கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மழை நாடகம் – வாழ்க்கையின் தருணங்களை நவீன உளவியல் கோட்பாடுகளின் மீதாக பொருத்திப் பார்க்கும் முயற்சி : கூத்தலிங்கம்

Mazhaiலண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று யூலை 22 2010 சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’ ஆகிய இரு நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தினால் மேடையேற்றப்பட்டது. சென்னையில் லண்டன் அவைக்காற்றுக்கழகத்தின் நாடகங்கள் மேடையேறியது இந்நாடகம் தொடர்பாக கூத்தலிங்கம் அவர்கள் ‘நட்பு’ இணையத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகிறது.

இந்நாடகம் பற்றிய மற்றுமொரு பார்வை Psychological drama என்ற தலைப்பில் ஹிந்து பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அதனைப் பார்க்க: http://www.hindu.com/fr/2010/08/20/stories/2010082051230600.htm

._._._._._.

Mazhaiமிகவும் நாகரீகமடைந்து விட்டதாகச் சொல்லப்படும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் அவனது உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லவியலாத நிலையில் அவனது எண்ணங்கள் ஆழ்மனதில் வீழ்படிவாகி பிறகது அவனது சொற்கள், செயல்கள் மற்றும் வாழ்க்கை நகர்வுகள் யாவற்றிலும் வெவ்வேறு விதமாகப் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கின்றன. ‘மழை’ நாடகத்தில் புரபொசர் தன் மகளை திருமணம் செய்து கொள்ளாதபடி அவளை தன் கடைசி மூச்சு நின்று போகும் வரையில் தன்னருகேயே வைத்திருந்ததற்கான காரணம் மகள் மேல் கொண்ட பாசத்தினாலா? தன்னை கடைசி தருணம் வரையில் கவனித்துக் கொள்ள வேண்டியதற்கு ஆள் இல்லாமல் போய்விடுமே என்ற பயத்தினாலா? அல்லது மகள் மேல் அவர் கொண்ட நுட்பமான காதலினால், அவளை இன்னொருவர் தொடுவதை பொறுத்துக்கொள்ள இயலாத பொறாமையினாலா? – மழை நாடகத்தின் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும், அவர்கள் சந்தித்து விவாதிக்கும் தருணங்களும் பார்வையாளர்கள், தங்களைத் தாங்களே மனவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும் சூழலுக்கு அதன் காட்சிகள் உதவி புரிவதாய் உள்ளன. உரையாடல்கள் அனைத்தும் உளவியல் கோட்பாடுகளுடன் ஏதோவொரு வகையில் தொடர்புகொண்டபடியே நகர்கின்றன. நிர்மலா டாக்டர் ஜேம்ஸிடம் ‘I NEED A MAN’ என்று சொல்ல, அவர் திகைத்து பதட்டமடைந்து, மறுத்து, தனக்கு சமூக சேவையில் மட்டும்தான் தீவிர ஈடுபாடு என்று சொல்ல, அவள் அவனைப் பார்த்து ‘நீ ஒரு Impotent’ என்றும் அதை மறைப்பதற்காகவே திருமண வாழ்க்கையிலிருந்து விலகி சமூக சேவகன் என்று சொல்லி மற்றவர்கள் கவனத்தை திசைதிருப்பி விடுகிறாய், இது ஒன்றிற்குப் பதிலாய் இன்னொன்றை பதிலீடு செய்து மறைத்துவிடும் உபாயம்’ என்ற வகையில் அவளது பேச்சு அமைவதோடு ‘ALL  Saints are impotent’ என்னும் இன்னொரு உளவியல் கோட்பாட்டை அவ்வப்போது சொல்கிறாள். அப்பா (புரபொசர்) இறந்த மறுநாளிலிருந்தே விடாத மழை தொணதொணத்து பேய்ந்து கொண்டிருப்பதை நிர்மலாவும் அவளது சகோதரன் ரகுவும் அவ்வப்போது சன்னலருகே போய் பார்க்கிறார்கள்.

Mazhaiநிராசையுடன் இறந்த அப்பாதான் இப்பொழுது வெளியே விடாத மழையாக நசநசத்துப் பேய்ந்து கொண்டிருக்கிறாரோ என மகள் நிர்மலா அய்யம் கொண்டு அச்சப்படுகிறாள். மகன் ரகுவை புரொபொசருக்கு கடைசிவரை பிடிக்காமல் போய் அவனை தந்தை வெறுத்ததற்கான காரணத்தை அவனே தங்கை நிர்மலாவிடம் சுருக்கமான கதை போலச் சொல்கிறான் – புத்தகங்களையே மனைவியாக்கிக் கொண்டவர் அப்பா. அம்மாவை இன்னொருவருடன் படுக்கையில் வைத்து அவர் பார்த்துவிடும் நிலையில் அவர் அம்மாவை திட்டுகிறார். அம்மாவோ அவரைப்பார்த்து கேலியாக விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அப்பா உடனே கையறுநிலையில் அழத்தொடங்குகிறார். அங்கே சிறுவனான மகன் ரகு வந்து அழும் அப்பாவை பார்த்துவிடுகிறான். அவருடைய அகங்காரம் (Ego) முற்றிலும் சூன்யமடைந்திருந்த நிலையில் அவரை அவன் நேருக்கு நேர் பார்த்துவிடுகிறான். அன்றிலிருந்து அவர் தன் மகன் மேல் வெறுப்பு கொள்கிறார். ‘மழை’யின் சின்னச் சின்ன தருணங்கள் கூட மனதின் நுட்பமான தளங்களை புலனாய்வு செய்பவை.

தனது வாழ்க்கை தந்தையின் சுயநலத்தால் தடுத்து ஒரு புள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டதன் கோபம் நிர்மலாவின் எந்த ஒரு பேச்சிலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது – புரபொசரின் இறப்புக்குப் பிறகும்.

Mazhaiபுரபொசரின் இறப்பு நடக்கும் இரவில், டாக்டர் ஜேம்ஸ் வந்து அவரை பரிசோதித்துக் கொண்டிருக்கையில், மின்சாரம் நின்றுபோய், நிர்மலா இரண்டு மெழுகுவர்த்திகளை அதன் தீபங்களோடு ஏந்தி வருகிறாள். தந்தை இறந்து போய் விட்டதை மருத்துவர் ஜேம்ஸ் சொல்ல, அவள் மெழுகுவர்த்திகளை தந்தையின் இரு பக்கங்களிலும் மெதுவாக வைக்கிறாள். அதுபற்றி பின்னர் அவள் சகோதரனுடன் விவாதித்துப் பேசிக்கொண்டிருக்கையில், அன்று அவர் இறந்துபோக வேண்டி, அதற்காகவே தந்தையை காலையிலிருந்தே தான் தயார்படுத்தி வந்ததாகச் சொல்கிறாள் நிர்மலா. சகோதரன் ரகு அவள் அருகே போய் அவள் படித்துக் கொண்டிருக்கும் உளவியல் நூலைப் பார்க்கிறான். அந்தப் புத்தகத்தின் பெயர் – Ethinic and Socio aspect of Murder.
அன்பு வெறுப்பாகவும் பொறாமையாகவும் பிறழ்வதை ரகு ஓரிடத்தில் அதை Sublimation என்கிறான் – ஒன்று வேறொன்றாதல்.

டாக்டர் ஜேம்ஸ் நிர்மலாவின் ‘I Need a man’ என்னும் வார்த்தையைக் கண்டு பயந்தவனாக, மக்கள் சேவை என்றெல்லாம் பேசியவனாக மறுத்துவிடுகிறான்.

அவள் சன்னலுக்கு வெளியே நசநசத்துப் பெய்யும் மழையைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அவளது சகோதரன் ஆறதலாக அவளது முதுகில் கை வைக்கிறான். அது நாடகத்தின் கடைசித் தருணமாய் உறைந்து நிற்கிறது.

Indira_Parthasarathyவாழ்வின் சிறுசிறு அசைவுகளையும் நவீன உளவியல் கோட்பாடுகளுடன் பொருத்திப் பார்த்து, மனித மனவெளி குறித்த நுட்பமான ஆய்வு கொள்ளும் முயற்சியாக இந்திரா பார்த்தசாரதியின் எழுத்தில் உருவான ‘மழை’ நாடகம் அமைந்ததோடு அல்லாமல் பாசாங்கின் மேல்பூச்சுகளைக் கலைத்து, மனதின் நிர்வாணத்தை வெளிச்சத்தின் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
வசனங்களால் காட்சிகளை முன்னெடுத்துச் செல்வதாய் அமைக்கப்பட்டிருக்கிறது – ‘மழை’.

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

University_of_Jaffna_Logoயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதம் தமிழ்சமூகத்தின் மிகமுக்கிய நிறுவனம் ஒன்றை கேள்விக்கு உட்படுத்தி இருந்தது. இதன்மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய பல்வேறு விடயங்களும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிஸ்தார் எஸ் ஆர் மொகமட் இன் இக்கட்டுரை பிரசுரமாகிறது. பல்கலைக்கழகங்கள் கண்ணாடி போன்று சமூகத்தை உள்ளவாறே மட்டுமே பிரதிபலிக்க முடியுமா? இல்லையேல் சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியனவா? என்ற அடிப்படைகளில் விவாதம் அமைகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:
‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்
._._._._._.

பல வாரங்களுக்கு முன்  ஊடகவியலாளர் திரு. ஜெயபாலனினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமூகமாற்றமும் யாழ் பல்கலைக்கழகமும் சம்பந்தமான விவாதஅரங்கும் அதை தொடர்ந்து வந்த பேராசிரியர் ஃகூல் அவர்களின் பேட்டியும் ஆரோக்கியமான பல கருத்துகளை தாங்கிவந்த போதிலும் அவை ஒரு அடிப்படை கேள்வியில் கவனம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது. அதாவது சமூக மாற்றத்திற்கு பல்கலைக்கழகம் தானா அடிப்படை என்ற கேள்வியே அதுவாகும். இருந்தும் இந்த கேள்வி கேட்கப்படாமலே ஒரு முடிவு எய்யப்பட்டுவிட்டதாக தோன்றுகிறது. சமூக மாற்றத்தை யாழ் பல்கலைக் கழகம் செய்யத்தவறி விட்டது என்பதே அந்த முடிவு.

சமூகமாற்றம் என்பது என்ன? அது ஒரே நாளையில் ஏற்படக் கூடியதா? அல்லது அது ஒரு தொடர்ச்சியான இயங்கியலை கொண்டதா? அல்லது ஒரு சமூகத்தின் குறைபாடுகளாக நாம்காணும் அம்சங்களை அச்சமூகத்தில் இருந்து நீக்கிவிட்டால் அது சமூக மற்றமாகுமா? ஏதாவது ஒரு வகையில் தனது பழைய நிலையை ஒரு சமூகம் மாற்றிக்கொண்டால் அதை ஒரு முன்னேறிய சமூகமாக கொள்ள முடியுமா? ஒரு சமூகமாற்றத்துக்கு எல்லை உண்டா? அப்படியானால் அதன் உச்சஎல்லை என்ன? ஏன் அதை பல்கலைக்கழகம் தான் ஏற்படுத்த வேண்டும்? என்ற நியாயமான  கேள்விகளுக்கெல்லாம் அந்த கட்டுரையிலோ அல்லது பேட்டியிலோ பதில்கள் இல்லை. இருந்தபோதிலும்  சமூக மாற்றத்தின் தேவை இருப்பதாக ஏதோ ஒரு வகையில் உணரும் நாம் அச்சமூகத்தில் புரையோடியிருக்கும் பல அடிப்படை விடயங்களை மூடி மறைத்துவிட்டு அல்லது அவைபற்றி அக்கறைபடாமல் சமூகமாற்றம் பற்றி கதைப்பதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.

சமூகத்தின் அங்கங்களான தனி மனிதர்களில் ஏற்படும் சிந்தனை மாற்றம் அதை பிரதிபலிக்கும் அவர்களின் செயல் மாற்றம் ஒட்டுமொத்த சமூகத்தின் மாற்றத்திற்கு காரணமாகின்றது என்பது எனது நிலைப்பாடு. இந்த அடிப்படை சிந்தனை மாற்றம் என்பது ஒரு பல்கலைக்கழகத்தின் பொறுப்பாக என்னால் பார்க்க முடியாதுள்ளது. ஏனெனில் இந்த உலகத்தின் முதல் பல்கலைக்கழகமான கி.பி 859ல்  மொரோக்கோ (Morroco) வில் உள்ள பெஸ்(Fes) நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் கல்வி சேவை செய்து கொண்டிருக்கும் பெஸ் பல்கலைக்கழகமாகட்டும் அல்லது ஜூலை மாதம் 2010ல்  சுவீடன்(Sweedan) கல்மர்( Kalmar) நகரத்தில் அமைக்கப்பட்ட லின்னயுஸ்(Linnaues) பல்கலைக் கழகமாகட்டும் இவைக்கும் இடையில் அமைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பல்கலைக் கழகங்களாகட்டும் இதில் எதுவுமே சமூகமாற்றதிற்காக அமைக்கப்படவில்லை, சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தெரியவில்லை. இப்படியிருக்க யாழ் பல்கலைக்கழகத்தை மாத்திரம் தனியாக பிரித்து எடுத்து அது சமூகமாற்றத்தை ஏற்படுத்தியே ஆகவேண்டும், அப்படி ஏற்படுத்தும் அளவிற்கு அதன் நிர்வாகத் திறனும், கல்விசார் மேன்நிலையும் ஏதுவாக இல்லை. எனவே அவைகளை பெற்று தமிழ், குறிப்பாக யாழ் சமூகத்தை மாற்றியாகவே வேண்டும், அதற்கு பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ் பல்கலைக்கழகத்துக்கான வருகை இன்றியமையாதது என்பது போன்றதான கருத்து பரிமாற்றம், கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் ஆரம்பிக்கப்பட்ட தென்இந்திய தமிழ் சினிமா போலவே தென்படுகின்றது. 

அதே நேரத்தில் பல பல்கலைக் கழகங்கள் தங்கள் நாடுகளில் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களை, நம் காலத்து சான்றாக வேண்டுமானால் 1976 களில் ஆயத்துல்லா ரூஹ¤ல்லா கொமய்னி  பாரிஸ்(Paris) நகரத்தில் இருந்து கொண்டு ஈரானின் தெ·ரான்(Tehran) பல்கலைகழகத்தின் மாணவர்  மூலம் இஸ்லாமிய புரட்சி என்று தொடங்கி  வெறும் அரசியல் மாற்றத்தையும் அதை தொடர்ந்த பாரசீக குடாநாட்டு பிரதேசத்தில் இன்றும் நிலவிவரும் அரசியல் நிலவரத்தையும் குறிப்பிடலாம், நாம்  தவறாக சமூக மாற்றமாக பார்க்க தொடங்கிவிட்டோமோ என்றும் கேட்கத் தோன்றுகிறது.

பல்கலைக் கழகங்கள் நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை என்றால் அதை முற்றாக நிராகரிக்க முடியாதவாறு சான்றுகள் உள்ளன என்பதற்காக சமூகமாற்ற விடயத்திலும் அதுதான் உண்மை என்றால் அதை ஏற்கக் கூடியதாக நம்மிடம் சான்றுகள் இல்லை.  இந்த வகையிலேயே சமூகமாற்றதுக்கு அடிப்படையாக இருப்பவை எவை என்பதையும், அவைகளை வளர்த்தெடுப்பதில் நிறுவனங்களின் பங்கு என்ன என்பதையும், அவை என்னென்ன நிறுவங்கள் என்பதையும் பார்க்கவேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

என்னை பொறுத்தவரை பாடசாலைகள், மத வழிபாட்டு தளங்கள் என்பவைகளே சமூகமாற்றத்திற்கான பொருத்தமான ஆரம்பபுள்ளிகள். அதிலிருந்தே கோடுகள் வரையப்பட்டு அவை பல்வேறு நிறுவனங்கள் ஊடாக இணைக்கப்படல் வேண்டும். எந்த பாடசாலை சமூக அநீதி பற்றி மாணவ குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது, அல்லது எத்தனை பாடசாலைகள் அவ்வாறு முயற்சித்தது?  ஆரம்ப பாடசாலையில் பயிற்றப்படாத மாணவனொருவன் பல்கலைகழகத்தில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எந்த அடிப்படையில் எதிர்பார்ப்பது? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதை நாம் எப்போதோ தெரிந்து வைத்துள்ளோமே. ஆக எமது அடிப்படை குணாம்சங்கள் பல்கலைக்கழக சமூகத்தில் எப்படி பிரதிபலிக்காமல் இருக்கும்?

மாற்றத்தை வேண்டிநிற்கும் விடயங்களில் முக்கியம் பெறுவது சாதி பிரச்சினை என்பது எனது நிலைப்பாடு. இதை தொடர்வது சீதனபிரச்சினை.  இது பாடசாலைகளில் முளைவிடாமல் தடுப்பதற்குப் பதிலாக, அது கதைப் பொருளாக்கப்படாமல், விமர்சனத்துக்கு உட்படுத்தப்படாமல், வெட்ட வெளிச்சத்தில் அங்கேயே ஆரம்பமாகி, வழிபாட்டு தளங்களால் வளர்க்கப்பட்டு, திருமண பந்தத்தில் உறுதியாக்கப்படுகிறது. அப்படியிருக்க இடையில் வரும் பல்கலைகழகத்துக்கு மட்டும் ஏன் இந்த பாரிய பொறுப்பு, ஒரு வகை தண்டனை?

சாதிப் பிரச்சினையும், சீதனப் பிரச்சினையும் காட்டமாக இல்லாவிட்டாலும் காலத்துக்கு காலம் அவை பேசு பொருளாக்கப்பட்டன என்பது உண்மையாயினும் அதை நோக்கிய செயல்பாடுகள் நத்தை வேகத்திலேயே செயல்பட்டன. ஆனால் கல்வி கற்பதில் காட்டும் ஆர்வம் மின்னஞ்சல் போல் அதிவேகமாக செல்கின்றன, அது ஆரோக்கியமான விடயமும் கூட. ஆனால் சமூகமாற்றதுக்கு அது உதவியதா என்றால், அந்த கல்வியையும் கூட ஒரு வியாபாரமாகவே பார்க்கப்பட்டதால் சமூக மாற்றத்தில் கல்வி கைகொடுக்கவில்லை என்றே தெரிகிறது.

சாதி, சீதனபிரச்சினை மாத்திரம்தான் சமூகத்தில் புரையோடியுள்ளதா? என்று கேட்டால் ஒரு நீண்ட பட்டியலுடன் அனேகர் வருவர். அதிலே நான் முக்கியமாக கருதுவது யாழ்  சமூகத்தின் மனப்போக்கு. இதுவும் வீட்டுக்கப்பால் பாடசாலையில் இருந்தே ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. மாணவரின் அறிவு நிலையும், அவர்களின் திறமையும் புத்தகத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டு மாணவர் கெட்டிக்காரராகவும், மக்குகளாகவும் முத்திரை குத்தப்பட்டுகின்றனர். இந்த முத்திரை குத்தலும் சாதி அடிப்படையில் ஒரு வகை நியாயப்படுத்தலுக்கு உள்ளாகி ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் கல்வியில் மேதாவிதனத்துக்கும் ஒரு உறவுமுறை கட்டப்படுகின்றது. அல்லது அறியாமைக்கும், இழிநிலைக்கும் இன்னொரு சாதி அல்லது இனம் சொந்தமாக்கப்படுகின்றது. இது மாத்திரமல்ல எப்படியாவது பல்கலைகழகத்தின் வாசல்படி மிதித்துவிட்டால் அது பிறவிப்பயனை அடைந்ததுக்கான அறிகுறியாக கொள்ளப்படுகிறது. ஆண் ஒருவர் பல்கலைக்கழகம் சென்றுவிட்டால் அது சீதனத்தை தீர்மானிக்கும் அளவுகோலாகவும், அதுவே பெண் ஒருவரின் துணையை தெரிவு செய்யும் உரிமையை பறிப்பதாகவும் சிலவேளைகளில் அதுவே அவளுக்கு நிரந்தர கன்னி பட்டத்தையும் பெற்றுத் தருவதாகவும் அமைந்து விடுகின்றது. 

தமிழ் இலக்கிய பாடமாகட்டும், ஓட்டைகளை கிண்டிகிளறும் சட்ட வியாக்கியாணமாகட்டும், சிக்கல் நிறைந்த பெளதீக தேற்றமாகட்டும், தலை சுற்றும் தத்துவமாகட்டும் எதையும் மனப்பாடம் செய்யத் தெரிந்தவன் பகுப்பாய்வுதிறன் இல்லாமலேயே பரீட்சையில் சித்தியடைந்து விடுவான். இது முடியாதவன் கூட “குதிரை” ஓடி விடயத்தை சாதிக்கின்றான். உண்மையில் கெட்டிக்காரனும், திறைமைசாலியும் எந்த சாதியில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் பிறக்கலாம். ஆனால் அவனை வளரவிடாமல் தடுப்பதில் இந்த பாடசாலைகளும், வழிபாட்டு தளங்களும் அவனுக்கு தடைபோடுவதே சமூக அநீதியின் ஊற்று என்பதை நாம் மறக்கமுடியாது.

இந்த குதிரை ஓட்டத்துடன், கல்விக்கடை(tutory) நடத்தல், பரீட்சை வினாத்தாள் வெளியாக்கம், வினாத்தாள் திருத்த நிலையத்தில் (paper correction centres) ஆள் வைத்து புள்ளி ஏற்றல் என்ற பல்வேறு விடயங்கள் யாழ் சமூகத்தை பொறுத்தவரை ஒரு வெளிப்படை இரகசியம். இது ஒரு சமூகத்துக்கு எதிரான குற்றச்செயல் என்பதை எந்த பாடசாலை வெறுத்து ஒதுக்கிறது? மாறக கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றன.

சரி கல்விநிலையங்கள் தான் அப்படி, சமய வழிபாட்டுத் தளங்களாவது கொஞ்சம் முன்மாதிரியாக நடக்கக் கூடாதா? சாதி குறைந்தவராக கணிக்கப்பட்ட ஒரு வழிபாட்டுகாரனை மதபோதகர் ஒருவர் தேவாலயத்துக்குள் அனுமதித்து விட்டார் என்பதற்காக  உயர்ந்தசாதியாக தன்னை தீர்மாணித்து கொண்ட இன்னுமொரு வழிபாட்டுக்காரன் அந்த ஆலயத்தை பூட்டியதும் இல்லாமல் அங்கு புத்தரின் சிலை ஒன்றை  வைத்து கோயிலை இயங்கவிடாமல் செய்த சம்பவம் போன்று எத்தனை நாடகங்கள். இதை எல்லாம் இன்றும் அனுமதித்துக் கொண்டு ஏன் நேராக யாழ் பல்கலைக்கழகத்துடன் போருக்கு செல்லவேண்டும்?

சமயமும், சாம்பாரும் நாங்கள் முன்மாதிரியானவர்கள், மாக்ஸிய கொள்கை கொண்டவர்கள் எனவே கத்தரிக்காயில் உள்ள நம்பிக்கை எமக்கு கடவுளிடமில்லை என்று யாராவது சொல்வார்களானால் அவர்கள் இந்த சமூகத்தை பிரதிபலிக்கவில்லை. ஆகவே இந்த சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர அவர்களால் எள்ளளவும் முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிடலாம். பாடசாலையை, சமயத்தை சமூக மாற்றதுக்காக பயன்படுத்த தெரிந்தவன் தான் யாழ் சமூகத்துக்கு தேவையே தவிர பல்கலைக்கழக நிர்வாகத்தை சரியாக செய்யத்தெரிந்த பேராசிரியர் சமூக மாற்றத்துக்கு என்ன செய்யமுடியும் என்பதுதான் என் கேள்வி?

அடுத்து யாழ் சமூக மனப் போக்கில் முக்கிய இடம் பிடிப்பது “முதன்மை” சிந்தனை. இது “கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய…” என்ற அடிப்படையில் இருந்து பிறந்த அம்சமாக எனக்கு தோன்றுகிறது. இதை பின்வரும் பல சிறிய உதரணங்கள் மூலம் நிறுவலாம்.   

தமிழ் மொழிமூலம் பல்கலைகழகத்தில் கற்கும் மாணவரில் யாழ் பிரதேச மாணவர்களே எண்ணிக்கை அடிப்படையில் அதிகம். அதற்காக அவர்கள்தான் முதன்மை சித்தி பெற தகுதியுடையோர் என்று பொருள்படாது. ஆனாலும் நடப்பது என்ன?  பட்டப்படிப்பின் ஆரம்பத்திலேயே யாழ் மாணவருக்கு முதல் தர (1st Class) சித்தி தொடக்கம் இரண்டாம்தர கீழ் நிலை(2nd Class lower) சித்திவரை எல்லா சித்திகளையும் (கற்பனையில்) தங்களுக்கிடையே பிரித்து எடுத்துக் கொள்வார்கள். அங்கு யாழ் மாணவர் இல்லாவிட்டால் அல்லது அந்த யாழ் மாணவர் வெளிப்படையாகவே படிப்பில் பின்நிற்பவர் என்றால் அந்த கற்பனை சித்தி திருக்கோணமலை மாணவருக்கு, அப்படியும் முடியாது என்றால் மட்டக்களப்பு மாணவருக்கு, அதுவும் முடியாது போனால் வன்னி மாணவருக்கு, அதுவும் கூட முடியாது போனால் மலைநாட்டு மாணவருக்கு, இது எதுவுமே சாத்தியப்படாது போகும் பட்சத்தில் போனால் போகட்டும் என்று ஒரு சோனக மாணவருக்கு வழங்கப்படும். இங்கு நான் காட்ட முற்படுவது தன்னை புத்திசாலியாக, திறமைசாலியாக நினைப்போருக்கு எதிரான போக்கையல்ல, மாறாக தன்  புத்திசாலிதனத்தையும், திறமையையும் ஒத்த அல்லது அதைவிடவும் கூட மற்றவரிடமும் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்பதை கொஞ்சமும் யோசிக்காத  அசட்டை  தன்மையையே.

அடுத்த உதாரணமாக ஒரு சுவாரஸ்யமான விடயத்தை சொல்லலாம். கடந்த 2010 உலககிண்ண உதைபந்தாட்ட போட்டி. உதைபந்தாட்ட முதன்மை நாடுகளான ஜேர்மனியும், ஆர்ஜண்டீனாவும் காலிறுதி போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது  படித்த, நான்குவிடயங்கள் தெரிந்த ஒரு திருக்கோணமலை வாசி எம்முடன்  கூட இருந்தார். “இவங்கள் என்ன விளையாடுராங்கள், ரிங்கோ டீம்(Trincomalle team) இறங்கி இருக்கவேண்டும் இன்னேரம் கதை …” என்று அவர் முடிக்கமுன்னமே என் தலையை சுவரில் அடிக்க வேண்டும் போல் இருந்தது. இருந்தும் பொறுமையை வரவழைத்துக் கொண்டு, இந்த போட்டியின் தேர்வு முறை என்ன, இதற்கு தகுதிபெற்று வர எத்தனை நாடுகளை எந்தெந்த படிமுறையில் சந்தித்து உலக கோப்பை ஆட்டத்துக்கு வர ஒருநாடு  அனுமதிக்கப்படும், அத்துடன்  FIFA (Federation of International Football Associations)வின் உலக தர( World rank list) வரிசையில் இலங்கை எத்தனையாவது இடம் (130 வது) அப்படி இருக்க திருக்கோணமலையின் நிலை… என்று விளங்கப்படுத்த எனக்கு சுமார் 45 நிமிடங்கள் தேவைப்பட்டது. நல்ல வேளை “தமிழீழ கழகம்” (Tamil Ealam Team)என்ற ஒன்று இல்லாமல் இருந்தது இல்லையேல் இந்த உலக கோப்பையுடன் நானும் “துரோகி” பட்டம் பெற்றிருப்பேன்.(இப்போதும் என்ன “தியாகி” பட்டமா, என்ன?)

இன்னுமொரு நகைச்சுவையான விடயமும் இங்கு பொருத்தம் என எண்ணுகிறேன்.  செந்தமிழ் சிம்மக் குரலோன் திரு. அப்துல் ஹமீதின் லண்டன்  IBC (பல வருடங்களுக்கு முன் இடம் பெற்ற) வானொலி பேட்டி ஒன்று. அதில் ஒரு யாழ்(ஆதி)வாசி (கல் தோன்றி மண்…. என்ற அர்தத்தில் மட்டும்) ஒரு புத்திசாலிதனமான கேள்வியை முன்வைத்தார். அதாவது, ஹமீத் அவர்களே! உங்கள் மனைவி ஒரு தமிழ் பெண்மணி அதனால்தான் நீங்கள் செந்தமிழ் பேசுகிறீர்கள் இல்லையா? என்று கேட்டு வைத்தார். ஐயா! நீங்கள் தமிழர், உங்கள் மனைவி தமிழர், உங்கள் இருவரின் பெற்றார் தமிழர், பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, அவர்களின் 10, 20 தலைமுறையினர் எல்லாரும் சுத்த தமிழர் உங்களால் செந்தமிழ் பேச முடிகிறதா, இல்லயே ஏன்? என்று கேற்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ “என் தாய் மொழி தமிழ், அதை நான் அழகாக, சுத்தமாக பேசாவிட்டால் எப்படி?” என்றார். இங்கு நான் சொல்ல வருவது “தமிழர்” அல்லாத ஆனால் தமிழை தாய் மொழியாக கொண்ட ஒருவர் “தமிழர்” ஒருவரின் துணையின்றி தமிழை கூட சரியாக பேச முடியாது என்ற அந்த சிந்தனை போக்கையே. 

இதைபோல் இன்னுமொன்று, “உமக்கு தெரியுமா?, இங்கிலாந்து மகாராணிக்கே கணக்கு சொல்லிக் கொடுத்தவன் தமிழன்”. இப்படி ஒரு சம்பாசணையை எனக்கு ஜேர்மனியில் கேட்க நேர்ந்தபோது, இந்த விடயத்தை சொன்ன ஆள் பற்றி நான் நினைத்தது, போச்சுடா, “இவர் நினைக்கிறார் போலும் மகாராணி இந்த உலகத்தின் அதிசிறந்த அறிவாளி, அந்த அறிவாளிக்கே கணக்கு படிப்பித்தவர் அதி, அதி அறிவாளி, அந்த அறிவாளி ஒரு “தமிழர்”, நானும் “தமிழர்”, ஆகவே நானும்  அறிவாளி” என்பதாகும் (இதுவும் ஒரு வகை சமன்பாடு, திரு. தமிழ்வாதம் கோபிக்க வேண்டாம்)

இப்படி “தமிழ்”, “தமிழர்” என்ற விடயங்கள் தான் எங்கும், எதிலும், எப்போதும் முதன்மையானது அல்லது முதன்மைபெற வேண்டும் என்பது கொஞ்சம் சிக்கல் நிறைந்த விடயமே. இந்த அடிப்படையிலேயே பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கண்ட கனவாக சொல்லப்படும் விடயமும் அமைகின்றது. அதாவது “யாழ் பல்கலைக்கழகத்தை ஆசியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக்கல்” என்பதாகும். கனவுகள் நிஜமாவது ஏதோ உண்மையாகினும் எல்லா கனவுகளும் அப்படியாகும் என்பது கோள்விக்குறியே. ஒப்பிட்டு ரீதியில் யாழ் பல்கலைக்கழகம் இளமையானது, தர வரிசையிலும் பேராதனை, கொழும்பு பல்கலைக் கழகங்களை விட பின்நிற்பது. அங்கே வெளி நாட்டு மாணவர் வந்து கற்கக் கூடிய விதத்தில் ஆங்கில மொழிமூலமான கற்கை நெறிகள் இல்லை. ரஸ்ய, ஜப்பானிய அல்லது ஜேர்மனிய பல்கலைக் கழகங்கள் போல் சுதேச மொழியில் வெளி நாட்டு மாணவருக்கு படிப்பிக்கும் அளவுக்கு தமிழில் புத்தகங்களோ, ஆய்வு நுல்களோ ஏனைய வசதிகளோ இல்லை. ஆங்கிலத்தில் அத்தகைய கற்கை நெறிகள் உருவாகப்படலாம் என்றாலும் வெளி நாட்டு மாணவர் இந்தியாவுக்கோ, சிங்கப்பூருக்கோ அல்லது மலேசியாவுக்கோ சென்று இலகுவாக காரியத்தை முடித்துவிட வசதி வாய்ப்புக்கள் இருக்கும்போது அல்லது அவ்வசதிகள் ஓரளவு பேராதனையிலும், கொழும்பிலும் இருக்கும்போது ஏன் கஸ்டப்பட்டு வெளிநாட்டு மாணவர் யாழ் வரவேண்டும். அப்படி வெளிநாட்டு மாணவர் இல்லாத பல்கலைக்கழகம் ஆசிய தர வரிசையில் எப்படி முதன்மை இடத்தை பிடிக்க முடியும்.  ஆகவே அடிப்படை விடயங்கள் பூர்த்தியாகப்படாமல் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் கனவில் நம்பிக்கை வைத்து அதே கொள்கையில் பிடிப்பாக இருக்கும் பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ் பல்கலைக் கழக வருகையை சமூக மாற்றத்தின் அத்திவாரமாக கற்பனை பண்ணுவது பிரபாகரனின் கனவை நம்பி களமிறங்கிய புலி போராளிகளின் நிலையை ஒத்ததாகும்.

பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ்ப்பாணத்துக்கான மீள்வருகை சமூகமாற்றத்தையே அடிப்படையாகக் கொண்டதென்றால் அது மிகவும் வரவேற்கவேண்டிய விடயம். ஆனால் அதற்காக அவர் யாழ் பல்கலைக் கழகத்துக்குத்தான்  வரவேண்டுமென்பது விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய விடயம். அதாவது பேராசிரியரின் கல்விதகைமை, நிருவாக அனுபவமும், திறமையும் சமூக மாற்றத்தை கொண்டுவருமா என்பது தொடர்பான வாத பிரதிவாதங்கள். 

என்னைப் பொறுத்தவரை பேராசிரியரின் பணி ஒரு பாடசாலையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஒரு பாடசாலையை சமூக மாற்றத்திற்கான ஒரு பரிசோதனை கூடமாக பாவிக்கலாம். அந்த மாதிரி பாடசாலையில் சமூக விஞ்ஞானம் ஒரு முதன்மை பாடமாகவும் சமூக மாற்றத்துக்கான மாதிரிகளை கண்டறியவும் அவைகளுக்கு செயலுருவம் கொடுக்கும் களமாகவும் அதற்கு பேராசிரியர் ஃகூல், அல்லது அவரைவிட பொருத்தமானவர் யார் இருப்பினும் அவர் பொறுப்பாக்கப்படல் வேண்டும். இந்த ஐரோப்பிய பாடசாலைகள் போல் நற்புத்துணை (twined Schools) பாடசாலைகள் நிறுவப்பட வேண்டும். இதன்மூலம் ஒரு பிரதேச மாணவர் மற்றைய பிரதேச மாணவரை அறிந்துகொள்ள அவர்களின் கலாச்சார விடயங்களை பகிர்ந்துகொள்ள ஏதுவாகும். பாடசாலைகளில் மாணவருக்கு மற்ற சமயங்களை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.

பாடசாலை முடித்து பல்கலைக்கழகம் செல்ல முடியாதோருக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கும் திட்டம் வேண்டும்.  சமூகத்தின் அனைத்து தரத்தினருக்கும் ஏற்றாற்போல் கருத்தரங்குகள், பயிற்சி பட்டரைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். நாட்டின் பொது பாடத்திட்டத்துக்கு புறம்பாக, யாழ்பகுதியின் அனைத்து பாடசாலைகளும் ஒன்றிணைக்கப்பட்ட  சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படல் வேண்டும். இவ்வாறு பல சாத்தியமான திட்டங்களை பரீட்சார்த்த ரீதியிலேனும் செய்துபார்க்க வேண்டும்.

ஊழல், லஞ்சம் என்பன யாழ் சமூகத்தில் மாத்திரம் குடிகொண்டுள்ளதாக கொள்ளமுடியாது. இவை நாட்டின் சகல இன மக்களாலும் கைக்கொள்ளப்படும் விடயங்களாகும். பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற நிலைபாட்டை உடைக்கும் முகமாக இதில் முக்கிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். இவற்றை முறியடிக்க சரியான வேலை திட்டங்கள் இல்லாததினால் தான் யாழ் பல்கலைக்கழகம் மீதும் அது வழங்கும் பட்டங்கள் மீதும் சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. பாடக்குறிப்பை மனனம் செய்து அச்சொட்டாக அதை மீளகொடுத்து, அதற்கு திறமைசித்தி பெற்று, அங்கேயே பதவியும் பெற்று புதிய மாணவருக்கு கற்பிக்கும்போது மீண்டும் அதே பாடக்குறிப்பு கைமாறப்படும் போது எப்படி சிறந்த கலாநிதிகளை உருவாக்கமுடியும்? வெறும் கல்லா நிதிகள் அல்லவா உற்பத்தி பண்ணப்படுவர்.  

ஆக, சமூகமாற்றம் என்பது அடி மட்டதில் இருந்து பிறக்க ஆயத்தங்கள் செய்யாமல், ஒன்றல்ல பத்து ஏன் நூறு பேராசிரியரிர் ஃகூல்கள் வந்தாலும்  யாழ் பல்கலைக்கழகம் அதன் நிலையில் இருந்து மாற்றமடையாது என்பது என் நிலைப்பாடு.

Mohamed SR. Nisthar.

13வது அரசியல் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழ் கட்சிகளின் அரங்கம் அரசிடம் கோரிக்கை!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்காக அரசியல் அமைப்பின் 13வது திருத்தச்சட்ட மூலத்தை முழுமையாக நிறைவற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு முன்வைக்கவுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நேரடியாக இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக இக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமிழ் கட்சிகளின் அரங்கம் கடந்த 14ம் திகதி மட்டக்களப்பில் கூடியபோதே இவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐந்தாவது தடவையாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி,  ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த இரா.தரைரத்தினம்,  சிறிரெலோ கட்சியின் பி.உதயராசா மற்றும் எஸ்.சந்திரகாசன் ஆகியோர் கையெழுத்திட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் பல பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகள். தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விசாரணைகளுக்குட்படுத்தப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ் பிரதேசங்களில் இராணுவக் குடியேற்றங்கள் தடுத்து நிறத்தப்பட்டு. அhத்தமுள்ள மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுதல். சிவில் நிர்வாகத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்தல், போரின் போது ஏற்பட்ட அழிவுகளுக்கு நட்டஈடு வழங்குதல்,  வடக்கு கிழக்கின் இனப்பரம்பலில் மாற்றத்தை எற்படுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாகவும், இவை தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கோரிக்கைள் தொடர்பான திட்டவரைவு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பை இணைத்துக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதுடன், அடுத்து நடைபெறும் சந்திப்புகளில் முஸ்லிம், மலையக கட்சிகளை இணைப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க. தமிழ் கட்சகிளின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு எதவும் விடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் இதில் கலந்து கொள்வது குறித்து கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் பங்கு கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழ்த்தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.  இரா.சம்பந்தனின் கொழும்பு இல்ல முகவரிக்கு தபால் மூலம் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டதாகவும். அவர் இந்தியா சென்றிருப்பதால் அவ்வழைப்பிதழ் கிடைக்காமல் போயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பந்தர் நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் தூதுக்குழு கூட்டமைப்பை நேரில் சந்தித்து அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பினை விடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தென்னிலங்கையில் வேலை வாய்ப்பும் தமிழ் மக்களின் சந்தேகங்களும் : விஸ்வா

Sritharan_SivagnamTNA_MPTextile_Factory_in_SLகிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பெண்கள் தொழில்பயிற்சிக்கென கண்டிக்கு அழைத்துச்செல்ல மேற்கொண்ட முயற்சியொன்று  தடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறவனம் ஒன்று 40 யுவதிகளை தொழில்வாய்ப்புக்கென அழைத்துச்செல்ல முயன்ற இறுதித் தருணத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக முன்னர் வெளியான செய்தி : தென்னிலங்கை ஆடைத்தொழிற்சாலைகளில் யாழ்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் இலவச இருப்பிட வசதிகள் மற்றும் மேலதிக வசதிகள் செய்து கொடுக்கப்படும் என துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஏற்கனவே கிளிநொச்சி கிராமங்கள் தோறும் விளம்பர துண்டுப் பிரசரங்களை விநியோகம் செய்து இந்நிறுவனம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்தது. இதனை நம்பிய யுவதிகளும் அவர்களது பெற்றோரும் இதற்கு சம்மதித்து யுவதிகளை கண்டியிலுள்ள குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு அனுப்ப முற்பட்டனர். ஆனால் பொதுமக்கள் சிலரிடம் ஏற்பட்ட சந்தேகங்கள் இறுதி நேரத்தில் நடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு தெரிவிக்கப்பட்டதால். இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, மீள்குடியமர்த்தப்பட்டுள்ள இப்பிரதேச மக்களின் நடைமுறைகள் குறித்தும் விளக்கினார்.

இங்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படுகின்ற போது, குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை உட்பட்ட விபரங்கள் எடுக்கப்பட்டு, குடும்பப் படங்கள் எடுக்கப்பட்டு மேலும் பல பதிவுகளின் பின்னரே சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுகின்றனர்.

கிளிநொச்சிக்குப் பொறுப்பாகவுள்ள சிவில் படைத்தரப்பிடம் அனுமதி கேட்டு இந்நிறுவனம் கடிதம் அனுப்பியதாக தெரிவித்த போதும், படைத்தரப்பிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தையல் இயந்திர இயக்குநர்கள், உற்பத்தி மேற்பார்வையாளர்கள் என இரு வகை வேலைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்து. பயிற்சிக்காலம் முடிவடைந்த பின்னர் அதி கூடிய சம்பளமாக 14 ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும், உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 2அயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரையில் வழங்கப்படும் எனவும், உற்பத்தித் தரக்கொடுப்பனவாக ஆயிரத்து ஐந்நூறு ருபா கொடுக்கப்படுமெனவும் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை சந்தேகத்திடமானதாக இருந்த காரணத்தினால் இறுதி நேரத்தில் குறிப்பட்ட யுவதிகள் அழைத்துச் செல்லப்படும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. இவர்களை அழைத்துச் செல்ல கொண்டு வரப்பட்ட வாகனமும் திரும்பிச்சென்றது. குறித்த நிறுவனத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுமக்களும் விவாதித்துக்கொண்டிருக்கையில்,  அவ்விடத்திற்கு வந்த படையினர் சிலர் குறித்த நிறுவன அதிகாரிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தாகவும் விவாதம் செய்தவர்களிடம் கடும் தொனியில் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, வன்னிப்பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னமும் நிறைவு பெறாத வேளையிலும், மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் கூடாரங்களில் தங்கி வாழும் நிலையில் இருக்கின்ற போதும், அவர்களின் வசதியின்மைகள்; வறுமை நிலைகளைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்ற பல தரப்பினர் முற்படுகின்றமை தெரியவந்துள்ளது. மீள்குடியேற்றம் உட்பட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புகள் தொடர்பான நடவடிக்கைகளை அது அரசதுறையிலானாலும் சரி தனியார் துறையிலானாலும் சரி அதனை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் பொறுப்பும் உத்தரவாதமும் மிக அவசியமானதாக உள்ளது.

கண்டியிலும், தென்பகுதிகளிலும் தொழில் வாய்ப்பின்றி பல சிங்கள தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இருக்கின்ற நிலையில்,  கண்டியைச் சேர்ந்த குறித்த தனியார் ஆடைத்தொழிற்சாலை கவர்ச்சிகரமான ஊதியத்தை விளம்பரப்படுத்தி கிளிநொச்சி பெண்களை வேலைக்கமர்த்த முயல்வதன் உள்நோக்கம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கின்றது. தென்பகுதிகளின் கிராமங்களில் வாழும் சிங்கள யுவதிகள் கூட கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்பட்டு ஊதியம் போதாமை காரணமாக, பாலியல் தொழில்களில் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. கொழும்பின் தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்பிற்காக வரும் திருமணமாகாத யுவதிகளில் பெரும்பாலானோர் ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

மலையத்தில் உள்ள இளம்பெண்கள் தொழில் வாய்ப்புகளுக்கென சிலரால் கொழும்பிற்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு பாலியல் தொழில்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமையும் நடைபெற்று வருகின்றது. வாரம் அல்லது மாதம் ஒரு முறை  பாலியல் தொழிலால் கிடைத்த பணத்துடன் ஊருக்கச்சென்று வரும் இப்பெண்களின் உறவினருக்குக் கூட இது தெரியாமலுள்ளமை கசப்பான உண்மையாகும்.

தென்னிலங்கையின் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி அரபு நாடுகளுக்குச் சென்று சீரழிகின்ற செய்திகளும் நாளாந்தம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், யுத்தத்தால் சகலதையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள வன்னி மக்களின் வறுமையையும், துன்பங்களையும் பயன்படுத்தி அவர்களை சீரழிவிற்குள் இட்டுச்செல்ல முற்படும் தரப்புகளிடமிருந்து தமிழ் இளைஞர் யுவதிகள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோரும், சமூகத்தினரும் விழிப்பாக இருக்கவேண்டும் என்பது அவசியமானதாகும்.

Related News:

சிங்கப்பூரில் பலவந்தமாக பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கை யுவதிகள்!

பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிங்களவர்கள் இல்லாமல் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை. தமிழர்களையும் இஸ்லாமியரையும் கீழ்ப்படுத்தி சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியாது : கலாநிதி ஜோசப் சந்திரகாந்தன்

Peace_Children_Drawingஇலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் தேசிய அணியாக, ஒரு சமூகமாக எம்மைச் சுற்றி எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் நாம் உருவாக்கிய அரசியல் மாயையில் இருந்து நாம் வெளிவர வேண்டும். எமது குறுகிய தேசியவாதம் எமக்கும் எமது சந்ததிக்கும் அளப்பரிய உயிரிழப்புகளையும், அவய இழப்புக்களையும், சொல்லணாத் துன்பத்தையும், வறுமையiயும், பொருள் இழப்பையும், சொத்து இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். 
 
பல நூற்றாண்டுகளாக மிகவும் பழமை வாய்ந்த சமூகங்களாக இலங்கைத் தீவை நாம் பகிர்ந்திருந்தோம். சிங்களவர்கள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மையை நாம் மீழ் ஆய்வு செய்துகொள்ளவேண்டும். இதே வேளை தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் கீழ்ப்படுத்திக்கொண்டு வாழ்வது நிரந்தரமான நம்பிக்கை இன்மை என்பதை சிங்களவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எம்மைப் பிரிக்கின்ற காரணிகளை வைத்துக்கொண்டு போரிடாமல் மனித சமூகமாக எவ்வாறு ஒன்றாக வாழலாம் என்கிற விடயத்தில் நாம் கவனம் செலுத்தல் வேண்டும்.
 
தமிழர்களும் சிங்களவர்களும் இந்தக் கொடுரமான போரில் இறந்து போயிருக்கலாம். ஆனால் மொத்தத்தில் மானிடம் தான் அங்கே கொல்லப்பட்டது. இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் எமது தலைமுறையின் எதிர்காலத்துக்கென ஊனத்தையும், சிதைவுகளையும் சொத்தாக விட்டுவிட்டு செல்லமுடியாது. தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர்கள் மத்தியிலும் ஓர் பண்பாட்டு வழமை உள்ளது. அது என்னவெனில் பிணக்குகளால் பிரிந்து நிற்கும் குடும்பங்கள் பல பெரும் பாலும் திருமணத்தில் அல்லாமல் மரணச் சடங்கிலேயே ஒன்று சேருகின்றன.
 
தமிழர் சிங்களவர்கள் ஆகிய இரு பாலாருமே பாரிய சாவுகளையும் முடிவில்லாத மரணச் சடங்குகளையும் கொலைகளையும் அங்கவீனங்களையும் சிதைவுகளையும் பாரிய அழவிலான தனியார் சொத்துக்களையும் தேசிய சொத்துக்களையும் இழந்து உள்ளோhம். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக எமது அன்புக்குரிய ஆண் பெண் குழந்தைகளையும் இழந்து, நாம் பேணிப் பாதுகாத்த எமது பண்பாட்டு, மத பெறுமானங்களையும் அழுக்காக்கி விட்டோம். இந்த நிலை இனிமேலும் தொடர நாம் அனுமதிக்க முடியாது. எமது மண்ணிலே போரின் இறுதி நாட்களில் நடந்து முடிந்த பாரிய மனித அவலத்தை இந்த சுதந்திர உலகம் எவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம். இவர்களுடைய நல் எண்ணத்திலும், தர்மத்திலும் நாம் தங்கியிருக்க முடியாது. எவ்வளவோ விடையங்கள் முக்கியமானவை. ஆனால் அவற்றையும் விட இன்னும் எவ்வளவோ விடயங்கள் அவசியமானவை. பண்பாட்டுரிமை, மொழியுரிமை, பிரதேச உரிமை என்பன அனைத்து இனங்களுக்கும் முக்கியமானவை.
 
ஆனால் அவற்றிலும் பார்க்க உணவு, உடை, சுகாதாரம், இருப்பிடம் என்பன அவற்றையும் விட மிக மிக முக்கியமானவையாகவும் பின்போடப்பட முடியாதவையுமாகும். நேர்டொ (NERDO) அமைப்பு எமது எதிர்பார்புகளை பூர்த்தி செய்யக்கூடிய சேவைகள் செய்யாவிடினும் அதை யாராவது ஆரம்பித்து வைக்கவேண்டும். அனாதை சிறார்களுக்கும், விதவைகளுக்கும் உணவளிக்கவும், அகதி முகாம்களில் சிறுவர்களுக்கு கல்வி வழங்கவும், தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் உள்ளவர்களை சென்று பார்க்கவும் நாம் வெளிநாட்டு நிறுவனங்களை எதிர்பார்க்க முடியாது. எமது சிறார்கள் தான் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள். இதற்கு நாம் முதற்படி எடுத்தாக வேண்டும். எமது சார்மனைக்கதிரை விமர்சனம் சிறைச்சாலைகளில் இருப்பவர்களுக்கும், முகாம்களில் இருப்பவர்களுக்கும் எந்த நன்மையையும் தரப்போவதில்லை. உண்மையான மனிதாபிமானச் சேவை செய்பவர்கள் ஊடாகத் தான் நாம் அவர்களைச் சென்றடையலாம்.
 
(கனடிய தமிழ் மன்றத்தில் கலாநிதி ஜோசப் சந்திரகாந்தன். கலாநிதி சந்திரகாந்தன் அவர்கள் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்திலும், சமய கற்கை நெறியிலும் பேராசிரியராக உள்ளதுடன், யாழ் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்தவ இஸ்லாமிய கற்கைநெறி பீடத்தின் ஸ்தாபகருமாவர்.)

ஒருநாள் கிரிக்கெட்டிலும் இன்னிங்ஸ்முறை: அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முடிவு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் நடைமுறையை கொண்டு வர அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முடி வெடுத்துள்ளது.

இதற்கு அவுஸ்திரேலிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனினும் இந்த முறையை சச்சின் டெண்டுல்கர் வரவேற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இனிமேல் நடை பெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கள் 2 இன்னிங்ஸ் முறையில் நடைபெறும் என அந்த நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்து உள்ளது.

தன்படி ஒரு நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் 45 ஓவர்கள் விளையாட வேண்டும். முதல் இன்னிங்ஸ் 20 ஓவர் களைக் கொண்டதாக இருக்கும். இரண் டாவது இன்னிங்ஸ் 25 ஓவர்களைக் கொண்டதாக இருக்கும். அவுஸ்திரேலி யாவில் நடைபெற உள்ள மாகாணங்களுக்கு இடையேயான தேசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமுள்ள 31 ஆட்டங்களும் இந்த முறையிலேயே நடைபெறும் என அந்தநாட்டு கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இந்த முறைக்கு ரிக்கி பொண்டிங், மைக் ஹசி உள்ளிட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த முறையால் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் எதிர்காலத்தில் பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் 20 ஓவர் போட்டிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி முறையை ஒழிக்கவே இந்தமுறை கொண்டுவரப்படுவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

எனினும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த முறையை வரவேற்றுள்ளார்.

இது குறித்து மும்பையில் வெள்ளிக் கிழமை அவர் கூறியது: அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் முயற்சி வரவேற்கத் தக்கது.

ஒரு நாள் போட்டிகளில் 2 இன்னிங்ஸ் முறையை அமுல்படுத்தும் யோசனை எனக்கு 2002ம் ஆண்டிலேயே தோன்றியது. அதை 2009ம் ஆண்டு வெளிப்படுத்தினேன்.

ஒரு நாள் போட்டிகளின் போது ஆட் டத்தின் பிற்பகுதியில் மழை குறுக்கிட்டால் 2வதாக துடுப்பெடுத்தாட்டம் செய்யும் அணி அதிகம் பாதிக்கப்படுகிறது. அதே போல பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாட்டம் செய்யும் அணி பகலில் துடுப்பெடுத்தாடு வதை முடித்து விடுகிறது. மற்றொரு அணி இரவில் விளக்கு வெளிச்சத்தில் விளையாட வேண்டி உள்ளது. இன்னிங்ஸ் முறை கொண்டுவரப்பட்டால் இரு அணிகளுமே பகலிலும், விளக்கு வெளிச்சத்திலும் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்ப டும் இது வரவேற்கத்தக்கதே. சர்வதேச போட்டிகளிலும் இந்த முறை கொண்டு வரப்பட வேண்டும் என்றார் டெண்டுல்கர்.

யுவராஜ் டெங்கு நோயினால் பாதிப்பு

yuvraj.jpgஇந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாளை திங்கட்கிழமை தம்ப்புள்ளையில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் சர்வதேச முக்கோண ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

நியூஸிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

sri-lankan-cricketers.jpgஇந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணியை, நியூசிலாந்து வீழ்த்தியது. நேற்று தம்புள்ளவில் நடந்த 2 வது போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. நியூஸிலாந்து அணியை இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.1ஓவர்களில் 192  ஓட்டங்களடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்றது.

உபுல் தரங்க ஒரு நாள் அரங்கில் 17 வது அரை சதம் கடந்தார். 9 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் சேர்த்து தரங்க இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

100 விக்கெட்

நேற்றைய போட்டியில், நியூசிலாந்து வீரர் கப்டிலை அவுட்டாக்கிய இலங்கை வீரர் மலிங்கா, ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தவிர, இந்த இலக்கை எட்டும் இலங்கையின் 11 வது வீரரானார்.

இதுவரை 68 போட்டிகளில் பந்து வீசிய மலிங்கா, 102 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமை பெற்றார்.

புலிகளுக்கு சார்பான – எதிரான – அரசுக்கு நம்பகமற்றவர்களின் A to Z வரையான பெயர்ப்பட்டியல்

LTTE LOGOA முதல் Z வரையான பெயர்கள் கொண்ட பட்டியலும் அவர்களது அரசியல் நிலைப்பாடும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தற்போதைய இலங்கை அரசையும் மையப்படுத்தி அவர்கள் என்ன அரசியல் நிலைப்பாட்டில் உள்ளனர் என்ற குறிப்புகளுடன் இத்தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் அமைப்புகள் ஊடகங்கள் பற்றிய தகவல்களும் அவற்றின் அரசியல் நிலைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் இப்பட்டியலில் தெளிவாகத் தெரியக் கூடிய தவறான தகவல்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து காலமான சதாசிவம் கிருஸ்ணகுமார் (கிட்டு) முதல் நோர்வேயின் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சோல்கைம் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக இலங்கை அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக கூறிவருகின்ற அமெரிக்க செனட்டர் புருஸ்பெயின் உட்பட பலரது பெயர்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் வெளியிடப்பட்டு உள்ளது.

பிரித்தானியாவில் ரூட் ரவி உட்பட பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகக் குறிக்கப்பட்டு உள்ளனர். கவுன்சிலர் போல் சத்தியநேசன், ஆர் ஜெயதேவன் போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடையவர்கள் என்றும் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பலரது பெயர் விபரங்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் அடங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் புலிகள் தொடர்பான அரசியல் நிலைப்பாடும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும்  சிங்கள மக்கள் மத்தியில் அரசுக்கு மாறுபட்ட கருத்துடைய பிரயன் செனவிரரட்னே போன்றவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் காட்டப்பட்டு உள்ளது.

இப்பட்டியலில் உள்ளவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் கே பி க்கு ஆதரவானவர்கள், கே பி க்கு எதிரானவர்கள் என்ற வகையிலும் குறிப்பிடப்பட்டு உள்ளனர். கே பி க்கு ஆதரவானவர்கள் என்ற வகைப்படுத்தலைத் தவிர அரச ஆதரவாளர்கள் என்று யாரையும் குறிப்பிடவில்லை. ஏசியன் ரிபியூன் ஆசிரியரை டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் என்றே குறிப்பிட்டு உள்ளது.

இப்பட்டியல் யாரால் என்ன நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டது என்றோ ஏன் வெளியிடப்பட்டது என்றோ இதுவரை தெரியவில்லை. ஆனால் இப்பட்டியல் ஏதோ ஒரு வகையில் தற்போதைய இலங்கை அரசினால் நம்பகமற்றவர்களாக கருதுபவர்களின் பட்டியலாகவே பெரும்பாலும் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள் தற்போதைய இலங்கை அரசு மீது விமர்சனம் உடையவர்களே பெரும்பாலும் இப்பட்டியலில் உள்ளனர்.

இப்பட்டியல் இலங்கைநெற்றில் இருந்து பெறப்பட்டு இங்கு பதிவு செய்யப்படுகின்றது.

LTTE_ACTIVISTS_and_LTTE_and_GOVERNMENT_OPPONENTS

நியூஸிலாந்து, இலங்கை இன்று மோதல்

sri-lankan-cricketers.jpgஇலங் கையில் நடைபெறும் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் இன்று 2வது ஆட்டத்தில் இலங்கை அணி, நியூஸிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. முதல் போட்டியில் இந்தியாவை 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. அதே உற்சாகத்துடன் இலங்கை அணியை அந்த அணி சந்திக்க உள்ளது.