கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

அமெரிக்கா மீது நாமும் அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் – வடகொரிய அதிபர் எச்சரிக்கை!

அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார்.

அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களோடு சந்திப்போம் என்றும் தாக்குதல்களை எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்காவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக தலைநகர் பியான்யாங்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை அவர் நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் மதுபானத்துக்கு இடமில்லை – FIFA அறிவிப்பு !

இம்முறை FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் போட்டி இடம்பெறும் கட்டாரின் 8 மைதானங்களிலும் மதுபானம் விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

FIFA அமைப்பு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

“வெறுப்பை வளர்க்காதீர்கள். முன்மாதிரியாக நடந்து கொள்ளுங்கள்.” – அக்தார், சமி ஆகிஆயாருக்கு அப்ரிடி அறிவுரை !

பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்தர் வெளியிட்ட டுவீட்டை சமி கிண்டல் செய்து இருந்தார். கராச்சி, மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ஓட்டங்களே அடித்தது. பின்னர், 138 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ”மன்னிக்கவும் சகோதரரே, இது தான் கர்மா” எனப் பதில் அளித்திருந்தார்.

Read all Latest Updates on and about முகமது சமி

அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த இருந்த அக்தர், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு இல்லை என்று கூறி இருந்தார். பாகிஸ்தான் இறுதி போட்டியில் வீழ்ந்ததால் அதனை கிண்டல் செய்யும் வகையில் முகமது ஷமி ஒரே வார்த்தையால் நீங்கள் செய்தது உங்களுக்கே வந்துவிட்டது என்ற பொருள்படும் வகையில் கூறி உள்ளார்.

இந்த நிலையில் சமியின் இந்த பதில் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி,

இந்நாள் மட்டும் முன்னாள் வீரர்கள் இதுபோன்ற கருத்துக்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை வளர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ” நாம் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாகவும், தூதர்களாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். மாறாக வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது. இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். விளையாட்டின் மூலம் தான் இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மேம்படும். பாகிஸ்தான் அணி அவர்களுடன் விளையாடுவதை காண விரும்புகிறோம். அதே போல் இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்” என்றார்.

புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும்: என்.செல்வராஜா

._._._._._.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
._._._._._.

காலம் காலமாகத் ஈழத்தின் தமிழர் சமூகம் கல்வியை முன்நிலைப்படுத்தி வாழும் ஒரு சமூகமாகத் தம்மை இனம்காட்டி வந்துள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின்கீழ் தொழில் வாய்ப்பைப்பெற்று அரச ஊழியனாகி “கோர்ணமெந்து” உத்தியோகத்தனாகிய தமிழன் சமூகத்தில் முன்நிலைப்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் அரச ஊழியம் படிப்படியாக அடிபட்டுப் போய்விட்டாலும் தமது பிள்ளைகளை டொக்டர், இஞ்சினியர், லோயர், எக்கவுண்டன்ட் என்ற நான்கு கட்டமைப்புகளுக்குள் ஏதாவதொன்றினுள் புகுத்திவிட்டு தான் ஒரு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற பெருமையைப் பெற்றுவிடுவதில் தமிழன் உடல் பொருள் ஆவியையும் கொடுக்கத் தயாராகியிருந்தான். தப்பித்தவறி ஒரு குடும்பத்தில் இந்த நாலுக்குள் ஒன்று இல்லாது போனால் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் முக்கித் தக்கி தனது குடும்பத்தில் ஏதாவதொரு தலைமுறையில் இருந்த ஒரு டொக்டரையோ இஞ்சினியரையோ தேடிப்பிடித்து தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொண்டான்.

“அட காசுதான் இருக்கு- படிப்பில்லையே” என்ற கவலை கொண்ட இன்னொரு வகைக் காசுக்காரத் தமிழன், சீதனம் என்ற பெயரில் காசைக்கொட்டி இந்த நால்வகை மாப்பிள்ளைகளையும் தன் குடும்பத்துக்கள் விலைக்குவாங்கிச் சேர்த்துக்கொண்டு தன் சமூகத் தரத்தை உயர்த்திக்கொண்டான்.

இந்தக் கூத்துகள் தாயகத்தில் தான் நடந்து முடிந்ததென்றால் இப்போது புகலிடம் வரையும் தொடர்வது தான் வேதனையாக இருக்கின்றது. திறந்த கல்விவசதி, எவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு என்ற நிலை புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ளது. விதம்விதமான புதிய கல்வித்துறைகள் எம் இளஞ்சந்ததியினரின் முன்னே விரிகின்றன. இங்கும் இந்த நால்வகைத் துறைகளையும் மீறித் தன் பிள்ளைகளை சுயவிருப்பத்துடன் வேறு நல்ல துறைகளை நாடவிடாமல் சிறுபிராயம் முதலே மூளைச்சலவை செய்து விடுகிறார்கள் நம்மவர்கள். அதனால் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தாலும், மனமொத்துத் தன் கல்வியைத் தொடரமுடியாமல் பல தமிழ் மாணவர்கள் தம் கல்வியைத் துறப்பதும், தாமதமாகத் தமது துறைகளை மாற்றிக்கொள்வதும் நிகழ்கின்றன.

அடையாளச் சிக்கல்

கல்வியே எமது புலம்பெயர் சமூகத்தின் அடையாளச் சிக்கலாகிவிட்ட நிலை இன்ற காணப்படுகின்றது. அரச பாடசாலைகளிலிருந்து தனியார் கல்வியை நாடுவதும், டியுஷன் படிப்புக்கு பிள்ளைகளைத் தூண்டிவிடுவதும் இந்த நால்வகைத்துறைகளில் ஒன்றுக்குள் குறிப்பாக டொக்டர் இஞ்சினியர் படிப்புக்குத் தம் பிள்ளைகளைத் தயார்செய்வதற்காகத்தான் என்ற நிலை இன்று பரவலாகிவிட்டது.

டொக்டர் என்ற சொல் சமூக அந்தஸ்தில் மிக உயர் ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருப்பதான ஒரு மாயை காலம்காலமாகத் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. அதை புலம்பெயர்ந்த வந்தவர்களும் தமது பொதிகளுடன் இங்க கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள். மற்றவரைப் பெயர்சொல்லிக் கூப்பிடலாம் ஆனால் டொக்டரான ஒருவரைமட்டும் டொக்டர் இன்னார் என்று விழித்தால் தான் கூப்பிட்டவருக்கும் செமிக்கும் – கூப்பிடப்பட்டவருக்கும் செமிக்கும். புகலிடத்தில் டொக்டர்கள் படும் பாட்டை இவர்கள் அறியாதவர்களா என்ன?

இங்குதான் வேறு ஒரு சிக்கல் ஏற்படுகின்றது. டொக்டர் என்ற பதம் மருத்துவத்துறைக்கு மாத்திரமல்லாது அறிவியல்துறையில் முனைவர் பட்டத்தையும் குறிக்கப் பயன்படுவதால் இவர் எந்த டொக்டர் என்று தலையைப்போட்டு உடைத்துக்கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுவிடுகின்றன.

தமிழர்களின் டொக்டர் மாயையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கல்வித்துறை வியாபாரிகளும் காசுக்கு இரண்டு டொக்டர்ப் பட்டம் என்று விற்க ஆரம்பிக்க எம்மவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதை வாங்கித் தமது பெயருக்கு முன்னால் செருகிக்கொண்டு “நானும் ஒரு டொக்டர் அல்லது கலாநிதி பார்த்தியளே” என்று வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

கவிஞர்கள், ஓவியக்காரர்கள், நடன ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என்று வந்த பிறகு ஐயர்மாருக்கும் கலாநிதிப் பட்டத்தில் ஆசை வந்தவிட்டது. ஐக்கிய அமெரிக்காவின் பாலைவன மாநிலமான அரிசோனாவில் பென்சன் மானிலத்தில் உலகப் பல்கலைக்கழகம் என்று ஒரு பல்கலைக்கழகம் இயங்குகின்றது. Dr. Howard John Zitko வினால் 1946இல் ஏதோ ஒரு புனிதமான நோக்கத்துக்காக தாபிக்கப்பட்டது. இன்று பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிவிட்ட நிலை அதற்கு. இந்தியாவில் வாரனாசியிலும், மும்பாயிலும், நைஜீரியாவில் எனுகுவிலும் அதன் கிளைகள் இருப்பதாக அதன் இணையத்தளத்தில் காண முடிகின்றது.

காலக்கிரமத்தில் எம்மவர்களில் சிலர் மோப்பம் பிடித்து அந்தப் பல்கலைக்கழகத்தை அணுகி அவர்கள் வழங்கும் Cultural Doctorate பட்டத்தைப் பெற, இன்று சிவனே என்று இருந்தவரெல்லாம் திடீரென்று கலாநிதிப் பட்டத்தைச்சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். பின்புலம் எதுவுமில்லாமல், திடீரென்று கலாநிதிப் பட்டத்தைத் தபாலில் வாங்கிச் செருகிக்கொண்டால் சமூக அந்தஸ்து கூடிவிடுமா என்ன? கலாநிதிப் பட்டம் என்றால் பொன்னாடையா என்ன?

முத்திரை பதிப்பித்தல்

இப்படித்தான் கனடாவின் தபால் திணைக்களம் கள்ளம் கபடமில்லாமல் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. கனேடிய தபால் தலைகளில் உங்கள் புகைப்படத்தைப் பதிந்து நல்ல நாள் பெருநாள்களில் அதை நண்பர்கள் உறவினர்களுக்கு தபாலில் அனுப்பிக் கொஞ்சம் முஸ்பாத்தி பண்ணலாம் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. வீட்டில் புதிய குழந்தை பிறந்ததும், திருமணம் முடித்தால், பிறந்தநாள் கொண்டாடினால், என்று அந்தப் படத்தை கனேடிய உள்ளுர் முத்திரைகளில் பதித்து அதை உறவினர்களுக்கு அனுப்பும் தபால்களில் சட்டபூர்வமான தபால் தலைகளாகப் பயன்படுத்தக் கொஞ்சம் காசை வாங்கிக்கொண்டு அச்சடித்து வழங்கியது.

கொஞ்சக்காலம் எல்லாம் நன்றாக நடந்தது. எங்கள் தமிழரின் மூளை என்ன லேசுப்பட்டதா? அடித்தார்கள் முத்திரை குமார் பொன்னம்பலத்துக்கு. விழா நடத்தி அதை விற்று நிதியும் திரட்டிவிட்டார்கள். குமார் பொன்னம்பலத்துக்கு மட்டுமா முத்திரை அடித்தார்கள். பட்டியல் போடலாம் யார் யாருக்க அடித்தார்கள் என்று. கட்டுரை நீண்டுவிடும். இலங்கையில் வாழ்ந்து மறைந்த பலருக்கும் புகலிடத்தில் பிள்ளைகள் முத்திரை அடித்து இலங்கையில் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி, பண்டிதமணி கணபதிப்பிள்ளை ரேஞ்சுக்குத் தமது தந்தையரையும் கொண்டவர நினைத்தார்கள். நினைத்ததுடன் நிற்காமல் முத்திரையை இலங்கைக்கும் அனுப்பி அதை தமிழ் பேப்பரிலும் அல்லவா செய்தியாக்கி விட்டார்கள். எந்த மாதிரியாக விளம்பரம் இருக்கும் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா? “ ஈழத்தமிழரான அமரர் இன்னாரின் சேவைநலம் பாராட்டி கனேடிய அரசாங்கம் முத்திரை வெளியிட்டு கௌரவித்தது என்றல்லவா போட்டுவிட்டார்கள். அதை இலங்கைப் பத்திரிகைகளும் சந்தோஷமாக ஏன் எப்படி என்று கேள்விகெட்காமல் மீள்பிரசுரம் செய்துவிட்டன.

இதைப்பார்த்துவிட்டு தேசியத் தலைவருக்கு முத்திரை அடிக்கப்போன ஒருவர் பேராசையில் எக்கச்சக்கமான பிரதிகள் கேட்கப் போய் கனடா தபால் திணைக்களம் விழித்துக்கொண்டுவிட்டது.

பிரிட்டனிலும் ரோயல் மெயில் Smilers என்ற புதிய திட்டத்தை அமுலாக்கினார்கள். கனடாக்காரர் பெற்ற அனுபவத்தின் வெளிப்பாடாக இங்கிலாந்தில் முன்எச்சரிக்கையாக நடந்துகொண்டார்கள். முத்திரையில் இடம்பெறுவதற்காக அனுப்பும் புகைப்படம் வேறாகவும், மகாராணியின் இலச்சினை பொறித்த ஒரிஜினல் முத்திரை வேறாகவும் தெளிவாகப் பிரிக்கப்பட்டு அச்சிட முடிவுசெய்தார்கள். யாரும் முத்திரை அடிக்கலாம். 20 தபால்தலைகளுக்குக் குறையாமல் அடிக்கவேண்டும். நல்லவேளை லண்டனில் பெரிதாக இதுவரை யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. குடும்பப் படங்கள் எடுத்துப் பதிந்து மகிழ்வதுடன் சரி.

இந்த விடயங்களை எவரும் இதுவரை சீரியசாக எடுத்ததாகத் தெரியவில்லை. இப்பொழுதும் கௌரவப் பட்டங்கள் வழங்கப்படவும், முத்திரையில் படம் பொறிக்கப்படவும் நடவடிக்கைகள் மும்முரமாக நடந்தபடிதான் உள்ளது. தமிழகத்துக்கு மேடையேறப் போகும் இலக்கியப் பிரமுகர்கள் பெரும்பாலும் ஏதோவொரு பட்டத்துடன் தான் திரும்பி வந்துசேர்கிறார்கள். இந்தக்கட்டுரை எழுதும் இந்த நிமிடத்தில்கூட ஐரோப்பிய நாடொன்றில் அரிசோனா பட்டம் பெற்ற ஒரு இலக்கியவாதிக்கு எழுத்தாளர் சங்கமொன்றினால் விழா எடுக்கப்படுகின்ற செய்தி கிடைக்கிறது. லண்டனில் சிலர் கிடைத்த பட்டத்தை எப்படிப் பேப்பரில் போட்டு சனத்துக்குத் தெரியப்படுத்துவது என்று தலையைச் சொறிந்துகொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் விரைவில் அம்பலத்துக்கு வரத்தானே செய்யும்.

பட்டம் தான் ஒருவனை சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்குமா? பட்டம் பெற்றவர்கள் தான் சமூகத்தை நேர்வழிப்படுத்த அரகதையுள்ளவர்களா? பட்டம் பெறாதவர்கள் எல்லாம் என்ன செல்லாக்காசுகள் என்ற எண்ணமா? சுப்பிரமணிய பாரதியார் என்ன பட்டம் பெற்றுத்தான் பல்கலைக்கழகப் பாடப்பத்தகங்களில் இடம்பெற்றாரா? இன்றளவில் அமைதியாகச் சமூகப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு மக்கள் மனதில் நிலையான இடம்பெற்றிருப்பவர்களின் பட்டம் என்ன என்று பார்த்தா நாம் மதிக்கிறோம்.

அண்மையில் மலேசிய உள்ளுராட்சி அமைச்சு விடுத்த அறிவித்தல், பட்டங்களால் தடுமாறிநிற்கும் மலேசியர்களைச் சற்று சிந்திக்க வைத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முறையாகச் சேர்ந்து முழுமையான அரச அங்கீகாரம் பெற்ற கலாநிதிப்பட்டத்தைத் தவிர்ந்த பிற கௌரவப் பட்டங்களை தமது பெயரின் முன்னாலோ பின்னாலோ பொது நிகழ்ச்சிகளிலோ, அரசாங்க செயற்பாடுகளிலோ பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேடையில் மாலை, பொன்னாடைகள் போர்த்துவது கௌரவிப்பக்காக மட்டுமே. அமைப்புகளால் வழங்கப்படும் பட்டங்களும் அவ்வாறே. கூட்டம் முடிந்ததும் மாலையையும் பொன்னாடையையும் சுருட்டிப் பக்குவப்படுத்துவோமா அல்லது அதைப் போர்த்தபடியே ஜாம் ஜாமென்று ஊரெல்லாம் நடந்து திரிவோமா?

தயவுசெய்து காசுக்கு வாங்கும் பட்டங்களால் சமூகத்தில் மற்றொரு பிரிவினை உருவாக்காதீர்கள். நீங்கள் செய்யும் பணி மக்கள் மனதில் நீங்கள் இல்லாத போதும் உறைக்க வேண்டும். நீங்கள் விட்டுச்செல்லும் வெறுமை, மக்கள் மனதில் ஆழப்பதிய வேண்டும். அது தான் உண்மையான கௌரவம். அதைவிடுத்து போலித்தனமான கடின உழைப்போ, ஆய்வுத்திறனோ அற்றதும் பணத்தை அடிப்படையாகக் கொண்டதுமான இந்தப் பட்டம் பதவிகள் எல்லாம் சமூகத்தின் நோய்க்கிருமிகள். தயவுசெய்து கிட்ட நெருங்கவிடாதீர்கள்.

நன்றி:

நூல்தேட்டம் 7777
தேடலே வாழ்க்கையாய்: ஒரு ஈழத்து நூலகரின் மனப்பதிவுகள். என்.செல்வராஜா. டென்மார்க்: வி.ஜீவகுமாரன், விஸ்வசேது இலக்கியப் பாலம், Hojvangsparken 7, 4300 Holbaek, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).
88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

நூலகவியலாளர் என்.செல்வராஜா எழுதி அவ்வப்போது ஊடகங்களில் பிரசுரமான 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் நந்தி, கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன், எஸ்.எம்.கோபாலரத்தினம், கிருஷ்ணா வைகுந்தவாசன், கோபன் மகாதேவா, நயீமா சித்தீக், ச.வே.பஞ்சாட்சரம், அரங்க முருகையன், அமுதுப் புலவர், அகஸ்தியர் ஆகியோர் பற்றிய மனப்பதிவுகளும், காலைக்கலசத்தினூடாக ஒரு நூலியல் பயணம், புலத்திலும் புகலிடத்திலும் மலரும் வெளியீடுகளை சர்வதேச நூலகங்களில் பாதுகாத்தல், மலேசியத் தமிழர்களின் நீள்துயில் கலைகின்றதா, புலம்பெயர்ந்தோரிடையே கலாநிதிகளும் கல்லாநிதிகளும், தமிழ்மண்ணில் ஒரு சிரமதான அமைப்பு (சர்வோதயம்), நா.சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் ஒரு பார்வை, ஈழநாடு சிறுகதைகள்: ஒரு பிராந்திய இலக்கிய வரலாற்று மூலநூல் ஆகிய சமூக, இலக்கிய கட்டுரைகளும் இதில் அடங்குகின்றன.

இக்கட்டுரை தேசம் சஞ்சிகையில் ஏற்கனவே வெளிவந்திருந்தது. காலப்பொருத்தம் கருதி மீண்டும் பிரசுரிக்கின்றோம்.

மோசடிக் கலாநிதிப் பட்டங்கள் தொடர்பான முன்னைய பதிவுகள்:

பட்டங்கள் கட்டி கல்வியையும் கல்வித் தகமையையும் மலினப்படுத்தும் உலகத் தமிழர் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90646  
தேசத்தின் செய்தியை அடுத்து பட்டம் வழங்கும் நிகழ்வைப் பிற்போட்டது உலகத் தமிழ் பல்கலைக்கழகம் https://www.thesamnet.co.uk//?p=90733

தனுஷ்க குணதிலக்கவிற்கு கிரிக்கெட் விளையாட தடை – இலங்கை கிரிக்கெட் நிறுவனம் !

இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவரை எந்தத் தேர்வுக்கும் கருத்தில் கொள்ளப்போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் தொடரும் ஒழுக்கமற்ற போக்கு – அவுஸ்திரேலியா பெண் முன்வைத்த குற்றச்சாட்டு!

ரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ரி20 உலகக் கிண்ணத்திற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியில் தனுஷ்க குணதிலக்க இடம்பெற்றிருந்த போதிலும், அவர் முதல் போட்டியில் மாத்திரமே விளையாடினார்.

துடுப்பாட்ட வீரராக மட்டுமே அணியில் இணைந்த தனுஷ்க, பல போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்ததால் முதல் போட்டியின் பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தனுஷ்காவுக்கு உபாதை ஏற்பட்டதாக தகவல் வெளியான போதிலும் அவர் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இவ்வாறான சூழலில் நேற்று (05) இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான சுப்பர் 12 போட்டியின் பின்னர் சிட்னியில் இலங்கை அணி தங்கியிருந்த விடுதியில் வைத்து தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

29 வயதான பெண் ஒருவர் தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ​தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி முதலில் தனுஷ்க குணதிலக்கவுடன் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு கொண்டதாகவும், பின்னர் நவம்பர் 2 ஆம் திகதி சிட்னி ரோஸ் பேயில் உள்ள யுவதியின் வீட்டிற்கு தனுஷ்க சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யுவதி அவரது வீட்டில் வைத்து அனுமதியின்றி நான்கு முறை உடலுறவிக்கு உட்படுத்தப்பட்டதாக தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவிற்கு பொலிஸ் பிணை வழங்க மறுக்கப்பட்ட நிலையில், அவர் நாளை உள்ளூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அவர் ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையல்ல, அவர் பல சந்தர்ப்பங்களில் ஒழுக்கத்தை மீறியதாக அதிகார மற்றும் அதிகாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரின் போது பொது இடத்தில் வைத்து புகைப்பிடித்த குற்றத்துக்காக குணதிலகவுக்கு 24மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

T20 உலகக்கிண்ண தொடர் – முடிவுக்கு வந்த முதல் சுற்று – அரையிறுதி யார் யாருக்கு..!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றன.

இதில் குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 இல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் லீக் சுற்று கடைசி போட்டியில் இந்தியா, சிம்பாப்வே அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதன்படி 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிம்பாப்வே அணி 17.2 ஓவர் நிறைவில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

அதனடிப்படையில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி எதிர்வரும் 10 ஆம் திகதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 9 ஆம் திகதி நியுஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அவுஸ்ரேலிய பெண் மீது பாலியல் வன்கொடுமை – உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க கைது !

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் நாளை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 29 வயதுடைய பெண் அளித்த முறைப்பாட்டின் பேரில், 31 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் டேட்டிங் செயலி மூலம் குறித்த பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வங்குரோத்தை மறைக்க பிரித்தானிய அரசு அகதிகளுக்கு எதிராகத் திரும்புகிறது! முன்னணி சட்டத்தரணி கணநாதன், லண்டன் வட்டுக்கோட்டை ஒன்றிய ஒன்று கூடலில்

பிரித்தானிய அரசு, தாங்கள் எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்தை மறைக்க அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரித்தானியாவில் உள்துறை அமைச்சுக்கு எதிராக பல தஞ்சக் கோரிக்கை வழக்குகளை முன்னெடுத்து அவற்றில் சிலதை முன்மாதிரியான வழக்குகளாக்கியவர் சட்டத்தரணி அருண் கணநாதன். அவருடைய 25 வருடகால சட்ட சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கௌரவிப்பும் நடந்தது. அவரோடு மருத்துவ கலாநிதி லோகேந்திரன் மற்றும் பத்மநாபஐயர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்கிழ்விற்கு முன்னாள் யாழ் நீதிபதி விக்கினராஜா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

அருண் கணநாதன் யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்தவர், இவர் கௌரவிப்பை ஏற்று சில வார்த்தைகள் குறிப்பிட்ட போது தற்போது பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்கோருவோருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அதற்கு மக்களின் ஆதரவையும் வலியுறுத்தி இருந்தார். இதனை மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றே சபையினர் அர்த்தப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக தேசம்நெற் விளக்கம் கேட்ட போது, சட்டப் போராட்டங்களையே தான் குறிப்பிட்டதாகவும் அரசியல் தஞ்சம்கோருவோரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களோடு முழுமையாக ஒத்துழைத்தாலேயே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ‘அரசியல் தஞ்சம் கோருவோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கின்றதா’ என தேசம்நெற் கேட்டபோது, “பிரித்தானிய நீதிமன்றங்களில் அரசின் கொள்கைகள் மீது விசனம் கொண்ட பல நீதிபதிகள் இன்னும் உள்ளனர். நாங்கள் தக்கமுறையில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தால், நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.

தற்போதைய கொன்சவேடிவ் கட்சியின் போக்குகளை மிகக்; கடுமையாக விமர்சித்த சட்டத்தரணி அருண் கணநாதன் இக்கட்சியும் இவர்கள் சார்ந்த வலதுசாரி ஊடகங்களும் துவேசத்தைத் தூண்டி அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக துவேசிகளை ஏவிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன் தீவிர வலதுசாரியான ஒருவர் இங்கிலாந்தின் கென்ற் என்ற பகுதியில் உள்ள தி வியடக்ட் அகதிகள் தடுப்பு மையத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிஸ்ரவசமாக இத்தாக்குதலில் இருவர் மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இத்தாக்குதலையடுத்து இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 அகதி அந்தஸ்து கோரியோர் கென்ற் பகுதியில் உள்ள மேஸ்ட்ரன் தடுப்பு மையத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றப்பட்டனர்.

ஏற்கனவே மேஸ்ட்ரன் தடுப்பு மையம் தஞ்சம் கோருவோரோல் நிரம்பி வழிக்ன்றது. 1500 பேர்களை மட்டுமே கொள்ளக் கூடிய முன்னாள் இராணுவத்தளத்தில் அரசு 4,000 பேரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் அங்கு பலரும் நிலத்தில் படுக்க வேண்டி இருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலை ஹமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்திலும் உள்ளதாக சட்டத்தரணி அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இத்தடுப்பு மையங்களின் பாதுகாப்பு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் தஞ்சம்கோருவோரை மிருகத்தனமாக நடத்துவதாகவும் அருண் கணநாதன் குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் செய்திகள் அண்மையில் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இன்று ஹெமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்தில் மூன்று மணிநேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் கணநாதன் சுட்டிக்காட்டினார்.

சில வாரங்களுக்குள்ளேயே மூன்று பிரதமர்களைக் கண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமரும் அவருடைய முக்கிய அமைச்சர்களும் சிறுபான்மைச் சமூகங்களாக இருந்தபோதும் அவர்களுடைய அரசியல் கொள்கைத் திட்டங்கள் மோசமான வலதுசாரித் தன்மையுடையதாகவும் சிறுபான்மையினருக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது. குறிப்பாக பொறிஸ் ஜோன்சன் பிரதமாராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ப்ரித்தி பட்டேல் அவரைத் தொடர்ந்து 44 நாட்கள் பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்துக்கு இட்டுச்சென்ற லிஸ் ரஸ் பிரதமராக இருந்த போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுவலா ப்ரவர்மன், தனது சொந்த மின் அஞ்சலைப் பயன்படுத்தி பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக லிஸ் ரஸ்ஸால் பதவியில் இருந்து தூக்கப்பட்டவர். ஆனால் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் பதவியேற்றதும் சுவலா ப்ரவர்மன் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் இந்திய வம்சாவழியாக இருந்த போதும் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் அகதிகள் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடுவதுடன் வலதுசாரிகளையும் துவேசிகளையும் தூண்டிவிடும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் தஞ்சம் கோரி பிரித்தானியா வருபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அரசோடு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அவருடைய காலப்பகுதியில் தஞ்சம் கோரியவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வி கண்டது. பிரித்தானியாவினதும் ஐரோப்பாவினதும் நீதிமன்றங்கள் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் ருவாண்டா திட்டத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கின.

நிலைமை அப்படியிருக்கையில் சுவாலா ப்ரவர்மன் “பிரித்தானியாவுக்கு தஞ்சம் கோரிவருபவர்கனை ருவாண்டாவுக்கு அனுப்புவது தனது கனவு என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இன்னுமொரு படி மேலே சென்று அகதிகள் படகுகளில் பிரித்தானியா மீது படையெடுப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்வதற்கு வழியற்று நிர்க்கதியாகி அகதிகளாக வருபவர்களை ‘படையெடுக்கிறார்கள்’ என்று சுவாலா ப்ரவர்மன் குறிப்பிட்டது, அகதி அந்தஸ்து கோருபவர்கள் தொடர்பான அவருடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது முதல் பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாய் ஊடாக படகு மூலம் பயணிப்பவர்கள் மீதான கண்காணிப்பை கைவிட்டது. பிரித்தானியாவின் எல்லையை பாதுகாப்பது தமது பொறுப்பல்ல என பிரான்ஸ் தீர்மானித்தது. இதனால் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக அதிகரித்து வருகின்றது. இது பிரித்தானியாவின் முன்யோசணையற்ற பிரிக்ஸிற் கோரிக்கையின் பலாபலன்.

ரிஷி சுனாக் அரசு என்ன தான் தீவிர வலதுசாரித்துவத்தின் பக்கம் சாய்ந்தாலும் 2024 இல் நடைபெறும் தேர்தலில் ரிஷி சுனாக் வேறும் காரணங்களோடு அவருடைய நிறத்திற்காகவும் பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். ஆனாலும் இவர்கள் தங்களை தீவிர வலதுசாரி துவேசிகளுடன் இணைத்துக்கொள்வார்கள்.

300 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வை தேவசேனா மற்றும் சந்துரு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வட்டுக்கோட்டையின் விருந்தோம்பல் வெளிப்பாடாக உணவை விரயம் செய்யாமல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்கும் உணவை எடுத்துச் செல்லும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதி வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் என தேவசேனா தெரிவித்தார். குறிப்பாக காட்டுப்புலம் மற்றும் மூளாய் போன்ற பகுதிகளில் உள்ள முன் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இந்நிதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கையின் வடக்கில் உள்ள சனத்தொகை அடர்த்தி கூடிய தொகுதி வட்டுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொழும்பிற்கு அடுத்ததாக புதிய ஸ்ரைல் வருவது வட்டுக்கோட்டையிலும் மானிப்பாயிலும். காரணம் இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் தாக்கம் கணிசமான அளவில் காணப்பட்டமை. துரதிஸ்ட் வசமாக சாதிய முரண்பாடு அன்று மட்டுமல்ல இன்றும் கூர்மையாக உள்ள பிரதேசங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய அரசியலைத் தீர்மானிக்கும் ‘தமிழீழ பிரகடனம்’ செய்யப்பட்டது வட்டுக்கோட்டையில் உள்ள பன்னாகம் என்ற இடத்திலேயே. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை வட்டுக்கோட்டையைத் தவிர்த்து எழுத முடியாது. சோமசுந்தரப் புலவர், எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், அல்பிரட் துரையப்பா, ரெலி ஜெகன் என்று முக்கிய புள்ளிகளும் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர்.

உலக்கிண்ண ரி20 தொடர் – இலங்கையின் தோல்வியால் தகர்ந்தது ஆஸியின் உலககிண்ண கனவு !

உலக்கிண்ண ரி20 தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை வீழ்த்தி 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 141 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸங்க அதிகபட்சமாக 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் மார்க் வுட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய எலக்ஸ் எல்ஸ் அதிகபட்சமாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டொக் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் லஹிரு குமார, வனிந்து ஹசரங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும் அதேவேளை, அவுஸ்திரேலியா அணிக்கான அரையிறுதி வாய்ப்பு பறிபோகின்றமை குறிப்பிடத்தக்கது.