கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு! கட்சியை பதிவு செய்ய முடியவில்லை!

TNAதமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக நேற்று (யூன் 29 2010) பதிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியான போதும் இறுதித் தருணத்தில் அது முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகளின் கூட்டமைப்பாகவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனியான கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என கூட்டமைப்பில் அங்கம் வகிக்கம் சிலர் அதன் தலைமைக்கு வலியுத்தி வந்தனர். அதன்படி நேற்று அக்கட்சி பதிவு செய்யப்படவிருந்தது.

இறுதி நேரத்தில் கூட்டமைப்பிருக்கிடையில் எற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இது கைவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. கட்சியின் பதவி நிலைகள் தொடர்பாகவே அம்முரண்பாடுகள் எற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவமளிக்கும் விதமான முயற்சிகளில் அக்கட்சியின் உறுப்பினர்களான இரா.சம்பந்தரும். மாவை சேனாதிராஜாவும் ஈடுபட்டு வருவதாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்கள் மத்தியில் சில கருத்து முரண்பாடுகள் எற்கனவே தோன்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் முடிவிலேயே கட்சி இயங்குவதாகவும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமே தகவல்கள் பரிமாறப்படுவதில்லை முடிவுகள் எடுக்கப்படும் போது கலந்துரையாடப்படவில்லை என ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவும் இந்த மூக்கூட்டினால் எடுக்கப்பட்டு ஜனாநாயக நடைமுறைக்கு மாறாகவே பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றது.

இவ்வாறு தங்களிலும் மாறுப்பட்ட கருத்துக் கொண்டவர்களை அவர்கள் புலிகள் என்று முத்திரையைப் பயன்படுத்தி இரா சம்பந்தன் அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான இடத்தை வழங்க மறுத்தார். அதனால் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடு புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும். தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களான இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா ஆகியோர் தமிழரசுக் கட்சியை புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம்காட்டி வந்தனர். அவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை புதிய கட்சியாகப் பதிவு செய்யும் ஆர்வம் பெருமளவில் இல்லை. ஆனால் ஏனைய விடுதலை இயக்கங்கள் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு தங்கள் அடையாளங்களை தமிழரசுக்கட்சியின் அடையாளத்தினுள் புதைப்பது சற்று கடினமானதே.

இந்த முரண்பாடு எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பது வெகுவிரைவில் தெரியவரும்.

பொது இணக்கப்பாட்டிற்கு வர தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஈ.பி.டி.பி அழைப்பு!

TamilPartys_Meeting_24thJune10தமிழ் கட்சிகள் சில பொது உடன்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேற்று (June 27 2010) தொலைபேசியில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமது கட்சி கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்ததாகவும் தெரியவருகின்றது. இதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரையும் இதில் இணைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) சார்பில் என். சிறிதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் எம்.கே. சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, சிறிரெலோ சார்பில் எஸ்.உதயன், ஈரோஸ் சார்பில் பிரபா ஆகியோர் பொது இணக்கப்பாட்டிற்கான சந்திப்பு ஒன்றை கொழம்பில்  மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related News:  இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பொது உடன்பாடு காண்பதற்காக தமிழ் கட்சிகள் கொழும்பில் ஒன்றுகூடின.

யாழ். நாடகக் கலைஞர்கள் கௌரவிப்பு!

நெருக்கடியான காலகட்டத்தில் பணியாற்றிய யாழ்ப்பாண நாடகக் கலைஞர்கள் ‘மக்கள் களரி’ நாடகக் குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளனர். யுத்த நெருக்கடி காலகட்டங்களில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நாடகப் பாரம்பரியத்தை வளர்த்தமைக்காக இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிகழ்வு செம்மணி வீதியுள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்றது.

எஸ்.திருநாவுக்கரசு, பிரான்சிஸ் யூல்ஸ் கொலின், மரியாம்பிள்ளை, பொனிபஸ், தைரியநாதன், கேசுறி பிலிப் பேர்மினஸ், கந்தையா நாகப்பு, நவாலியூர் என். செல்லத்துரை, சரவணமுத்து சந்திரா, முருகேசு சிவப்பிரகாசம் அகியோரும், திருமறைக்கலாமன்றம், செயற்திறன் அரங்க இயக்கம், யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் வெறுவெளி அரங்கக் குழு ஆகிய அமைப்புக்களும் கௌரவிக்கப்பட்டன.

மாவோயிஸ்ட் தலைவர் கோபால்ஜியுடன் நேர்காணல்

க.முகிலன் வியாழன், 24 ஜூன் 2010 02:38 (கோபால்ஜி, மாவோயிஸ்டு கட்சியின் செய்தித் தொடர்பாளர். அல்பா ஷா, இலண்டன் பல்கலைக் கழகத்தின் கோல்டு ஸ்மித் கல்லூரியில் மானுடவியல் பிரிவில் பணியாற்றுபவர். அல்பாஷா ஜார்கண்டில் காட்டில் கோபால்ஜியை சந்தித்து உரையாடினர். அந்த நேர்காணல் க.முகிலனின் தமிழாக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில மூலம் : எக்கனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி, மே 8, 2010).

அல்பாஷா: உலகின் பிற பகுதிகளில் கம்யூனிசம் வீழ்ச்சியுற்றுக் கிடக்கிறது. இந்தியாவின் சோசலிக அரசை அமைக்க முடியும் என்று நீங்கள் எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?

கோபால்ஜி: சோசலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இனி எதிர்காலமே இல்லை என்கிற கருத்து ஏகாதிபத்தியவாதிகளாலும் முதலாளியத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் முதல் சுற்றுப் புரட்சிகள் நடந்தன. உழைக்கும் வர்க்கத்தால், கம்யூனிஸ்டு கட்சிகளின் பாட்டாளிகளால் உலகின் பல பகுதிகளில் – இரஷ்யப் புரட்சி, சீனப்புரட்சி, வியத்நாம் புரட்சி முதலான புரட்சிகள் வெற்றி பெற்றன. 21 ஆம் நூற்றாண்டில் புதிய புரட்சி அலை வீசும். இந்தியாவில் எங்கள் கம்யூனிஸ்ட கட்சியின் தலைமையின் கீழ் இப்புரட்சி நடக்கும்.

பெருமளவில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் ஏற்பட நீண்டகாலம் தேவைப்படும். முதலாளியத்திற்கு நிலப்பிரபுத்துவ சமூகத்தை வெல்வதற்கு 400 ஆண்டுகளாயிற்று. அப்படியிருந்தும், பாட்டாளி வர்க்கத்தை எதிர்ப்பதற்காக முதலாளிகள், நிலப்பிரபுக்களுடன் கள்ளக் கூட்டு சேர்ந்தனர். ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் உள்ள பல நாடுகளில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையிலான உழைக்கும் மக்களின் புரட்சிகளைத் தடுப்பதற்காக முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, ‘முதலாளியத்துக்கு மாற்று இல்லை’ என்கிற முதலாளியக் கூற்று அதன் மதிப்பை இழந்துவிட்டது. வளர்ச்சி பெற்ற நாடுகளில் பல அறிஞர்களும், மக்களில் பலரும் காரல்மார்க்சு எழுதிய மூலதனத்தைப் படிக்கத் தொடங்கியுள்ளனர். மார்க்சியத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதையும், சோசலிசமும் கம்யூனிசமும் இன்றியமையாத தேவைகள் என்பதையும் அண்மைக்கால நிகழ்வுகள் எண்பித்துள்ளன. சோசலிசத்தாலும் கம்யூனிசத்தாலும் மட்டுமே வறுமையை, பட்டினியை, சமத்துவமின்மையை ஒழிக்க முடியும். மேலும் நாம் வாழும் இப்புவிக்குப் பேராபத்தாக உள்ள தட்பவெப்பச் சீர்கேடு முதலான சிக்கல்களைத் தீர்க்க முடியும்.

அல்பாஷா: சீனாவில் நீண்டகால மக்கள் போர் நடந்தபோது இருந்த நிலைமைக்கும் இந்தியாவில் உள்ள நிலைமைக்கும் இடையே உள்ள முதன்மையான வேறுபாடுகள் எவை?

கோபால்ஜி: நாங்கள் உதவி பெறுவதற்காக உலக அளவில் ஒரு சோசலிச நாடோ அல்லது தளமோ இல்லாத நிலையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இரண்டாம் உலகப் போருக்குப்பின், பல்வேறு நாடுகளில் எழுந்த தேச விடுதலைப் போராட்டங்கள், ஏகாதிபத்தியவாதிகளை, நேரடியாக ஆளுகின்ற பழைய காலனிய ஆதிக்க முறையைக் கைவிட்டு, புதிய காலனிய முறைகளில் புதிய சுரண்டல் வடிவங்களை மேற்கொள்ளச் செய்தன. இந்தியாவைப் பொறுத்த அளவில், அதிகாரங்கள் அனைத்தும், மய்ய அரசில் குவிக்கப்பட்டுள்ளன. இராணுவ வலிமை மிக்க நாடாக இப்போது இந்தியா இருக்கிறது. அதன் அதிகாரமும் படைவலிமையும் இந்தியாவின் எந்தவொரு மூலை முடுக்கையும் சென்றடையக் கூடியதாக உள்ளன. போக்குவரத்தும் தகவல் தொடர்பும் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளன.

தங்களுக்கென தனியாகப் படை வைத்துக் கொண்டிருந்த இனக்குழுத் தலைவர்கள் சீனாவின் கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்தியாவில் அது போன்ற நிலைமை இல்லை. ஆனால் அருவருப்பான, மீற முடியாத பார்ப்பன தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்திய நிலப்பிரபுத்துவ சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. அதனால் சமூக – பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தளங்களில் மிகவும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

‘சனநாயகம்’ என்று சொல்லப்படுகின்ற கட்டமைப்பில், இந்திய ஆளும் வர்க்கங்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் நகர்ப்புற குட்டி முதலாளிய வர்க்கத்தினரும், பெரும் எண்ணிக்கையில் உழைக்கும் வர்க்கத்தினரும் உள்ளனர். இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு. இவற்றின் வளர்ச்சியில் வேறுபாடுகள் இருக்கின்றன. பழைமை வாதச் செயல்களைப் போற்றுவதில் இந்தியாவுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. இப் பழைமைவாதப் போக்குகள் உழைக்கும் மக்கள் மீது இன்றளவும் குறிப்பிடத்தக்க அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இப்பழைமை வாதிகள் இந்தப் பிற்போக்கான ஆட்சியை நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

படையைக் கட்டியமைத்தல், தளப்பகுதிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன. சீனாவில் அவர்கள் முன்பே தளப்பகுதியும் படையும் பெற்றிருந்தனர். கம்யூனிஸ்டு கட்சி உருவாவதற்கு முன்பே, கோமின்டாங் கட்சி ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபத்துவத்துக்கும் எதிராக ஒரு பூர்ஷ்வா சனநாயகப் புரட்சியை நடத்தியது. இந்தியாவில் நாங்கள்செயல்படத் தொடங்கியபோது எங்களுக்கு தளப்பகுதியோ, படையோ இல்லை. சிறு எண்ணிக்கையில் போராடத் தொடங்கினோம். இன்று மக்கள் விடுதலை கொரில்லாப் படை யை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். எனவே, எங்கள் போராட்டம் நீண்டதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கும்.

மேலும், இங்கு பெரிய சமவெளிப் பகுதிகள் உள்ளன. மலைகளிலும் காடுகளிலும் மேற்கொள்ளப்படும் போராட்ட உத்திகளிலிருந்து வேறுபட்ட நடைமுறைகளை சமவெளிகளில் கையாள வேண்டியுள்ளது. நகர்ப்புறங்களில் செயல்படுவதும், உழைப்பாளிகளை ஒரு வர்க்கமாக அணி திரட்டுவதும் நம் நாட்டில் பெரிய பணியாக உள்ளது. நான்கு வர்க்கப் பிரிவினரையும் ஆற்றல் மிக்க அணியாக ஒருங்கிணைப்பதுடன், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர், மற்றும் பல்வேறு தேசிய இனத்தவர் ஆகியோரையும் அணிதிரட்ட நாங்கள் சிறப்புக் கவனம் செலுத்திச் செயல்பட்டு வருகின்றோம்.

அல்பாஷா: உலகில் மிகப்பெரிய சனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று பெருமையுடன் கூறப்படுகிறது. நீங்கள் திட்டவட்டமாக எப்படி மறுக்கிறீர்கள்?

கோபால்ஜி: இந்தியா ஒரு முதலாளித்துவ சனநாயக நாடாகக்கூட இல்லை. உண்மையில் இது அரைக்காலனிய, அரைநிலப் பிரபுத்துவ அரசாக உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மை மக்களுக்கு சனநாயக உரிமைகள் இல்லை. 1947இல் ஆட்சி அதிகாரம், பிரிட்டிஷாரிடமிருந்து, காலனிய ஆட்சிக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பெரிய பண்ணையார்களுக்கும் மாற்றப்பட்டது. இந்த ஆட்சி அதிகார மாற்றத்தால், வெகு மக்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை. புதிய அரசு நிலச்சீர்திருத்தம் பற்றிப் பேசியது. ஆனால் உண்மையில் உழுதவனுக்கு நிலத்தைப் பகிர்ந்தளிக்கவில்லை. கல்வி பெறுவதில், வேலை வாய்ப்பில், நலவாழ்வு வசதிகளைப் பெறுவதில், மக்களுக்கு சமமான வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்தியாவில் ஊழல் என்பது வாழ்க்கை நெறியாகிவிட்டது. தற்போது பல இலட்சம் மக்கள் பட்டினியாலும் நோய்களாலும் இந்தியாவில் மடிந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கும், அணிதிரள்வதற்கும் அரசு தடை போடுகிறது. ஆனால் அரசியல் சட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமை என்று பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உண்மையில் இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பெரும்பாலான சட்டங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. நேற்றுவரை காலனி ஆட்சிக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த நிர்வாகத்துறை ஒரே இரவில், சனநாயகத் தன்மை கொண்டதாக, மக்கள் நலம் நாடுவதாக, நாட்டுப்பற்று உடையதாக மாறிவிடுமோ?

ஆகவே, 1947இல் பெற்ற சுதந்தரம் வெகு மக்களுக்கானதன்று. மேலும், இன்று இந்திய நாடாளுமன்றம் உலக வங்கி, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் கட்டளைகளுக்குச் கீழ்ப்படிந்து நடக்கிறது. உலக ஏகாதிபத்தியத்திற்குத் தலைவனாக உள்ள அமெரிக்காவின் ஆணைகளைத் தலைமேற்கொண்டு செயல்படுத்துகிறது.

இந்திய ஆளும் வர்க்கம், இந்தியாவை ஒரு கூட்டாட்சி என்றும் மதச்சார்பற்ற குடியரசு என்றும் சொல்கிறது. ஆனால் இது எந்த அளவுக்குக் கூட்டாட்சித் தன்மை கொண்டதாக இருக்கிறது? காஷ்மீர் மக்களிடம் தனிவாக்கெடுப்பு நடத்தி தனி காஷ்மீர் நாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி காஷ்மீர் மக்கள் போராடி வருகின்றனர். தனிநாடு கோரி வடகிழக்குப் பகுதியில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களை இந்திய அரசு எவ்வளவு கொடுமையாக ஒடுக்கி வருகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். நடுவண் அரசுக்கும் – மாநிலங்களுக்கும் உள்ள உறவை ஆராய்ந்து பாருங்கள். மாநில அரசுகள் எண்ணற்ற அதிகாரங்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். உண்மையில் தில்லியில் தான் அதிகாரம் அனைத்தும் குவிக்கப்பட்டுள்ளன. மய்ய – மாநில உறவு என்பது நிலப்பிரபத்துவ காலத்து உறவாகவே உள்ளது. தன் அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பிரித்தளிக்க வேண்டும் என்பதில் மய்ய அரசு எள்ளளவும் அக்கறை காட்டவில்லை. மூலதனம், பெரிய தரகு முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது; இதற்கு ஏகாதிபத்தியம் பின்புலமாக உள்ளது; இந்தச் சூழலில் நடுவண் அரசு தன்னுடைய அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? மதச்சார்பற்ற நாடு என்று கூறப்படுவதைப் பொறுத்த அளவில், கடந்த பல ஆண்டுகளாக அரசே சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதை ஊக்குவித்து உறுதுணையாக விளங்கி வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தியா ஒரு சனநாயக, கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற குடியரசு என்று கூறப்படுவது ஒரு கேலிக் கூத்தேயாகும்.

அல்பாஷா: அப்படியாயின், சனநாயகம் என்று எதை நீங்கள் கருதுகிறீர்கள்?

கோபால்ஜி: எங்களது உடனடியான குறிக்கோள், ஒரு புதிய சனநாயகப் புரட்சியாகும். புதிய சனநாயக இந்தியாவில், அதிகாரம் என்பது நான்கு வர்க்கங்களில் கூட்டணியிடம் இருக்கும். பாட்டாளிகள், விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டணியாக அது இருக்கும். இதில் எந்தவொரு தனிவர்க்கமும் அதிகாரம் செலுத்துவதாக இருக்காது. புதிய அரசு விவசாயிகளை நிலப்பிரபுக்களின் பிடியிலிருந்து விடுதலை செய்யும். தேசிய மூலதனத்தைத் தரகு மூலதனத்திலிருந்து விடுவிக்கும். தரகு முதலாளிகளின் உடைமைகள் பறி முதல் செய்யப்படும். அயல்நாட்டுக் கடன்கள் இரத்து செய்யப்படும். பண்ணையார்களிடமிருந்து உபரி நிலம் கையகப்படுத்தப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் பிரித்தணிக்கப்படும். சமூகம், அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்து வத்தையும் ஒழிக்கும்.

புதிய சனநாயகப் புரட்சி உண்மையான கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாக இந்தியாவை உருவாக்கும். அதில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன்னுரிமையும், பிரிந்து போகும் உரிமையும் அங்கீகரிக்கப்படும் புதிய சனநாயக அரசு எந்தவொரு மதத்தையும் ஆதரிக்காது. மதம் தனி மனிதரின் சொந்த விசயமாக இருக்கும். வேலை, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் சமவாய்ப்பு இருக்கும் என்பதுடன் ஒவ்வொருவரும் அவற்றைப் பெறுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படும்.

அல்பா ஷா: அரசின் வளர்ச்சித் திட்டங்களை நீங்கள் கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்?

கோபால்ஜி: பொது மக்களின் வளர்ச்சி பற்றி இந்திய அரசு குறைந்த அளவிற்குக்கூட அக்கறை இல்லாமல் இருக்கிறது. அரசின் கணக்குப்படி, 77% மக்கள் ஒரு நாளைக்கு %.20க்கும் குறைவான வருவாய் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இதன்படி, 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். 62 ஆண்டுக்கால சுதந்தரத்துக்குப் பின் இத்தகைய கேவலமான நிலை! ஆனால் அதே சமயம் சில இந்தியர்கள் கோடீசுவரர்களாகி வருகின்றனர். இந்திய அரசு இதுபற்றிப் பெருமிதம் கொள்கிறது.

பங்குச்சந்தைக் குறியீட்டு எண், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகியவற்றின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தக் கூடாது. சில பணக்காரர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று அரசு கருதுகிறது. சாதாரண மக்களின் அடிப்படை சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்பதில் அரசு அக்கறையின்றி இருக்கிறது. உலகவங்கி, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் அறிவுரைகளின்படி, தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. நம்முடைய இயற்கை வளங்களை, நிலங்களை, காடுகளை, இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய எசமானர்களுக்கும் விற்றிட முயல்கின்றனர்.

தற்செயல் நிகழ்வாக, மாவோயிஸ்டுகள் வலிமையுடன் உள்ள ஜார்கண்ட், சத்தீஷ்கர், மேற்குவங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இயற்கை வளங்கள் மிகுந்து உள்ளன. இந்தியாவின் இயற்கை வளங்களில் 80% இப்பகுதியில் உள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கி, இப்பகுதியிலிருந்து விரட்டாத வரையில், நிலத்தையும் இயற்கை வளத்தையும் அவர்களின் ஏகாதிபத்திய எசமானர்களுக்கு வெளிப்படையாக விற்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

அல்பா ஷா: கனிமங்களை வெட்டி எடுக்கக் கூடாது என்று கூறுகிறீர்களா?

கோபால்ஜி: அப்படியில்லை. சுரங்கம் தோண்டுவது அல்லது ஆலைகள், தொழிற்சாலைகளை நிறுவுவது ஆகியவற்றுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். நம்முடைய இயற்கை வளங்களும், தாயக நிலமும் இந்தியப் பெருமுதலாளிகளாலும், அவர்களின் ஏகாதிபத்திய எசமானர்களாலும், அவர்களுடைய சொந்த இலாபத்திற்காகச் சூறையாடப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். மக்களின் மேம்பாட்டிற்காக ஆலைகளையும் சுரங்கங்களையும் அமைக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு ஆர்வம் காட்டுவதில்லை. இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று நெருக்குதல் தரப்படுகிறது. அவ்வாறு வெளியேறாவிடில், அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். நகரங்களில் இம்மக்கள் கூலியாட்களாக வாழும் நிலை ஏற்படுகிறது. இதற்கு முன்பு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டனர். அதைப் போலவே இப்போதும் நிகழும். பொக்காரோவிலும் மற்ற இடங்களிலும் பெருந்திட்டங்களைச் செயல்படுத்திய போது, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்குப் போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அவர்களில் பெரும்பாலானோர்க்கு, நிலமோ, வீடோ, அங்குக் கட்டப்பட்ட ஆலையில் வேலையோ வழங்கப்படவில்லை. பல ஆயிரக் கணக்கில் பழங்குடியினர் வெளியேற்றப்பட்டனர்.

எனவே, மீண்டும் அதுபோல் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? எனவே இயற்கை வளங்கள் கொள்ளை போவதையும், சூறையாடப்படுவதையும் எதிர்த்திட நாங்கள் மக்களை அணிதிரட்டுகின்றோம். எங்களுடைய நிலமும், இயற்கை வளங்களும் ஏகாதிபத்திய வாதிகளாலும் அவர்களின் கூட்டாளிகளாலும் இந்தியப் பெரு முதலாளிகளாலும் சூறையாடப்படுவதை அனுமதிக்க மாட்டோம். மாவோயிஸ்டு அரசில், ஆலைகளை, சுரங்கங்களை அமைப்பதற்குமுன் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதலில் சுரங்கங்களும் ஆலைகளும் நாட்டுடைமையாக்கப்படும். நாட்டின் நலனுக்காக அவை இயங்கும். முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக அவை செயல்படா. இரண்டாவது, பொதுவாகப் பயிரிடப்படும் நிலங்களைச் சுரங்கம் வெட்டுவதற்காகவோ, பிறவற்றுக்காகவோ எடுக்கக் கூடாது. மூன்றாவதாக, அவ்வாறு நிலங்களை எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளபோது, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் நிலத்தை, வாழ்வாதாரத்தை இழந்ததற்கு உரிய இழப்பீடும், வேலையும், வீடும், பயிரிடுவதற்கு சிறுபகுதி நிலமும் அளிக்கப்பட வேண்டும். புதிய சனநாயக அரசு இடம் பெயர்ந்த மக்களின் நலனுக்கு முழுப் பொறுப்பேற்றுச் செயல்படும்.

நான்காவதாக, இச்சுரங்கங்களும் ஆலைகளும் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத முறையில் அமைக்கப்படும். அய்ந்தாவதாக, இத்திட்டங்களை அமைப்பதற்கு முன்பாக அப்பகுதியில் வாழும் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒப்புதல் பெறப்படும். சுரங்கங்களையும் ஆலைகளையும் நிர்வாகம் செய்வதில் அம்மக்களுக்குப் பொறுப்பு வழங்கப்படும். இந்தியாவில் புதிய சனநாயக அரசு அமையும் போது, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எங்கள் அரசு செயல்படும்.

அல்பா ஷா: ஜார்கண்ட் பகுதியில் உங்கள் கட்சி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. மாவோயிஸ்டுகளின் திட்டவட்டமான சாதனைகள் எவை?

கோபால்ஜி: உழைக்கும் மக்களும், நிலமற்ற தொழிலாளர்களும், ஏழை விவசாயிகளும் இந்தியாவில் ஓர் ஆற்றல் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக உருவாகியுள்ளனர். இதுவே எமது முதலாவதும் முதன்மையானதுமான சாதனையாகும். நாங்கள் போராடும் பகுதிகளில் நிலப்பிரபுத்துவ அதிகாரம் என்பது பெரும்பகுதி தகர்க்கப்பட்டுவிட்டது. இப் பகுதியில் போராடும் மக்கள் தமக்கெனத் தனியாக கொரில்லாப் படையை அமைத்து உள்ளனர்.

காலங்காலமாக இழிவாக நடத்தப்பட்டு வந்த தலித்துகளும், பழங்குடியினரும் இப்போது சமூகத்தில் உரிய இடமும், மதிப்பும் பெற்றுள்ளனர். இது எமது இரண்டாவது சாதனை. பெண்களை, தலித்துகளை, பழங்குடியினரை இழிவாக நடத்தும் போக்குகளும், காட்டுப்பகுதிகளில் மேல்சாதியினரும் அயலாரும் செலுத்தி வந்த ஆதிக்கமும் வேகமாக மாறத்தெடங்கி உள்ளன. ஊழல் மலிந்த, கொடிய வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காடுகளின் நிலைமையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை மூன்றாவது சாதனை

யாகும். வனத்துறையின் கீழ்நிலை ஊழியர்கள்கூட கடுமையான ஒடுக்கு முறைகளை ஏவினர். ஆனால் இவர்கள் மாஃபியா கும்பலின், பண்ணையார்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். இப்போது இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து காடுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மக்கள் காடுகளில் சுதந்தரமாக நடமாடி, தமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். காடுகள் அழிக்கப்படுவதை நாங்கள் தடுத்து வருகிறோம். நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டம் எமது நான்காவது சாதனையாகும். எங்கள் போராட்டப் பகுதிகளில் மக்கள் சனநாயக உரிமைகளைத் துய்க்கின்றனர். பண்ணையார்களிடமிருந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். பெரும்பாலான இடங்களில் பண்ணையார்களை கிராமங்களை விட்டு விரட்டியுள்ளோம். பல இடங்களில் நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். நிலத்தை இதற்கு முன் உழுது கொண்டிருந்த நிலமற்றவர்களுக்கும், ஏழை உழவர்களுக்கும் இந்நிலங்களைப் பிரித்து அளித்துள்ளோம்.

ஜார்கண்டிலும் பீகாரிலும் விவசாயக் கூலி மிகவும் குறைவாக இருந்தது. காடுகளில் டெண்டு இலைகளையும் பிற பொருள்களையும் பொறுக்கி எடுத்து வருவதற்கான கூலி மிகவும் குறைவாக இருந்தது. எனவே அதிகக் கூலி கேட்டுப் போராடுமாறு செய்தோம். எனவே தற்போது முன்னைவிட அதிகக் கூலி பெறுகின்றனர். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் திருட்டையும் வழிப்பறியையும் ஒழித்து விட்டோம். அத்துடன், அரசோ அல்லது பெரிய ஒப்பந்தக்காரர்களோ குளம், ஆற்றுப்படுகை, கடைவீதி, தோப்புகள் முதலானவற்றை ஏலம் விடும் முறைக்கு முடிவுகட்டி விட்டோம். எனவே இவற்றை மக்கள் தம் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எங்கள் செல்வாக்கின் கீழ் உள்ள பகுதியில் வகுப்பு மோதல் இல்லை. சங்பரிவாரக் குண்டர்கள் எம் பகுதியில் வகுப்பு மோதலை உண்டாக்கத் துணியமாட்டார்கள். ஒரு சில இடங்களில் அவர்கள் அவ்வாறு முயன்றபோது, ஒரிசாவில் கந்தமாலில் சாமி இலட்சுமானந்தாவைத் தண்டித்தது போல் தண்டனைகள் தருகின்றோம். மற்றொரு முக்கியமான சாதனை என்னவெனில், முதலாளிகள் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருவதாகும். எனவே, நிலத்தையும் கனிம வளங்களையும் கொள்ளையடிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்தவரையில், நடுவண் அரசில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாத வரையில் அவற்றை முழுமையாகச் செயல்படுத்த இயலாது. இருப்பினும், எங்கெல்லாம் புரட்சிகர மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் மக்களுக்கு நலம் பயக்கும் பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றோம். வேளாண்மையிலும் வேளாண்மை சார்ந்த பிற தொழில்களிலும் கூட்டுறவு முறையை ஊக்குவித்துள்ளோம். மிகவும் பின் தங்கிய பகுதிகளின், கூலியில்லா விருப்ப உழைப்பைக் கொண்டு கிணறுகள், குளங்கள், கால்வாய்களை வெட்டி வருகின்றோம். பள்ளிகளை மருத்துவமனைகளைத் திறந்துள்ளோம். குறைந்த விலையில் மருந்துகளை அளிக்கின்றோம். புரட்சிகர மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்ட இடங்களில் இப்பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஆயினும் இவை தொடக்க நிலைப் பணிகளேயாகும்.

அல்பா ஷா: இந்திய அரசு மாவோயிஸ்டு கட்சியைப் பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கோபால்ஜி: பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது என்பது ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்திருப்பதன் ஒரு பகுதியே ஆகும். தெற்காசியப் பகுதியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இந்திய ஆளும்வர்க்கம் உருவாகி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு எதிரானது என்று கருதப்படுகின்ற எந்த ஒரு இயக்கத்தையும் அல்லது எந்தவொரு எதிர்ப்பையும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்துகின்றனர்.

இந்தப் பின்னணியில் தான், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடைபெறும் தேசிய இன எழுச்சிப் போராட்டங்களையும், உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் பயங்கரவாதச் செயல்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. மாவோயிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியைப் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்துவதன் மூலம், மாவோயிஸ்டு கட்சியின் மக்கள் திரன் அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களை – சனநாயக உணர்வு கொண்டோரை எளிதில் கைது செய்ய முடியும். அரசின், சனநாயகத்துக்கு விரோதமான செயல்களை, அதன் ஒடுக்கு முறைகளைக் கண்டித்துப் பேசுவோரைக் காவல்துறை கைது செய்வதற்கான ஆயுதமாக இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவாளர்கள், மக்கள் உரிமை இயக்கத்தினர் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். எனவே பயங்கரவாதிகள் என முத்திரை குத்தும் போக்கை நாங்கள் கண்டிக்கின்றோம்.

இரண்டாவதாக, எங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர்க்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. கண்மூடித்தனமாகக் கொல்வது, அப்பாவி மக்களைக் கொல்வது பொதுவாகப் பயங்கரவாதச் செயலில் நிகழும். அத்தகைய கொலைகளை நாங்கள் கண்டிக்கின்றோம். குறிப்பாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிரானவர்கள் நாங்கள். கிராமப்புறங்களில் அப்பாவி மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எச்செயலையும் நாங்கள் ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆயுதமேந்திய எங்கள் படையினர் அத்தகைய தவறைச் செய்யும் போது நாங்கள் எமக்குள் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கிறோம்.

எங்கள் தத்துவம் மார்க்சியம் – லெனினியம் – மாவோயிசம் என்பதாகும். இந்தியாவை உண்மையான கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாக அமைக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எங்களை பயங்கரவாதிகள் எனக் கூறுவது வஞ்சமும் தந்திரமும் கொண்ட சூழ்ச்சியாகும். இவ்வாறு பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களை ஏமாற்றலாம் என்று இந்திய அரசு நினைக்கிறது. பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதால், எங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் நாங்கள் தொடக்கக் காலம் முதலே தலைமறைவு இயக்கமாகச் செயல்பட்டு வருகின்றோம். பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது, பொது மக்களைக் குறிப்பாக, போராட்டப் பகுதிகளில் உள்ள மக்களைத் துன்புறுத்துவதற்கு காவல்துறைக்கு அதிக அதிகாரம் தருவதற்காகவேயாகும்.

அதேசமயம் இதன் இன்னொரு பக்கத்தையும் பாருங்கள். காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பல்லாயிரம் இராணுவத்தினரும் துணை நிலைப்படையினரும் என்ன செய்வது கொண்டிருக்கிறார்கள்? போலி மோதலில் அன்றாடம் இளைஞர்களைச் சுட்டுக்கொன்று கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் போராடுகின்ற பகுதிகளில் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையும் என்ன செய்கிறார்கள்? நூற்றுக் கணக்கில் இளைஞர்களைக் கொல்கிறார்கள். ஆளும் வர்க்கத்தினர் சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு நடத்திய தாக்குதல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 1984 கலவரத்தில் சீக்கியர்களைக் கொன்று குவித்தார்கள். அண்மையில் ஒரிசாவில் கிறித்தவர்களையும், 2002இல் குசராத்தில் இசுலாமியரையும் ஆயிரக்கணக்கில் கொன்றனர். இக் கலவரங்களில் எத்தனை இந்து வெறியர்களும் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர்? 1947 முதல் காவல் துறையும் இந்தத்துவ சக்திகளும் கைகோத்துச் செயல்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் அய்ந்து இலட்சம் விவசாயிகள் அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008-09ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் அன்றாடக் கூலிகளாக மாறிவிட்டனர். பட்டினியால் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர். உட்சா பட்நாயக் குறிப்பிட்டுள்ளது போல இது ஒரு ‘வறுமைக்குடியரசு’. இச்சாவுகளுக்குயார் பொறுப்பு? பட்டினியாலும் பசியாலும் பிற நோய்களாலும் பல்லாயிரம் மக்கள் மடிந்து கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு? வேறு வழியில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் அவலத்தை – இன்னலை கேட்பதற்கு யாருமில்லை! இந்திய மக்கள் மீது அரசு வன்முறையைத் திணிக்கிறது.

அல்பாஷா: போர் தீவிரமடைந்து வருகிறது. அரசும் தன்னுடைய இராணுவத் தாக்குதலை முடுக்கி விட்டுள்ளது. இருதரப்பினருக்குமான போரில் ஏழை விவசாயிகள் நடுவில் சிக்கிக் கொள்வார்கள். உங்களிடம் ஏ.கே.47 துப்பாக்கிகளும் கண்ணி வெடிகளும் உள்ளன. அதனால் உங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். இச்சண்டையில் சாதாரண கிராமமக்கள் மடியப்போகிறார்கள். இதை நீங்கள் எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

கோபால்ஜி: மன்னிக்க வேண்டும். உங்கள் கேள்வியே தவறான முறையில் கேட்கப்பட்டுள்ளது. இப்போர் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையிலான போர் அன்று. இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான போர். மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி என்பது என்ன? மக்கள் விடுதலை கொரில்லாப்படை என்பது என்ன? இவை மக்கள் வலிமையாக அணி திரண்டுள்ள அமைப்புகளே தவிர வேறு அல்ல. ஆகவே மாவோயிஸ்டுக் கம்யூனிஸ்டு கட்சியை – மக்கள் விடுதலை கொரில்லாப்படையை அரசுப்படைகள் தாக்குவது மக்கள் அணிதிரள்வதையே ஒடுக்குவதாகும். மக்கள் இதை உணர்த்திருக்கிறார்கள். எனவே இத்தகையபோர் என்பது எங்கள் கட்சிக்கு எதிரான போர் அன்று. இது மக்களுக்கு எதிரான போரேயாகும்.

அல்பா ஷா: மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேறல்ல; மக்கள் வேறல்ல; இரண்டும் ஒன்றே என்று நீங்கள் கூறுவதைப் போலவே இந்திய அரசும் மக்களும் வேறு வேறானவர் என்று நீங்கள் பிரித்துக் கூற முடியாது. எடுத்துக்காட்டாக, உங்கள் தாக்குதலின் இலக்காக இருக்கின்ற காவல்துறையினர் – உங்களுடைய ஆதரவாளர்கள், கொரில்லாப்படையினர் எந்தக்குடும்பங்களிலிருந்து வந்துள்ளனரோ, அதே குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். கிராமப்புறங்களில் ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகின்ற காவல்துறையினரை நீங்கள் ஏன் கொல்லுகிறீர்கள்?:

கோபால்ஜி: பொதுவாகப் போலீசுக்காரர்கள் கிராமப்புற ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகிறார்கள் என்பதும், எங்கள் தாக்குதலில் கொல்லப்படுகிறார்கள் என்பதும் உண்மை. போலீசுக்காரர்கள் எங்கள் பகுதியைக் கைப்பற்ற வரும்போது, எம்மீதான தேடுதல் வேட்டையில் ஈடுபடும் போது, மக்களையும் மக்கள் இயக்கத்தையும் ஒடுக்க முனையும் போது மட்டுமே எங்கள் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். சில எடுத்துக் காட்டுகளைக் கூற விரும்புகின்றேன்.

காவல்துறையிலும் இராணுவத்திலும் பல இடங்களில் பணியாற்றும் பலபேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் குடும்பத்தினரின் பிள்ளைகள். இவர்களுடைய குடும்பத்தினர் எங்கள் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். விழாக்காலங்களிலோ, வேறு விடுமுறைகளிலோ காவல்துறையிலும் இராணுத்திலும் பணியாற்றுபவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து தங்கும் போது அவர்களை நாங்கள் தாக்குவதில்லை. அப்படியான ஒரு நிகழ்ச்சி கூட நடந்ததில்லை. அடுத்து பொதுவாக மாவட்ட அளவில் இயங்கும் போலீசாரை நாங்கள் தாக்குவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களைத் தாக்க வரும் போதும், மக்களும் மக்கள் இயக்கங்களும் ஒடுக்கப்படும்போது மட்டுமே நாங்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்துகிறோம்.

போரில் எதிரி, நம் சொந்த வர்க்கத்தினரையே நம்மீது ஏவிவிடும் போது, அவர்கள் தாக்குதலுக்குள்ளாவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. காவல்துறையிலும் இராணுவத்திலும் பணியாற்றுவோருக்கு எங்கள் வேண்டுகோள் இதுதான். நீங்கள் எந்த அரசுக்காகப் போராடுகிறீர்களோ, அது உங்களுக்கான அரசு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஆளும் வர்க்கத்திற்காகச் சேவை செய்கிறீர்களோ அவர்கள் உங்கள் குடும்பங்களின் நலனுக்கு எதிரானவர்கள். எனவே, பிற்போக்குத்தனமான இராணுவத்திலிருந்தும் காவல்துறையிலிருந்தும் விலகி மக்கள் விடுதலை கொரில்லாப் படையில் சேருங்கள் என்பதே எங்கள் அழைப்பாகும்.

(சிந்தனையாளன் ஜூன் 2010 இதழில் வெளியானது) – நன்றி கீற்று

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

minis-kahali.jpgபோர் குற்ற விசாரணைகளின் போது அரசாங்கத்தின் சாட்சியாளராக கே.பி பயன்படுத்தப்படுவாராம்

சர்வதேச அமைப்புக்களாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களினாலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் சாட்சியாளராக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பயன்படுத்தப்படுவார் என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவத்துள்ளார்.

அரசாங்கத்தின் பொறுப்பில் தற்போது இருக்கும் கே.பி கடந்தவாரம் வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோர் நிவாரண முகாம்களுக்குச் சென்றதாகவும், இடம்பெயர்ந்த மக்களையும், விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களையும் அவர் சந்தித்ததாகவும், அவர் வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்தும், கே.பி தொடர்பாக அரசாங்கம் எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பது தொடர்பாகவும் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கே.பி தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் உரிமை இலங்கைக்குண்டு, அவர் தொடர்பாக சர்வதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளையே முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related News:

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

தந்தை செல்வநாயகமும் தனயன் பிரபாகரனும்! : அழகி

Pirabakaran V_LTTESelvanayagam_SJVவரலாறுகள் ஆராயப்பட வேண்டும் என்பது முக்கியமானது. அதில் தவறுகள் இருப்பின் அவற்றை திருத்தி செம்மையாக நடக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். ஈழமக்களின் துயரங்கள் இன்னமும் நின்றபாடில்லை. அவை மேலும் தொடருவதற்கான வாய்ப்புக்களே தெரிகின்றன. ஏன்? ஈழத்தமிழர்கள் ஒரு போதும் சமுதாயத்தை நேசிப்பது கிடையாது. சமூகங்கள் ஒன்றுபட்டு வாழ்ந்ததும் கிடையாது. இப்பொழுது உள்ள இந்த நாகரீக வளர்ச்சியடைந்த தொலைத் தொடர்புகள் உலக மக்களை மிகவும் கிட்ட கொண்டு வந்துள்ள போதிலும் கூட எம்மவர்களாலே எமக்கு அழிவு, நாம் எப்போதும் ஒரு உணர்ச்சி உந்துதலுக்கு அடிமையாகவே எம்மை ஆட்படுத்தி கொண்டுள்ளோம். இதிலிருந்து எப்படி நாம் மீள வேண்டும்? மீண்டு வருவதற்கான தேவை என்ன? எதற்காக நாம் மீள வேண்டும்?

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒவ்வொரு இணையத்தளத்தையும் உருவாக்கி கொண்டு எந்தவொரு உடன்பாட்டிற்கும் வராமல் வரமுடியாமல் மாக்ஸியம் லெனினிஸம் பேசுவதில் யார் கெட்டிக்காரர் என்பதில் தான் நாம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கு முயற்சி செய்து கொண்டுள்ளோம். எப்பொழுது தான் இந்த மேதாவித்தனங்கள் முடிவுக்கு வரப் போகின்றது? இவ்வளவு காலமும் நாம் காட்டிய மேதாவித்தனங்கள் போதுமானது என்றே நான் நினைக்கிறேன். அப்படியானால் இதற்கு மேல் நாம் என்ன செய்ய வேண்டும்?

1) எமது அரசியல் தலைமைகள் அறுபது வருடமாக ஈழத்தமிழர்களுக்கு என்னதான் செய்திருக்கிறார்கள்?

2)எல்லா இயக்கங்களிலும் நடந்த படுகொலைகளையும் வெளிக் கொணர்ந்து போராடவென வந்தவர்களை ஏன் அடித்தும் விச ஊசி போட்டும் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் எரித்தும் புதை குழிகளிலும் கொன்று தள்ளினார்கள் என உரிய விளக்கங்களை சம்மந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இப்படியான மனநோயாளிளை இனங்கண்டு நடந்து முடிந்த மனிதப் பேரழிவுகளை மீண்டும் வராது தடுக்க முடியும் என நினைக்கிறேன்.

கடந்த கால ஈழத்து அரசியலில் நாம் விட்ட தவறுகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் சில தகவல்களை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதில் சரி பிழை இருப்பின் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

1948 ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. எப்போதும் சுதந்திரம் கிடைத்த மக்கள் சந்தோசமாகவே இருந்திருப்பார்கள். அப்படியென்றால் தமிழர்களும் சந்தோசமாகவே இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் வாழ்வு அமைதியை இழந்திருந்தால் அங்கே பிரிவினை என்றொரு பேச்சு இருந்திருக்கும். அக்கால கட்டத்தில் பிரிவினை என்ற எண்ணம் தோன்றியிருப்பின் ஏன் இவர்கள் ஆங்கிலேயரிடம் பிரிவினை என்ற கொள்கையை வைக்கவில்லை. ஏன்? தெரிந்தவர்கள் பதில் தாருங்கள். பெரிய படித்தவர்கள் அரசியல் வாதிகள் குறிப்பாக ஜி ஜி பொன்னம்பலம் போன்றோர் அக்கால கட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

தமிழர் இளைஞர் காங்கிரஸ் பின்பு காங்கிரசாக மாறியபோது ஜிஜி பொன்னம்பலம் தலைவராக இருந்தார். அந்த காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் மூன்றாம் கட்ட தரத்தில்தான் செல்வா இருந்திருக்கிறார். அப்படி இருந்த செல்வா ஏன் தமிழரசு கட்சியை ஸ்தாபித்தார்? என்பது தான் எனது கேள்வி. ஜனநாயக முறையில் எத்தனை கட்சிகளும் ஆரம்பிக்கலாம். தவறில்லை. ஆனால் என்ன பிழையைக் கண்டு பிடித்து பிரிந்து சென்றார்? இதுவும் எனது கேள்வி. இப்படியே பல தமிழ் தலைவர்கள் எமது மக்களை ஏதோ ஒரு மாயவலைக்குள் சிக்க வைத்து தமது அரசியல் லாபங்களுக்காகவும் சுயநல சுகபோகங்களுக்காகவும் எமது மக்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது அறுபது வருட அரசியலில் எம்மால் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. எந்த ஒரு அடிப்படைத் தேவையான பூகோள ரீதியான பரந்த சிந்தனை இல்லாமலே எமது மக்களை வெறும் உணர்ச்சியூட்டி நெருப்பாகவே அதை உருவாக்கி காய்ந்து கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து தமிழ் மக்களே அரசியல் கற்றவர்களே எமது கடந்த கால வரலாற்றை ஆராயும் போது அதன் தவறுகள் வெட்ட வெளிச்சமாகவே வெளிப்படும். எமது தமிழினம் எப்பொழுதும் கடந்த கால வரலாற்றை படித்துப் பார்ப்பதற்கு விருப்பமில்லாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஏன் என்பதுதான் எமக்கு புரிவதே இல்லை. பல தடவைகள் நாம் எமது அறிவை ஒழுங்காக பயன்படுத்தி இருந்தால் இப்படியொரு முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒன்று நடக்காதவாறு தடுத்திருக்கலாம்.

தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் தமது இருப்பை இழந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் இரு கட்சிகளும் சேர்ந்து தம்மை வளர்த்துக் கொள்வதற்காகவே பிரிவினை என்ற கோசத்தையும் சுயாட்சி சமஸ்டி ஆகியவற்றையும் முன் மொழிந்து 1977 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு வேப்பிலை அடித்து திருநீறு எறிந்து 22 பேரும் பாராளுமன்றம் சென்றார்கள். இவர்களுடைய ஆக்கிரோசமான நெருப்பான வார்த்தைகள் காற்றை விட மோசமான வேகத்தில் இளைஞர்களை வன்முறைக்கு உந்தி தள்ளியது. ஆனால் இந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எந்தவிதமான அடிப்படையான ஆயுத போராட்ட உணர்வுகளும் இருந்திருக்கவில்லை. ஆங்காங்கு நன்கு அரசியல் தெரிந்தவர்கள் தொலை நோக்கு கொண்டவர்கள் இவர்களுடைய அரசியல் தவறு என்று விமர்சித்து இருக்கிறார்கள். விமர்சித்தவர்களை கூட்டணியின் முக்கியஸ்தர்கள் துரோகிகள் என்றே வருணித்திருக்கிறார்கள். இங்குதான் கல்வியாளர்கள் மக்களை நேசித்தவர்கள் பண்புள்ளவர்கள் எல்லோரையும் அழித்தொழிக்க ஆரம்பிக்கிறார்கள்.

பின் பலர் உணர்ச்சி மிக்க இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். எந்தவித விசாரணைகளுமின்றி விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படாமல் பல உயிர்களை சுட்டுக் கொல்கிறார்கள். இந்த கொரூர கொலைகளை த.வி.கூட்டணி எந்த கண்டனங்களுமின்றி மௌனமாகவே இருந்து இந்த படுகொலைகளுக்கு உரம் எறிந்து எண்ணை ஊற்றி ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அரசியல் சுயநல நோக்கங்களுக்கான இளைஞர் வளர்ப்புக்கள் இறுதியில் இவர்களையே கொலை செய்து விடுகிறது. தமிழ் மக்களாகிய நாங்கள் எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் எப்படி த.வி. கூட்டணியை நூறு வீதம் ஆதரித்து எமது விடிவிற்காக பாராளுமன்றம் அனுப்பினோமோ அவர்களைக் கொன்றவர்களையும் பின்பு ஆதரித்துள்ளோம். பல இயக்கங்களையும் உன்னத மனிதர்களையும் ஒன்று விடாமல் அழித்துக் கொன்ற தமிழ்ஈழ விடுதலைப் புலிகளையும் நாம் ஆதரித்துக் கொண்டுதான் இருந்தோம். இந்தக் காட்டு மிராண்டிகள் உலக அரங்கிலே எமது பிரச்சனைகளைப் பேசுவதற்கே மனிதர்கள் இல்லாத அளவிற்கு கொன்று புதைத்து போட்டிருந்தார்கள்.

இப்பொழுதும் கூட ஐம்பதாயிரம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கவீனர்களாகி வறுமையிலும் பிச்சைஎடுத்துக் கொண்டும் உள்ளார்கள். அவ்வளவு கொடுமைகள் நடந்து முடிந்து விட்ட நிலையிலும் பல போராளிகள் பொதுமக்கள் உயிருடனே சித்திவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையிலான புகைப்படங்கள் காட்சிகள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படியான கோரமான பிடியில் இருந்து தமிழ் மக்கள் இன்னும் மீளவேயில்லை. ஆனால் புலம்பெயர் புலிப்பினாமிகளும் அவர்கள்சார்ந்த தமிழினமும் கடந்தகாலத்தில் நிகழ்ந்த குற்றங்களை உணராமல் ஆராயாமல் ஈழத்தமிழ் மக்களின் குருதி காய்வதற்கு முன்னமே வட்டுக் கோட்டை தீர்மானம் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் எனக் கூறிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். உண்மையில் இதயமுள்ள மனிதர்களா இவர்கள்?

நாம் வாழும் இந்த ஐரோப்பிய நாடுகளில் எத்தகைய ஐனநாயகத்தை மனிதப் பண்பை சட்டங்களை மதித்து எப்படி வாழ்கிறார்கள். ஒவ்வொரு வேலை செய்யும் போதும் எப்படியெல்லாம் ஆராய்ந்து முடிவு எடுக்கிறார்கள் என்பதெல்லாம் எம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. ஆனால் தமிழர்களாகிய நாங்கள் மாத்திரம் மனிதப்பண்பை இழந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மீண்டும் ஜிரிவி தனது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டுள்ளது. ஜிரிவி யின் அழுகுரல்கள் உண்மையில் எந்தக் கருங்கல் இதயம் கொண்டவர்களையும் கரைத்து விடும் சோகம் வேதனை நிறைந்தது. ஆனால் இந்த அழுகுரல்களால் தமிழரைத் தவிர வேறெந்த இன மக்களையும் எம்மோடு சேர்ந்து கவலைப்பட வைக்க முடியவில்லை. ஏன்? ஜிரிவி உரிமையாளர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் அனுதாபங்களில் தான் அவர்களுடைய பிழைப்பு ஓட்டப்படுகிறது. இது சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் புரிந்த ஒன்று. எப்படி இந்த அரசியல் அறிவு மனிதப் பண்பு இரக்கம் இல்லாத பிரபாகரனை இந்த தமிழனம் ஆதரித்ததோ அதே போல் நாடு கடந்த அரசாங்கத்தையும் ஆதரிக்க கோருகின்றது. பிரபாகரனை ஆதரித்த குற்றத்திற்காக மூன்று லட்சம் தமிழர்கள் மரணத்தை அடைந்து, கைகால்களை இழந்து, முள்ளிவாய்காலில் பிரபாகரனுடைய பிணம் நாதியற்று உரிமை கோர ஒரு ஈ காக்கா கூட இல்லாமல் கோவணத்துடன் கிடந்தது செய்திகளாக வந்து சேர்ந்தது.

முப்பந்தைந்து வருட போராட்டம் அரசியல் பற்றாக்குறையாலும் சர்வாதிகார போக்காலும் தமிழ் மக்களை அநாதையான நிலைக்கு தள்ளிற்று. ஏன் இவ்வாறு தள்ளப்பட்டது என யாராலும் ஆராயப்படவில்லை. ஆனால் புலிப்பினாமிகள் தமிழ் மக்களுக்குள் இருந்த துரோகிகள் தான் காரணம் என வரலாற்றை புரட்டிச் சொல்கிறார்கள். மேலும் பிரபாகனும் அவரது குடும்பமும் தமிழ் மக்களுக்காகத்தான் உயிர் கொடுத்தார்கள் எனவும் சூரிய தேவன், கரிகாலன், ராஐகோபுரம் என்றெல்லாம் புகழ் பாடுகிறார்கள். ஆனால் தலைவரும் புலிகளும் தமது உயிர்கள் பறிக்கப்பட போகின்றன என தெரிந்தும் மோசமான கொடுமைகளை இறுதி நேரத்திலும் தமிழ் மக்களுக்கு செய்தார்கள்.

1)மக்களுக்காக அனுப்பப்பட்ட சீனி பருப்பு போன்றவற்றை விற்று காசு பார்த்தார்கள்.

2)சாப்பாட்டிற்கே வழியற்ற குடும்பங்களின் 10, 12 வயது பிள்ளைகளை பிடித்து சென்றார்கள். பெண் குழந்தைகளின் தலைமுடியை கட்டையாக வெட்டி இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தார்கள்.

(3)தாம் தமிழினத்தின் காவலர்கள் என சொல்லி தமது இனத்தை தாமே கொன்று குவித்து போர் குற்றம் செய்தார்கள்.

இலங்கை அரசு போர் குற்றம் செய்தது என கண்டிக்கும் நாம் புலிகள் செய்த போர் குற்றங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் சுயநலம் மிக்க தமிழர்கள் தமது மக்கள் மத்தியில் அம்பலமாவார்கள். ஆனால் ஜிரிவி ஒற்றுமை இல்லை எல்லோரும் ஒன்றுபடுவோம் என்றே அறைகூவல் விடுத்துக் கொண்டு இருக்கிறது. ஏன் இவர்கள் ஒன்றுமே தெரியாத ஞான சூனியங்களாக இருக்கிறார்கள். இத்தனை அவலங்கள் நடந்து மக்களை அகதிகளாக முகாம்களிலும் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களின் செய்திகளை அறிந்து பார்த்த பின்பும் எந்தவித நடவடிக்கைகளுக்கும் தங்களை தயார்ப்படுத்தாமல் தமிழீழ அரசாங்கம் என ஒன்று தயாரித்து இருக்கிறார்கள். இவர்களுடைய தயாரிப்புக்களில் தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் என்ற பிரமாண்டமான படம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு கடலிலே கரைக்கப்பட்டு விட்டது. இந்தப் படத்திற்கான சுய விமர்சனம் இவர்களால் ஒருபோதும் முன்வைக்கப்படவில்லை. ஓன்றுமே நடக்காத மாதிரி இப்போது மே 18 ம் திகதி நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அகிம்சைப் படத்தை திரைக்கு விட்டிருக்கிறார்கள். தயவு செய்து தமிழ் மக்களே இந்தப் படத்திற்கான விமர்சனத்தை முன்வையுங்கள்.

அத்தோடு தமிழ் மக்களே! மற்றவன் தமிழ் ஈழத்தை எடுத்துத் தருவான் நாம் இங்கிருந்து எமது பிள்ளைகளை டாக்டர்களாக்கி பட்டதாரிகளாக்கி உள்ள கலைகளெல்லாம் கற்பித்து அரங்கேற்றங்கள் செய்து, நாங்களும் வீட்டு வாசலில் ஏறினால் கார் இறங்கினால் கார் காஞ்சிபுரம், பனாரஸ் பட்டுவேட்டி -கட்டி கட்டியாய் தங்கம், வறுத்த கோழி, பீட்ஸா என தின்று குடித்து உள்ள சுக போகங்களையும் கைவிடாது- போனால் போகுது இலங்கை அரசாங்கம் இதற்கெல்லாம் ஊருக்கு போகும் போது கோபிக்கவா போகின்றது என வட்டுக் கோட்டை, நாடுகடந்த அரசாங்கம் போன்றவற்றிற்கு கைகளில் மைதடவி வாக்களித்து – ஜிரிவிக்கு தொலைபேசி எடுத்து அரசியல் விமர்சனங்ளைப் பேசிக் கொண்டு துளி இரத்தம் சிந்தாமல் ஐரோப்பாவின் ஜனநாயக உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஈழத்தின் அப்பாவி மக்களின் குருதியிலே வாழ்ந்தது போதும்!

ஐயா புலம்பெயர் தமிழினமே! ஒவ்வொருவரும் முதலில் உங்களது பிள்ளைகளைப் போல் மற்றவர்களுடைய பிள்ளைகளையும் நேசியுங்கள். ஐரோப்பாவில் இருக்கும் புலிப் பினாமிகளே! சுயநல பேய்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறு காய்ச்சல் என்றால் கூட வேலைக்கு உடனடியாகவே லீவு போட்டு விட்டு வைத்தியரிடம் கொண்டு ஓடுகிறீர்கள். சொல்லப் போனால் உங்களுடைய பிள்ளைகள் வைத்தியராகவோ பொறியியலாளராகவோ ஆக்குவதற்கு துடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஆண் பெண் என எந்த பேதமும் பாராமல் புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு போய் பலியிட்ட போது எத்தனை பச்சிளம் பாலகர்கள் குண்டடிபட்டு துடித்திருப்பார்கள். அதை படம் பிடித்து உங்கள் தொலைக்காட்சிகளில் கண்ணுங்கருத்துமாய் ஒளிபரப்பி காசு சேர்த்தீர்கள்.

புலி பினாமிகளே! புலம்பெயர் நாடுகளில் இருந்து எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளை தற்கொடை படைக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். தயவு செய்து பதில் தாருங்கள். ஜிரிவி அறிவிப்பாளர்களே! மிகவும் கவலை தோய்ந்ததாக முகங்களை வைத்துக் கொண்டு உணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்கிறீர்களே உங்களுடைய பிள்ளைகள் யாராவது ஈழத்தில் போராட அனுப்பப்பட்டு கொல்லப்படடுள்ளார்களா? ஈவு இரக்கம் இருந்தால் நீங்கள் விட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள்.

இறுதியாக, தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் தனிநாடு பிரிந்து தான் ஆக வேண்டும். சந்தர்ப்பம் தன்னலமற்ற தியாகம் நேரம் இவைகள் சரியான தருணங்களில் பாவிக்கப்படும் போது நிச்சயம் ஈழம் மலரும். தயவு செய்து புலப்பினாமிகளே தமிழர் தொலைக்காட்சிகளே நீங்கள் ஈழப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருங்கள். நீங்கள் முற்றாக ஒதுங்கி இருக்கும் பட்சத்தில் தரமான நேர்மையான மனிதநேயம் மிகுந்தவர்களால் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

முதலில் அங்குள்ள மக்களின் வறுமை அகன்று நிம்மதியாக மூன்று வேளை உணவு உண்ண ஏற்பாடு செய்ய வேண்டும். அங்குள்ள குழந்தைகளின் கல்வியை குறிப்பாக வளர்க்க வேண்டும். இவற்றை திட்டமிட்டு நடத்தி வெற்றி காணவேண்டும். ஏனெனில் சிங்கள் அரசு திட்டமிட்டு இவற்றை அழித்து கொண்டிருக்கிறது. ஆனால் புலிப் பினாமிகளே!! நீங்கள் அமெரிக்காவில் பாராளுமன்றம் கட்டவென பணம் சேர்த்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. நீங்கள் நடக்க முடியாதவைகளை சொல்லித் தான் இதுவரை காசு சேர்த்தீர்கள். இனியும் சேர்ப்பீர்கள்.

தமிழ் மக்களே! இனியும் தொடர்ந்து ஏமாளிகளாக இருக்காதீர்கள். தமிழினம் மேலும் அழிவதற்கு காரணமாக இருக்காதீர்கள்.

சுன்னி ஆயுதக் குழுவின் தலைவருக்கு ஈரானில் மரண தண்டனை

ஈரானில் கைது செய்யப்பட்ட சுன்னி ஆயுதக் குழுவின் தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் குறித்த சுன்னி ஆயுதக் குழுத் தலைவர் அப்டொல்மாலிக் ரெஜி கைது செய்யப்பட்டிருந்தார்.

அப்டொல்மாலிக் ரெஜி, ஜூன்டல்லாஹ் கிளர்ச்சிக் குழுவின் தலைவராக கடமை யாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப் பினர்கள் முன்னிலையில் ரெஜிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிர விசாரணைகளின் பின்னர் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பலுகிஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற கடுமையான குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் ரெஜிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் முகவராக செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னதாக ரெஜியின் சகோதரருக்கு ஈரானிய நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றியிருந்தது. எவ்வாறெனினும், ஜூன்டல்லாஹ் அமைப்புடன் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அமெரிக்கா நிராகரித்துள்ளது.

யாக்கையின் வாழ்க்கை!!! நோர்வே நக்கீரா

யாக்கையின் வாழ்க்கை!!!

பூக்கள் சிரிக்க
பூமகள் சிறப்பாள்
பாக்கள் பிறக்க
பாரே சிறக்கும்.

ஐரோப்பியப் பூக்கள் மலர
மகரந்தம் பறக்கும்
மகிழ்ச்சியை அழிக்கும்.
அழகிய மலர்களின் மகரந்தங்கள்
ஐரோப்பாவில் எமக்கு அலேர்ஜி
ஐரோ மட்டும் என்றும் அலாதி

சொண்டு உண்டு உண்டு என்று
சொண்டு உண்டு
சொண்டிழந்து போனவர்கள்
பொய்வாயை மெய்வாயாக்க
செவ்வாய் செய்கிறார்கள்.
அது செவ்வாயல்ல
செய்வாய்
அழகுறச் செய்வாய்
வாய்களில் மட்டுமா பொய்
வார்த்தைகள்??

கண்கெட்டுப் போனவர்கள்
கண்விட்டுப் போய்விடாது
கண்கீறிப்போகும்
காட்சிதான் அஞ்சனமோ?
கண்களின் வஞ்சகமோ?
கண்கீறிய காயங்கள்
விண்ணேறி வலித்தாலும்
பெண்மனத்தில் இல்லைப் பேதமை
கண்கனத்துக் கொண்டாது
கண்ணீரில் சாதனை

விதியின் கரங்கள்
முகத்தில் எழுதிய
வரைபடம்தானே வயது
அதன் முதிர்வு.
விதியைக் கூட
சதிசெய்து அழிக்கும்
சாதனைதானே மேக்கப்பு (ஒப்பனை)
பெண்ணே கீப்பப்பூ

ஒப்பனையில்லா ஒப்பனை கூட
வைப்பனையாகும் முகங்களிலே
செப்பனை செய்யா கற்பனைக்களத்தில்
காளியின் காட்சியின் தரிசனமே.

கண்ணுக்குக் கலர்வில்லை
கண்மயிருக்கு மஸ்காரா
தலைமுடிக்கு விலைகொடுத்து
கலர் அடித்துக் கலைகாணும்
பொய்முடி தரிக்கும்
மெய் மடிந்த பொய் வாழ்க்கை

கலர் கலராய் கலர் அடித்து- எம்மை
கலர்மனிதர்கள் எனக் கசக்கும்
நிறமிழந்த ஐரோப்பிய
நிஜமற்ற நிதவாழ்க்கை
துவேசம்.

பாசமெல்லாம்
ஆபாசமாகி
ஊர்வேசம் போடுகிறது
ஐரோப்பா

மெய்மேல் மெய் படுத்து
பொய்போகும் வாழ்க்கையை
மெய் என்றும் காட்டும்
காக்கைகளே தின்னத்துடிக்கும்
யாக்கையின் வாழ்க்கைதான்
வாழ்க்கையா?

இச்சேர்க்கையின் சீற்றம்
இலங்கையிலும் தொற்றுதே
தமிழினத்தில் ஒர் ஐரோப்பா
ஊரில் இனி உருவாகும்.

நோர்வே நக்கீரா
11.06.2010

புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

kp.jpgஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணருக்கு கே. பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆதரவாளர்கள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர். புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.

கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் போதே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்துள் ளனர். புலிகளின் ஆதரவாளர்களது இந்த மனமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த குமரன் பத்மநாதன் (கே. பீ.), வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தற்போது யதார்த்த நிலையை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து நாட்டின் நிலவரத்தைப் புலம்பெயர் தமிழர்கள் நன்கு அவதானித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நாட்டில் அமைதியை விரும்பாத சில அமைப்புகள் எதிர்மறையான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தன. எனினும் கடந்த ஒரு வருட காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகவிருந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பாரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பத்மநாதன் தலைமையிலான குழுவினர் வடக்கில் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும், அதனை நிவர்த்திப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப் பட்டுள்ளதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.

“புலிகள் இயக்கத்திற்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்த குமரன் பத்மநாதன், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். “வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம்” எனப் பெயரிடப்படவுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம், போருக்குப் பின்னரான மனிதாபிமானப் பணிகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் புலிகளுக்குப் பல மில்லியன் டொலர் சொத்து உள்ளதாக கூறிய குமரன் பத்மநாதன், புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கையாள்வோர் தற்போது அதனை நாட்டின் மனித நேயப் பணிகளுக்குப் பரிமாற்றம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்பதாகக் கூறிய கே. பீ, எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

குவைத் இளவரசர் சுட்டுக் கொலை

kuwait.jpgகுவைத் இளவரசர் ஷேக் பாசல் (52), அவரது மாமாவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கார் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக இளவரசரின் மாமா அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இளவரசரின் உடல் நேற்றே அடக்கம் செய்யப் படுமென குவைத் அரசு தெரிவித்திருந்தது. கொலை குறித்து உடனடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. பலமுறை துப்பாக்கியால் சுட்டும் குவைத் இளவரசர் சையிக் பாசல் தப்பி விட்டார்.

தற்போது துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டார் என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சுட்டுக் கொல்லப்பட்ட இளவரசர் ஷேக் பாசல் குவைத்தின் 12 வது அரசர். ஷேக் ஷாப் அல்சலீம் அல்சபாவின் பேரன் ஆவார். இளவரசர் ஷேக் பாசலின் கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.