கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

புலிகளின் தாக்குதல் முறியடிப்பு

SL_Army_in_Final_Phaseகரைய முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவப் பாதுகாப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலிகளை உடைத்துக்கொண்டு நுழைய முனைந்த விடுதலைப் புலிகள் மீது இராணுவத்தினர் 04, 19ஆவது படையணிகள் தாக்குதல்களை நடத்தி வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் 50க்கும் அதிகமான புலிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாலை 1.00மணியிலிருந்து சுமார் 6.00மணி வரை பலத்த தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது அனைத்து இனங்களினதும் வெற்றியாகும்.

mili.jpgகடந்த 30 வருடங்களாக இலங்கையில் நிலவிவந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது இலங்கை மக்களின் வெற்றியாகும் என ஜே.வி.பி. பிரசார செயலாளரும், பாராளுமன்ற அங்கத்தவருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி சிங்களவர், தமிழர்,  முஸ்லிம்கள்,  பேக்கர், மலே ஆகிய அனைத்து இனத்தினதும் வெற்றியாகும். இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

புலிகளின் தோல்விக்கு சீன ஆயுதங்களே காரணம் – ஐரோப்பாவில் இயங்கும் புலிகளின் இணையத்தளம் தகவல்.

smoke_.jpgவிடுதலைப் புலிகள் தோல்வி காண்பதற்கு சீனாவினால் வழங்கப்பட்ட கனரக ஆயுதங்களே மூல காரணம் என புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பா இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்திக் கொண்டாலும்கூட, சீனா இரகசியமாக இலங்கைக்கு கனரக ஆயுதங்களை வழங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த இணையத்தளம் முல்லைத் தீவு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளது. இத்தகவலை திவைன பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத சாபம் முடிந்துவிட்டது – ஆனந்தசங்கரி

இலங்கையை இதுகாலவரை அச்சுறுத்திவந்த பயங்கரவாதம் எனும் சாபம் முடிந்துவிட்டது. இது அனைவரும் மகிழ்ச்சியடையக் கூடிய விடயமாகும். இருப்பினும் பயங்கர யுத்தத்தின் காயங்களை குணப்படுத்த பல மாதங்கள் அல்லது வருடங்கள் செல்லும் என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரபாரனின் மகன் சால்ஸ் அந்தோனியின் சடலம் கிடைத்துள்ளதாக அறிவிப்பு

charles_anthony.jpgஇன்று அதிகாலை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார சற்று முன்பதாக அறிவித்திருந்தார்.

 அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுமாத்தளன் பகுதியில் கவச வாகனங்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கண்டெடுப்பு

SL_Army_in_Final_Phaseபுதுமாத் தளன் பிரதேசத்திலிருந்து புலிகளின் இரண்டு கனரக கவச வாகனங்கள், மூன்று விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள பிரதேசங்களில் படையினர் நடத்திவரும் பாரிய தேடுதலின் போதே நேற்றுக் காலை இந்த கனரக ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பெடல் துப்பாக்கி ரக ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது சுமார் ஒரு நிமிடத்திற்கு 600 ரவைகள் செல்லக் கூடியது.

இதிலுள்ள மற்றுமொரு கனரக ஆயுதம் 5 தொடக் கம் 7 அடி நீளமானது. இது 8000 மீற்றர் தூரம் செல்லக்கூடியதாகும். தொடர்ந்தும் படையினர் கனரக ஆயுதங்களை மீட்டெடுத்த வண்ணம் உள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.

எப்படி முடியும் இந்த யுத்தம்!!! : த ஜெயபாலன்

Erik_Solheim & Pirabaharan_V”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்”  என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ரொய்டர் செய்தி ஸ்தாபனத்திற்குத் தெரிவித்து உள்ளார். சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்ற எல்ரிரிஈ இன் இறுதி வேண்டுகோளை இலங்கை அரசு ஏற்க மறுத்துள்ளது. எல்ரிரிஈ ஆயுதங்களை மூன்றாம் தரப்பிடம் கையளிக்க அனுமதிக்க மாட்டாது என்பதை இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று (மே 18 2009) அதிகாலை எல்ரிரிஈ வசம் உள்ள 250 சதுர மீற்றருக்கும் குறைவான நிலப்பரப்பிற்குள் இராணுவம் ஊடுருவ ஆரம்பித்து உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இலங்கையின் யுத்தம் தொடர்பாக ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றது. உத்தியோக பூர்வமான அறிக்கைகளே மிகுந்த குழப்பத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு அப்பால் இன்னும் பல ஊகங்களும் செய்திகளாகின்றன. எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் எங்கே என்பது பல்வேறு ஊகங்களுக்கும் வதந்திகளுக்குமான பேசுபொருளாகி உள்ளது.
நேற்று (மே 17 2009) மதியம் குறிப்பிடப்படாத ஒரு பகுதியில் இருந்து எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாக செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார். இச்செவ்வி அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் தொலைக்காட்சியிலும் பிரித்தானிய செய்தி நிறுவனமான சனல் 4 இலும் காண்பிக்கப்பட்டது. அதில் எல்ரிரிஈ இன் தலைவர் வே பிரபாகரன் இன்னமும் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்ட பகுதியிலேயே இருப்பதாகவும் அவர் ஆயுதங்களைக் கீழே போடத் தாயாராக இருப்பதாகவும் ஆனால் சரணடையப் போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என இச்செவ்வி வெளியானதன் பிற்பாடு நேற்று (மே 17 2009) மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். நேற்று தமிழ் புலிகளுடன் உடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்து உள்ள எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

எல்ரிரிஈ இன் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் செவ்வியில் குறிப்பிட்ட விடயங்களின் சாரம்:
”எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே வைக்கவும் சமாதான செயன்முறையில் ஈடுபடவும் தயாராக உள்ளது. முல்லைத்தீவுப் பகுதியில் எங்களிடம் இரண்டாயிரம் போராளிகள் உள்ளனர். நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்குத் உடன்பட்டு உள்ளோம். ஒவ்வொரு மணித்தியாலமும் நூறு பேர்வரை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிலிருந்து இதுவரை மூவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 25000 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இவர்கள் பொதுமக்கள்.

யுத்த நிறுத்தத்திற்கு பிரபாகரன் உடன்பட்டு உள்ளார். நான் அவருடன் நான்கு மணிநேரம் உரையாடினேன். அதில் நாங்கள் அதற்கு உடன்பட்டோம். நாங்கள் இந்தச் செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒருவரும் பதில் தரவில்லை. யுத்தமும் நிறுத்தப்படவில்லை.

பிரபாகரன் இன்னமும் இந்த யுத்தப் பகுதியிலேயே இருக்கின்றார். சுற்றி வளைக்கப்பட்ட இந்தப் பகுதியில் இருக்கும் போதே நான் அவருடன் கதைத்தேன். நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடவே உடன்பட்டோம். சரணடையவல்ல.

நாங்கள் பொதுமக்களை ஒரு போதும் அழைத்துச் செல்லவில்லை. அந்தப் பொது மக்கள் எங்களுடைய உறவுகள் அல்லது எங்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்கு இலங்கை இராணுவத்தை நம்பவில்லை. அதனால் அவர்கள் எங்களுடனேயே இருந்தனர். அவர்கள் முகாம்களுக்கு செல்ல விரும்பவில்லை. இந்த முகாம்களில் சித்திரவதைகள் இடம்பெறுகிறது. பல துன்புறுத்தல்கள் இடம்பெறுகிறது. அந்த மக்கள் இலங்கை இராணுவத்திடம் செல்ல விரும்பவில்லை என்பதே நிச்சயமானது. நாங்கள் ஒரு போதும் மக்களைச் சுடவில்லை. சில சமயங்களில் இருபகுதிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிலர் காயப்பட்டு இருக்கலாம். நாங்கள் ஏன் எங்களது மக்களைக் கொல்ல வேண்டும்.”

எல்ரிரிஈ இன் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதனுக்கு முன்னதாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நேற்று (மே 17 2009) ஊடகங்களுக்காக தொலைபேசியில் வெளியிட்ட வேண்டுகோளில் ”நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை.” எனத் தெரிவித்து இருந்தார்.

ஆனாலும் இந்தியத் தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது உறுதியானதும் மே 16 2009ல் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் ”எதுவும் செய்யத் தயார்” எனத் தெரிவித்து இருந்தார். அது ஆயுதங்களை ஒப்படைப்பது என்பதை மிகத் தெளிவாக நேற்று (மே 17 2009) புலிகள் அறிவித்து உள்ளனர். ”இந்த மோதல் ஒரு கசப்பான முடிவுக்கு வந்துள்ளது” என்று இந்த யுத்தத்தில் தங்கள் தோல்வியை எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்தார். ‘நாங்கள் ஆயுதங்களை மௌனமாக்க முடிவு செய்துள்ளோம். உயிரிந்தவர்களுக்காக மட்டும் நாங்கள் வேதனை அடைகின்றோம். இதற்கு மேல் எங்களால் நிற்க முடியவில்லை.’ என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னமும் சுற்றி வளைக்கப்பட்ட சிறு நிலப்பரப்பொன்றினுள் புலிகள் உள்ளனர். அவர்களின் தலைமை அங்குள்ளனரா அல்லது வெளியேறி விட்டனரா என்பது இன்னமும் விடைகாணப்படாத வினாவாகவே உள்ளது.

மேலும் பெரும் தொகையான காயப்பட்டோர் அங்குள்ள பதுங்கு குழிகளில் இருக்கலாம் எனவும் அவர்கள் மிகக் கடினமான ஒரு உயிர்ப் போராட்டத்தில் உள்ளதாகவும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 72 மணிநேரத்தில் 70 000 பேர்வரை அப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் வெளியேறியவர்கள், காயப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் என வெளியிடப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை சர்வதேச அமைப்புகள் உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறும் பகுதிகளுக்கு அரசு மனிதாபிமான அமைப்புகளை அனுமதிக்காமல் நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கி வருகின்றது.

ஏற்கனவே வெளியேறிய 200 000 வரையான மக்கள் 20க்கும் உட்பட்ட முகாம்களில் நெருக்கடியில் உள்ள நிலையில் மேலும் 70 000 வரையானோர் அம்முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இது முகாம்களில் மிகுந்த நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மூன்றாம் தரப்பிடம் சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுக்காததனால் இலங்கை இராணுவத்திடம் சரணடைய மறுக்கும் புலிகள் பலர் தற்கொலை செய்து கொள்ளுவார்கள் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. அண்மைய நாட்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வேதனையுடன் கழிகின்றது. இவ்வாறான ஒரு கசப்பான மிக வேதனையான சூழலுக்குள் தமிழ் சமூகம் தள்ளப்பட்டு உள்ளது.

தமிழ் – சிங்கள அரசியல் தலைமைகளின் தான்தோண்றித் தனமான முடிவுகளுக்கும் குறுகிய அரசியல் லாபங்களுக்கும் மிகப் பாரிய விலையை இலங்கைச் சமூகம் கொடுத்து உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மனிதப் பேரவலம் சர்வதேசத்தையும் தொட்டுள்ளது. மறுமுனையில் இந்த யுத்தத்தில் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை அரசு வெற்றிகரமாக மூடி மறைத்து உள்ளது. இந்த யுத்தம் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படுத்திய ரணங்கள் அவ்வளவு இலகுவில் மாறிவிடாது.

இந்த கால்நூற்றாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தெற்கில் கொண்டாடப்படுவது குறைநிலையானது. எல்ரிரிஈ மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதனாலேயே அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளனர். அதற்கான வாய்ப்பினை வழங்க அரசு தவறும்பட்சத்தில் புலிகள் மீளவும் தங்களைக் கட்டமைத்து தாக்குதல்களை நடத்தக் கூடிய வலுவுடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பல நூற்றுக்கணக்கான புலிகள் ஏற்கனவே யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அவர்களால் ஒரு மரபுரீதியான இராணுவமாக இயங்க முடியாமலிருக்கலாம். ஆனால் இன்னும் சில மாதங்களில் ஒரு இராணுவ முகாமை தாக்கி அழித்துவிட்டுச் செல்லும் பலம் அவர்களிடம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. மேலும் அவர்களுடைய சர்வதேச வலைப்பின்னலில் எவ்வித குழப்பமும் இல்லை. இந்நிலையில் அவர்களையும் உள்ளகப்படுத்திய ஒரு அரசியல் தீர்விற்கு இலங்கை அரசு செல்வதன் மூலம் நிரந்தரமான ஒரு சமாதானத்தை நோக்கி இலங்கையை நகர்த்த முடியும்.

குவைத்தில் முதன்முதலாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

kuwait.jpgகுவைத் தில் முதன்முதலாக பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு பெண்களில் மூவர் பேராசிரியர்கள், ஒருவர் பொருளாதார நிபுணர். நாட்டின் வளர்ச்சியில் பெண்களும் பங்கேற்க வாக்களித்த வாக்காளர்களை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ரோலா டஷ்தி என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

குவைத்தில் 2005 ம் ஆண்டு வரையில் பெண்கள் தேர்தலில் பங்கேற்கவோ, வாக்களிக்கவோ அனுமதியில்லை. குவைத் மன்னரின் உறவினர் பிரதமராக இருந்த போது, நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்க நாடாளுமன்றம் முனைந்தது. இதனை தொடர்ந்து மன்னர் நாடாளுமன்றத்தை கலைத்தார்.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறக்க அத்வானி முடிவு

indian-election.jpgபா. ஜனதா கூட்டணி தோல்வி அடைந்த தால் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பத வியை ஏற்கப் போவதில்லை என்று அத்வானி அறிவித்துள்ளார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர். கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலில் பா. ஜனதா கட்சி மட்டும் தனியாக 138 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அதைவிட குறைவான இடங் களையே கைப்பற்றியதால் பா. ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பா. ஜனதா கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல். கே. அத்வானியும் வருத்தம் அடைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக பா. ஜனதா கட்சியின் தற்போதைய எம்.பிக்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அத்வானி தலைமையில் அந்த கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் பேசிய அத்வானி, ‘தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்தார். தற்போதும் காங்கிரஸை அடுத்து பா. ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. எனவே, பாராளுமன் றத்தில் அதன் தலைவராக இருப்பவரே எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார். அந்த பதவிக்கு மத்திய காபினேட் மந்திரி பதவிக்கு இணையான அந்தஸ்து அளிக்கப்படும். அதை அத்வானி ஏற்க மறுத்துள்ளார்.

இது குறித்து கட்சியின் பொது செயலாளர் அருண் ஜெட்லி கூறுகையில், ‘எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று அத்வானி கூறியதை கட்சியின் பாராளுமன்ற குழு நிராகரித்து விட்டது. தொடர்ந்து பதவியில் நீடிக்க அவரை சமாதானப்படுத்து மாறு கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் கூறப்பட்டுள்ளது என்றார்.

மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுத்து கொள்ளுமாறும், தன்னை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் தலைவர்களை அத்வானி கேட்டுள்ளார். தோல்வியை தொடர்ந்து கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பா. ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அடுத்த தலைமுறை தலைவர்களை நியமிக்கலாம் என்று தெரிகிறது.

ராஜ்நாத் சிங்குக்கு பிறகு கட்சியின் புதிய தலைவருக்கான பட்டியலில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தலைமை மற்றும் கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய பா. ஜனதா தீர்மானித்து இருக்கிறது.

இலங்கை அரசு பரப்பும் பொய்ச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தமிழக தலைவர்கள் கூட்டறிக்கை

tamilnadu.jpgஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா. ம. க. நிறுவனர் மரு. இராமதாசு, ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:

ஈழத்தில் போர்ப் பகுதியில் இருந்து அனைத்து மக்களையும் வெளியேற்றி விட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாரனின் உடலைக் கைப்பற்றி இருப்பதாகவும் இலங்கை அரசும் இந்தியாவில் உள்ள ஊடகங்களும் திட்டமிட்டப் பொய்ச் செய்தியைப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்னவெனில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போர்ப் பகுதியில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் திட்டத்துடன் சிங்கள இராணுவம் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. இதில் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமுற்றுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட காயம் பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி தெருக்களில் கிடக்கின்றனர்.

மக்களை காப்பாற்ற இராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் அனைத்து முன்னணி தளபதிகளும் விடுதலைப் புலிகளும் களத்தில் நின்று தீரத்துடன் போராடி வருகின்றனர். இந்த போர்ச் செய்தியையும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையையும் மறைக்கவே இலங்கை அரசு பல பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகிறது.

சாவின் விளிம்பில் நிற்கும் மக்களை காப்பாற்ற இந்தக் கட்டத்திலாவது UN உலக சமுதாயமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.