கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

எஞ்சியுள்ள சிவிலியன்களை மீட்கும் இறுதி நடவடிக்கை நேற்று ஆரம்பம் – இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_brigediars.jpg முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள சிவிலியன்களையும் மீட்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை இராணுவத்தினரும், கடற்படையினரும் இணைந்து நேற்று ஆரம்பித்தனர். இதன் விளைவாக நேற்றுக் காலை முதல் மாலை வரையான காலப்பகுதிக்குள் 1000 சிவிலியன்கள் கட்டம் கட்டமாக படையினரை நோக்கி வருகை தந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சிவிலியன்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கரியமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளால் இறுதியாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரணை படையினர் கடந்த சனிக்கிழமை மாலை தகர்ந்து அழித்தனர். இதனையடுத்தே பெருந்திரளான மக்கள் கட்டம் கட்டமாக படையினரை நோக்கி வந்து சேர்ந்ததாகவும் பிரிகேடியர் கூறினார்.

கரியமுள்ளிவாய்க்காலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரையில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே கடும் சமர் மூண்டுள்ளது. இதன் போது புலிகள் தரப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையான புலிகள் கொல்லப்பட்டதாகவும் பேச்சாளர் நாணயக்கார தெரிவித்தார். சனிக்கிழமை மாலையளவில் புலிகளின் இறுதி மணல்மேடு அழிக்கப்பட்டதும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மக்கள் படையினரை நோக்கி வந்து சேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கரியமுள்ளிவாய்க்காலிலிருந்த நேற்று 685 சிவிலியன்கள் 53 ஆம் படையணியினரிடம் வந்து சேர்ந்துள்ளனர். முல்லைத்தீவிலிருந்து 15 சிவிலியன்கள் 59 ஆம் படையணியினரிடம் தஞ்சமடைந்துள்ள அதேவேளை, கடற்படையின் படகுகள் மூலம் 300 சிவிலியன்களை மீட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

இராணுவத்தின் 53ஆம் மற்றும் 59ஆம் படையணியினரிடம் தஞ்சமடைந்துள்ள மேற்படி 700 சிவிலியன்களும் புலிகளிடமிருந்து தப்பிவரும் வேளை, புலிகள் அவர்கள் மீது சரமாறியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தப்பி வந்தவர்களுள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நால்வரது நிலை கவலைக்கிடமானதையடுத்து அந்நால்வரும் விமானம் மூலம் உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இராணுவ பேச்சாளர் நாணயக்கார குறிப்பிட்டார். இராணுவத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை (08) முதல் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகள் மீள வரையறுக்கப்பட்டுள்ளன. இப்புதிய பாதுகாப்பு வலயத்துக்குள்ளிலிருந்து புலிகள் துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தியமை இராணுவத்தினரின் ராடரில் பதிவாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புலிகள் இப்புதிய பாதுகாப்பு வலயத்துக்குள்ளிலிருந்து, சிவிலியன்களின் வருகையைத் தடுக்கும் பொருட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் காலை 10.19 மணிவரையிலும் கடும் துப்பாக்கிச் சமரை நடத்தியிருப்பது ராடரில் பதிவாகியுள்ளது. புலிகள் இவ்வாறான தாக்குதல்களை நடத்திவிட்டு படையினர் மீது குற்றம் சுமத்த முயற்சிப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் கூறியது.

புலிகளின் தொலைத் தொடர்பு சம்பாஷணைகளை இடைமறிந்து செவிமடுத்த போது அவர்களுடைய கண்மூடித்தனமான தாக்குதல்களால் நேற்றுக் காலை மாத்திரம் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் உயிரிழந்த தகவல் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இராணுவத்தின் 58ஆம் படையணியினர் தற்போது புதிய பாதுகாப்பு வலயத்திலிருந்து 250 மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியது. மேலும் நேற்று இராணுவத்தினராலும் கடற்படையினராலும் மீட்கப்பட்ட ஆயிரம் சிவிலியன்களும் பாதுகாப்பாக நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவரெனவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே 9ம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 493 பேர் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர்.  இவர்களுக்கான தங்குமிடம் மற்றும் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் அரசாங்கம் ஆவலுடன் முன்னெடுத்து வருகிறது. தொடர்ந்தும் புலிகளிடமிருந்து வரும் சிவிலியன்களுக்கு இவ்வசதிகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

சின்னம்மை தாக்கம் – மீட்கப்பட்ட சகலருக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து

vanni-0001.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கும் சகல மக்களுக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. சின்னம்மை நோய் பரவுகையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இம்மருந்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள பலர் சின்னம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் இற்றைவரையும் சுமார் எட்டாயிரம் பேர் சின்னம்மை நோயார்களாக இனம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார்.

இந்நோயாளர்களாக இனம் காணப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இதன் பயனாக வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் இந்நோய் பரவுவது தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார். சின்னம்மை நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கவென வவுனியா, புவரசங்குளம் ஆஸ்பத்திரி தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில் தான் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் சகலருக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க வான் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

swat-pakkis.jpgமேற்கு ஆஃப்கானிஸ்தானில் போன வாரம் நடந்த அமெரிக்க வான் குண்டு வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காபூல் நகரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

அமெரிக்காவை உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி எனக் கூறும் பதாகைகளுடன் குழமியிருந்த மாணவர்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

அந்தத் தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்தத் தொகை மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கணக்கு என்று அமெரிக்க ராணுவம் கூறுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் அவர்கள், விமானத் தாக்குதல்கள் இனிமேல் நடக்காது என்று தமது அரசால் உறுதி சொல்ல முடியாது என்றார்.

இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சின்னமுத்து

vavuniyatents.jpgஇடம் பெயர்ந்து வந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சிலர் சின்னமுத்து நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளவென பூவரசங்குளம் ஆதார வைத்திய சாலை விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நோய்கு உள்ளான மேலும் சிலர் நேற்று (09.05.2009) இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நோயை கட்டுப்படுத்தும் மருந்து வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதுடன் முகாம்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மக்களில் சிலருக்கு தோல் சம்மந்தமான தொற்று ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா முகாம்களில் மக்களிடையே பரவக்கூடிய தொற்று நோய் குறித்து ஆராய்வதற்கென வைத்தியர்கள் குழுஒன்றை வவுனியாவிற்கு அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ மனிதநேய அமைப்புக்களுக்கு 8,000 மில்லியன் ரூபா நிதியுதவி

vanni-0001.jpgஇலங் கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதநேய உதவிகளை நிறைவேற்றுவதற்கு ஐ.நா. முகவர் அமைப்புக்களும், ஏனைய சர்வதேச உதவி அமைப்புக்களும் 8,000 மில்லியன் ரூபா (71.2 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான நேரடி நிதியுதவிகளைப் பெற்றுள்ளன. இந்த 71.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் அந்த அமைப்புக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான இணைப்பகம் அறிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஐ.நா.முகவர் நிறுவனங்களான உலக உணவுத் திட்டம், யூ.என்.எச்.சி.ஆர். மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. தற்பொழுது கிடைக்கப்பெற்றிருக்கும் நிதியுதவிகள் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு, தற்காலிக கூடாரங்கள், சுகாதார வசதிகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. கிடைக்கப்பெற்றிருக்கும் நிதியுதவியில் பெருந்தொகையான நிதியுதவி ஐக்கிய நாடுகள் உடனடி மத்திய நிதியத்திலிருந்து வழங்கப்பட்டிருப்பதுடன், உதவிவழங்கும் நாடுகள் பலவும் இதில் பங்களிப்புச் செய்துள்ளன.

இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மனிதநேய நிறுவனங்களுக்கு நிதியுதவிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அரசசார்பற்ற நிறுவனங்கள் தேசிய செயற்திட்டத்தின் கீழேயே செயற்படவேண்டுமென அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்களுக்கு மதிப்பளித்து எந்தவொரு அமைப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

குறிப்பிட்ட செயற்திட்டங்களுக்கே முதலில் முன்னுரிமை கொடுத்து செயற்படவேண்டுமென கடந்த வியாழக்கிழமை தன்னைச் சந்தித்த உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தமையையும் அமைச்சர் நினைவுகூர்ந்தார்.“செயற்திட்டங்களை முன்னெடுக்க முன்னர் அவர்கள் (அரசசார்பற்ற நிறுவனங்கள்) என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்” என அமைச்சர் கூறினார்.

புனர்வாழ்வு நிலையங்களுக்கு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்கள் விஜயம்

saran.jpg முல்லைத்தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டவர்களில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

கடந்த காலங்களைப் போன்ற இவர்களும் காணாமற் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என புலிகள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களைப் பற்றிய விபரங்களை அறியும் பணியில் புளொட் மற்றும் ஈ. பி. ஆர். எல். எப். கட்சிகள் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது.

மேற்படி குழந்தை போராளிகளான சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிலைமையையும் அறிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் பணிப்பாளருமான சுசரித கம்லத் செய்து கொடுத்திருந்தார்.

கம்பஹா மாவட்டத்தில் அம்பேபுஸ என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையத்தில் 54 இளைஞர்களும் 41 யுவதிகளுமாக 95 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வயது குறைந்த சிறுவர் சிறுமிகள் அதிகமுள்ளனர்.

இவர்களுக்கு தமிழ், ஆங்கில பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன் கணனிக்கல்வி மற்றும் தொழிற்கல்வி என்பவற்றையும் பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்விஜயத்தின் போது பெண் பிள்ளைகளுக்கான புதிய உடுபுடவைகள், கைக்கடிகாரங்கள், அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டன. இந்த புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைப் போராளிகள், இளைஞர், யுவதிகளின் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கண்டி மாவட்டம் பள்ளேகல என்னுமிடத்தில் 800 இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான பிஸ்கட் வகைகளையும் கையளித்தனர். இவர்கள் மத்தியில் உரையாற்றிய நீதி அமைச்சின் செயலாளரும், புனர்வாழ்வு, நடவடிக்கைகளுக்கான பணிப்பாளருமான சுசரித கம்லத், உங்களது கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். ஆனால் அதனை மறந்து எதிர்காலத்தில் உங்களது நல்வாழ்வுக்காகவும், இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தலிபான்களுக்கு எதிராக பாரிய படை நகர்வு; 143 பேர் பலி

w_news.jpgபாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் 143 தீவிரவாதிகள் பலியானார்கள். இந்த தகவலை இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தார் அப்பாஸ் தெரிவித்தார். தீவிரவாதிகள் அந்த பகுதியை விட்டு தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் அப்பாவிகள் தப்பிச் செல்லும் வழிகளை அடைத்து வைத்து உள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 15 ஆயிரம் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று அவர் கூறினார்.

ஸ்வாட் பகுதியில் சண்டை நடப்பதால் அப்பாவி பொதுமக்கள் வீடுகளை காலிசெய்து விட்டு வெளியேறி வருகிறார்கள். ஏற்கனவே 5 இலட்சம் பேர் வெளியேறி விட்டனர். இப்போது மேலும் 2 இலட்சம் பேர் அந்த பகுதியை விட்டு வெளியேறி வருகிறாரகள். மேலும் 3 இலட்சம் பேர் வெளியேற தயாராகி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் செயற்படும் தலிபான்களின் தலைவர் பைதுல்லா மஷ¤தைக் கைது செய்ய இராணுவம் கடும் முயற்சிகளை எடுத்துவருகிறது. அவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு சன்மானத் தொகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இத் தொகையை அமெரிக்கா வழங்கவுள்ளது. அரபு நாடுகளிலுள்ள ஏராளமானோரை புனிதப் போருக்கு அழைக்கும் பணிகளில் பைதுல்லா மெசூத் ஈடுபடுவதாக பாகிஸ்தான் உளவுத்துறை நம்புகின்றது. இதனால் இவரின் மறைவிடங்கள், நடமாட்டங்களுள்ள பிரதேசங்களைத் தெரிந்துகொள்வதில் இராணுவ உயர் மட்டம் ஆர்வமாயுள்ளது. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஸ்வாட் பகுதியில் தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க பாரிய இராணுவ நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லும்படியும் அரசாங்க அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்குலகின் கைப்பிள்ளையான பாகிஸதான் அரசை அகற்றப் போவதாக தலிபான்கள் சூளுரைத்துள்ளனர். அமெரிக்க இராணுவமும் பாகிஸ்தான் இராணுவத்துக்கு உதவியளிக்கின்றது.

இலங்கையின் வடக்கே கடும் தாக்குதல்: 378 பேர் பலி, 1122 பேர் காயம்

vanni-manitharkal.jpg இலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் சனிக்கிழமை இரவும், இன்று ஞாயிற்றுகிழமை பிற்பகல் வரை இடம் பெற்ற கடும் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதலில் 378 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் அரச மருத்துவர் பி.பி.சி தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார் என பி.பி.சி இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இந்தத் தாக்குதல்களில் 1122 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கி வரும் தற்காலிக மருத்துவமனைக்கு வந்துள்ள 378 உடல்களில், 106 உடல்கள் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுடையது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மருத்துவமனைக்கு வந்தவர்கள் மேலும் பல சடலங்கள் வீதிகளில் இருப்பதாக தம்மிடம் கூறியதாகவும் அந்த அரச மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அரச மருத்துவர் கூறுகிறார்.

அப்பகுதியில் ஷெல் தாக்குதல்கள் ஏதும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை அரசின் இராணுவ விவகாரங்களுக்கான பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது விடுதலைப் புலிகள் ஒரு பிரச்சாரமே என்றும் பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் தங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து எந்த விதமான அழுத்தங்களையும் சந்திக்கவில்லை என்று அந்த அரச மருத்துவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

போர் நடக்கும் பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால் தகவல்களை சுயாதீனமான வகையில் உறுதிப்படுத்த முடியவில்லை என பி.பி.சி இணையத்தளம் தெரிவிக்கின்றது.

வெளிநாட்டு செய்தியாளர்கள் 3 பேர் இன்று வெளியேற்றப்பட்டார்

channel-4news.jpgஇலங்கை அரசிற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட வெளிநாட்டு செய்தியாளர்கள் 3 பேர் இன்று (10.05.2009) காலை 7.30 மணியளவில் அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானியாவின் சுயாதீன தொலைக்காட்சியான சனல் – 4 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிக்பற்றன் வோல்ஸ் என்பவர் உட்பட 3 பேர் அடங்குகின்றனர். இவர்கள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சிக்கப்பூர் ஊடாக பிரிததானியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரெஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் வைத்து நேற்று பிரித்தானிய சுயாதீன தொலைக்காட்சியின் செய்தி தயாரிப்பாளரும், புகைப்படக்கலைஞரும், இவருடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் திகதி இவர்கள் வெளியிட்ட இலங்கை தொடர்பான தவறான செய்தியொன்று பிரித்தானியாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

சோனியாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: நெடுமாறன்- பாரதிராஜா

06-sonia.jpgசென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை : “சோனியாகாந்தி கடந்த புதன்கிழமை தமிழகம் வருவதாக இருந்தது. அதை ரத்து செய்தார். அதனால் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டமும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் ஞாயிற்றுக்கிழமையன்று சோனியா சென்னையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஈழத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளைச் சற்றும் மதிக்காத அவர் தேர்தல் பிரசாரத்திற்காக மட்டும் தமிழகம் வருகிறார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடவேண்டும். அனைவரும் கறுப்புச் சின்னம் குத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் அருகே கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நானும் பாரதிராஜாவும் பங்கேற்கிறோம்’ எனக் கூறியுள்ளார் பழ.நெடுமாறன்.