புலிகளின் வீழ்ச்சி உறுதியாகி விட்டதா? மூக்குள்ள வரை சளி என்பது போல்தான் ஈழத்தமிழர் வாழ்க்கை அமையப் போகிறதா? சிங்கள இனவாதிகளுடனும், இலங்கை அரச ராணுவ இயந்திரங்களின்கீழும் மீண்டும் மிதிபடும் நிலை தொடருமா? ஒற்றையாட்சியினுள் ஆயுதங்கள் முடக்கப்படுமா? இப்படிப் பல கேள்விகளின் மத்தியில் பதுங்கிக் கொள்கிறது மனமும் உணர்வுகளும்.
இன்றைய தேவை கருதி தம்முள் உள்ள குத்து வெட்டுக்களின் தவறுகளை உணர்ந்து அதனை நிராகரித்து ஒன்றிணைந்த ஒரு கிராமத்தை இங்கு குறிப்பிடுவது முக்கியம். யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதியிலுள்ள ஒரு மீன்பிடிக் கிராமம். குத்து வெட்டுகளுடன்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். புலிகளின் யாழ் வீழ்ச்சியுடன் வன்னி நோக்கி நகர்ந்து மீண்டும் புலிகளின் பலாற்காரத்தால் கடைசி வரையும் இழுத்துச் செல்லப்பட்டார்கள். பின் புலிகளின் பிராந்தியத்தை விட்டு 120 குடும்பங்கள் (சுமார் 600 பேர்) இராணுவப் பகுதிக்கு வந்துள்ளனர் என அறிந்ததும் மீதியாய் கிராமத்தில் இருந்த 28 குடும்பங்களும் வேற்றுமைகளை மறந்து ஒருநாள் எல்லோருமாகச் சேர்ந்து கடலட்டை பிடித்து 8 இலட்சம் ரூபாய்க்கு விற்று அப்பணத்தை இடம்பெயர்ந்து அல்லலுறும் கிராமத்தவர்க்குப் பகிர்ந்து கொடுத்தார்கள் என்றால் நாம்….? இதைப் பார்த்தாவது தேவையறிந்து சிந்திப்பீர்களா? IPKF ஈழத்தில் நிற்கும்போது பொது எதிரியாக இருந்த இந்திய இராணுவத்தை எதிர்த்துப் புலிகளும், இலங்கை இராணுவமும் இயங்கின. சுனாமியின் போதும் இப்படியே நடந்தது. எதிரிகளே ஒன்றாகி ஒரு பொது நோக்குக்காக செயற்படும் போது தமிழர்களாய் நீங்கள் பிரிவுண்டுதான் இருக்கப் போகிறீர்களா?
மாற்றுக் கருத்தாளர்கள், புத்திஜீவிகள், முற்போக்காளர்கள், இடதுசாரிகள், சமூக மாற்றம் விரும்பிகள், பெண்கள் சந்திப்புக்கள், பின்னவீனத்துவம், சிறு சஞ்சிகைகள், ஊடகங்கள், எல்லோரையும் நோக்கியே என் எழுத்துக் கற்கள் வீசப்படுகின்றன. நீங்கள் இவ்வளவு காலமும் செய்து கொண்டிருந்தது புலி எதிர்ப்பு வாதம் மட்டுமே. எம்மக்களுக்கான எந்த மாற்று மையங்களை உருவாக்கினீர்கள். உருவாகிய மையங்களினுள்ளும் அமைப்புகளுக்குள்ளும் ஆயுதமின்றிக் குத்து வெட்டுப்பட்டு பிரிந்து பிளந்து கிடக்கிறீர்கள். உங்களுக்கு பாசிச சிங்கள அரசு மட்டுமல்ல பாசிசப் புலிகளும் எதிரிகள் என்றால் புலிகளால் பாதிக்கப்பட அமைப்புகளில் இருந்தவர்கள், மற்றும் மேற்குறிப்பிட்ட அனைவரும் ஒன்றாய் நின்று எம்மக்களுக்கு ஒரு மாற்று வழியைத் தயார்படுத்தி இருக்கலாம் செய்தீர்களா? சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறீர்களே. புலிகளால் பொது வேலைத்திட்டத்தில் செயற்பட முடியாது என்றால் (உ+ம்: திம்பு) உங்களால் ஏன் முடியவில்லை. நீங்களும் புலிகளுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதைத்தான் உறுதிப்படுத்துகிறீர்கள். புலியின் போராட்டத்துடன் ஒத்துப்போகாத அனைவரும் காட்டும் காரணங்கள் மக்கள் மக்கள் மக்கள். அந்த மக்கள்தான் இன்று உங்கள் முன் அவலத்தில் விளிம்பில் நிற்கிறார்கள். என்ன செய்யப் போகிறீர்கள்? காலம் கனிந்திருக்கிறது. இனியாவது ஒன்று சேர்வீர்களா? புலி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ்… எனஇருந்து பின் பிரிந்து சென்றீர்கள். இனி ஏன் மீண்டும் பழைய கனவுகள். புதிதாகச் சிந்தியுங்கள் மக்களுக்காக மக்களாக ஒன்றுபடுங்கள். இன்று புலிகளுக்குக் கூட மாற்று வழியில்லை. எங்கே உங்களது மாற்றுவழியும் சமூக மாற்றமும்?
ஆயுதப்புரட்சி ஒன்றே எமது விடுதலையை வென்றுதரும் என்ற புலிகள் அதே ஆயுதங்களால் இன்று அடியறுந்து நிற்கின்றனர். காரணம் புதிதாகச் சிந்திக்க மறந்து, மறுத்து, பழைய பல்லவியையே பாடிய ஆடியதன் விளைவா? மண்மீட்பு மட்டுமல்ல மக்கள் மீட்பு மட்டுமே எம் மக்களின் விடுதலை என்று, புலிகளின் ஆயுதங்களால் துரத்தப்பட்ட மாற்று கருத்தாளர்கள் இன்னுமேன் மௌனம். புலியெதிர்ப்பு வாதம் மட்டும்தான் உங்கள் பணியா? மக்கள் மீட்பு என்று கருதினால் இந்த மக்கள் மீட்பும் சிங்கள மக்களுக்கும் தேவைப்பட்டது தேவைப்படுகிறது. எமது நியாயமான கோரிக்கைகளைத் தரமறுத்த சிங்கள அரசுக்கெதிராக ஏன் சிங்கள மக்களையே கிளர்ந்தெழ நீங்கள் உதவியிருக்கலாம்? இதைக் கூட நீங்கள் குறைந்தபட்சம் தெற்கிலங்கையிலுள்ள உங்கள் கருத்துக்களுடன் ஆக்கபூர்வமாக இணையக் கூடியவர்களுடனாவது இணைந்து ஒற்றையாட்சியின் கீழ் மக்கள் மீட்பை உருவாக்க முயன்றிருக்கலாம். ஏன் செய்யவில்லை? முதுகில் குத்தப்படும் முத்திரைகளுக்குப் பயந்தீர்களா? முத்திரை குத்தப்படாத கடிதங்கள் உங்களைப் போல் முடங்கித்தான் கிடக்கும்.
முட்டாள்தனமாக ஆயுதத்தில் மனநோய் (psychopath) கொண்ட புலிகளின் வானவேடிக்கைகளிலும் கீரோயிசத்தையும் வெற்றி என்று நம்பி, உயிர்களையும் காவுகொடுத்து, உடமைகளை இழந்து, விடுதலை என்பதை பரம்பரைக்கே உச்சரிக்க முடியாதபடி எம்மக்கள் இன்று இருக்கிறார்கள். இதற்குப் புலிகளே பொறுப்பாளிகள் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஒழித்துக் கொள்ளமுடியாது. நீங்கள் புலிகளுக்குப் பயந்து சிங்கள அரசுடன் கைகோத்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை. சிறுசிறு குழுக்களாக இருக்கும் நீங்கள் ஏன் மக்களெனும் பொது நோக்குக்காக பெரிதாக இணையக்கூடாது.
விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கொண்டு திரியும் புலிப் பினாமிகளின் வால்கள் கேட்டும் கேள்வி என்னவென்றால் புலிகளை விட்டால் மக்களுக்கு என்ன வழி? அரசாங்கத்துக்கு அடிபணியச் சொல்கிறீர்களா? சிங்கள மக்களும் அரசும் இனி எம்மை மதிக்குமா? தமிழனின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விகளுக்கு நீங்களே பதில் சொல்லவேண்டியவர்கள். புலிகளிலும் பலர் மாற்று வழியின்றியே அங்கே நிற்கிறார்கள் என்பதை அறிக.
மாற்றுக்கருத்துக் கொண்ட மன்னர்கள் மக்களுக்காக இந்தியாவில் என்று, பின் சிங்கப்பூரில் என்று, பின் இலங்கையில் ஒருசந்திப்பை ஏற்படுத்தினீர்கள். ஆக்கபூர்வமாக என்ன நடந்தது? உங்கள் கருத்துக்களை அன்றி மக்களின் நிலை, எதிர்காலம் பற்றி ஏதாவது கதைத்தீர்களா? அரசும் அவர்களின் ஆலோசகர்களும் சொன்னதைக் கேட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இதைக் கேட்பதற்கு கணனி, ரேடியோ, தொலைக்காட்சி என்று போதியளவு ஊடகங்கள் உள்ளன. இவ்வளவு செலவழித்துக் கொண்டு போகவேண்டிய அவசியம் என்ன? சுற்றுலாவா?
தயவுசெய்து இனியாவது சிந்தியுங்கள் புலிகளால் என்றும் ஒருசரியான முடிவை எடுக்க முடியாது. தாம்செய்த பிழைகளை ஒத்துக்கொள்ளக் கூடியவீரம் அவர்களிடம் இல்லை. இருந்திருந்தால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தூக்கிக் கொண்டு செய்த பிழைகளுக்கு நியாயம் கற்பிக்க முயல்வார்களா? கொண்டு திரியும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினூடாக தமக்கு பணம் கொட்டித்தர இன்னும் எவ்வளவு வெளிநாட்டுத் தமிழர்கள் உள்ளார்கள் என்று கணக்குப் போடுகிறார்களா? என்று திம்புப் பேச்சுவார்த்தைக்குச் சென்றீர்களோ அன்றே வட்டுக்கோட்டைத் தீர்மானம் புலிகளின் பக்கத்திலும் இறந்துவிட்டது. இப்ப என்ன வேண்டியிருக்கிறது புதிய வட்டுக்கோட்டைப் பிரகடனம்.
இப்படியான எண்ணமும் கருத்தும் உள்ள புலிகளால் மக்களை மையப்படுத்திய சரியான ஒருபோராட்டத்தை முன்வைக்க இயலாது. மக்களை மையப்படுத்திய போராட்டமானது அரசில் சுபீட்சம் உள்ளதாக ஏன் புலிகள் விரும்பும் தமிழீழமாகவும் இருக்கலாம். அதையும் அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். ஐயோ போதும் போராட்டம் வேண்டாம் மக்கள் களைத்துவிட்டார்கள் என்கிறீர்களா? சரி அந்த மக்களை என்ன செய்யப் போகிறீர்கள் சிறு சிறு ஆயுதக்குழுக்களிடம் ஒப்படைக்கப் போகிறீர்களா? இதைத்தான் அரசு செய்கிறது. இதை அனுமதிக்கப் போகிறீர்களா?
இன்று வெளிப்புலத்தில் எமக்கும் ஈழத்தில் எம்மக்களுக்கும் அரசியல், வாழ்வியல் சம்பந்தமாக பலதேவைகள் இருக்கிறது என்பதை யாவரும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டு இருப்பதை விடுத்து இனியாவது முன்பு நாம் படித்த பாடங்களை மனதில் கொண்டு முன்நோக்கி நகரவேண்டிய தேவையும், காலத்தின் கட்டாயமும் எம் முன் மண்டியிட்டுக் கிடக்கிறது. எதிரி துரோகி என்றும் அவன் இவன் என்றும் முதுகில் முத்திரை குத்துவதை விட்டுவிட்டு, நீங்கள் கொண்டுவந்து அமைப்புச் சாயங்களைக் கழுவி விட்டு ஒன்றினைத்து ஈழத்திலுள்ள தமிழ் மக்களின் குரல்களைச் செவிமடுத்து நாம் நாமாக எல்லோருமாக இணைந்து செயற்பட வேண்டிய காலத்தில் காலடி வைக்க வேண்டியுள்ளது.
புலிகளினுள்ளும் மாற்றுவழியின்றிப் பலர் இருக்கின்றனர் என்பதை உணரமுடிகிறது. மக்களின் நலனுக்காக மனந்திறந்து இணைக்கூடிய எல்லாச் சக்திகளையும் ஒன்றிணைத்து பொதுவான வேலைத்திட்டங்களை உருவாக்கி, மக்களின் தேவைகளைக் கூர்மைப்படுத்தி இயங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சமூகம் என்பது பலதரப்பட்டவர்களைக் கொண்டது. ஆதலால் கருத்துக்களில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. மாற்றமில்லாத எதுவுமே வளர்ச்சியடையாது. வளர்ச்சி கூட மாற்றம் தான் என்பதை மறுக்க முடியுமா?
இனியாவது திறந்த மனங்களுடன் மக்களின் தேவைகருதி, பழைய சாயங்களை களைந்து கட்டிய கைகளை அகலத் திறவுங்கள். உங்கள் விரிந்த நெஞ்சங்களில் தமிழ் மக்கள் மையம்கொள்ளட்டும். உங்கள் உண்மையான ஆக்கபூர்வமான விமர்சனங்களை வையுங்கள். கருத்துக்களைக் கருத்துக்களால் சந்தியுங்கள். குறைந்தபட்ச உடன்பாட்டுடனாவது எம்மை நோக்கிக் கையேந்தி நிற்கும் எம்மக்களுக்காக உங்கள் கண்களை அகல விரியுங்கள். மீண்டும் பழைய பல்லவிகளை விட்டுவிட்டு புதியவர்களாக புதிய கருத்துக்களுடன் உங்கள் கருத்துக்களை எம் மக்கள்மேல் குவியுங்கள். உங்களின் ஒற்றுமையில்தான் ஈழ மக்களின் எதிர்காலம் உள்ளது என்பதை மறக்காதீர். நீங்கள் எந்த அமைப்புச் சாந்தவர்களாகவும் இருந்திருக்கலாம். புதியபாதையை மக்கள் நலனுக்காகவும் இனத்துக்காகவும் திறவுங்கள். சுதந்திரம் என்பது ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உரியது. அதை அடைவு வைக்கவோ, ஏகபோக உரிமை கொண்டாடுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி உரிமை கொண்ட முயலுபவர்கள் மாபியாக்களாகவே பிரணமிப்பார்கள். புலிகள் புறப்பட்ட பயணம் பாதைமாறி பாதாளத்துள் விழுந்துள்ளது. புலிகளும் மாறலாம் மாறவேண்டும் என்பது அவர்கள் இன்று படித்த பாடம் என்பதையும் அறிக.
senthil
கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாக விளங்கமுடியாமல் உள்ளது.இவர் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார். எல்லோரையும் ஒற்றுமையாக வரும்படி அழைக்கிறார்.அதே நேரத்தில் தமிழீழமா அல்லது வேறு ஏதும் தேவையா என்பதை அந்த மக்கள் தீர்மானிக்கட்டும் என்கிறார்.அப்படியாயின் இவர்கள் எதற்காக ஒற்றுமைப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்?
(1)தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு?
(2)தமிழீழம் பற்றி என்ன கருத்து?
(3)இந்தியா தமிழ் மக்களின் நண்பனா? எதிரியா?
(4)போராட்டப்பாதை எது? ஆயுதப்போராட்டமா? பாராளுமன்றப்பாதையா?
மேற்கண்ட வினாக்களுக்கு கட்டுரையாளரின் தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன். ஏனெனில் மேற்கண்ட வினாக்களின் பதில்தான் உண்மையான ஜக்கியம் அடங்கியிருப்பதாக நான் கருதுகிறேன். இல்லையேல் மீண்டும் மீண்டும் போலி ஜக்கியங்களும் துரோகங்களுமே அமையும்.
kural
தமிழீழமே சிறந்த தீர்வு என்போரும் மாநில சுயாட்சியே சிறந்த தீர்வு என்போரும் என்ன அடிப்படையில் ஜக்கியப்படமுடியும?
இந்தியா எமக்கு எதிரி என்போரும் இந்தியா எமக்கு நண்பன் என்போரும் என்ன அடிப்படையில் ஜக்கியப்பட முடியும்?
பாராளுமன்றப்பாதையை நாடுவோரும் புரட்சிப்பாதையை நாடுவோரும் என்ன அடிப்படையில் ஜக்கியப்பட முடியும்?
எதாவது ஒரு நல்ல அடிப்படையில் உருவாகாத ஜக்கியம் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நீடித்து இருக்குமா?
puvanan
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க என்று வாழ்த்தும் போது உண்மையில் யாரும் அவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதில்லை. அதேபோல் நுறு வயதிற்குள் செத்து விடுவாய் என்னும் போது அது உண்மை. ஆனால் யாரும் அவ்வாறு உண்மையை சொல்வதை விரும்புவதில்லை. இதேபோலவே இப்போது எல்லோரும் ஒற்றுமையை பற்றி பேச ஆரம்பித்துள்ளார்கள். பொதுவாக ஒற்றுமை என்பது நல்ல விடயம்தான். ஆனால் இது யாருக்கிடையில் ஏற்பட வேண்டும் என்பதைப்பற்றி ஆழமாக யாரும் பார்ப்பதில்லை. ஏனெனில் அதைப்பற்றி கதைக்க ஆரம்பித்தால் அதாவது உண்மையைக் கதைக்க ஆரம்பித்தால் தங்கள் மீது விமர்சனம் வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள் போலும். கட்டுரை எழுதுவோர் விமர்சனத்திற்கு அஞ்சாமல் தங்கள் கருத்துக்களை தெளிவாக முன்வைக்க வேண்டும்.
sugunan
பிரபாகரனை உருவாக்கியதும் இந்தளவுக்கு அவரை வளர்த்து எடுத்ததும் யாழ்ப்பாண சமூகம்தானே என்பதை யாராலும் மறுக்கமுடியுமா? எனவே முழுப்பழியையும் பிரபாகரன் மீது போட்டுவிட்டு தப்பிக்க முயற்சிக்காமல் இந்த பிரபாகரன்களை உருவாக்கும் சமூகத்தை கொஞ்சம் விமர்சிப்போம். இதன் மூலமே எதிர்காலத்தில் இப்படியான பிரபாகரன்களை உருவாகாமல் தவிர்க்கமுடியும்.
நண்பன்
யாழ்பாணத்தில புலிகளை மறந்து வெகு காலம். ஒரு போராட்டம் கூட இல்லை. இதுதான் அவர்களது உண்மையான முகம்?
பார்த்திபன்
//பிரபாகரனை உருவாக்கியதும் இந்தளவுக்கு அவரை வளர்த்து எடுத்ததும் யாழ்ப்பாண சமூகம்தானே என்பதை யாராலும் மறுக்கமுடியுமா?- sugunan //
ஆரம்பத்தில் புலிகளை மட்டுமல்ல, பல ஏனைய இயக்கங்களையும் வளர்த்துவிட்டது உண்மை தான். ஆனால் என்று புலிகள் சகோதரப் படுகொலைகளை ஆரம்பித்தார்களோ அன்று யாழ் சமுகத்தின் ஆதரவு குறையத் தொடங்கியது. அதன் பிரதிபலனானகத்தான் யாழ் சமுகத்தின் பல புத்திசாலிகளை புலிகள் போட்டுத் தள்ளத் தொடங்கினார்கள்.
rohan
உங்களது கேள்வி சரி – ஆனால் இங்கு பதில் கிடைக்காது.
தமிழர்கள் எப்பாடுபட்டுப் போனால் என்ன – புலிக்குக் கழுத்து முறிந்தால் சரி – என்ற கருத்துக் கொண்டோர் தான் இங்கு பெருங் குரலில் எழுதுகிறார்கள்.
தமிழர்களுக்கு என்ன தீர்வு என்று கேட்டுப் பாருங்கள். இவர்களிடம் பதில் இல்லை.
இறக்குவானையிலும் வட்டவளையிலும் சைவ மக்கள் உரிமை பறிக்கப்படும் அதே வேளை குடும்பி மலையில் புத்தர் முளைத்திருக்கிறார். அதற்கு, ‘தமிழ் பெளத்தர்கள்’ இருக்கவில்லையா என்று கூறி ஆலவட்டம் பிடிக்க இங்கு அறிவுடையோர் இருக்கிறார்கள்.
எங்கள் வாழ்க்கை பெயர்ந்த புலத்தில் உல்லசமாக்ப் போகிறது. ஈழத்தில் – இல்லை இல்லை சிறீலங்காவில் – தமிழனுக்கு என்ன ஆனால் தான் என்ன? இவர்கள் புலிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் தானே. எங்களைப் போல புலம் பெயரத் தெரியாத முட்டாள்கள் தானே!!!
Kulan
மேலுள்ள பின்னோடங்களுக்கு பதிலளிக்கவிளைகிறேன். ஆயுதம்தான் ஒரேவழி என்று புறப்பட்ட அனைத்து இயக்கங்களும் ஆயுதங்களாலேயே முதுகு முறிக்கப்பட்டன. கடைசிய முதுகு முறிந்தது புலிகள்.கடந்த காலங்களில் பல ஆயுதப்போராட்டங்கள் வெற்றியழித்தனவே ஏன் எமது போராட்டம் தோல்வியடைந்தது? போராட்டத்தின் மையமே மக்கள்தான். விடுதலை மக்களுக்கு மட்டுமே தவிர மண்ணுக்கல்ல. மண் பாரம்பரியமானது ஆனாலும் மக்களே வாழ்வுக்குரியர்கள். போராடும் சக்திகளிடையே ஒற்றுமையின்மையும்; சரியான முறையில் போருக்காகத் தயார் படுத்தப்பட்ட மக்களின்மையுமே காரணம். எந்த ஆயுதப்போராட்டமும் அரசியலின்றி வெற்றி பெற்றது கிடையாது. அரசியல் என்பது இராஜதந்திரங்களுடன் கூடியது. புலிகள் இராணுவத்தை அடிக்க மக்கள் பார்வையாளராகவே செத்திருக்கிறார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? மக்கள் எழுற்சியாக இருந்திருந்தால் புலிகள் வீடுவீடாய் பொடிகளைப் பிடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. போராட்டும் என்பது திணிக்கப்பட்ட ஒன்றாகிறது.
பிரபாகரன் பலபேட்டிகளில் செக்கோ விடுதலையை முன்னிறுத்திக் கதைப்பார். அங்கே போராட்டசக்தியாக மக்களே இருந்தார்கள் தேசத்தலைவர் தித்தோவின் அமெரிக்காவுடனும் இரசியாவுடனும் நல்லுறவை இரகசியமாகவும் சிலவிடயங்களில் வெளிப்படையாகவும் இராஜதந்திரத்தை காட்டிவந்தார். நாடு வென்றெடுகப்பட்டபோது தெருக்களைச் சம்பளமின்றி மக்களே சீர்செய்தார்கள். ஒற்றுமை என்பது மேலோங்கி இருந்தது. ஈழம் என்று அனைத்து இயக்கங்களும் புறப்படபோது ஈழம் வேட்டியவர்களாலேயே ஈழவேண்டிகள் வேட்டையப்பட்டனர். ஈழம் யாருக்கு வேண்டியிருந்தது? இதன் முடிவதான் இது இப்ப. பதில் கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன். ஏன் சிலவருடங்களுக்கு முன் இரஸ்யாவில் ஏற்படவிருந்த இராணுவப்புரட்சியை மக்கள் வெறுங்கையுடன் வென்றார்கள். ஆயுதங்கள் ராங்கிகளால் முன்நிற்க முடிந்ததா?
BC
//எங்கள் வாழ்க்கை பெயர்ந்த புலத்தில் உல்லசமாக்ப் போகிறது. ஈழத்தில் – இல்லை இல்லை சிறீலங்காவில் – தமிழனுக்கு என்ன ஆனால் தான் என்ன?-rohan //ஆனால் தலைவருக்கும் புலிகளுக்கும் ஒன்றும் நடக்க கூடாது.
இது தானே புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களின் எண்ணம்.
Kulan
நான் குழம்பவுமில்லைக் குழப்பவுமில்லை. செந்திலின் கேள்விகளுக்கான பதில்
1)மக்களுக்கு என்ன தீர்வு என்பதை அங்குள்ள மக்களே சுயமாகத் தீர்மானிக்க வேண்டும். திணிக்கப்பட்ட தீர்வுகளால் தீர்வே இல்லாது போன அனுபவம் போதாதா?
2)தமிழீழம்தான் வேண்டுமா இல்லையா என்பதையும் அவர்களே தீர்மானிக்க வேண்டும் போராடவேண்டும். அவர்களின் பசிக்காக நாம் சாப்பட இயலாது
3)இந்தியா நண்பனா எதிரியா என்பது தேவையில்லாத வேள்வி. இதற்குப்பதிலாக கேள்விகளைக் கேட்கிறேன். புலிகள் இன்று தமிழ்மக்களுக்கு நண்பர்களா? எதிரிகளா? வெளிநாட்டு புலம்பெயர்ந்த மாற்றுக்கருத்தாளர்கள் ஈழமக்களின் நண்பர்களா எதிரிகளா? இந்தியா இந்திராகாந்தி காலத்தில் நண்பனாக இருந்தது பின் அவருடைய மகன் ராஜீவின் காலத்தில் எதிரியானது ஏன்? நண்பனையும் பகைவனையும் நாமே தீர்மானிக்கிறோம்.
4)போராட்டப்பாதை ஆயுதப்போராட்டமா? பாரளுமன்றப்பாதையா? இரண்டும் இல்லை. ஆனால் இரண்டுடனும் கூடிய மக்கள்போராட்டமே.
செந்திலின் கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் என்ன வென்றால் போராட்டமும் முற்றுமுழுதாக அங்குள்ள மக்களுக்கே. ஆகவே என்ன வேண்டும் எது வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். மக்களின் வெகுசனப் போராட்டத்தைத்தவிர வேறு எந்தசக்திகளாலும் எமது உரிமைகளை வென்றெடுக்க இயலாது. யார் அழுதாலும் பிள்ளையை தாய்தான் பெறமுடியும் பெறவேண்டும். புலம்பெயர் தமிழர்களாகிய நாம் வேற்றைமைகளை மறந்து குறைந்தபட்ச உடன்பாட்டுடனாவது அம்மக்களுக்கு உதவத்தயாராக இருக்கவேண்டும்.
msri
குலன் அண்ணா கோவிக்காதையுங்கோ! >ஒருத்தரையும் விட்டு வைக்கேல்ல! எல்லாரையும் வெளு வெளன்று வெளுத்து தள்ளியுள்ளீர்கள்! உங்களுட்டை ஏதாவது மாற்றுக் கீற்று மையங்கள் மணடலங்கள் ஒண்டும் இல்லையோ? உந்தப்போக்குத்தானென்றால்> எல்லாற்றை கல்லும் உங்களை நோக்கியல்லோ வரப்போகுது!
nathan.s
எங்கட புத்திசாலிகள் கெளம்பிட்டாங்க திரும்பவும் நாடு பிடிக்க. நீங்களெல்லோரும் கிழிச்சது போதும். முதல் அந்த வன்னிச்சனம் மூச்சுவிடட்டும். அப்புறம் அவர்களாகவே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கிளர்ந்தெழுவார்கள். தலைவர்கள். நன்கு சாணைபிடிக்கப்பட்ட தலைவர்கள். மனிதத்தை வெல்லக்கூடிய தலைவர்கள் அங்கிருந்து தோன்றுவார்கள். அதுவரை உங்கள் பழைய பஞ்சாங்கங்களை தூக்கி வீசிவிட்டு புலம் பெயர் நாடுகளில் பிழைக்கிற வழியைபாருங்க.
Velu
Dear Comrades, Our immediate task is to settle-in, the Vanni people who are escaped from the Mafia and Fascist LTTE and leading a very difficult life in Govt.Camps with a litte resources.But they are very greatfull to the Srilankan Forces,who have liberated them from the anti people Tamil Tiger Terrorists.When we are making the arrangements to re-settle the people in their past inhabitants or in the new places ,in the same phase we have to rehabilitate the poor LTTE carders who are conscripted by the Mafia leadership.I hope that the government will do this task with their past experiences which was gained in rehabilitating the JVP carders in 1970s and 1980s.
Then we have to work hand in hand with the other communities to rebuild the country and fight for the better future of the the toilling masses of Srilanka.There is no more chance for the racists who may be Sinhalease ,Tamils or Muslims,etc.Then only we can build up a beautiful country with prosperity ,otherwise we will give one more chance for the imperialism to palay their game within us. The Working class must show their example by uniting all their members in one Union as before.NO more we dont want the trade union division in the base of language or race.
Then our immediate political slogans are, 1.DEMOCRACy and 2.PLURALISM.
WE want democracy ,pluralism and peace!!!
Thirumalaivasan
குலம் சொல்லவந்த விடயம் தெளிவாகவே உள்ளது. அதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவெ நாம் இருக்கிறோம். 30 ஆண்டுகால வரலாற்றை> அது நடந்து முடிந்தபின்னர் ஜமுனா ராஜேந்திரனின் திரைப்பட விமர்சகம்போல நன்மை தீமைகளை ஏதோ அர்த்தசாஸ்திரம் எழுதிய கெளடில்யராகத் தம்மை நிகனத்துக்கொண்டு அலசுகின்றோம். இது லேசான விசயம். விமர்சனம் செய்வது> பிழை பிடிப்பது> இதெல்லாம் சுகமான சந்திச் சவடால்கள். 30 வருடமாக ஒரு போராட்டத்தை இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் நடத்தி இன்று ரிமோட் கொன்ட்ரோலில் புகலிடத்திலும் தொடரும் விடுதலைப்புலிகளையும் அவர்களது பற்றுறுதியையும் தேசம் நெட் வாடிக்கையாளர்களால் புரிந்துகொள்ள முடிந்தாலும் பிடிவாதமாக அதை மறுத்துக்கொண்டுதான் இருப்பீர்கள். காரணம் அவர்களின் அந்த அதீத வளர்ச்சிக்கு என்ன காரணம் என்ற உளவியல் ரீதியான கேள்விகளை எமக்குள் கேட்டுக்கொண்டால் அவரவருக்கு குலனின் கட்டுரையின் அடிநாதமான கருத்தில் தெளிவு பிறக்கும். இல்லாவிட்டால் இன்னும் 20 வருடங்களுக்குப் புலிகளை விமர்சித்துக்கொண்டே உங்கள் இணையத்தள அரசியல் அலசல்களை சந்தோஷமாக நடத்திக் கொண்டிருப்பீர்கள். எங்கள் தலைவிதி அப்படி.
suthan
முதன் முதலில் சுயாட்சிக் கழக நவரட்னம் என்பவரே தமிழீழ கோரிக்கையை முன்வைத்தார்.அப்போது மக்கள் அவரையும் அவருடைய தீர்வையும் ஏற்றுக்கொள்ளவில்லை.அப்போது இந்த தனிநாட்டு தீர்வை அமிர்தலிங்கம் “தற்கொலைக்கு ஒப்பான தீர்வு”என்றார்.ஆனால் இதே அமிர்தலிங்கம் ஆறுமாதம் கழித்து அதே தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்த போது மக்கள் ஆதரித்து ஏற்றுக்கொண்டார்கள்.இந்த ஆறுமாத இடைக்கால கட்டத்தில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றோர் தேர்தலில் தோற்றதைத் தவிர வேறு மாற்றம் எதுவும் நடைபெறவில்லை.அப்படியாயின் அமிர்தலிங்கம் தனது தேர்தல் சுயநல அரசியலுக்காகவே இதனை முன்வைத்தார் என்பது உணர முடிகிறது.இங்கு எனது கேள்வி என்ன வெனில் அமிர்தலிங்கத்திற்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்த மக்கள் அதன் பின் அவர் இறக்கும் வரை வெற்றியைக் கொடுக்கவில்லையே?அது ஏன்? கட்டுரையாளர் குலன் அவர்கள் குறிப்பிடும் அதே மக்களே அமிர்தலிங்கத்தை நிராகரித்திருப்பதால் மக்கள் கருத்து மதிப்பளிப்பதாக குறிப்பிடும் குலன் அவர்கள் அந்த மக்களின் கருத்துப்படி அமிர்தலிங்கத்தை நிராகரிக்கிறாரா?
வளர்மதி
தெளிந்த நிதானத்துடன் எழுதியுள்ளீர்கள்.
இன்று இது அரிதாகிவிட்டது வருத்தத்திற்குரியது
நன்றிகள்.
vinaiaanathogai.blogspot.com
senthil
தமிழீழமா இல்லையா?
போராட்டப்பாதை எது?
இந்தியா நண்பனா எதிரியா?
எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.மக்கள் எப்படி தாங்களாகவே பார்த்துக்கொள்ள முடியும்?யாராவது முன்வைத்தால்தானே மக்கள் அது பற்றி தீர்மானிக்க முடியும்!
ரஸ்சியாவில் லெனின் முன்வைத்தார். மக்கள் அதனை பற்றிக்கொண்டார்கள். சீனத்தில் மாவோ முன்வைத்தார். அதனை சீன மக்கள் பற்றிக் கொண்டார்கள். வியட்நாமில் கோசிமின் கருத்துக்களை மக்கள் பற்றிக்கொண்டார்கள். அதேபோல் இந்தியாவில் காந்தியின் கருத்தக்களை மக்கள் பின்பற்றினார்கள். ஏன் கட்டுரையாளர் குறிப்பிட்டபடி இலங்கையில் அமிர்தலிங்கம் முன்வைத்த தீர்வைத்தானே மக்கள் பின்பற்றியதாக எழுதியுள்ளார். இப்போது தனது கட்டுரைக்கு முரணாகவே யாரும் வைக்க தேவையில்லை அந்த மக்களே பார்த்துக்கொள்வார்கள் என்று யதார்தமற்ற கருத்தை முன்வைக்கிறார்.
அடுத்து வெளியில் இருந்து அதாவது புலத்தில் இருந்து யாரும் கருத்து முன்வைக்க தேவையில்லை என்கிறார். கருத்தோ அல்லது தீர்வோ எங்கிருந்து வைக்கப்படுவது என்பது பிரச்சனை அல்ல மாறாக அது மக்கள் நலன் சார்ந்து வைக்கப்படுகிறதா என்பதே முக்கியம். சுபாஸ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இருந்துதான் போராடினார். லெனின் புரட்சி வெற்றி பெறும்வரை வெளிநாட்டில் இருந்துதான் வழிகாட்டினார். இவர்களைப் பார்த்து யாரும் வெளியே இருந்து கருத்து சொல்லாதே என்று கூறியதில்லை. இதை குலன் அவர்கள் கவனத்தில் கொண்டு தனது கருத்துக்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மாயா
குலன் , உங்கள் கட்டுரையில் நேரடியாக எதையும் சொல்லாவிட்டாலும் இன்னொரு போராட்டத்துக்கு எங்கோ இருந்து ஆள் திரட்ட முயல்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது? அத்தோடு நன்றாக நாடி பிடித்துப் பார்க்கிறீர்கள் என்பதும் புரிகிறது.
தமிழன் தன் சுய தேவைக்காக ஒற்றுமை குறித்து பேசுவான். தன் தேவை முடிந்ததும் தன் சுயரூபத்தைக் காட்டுவான். மீண்டும் பிரச்சனை வரும் போதுதான் ஒற்றுமை குறித்து பேசத் தலைப்படுவான்?
இதெல்லாம் இப்போதைய தேவையில்லை. உங்கள் எண்ணங்கள் மரத்தால் விழுந்தவனை மாடு குத்த வேண்டும் என்பதிலேயே கண்ணாக இருப்பதாக தெரிகிறது.இது மரத்தால் விழுந்தவனுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டிய நேரம்?
புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்து விரக்தியோடும் வேதனையோடும் வந்துள்ள மக்களுக்கு உள்ள இப்போதைய தேவை என்ன என்று யோசிப்பதையோ அல்லது அவர்களுக்கு உதவும் எண்ணத்தையோ குறித்து சிந்திக்காது , தொடர்ந்து உபத்திரவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே கட்டுரையாளரிடம் இருக்கிறது. இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கும் வரை காத்திருந்த எண்ணத்தை கனிய வைக்க முயலும் ஒரு முயற்சி?
அடுத்தவரிடம் கேள்விகளை தொடுக்கும், நீங்கள் மட்டும் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்? இதுவரை ஒழிந்து திரிந்த பலர் ஒற்றுமை – இணைப்பு – அது இது என்று தொடங்கி இன்னொரு சங்காரத்துக்கு மணி அடிக்க முயல்கிறார்கள்.
இப்போதைய தேவை புலிகளையோ , ஏனைய இயக்கங்களையோ வசைபாடுவதல்ல. இப்போதைய தேவை என்ன? இழப்புகளோடு வந்திருக்கும் அந்த மக்கள் ஆறுதலடைவதற்காகன வழிகள். அந்த மக்களின் அதிர்ச்சிகள் – சோகங்கள் – காயங்கள் ஆகியவற்றை ஆறப்பண்ணும் வழிகள். விழுந்து கிடக்கும் அந்த மக்கள் எழுந்து நிற்பதற்கான கரம் கொடுக்கும் உதவிகள். அரவணைப்புகள், மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகள், கரம் கொடுத்தல், மீண்டு எழுவதற்கான உடல் – உள – பொருளாதார தேவைகள். இதைவிடுத்து இந்த மாதிரியான எண்ணங்கள் உடனடி தேவையுமல்ல, இனி எதிர்காலத் தேவையுமல்ல. இனி இவை தொடர்ந்தால் அங்கு தமிழ் மக்கள் இருக்கவே போவதில்லை. சிங்களவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.
அடுத்து புரட்சி புண்ணாக்கு என்று தொடங்கினால் பாதி வெளி நாடுகளுக்கு வரும். மீதி செத்து சிவனடி போகும். இதை தவிர்க்க எமனால் கூட முடியாது. இதுவே யதார்த்தம்.
அடுத்த கட்டத்துக்கான நடவடிக்கையை சிறீலங்கா அரசும், அத்தோடு இருப்போரும், அங்குள்ள தமிழ் – சிங்கள புத்தி ஜீவிகளும் செய்வார்கள். அங்குள்ள மக்களின் பிரச்சைனையே அவர்களே தீர்ப்பார்கள். ஓடி வந்தவர்கள் அவர்கள் குறித்து புலத்தில் படம் காட்டத் தேவையில்லை. புலத்து போராட்டங்கள் மற்றும் காட்டு தர்பார்களை நிறுத்திவிட்டு அரசு மூலம் அல்லது அங்குள்ள உதவி நிறுவனங்கள் மூலம் அந்த மக்களுக்கு உதவ முயலுங்கள். அது நன்மை தரும். நம்பியவர்கள் கைவிட்ட நிலையில் எதிரியான சிங்களத்தின் (உங்கள் பாசையில்) கரங்களே அந்த மக்களை கரை சேர்க்க உதவுகிறது.
இவ்வளவு பெரு வெற்றியிலும் மகிந்த அரசு அமைதியாக தம்மால் முடிந்ததை செய்வதை பாராட்ட வேண்டும். இனி தமிழ் மக்களுக்கான தேவைகளை உரிமைகளை கொடுக்காமல் இருக்க முடியாது என்பதை சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள்.சிங்கள மக்கள் அதை தடுக்க மாட்டார்கள். காரணம் ஒரு சில தலைவர்களைத் தவிர்த்து, பெரும்பாலான சிங்கள மக்கள் சமாதானமான தேசத்துக்காகவே தொடர்ந்தும் வாக்களித்துள்ளார்கள். புலிகளைத் தவிர வேறு எவருமே யுத்தத்தை விரும்பியதில்லை. அதன் காயம் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் – சிங்கள – முஸ்லீம் – பர்கர் அனைவருக்குமே பாடம் புகட்டியுள்ளது. இறப்புகள் இரு பக்கத்திலும் உண்டு.
வெற்றியின் மகிழ்சிக் கண்ணீரோடு நாடு சோகத்திலும் அழவே செய்கிறது. இங்கே சிங்களம் – தமிழ் பேதமில்லை. போரில் இறந்தவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும்தான். தமிழர் சிங்களவனிடம் கற்க வேண்டியவை பல உண்டு. அது நாளை புரியும். மகிந்தவால் தமிழருக்கு நல்லது நடக்கும் என நம்புவோம். மகிந்தவால் நடக்காவிட்டால் இனி எவராலும் நடக்கவே நடக்காது. (அது குறித்து பின்னர் பேசுவோம்.)
அழுவோர் இனியாவது சிரிக்க வேண்டும். அழுவோரை தேற்ற ஏதாவது செய்ய முடிந்தால், செய்யுங்கள். அந்த மக்களின் தலைவிதியை அவர்களே தீர்மானிக்கட்டும். நாடு இனியாவது அமைதியாக இருக்க வழி பிறக்கட்டும்.
thampi
இன்று அகதி மக்களுக்காக பலர் எதற்காக உதவி செய்கிறார்கள்? அந்த மக்களில் தாமும் ஒருவர் என்பதாலும் அந்த மக்களின் நலனில் உண்மையாகவே அக்கறை உணர்வு இருப்பதால்தானே? இதனை குலன் அவர்கள் மறுக்கமாட்டார் என நம்புகிறேன். இங்கு எனது கேள்வி என்னவெனில் அந்த மக்களுக்கு உதவி செய்பவர்களுக்கு- அந்த மக்களுக்கு எது சிறந்த தீர்வு என்பது பற்றி கூற உரிமை இல்லையா? அல்லது தகுதி இல்லையா? மேலும் புலிகளுக்கு எதிராக புலத்தில்தானே தைரியமாக விமர்சனங்களை முன்வைக்க முடிகிறது? இலங்கையில் இருந்திருந்தால் தேசம் நெற் நடத்தியிருக்க முடியுமா? அல்லது குலன் அவர்கள் இப்படி ஒரு கட்டுரையை அதில் எழுதியிருக்க முடியுமா? எனவே தயவு செய்து மக்கள் போராடுவார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறிக்கொண்டு புலத்தில் முன்வைக்கப்படும் ஆக்கபூர்வமான கருத்துக்களை நிராகரிக்காதீர்கள். இன்னும் சொல்லப்போனால் தற்போதுள்ள சூழ்நிலையில் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ்மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கமுடியும். இங்கு வேடிக்கை என்னவெனில் மக்கள் போராட்டம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் குலன் அவர்கள் புலம் பெயர் நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான தமிழ்மக்களை ஏன் மக்களாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்?
anna
புலிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று கூறுவது தவறு. மக்கள் ஆதரவு இல்லாமல் புலிகள் இவ்வளவு தூரம் வந்திருக்கமுடியாது. அத்துடன் புலிகளின் துப்பாக்கிக்கு பயந்தே மக்கள் ஆதரவு அளித்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் துப்பாக்கிக்கு மக்கள் பயப்படுவது உண்மை என்றால் அரசு அதே துப்பாக்கியை நீட்டியபோது பயந்து பேசாமல் இருந்திருக்க வேண்டும். மாறாக அதற்கு எதிராக துணிந்து போராட புறப்பட்டார்களே!
இலங்கை சிறிய தீவு. மக்கள் தொகையும் குறைவு. ஆனால் அவர்கள் வீரம் செறிந்த போராட்டத்தின் வரலாறு கொண்டவர்கள்.இவர்களின் இந்த வரலாறு பெரிய நாடுகளின் போராட்ட வரலாறுகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்ல. போர்த்துக்கேயர்களுக்கு எதிராக போராடினார்கள்.பின்பு ஒல்லாந்தர்களுக்கு எதிராக போராடினார்கள் .அதன்பின் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார்கள். சுதந்திரம் பெற்ற பின்பும் கூட ஜ.தே.க வுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியாகவும் பின் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக ஜே.வி.பி தலைமையிலும் போராடினார்கள்.அதேபோல் தமிழ்மக்களும் சுதந்திரத்திற்கு பின்னர் முதலில் காங்கிரஸ் தலைமையிலும் அதன் பின் தழிழரசுக்கட்சி சார்பாகவும் அதன்பின் கூட்டணி சார்பாகவும் போராடினார்கள்.அதன்பின் போராளிகளாக களம் கண்டார்கள். எனவே இங்கு தெரிவது என்னவெனில் யாரையும் தொடர்ந்து ஆட்சி செய்ய மக்கள் அனுமதிக்கவில்லை. மாறாக தொடர்ந்தும் போராடி வந்துள்ளனர். தலைமைகளின் துரோகங்களினால் மக்கள் போராட்டம் இன்னும் வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த வெற்றி பெறும்வரை மக்கள் தொடர்ந்து போராடுவர். இது உறுதி.
நண்பன்
புலிகளது ஆயுதங்களும் , அரசின் ஆயுதமும் ஒரே விதமாக செயல்படவில்லை Anna. புலிகளிடமிருந்த அச்சம் வேறு அரசிடம் இருந்த அச்சம் வேறு. புலிகள் பணத்தை பலவந்தமாக அல்லது வெருட்டி எடுத்து தம்மை வளர்த்துக் கொண்டார்கள். புலிகளது சார்பற்றவர்களை துரோகிகளாக்கி கொன்று சுய இன்பம் அனுபவித்தனர். அரசு அந்தளவு செய்யவில்லை.
எதையும் பேசித் தீர்க்கலாம் என இருக்கும் போது போராடி , உயிரிழப்பில்தான் அதை பெறுலாம் என நினைப்பது ஒருவித மனநோய். உலக நாடுகள் ஒன்றாக இணையும் போது நாம் பிரிந்து நிற்க வேண்டும் என நினைக்கிறோம். அதில் எமது வளங்களை மட்டுமல்ல எமது மக்களையும் இழந்து விடுகிறோம்.
ragu
velu, ஜனநாயகம் தான் இப்ப உடனடி அவசியம் என்கிறார். இவர் எந்த ஜனநாயகத்தை கோருகிறார்? ஏனென்றால் அமெரிக்கா இங்கிலாந்து போன்றவற்றின் முதலாளித்துவ ஜனநாயகம் உள்ளது. நேரு ஜே.ஆர்.பொன்றவர்களின் சோசலிச ஜனநாயகம் உள்ளது. மாவோவின் புதிய ஜனநாயகம் உள்ளது. இதில் எந்த ஜனநாயகத்தை velu கோருகிறார்.
இவர் “தோழர்களே” என விழித்து எழுதியிருப்பதால் மாவோவின் புதிய ஜனநாயகத்தை கோருவதாக கருத இடமுண்டு. ஆனால் மாவோவாதிகள் இப்படி குழப்பமாக தங்கள் கருத்தை முன்வைப்பதில்லை. அவர்கள் தங்கள் கருத்துக்களை தெளிவாக முன்வைப்பார்கள். velu அவர்கள் இவ்வாறு கருத்து எழுத முன்னர் மாவோவின் “புதிய ஜனநாயகப் புரட்சி பற்றி” என்னும் புத்தகத்தை ஒருமுறை படிப்பது நல்லது என நினைக்கிறேன். அல்லது தோழர் போன்ற சோற்களை தவிர்த்து கருத்து எழுதுவது அதை விட சிறந்தது டின நினைக்கிறேன்.
மாயா
//தலைமைகளின் துரோகங்களினால் மக்கள் போராட்டம் இன்னும் வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த வெற்றி பெறும்வரை மக்கள் தொடர்ந்து போராடுவர். இது உறுதி.- anna//
இங்கே மக்கள் தன் உயிரை காக்க இயற்கையோடும் போராட வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் உங்களைப் போன்றவர்களே காரணம் என்பதை அழுத்திச் சொல்லலாம். அப்பாவி மக்களை இந்த நிலைக்கு தள்ளிய எவரையும் இவர்கள் மன்னிக்கப் போவதில்லை. உங்கள் எண்ணங்களை நிறைவேற்ற எவரையும் பலிக்கடாவாக்காதீர்கள்.
http://www.youtube.com/watch?v=8vqmwO_sIP4&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=FBBc9xg2MvE&feature=player_embedded
indiani
மாக்ஸ்ட்டுக்கள் – நக்சலைட்டுக்கள் -ரொக்சிஸ்ட்டுக்கனள்- மாவாயிஸ்ட்டுக்கள்-ஸ்ரானிஜ்ட்டுக்கள் என்ன சொல்ல வாறியள் என்பதை திட்டவட்மாக தெளிவாக சொல்லுங்கோ. எங்களக்கு தெரியும் பின்னுட்டம் விடும் இந்த ஸ்ட்டுக்கள் துணிந்தவர்கள் அல்ல நேரடியாக வந்த கரத்து சொல்லி போராட்டத்தை முன்னெடுக்க. அல்லது அவர்கள் சொல்லுவத போல புலிகளின் போராட்டத்தை தொடர – அல்லத கடந்தகால போராட்டத்தை விமர்சித்து தொடரச்சியாக செய்ய வெளிநாட்டில் உள்ள இந்த ஸட்டக்கள் எப்பவுமே முன்வரமாட்டார்கள் இவர்கள் கூட்டங்களக்கு வந்தாலும் வெக்கறைகள் பொல கூட்டத்தின் மூலையில் இருந்து விடடுப்போய்விடுவர் பின்னுட்டம் வசதியானத எல்லாரையும் குழப்ப. குழப்பினால’; சரி என்பத இவர்களது ஸ்சம் .
இவர்கள் போராட்டம் என்கிறார்கள் எது போராட்டம் மக்கள் என்றுமே போராடிக் கொண்டுதான் இரக்கிறார்கள். வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். இன்று மக்கள் முகாம்களில் இருப்பதே ஒரு போராட்டம்தான் என்பதை மறந்து பேசும் ஸ்ட்டுக்ள் என்ன சொல்லுகிறார்கள் என்பது எப்பவும் போலவே புரியாததுதான்
இப்படி ஸ்சம் பெசுபவர்கள் முன்வந்து தமது நிலைப்பாட்டை தமது கட்சிளின் நிலைப்பாட்டடை எழுதவும் .கட்சியை ஆரம்பிக்கவும் மக்களை இணைக்கவும் மக்கள் இணையும் வகையில் தம்மை தமது கருத்தை முன்வைக்கவும்.
ஸ்சம் பேசும் தோழர்கள் முன்வரமாட்டார்கள் – சுய விமர்சனம் என்பது என்ன? எப்படி செய்வது விமர்சனம் எ;படி செய்வது என்பதைக் கூட ஒழுங்காக கதைக்கத் தெரியாதவர்கள் தம்மை மாக்ஸ்ட்டுக்கள் எல்லது மாவோயிஸ்ட்டுக்ள் அல்லது ஸ்ராலினிஸ்ட்டுக்கள என்பார்கள்
இன்றுள்ள கேள்வி இந்த மாக்சிஸ்ட்டுக்கள் என்ன செய்ய வேண’டும் என்பதை வெளிப்படத்துங்கள்? என்ன பொய்ப்பெயரிலேதானே? உண்மையை எழுதுங்கள்.
Kulan
எம்சிறீ நீங்கள் சொல்வது பொல் கற்கள் என்னைநோக்கியும் எறியப்படும் என்பதில் எந்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் யாராவது முதற்கல் எறியத் தொடங்கவேண்டிய அவசியம் உண்டு.
நாதன்.எஸ்: நாம் நாடு பிடிக்கவெளிக்கிடவில்லை. தலைவர் சாணை பிடிக்கப்பட்டவராக் இருந்தாலும் வெட்டிய இரும்பு அதைவிடப் பலமானதில் விளைவே இது. வன்னிச்சனம் மூச்சுவிடவேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் கிடையாது. ஆனால் மூச்சுவிடுவதற்கான பிராணவாயுவைக் கொடுக்கவேண்டியது யார்? நாமல்லவா? இதற்காகவாவது ஒன்றிணையவேண்டிய தேவை இருக்கல்லவா? இந்தத் தேவைகளுடாவது மாற்றுக்கருத்தாளர்களிடையே புரிந்துணர்வு ஏற்படலாம்> ஏற்படுத்தாலாமல்லவா? எனது நோக்கம் அங்குள்ள மக்களின் தேவைகருதி; அதாவது பொருளாதார>அரசியல்>மனோவியல் காரணங்கள் கருதி நாம் புலத்தில் குறைந்தபட்ச உடன்பாட்டுடனாவது தெளிர்ந்து உணர்ந்து சேரவேண்டடியது எம்கடன்.
வேலு! நீங்கள் கூறுவதில் உண்மைகள் இருந்தாலும் கூட தீர்மானமும் தீர்வுகளும் அங்குள்ள மக்கள் எடுக்கவேண்டியதே. நான் வெள்ளம் வருமுன் அணைகட்ட விரும்புகிறேன். இனவழிப்பை பண்டாரநாயக்க தொடக்கிவைத்தார் என்பதை யாரும் மறுக்க இயலாது: உயர்கல்விகற்ற கல்விமான்களே ஒற்றுமை(யூனிற்றி) பற்றி எண்ண மறக்கவில்லை மறுத்தார்கள். இப்பஉள்ள அப்பாவிச் சிங்களமக்கள் கேட்கிறார்கள் ஏன் சிங்களவர்கள் தமிழ்பகுதிகளில் வாழ இயலாது என்று. காலங்கலமாய் இனக்கலவரங்களை ஏற்படுத்தி அடித்துத் துரத்தியது நாங்களா? இயக்கங்களை நாம் விரும்கியா உருவாக்கினோம். எந்த ஜிவராசி இந்தஉலகில் சும்மா சாகவிரும்பம். ஒரு சித்தெறும்பு கூட முடிந்தவரை ஓடும் முடியாதபோது திருப்பிக்கடிக்கும். இதைத்தானே நாமும் செய்தோம். புரட்டிப்புரட்டி எழுதப்பட்ட மகாவம்சத்தை பைபிள் கோள் பாவிப்பதை விட்டுவிட்டு மனிதர்களாக அரசுமாறவேண்டும். மதம் என்பது வெறும் நம்பிக்கையே தவிர உண்மையல்ல. நம்புபவர்கள் நம்பட்டும் ஆனால் இது அரசியலில் அர்த்தப்பட வேண்டியதில்லை. உலகில் மதங்கள் எங்கு அரசியலில் நுளைகிறதோ அங்கே போர்தான்.
Kulan
திருமலைவாசன்> வளர்மதி>மாயா உங்களுக்காகவும் என்தேசத்துச் செல்வங்களுக்காகவும் தலைவணங்கிறேன். என்கட்டுரையின் அடிநாதத்தை உண்மையாகத் தொட்டவர்கள் நீங்கள். திருமலைவாசன்> மாயாவின் பின்நோட்டங்கள் அருமையிலும் அருமை.
புலம்பெயர் தமிழ்மக்களே! சுருக்கமாகக் கூறுகிறேன் நீங்கள் செய்யவேண்டியது ஒன்று மட்டும் தான். ஒன்றிணைந்து உதவுங்கள். போலியாகப் போடப்பட்டுள்ள குழு முகமூடிகளையும் சாயங்களையும் களற்றுங்கள். தீர்மானிக்க வேண்டியது அங்குள்ள அல்லலுயும் மக்கள்தான். நாம் இங்கிருந்து அவர்களின் முடிவுகளுக்கு நேச்கரம் நீட்டி வரவேற்பது மட்டும்தான். ஒவ்வொரு மனிதனாலும் ஏதோ ஒருவகையில் உதவ முடியும். ஒரு நல்லவார்த்தை கூட அந்த மக்களுக்கு மருந்துதான். இக்கட்டுரையை இன்றைய தேவை கருதி துணிந்து பிரசுரித்த தேசத்துக்கு என்நன்றி.
Kulan
செந்தில் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் கூறும் தலைவர்கள் லெனின்> மாக்ஸ்> மாவோ இவைகள் எல்லாம் புதிய கிரகத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை. அல்லலுறும் மக்களிடையே உருவானவர்கள்தான். அதலால்தான் இவர்களுடைய போராட்டங்கள் சரியானதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்தது. புலத்தில் உள்ளவர்கள் கருத்துச் சொல்லக்கூடாது என்று இல்லை. சொல்லுங்கள் தீர்மானிப்பவர்கள் அங்குள்ளவர்களாக இருக்கவேண்டும்.
எமது போராட்டம் கூட அடிமட்டவகுப்பில் இருந்து வந்திருந்தால் சிலவேளை எம்போராட்டம் மக்கள் போராட்டமாகப் பிரணமித்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். முக்கியமாக அன்றை இயக்கத்தலைவர்கள் பலர் (எல்லோரும் அல்ல) மத்திய வகுப்பினராக இருப்பதை நாம் பார்க்கலாம். இது ஊகமே தரவிர உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதைத்துடன் விட்டுவிடுங்கள் காரணம் கட்டுரையின் நோக்கம் அடிபட்டு விடும்.
Kusumbo
யாரும் தீர்வை முன்வைத்தால்தான் தம்பி செந்தில் பின்தொடர்வாராம். சந்திரனுக்கு முதல் நாயனுப்பியமாதிரி தம்பி செந்திலுக்கு யாராவது முதல்போகவேணும். சுயமாகச் சிந்திக்க மாட்டீர்களோ? உங்களை கருத்துப்படியும்> புலிகளின் எண்ணப்படியும் புலம்பெயர் தமிழர்கள் கொடுக்கும் தீர்வை அங்குள்ள மக்கள் ஏற்கவேண்டும் என்கிறீர்களா? அதற்கு நீங்கள் யார் என்று கட்டுரையாளர கேட்டுள்ளாரே. தம்பி செந்தில் கட்டுரையை சரியாக வாசியும். பிறகு எழுதும்………..
palli.
பல்லிக்கு இந்த வரலாறுகளை சொல்லி (அம்பிலிமாமா காட்டி குழந்தைக்கு சாபாடு கொடுப்பது போல்) எமது பிரச்சனையை ஒப்பிட்டு பார்ப்பது உடன்பாடு கிடையாது. அது யதார்த்தம் கூட இல்லை. கால கட்டத்துக்கு ஏற்ப்ப நாம் செயல்பட வேண்டும்.
அந்த ஒப்பந்தம்..
இந்த ஒப்பந்தம்..
எந்த ஒப்பந்தம்..
இவை எதுவுமே சாத்திய படாது. உதாரனத்துக்கு இன்றய சூழலில் இந்திய நிலைபாடு ராஜீவ் ஜெஆர் ஒப்பந்தத்தை அமுல்படுத்தவே முனைகிறது. மகிந்தாவோ டக்கிளஸ்+சங்கரி+கருனா இவர்களுடன்(ரகசிய) ஒப்பந்தம் செய்யவோ அல்லது செய்ததை நடைமுறைக்கு கொண்டுவர மதில் மீதுஏரி நிற்க்குறார். இதில் நோர்வே தன் பங்குக்கு தனது வீட்டு சீர்வரிசையாய் தாங்கள் செய்த சமாதன ஒப்பந்தம் வந்தால்(புலி வாழ) உதவுமே என மல்லுகட்டுகிறார்கள். இதில் யாரோ பலர் கூடி (படித்தவர்களாம் ) ஏதோ ஒரு தீர்வுதிட்டல் எழுதி மகிந்தாவின் வீட்டிலேயே கொண்டுபோய் கொடுதார்களாம்(அது தொலைந்துவிட்டதாக கேள்வி) அமெரிக்க தமிழரும் ஏதோ செய்யினமாம். ஆனால் இதில் யாருமே மக்களின் யதார்த்த வாழ்க்கை பற்றி சிந்திக்கவில்லை என்பது பல அறிவு ஜீவிகளின் கருத்து.
பிள்ளையானிடம் போய் லெனின் பற்றியோ அல்லது கஸ்ரோ பற்றியோ சொன்னால் அவர் கேப்பார் இவர்கள்(லெனின் கஸ்ரோ) வடக்கா கிழக்கா என. ஒருபடி மேலே போய் கருனாவிடம் இது பற்றி பேசினால் அவர் தனது உதவியாளரிடம் அவர்களை மாதையாவிடம் அனுப்பி விடுங்கள் என கட்டளையிடுவார். ஆக யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் இவர்களுடைய பலம் பலவீனம் இவைகள் தான் இன்று இலங்கை பிரச்சனையல்ல உலக பிரச்சனையில் கூட செயலாக நாம் பார்க்கிறோம். கேட்டு பெற்ற காலம் போய் தாறதை வேண்டும் காலம் வந்தது மக்களின் தவறா??இல்லை,,??
kulan
சுதனுக்கான பதில்: அமிர்தலிங்கம் எனும் தனிமனிதன் வைத்த தீர்வல்ல தமிழ்ஈழம். கூட்டணியின் ஏகோவித்த குரலே அது. நவரட்ணம் சொன்னதும்> கூ.அணி முன்வைத்ததும் ஒன்றாக இருந்தாலும் வடையும் இட்டலியும்தான். பட்டணத்தார் பாடியதை தெரிந்து கொள்ளாத விளங்கிக் கொள்ளாத மனிதர்கள் அதையே இலகுவான வார்த்தைகளில் சொன்னபோது கண்ணதாசனைக் கடவளாக்கினார்கள். அப்ப அது இல்லைப்பிரச்சனை.
தம்பியின் கேள்விக்கான பதில்: நான் இங்குள்ளவர்களை மக்கள் என்று ஏற்கவில்லை என்று நீங்கள் கருதுவது பிழையானது. நாம் அங்குவாழும் எம்உறவுளுடனான தொப்புள்கொடி உறவைக் கொண்டவர்கள்தான். எனது ஆதங்கம் என்ன வெனில் இன்றைய நிலையில் வன்னிமக்கள் தீர்வைப்பற்றியோ அரசியலைப்பற்றியோ எண்ணும் நிலையில்லை. இந்த அவலமான நிலையிலும் கூட நாம் மாற்றுக்கருத்துடையோம் மக்கள்போராட்டத்தையே விரும்புகிறோம் என்று மட்டும் கூறிக்கொண்டு வாழதிருப்பவர்களை நோக்கியே என்கற்கள் எறியப்பட்டன. நீங்கள் கூறுவது போல் புலிகள் அற்ற தளங்களிலேயே கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. அது கருத்தியலுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது என்பதுதான் என் எண்ணத்தின் அடிநாதம். என்கணிப்பின்படி எம்மக்களிடையே 1979களில் மக்கள் போராட்டம் பரிணமிக்கத் தொடங்கியபோதே துப்பாக்கிக் கரங்களால் அவர்கள்வாய்கள் பொத்தப்பட்டன. கொடிபிடிப்பதும் கத்துவதுமல்ல மக்கள் போராட்டம். எமக்கு ஏற்பட்ட சாபம் தெளிவில்லாத வழிநடத்தல்கள்> செய்தபிழைகளை மீண்டும் மீண்டும் செய்தமை. புலிகளாலேயே உண்ணாவிரதங்கள் கலைக்கப்பட்டன (மதிவதனியை தூக்கிச் சென்று திருமணம் செய்தமை) பின்பு ஏன் பார்த்தீபனை (திலீபனை) பூபதியை இருந்திக் கொன்றீர்கள். இப்போ புலத்தில் உண்ணாவிரதக் கூத்துகள் ஏன். அன்று உண்ணாவிரதங்கள் கூட ஒருவகையில் மக்களைத் திரட்டுவதற்காய் அமைந்த அடித்தளமாகவே கருதலாம். அன்றுமல்ல இன்றும் எம்மக்கள் சரியாக வெகுசனப்போராட்டத்துக்குத் தயார்படுத்தப்படவில்லை. காரணம் திணிக்கப்பட்ட தீர்வுகளே. அங்குள்ள மக்களின் குரல்கள் காது கொடுத்துக் கேட்கப்படவில்லை. நாமே சாதி என்று எம்மக்களை ஒருக்கி வைத்துக்கொண்டு சிங்களப் போரினவாதத்தை ஒருக்குமுறையாளன் என்றோம். மறுக்க முடியுமா? இங்கே எம்மக்களின் அடிமட்டக்குரல்கள் வெளியில் கேட்காதவாறு மத்திய வகுப்பினரின் ஈழக்கோரிக்கை தடுத்தது என்பதை மறுக்க முடியுமா? இதனால்தான் மீண்டும் மீண்டும் கட்டுரையிலும் பின்னோட்டத்திலும் அங்குள்ள மக்களைத்தீர்மானிக்க விடுங்கள். அம்மக்களிடையே தலைமைகளை உருவாக்க அனுமதியுங்கள். அவர்களின் பசிக்கு நாம் சாப்பிட இயலாது ஆனால் சாப்பாடு கொடுக்கலாம். தயவசெய்து கட்டுரையின் அடிநாதத்தைப் புரிந்து கொள்ளுங்கள். மன்றாடிக் கேட்கிறேன். புலம்பெயர் மக்களும் கதைக்கலாம் கருந்துக்கள் பரிமாறலாம் அறிவுரை கூறலாம் அங்குள்ள அடக்கு முறைக்கு எதிராக இங்கிருந்து மட்டும் போராட இயலாது. எங்கு மக்கள் அடக்கப்படுகிறார்களோ அங்கே புரட்சி வெடிப்பது திண்ணம்.இனிமேல் போராட்டங்களின் வெற்றி தொழில் நுட்பமேம்பாட்டிலும் வெகுசனப்போராடத்திலுமே தங்கியிருக்கும் என்பத எனது எதிர்வு. புலம்பெயர் மக்கள் எம்மக்களுக்காக பிரிவுகளை விட்டு இணைந்து நேரக்கரம் நீட்டுங்கள் என்பது தான் என்வேண்டுகோள். கால்நூற்றாண்டுக்கு மேல் மாற்றுக்கருந்தாளர்களும் மக்கள்போராட்ட முனைப்பாளர்களும் கதைத்தார்களே தவிர ….??
நண்பன்
//கால்நூற்றாண்டுக்கு மேல் மாற்றுக்கருந்தாளர்களும் மக்கள்போராட்ட முனைப்பாளர்களும் கதைத்தார்களே தவிர ….??//- kulan on May 16, 2009 11:20 am
நீங்கள் தட்டித் தட்டி சாறு பிழிகறீர்கள்?
kusompo
பல்லி, நகைசுவையாக உண்மையை உள்ளபடி சொல்வார் யாரோ சொன்னதை யாரோ எழுதிய தத்துவங்களை அப்படியே எம்நாட்டிலும் எம்மக்களிலும் பாவிப்பது ஆட்டுக்கம் மாட்டுக்கும் கல்யாணம் கட்டிவைப்பதுபோல் ஆகிவிடும். அரசியலில் நேற்றைய எதிரிகள் இன்றைய நண்பர்கள். போட்டாச்சட்டம் போட்டு வை.கோ வைத்தள்ளிய பானையம்மாவுடள் வைகோ கொண்டாடவில்லையா? பல்லி சொல்வதுகோல் இன்றைய தேவை என்ன? மாற்றுக்கருத்துகள்கள் என்றும் தத்துவவாதம் என்றும் புலியெதிர்பென்றும் சொல்லிக்கொண்டு மட்டும் இருந்தால் அங்குள்ள மக்களுக்கு உதவுவது யார்?குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதுடனும் தத்துவங்களை வாய்நிறையப் பேசிக்கொண்டிருப்பதுடனும் உங்கள் கடமை முடிந்து விட்டதா? கட்டுரையை சரியாக வாசியுங்கள்
Nila
இந்தியானியின் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லப்பபோகிறீர்கள்? நியாயமான கேள்வி பதில் எங்கே?