மக்களவைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே ஆட்சியமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெற்று, மாநில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைப்பது குறித்த முயற்சிகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், முடிவுகள் பிற்பகலுக்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடுமுழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகளை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தேர்தல் முடிவுகளை தெரிவிக்க ஏதுவாக சுமார் ஆயிரத்து 80 பத்திரிகை தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணைய நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகளிலும், முடிவுகளைத் தெரிவிக்கும் பணிகளிலும் நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இரு மின்னணு தகவல் பலகைகள் வைக்கப்பட்டு, அவ்வப்போது வெளியாகும் முடிவுகள் வெளியிடப்படும். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒரிஸ்ஸா மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகின்றன.