களுக்கும் வழிமுறைகளுக்கும் அமைவாகவே செயற்பட வேண்டுமே தவிர பொருளாதாரத்தின் பலத்தால் அவர்கள் முதன்மை அடையக்கூடாது. எனவே இங்கு வாழும் மக்களும் அதன் கல்விமான்களும் உத்தியோகத்தர்களும் அரசியல்வாதிகளும் கூட்டாக அமைக்கும் திட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களான நாம் எமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

வட்டுக்கோட்டை தீர்மான மீள்ளுறுதி (re-validation) வாக்கெடுப்பும், நாடு கடந்த அரசும் : எஸ் ஆர் எம் நிஸ்தார்

vaddukoddai_referendumவட்டுக்கோட்டை தீர்மானம் என்பது இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் இணைத்து அதில் வாழும் தமிழர்களுக்கு இறைமை கொண்ட ஒரு தனி ஆட்சி பிரதேசத்தை தமிழீழமாக உருவாக்குவதாகும். அதேபோல் புலிகளின் தமிழ் ஈழத்திற்கான கடைசி ஆயுத போராட்ட பரிசோதனை 18 மே இல் தோல்வியில் முடிய ஆரம்பிக்கப்பட்டதே நாடு கடந்த தமிழ்ஈழ அரசு எனும் அஹிம்சை போராட்ட பரிசோதனையாகும்.

நாடுகடந்த அரசு/தஞ்ச அரசு/புகலிட அரசு என்பதை Government in Exile என்று ஆங்கிலத்தில் கூறுவர். ஆனால் அத்தகைய அரசுக்கான வியாக்கியானம் புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற(?) தேர்தல் மூலம் ஏற்படுத்தப்போகும் நாடு கடந்த அரசுக்கு (Transnational Government) கொடுக்கும் வியாக்கியானத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதும், பின்னய அரசு இதுவரை எங்கும் இல்லாத ஒரு பரிசோதனை என்பதும் நோக்கப்பட வேண்டியவை.

இதைவிடவும் புலன் பெயர் நாடுகளில் பேசப்படும் நாடு கடந்த அரசு தொடர்பாக ஏற்பட்டுள்ள தெளிவின்மையை ஒரு பக்கம் வைத்து விட்டு அத்தகைய அரசு ஒன்றிற்கு அடித்தளமாக அமைந்துள்ள வட்டுக்கோட்டை தீர்மானம் பக்கம் நம் பார்வையை முதலில் செலுத்துவோமானால் அதிலும் பல தெளிவின்மை காணப்படுவதை காணலாம்.

இந்த வகையில் வட்டுக்கோட்டை தீர்மான மீளுறுதி வாக்கெடுப்பின் அடுத்தகட்ட நடவடிகை என்ன என்பது அதன் ஏற்பாட்டாளர்களுக்கே தெரியாமல் இருக்கும்போது அல்லது இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும்போது, இது நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான முன்முயற்சி என்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது. எனவே இவை இரண்டையும் ஒப்பிட்டு அவற்றின் தெளிவின்மைகளையும் கூடவே அதனோடு பிணைந்துள்ள ஏனைய விடயங்களையும் பார்க்க வேண்டியது இங்கு அவசியமாகின்றது.

இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது பிரிந்து செல்லும் விருப்பத்தை வெளியிடுவதும், இந்த நாடுகடந்த அரசு அந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையை கொண்டதும் முதல் விடயம். வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தெளிவின்மை இரண்டாம் விடயம். நாடு கடந்த அரசை அமைப்பதற்கான செயற்குழு வெளியிட்டுள்ள விளக்கக்கோவை மூன்றாம் விடயம். வடக்கும், கிழக்கும் இணைந்த பிரதேசமாக இருக்க வடக்கு, கிழக்கு மக்களின் விருப்பு என்ன என்பதை உறுதிபடுத்த எந்தவித முனைப்புகளும் இதுவரை எடுக்கப்படவில்லை, இது நான்காம் விடயம். அப்படி இணைய விரும்பினும் அந்த பிரதேசம் இலங்கையில் இருந்து பிரிந்து செல்லும் தனி நாடாக கொள்வதா இல்லையா என்பது ஐந்தாவது விடயம். நாட்டில் உள்ள தமிழ் அரசியல் (மொத்த வியாபாரிகள்) வாதிகளுக்கும், புலம் பெயர் நாடுகளில் அரசியல் (பெட்டிக்கடை) நடத்துபவர்களுக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் ஆறாவது விடயம். இலங்கை இறையாண்மையை ஏற்று 26ந் திகதி ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், அதே நேரம் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னும் பின்னும் இலங்கை இறையாண்மையை ஏற்காமல் பிரிந்து செல்ல வெளிநாட்டில் வாழும் தமிழரிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்புகள் ஏழாவது விடயம், இப்படி முற்றுபெறாத பட்டியல் ஒன்று உள்ள நிலையில், மேற்சொன்ன விடயங்கள் வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு ஏற்பாட்டுக் குழுவினருக்கும், நாடு கடந்த தமிழீழ அரசின் அமைப்பாளர்களுக்கும் முன்னுள்ள விடைதெரியாத கேள்விகளும் கூட.

முதலில் வட்டுக்கோட்டை தீர்மானதை எடுத்துக்கொண்டால் அதில் “தமிழர்” என்ற பதம் “தமிழ் பேசுவோர்”, அதாவது தமிழ் பேசும் “தமிழர்”ரும், தமிழ் பேசும் “சோனகர்”( சமய ரிதியில் 99% முஸ்லீம்கள்)களும் என்று பொருள் கொடுப்பதாக கொள்ள முடியாதுள்ளது. காரணம் 1977 பொது தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி (T.U.L.F) 19 தொகுதிகளில் வெற்றி பெற தமிழர் விடுதலை கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்ட முஸ்லிம் ஐக்கிய முன்னணி 4 தொகுதிகளில் தோல்வி கண்டது. இந்த 4 தொகுதிகளிலும் முஸ்லிம் வாக்காளர்களே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தும் முஸ்லிம் ஐக்கிய முன்னணியை தோற்கடித்தனர். ஆதாவது தமிழீழ கோரிக்கையை நிராகரித்தனர். காரணம் இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் அவர்களை பற்றி பேசவில்லை என்பதனாலேயே. அத்துடன் இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் பேசுவோருக்கே என்றால் நான்கு தொகுதிகளில் முஸ்லீம் ஐக்கிய முன்னணி தனியாக போட்டியிட்டிருக்கத் தேவையுமில்லை என்பதையும் அவதானிக்க வேண்டும்.

மேலும் மேலே சொன்னது போன்று “தமிழ் ஈழம்” என்ற (கற்பனை) பிரதேசத்துக்குள் வாழும் சோனகர் இனம், தமிழரின் பிரிந்து செல்லும் கருத்தை நிராகரிக்க தமிழருக்கும், சோனகர்களுக்கும் இடையே அரசியல் ரீதியான விரிசல் மெல்ல ஏற்பட தொடங்கியது. பிற்பட்ட காலத்தில் சோனகர் மீதான தமிழ் புலிகளின் தொடர்ச்சியான அடாவடித்தனம், உதாரணமாக 1990 காத்தாங்குடி பள்ளிவாசல் படுகொலை, அதே ஆண்டின் சோனகருக்கெதிரான இன சுத்திகரிப்பு, அதன் பின்னான நில ஆக்கிரமிப்பு அதன் அடிப்படையில் கிழக்கில் உருவான முஸ்லிம் ஆயுதகுழு போன்ற நிலமைகள் தமிழ், சோனகர் இடையிலான அரசியலில் விரிசலை மேலும் கூர்மைப்படுத்தி 2003ம் ஆண்டில் தென் கிழக்கு பல்கலைகழகத்தில் செய்யப்பட்ட “ஒலுவில் தீர்மானம்” (இது ஏட்டிக்குப்போட்டி என்பது வேறு விடயம்) வரை சென்றது.

போதாக்குறையாக, புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ( ISGA ) பிரேரணையில் சோனகர் முற்றாக நிராகரிக்கப்பட்டமை, சுனாமிக்குப் பின்னான மீள்கட்டுமான ஒப்பந்தத்தில் ( P-TOM ) புலிகளினால் சோனகர் ஓரங்கட்டப்பட்டமை என்ற புலிகளின் திட்டமிட்ட செயற்பாடுகள் சோனகர்களை தமிழ் அரசியலில் இருந்து மேலும் தூரப்படுத்தியது.

இருப்பினும் கடைசி கட்ட போரட்ட காலத்தில் சண்டையிட்ட இரு தரப்பினராலும் பலியிடப்பட்ட தமிழர் தொடர்பாக சோனகர் மட்டில்லா கவலையும், மீதமிருந்த தமிழர் தொடர்பாக கருணையுடன் கூடிய பொறுப்புணர்வுடன் நடந்தமை, தம் மீதான புலிகளின் கடந்த கால மிலேச்சத்தனதை தற்காலிகமாக மறந்தமையையும், தாம் தழிழருக்கு எதிர்ப்பானவர் அல்லர் என்பதையும் காட்டுகின்றது. ஆனாலும் தமது அரசியல் உரிமை, இருப்புரிமை என்ற கேள்விகள் எழும்போது மறந்த விடயங்களை மீட்டிப்பார்ப்பதும், அதை நிகழ்கால, எதிர்கால அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் அந்த அடிப்படையில் தமது அரசியல் போக்கை தீர்மானிப்பதும் அவர்களுக்குள்ள ஜனநாயக உரிமை. அதை அவர்கள் கைவிடவேண்டும் என எதிர்பார்ப்பது அவர்கள் உரிமையில் தலையிடுவதான முயற்சி.

எனவே, வடக்கும், கிழக்கும் இணைந்த நிலப்பரப்பு சம்பந்தமாக பேசப்படும்போது அல்லது ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது அந்நிலத்தில் வாழும் சோனகர்களை கவனத்தில் எடுக்காது விடுவதென்பது, சிங்கள அரசு தமிழரை இரண்டாந்தர பிரஜைகளாக அல்லது அவர்கள் இலங்கையரே இல்லை என்ற ரீதியில் அரசியல் நடத்தியதை ஒத்த செயலாகும். உரிமை மறுப்பாகும்.

ஆகவே உத்தேச தமிழீழ பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மக்களிடம், சுமார் 35 வருடங்களின் பின், அதாவது ஒரு தலை முறை இடைவெளிக்குப்பின், வாக்கெடுப்பு நடத்தாமல் வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசும் வெளி நாட்டாரிடமும், இனி வெளிநாட்டாராகப் போகும் தமிழரிடையேயும் நடத்ப்படும் வாக்கெடுப்பு அங்கு வாழும் மக்களின் அரசியல் அபிலாசையை பிரதிபலிக்காது. அந்த மக்கள் இன்னும் பிரிவினையை வரவேற்கிறார்களா என்பது பற்றி சிறிதும் அக்கறைப்படாமல் அவசர அவசரமாக வெளிநாடுகளில் தேர்தல் வைப்பதென்பது விழைவுகளை பற்றி அக்கறைப்படாத விடயமாகவே படுகின்றது.

அடுத்து இந்த நாடு கடந்த தமிழீழ அரசிற்கான விளக்கக் கோவை. இந்த விளக்கக்கோவையில் சுமார் 60 முறைகள் தமிழர், தமிழ் மக்கள், ஈழத்தமிழர் என்ற பதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதைவிட அதிலுள்ள பின்வரும் கூற்றும் சற்று கவனிக்கத்தக்கது. அதாவது, ” தமிழரிடையே மட்டுமன்றி தமது நாடுகளில் உள்ள பொதுச் சமூகத்தின் ( Civil Society) ஆதரவையும் இவ்வரசை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். மேலும் தத்தமது நாடுகளின் அரசியல் தலைவர்களதும் அரசுகளதும் ஆதரவை இந் நாடுகடந்த அரசு அமைக்கும் முயற்சிக்கும் திரட்டும் செயற்பாடுகளிலும் இச் செயற்குழு ஈடுபடும். இஸ்லாமியர்கள், இந்திய அறிவாளிகள் ஆகியோரை உள்வாங்கி மதியுரை குழு விரிவுபடுத்தப்படும். முழு விளக்க கோவையிலும் ஒரே ஒரு தடவையே “இஸ்லாமியர்” என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. அதுவும் வெளிநாட்டில் உள்ள இஸ்லாமியரையே இது சுட்டுகின்றது என்பதில் எந்த குழப்பமும் இல்லை. ஆகவே உத்தேச தமிழீழத்தில் அந்த பிரதேசத்தின் உரித்தாளர்களில் ஒரு பகுதியினர் முற்றாக புறக்கணிக்கப் பட்டுள்ளனர். மேலும் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் சேர்க்கப்பட்டு, பின் நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இந்த பிரதேசம் இனி சட்டத்துக்கு புறம்பான முறையில் இணைக்க அதன் ஒரு பகுதி மக்களை புறந்தள்ளியும், மற்றைய பகுதிக்கு அவர்களின் அனுமதி இல்லாமலே பினாமி(proxy) வாக்கு போட்டும் நடத்தப்படும் மீள்ளுறுதி வாக்கெடுப்பு எந்த நாட்டு சட்டத்துக்குட்பட்டது என்பதை அறிய முடியாதுள்ளது.

இந்த நாடுகடந்த அரசு சர்வதேச சட்டத்துக்கு (International Law) தெரியாத விடயம். சர்வதேச சட்ட பரபிற்குள் இந்த அரசு வரவில்லை என்பதற்காக நடைமுறையில் இருக்கும் சட்ட ஏற்பாடுகளை, உள்ளூர், சர்வதேச சட்டவிதி முறைகளை மீறமுடியும் என்ற பொருளுமில்லை. எனவே அரசியல் அறிவு சற்று குறைந்தவர்களுக்கும், சட்டத் துறையில் அனுபவம் இல்லாதோருக்கும் இதுபற்றி விளக்க வேண்டியது இந்த அமைப்பாளர்களின் தலையாய கடமை. ஏனெனில் இதுவரை காலமும் வெளிப்படைத் தன்மையில்லாத அரசியலில் அடைந்தது ஏமாற்றமும், தோல்வியுமே. இனியும் இருட்டறை அரசியல் நடத்த யாரும் அனுமதிக்கப்படலாகாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த சிறுபான்மையினரும் பகிஸ்கரித்திருந்தால் அதை பிரிந்து போவதற்கான ஒரு சமிக்ஞையாக கொண்டிருக்க இடமிருந்திருக்கும். இந்த வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு பரப்புரை ஊடகங்கள் ஜனாதிபதி தேர்தலில் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதிலாக (சொல்லி இருந்தாலும் மக்கள் கேட்டிருப்பார்கள் என்பது சந்தேகமே), சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிக்கத் தூண்டிய அதே நேரத்தில் வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடாத்தியது ஒன்றுடன் ஒன்று ஒட்டிச் செல்லாத இரண்டு விடயங்கள். எனவே இந்த வட்டுக்கோட்டை தீர்மான மீள்வாக்கெடுப்பு ஏற்பாட்டுக் குழு இதற்கு விளக்கமளிக்க வேண்டும்.

மே 18 க்கு பின் TNA இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேற்பாளரை ஆதரித்தது. மறு புறத்தில் TNAயில் இருந்து பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டார் ஒருவர். இந்த இரு பிரிவினரும் அடுத்த பொதுத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டனர். இனியும் அப்படித்தான் செயல்படப் போகிறார்கள். அவர்களின் அரசியல் வியாபாரத்துக்கு அதுதான் ஒத்துப்போகும் வழி. இதைவிடவும் கிழக்கில் கருணா, பிள்ளையான் என்ற இரண்டு சக்திகள் மீதமுள்ள தமிழருடன் ஒன்றிணைவர் என்பதும் பகற்கனவு. எதிர்வரும் பொதுத் தேர்தலில் TNAயும் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செயல்படப் போவதாக சொல்லப்படுகின்றது. என்ன அடிப்படையில் இந்த இணைவு என்பது இதுவரை சொல்லப்படவில்லை. இதை விடவும் டக்ளஸ் தேவானந்தா, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாக்கும் அரசியலில் அனுபவம் இல்லாத புது முகங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்க இருக்கின்றனர். இந்த நிலைமைகள் எல்லாம் எப்படி வட்டுக்கோட்டை தீர்மானத்துடன் அல்லது நாடுகடந்த அரசுடன் ஒத்துப்போகும் என்பது புரியாத புதிர்.

மேலுள்ள விடயங்களை நோக்கும் போது இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான மீள் உறுதி வாக்கெடுப்பானது எமக்கு “இசையணி தேர்வு” ஒன்றையே ஞாபமூட்டுகிறது. இதற்கும் அப்பால் சென்றால், இது தமிழ் பாடசாலை நிர்வாக குழு தேர்தல் போன்றது. அதையும் தாண்டிச் சென்றால் ஒரு கோயில் நிர்வாக குழு தேர்தலுக்கு ஒப்பானது. அதையும் தாண்டினால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றுக்கு ஒப்பானது. இப்படி தமது ஜனநாயக உரிமையை கட்டுப்படுத்தாமல், தமது வாக்களிக்கும் (அடங்கா ஆசையை) உரிமையை ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் காட்ட வெளிக்கிட்டு மூக்குடைந்த நம்மவர் மீண்டும் ஒருமுறை இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்ளிக்க சென்றதை பார்க்கும் போது, அல்லது இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பை பார்த்த வெளிநாட்டு அரசியல்வாதிகளும், ராஜதந்திரிகளும், இலங்கை அரசாங்கம் இந்த வட்டுக்கோட்டை தீர்மான வாக்கெடுப்பு குழுவினரிடம் தான் தேர்தல் ஒன்றை எவ்வாறு நடத்துவதென்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற I.B.C வானொலியின் பிரச்சாரம் மிகவும் ரசிக்கக் கூடிய நகைச் சுவையாகவே எமக்குப்படுகின்றது.

ஆக வடக்கையும், கிழக்கையும் ஒரு இணைந்த பிரதேசமாக கொள்ள அப்பகுதி மக்கள் முதலில் இணைய வேண்டும். அப்படி இணைய வேண்டுமாயின் முதலில் ஒரு தனித்துவமான இனம் அதன் “சோனகர்” என்ற இனப்பெயரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அந்த இனத்துக்கு “தமிழ் பேசும் இஸ்லாமியர்” அல்லது “தமிழ் பேசும் முஸ்லீம்” அல்லது கலாச்சார குழு என்றெல்லாம் பெயர் சூட்டி அல்லது அவர்களும் “தமிழர்” என்ற வசதி கருதிய அரசியல் கழுத்தறுப்புக்கு இடமளிக்கக் கூடாது. இது தமிழ் தரப்பால் தனியே செய்யப்பட்டாலும் சரி முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உடன்பாட்டால் செய்யப்பட்டாலும் சரி இது மொத்த தமிழ் பேசுவோராலும் நிராகரிக்க வேண்டும். இந்த இரண்டு இனங்களுக்கும் இடையே அரசியல் ரீதியான ஒருமைப்பாடு ஏற்பட வேண்டுமாயின் அது முதலில் ஒரு குறைந்தபட்ச புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான வேலைதிட்டம் ஒன்றினால்தான் முடியும் என்பது எனது நிலைப்பாடு. அதுவரையும் இந்த வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு, நாடு கடந்த அரசு என்ற (விளையாட்டு)விடயங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை.

“ஆய்போவாங்…… யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது” : ரி கொன்ஸ்ரன்ரைன்

யாழ்கோட்டைக்கு அருகாமையில் ஆழ்ந்த உறக்கத்திலுள்ள இராணுவம்30 வருட ஆயுதப் போராட்டமும் அதனுடன்கூடிய விடுதலைப் புலிகளின் ‘DisneyLand’ கனவும் ஒட்டுமொத்தமாக மண்கௌவிய நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஏதோ எஞ்சி இருந்தவற்றை சுதாகரித்துக்கொண்டு முன்னேறத் துடிக்கின்றது.

வடக்கு மாகாணத்துக்கு சிங்கள மக்கள் பஸ்வாரியாக படையெடுக்கின்றனர். பண்ணைப் பாலம் முழுவதும் சிங்களப் பகுதிகளில் இருந்துவரும் உல்லாசப் பயணிகளின் பஸ் வண்டிகள் ஆக்கிரமித்து நிக்கின்றன. மக்கள் வெட்டவெளிகளில் தாம் கொண்டுவந்த உணவை நிலத்தில் இருந்து புசிக்கின்றனர். இராணுவ காப்பரண்களில் துப்பாக்கிகளை வைத்துவிட்டு இராணுவத்தினர் நித்திரை கொள்கின்றனர். பாண் பேக்கரி வைத்திருக்கும் சிங்களக் குடும்பத்தைத் தவிர எதுவித சிங்கள குடிசன வாடையே இல்லாத பண்டத்தரிப்பு, சில்லாலை, சண்டிலிப்பாய்ப் பகுதிகளில் இரவில் பலர் சிங்களத்தில் கதைத்துக் கொண்டு திரிகின்றனர்.

ஊர்காவற்துறை, பண்டத்தரிப்பு மதுபானக் கடைகள் சிங்களவர்களால் நடாத்தப்படுகின்றது. வீதி வீதியாக சிங்கள வியாபாரிகள் பிளாஸ்ரிக் கதிரைகளையும் ஏனைய சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். வீதிகளில் நிற்கும் இராணுவமும் பொலிசாரும் தங்களின்பாடு. ஏறக்குறைய நூற்றுக்கு நூறுவீதமான காவற்படையினர் சிங்கள அல்லது முஸ்லிம் இனத்தவர்.

Advertising_in_Jaffnaமுழத்திற்கு முழம் காவற்படையினரை வைத்துக்கொண்டு நாடு எப்படி முன்னேறப் போகின்றது என்பது ஒருபுறம் இருக்க இந்த “சிங்கள ஆக்கிரமிப்பை” யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. 1980களில் நான் கண்ட யாழ்ப்பாணத்தை இன்று துளிகூட காணமுடியவில்லை. ஆயுதப் போராட்டம் என்பது ஒட்டுமொத்தமாக ஒரு தூஷண வார்த்தைபோல் உணரப்படுகின்றது. 1980ம் ஆண்டுகளில் நாங்கள் தொடங்கியதுபோல், மடியில் கைக்குண்டுடன் திரிந்து கிராமங்களில் அரசியல் வகுப்புக்கள் நடாத்தினால் மக்களே எம்மைக் கௌவிப் பிடித்து அடியும் போட்டு இராணுவத்திடம் கையளிப்பார்கள் என்பதில் எனக்கு எதுவித சந்தேகமும் இல்லை. இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் உண்மை நிலைமை. சுருக்கமாகக் கூறின் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” நிலைமை.

A9 பாதையூடாக யாழ் செல்லும் பஸ் வண்டிகள் பல இடங்களில் இருந்து புறப்படுகின்றன. ஒருவழிக் கட்டணமாக 1000 ரூபாய்கள் தொடக்கம் 2150 ரூபாய்வரை அறவிடப் படுகின்றது. ‘வடக்கின் நாதம்’ என பெயரிடப்பட்ட பஸ் வண்டிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காரியாலயத்திற்கு முன்பாக புறப்படுகின்றது. ’வடக்கின் நாதம்’ பஸ்சேவை அமைச்சர் டக்ளஸ்சின் சகோதரனிற்கு உரித்தானது என பலராலும் பேசப் படுகின்றது. இவ் பஸ்சேவை ‘வடக்கின் நாதம்’ என்பதைத் தவிர்த்து ‘டக்ளஸ்சின் பஸ்’ என மக்களால் பெயர் சூட்டப் பட்டுள்ளது. ‘டக்ளஸ்சின் பஸ்’ஸில் போனால் ”செக்கிங்” குறைவு என்று பரவலான நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் நிலைமை அப்படியில்லை. நான் 2150 ரூபாய் கட்டி டக்ளஸ்சின் பஸ்சிலும் சென்றேன். மறுதடவை 800 ரூபாயோடு ஒரு சிறிய ‘தட்டி வான்’ ஒன்றிலும் சென்றேன். இராணுவத்தின் கெடுபிடி ஒன்றிலும் இருக்கவில்லை.

விளம்பரங்கள் தெரிவிப்பது போல் இந்த பஸ் வண்டிகள் சொகுசு வாகனங்கள் அல்ல. 30 வருடங்களுக்கு முன் யாழ்-கொழும்பு சேவையில் ஈடுபட்ட K G குணரத்தினத்தின் வாகனங்கள் நூறு மடங்கு உயர்த்தியானது. பஸ் உள்ளே A/C யும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. வெளிச்சமும் இல்லை. 2000 ரூபாய்க்கு யாழ்ப்பாணம் போகவும் வேண்டும் அதேநேரம் பஸ்சில் குமாரி பத்மினியின் ஆட்டமும் வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அதை விடுவோம்.

குறிப்பிட்டபடி இரவு 11 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் அதிகாலை 1.30 மணியளவில் புத்தளம் வந்தடைகிறது. ஓமந்தையில் சகலரும் பஸ்சிலிருந்து இறக்கப்பட்டு உடல்கள் முழுமையாக சோதிக்கப்படுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனியான அறைகளில் ஒவ்வொருவராக தனித்தனியாக உடற் பரிசோதனை செய்யப்படுகிறது. அவயவங்கள்கூட கைகளால் அமத்திப் பார்க்கப் படுகின்றது. இந்த சோதிப்பு எனக்கு மாத்திரம் விஷேடமாக தரப்பட்டது என்றுதான் முதலில் எண்ணி பெருமை கொண்டேன். பஸ்ஸில் ஏறிய போதுதான் அனைவருக்கும் அந்த அனுபவம் கிடைத்ததாக அறிந்தேன். கையில் கொண்டு சென்ற பைகள் மட்டும் சாதாரணமாக சோதனை செய்யப்பட்டது. ஒருவரினதும் உடமைகள் கொட்டியோ கிளறியோ சோதனை செய்யப் படவில்லை. கடமையில் இருந்த இராணுவத்தினர் மிகவும் பொறுப்புடனும் மரியாதையுடனும் தமது கடமையைப் புரிந்தனர்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி (MOD) இல்லாமல் பிறப்பிடம் இலங்கையாக இல்லாதவர் எவரும் வடமாகாணத்திற்குள் அனுமதிக்கப் படுவதில்லை. எனக்குத் தெரிந்த டென்மார்க்கைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்பெண் ஓமந்தையில் வைத்து (25.01.10) அவரை திருப்பி கொழும்பிற்கு அனுப்பி விட்டார்கள்.

Jaffna_RoadA9 பாதை கடும் பள்ளம் திட்டியான ஒற்றைப் பாதையாக இருந்தது. பெருவாரியான மதகுகள் பாலங்கள் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சில இடங்களில் இராணுவத்தினர் சுத்திகரிப்பு வேலைகள் செய்து கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பெருமளவில் இராணுவமும் பொலிசும் கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஏ9 பாதையில் புத்தர் அனாதரவாக தனிமையில் குந்திக் கொண்டிருந்தார்.

20 வருசத்திற்கு முதல் குடிபெயர்ந்த நாங்களே ஈஸ்ற்ஹாமிலும் ரூற்றிங்கிலும் அரை அம்மணத்துடன் நின்று தேங்காயும் உடைக்கலாம் நடுரோட்டில் நின்று கூத்தும் ஆடலாம் ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு வந்த சிங்களவர்கள் ஒரு கல்லை வைத்து அதை புத்தர் என்றால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையோ?

முன்னர்போல் முறிகண்டி கோவிலடியில் பலர் தரிசித்துக் கொண்டிருந்தார்கள்.

காலை 7.15 மணிக்கு பஸ் கிளிநொச்சியை அடைகிறது. சந்தி பொந்தெல்லாம் ராஜபக்ச சிரித்த முகத்துடன் வரவேற்றார். ஜெனரல் பொன்சேகாவின் போஸ்டர் ஒன்றுகூட எனக்குத் தென்படவில்லை. கிளிநொச்சிச் சந்தியில் பெரிய புத்த விகாரை ஒன்றிருந்தது. அருகே பல கோயில்களும் இருந்தது. ஆனையிறவு வாசலில் ‘ஆய்போவாங் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது’ என்ற பெரிய வாசகம் வரவேற்றது. முகமாலை பளை பகுதிகளில் மக்களைவிட இராணுவமே அதிகமாக வீதிகளில் நடமாடினர். சாவகச்சேரிப் பகுதியை அண்மித்ததும் மகிந்த ராஜபச்சேயின் போஸ்டர்களுடன் டக்ளஸ் தேவானந்தாவின் போஸ்டர்களும் தென்பட்டன. பொன்சேகாவின் போஸ்டர்கள் ஒன்றுகூட இருக்கவில்லை.

Jaffna_Clock_Towerஇரவு 11மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் வண்டிகள் காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர வீதியை சென்றடைந்தது. வீதிகள் மிக மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்கள் 20-30- MPH வேகத்திலேயே பிரயாணம் செய்கின்றது. பல இடங்களில் வீதிகள் திருத்தப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணம் ஒரே பாழடைந்த கட்டிடங்களுடன் காணப்படுகின்றது. 1980களுடன் ஒப்பிடும்போது சன நெருக்கடி கால்வாசிக்குக் குறைவாகவே உள்ளது.

யாழ் மாவட்டத்தில் கள்வரின் நடவடிக்கை அறவே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னைய காலங்களில் குறிப்பாக விடுதலைப் புலிகளின் உதவியாளர்களே பெருமளவில் களவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டிற்கு முன்னால் வைக்கப்படும் பூச்சாடிகள் உட்பட அனைத்தும் களவாடப்படுவது வழமையாக இருந்தது. ஆயுதக் குழுக்கள் அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகளின் வெளியேற்றத்தின் பின் யாழ் மாவட்டத்தில் களவுகள் இல்லாமல் போய்விட்டதாக பலராலும் தெரிவிக்கப்பட்டது. – களவு, கப்பம், வரி – புலிகளின் இந்த சமூகவிரோத செயல்களினால் மக்கள் விடுதலைப் போராட்டத்தை அறவே வெறுத்து நிற்கின்றனர். முச்சக்கர வண்டி ஓட்டுனர் தொடக்கம் விவசாயி, வியாபாரி உட்பட சகலரினதும் பொதுவான அபிப்பிராயம் இதுவாகத்தான் இருந்தது.

குடாநாட்டில் விடுதலைப் புலிகளும் சக ஆயுத குழுக்களும் காலத்திற்குக் காலம் செய்த அடாவடித்தனங்களால் பெருவாரியான மக்கள் தமிழ் ஆயுதக் குழுக்களையும் அதனையே அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட அரசியற் கட்சிகளையும் வெறுத்தே நிற்கின்றனர். 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு இருந்ததைப் போல் “ஆகா..ஓகோ..” என்ற வரவேற்பு எந்த தமிழ் கட்சிகளுக்கும் இல்லை

ஊர்காவற்துறையில் ஒரு மீனவக் குடும்பத்துடன் 2 மணித்தியாலங்கள் உணர்ந்த அரசியலை பேப்பர் மற்றும் கீபோட் மார்க்ஸிஸ்ட்டுக்கள் மற்றும் TIC லண்டனில் 10 வருடங்களாக நடாத்தும் அரசியற் கூட்டங்களில் அறிந்ததைவிட செழுமையாக இருந்தது. யதார்த்தமாக இருந்தது. ஊர்காவற்துறை ஏன் டக்ளஸின் EPDP மையப்படுத்தியது. தாங்கள் என்ன காரணத்திற்காக ஈபிடிபியிற்கு வாக்களித்தோம் என்பதை மிகவும் யதார்த்தமாக மீனவ குடும்பத்தினர் விளக்கினர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஈபிடிபி யை ஆதரித்தால் தாங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கலாம், றோட்டு போடுவார்கள் என்ற கருத்தே கேட்கக் கூடியதாக இருந்ததே தவிர ஈபிடிபிதான் மக்களின் சுபீட்சம் டக்ளஸ்தான் எமது தலைவர் என யாரும் தமது நெஞ்சை அடித்துச் சொல்லவில்லை.

Kayts_Boysமக்கள் மிகவும் நொந்துபோய் அடியுண்டு இருக்கிறார்கள். தமிழ் குழுக்களை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்றால் சிங்கள இராணுவத்தின் பிரசன்னம் அவசியம் என்ற கருத்துத் தொனிக்கப் பெரும்பான்மையானவர்கள் பேசுகிறார்கள். “சிங்கள இராணுவம் இல்லாட்டி புலி வந்திடும், பிறகு ஈபிடிபியுடன் அடிபடும். அப்ப ஈபிடிபியுடன் ஆமிக்காரன் இருந்தால்த் தான் எமக்கு பாதுகாப்பு” என்ற கருத்து மேலோங்கி இருக்கின்றதே தவிர ஈபிடிபி கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஒருவர்கூட அடித்துச் சொல்லவில்லை.

வட மாகாணத்தில் அடிமட்டத்திலிருந்து சமூகரீதியாக வளர்ந்த அரசியல் தலைமை இல்லாத காரணத்தினாலும் மற்றும் சகல அரசியற் கட்சிகளும் முன்னைநாள் ஆயுதக் குழுக்களாக இருந்த காரணத்தினாலும் மக்கள் TNA பக்கம் சார்பதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. TNA கட்சியை பிரேமச்சந்திரன் போன்ற முன்னைநாள் ஆயுதக் குழுக்களின் முக்கிய புள்ளிகள் தலைமை வகித்திருந்தால் அதுவும் அடிபட்டுப் போயிருக்கும்.

மீண்டும் இடித்துக்கட்டப்படும் மானிப்பாய் மருதடிப் பிள்ளையார்புலம்பெயர் பக்தர்களின் “நன்கொடையால்” வீதிக்கு வந்துள்ள மருதடிப் பிள்ளையார்.பல கிராமங்களில் ஆலயங்கள் மீள மீள புணரமைக்கப்பட்டு பெருப்பிக்கப படுகிறது. உதாரணமாக மருதடிப் பிள்ளையார் கோவில் அல்லப்பிட்டி முருகன் ஆலயம் இதுகள் ஏன்?? ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என எமது மூதாதையோர் கூறினார்களே தவிர ஆளில்லா ஊரில் ஆலயம் கட்டுங்கள் என்று கூறவில்லையே!!

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி1980 ஆண்டுடன் ஒப்பிடும்போது வடமாகாண மற்றும் தீவுப்பகுதிப் பாடசாலைகள் மிகவும் தரமாக இயங்குகின்றன. கணிசமான நேரத்தை மாதகல் புனித ஜோசப் மகாவித்தியாலயம் மானிப்பாய் இந்துக் கல்லூரி சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி மற்றும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரிகளில் செலவிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அனைத்துப் பாடசாலைகளிலும் வன்னியில் இருந்து புலம்பெயர்ந்த குடும்பங்களின் பாதிப்பு பெருமளவில் தாக்கி இருக்கின்றது.

மாதகல் புனித ஜோசப் மகாவித்தியாலயத்தில் 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் 397 ஆக இருந்த மாணாக்கரின் எண்ணிக்கை இவ்வருட தொடக்கத்தில் 500ஜ எட்டியுள்ளது. 25வீதம் அதிகரிப்பு. இதனால் பாடசாலைக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் வன்னியில் இருந்து புலம் பெயர்ந்த பிள்ளைகள் 38. இவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஒன்றும் இல்லை.

IDP நிலையங்களில் உள்ளவர்களைவிட IDP நிலையங்களில் இருந்து வெளியேறி யாழ் மற்றும் வவுனியாப் பகுதிகளில் இருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவதைப் போலுள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் பலர் மாதகல் தோமையர் வீதி -மாதகலில் சிறு குடிசை போட்டு வாழ்கிறார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.

தாய் தந்தை சகோதரங்களை இழந்து தவிக்கும் மதுசாஇங்கு மதுசா சிவராசா என்ற 9 வயதுச் சிறுமி இருக்கிறாள். தகப்பன் இருக்குமிடம் தெரியாது. சகோதரர்களை காணவில்லை. 25.09.2009 அன்று புதுமாத்தளன் பகுதியிலிருந்து கடலினூடாகப் புறப்பட்டு சாலைப் பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்டு கைதடி அகதிமுகாமில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளாள். மதுசா தற்போது தன்னுடைய தகப்பனின் தகப்பனோடு ஒரு குடிசையில் வாழ்கிறாள். மாதகல் புனித ஜோசப் கல்லூரியில் 5ம் வகுப்புப் படிக்கிறாள். அதேபோல 8 வயதுடைய இன்னொரு சிறுமி இருக்கிறாள். குடும்பத்தில் இவளைத் தவிர அனைவரும் இறந்துவிட்டனர். தற்போது இதே கல்லூரிக்குச் சொந்தமான மடத்தில் வைத்து பராமரிக்கப் படுகிறாள். வன்னியில் நடந்த மனித அவலம் நூறுக்கு அதிகமான மைல்களுக்கு அபபபாலுள்ள மாதகல் கிராமத்தை இவ்வளவு தூரம் தாக்கியுள்ளது.

12 பிள்ளைகளுக்கு உடனடியாக சைக்கிள் உதவி தேவைப்படுகிறது. ஒரு சைக்கிளின் விலை 11 000 ரூபாய் (60 பவுண்கள்). சைக்கிள் இருந்தால் பிள்ளைகளுக்கு மிகவும் உதவியாக இருப்பதுடன் பெற்றோர் வெளிக் கிராமத்திற்குச் சென்று வேலை வாய்ப்பு பெற உதவியாக இருக்கும்.

இவ்வாறு தேவைப்படும் உதவிகளோ எண்ணற்றது. இந்த மக்களை இன்று கைவிட்டுவிட்டு மக்கள் பற்றி காகித அரசியல் பேசுவது யதார்த்தமாகாது. புரட்சிகரக் கனவுகள் மட்டும் மக்களுக்கு சோறுபோடாது.

சீருடையுடன் மானிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்கள்.Computer_Room_MHCமானிப்பாய் இந்துக் கல்லூரி, ஊர்காவற்துறை புனித அந்தோனியார் போன்ற கல்லூரிகளை எடுத்துக்கொண்டால் அவர்களின் நிலை வேறு கட்டத்தில் இருக்கின்றது. வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவ சங்கங்களின் உதவிகளினால் இக்கல்லூரிகள் தாக்குப் பிடித்துள்ளன. இங்குள்ள பழைய மாணவ சங்கங்கள் கணணி பயிற்சி /ITயில் உதவிகள் செய்ய வேண்டும்.

உதாரணமாக 1015 மாணவர்கள் படிக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஒரு ஆசிரியர் பயிற்றுகிறார். இவர் IT மட்டுமல்ல கல்லூரியின் நூலகத்திற்கும் பொறுப்பாக இருக்கிறார். ஆக மொத்தத்தில் இவர் ITயும் படிப்பித்த பாடில்லை நூலகமும் ஒழுங்காக நடத்தவில்லை.

மானிப்பாய் இந்துக் கல்லூரி2005ம் ஆண்டு 430 ஆக இருந்த மானிப்பாய் இந்துக்கல்லூரியின் மாணவர்களின் தொகை இவ்வருடம் 1015ஜ எட்டியுள்ளது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 82 மாணவர்களுக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2004 சமாதானக் காலங்களில் வெளிநாடுகளில் தடல்புடலாக இயங்கிய பழைய மாணவர் சங்கங்கள் தற்போது படுத்து விட்டன. உதவிகள் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை உதவிகள் தொடர்ச்சியாக கிடைக்காத காரணத்தினால் இந்த பழைய மாணவ சங்கங்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மந்தகதியில் இயங்குகின்றன.

இனி தமிழர்கள் ஏதாவது ஒரு அழுத்தத்தை பெரும்பான்மை இனத்திற்கு கொண்டுவர வேண்டுமாக இருந்தால் அதை பொருளாதார ரீதியாகத்தான் கொண்டுவர முடியும். தமிழ் இனம் பிரபாகரனை நம்பி தமது பாரம்பரிய மண்ணையும் அதன் அரைவாசி மக்களையும் நாட்டைவிட்டு துரத்தியதுடன் பலரை மாழ வைத்தது. பின்னர் சம்பந்தனின் கிழட்டு தீர்க்கதரிசனம் பொன்சேகா என்ற நொண்டிக் குதிரைக்குப் பின்னால் ஓட வைத்து சிங்கள பெரும்பான்மையினத்தின் கோபத்துக்கு தமிழினத்தை மேலும் உள்ளாக்கியது. இப்போது புலம் பெயர் வெங்காயங்களின் சிறீலங்காவை புறக்கணிப்போம் கோஷசத்தினால் எமது இனத்திற்கு இருக்கும் கடைசி சந்தர்ப்பத்தையும் பாழாக்க நினைக்கின்றது.

பொதுத் தேர்தல் ஏப்ரல் 8ஆம் திகதி

parliament.jpgபாராளு மன்றம் நேற்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19ம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அடுத்த பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி கூடுகிறது.

புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன்

Sambandan R TNA MPதமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனவர்களுக்கு இம்முறை ஆசனம் வழங்குவதில்லை என லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்ததாக தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. உறவினர் ஒருவரின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்திருந்த ஆர் சம்பந்தனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையினர் பெப்ரவரி 8ல் சந்தித்து உரையாடி உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியிலேயே சில செய்திகளை ஆர் சம்பந்தன் கசியவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட முடியாத இடைவெளி இருப்பதை உணர்ந்த நிலையில் சந்திப்பு நிறைவுபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையில் இருந்த சிலர் விரும்பியிருந்தனர். அதையொட்டியே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளையின் தலைவர் நிக்லஸ்பிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம்சென்ற தளபதி அ அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் எஸ் அரவிந்தன் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியிலேயே போட்டியிடும் என்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பேசுவதிலே அர்த்தமில்லை என ஆர் சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மிதவாதத் தலைவர் என்று குறிப்பிட்ட ஆர் சம்பந்தன் ஆனந்தசங்கரிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு ஆசனத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் வி ஆனந்தசங்கரியுடன் உடன்பட்டு செயற்படுவதற்கு முன்நிபந்தனையாக வி ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான கடுமையான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தது தொடர்பாக தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்த வி ஆனந்தசங்கரி தேர்தல் முடிவுக்குப் பின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததை ஆர் சம்பந்தன் சுட்டிக்காட்டி இருந்தார்.

இச்சந்திப்பின் போது அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட யாருக்கு ஆசனங்கள் வழங்குவது என்பது பற்றியும் சில அபிப்பிராயங்களை ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவாக நின்ற என் சிறிகாந்தா ஆகியோருக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை என்றும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இல்லை என்றும் ஆர் சம்பந்தன் அங்கு கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ளார்.

மற்றுமொரு கேள்விக்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரிஎன்ஏ இல் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்களுக்கு இம்முறை ஆசனங்கள் வழங்க முடியாது என்ற வகையில் கருத்துத் தெரிவித்து இருந்தார். ரிஎன்ஏ ஆசனங்களுக்கு தகுதி அடிப்படையைக் கொண்டு வருவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்களை ஓரம்கட்டலாம் என்ற வகையிலும் அவருடைய கருத்துக்கள் அமைந்திருந்தது. குறிப்பாக சட்டத்தரணிகள், பொறுப்பான தொழில் தகுதியைக் கொண்டவர்கள், ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் வழங்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள் ஓரம்கட்டப்படுவர் என்ற வகையிலேயே ஆர் சம்பந்தனின் கருத்துக்கள் இருந்தது என தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள்:
தமிழர் விடுதலைக் கூட்டணி: இரா சம்பந்தன், (திருகோணமலை) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்)
ஈபிஆர்எல்எப்(சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி (வன்னி)
ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்)
தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)
இவர்கள் ஒன்பது பேரையும் தவிர ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள்: சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி (சம்பந்தர் அணி), ஈபிஆர்எல்எல் (சுரேஸ்அணி) ஆகியோரின் ஆசனங்களுக்கு பிரச்சினை இராது. ஆனால் தற்போது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ரெலொவில் செல்வம் அடைக்கலநாதனுக்கு மட்டுமே ஆசனம் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. தமிழ் கொங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட 9 பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம் ஆர் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கைகளிலேயே உள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் தெரிவு செய்யப்பட்ட தொகுதிகளில் வாழ்ந்த காலத்திலும் பார்க்க அதற்கு வெளியே குறிப்பாக புலம்பெயர் நாடுகளிலேயே கூடுதலாக வாழ்ந்துள்ளனர். அந்நாடுகளிலேயே பெரும்பாலும் இவர்கள் அறியப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு என்று ஒரு அரசியல் அடையாளம் இருந்திருக்கவில்லை. அதனால் இவர்களில் பெரும்பாலானவர்களை ஓரம்கட்டுவதில் ஆர் சம்பந்தனுக்கு பெரும் சவால்கள் இருக்கப் போவதில்லை. ஆனால் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா போன்றவர்கள் ஆர் சம்பந்தனுக்கு தலையிடியாகலாம். தங்கள் தொகுதிகளில் சுயேட்சையாகப் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளது. ரிஎன்ஏ தங்களைக் கட்சியில் இருந்து நீக்க முடியாது என எம் கெ சிவாஜிலிங்கம் தனிப்பட்ட முறையில் தெரிவித்து வருகின்றார். தங்களுக்கும் ரிஎன்ஏ க்கும் இடையே எழுத்து மூலமான உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தங்களை ரிஎன்ஏ யில் இருந்து நீக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பி வருகின்றார். இவ்வாறான சர்ச்சைகள் ரிஎன்ஏ யை நீதிமன்றத்திற்கு அலைக்கழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசனங்களை வழங்காது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் புதிய நபர்கள் அவ்விடங்களை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புலத்தில் உள்ள சிலர் அது தொடர்பாக பேசி வருவதாகவும் தெரியவருகின்றது. ரிஎன்ஏ இல் மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளிலும் புலம்பெயர் இறக்குமதிகள் சில போட்டியிடுவதற்கான வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

மேலும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வியூகம் அமைக்கலாம் எவ்வாறு ஆசனங்களைத் தக்க வைப்பது என்று கணக்குப் போடுவதில் கட்சிகள் படுபிசியாகி உள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. அரச ஆதரவான கட்சிகளான ஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியனவும் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கின்றன. வவுனியா நகரசபையை புளொட் கோட்டைவிட்டு ஒரு பாடத்தைக் கற்றுள்ளது. முன்னர் புளொட், ஈபிஆர்எல்எப் கூட்டணியில் இருந்த வி ஆனந்தசங்கரி தற்போது தனிமைப்பட்டுள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளும் தனித்துப் போட்டியிட உள்ளது.

இவர்களைவிடவும் தேசியக் கட்சிகளும் உள்ளுர் பிரமுகர்களை தேர்தல் களத்தில் இறக்க உள்ளன. உள்ளுர் வர்த்தகப் புள்ளிகள் சிலரும் தேசியக் கட்சிகளில் போட்டியிட உள்ளனர். இந்த ஆரவாரங்களுடன் வடக்கு கிழக்கு தேர்தலுக்கு தயாராக உள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள 23 தமிழ் ஆசனங்களுக்கான போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்த ஏகபோகம் இல்லாமல் போய்விடும். ஆனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ அரச மற்றும் அரச சார்புக் குழுக்களின் அரசியல் அராஜகங்களுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது ஒரு எண்ணிக்கை விளையாட்டு மட்டுமே.

இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது.

parliament.jpgஇலங்கையின் 6 வது நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு முதல் கலைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு  வெளிவருமெனவும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் லூசியன் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு 10 நாட்களுக்குள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தினம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 5 அல்லது 7 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாக இருப்பதால், பெரும்பாலும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் தேர்தல் வாக்கெடுப்புகள் இடம்பெறும்.
இலங்கையின் 6 வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர் தெரிவு கடந்த 2004 ம் ஆண்டு ஏப்ரல் 2 ம் திகதி இடம்பெற்ற அதேவேளை, முதலாவது நாடாளுமன்ற அமர்வு அதே மாதத்தின் 22 ம் திகதி இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் சொலிடாரிட்டியின் கருத்துப் பகிர்வு! : தொகுப்பு ரி சோதிலிங்கம்

Sarath_Fonseka_Posters_in_Jaffnaலண்டன் தமிழ் சொலிடாரிட்டி தனது இலங்கைத் தேர்தல் சம்பந்தமான கருத்துப்பகிர்வினை சோசலிசக் கட்சியின் தொடர் கூட்டத்தில், பெப்ரவரி 4ல் பகிர்ந்து கொண்டது. தமிழ் சொலிடாரிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சேனன் தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாட்டை அங்கு வெளியிட்டார்.

”இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலைப் பற்றி பேசுவதற்கு முன்பு ஒரு சிறு கதை ஒன்றினை இங்கே சொல்ல விரும்புகிறேன் இலங்கையில் புலிகள் அரசுடன் போராடினார்கள் அந்த புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகள் இருவரை அரசும் எதிர்க்கட்சியுமாக சேர்ந்து பிரித்தெடுத்து அரசு தனது அமைச்சரவையிலும் மாகாண சபையிலும் அமைச்சர்களாக்கியுள்ளது. பின்னர் இவர்களின் உதவியுடனும் புலிகளுக்கு எதிராக சண்டையிட்ட புலிகளை அரசு முற்றாக அழித்துள்ளது. இந்த இறுதி யுத்தத்தில் 250 ஆயிரம் பேர்கள் அகதிகளாக்கப்பட்டும் பல ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டும் பாரிய பொருளாதார இழப்புக்களும் நடைபெற்றது. இந்த பாரிய யுத்தத்தை ஆட்சியிலிருந்த மகிந்தாவும் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் வெற்றிகரமாக நடாத்தி முடித்தனர். அதன் பின்னர் தமது வெற்றி விழாக்களையும் கொண்டாடினர்.

புலிகளால் உருவாக்கப்பட்ட ரிஎன்ஏ என்ற தமிழ் கட்சிகளின் கூட்டணியினர் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்த இராணுவத் தளளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்து அரசை மாற்றுங்கள் என்று யுத்தத்தில் பாதிப்புற்று நலிவடைந்திருந்த மக்களைப் பார்த்து வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் மக்களில் மிகச் சிறுபான்மையினர் இந்த தேர்தலில் பங்கு பற்றி தமது மக்களை கொன்றொழித்த அந்த இராணுவத் தளபதிக்கே வாக்களித்துள்ளனர். இப்போது மகிந்தா அரசு இதன் காரணமாக தமிழர்கள் மீது சீற்றம் கொள்ளலாம் எனவும் தற்போது பயப்பிடுகின்றனர்.

இந்த ரிஎன்ஏ யினர் தாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே புலிகளின் பின்னர் தமிழ் மக்களின் ஏகபோகபிரதிநிதிகள் என்றும் தம்மைவிட யாருக்கும் தமிழர் பிரச்சினை பற்றி பேச முடியாது என்றும் வாதிடுகின்றனர்.”

இந்த சிறுகதையை உங்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம். காரணம் இங்குள்ள பலருக்கு இலங்கையில் அரசியல் கட்சிகளின் தன்மை பாரம்பரியம் என்பன பற்றி தெரியாதவர்கள் அங்குள்ள கடந்த சில வருட நிலைமைகளை தெளிவுபடுத்தவே இதை கூறினேன்.

யாருமே மக்களின் நலனில் அக்கறையற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதில் கடந்த 40 வருடமாக தமிழர்களுக்காக போராடுகிறோம் என்ற ரிஎன்ஏயும் என்றுமே சாதாரண மக்களின் பிரச்சினையில் அக்கறையில்லாமல் உள்ளனர். தாம் தமது குடும்பங்களை சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இவர்களது கவலை.

தனது ஆட்சிக் காலம் இரண்டு வருடங்கள் உள்ள போதும், இரண்டு வருடங்களின் பின்பு வரவேண்டிய தேர்தலை மகிந்தா அரசு இன்றே தனது புலிகளின் அழிப்பு வெற்றியுடனேயே நடாத்துகிறது. இந்த வெற்றி தனக்கு சாதகமானது என்பதை பயன்படுத்தவே இந்த தேர்தல் இந்த தேர்தலை அடுத்து பாராளுமன்ற தேர்தலும் நடாத்தப்பட உள்ளது.

இந்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் அரச ஊடகங்களையும் மக்களின் பொதுச் சொத்துக்களையும் பயன்படுத்தியே தனது வெற்றியை தீர்மானித்துள்னர். எதிர்க்கட்சிகளும் மற்றய 20 வேட்பாளர்களின் படங்களைக்கூட மக்களால் பாத்துக்கொள்ள இடம் அளிக்காமல் இந்த தேர்தலை நடாத்தி முடித்துள்ளனர்.

தேர்தல் காலங்களில் முகாம்களில் இருந்தவர்களில் 40 சதவிகிதமானவர்களே வாக்களிக்க தம்மை பதிவு செய்தனர் என்றும் ஆனால் தேர்தல் வாக்களிக்கும் இடங்களுக்கு எடுத்துவர பஸ்கள் இல்லை எனக் காரணம் காட்டி மக்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்ப்படவில்லை.

இந்த 57 சதவிகித தேர்தல் வெற்றிக்கு பின்னர் மகிந்தா அரசு தொடரந்து தனது ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளை தொடர ஆரம்பித்துள்ளது. பத்திரிகைகளுக்கு மூடுவிழா செய்துள்ளது. பத்திரகையாளர்களை கைது செய்துள்ளது. ஆதரவளிக்காதவர்களை அடித்தும் இம்சைப்படுத்தியும் உள்ளனர்.

தேர்தல் காலங்களில் வெளிவந்த பத்திரரைகளின் செய்திகளில் சில

கருணா பிள்ளையான் சிங்களம் படிக்கிறார்கள். மகிந்தா தமிழ் பேசக்கூடியவர் ஆனால் பொது இடங்களில் பேச முடியாதுள்ளது!

சர்வதேச நிதிஉதவிகள் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய துரித நடவடிக்கை!

இலங்கையில் சிறுபான்மை என்ற இனமே இல்லை நாம் எல்லோரும் இலங்கையர்களே!

இப்படியெல்லாம் செய்திகள் வந்த பிறகு புலிகளுக்கு பல தளபாடங்களையும் பேச்சுவார்த்ததைக்கு என்று கூறி கூட்டி வந்து புலிகளை அடியோடு இல்லாதொழித்த எரிக்சொல்கேயிம் மகிந்தாவிற்கு வாழ்த்துச்செய்தி அனுப்பினார்.

இலங்கை தற்போது உலகின் மிகமுக்கிய உல்லாசப் பிரயாணிகளின் இடம். இது நியுயோர்க் ரைம்ஸ் செய்தி.

இலங்கையில் மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்து தமது ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளனர். பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது. இலங்கையில் தற்போது ஜனநாயகம் முழுமையாக மக்களால் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். – இது அமெரிக்கா வால்ஸ்ரிற் பத்திகைகளின் செய்திகள்.

இப்படி சர்வதேசங்களின் பார்வை இலங்கையில் இருப்பது ஒன்றும் ஒளிவு மறைவு அல்ல. நிறையவே குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் படையுள்ளது. இதை பயன்படுத்தவும் இலங்கையில் உள்ள சந்தையை நிரப்பவுமே சர்வதேசம் முனைப்பாக உள்ளதும் இதன் அடுத்த பக்கத்தை சீனாவும் இந்தியாவும் நிறைவு செய்யவுமே போட்டிகள் நடைபெறுகின்றன” என தமிழ் சொலிடாரிட்டியின் சார்பில் சேனன் கருத்துத் தெரிவித்தார்.

இதனிடையே சபையிலிருந்து எழுந்த கேள்விகளில்: தமிழர்கள் பல ஆயிரக்கணக்கில் தெருக்களுக்கு வந்து போராடியுள்ளனர், யுத்தத்ததை நிறுத்த முடியவில்லை, போராட்டங்களுக்கு நாம் ஆதரவு அளித்தோம் ஏன் என்று விளங்கிக் கொள்ளவில்லை, ஈராக் யுத்த்தை ஆதரிப்பவர்களை அழைத்து கூட்டம் போட்டு தமக்கு ஆதரவளிக்கும்படி கேட்கிறார்கள், இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்க ஒப்புக் கொண்டவர்களை அழைத்து விருந்து கொடுத்து தமக்கு உதவும்படி கேட்கிறார்கள், இவர்கள் எல்லாம் தமிழர்களுக்காகவா போராடினார்கள்? இவர்களுக்கு போராட்டத்தின் அர்த்தம் புரியவில்லை என்று கருத்துக்கள் எழுந்தன.

உலகின் பல நாடுகளில் கொலைகளை செய்த பாராளுமன்றம் முன்போய் நீதி கேட்டது எவ்வளவு தூரம் சரியானது என்று இவர்கள் சிந்திக்கவில்லை?

தமிழர்களின் தலைமைகள் தமிழர்களை கேலிக் கூத்தாக்கியுள்ளனர். இன்றும் தமிழர்கள் யுத்தத்தில் தோல்வியடைந்த மனோநிலையில் இருப்பதையும் இதன் பின்னர் இந்த தேர்தலில் தமது தலைவர்களால் தாம் கேவலப்படுத்தப்பட்டதையும் நினைத்து தலைகுனிவுடன் உள்ளனர் என்றும் கருத்துக்கள் எழுந்தது.

ஜக்கிய இலங்கைக்குள் தமிழ் சிங்கள மக்கள இணைந்து வாழ்வதற்கான அடிப்படையில் மக்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் இக்கூட்ட கருத்துப்பகிர்வு முடிவடைந்தது.

புளுட்டோ கிரகம் சிவப்பாக மாறுகிறது: ‘நாசா’ தகவல்

புளுட்டோ கிரகம், சூரியனை 248 ஆண்டுகளாக சுற்றி வருகிறது. இந்நிலை யில் அது பிரகாசமாகவும் சிவப்பாகவும் மாறி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ தெரிவித் துள்ளது.

விண்வெளியில் சுற்றி வரும் ஹப்பிள் டெலஸ்கோப் எடுத்த படங்களின் அடிப்படையில் இக்கருத்தை ‘நாசா’ தெரிவித்துள்ளது.

புளுட்டோ கிரகத்தில் சூரிய ஒளி படும் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி உருகுவதாலும், அதன் எதிர் துருவம் உறைவதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ‘நாசா’ கூறியுள்ளது.

111 பேருக்கு நேற்று மெளலவி ஆசிரியர் நியமனம்

அரசாங்கம் நேற்று 111 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கியது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்தினால் வழங்கப்பட்டது.

முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 17 வருடங்களின் பின்னர் முதற் கட்டமாக 111 பேருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ்வைபவத்தில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நான்கு வருட கால ஆட்சியில் 33 ஆயிரம் பேருக்கு கல்வியமைச்சின் கீழ் ஆசிரியர் நியமனங்கள், கல்வி நிருவாக அதிகாரிகள் போன்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே போன்று கடந்த ஆறு மாதங்களுக்குள் 1450 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்படும் 111 மெளலவி ஆசிரியர் நியமனத்துடன் மேலும் 173 ஆங்கில மொழி மூலமான கணிதம்/ விஞ்ஞான பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படுகிறது.

இந்நியமனங்களுக்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே திறைசேரி மூலம் நிதி ஒதுக்கியிருந்தமை இங்கு குறிப் பிடத்தக்கது. இந்நியமனம் ஏற்கனவே வழங்கப்பட இருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் போது நியமனம் வழங்க முடியாது என்ற சுற்றறிக்கையின்படி இன்று உங்களுக்கு வழங்கப்படுகின்றது.

இவ் ஆசிரியர் நியமனங்கள் எவ்வித அரசியல்வாதிகளின் சிபார்சுகளுக்காக வழங்கப்படவில்லை. திறமை அடிப் படையிலும், பரீட்சை திணைக்களத்தினால் நடாத்திய போட்டிப் பரீட்சையில் சித்தி யெய்தியவர்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்தின் வெற்றிடத்திற்கேற்ப வெட்டுப்புள்ளி அடிப்படையிலும் அவர் கள் க. பொ. த. உயர்தரம் மற்றும் வயது, மெளலவி டிப்ளோமா சான்றிதழ் மற்றும் நேர்முகப் பரீட்சையில் தோற்றி 111 பேரே தகுதி பெற்றிருந்தனர்.

அவர்களுக்கே முதற் கட்டமாக இந்நியமனம் வழங் கப்படுகின்றது. இந்நியமனம் பெற்றவர்கள் தமது நியமனக் கடிதத்தில் குறிப்பிட்ட பாடசாலையில் ஆகக் குறைந்தது ஐந்து வருடம் சேவையாற்ற வேண்டும். எவ்வித காரணமும் இன்றி நியமனங்கள் சொந்த ஊரில் கற்பிப்பதற்கு பாடசாலை மாறுதல் வழங்கப்பட மாட்டாது என்றார்.