கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இழுபறியாகவிருந்த பிரச்சினைகளுக்கு பொது இணைக்கப்பாடு – திஸ்ஸ விதாரண

Minister Tissa Vitharanaசர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இதுவரை இழுபறியாகவிருந்த பிரச்சினைகளுக்கு பொது இணக்கப்பாடு ஏற்பட்டுவிட்டதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இதன்படி குழு நடத்திவந்த கலந்துரையாடல்கள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், இனி தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு, கடந்த இரண்டு வருடங்களாக, நூற்றுக்கும் மேற்பட்ட தட வைகள் கூடி ஆராய்ந்து வந்தது. அண்மைய நாட்களில் 95% விடயங்களுக்குப் பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் இந்த வாரம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமாக இணக்கம் காணப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தீர்வுத் திட்டத்தை பிரிவு பிரிவாகத் தயாரிக்கும் பணியை ஆரம்பித்து விட்டதாகவும் பெரும்பாலும் அடுத்த மாத ஆரம்பத்தில் தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து நிறைவு செய்ய முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் உள்ளடக்கப்பட்டு தீர்வு வரைவு தயாரிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் புதிய தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் புதிய அரசியலமைப்பொன்று அவசியமானதென்றும் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும்.

அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தை அவர் பெற்று செயற்படுத்துவாரென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

‘மம்மி’யின் வரவுக்காக காத்திருக்கும் ‘தம்பி’. : த ஜெயபாலன்

Pirabakaran VJeyalalitha_ADMK‘A defeated Prabhakaran, if left alive in India or elsewhere, would not be a threat, but could be a nuisance for both the countries….  It is in India’s interest that the LTTE as a terrorist organization is destroyed once and for all….. If the angry Tamils once again look up to India, there is no reason why we should not reciprocate provided a new leadership emerges in the Tamil community.”

‘தோற்கடிக்கப்பட்ட பிரபாகரன் இந்தியாவிலோ வேறு எங்காவதோ உயிருடன் இருந்தால் அது ஒரு ஆபத்தாக இருக்க முடியாது.ஆனால் இரு நாடுகளுக்கும் ஒரு தொந்தரவாக வேண்டுமானால் இருக்க முடியும்….. பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் ஒரேதடவையில் அழிக்கப்படுவது இந்தியாவின் நலன் சார்ந்தது….. கோபம் அடைந்த தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இந்தியாவை நோக்கினால் தமிழ் மக்களுக்குள் உருவாகும் புதிய தலைமைத்துவத்திற்கு சார்பில்லாமல் இருப்பதற்கு இந்தியாவிற்கு ஒரு காரணமும் இல்லை…..’

B. Raman, Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai.
http://www.southasiaanalysis.org/papers32/paper3160.html

இந்திய புலனாய்வுச் சமூகத்தில் ஒருவரான அல்லது அதனுடன் நெருக்கமான பி ராமனின் எழுத்துக்கள் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி உள்ளது. இன்று இந்தியா பழிவாங்க விரும்பும் எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரனை உருவாக்கியதில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. காலிஸ்தான் கோரிப் போராடிய பிந்திரன்வாலே பஞ்சாப் தலைநகர் அமிர்ஸ்ரரில் உள்ள பொற் கோயிலில் தனது மரணத்தை சந்தித்தார். தற்போது எல்ரிரிஈ ன் தலைவர் வே பிரபாகரனும் பிந்திரன்வாலேயின் முடிவை நோக்கிச் செல்வதாகவே இலங்கை – இந்திய புலனாய்வுத்துறை கருதுகிறது. அவர்களது கணிப்பின்படி வே பிரபாகரனின் பொற்கோயில் முள்ளிவாய்க்கால் என்று கணிக்கின்றனர். பிந்திரன்வாலே கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பிந்திரன்வாலே உயிருடன் வாழ்வதாக நம்பும் அவருடைய அனுதாபிகள் இல்லாமல் இல்லை. ஆனால் வே பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் இருக்கலாம் – இல்லாமலும் இருக்கலாம் என்பதற்கான காரணங்களும் தகவல்களும் குறைவில்லாமல் உலாவருகின்றது.

இலங்கையின் ஒப்பரேசன் புளு ஸ்ரார் தான் புரஜக்ற் பீக்கன். இந்த இராணுவ நடவடிக்கை என்னவோ பயங்கரவாதத்தை அழிப்பதற்கு என்று சொல்லப்பட்டாலும் தமிழ் மக்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாத மனித அவலத்திற்கு முகம்கொடுத்து உள்ளனர். மீக மூர்க்கமான இரு இராணுவ அணிக்கிடையே சிக்குண்டுள்ள மக்கள் ஜனவரி முதல் மரண வாழ்வுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

இந்த யுத்தத்தில் எல்ரிரிஈ தான் பின்வாங்கிய பெருமளவிலான பகுதிகளில் இருந்தும் மக்களை தன்னுடன் சேர்த்தே பின்வாங்கியது. வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்களில் ஒரு பகுதியினரையும் மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானோரையும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்களை முழுமையாகவும் எல்ரிரிஈ யினர் தம்முடன் அழைத்துச் சென்றுள்ளனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி பெருநிலப்பரப்பு கிட்டத்தட்ட 8 000 சதுர கி.மீ. அதன் மொத்த மக்கள் தொகை – 550 000 க்கும் சற்று அதிகமானது. அதில் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் சனத்தொகை மட்டும் 300 000. இதுவரை அரச கட்டுப்பாட்டுப் பகுதி முகாம்களை 200 000 மக்கள் வரை வந்தடைந்து உள்ளனர்.

இன்னமும் புலிகளின் 5 சதுர கி மீ பரப்பளவுக்குள் உள்ள மக்களின் எண்ணிக்கை பற்றி மிகவும் முரண்பாடான தகவல்கள் வெளியாகின்றன. இலங்கை அரசாங்கம் 20 000 பேரே அங்கு இருப்பதாக மதிப்பிடுகிறது. எல்ரிரிஈ தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்னமும் 165 000 மக்கள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இது தனித் தனியாக கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவு மாவட்டத்தின் சனத்தொகையிலும் அதிகமாகும். இலங்கை அரசு மற்றும் எல்ரிரிஈ தவர்ந்த அமைப்புகளின் தகவலின்படி தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 5 சதுர கி மீ பரப்பளவிற்கும் குறைவான பிரதேசத்திற்குள் 50 000 முதல் 100 000 பேர்வரை இருக்கலாம் என மதிப்பிடுகின்றனர்.

கடந்த நான்கு மாத காலமாக அரைவயிறு கால்வயிறு உணவுடன் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த மக்கள் செல் தாக்குதல், மோட்டார் தாக்குதல், வான் தாக்குதல் என்று உயிருக்காய் துடித்த மக்கள் இன்னமும் துடிக்கவும் தவிக்கவும் விடப்பட்டு உள்ளனர். பட்டினி உளவியல் அவஸ்தைகள் நோய் என்று பல்வேறு காரணங்களால் அவர்களது உடல் உள்ளுறுப்புக்கள் மீளமுடியாத பழுதடைவுக்குச் சென்றுள்ளது. அந்த நிலையில் இருக்கும் அம்மக்களுக்கு ஒவ்வொரு நாள் கடப்பதும் அவர்களது உயிர்வாழ்வை மிகவும் கடினமாக்கும். அத்துடன் முன்னேறும் அரசபடைகளின் மழைபோல் பொழியும் தாக்குதல்கள் நூற்றுக் கணக்கான மக்களின் உயிர்களைக் காவுகொள்கிறது.

‘தொடர்ந்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்கும். சிறிது நேரத்தில் அந்தப் பிஞ்சினது சத்தம் அடங்கிவிடும். உயிரும் அடங்கிவிடும்’ என்று இருவாரங்களுக்கு முன் இந்தியவிற்கு தப்பிச்சென்ற ஒரு குடும்பத்தினர் தங்கள் உறவுகளுக்கு தெரிவித்து உள்ளனர். தாங்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சிப்பதாகவும் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் முயற்சிப்பதாகக் கூறுகின்றனர்.  ‘தப்பிச்செல்லும் போது அல்லது தப்பிச்செல்ல முயற்சித்தால் புலிகளிடம் காட்டிக் கொடுத்து புலிகளுக்கு விசுவாசமுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களும் தப்பிச் செல்வார்கள். இதுதான் அங்குள்ள நிலை.’ என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவின் 15வது பாராளுமன்றத் தேர்தல் மே 13ல் முடிவடைகிறது. அன்று தான் தமிழ்நாட்டில் வாக்களிப்பு இடம்பெற இருக்கிறது. மே 16ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவை நம்பிய எல்ரிரிஈ யும் அதன் அதரவு அணியும் தற்போது ஜெயலலிதாவையும் பிஜேபியையும் நம்பி தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் யுத்த முனையில் பணயம் வைத்து உள்ளனர்.

இறுதிக் கட்டத்தில் தங்களுக்கொரு அதிஸ்டம் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் எல்ரிரிஈ தலைமை மே 16 தேர்தல் முடிவுகளுக்காக காத்துக் கொண்டு உள்ளது. இந்தியாவின் மத்தியிலும் தமிழகத்திலும் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் தங்களை உயிர்ப்பிக்கும் என்று எல்ரிரிஈ வலுவான நம்பிக்கையுடன் உள்ளனர். இந்தியாவில் குறைந்தது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்பட்சத்தில் அது இலங்கையின் இராணுவ நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளது.

இராணுவக் களநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு எல்ரிரிஈ இல்லாத நிலையில் எல்ரிரிஈ இன் எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியாவில் மாநிலத்திலும் மத்தியிலும் கூட ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவர்களுக்கு உள்ளுரில் உள்ள பிரச்சினைகளே தலைக்கு மேல் உள்ள போது இலங்கை விடயம் முக்கியத்துவம் பெறும் என்றும் உறுதியாகக் குறிப்பிட முடியாது. மேலும்  இலங்கை அரசுக்கு இராணுவ வெற்றி கைக்கெட்டும் தருவாயில் உள்ள போது இலங்கையைப் பகைத்துக் கொண்டு அதனைத் தட்டிப் பறிக்கும் அரசியல் பலம் ஜெயலலிதாவிற்கோ அல்லது இந்திய மத்திய அரசிற்கோ இருக்குமா என்பதும் கேள்விக்குரியது.

ஆனால் மே 13 தேர்தலில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு அது இலங்கையின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக அமையலாம் என்பதால் இலங்கை அரசு எஞ்சியுள்ள இறுதி நிலப்பரப்பையும் அதற்கு முன்னரே கைப்பற்றிவிடும் இராணுவ நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் மக்களுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத மே 13 தேர்தலும் மே 16 தேர்தல் முடிவுகள் வெளியாகும் காலமும் அம்மக்களை மூர்க்கத்தனமான இராணுவ நடவடிக்கைக்கும் பல்லாயிரக் கணக்கான உயிரிழப்பிற்கும் உட்படுத்தப் போகின்றது.

பரந்து வாழ்ந்த மக்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு மிகவும் உக்கிரமான யுத்தம் ஒன்று நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு தாக்குதலும் பதில் தாக்குதலும் மக்களுக்கு உயிராபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்து கொண்டே இலங்கை இராணுவமும் எல்ரிரிஈ யும் இந்த யுத்தத்தை நடத்துகின்றன. தமிழ் மக்களைக் காக்க ஆயுதம் தரித்ததாகக் கூறும் புலிகள் தங்களது தலைமையைக் காக்க அப்பாவித் தமிழ் மக்களின் குழுந்தைகளையும் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாக முன்னரங்க நிலைக்கு அனுப்பி பலிகொடுப்பதுமல்லாமல் அந்த மக்களின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு தாக்குதலை நடத்துகின்றனர்.

மறுமுனையில் தங்களது ஒவ்வொரு செல் தாக்குதலும் மோட்டார் தாக்குதலும் பல பத்து அப்பாவி மக்களைக் கொல்லும் என்பதை மிக நன்றாகத் தெரிந்திருந்தும் இலங்கை இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துகிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு இலங்கை அரசு நடாத்துகின்ற இந்த யுத்தம் தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று கூறுவது ஒருபோதும் மிகையாகாது. எல்ரிரிஈ தமிழ் மக்களைப் பணயமாக வைத்தே தாக்குதலை நடத்துகின்றது என்பதை சர்வதேசமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல்களில் விட்டில் பூச்சிகள் போன்று தமிழ் உயிர்கள் கொல்லப்படுகின்றன.

சிங்கள பேரினவாத அரசு நாடு சுதந்திரமடைந்தது முதல் இனஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. ஆனால் இந்த இனஒடுக்குமுறைக்கு எதிராக செயற்பட வேண்டிய மதிவாத தமிழ் தலைமைகள் தங்கள் பாராளுமன்ற அரசியலைக் காப்பாற்றிக்கொள்ளவும் தங்கள் வாக்கு வங்கியை பலப்படுத்தவும் ஆர்வம் காட்டினரே அன்றி தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சக்திகளைப் பலப்படுத்த தவறியிருந்தனர். இந்த மிதவாதத் தலைமைகளை துரோகிகள் என்று சுட்டுவீழ்த்திய புலிகள் மாற்றுத் தலைமைகள் எதுவும் இல்லாதபடி அனைவரையும் அழித்தொழித்து ஏகபிரதிநிதியாகி தங்கள் முன்னையவர்கள் விட்ட அதே தவறுகளை ஆனால் அவர்களிலும் மோசமான இழப்புகளுடன் விட்டனர்.

இலங்கையின் தலை யாழ்பாணம். மூளை வடமராட்சி. கணக்கில் புலி. என்றெல்லாம் சுயபாட்டுப் பாடினாலும் அரசியல் கணிதத்தில் யாழ்ப்பாணத்துத் தலைமைகள் வென்றெடுத்தது இழப்புகளும் அழிவுகளும் மட்டும்தான். அர்களிடம் அன்றும் இன்றும் இருக்கும் ஒரே திறமை இழப்புகளை அரசியலாக்கி தங்கள் அரசியல் தலைமையைத் தக்க வைப்பது. அதற்கு தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இவர்களுடைய அரசியல் தவறுகளைப் பட்டியலிட்டால் – வரலாற்றுத் தவறுகள் என்று புத்தகமே அடிக்கலாம் என இன்று புலிகளுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்குகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனிப்பட்ட முறையில் தெரிவித்தார்.

புலிகள் போட்ட கணக்கின் படி 2005 தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். ‘மூன்றாம் தரப்பு அவசியமில்லை நாங்கள் இருவரும் பேசுவோம்’ என்று மகிந்த ராஜபக்ச கணக்குப் போட்டு ஒரு அழைப்பை விடுத்தார். ஆனால் புலிகள் போட்ட கணக்கு மகிந்த ராஜபக்ச யுத்தத்தைத் தொடங்குவார். இனவாதக் கட்சிகளுடன் உள்ள அவருக்கு சர்வதேச ஆதரவு இருக்காது. ஆகையால் வே பிரபாகரன் ஈஸியாக கோல் அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். இறுதியில் பொல்லுக் கொடுத்து அடிவாங்கியதாகி விட்டது நிலைமை.

இப்போது 50 000 – 100 000 மக்களை முள்ளிவாய்க்காலில் பணயம் வைத்துவிட்டும் இந்தத் தவறுகள் இன்னும் தொடர்கிறது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பது போய் தற்போது ஜெயலலிதாவிற்கு திடிரெனத் தாகம் எடுத்துள்ளது. புலத்து விசலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அம்மாவுக்கு ஜெ! என்று வாழத்துச் சொல்வதிலும் வாழ்த்துப் பா பாடுவதிலும் படுபிசியாகி விட்டார்கள். அன்னை இந்திரா தொடக்கிய தமிழீழப் போராட்டம் அம்மா ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக தமிழீழப் போராட்டம் நயன்தாராவிடம் கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கும் வாழ்த்துச் சொல்ல வாழ்த்துப் பா பாட புலத்தில் ஒரு பெரும் கூட்டம் இருக்கின்றது.

இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எப்போதும் பேரினவாதக் கருத்துக்களையே வெளியிட்டு வருபவர். அவர் தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்ட ‘தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்’ என்ற கருத்து அது பேரினவாதச் சிந்தனையுடன் வெளியிடப்பட்டு இருந்தாலும் உண்மையானது. அந்தக் கோமாளித் தனத்திற்காக 50 000 – 100 000 மக்களை பணயம் வைத்துள்ள புலத்து தமிழர்களை என்னவென்பது.

ஜெயலலிதா பாஜக என்று இந்திய மத்திய மாநில அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்திய அரச இயந்திரம் தனது நலனில் மிகத் தெளிவாக இருக்கின்றது. ஆனால் அதனைக் கையாளக் கூடிய அரசியல் முதிர்ச்சி தமிழ் தலைமைகளிடம் துளியும் இருக்கவில்லை. அவர்கள் தங்களதும் தாங்கள் சார்ந்த அமைப்புகளினதும் குறுகியகால அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களை பணயமாக வைக்கின்றனர். இதன் உச்சத்தை புலிகள் முள்ளிவாய்க்காலில் செய்கின்றனர்.

ஆனால்… இது இத்துடன் முடியப் போவதில்லை என்பதை பி ராமன் மீண்டும் ஞாபகப்படுத்தி உள்ளார்.
‘தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை இந்தியாவை நோக்கினால் தமிழ் மக்களுக்குள் உருவாகும் புதிய தலைமைத்துவத்திற்கு சார்பில்லாமல் இருப்பதற்கு இந்தியாவிற்கு ஒரு காரணமும் இல்லை…..’

இந்தியா இந்த விடுகதையை அவிழ்பவர்களைத் தான் தேடிக்கொண்டுள்ளது. இலங்கை – இந்திhய – தமிழர்கள் இந்த முத்தரப்பு இழுபறி இன்னமும் தொடரும். இலங்கையும் – தமிழர்களும் நேரடியாக தங்கள் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளாதவரை. ஆனால் துரதிஸ்ட்ட வசமாக அந்த அரசியல் முதிர்ச்சி இலங்கை அரசுக்கும் தமிழ் தலைமைக்கும் கைவரப் பெறவில்லை.

‘அந்தக் யுத்தத்தில் நாங்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். பல நாட்கள் பட்டினி இருந்தோம். அங்கிருந்து தப்பித்துக் கொள்ள பல மைல்கள் நடக்க வேண்டி இருந்து. அப்போது இன்னொருவரும் வந்து என்னுடன் சேர்ந்துகொண்டார். அப்பகுதியில் இருந்து இருவரும் தப்பிக்கும் போது நீரின்றி உணவின்றி அவதிப்பட்டோம். நித்திரையின்றி நடந்தோம். கூட வந்த நண்பர் வழியில் பட்டினியால் இறந்துவிட்டார். படுத்து உறங்கினால் என்னை அறியாமலே உயிர் போய்விடும் என்ற பயத்தில் வழித்திருந்தேன். பசிக்கொடுமை தாங்க முடியவில்லை. இறந்த நண்பனின் உடலை சாப்பிடுவதைத் தவிர எனக்கு வேறு வழிதெரியவில்லை. ஆனாலும் உள்ளுணர்வு தடுத்தது. என்னால் என் நண்பனை புசிக்க முடியவில்லை. அதனை நான் செய்யவில்லை.’
பிரபல ஆபிரிக்க இசைக் கலைஞர் (பெயர் ஞாபகத்தில் இல்லை.)

இக்கொடுமையை நோக்கி முள்ளிவாய்க்கால் மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இனவாத இலங்கை அரசினது யுத்தத்திற்கும் புலிகளது அரசியல் வங்குரோத்துக்கும் இந்தியத் தேர்தல் முடிவை நோக்கியும் முள்ளிவாய்க்கால் மக்களது உயிர்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ளது.

அரசியல் கொள்கைகள், அபிலாசைகள், முரண்பாடுகள் எமது உறவுகளைக் கொல்லவும் கொல்லப்படவும் காரணமாகி உள்ளது. மக்கள் மரணத்தின் விளிம்பில் உள்ள போதிலும் விவாதங்களுக்கும் விளக்கங்களுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இல்லை. அத்தனையும் அந்த மக்களின் பெயரால் நடத்தப்படுகின்றது.

‘இலங்கை அரசு இனப்படுகொலை செய்கிறது. இலங்கை அரசு யுத்தத்தை நிறுத்த வேண்டும்.’ என்று ஒரு பகுதியும் ‘புலிகள் மக்களைப் பணயம் வைத்துள்ளனர். புலிகள் மக்களை விடுவிக்க வேண்டும்.’ என்று மறு பகுதியினரும் போராட்டம் ஆர்ப்பாட்டம் விவாதம் என்று கடந்த பல வாரங்களாக ஈடுபட்டு உள்ளனர். வழமை போல் மக்களை கொடுமையில் இருந்து விடுவிக்க இயலவில்லை. இது இப்படித்தான் இருக்கும். தவிர்க்க முடியாது என்று விவாதங்களுக்கும் விளக்கங்களுக்கும் தொடர்கிறது.

மக்களது மரணங்கள் எண்ணப்படுகிறது. பெருக்கப்படுகிறது. வகுக்கப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது. விளக்கப்படுகிறது. ஆனால் அதனை நிறுத்தவதற்கான வழிகள் பற்றி ஆராய கொள்கைகள், அபிலாசைகள், முரண்பாடுகள் இன்னமும் விடவில்லை. எஞ்சியிருக்கும் மக்களும் மரணத்தை சந்திக்கும் வரை இவர்கள் விவாதிப்பார்கள் விளக்குவார்கள் போராடுவார்கள் அந்த மக்களின் பெயரில். அதற்குப் பின் நேரம் கிடைக்கும் போது அவர்களின் ஆவிகள் பற்றியும் விவாதிப்பார்கள். விளக்குவார்கள். போராடுவார்கள்.

பாவம் மக்கள்.!!!

“எமது கடைசி வேண்டுகோள்…..” : புலிகள்

Eelamவிடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன், வன்னிப்பகுதியில் பாதுகாப்பு வலையம் மீது இன்று இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்திவருவது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும், ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ மீது படையினர் இன்று வெள்ளிக்கிழமை  ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது.  இதனால் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதி தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

உயிரிழந்த மக்களின் உடல்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை.

மருத்துவமனைகள் இல்லாத நிலையிலும் மருத்துவ வசதிகள் இல்லாத நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர்.

ஆனால் எந்த வசதியும் இல்லாத நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இங்குள்ள ஒரு லட்சத்து 65 பேரை காப்பாற்ற வேண்டுமானால் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு வலையப் பகுதியில் கடும் போர் – பெரும் உயிரிழப்பு அபாயம்!

விடுதலைப் புலிகள் வசம் உள்ள மிகக் குறுகிய பகுதியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் இறுதிக் கட்ட தாக்குதலில் இறங்கியுள்ளது. பல முனைகளிலிருந்து, கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ள பாதுகாப்பு வலையப் பகுதியில் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

இன்னும் 48 மணி நேரத்தி்ல விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுவார்கள் புலிகள் வசம் உள்ள அனைத்து அப்பாவி மக்களும் மீட்கப்பட்டு விடுவார்கள் என இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு வளையப் பகுதி முழுவதிலும் இருந்து கரும்புகை வெளிவந்த வண்ணம் உள்ளது. மிகக் குறுகிய கடற்பரப்பான பாதுகாப்பு வளையப் பகுதியை அழிக்கும் வகையில் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் இந்தப் பகுதியை கைப்பற்றும் முடிவில் ராணுவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யாரை நோக்கி இக்கற்கள்….? – குலன்

புலிகளின் வீழ்ச்சி உறுதியாகி விட்டதா? மூக்குள்ள வரை சளி என்பது போல்தான் ஈழத்தமிழர் வாழ்க்கை அமையப் போகிறதா? சிங்கள இனவாதிகளுடனும், இலங்கை அரச ராணுவ இயந்திரங்களின்கீழும் மீண்டும் மிதிபடும் நிலை தொடருமா? ஒற்றையாட்சியினுள் ஆயுதங்கள் முடக்கப்படுமா? இப்படிப் பல கேள்விகளின் மத்தியில் பதுங்கிக் கொள்கிறது மனமும் உணர்வுகளும்.

இன்றைய தேவை கருதி தம்முள் உள்ள குத்து வெட்டுக்களின் தவறுகளை உணர்ந்து அதனை நிராகரித்து ஒன்றிணைந்த ஒரு கிராமத்தை இங்கு குறிப்பிடுவது முக்கியம். யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதியிலுள்ள ஒரு மீன்பிடிக் கிராமம். குத்து வெட்டுகளுடன்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். புலிகளின் யாழ் வீழ்ச்சியுடன் வன்னி நோக்கி நகர்ந்து மீண்டும் புலிகளின் பலாற்காரத்தால் கடைசி வரையும் இழுத்துச் செல்லப்பட்டார்கள். பின் புலிகளின் பிராந்தியத்தை விட்டு 120 குடும்பங்கள் (சுமார் 600 பேர்) இராணுவப் பகுதிக்கு வந்துள்ளனர் என அறிந்ததும் மீதியாய் கிராமத்தில் இருந்த 28 குடும்பங்களும் வேற்றுமைகளை மறந்து ஒருநாள் எல்லோருமாகச் சேர்ந்து கடலட்டை பிடித்து 8 இலட்சம் ரூபாய்க்கு விற்று அப்பணத்தை இடம்பெயர்ந்து அல்லலுறும் கிராமத்தவர்க்குப் பகிர்ந்து கொடுத்தார்கள் என்றால் நாம்….? இதைப் பார்த்தாவது தேவையறிந்து சிந்திப்பீர்களா? IPKF ஈழத்தில் நிற்கும்போது பொது எதிரியாக இருந்த இந்திய இராணுவத்தை எதிர்த்துப் புலிகளும், இலங்கை இராணுவமும் இயங்கின. சுனாமியின் போதும் இப்படியே நடந்தது. எதிரிகளே ஒன்றாகி ஒரு பொது நோக்குக்காக செயற்படும் போது தமிழர்களாய் நீங்கள் பிரிவுண்டுதான் இருக்கப் போகிறீர்களா?

மாற்றுக் கருத்தாளர்கள், புத்திஜீவிகள், முற்போக்காளர்கள், இடதுசாரிகள், சமூக மாற்றம் விரும்பிகள், பெண்கள் சந்திப்புக்கள், பின்னவீனத்துவம், சிறு சஞ்சிகைகள், ஊடகங்கள், எல்லோரையும் நோக்கியே என் எழுத்துக் கற்கள் வீசப்படுகின்றன. நீங்கள் இவ்வளவு காலமும் செய்து கொண்டிருந்தது புலி எதிர்ப்பு வாதம் மட்டுமே. எம்மக்களுக்கான எந்த மாற்று மையங்களை உருவாக்கினீர்கள். உருவாகிய மையங்களினுள்ளும் அமைப்புகளுக்குள்ளும் ஆயுதமின்றிக் குத்து வெட்டுப்பட்டு பிரிந்து பிளந்து கிடக்கிறீர்கள். உங்களுக்கு பாசிச சிங்கள அரசு மட்டுமல்ல பாசிசப் புலிகளும் எதிரிகள் என்றால் புலிகளால் பாதிக்கப்பட அமைப்புகளில் இருந்தவர்கள், மற்றும் மேற்குறிப்பிட்ட அனைவரும் ஒன்றாய் நின்று எம்மக்களுக்கு ஒரு மாற்று வழியைத் தயார்படுத்தி இருக்கலாம் செய்தீர்களா? சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறீர்களே. புலிகளால் பொது வேலைத்திட்டத்தில் செயற்பட முடியாது என்றால் (உ+ம்: திம்பு) உங்களால் ஏன் முடியவில்லை. நீங்களும் புலிகளுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதைத்தான் உறுதிப்படுத்துகிறீர்கள். புலியின் போராட்டத்துடன் ஒத்துப்போகாத அனைவரும் காட்டும் காரணங்கள் மக்கள் மக்கள் மக்கள். அந்த மக்கள்தான் இன்று உங்கள் முன் அவலத்தில் விளிம்பில் நிற்கிறார்கள். என்ன செய்யப் போகிறீர்கள்? காலம் கனிந்திருக்கிறது. இனியாவது ஒன்று சேர்வீர்களா? புலி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ்… எனஇருந்து பின் பிரிந்து சென்றீர்கள். இனி ஏன் மீண்டும் பழைய கனவுகள். புதிதாகச் சிந்தியுங்கள் மக்களுக்காக மக்களாக ஒன்றுபடுங்கள். இன்று புலிகளுக்குக் கூட மாற்று வழியில்லை. எங்கே உங்களது மாற்றுவழியும் சமூக மாற்றமும்?

ஆயுதப்புரட்சி ஒன்றே எமது விடுதலையை வென்றுதரும் என்ற புலிகள் அதே ஆயுதங்களால் இன்று அடியறுந்து நிற்கின்றனர். காரணம் புதிதாகச் சிந்திக்க மறந்து, மறுத்து, பழைய பல்லவியையே பாடிய ஆடியதன் விளைவா? மண்மீட்பு மட்டுமல்ல மக்கள் மீட்பு மட்டுமே எம் மக்களின் விடுதலை என்று, புலிகளின் ஆயுதங்களால் துரத்தப்பட்ட மாற்று கருத்தாளர்கள் இன்னுமேன் மௌனம். புலியெதிர்ப்பு வாதம் மட்டும்தான் உங்கள் பணியா? மக்கள் மீட்பு என்று கருதினால் இந்த மக்கள் மீட்பும் சிங்கள மக்களுக்கும் தேவைப்பட்டது தேவைப்படுகிறது. எமது நியாயமான கோரிக்கைகளைத் தரமறுத்த சிங்கள அரசுக்கெதிராக ஏன் சிங்கள மக்களையே கிளர்ந்தெழ நீங்கள் உதவியிருக்கலாம்? இதைக் கூட நீங்கள் குறைந்தபட்சம் தெற்கிலங்கையிலுள்ள உங்கள் கருத்துக்களுடன் ஆக்கபூர்வமாக இணையக் கூடியவர்களுடனாவது இணைந்து ஒற்றையாட்சியின் கீழ் மக்கள் மீட்பை உருவாக்க முயன்றிருக்கலாம். ஏன் செய்யவில்லை? முதுகில் குத்தப்படும் முத்திரைகளுக்குப் பயந்தீர்களா? முத்திரை குத்தப்படாத கடிதங்கள் உங்களைப் போல் முடங்கித்தான் கிடக்கும்.

முட்டாள்தனமாக ஆயுதத்தில் மனநோய் (psychopath) கொண்ட புலிகளின் வானவேடிக்கைகளிலும் கீரோயிசத்தையும் வெற்றி என்று நம்பி, உயிர்களையும் காவுகொடுத்து, உடமைகளை இழந்து, விடுதலை என்பதை பரம்பரைக்கே உச்சரிக்க முடியாதபடி எம்மக்கள் இன்று இருக்கிறார்கள். இதற்குப் புலிகளே பொறுப்பாளிகள் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஒழித்துக் கொள்ளமுடியாது. நீங்கள் புலிகளுக்குப் பயந்து சிங்கள அரசுடன் கைகோத்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை. சிறுசிறு குழுக்களாக இருக்கும் நீங்கள் ஏன் மக்களெனும் பொது நோக்குக்காக பெரிதாக இணையக்கூடாது.

விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கொண்டு திரியும் புலிப் பினாமிகளின் வால்கள் கேட்டும் கேள்வி என்னவென்றால் புலிகளை விட்டால் மக்களுக்கு என்ன வழி? அரசாங்கத்துக்கு அடிபணியச் சொல்கிறீர்களா? சிங்கள மக்களும் அரசும் இனி எம்மை மதிக்குமா? தமிழனின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விகளுக்கு நீங்களே பதில் சொல்லவேண்டியவர்கள். புலிகளிலும் பலர் மாற்று வழியின்றியே அங்கே நிற்கிறார்கள் என்பதை அறிக.

மாற்றுக்கருத்துக் கொண்ட மன்னர்கள் மக்களுக்காக இந்தியாவில் என்று, பின் சிங்கப்பூரில் என்று, பின் இலங்கையில் ஒருசந்திப்பை ஏற்படுத்தினீர்கள். ஆக்கபூர்வமாக என்ன நடந்தது? உங்கள் கருத்துக்களை அன்றி மக்களின் நிலை, எதிர்காலம் பற்றி ஏதாவது கதைத்தீர்களா? அரசும் அவர்களின் ஆலோசகர்களும் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இதைக் கேட்பதற்கு கணனி, ரேடியோ, தொலைக்காட்சி என்று போதியளவு ஊடகங்கள் உள்ளன. இவ்வளவு செலவழித்துக் கொண்டு போகவேண்டிய அவசியம் என்ன? சுற்றுலாவா?

தயவுசெய்து இனியாவது சிந்தியுங்கள் புலிகளால் என்றும் ஒருசரியான முடிவை எடுக்க முடியாது. தாம்செய்த பிழைகளை ஒத்துக்கொள்ளக் கூடியவீரம் அவர்களிடம் இல்லை. இருந்திருந்தால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தூக்கிக் கொண்டு செய்த பிழைகளுக்கு நியாயம் கற்பிக்க முயல்வார்களா? கொண்டு திரியும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினூடாக தமக்கு பணம் கொட்டித்தர இன்னும் எவ்வளவு வெளிநாட்டுத் தமிழர்கள் உள்ளார்கள் என்று கணக்குப் போடுகிறார்களா? என்று திம்புப் பேச்சுவார்த்தைக்குச் சென்றீர்களோ அன்றே வட்டுக்கோட்டைத் தீர்மானம் புலிகளின் பக்கத்திலும் இறந்துவிட்டது. இப்ப என்ன வேண்டியிருக்கிறது புதிய வட்டுக்கோட்டைப் பிரகடனம்.

இப்படியான எண்ணமும் கருத்தும் உள்ள புலிகளால் மக்களை மையப்படுத்திய சரியான ஒருபோராட்டத்தை முன்வைக்க இயலாது. மக்களை மையப்படுத்திய போராட்டமானது அரசில் சுபீட்சம் உள்ளதாக ஏன் புலிகள் விரும்பும் தமிழீழமாகவும் இருக்கலாம். அதையும் அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். ஐயோ போதும் போராட்டம் வேண்டாம் மக்கள் களைத்துவிட்டார்கள் என்கிறீர்களா? சரி அந்த மக்களை என்ன செய்யப் போகிறீர்கள் சிறு சிறு ஆயுதக்குழுக்களிடம் ஒப்படைக்கப் போகிறீர்களா? இதைத்தான் அரசு செய்கிறது. இதை அனுமதிக்கப் போகிறீர்களா?

இன்று வெளிப்புலத்தில் எமக்கும் ஈழத்தில் எம்மக்களுக்கும் அரசியல், வாழ்வியல் சம்பந்தமாக பலதேவைகள் இருக்கிறது என்பதை யாவரும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டு இருப்பதை விடுத்து இனியாவது முன்பு நாம் படித்த பாடங்களை மனதில் கொண்டு முன்நோக்கி நகரவேண்டிய தேவையும், காலத்தின் கட்டாயமும் எம் முன் மண்டியிட்டுக் கிடக்கிறது. எதிரி துரோகி என்றும் அவன் இவன் என்றும் முதுகில் முத்திரை குத்துவதை விட்டுவிட்டு, நீங்கள் கொண்டுவந்து அமைப்புச் சாயங்களைக் கழுவி விட்டு ஒன்றினைத்து ஈழத்திலுள்ள தமிழ் மக்களின் குரல்களைச் செவிமடுத்து நாம் நாமாக எல்லோருமாக இணைந்து செயற்பட வேண்டிய காலத்தில் காலடி வைக்க வேண்டியுள்ளது.

புலிகளினுள்ளும் மாற்றுவழியின்றிப் பலர் இருக்கின்றனர் என்பதை உணரமுடிகிறது. மக்களின் நலனுக்காக மனந்திறந்து இணைக்கூடிய எல்லாச் சக்திகளையும் ஒன்றிணைத்து பொதுவான வேலைத்திட்டங்களை உருவாக்கி, மக்களின் தேவைகளைக் கூர்மைப்படுத்தி இயங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சமூகம் என்பது பலதரப்பட்டவர்களைக் கொண்டது. ஆதலால் கருத்துக்களில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. மாற்றமில்லாத எதுவுமே வளர்ச்சியடையாது. வளர்ச்சி கூட மாற்றம் தான் என்பதை மறுக்க முடியுமா?

இனியாவது திறந்த மனங்களுடன் மக்களின் தேவைகருதி, பழைய சாயங்களை களைந்து கட்டிய கைகளை அகலத் திறவுங்கள். உங்கள் விரிந்த நெஞ்சங்களில் தமிழ் மக்கள் மையம்கொள்ளட்டும். உங்கள் உண்மையான ஆக்கபூர்வமான விமர்சனங்களை வையுங்கள். கருத்துக்களைக் கருத்துக்களால் சந்தியுங்கள். குறைந்தபட்ச உடன்பாட்டுடனாவது எம்மை நோக்கிக் கையேந்தி நிற்கும் எம்மக்களுக்காக உங்கள் கண்களை அகல விரியுங்கள். மீண்டும் பழைய பல்லவிகளை விட்டுவிட்டு புதியவர்களாக புதிய கருத்துக்களுடன் உங்கள் கருத்துக்களை எம் மக்கள்மேல் குவியுங்கள். உங்களின் ஒற்றுமையில்தான் ஈழ மக்களின் எதிர்காலம் உள்ளது என்பதை மறக்காதீர். நீங்கள் எந்த அமைப்புச் சாந்தவர்களாகவும் இருந்திருக்கலாம். புதியபாதையை மக்கள் நலனுக்காகவும் இனத்துக்காகவும் திறவுங்கள். சுதந்திரம் என்பது ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உரியது. அதை அடைவு வைக்கவோ, ஏகபோக உரிமை கொண்டாடுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி உரிமை கொண்ட முயலுபவர்கள் மாபியாக்களாகவே பிரணமிப்பார்கள். புலிகள் புறப்பட்ட பயணம் பாதைமாறி பாதாளத்துள் விழுந்துள்ளது. புலிகளும் மாறலாம் மாறவேண்டும் என்பது அவர்கள் இன்று படித்த பாடம் என்பதையும் அறிக.

தப்பிச் செல்ல முயன்ற சூசையின் குடும்பத்தினர் கடற்படையினரால் கைது!

sri_lanka_navy_logo.pngபடகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, மகன்,  மகள்,  மற்றும் இரு உறவினர்கள் இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க தெரிவித்தார். புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகத்துக்கிடமான படகை கடற்படையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோதே சூசையின் குடும்பத்தினர் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

சூசையின் மனைவி,  அவரது மகன்,  மகள்,  மற்றும் இரு உறவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர். சூசை இன்னமும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருப்பதாக சூசையின் குடும்ப உறுப்பினர்கள் படையினரிடம் தெரிவித்துள்ளனர். எந்தவொரு புலி உறுப்பினருக்கும் கடல் மூலம் தப்பிச் செல்ல முடியாதவாறு கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க கூறினார். 

நாளை வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தயார்

india-elc.jpgமக்களவைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே ஆட்சியமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெற்று, மாநில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைப்பது குறித்த முயற்சிகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், முடிவுகள் பிற்பகலுக்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடுமுழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகளை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தேர்தல் முடிவுகளை தெரிவிக்க ஏதுவாக சுமார் ஆயிரத்து 80 பத்திரிகை தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணைய நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகளிலும், முடிவுகளைத் தெரிவிக்கும் பணிகளிலும் நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இரு மின்னணு தகவல் பலகைகள் வைக்கப்பட்டு, அவ்வப்போது வெளியாகும் முடிவுகள் வெளியிடப்படும். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒரிஸ்ஸா மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகின்றன.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களுக்குதவ அமெரிக்க கடற்படை தயார் நிலையில்

us-navy.jpgஇலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கையினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும் நிலைப்பாட்டில் அமெரிக்க கடற்படையினர் உள்ளனர்.

இடம்பெயர் மக்களைப் பார்வையிட்டு உதவ அரசு எமக்கு அனுமதி வழங்கவில்லை: ரவூப் ஹக்கீம்

hakkem.jpg“வடக்கில் இடம்பெறும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உதவிகளை வழங்கும் ஒரு சந்தர்ப்பத்தை அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை” என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுதந்திரத்திற்கான மேடையின் அரங்கம் என்ற அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஒபாமாவின் பேச்சுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் வரவேற்பு

obama_.jpgஇலங்கையில் மனிதாபிமானப் பிரச்சனை உருவாவதைத் தவிர்க்குமாறு கோரியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் பராக் ஒபாமா, இலங்கையில் ஒரு மனிதாபிமானப் பிரச்சனை உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்சனை ஒரு பேரழிவாக மாற்றமடைவதற்கு முன்பாக சிறிலங்க அரசு போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி, வெள்ளை மாளிமை முன்பாக கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒபாமாவின் பேச்சுக்கு இன்று வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு தலைமை தாங்கி போராட்டம் நடத்தி வரும் எலியாஸ் ஜெயராஜா இதுகுறித்துப் பேசுகையில், தமிழர்கள் குடியிருப்புப் பகுதியில் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும், போர் பகுதியில் சிக்கியுள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்ற அதிபர் ஒபாமாவின் கோரிக்கையை சிறிலங்க அரசாங்கம் மறுக்க முடியாது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

அதிபர் ஒபாமாவின் பேச்சு, இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை பார்த்துக் கொண்டு உலக நாடுகள் அமைதியாக இருக்காது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் ஜெயராஜா கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் நீடிக்கும்: இலங்கை அரசாங்கம்- இலங்கை வெளியுறவுச் செயலர்

palitha_koahana.jpgஇலங்கையின் வடகிழக்கே விடுதலைப் புலிகளுடனான மோதலை நிறுத்த சர்வதேச அளவில் கோரிக்கைகள் வெளியாகியுள்ள போதிலும், புலிகளுக்கு எதிரான தமது இராணுவத் தாக்குதலை தொடர்ந்து நடத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.