கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இலங்கையின் வடக்கில் இருந்து 2 லட்சம் பேர் இடம்பெயர்வு – ஐ.நா

_mullai_1.jpgஇலங்கை யின் வடக்கே மோதல் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு இதுவரையில் சுமார் 2 இலட்சம் பேர் இடம்யெபர்ந்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐநா மன்றத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் இவர்களில் 1741 பேர் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் எனவும் கூறியிருக்கின்றது.

வவுனியா மனிக்பாம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கென அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் 300 கூடாரங்கள் ஐநா மன்றத்தின் அகதிகளுக்கான நிறுவனத்தினரால் வழங்கப்பட்டுள்ளதாகவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற பிரான்ஸ் நாட்டு மருத்துவ உதவி நிறுவனம் இந்தப் பகுதியில் சுகாதார அமைச்சின் அனுமதியோடு வெளிக்கள மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் ஐநா மன்றத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் தெரிவித்திருக்கின்றது.

இலங்கைக்கு இந்திய இராணுவம் செல்வது எளிதல்ல – இந்திய பிரதமர்

karunanithi-apalo-hos1.jpgஇலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு இராணுவத்தை அனுப்புவது என்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சென்னையில் செய்தியாளர்கள் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும், சுயாதீனம் கொண்ட நாட்டில் தலையிடுவதில் வரையறைகள் உள்ளன என்றும் அவர் கூறினார். அத்தோடு இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைவருமே விரும்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி என்றும், ஆனால் தற்போது அதுவல்ல பிரச்சனை என்றும், இலங்கை தமிழர்கள் எல்லா நலனும் பெற்று நன்றாக வாழ வேண்டும் என்பது தான் இப்போது முக்கியமான விஷயம் என்றும் பிரதமர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.

அத்தோடு, இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சரி என்பதை இலங்கை மக்களும், அரசும் உணர வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

வேறு கூட்டணி பற்றி சிந்திக்க மாட்டேன்: ஜெயலலிதா பேட்டி

j-j-j.jpgவட சென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாசர்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ராகுல்காந்தி டெல்லியில் கூறும்போது காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி அ.தி.மு.க. என்று கூறியிருக்கிறாரே?

அப்படி சொல்லவில்லை என்று அவர்களின் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறதே?

தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களிடம் பேசுவீர்களா?

நாங்கள் 3-வது அணியில் இருக்கிறோம். 3-வது அணியில் இருக்கும் போது வேறு ஒரு கூட்டணி பற்றி சிந்திக்கும் ஆள் நான் இல்லை. அப்படி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது என் கவனம் முழுவதும் தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் பெறுவதிலே தான் இருக்கிறது.

மன்னாரில் மீள்குடியேற்ற இரண்டாம் கட்ட வேலைகள் திங்கள் முதல் ஆரம்பம்

new_welfare.pngயுத்தம் காரணமாக மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மீள்குடியேற்ற 1 ஆம் கட்ட நடவடிக்கை மன்னார் முசலி கிராமத்தில் நடைபெற்றது. இடம்பெயர்ந்து வந்த மக்களை மீளக் குடியேற்றும் அரசின் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த சகல மக்களும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்பட வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும். இதேபோல வன்னிப்பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்.

அதற்கு முன்னர் அவர்களின் இருப்பிடங்களில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டும். அந்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்து கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

புலிகளின் அனுபவத்திலிருந்து பாடம் கற்ற மக்கள் விடுதலை இராணுவம்

nilakannikal.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளின் அனுபவத்தின் மூலம் தாங்கள் பாடம் கற்றுள்ளதாக இந்தியாவின் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் உள்ள அமைப்பான மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. எமது இலக்கை வென்றெடுக்க இராணுவ பலம் மட்டும் போதாது. ஆதலால் எமது போராட்டத்தை நாம் முழு அளவில் சர்வதேச மயப்படுத்தவுள்ளோம். அத்துடன் இந்தியமக்களின் ஆதரவையும் திரட்டி வருகின்றோம் என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் உப தலைவர் மனோகர் மயூன்நுகோபா நிருபர்களிடம் தெரிவித்ததாக “ரெலிகிராப்’ பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவத்தின் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணியின் பயிற்சிக்கட்டளை தலைமையகத்தில் வியாழக்கிழமை இக் கருத்தை மனோகர் மயூன் கூறியுள்ளார். மணிப்பூர் மியன்மார் எல்லையில் இத்தலைமையகம் அமைந்துள்ளது.

மோதலுக்கு தீர்வு காண அரசியல் பேச்சு வார்த்தையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட மனோகர் மயூன், அதேசமயம் நிகழ்ச்சி நிரலானது “இறைமை’யாக இருக்காவிடின் மக்கள் விடுதலை இராணுவம் புரட்சிகரமான மக்கள் முன்னணி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாது என்று உறுதியாகக் கூறியுள்ளார். மணிப்பூரில் தனிநாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் 1978 செப்டெம்பரில் மக்கள் விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்டது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் பிரதமர் & கருணாநிதி ஆலோசனை

karunanithi-apalo-hos.jpgஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது இருவரும் தேர்தல் குறித்து முக்கிய பேச்சு நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உடனிருந்தார்.

மேலும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவர்னர் பர்னாலா, முன்னாள் மத்திய அமைச்சர் சிபுசோரன் ஆகியோரிடமும் பிரதமர் நலம் விசாரித்தார். பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 2.30க்கு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தார்.

அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் பொருளாளர் சுதர்சனம், தயாளு அம்மாள் ஆகியோர் இருந்தனர். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, பிரதமரும் முதல்வரும் தனியே ஆலோசனை நடத்தினர். தேர்தல் குறித்த அந்தப் பேச்சின் போது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் உடனிருந்தார். முதல்வர் அறையில் பிரதமர் 15 நிமிடங்கள் இருந்திருக்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் எறிகணைத் தாக்குதல் 134 பேர் பலி; 199 பேர் காயம் – படையினர் தாக்கவில்லை என்கிறார் பிரிகேடியர்

udaya_nanayakkara_brigediars.jpgமுள்ளி வாய்க்கால் பகுதியில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்கு வரிசையில் நின்ற 34 பேர் உட்பட 134 பேர் பீரங்கித் தாக்குதல்களால் கொல்லப்பட்டதாகவும் 199 பேர் காயமடைந்ததாகவும் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இச் செய்தி தொடர்பாக பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்ட போது முல்லைத்தீவு யுத்த சூனிய வலயத்தில் உள்ள முள்ளி வாய்க்கால் பகுதி மீது படையினரால் பீரங்கித் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. யுத்த சூனிய வலயத்தின்மீது பீரங்கி போன்ற கனரக ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதில்லை. அங்கு மக்கள் கொல்லப்பட்டதாகவோ அல்லது காயமடைந்ததாகவோ எமக்கு எதுவும் தெரியாது. அது பற்றிய தகவல் எமக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் 5/9/2009 யுத்த வலயப் பகுதியில் இருந்து தப்பி வந்த மக்கள் மீது புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

புதிய பாதுகாப்பு வலய பிரகடனம்: ஐ.சி.ஆர்.சியினருக்கு அறிவுறுத்தல்; பிரசுரங்களில் மக்களுக்கு விளக்கம்

new-safe-zone.jpgமீள வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். அதேநேரம், பொது மக்களை அறிவுறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார். விமான மூலம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன், ஊடகங்கள் வாயிலாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

புதுமாத்தளன் பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலயத்தை நேற்று முன்தினம் வெள்ளி மாலையிலிருந்து அரசாங்கம் மீள வரையறுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, வெள்ளமுள்ளி வாய்க்கால் – கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் இரண்டு கிலோ மீற்றர் நீளமும், ஒன்றரை கிலோ மீற்றர் அகலமும் கொண்டதாகப் புதிய பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசத்திற்கு அப்பால் புலிகளை இலக்குவைத்து நடவடிக்கை எடுக்கப்படுமென்பதால், பொதுமக்கள் அறிவிக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் இருக்கக் கூடாதென பிரிகேடியர் தெரிவித்தார். மேற்குறித்த பகுதியிலேயே பொது மக்கள் அதிகம் தங்கியிருப்பதால், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகக் கூறிய பிரிகேடியர்,  இனி பொதுமக்களைப் புலிகளால் வைத்திருக்க முடியாதென்றும் கூறினார்.

இதேவேளை, தற்போது புலிகள் சிக்குண்டுள்ள பகுதிக்குள் படையினர் 800 மீற்றர் தூரம் வரை உட் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சுற்றி சுமார் இரண்டாயிரம் கரும்புலிகள் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். எனவே, மிகவும் சூட்சுமமான முறையில் படையினர் முன்னேறி வருவதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

new-safe-zone.jpg

முல்லைக் கடற்பரப்பில் சமர்: புலிகளின் வள்ளங்கள் நிர்மூலம்

boat.jpgமுல்லைத்தீவு, வெள்ளிமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்த வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி வள்ளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்படை வட்டாரங்கள் தகவல் தருகையில்,

இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில், கடற்படையினரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த வந்து கொண்டிருந்த நான்கு வள்ளங்கள் மீது கடற்படையினர் பலத்த தாக்குதலை மேற்கொண்டனர். இதன் காரணமாக இரு வள்ளங்கள் முற்றாக நிர்மூலமானதுடன் மேலும் இரு வள்ளங்களைக் கடற்படையினர் கைப்பற்றினர். 14 கடற்புலிகள் இந்ததச் சம்பவத்தில் கொல்லப்பட்டனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையாமுள்ளி வாய்க்கால் மண் அணை படையினர்வசம்

sl-army.jpgமுல்லைத்தீவு கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று (08.05.2009) புலிகளின் மண்அணை ஒன்று படையினரால் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. பலமணிநேர மோதலை அடுத்தே இந்த மண் அணையை படையினர் மீட்டுள்ளனர். இங்கு இடம்பெற்ற தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட தேடுலின் போது புலிகளின் 35 சடலங்களும் பெருந்தொகையான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.