இந்திய அரசு தமிழ் மக்களினதும் எதிரி! இன்னுமொரு உக்ரைனை திருமலையில் உருவாக்க அத்திவாரம்!! மசூதிகளையும் தேவாலயங்களையும் அழிக்க இலங்கையில் ராமாயண யாத்திரைக்கு முயற்சி!!!

இந்திய அரசை நம்பியதினால் தமிழர்களுக்கு முதலில் ஏற்பட்டது அழிவு இரண்டாவது ஏற்பட்டது பேரழிவு இனி ஏற்பட இருப்பது மீள முடியாத பேரழிவு. இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களிடையே இருந்த முரண்பாட்டை தீர்த்து வைக்கத் திறமையற்ற, படித்த ஆனால் மூன்றாம் தர சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள், தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப போட்டி போட்டு, இனவாதத் தீயை வளர்த்தன. இவர்கள் இலங்கையை அந்நிய சக்திகளிடம் கையளித்து, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்து வருகின்றனர். அதன் உச்சமாக தற்போது இலங்கையின் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை எதிர்கால யுத்தத்தின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 30 பேர்வரை இரு இரு விசேட விமானங்களில் பெப்ரவரி 14 அன்று இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.

இன்று பெப்ரவரி 18இல் தமிழகத்தின் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வவுனியா ஆலயத்தில் மதக் கலகத்தை தூண்டிவிடும் வகையில் உரையாற்றினார். இது “சிவ பூமி, ராமஜன்ம பூமி, ஆரியச் சக்கரவர்த்தி பிறந்த பூமி” என்றெல்லாம் புகழாரம் சூட்டி ராமாயண யாத்திரை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கும் என்றும் இந்தியாவில் இருந்தும் யாத்திரை வரும் அதற்காகவே தமிழகத்தில் இருந்து பலாலிக்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் – ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்றெல்லாம் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெயரை உச்சரிக்காது அர்ஜூன் சம்பத் வெளிநாட்டவர்கள் இங்கு வந்து மதமாற்றம் செய்வதாகவும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு மதவாதத்தை தூண்டும் செயல் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளராக ஒளிப்பதிவாளராகக் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “இந்தியாவின் தமிழகத்தின் சாத்தான்கள் வந்து எங்களுக்கு வேதம் கற்றுக் கொடுக்கிறார்கள்” என்று சினந்து கொண்டார். இந்த சாத்தான்கள் ராமர் யாத்திரையை இங்கும் நடத்தி மசூதிகளையும் தேவாலயங்களையும் நொருக்குவதற்கு இப்பவே திட்டமிட்டுவிட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அந்த ஆலயத்தின் அடியவர் தேசம்நெற் வட்ஸ்அப்க்கு அனுப்பி வைத்த குறிப்பில் இவ்வாறான மதத்தை அரசியலோடு கலக்கின்ற பிரச்சாரங்களுக்கு ஆலயங்கள் இடமளிப்பதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்த மயூரன், சண்முகரத்தினம் போன்றவர்கள் இவ்வாறான மதஅடிப்படைவாதிகளை ஆலயங்களுக்கு அழைத்து எமது ஆலயங்களை மத அடிப்படைவாதிகளின் கூடாரங்கள் ஆக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தேசம்நெற் க்கு கிடைக்கும் செய்திகளின்படி திருகோணாமலையில் உள்ள 90 எண்ணைக் குதங்களில் 80 வரையான குதங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகின்றது. அமெரிக்க ராஜதந்திரிகளின் வருகை திருமலை விவகாரம் பற்றியது அல்ல என அமைச்சர் பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு எண்ணைக் குதமுமே நூறு பெற்றோல் நிலையங்களுக்கான பெற்றோலியத்தை சேகரித்து வைக்கும் கொள்ளளவைக் கொண்டன எனத் தெரிவித்தார். இவ்எண்ணெய்க் குதங்கள் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் யுத்த தளபாடங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிரித்தானியாவால் உருவாக்கப்பட்டவை. இன்றைய உக்ரைன் நிலைமையொன்று அதாவது அமெரிக்க சக இந்தியா எதிர் சீனா உருவாகுமானால் அதன் முதல் பொறி திருகோணமலையிலேயே தெறிக்கும் என்பது உறுதியாகி வருகின்றது.

இந்தியா காலம் காலமாக தன்னுடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டே இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாக பாவித்து வருகின்றது. தமிழர்களும் தமிழ் தலைவர்களும் குனியக் குனிய இந்தியா மேலும் மேலும் தமிழர்களைக் குட்டிக்கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் இந்திய நலன்சார்ந்த அரசியலால் இதுவரை தமிழர்கள் இழப்பைத் தவிர எதனையும் சந்தித்தில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைக் கூட இந்தியா முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் தமிழ் மக்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது. 36 ஆண்டுகளாக நாய்க்கு எலும்புத்துண்டு போடுவது போல் இந்திய அரசு 13ஆவது திருத்தச் சட்டத்தைக் காட்டிக் காட்டி தமிழ் மக்களை அவர்களின் தன்மானத்தை நொறுக்கி வருகின்றது.

இலங்கையில் உள்ள இன முரண்பாட்டுக்கு உயிரூட்டி அதற்கு வன்முறை வடிவம் கொடுத்து. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உசுப்பி விட்ட இளைஞர்களை இந்திய உளவுப்படை கோழிக்குஞ்சுகளை பிடிப்பது போல் துப்பாக்கிகள் தாறோம், குண்டுகள் தாறோம், பயிற்சியும் தாறோம் என்று வளைத்துப் போட்டனர்.

சிங்கள கிராமங்களுக்குள் சென்று சிங்களவர்களைக் கொல்லுங்கள் நிறைய துப்பாக்கிகளும், குண்டுகளும், பயிற்சிகளும் தருவோம் என்றதும், நான் முந்தி நீ முந்தி என்று தமிழீழ விடுதலைப் புலிகள் முந்திக் கொண்டனர். கொக்கிளாய், நாயாறு, அனுராதபுரம் படுகொலைகள் நடந்தேறியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் லண்டனில் இயங்கும் வரலாற்று மையத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளர் சங்கீதன் இந்தியா தங்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் பயிற்சிகள் பயிற்சிகள் அளித்தது பற்றி அண்மைய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இனவாதத் தீயை இந்தியா எண்ணை ஊற்றி அணையவிடாமல் வளர்த்தது. பதிலுக்கு ஜே ஆர் ஜெயவர்த்தன அரசும் இஸ்ரேலிய மொசாட் பாஸிஸ்டுக்களுடன் இணைந்து தமிழர்களைக் கொன்றொழித்தார். தமிழ் இளைஞர்களை நூற்றுக் கணக்கில் ஆயிரக் கணக்கில் கொன்றொழித்தால் அதில் புலிகளும் அழிக்கப்படுவார்கள் என்பது மேற்குநாடுகள் போற்றும் மொசாட்டின் கண்டுபிடிப்பு. ஒரு கட்டத்தில் மொசாட் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்தது.இது பிரித்தானியாவில் வெளியாகும் கார்டியன் பத்திரிகையில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பிரபாகரனை உருவாக்கியது இந்தியா. வளர்த்துவிட்டது இந்தியா. பிரபாகரனை முடித்ததும் இந்தியா தான்.

இப்போது இந்திய அரசின் உளவு நிறுவனமான ரோ புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு Tamil Co-ordinating Committee இல் இருந்து பிரிந்து சென்ற அப்துல்லா தலைமையிலான குழுவைத் தன்னோடு இணைந்ததுக் கொண்டுள்ளது. இவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்ற அறிவிப்பை பழ நெடுமாறன் மூலமாக, காசி ஆனந்தன் போன்றவர்கள் பக்கத்தில் இருக்க, பெப்ரவரி 13 அன்று வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இவ்வாறான ஒரு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டாம் என பிரபாகரனின் சகோதரர் கேட்டுக்கொண்டபோதும் ஏனைய பல்வேறு தரப்பினர் கேட்டுக்கொண்ட போதும் இவ்வறிவிப்பை பழ நெடுமாறன் மேற்கொண்டிருந்தார். இந்த அறிவிப்பில் இந்திய உளவுப் பிரிவினரால் உள்வாங்கப்பட்டதாகக் கருதப்படும் அப்துல்லா தலைமையிலான அந்த நால்வரைத் தவிர வேறு எந்த ஈழத்தமிழரும் இந்த அறிவிப்பை மிக வன்மையாகக் கண்டித்தனர். தமீழ விடுதலைப் போராட்டத்தை தற்போது பழ நெடுமாறனும் ரோவுமே நேரடியாகக் கையாள ஆரம்பித்துள்ளனர்.

பிரபாகரனின் நெருங்கிய நண்பர் வல்வை ஆனந்தன்இ வல்வை நாடான் என அழைக்கப்படும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆனந்தராஜா அவருடைய நண்பர் பிரபாகரன் பற்றிக் குறிப்பிடும் போது “தேசியத் தலைவர் ஒரு போதும் மக்களைத் தவிக்கவிட்டுவிட்டு தப்பிச் செல்லக்கூடியவரல்ல. அவர் தனக்கென்று ஒரு நிலம் கூட இல்லாதவர். தேசியத் தலைவரின் வீடு என்று சொல்லப்படும் இங்குள்ள வீடு கூ; அவருடைய சகோதரியினுடையது என அவர் தெரிவித்தார்.

“இந்திய அரசு தமிழ் மக்களினது எதிரி!” என்று பட்டவர்த்தனமாகக் குறிப்பிடுவது தமிழ் அரசியல் சூழலில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தும். இந்தக் கசப்பான உண்மையை பல்வேறு அரசியல் சமன்பாடுகளினாலும் அரசியல் நகர்வுகளினாலும் தவறானது என்று நிரூபிக்க பலரும் முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இந்திய அரசு தமிழர்களின் நண்பன் என்று அறுதியிட்டு சொல்வதற்கு எவ்வித தடயங்களும் இருக்காது. அவர்களுடைய வாதங்கள் இந்திரா அம்மையார் இருந்திருந்தால்… எம்ஜிஆர் இருந்திருந்தால்… அல்லது இந்திய அரசைத் தவிர வேறு வழியில்லை … என்பதில் தான் போய் நிற்கும்.

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திய அரசுக்குமான உறவு மிக நீண்டது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டே இலங்கையின் அமைவிடம் காரணமாக தென்னிந்திய அரசுகளின் படையெடுப்புகள் இல்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படையெடுப்புகள் இனரீதியானதாக கொள்ளப்படவில்லை. அவ்வாறான கறாரான இனவரையறுப்பு அன்று காணப்படவில்லை. யுத்தத்தில் தோற்றுப் போன எல்லாளனை பாதணியைக் கழற்றி வைத்து வணங்குகின்ற முறைமை சிங்கள மக்கள் இன்னமும் அனுராதபுரத்தில் கடைபிடிக்கப்படுகின்றது.

மேலும் பௌத்தத்தை வளர்த்தவர்கள் தமிழர்கள். பௌத்த வாழ்வியல் முறை வட இந்தியாவில் உருவானாலும் அது இலங்கைக்கு தென்னிந்தியாவில் இருந்தே கொண்டுவரப்பட்டது. ஒரு காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் செழித்தோங்கியது. அந்தக் காலகட்டத்திலேயே இலங்கைக்கும் பௌத்தம் கொண்டுவரப்பட்டது. அதனை சங்கமித்தை கொண்டு வந்தாரா மணிமேகலை கொண்டுவந்தாரா நயன்தாரா கொண்டு வந்தாரா என்பதை வரலாற்று ரீதியாக நிறுவமுடியுமா தெரியவில்லை. ஆனால் ஒரு தமிழர் கொண்டு வருவதற்கே வாய்ப்பு உள்ளது.

ராகுல தேரர் குறிப்பிடுவது போல் பௌத்தம் ஒரு மதமல்ல. அதுவொரு வாழ்வியல் முறை. எதிர்கால இலங்கை பற்றி ராகுல தேரர் காண்கின்ற கனவு நனவாக வேண்டும். தமிழர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை பௌத்த இளம் துறவிகள் கேட்டறிந்து தென்பகுதிக்கு கொண்டு சென்று அதற்கு தீர்வு காண வேண்டும். வடக்கில் இருந்தும் இளம் துறவிகள் தெற்கில் உள்ளவர்களிள் குறைகளைக் கேட்டறிந்து வடக்குக்குச் சென்று தீர்வு காண வேண்டும். இனிமேல் இந்த இனவாத பருப்பெல்லாம் இம்மண்ணில் வேகாது என்கிறார் ராகுல தேரர்.

ஐரோப்பியரின் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தான் பிரித்தாளும் தந்திரத்தோடு திட்டமிட்ட முறையில் இன முரண்பாடுகள் கூர்மைப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக சுதந்திரத்தின் பின் இனக்கலவரங்கள் நிகழ்ந்தன.

உலகத்தில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா மீண்டும் இடதுசாரிகளின் துணையோடு எழுபதுகளில் ஆட்சியைக் கைப்பற்றினார். இந்தியாவின் அணிசேராக் கொள்கை. இந்தியாவோடு நெருக்கமான உறவு. திறந்த பொருளாதாரத்தின் கதவுகள் மூடப்பட்டது. இறக்குமதிப் பொருளாதாரம் தடைசெய்யப்பட உள்ளூர் உற்பத்தி பெருகியது. விவசாயிகள் செல்வந்தராகினர்.

அன்று தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் மக்களின் செல்வாக்கை இழந்தன. இடதுசாரிச் சிந்தனை தலைதூக்கியது. இடதுசாரிச் சிந்தனையைத் தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி தெற்கிலும் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கிலும் இனவாதத்தை நெய்யூற்றி வளர்த்தனர். 1977இல் வட்டுக்கோட்டையில் ‘தமிழீழம்’ என்ற எண்ணக்கரு உருவாக்கப்பட்டது. தங்கள் கைகளைக் கீறி தமிழ் இளைஞர்கள் இரத்தப் பொட்டு வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் வாக்கு வங்கி வடக்கு கிழக்கில் நிரம்பி வழிந்தது. தெற்கில் ஜே ஆர் ஜெயவர்த்தன பிரதமராகி பின் ஜனாதிபதியானார். அமேரிக்காவிற்கு இலங்கையைத் திறந்த ஜே ஆர் ஜெயவர்த்தனாவும் தமிழரசுக் கட்சியும் கூட்டுக்கலவியில் இறங்கியது. தமிழீழம் தள்ளாடியது.

ஆனால் உசுப்பேற்றப்பட்ட இளைஞர்களோ தமிழீழத்தை அடைந்துவிட வேண்டும் என்று வேட்கை கொண்டனர். யார் முதலில் அடைவது, யாருக்கு தமிழீழ சொந்தம் என்றெல்லாம் போட்டியிட்டு சகோதரப் படுகொலைகளிலும் ஈடுபட்டனர். இவர்களையெல்லாம் இனம்கண்ட இந்தியா, தன்னை விட்டு விலகி அமெரிக்கா பக்கம் சாய்ந்த ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கு பாடம்புகட்ட எண்ணியது. பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டி பங்களாதேஸ் உருவாக வழிவகுத்த துணிச்சலும் இந்தியாவுக்கு இருந்தது. அதற்கு தமிழ் இளைஞர்கள் வாய்ப்பாக அமைந்தனர். பங்களாதேஷ் போல் தமிழீழம் அமைக்க இந்தியா வகை செய்யும் என தமிழ் இளைஞர்கள் நம்பினர். நம்ப வைக்கப்பட்டனர். தமிழர்கள் கேள்விக்கு இடமில்லாமல் இந்தியாவை நம்பினார். இந்தியாவே கதி என்று இருந்தனர்.

1996இல் ரெலோ தலைவர் சிறிசபாரட்ணம் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டார். சென்னையில் நடைபெற்ற நினைவுக் கூட்டத்தைக் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குழப்ப முயற்சித்தனர். அந்நினைவுக் கூட்டத்தில் உரையாற்றிய காலஞ்சென்ற அ அமிர்தலிங்கம் இந்தியாவை எதிர்ப்பது, இந்தியாவுக்கு துரோகம் செய்வது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்வதற்கு ஒப்பானது எனத் தெரிவித்து இருந்தார். இந்தியா மீதான இவர்களின் விசுவாசம் அப்படி இருந்தது.

ஆனால் இந்தியா தன்னுடைய நலனில் மட்டும் நின்றது. இந்தியா ஒப்பிரேசன் பூமாலை என்ற பெயரில் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு சுருக்குக் கயிறிட்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பணிய வைத்தது. இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றியது. அதில் தமிழர் தரப்பில் பெயரளவில் கூட கையொப்பமிடத் தேவையிருக்கவில்லை.

இந்த உறவில்,1987 இலங்கை – இந்திய ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படையினரோடு தமிழீழ விடுதலைப் புலிகள் மோதியது, அடுத்து 1991 ராஜீவ்காந்தியின் படுகொலை ஆகிய நான்கு ஆண்டுகள் மிகக் குறுகிய காலம் தான் விடுதலைப் புலிகள் இந்தியாவை எதிரியாகக் கணித்தனர். அந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் இன்று வரையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்திய அரசுக்கு விசுவாசமாகவே இருந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்காத போதும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கிடைத்த குறைந்தபட்ச உரிமையும் அதற்குப் பின் நடைபெற்ற போராட்டத்தாலும் அர்ப்பணிப்புகளாலும் பெறப்படவில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் போராளிகள், பொதுமக்கள், இராணுவம் என்று மொத்தமாகக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் உட்பட்டதாகவே இருக்கும். அதற்குப் பிந்தைய இரண்டு தசாப்தங்களில் தமிழர்கள் தரப்பில் மட்டும் இழக்கப்பட்ட உயிர்கள் லட்சத்தை தாண்டி நிற்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமைக்கு பல்வேறு காரணங்கள் புனையப்பட்டாலும் வே.பிரபாகரன் அவமானப்படுத்தப்பட்டதே அப்படுகொலைக்கு இட்டுச்சென்றுள்ளது. ராஜீவ் காந்தியை சந்திப்பதற்காக யாழ் சுதுமலையில் இருந்து இந்திய விமானப்படையின் விமானத்தில் பிரபாகரன் ஏறுவதற்கு முன் தங்களுடைய கோரிக்கைகளை இந்தியா எற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடனேயே சென்றார். ஆனால் இந்தியாவில் தரையிறக்கப்பட்ட பிரபாகரன் அங்கு தடுத்து வைக்கப்பட்டதுடன் ராஜீவ் காந்தியுடனான சந்திப்புக்கு முன்னதாக ஆண்மையை மட்டும் மறைக்கும் உள்ளுடுப்போடு நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்பட்டதாகவும் அப்போது தான் ராஜீகாந்தியை தீர்த்துக்கட்டுவது என்ற முடிவுக்கு பிரபாகரன் வந்ததாகவும் பிரபாகரனுக்கு நெருங்கிய ஒருவர் தெரிவிக்கின்றார்.

அந்த முடிவு தான் 28 ஆண்டுகளுக்குப் பின் பிரபாகரன் அதே உள்ளாடையோடு சாய்க்கப்படக் காரணமாக அமைந்தது. ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு அரசியல் ரீதியான படுகொலையல்ல. தமிழ் மக்கள் இதனை ஒரு போதும் அங்கீகரித்தும் இருக்கவில்லை. அதுவொரு தனிப்பட்ட பழிவாங்கல். அது தமிழ் மக்களுக்கோ விடுதலைப் புலிகளுக்கோ எவ்வித நன்மையையும் பெற்றுத்தரவில்லை. இந்திய அரசு தமிழர்களது வாழ்நிலை குறித்து எவ்வித கரிசனையும் கொண்டிருக்கவில்லை.

வல்வை ஆனந்தன் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின் வடக்கு கிழக்கில் குறிப்பாக வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என்ற பெயரில் செயற்பட்ட இந்திய இராணுவம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை: படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுவது, பாலல்வல்லுறவு மற்றும் மனித உரிமை மீறல்களைப் பதிவு செய்தவர். இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் இழைத்த அநீதிகள் மிக மோசமானவை. இவை தொடர்பில் எந்தவொரு இந்திய இராணுவ வீரரும் தண்டிக்கப்படவில்லை. அதற்கான எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவுமில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒக்ஸ்போர்ட் வரலாற்று மையத்தின் ஊடகப் பொறுப்பாளர் சங்கீதன்: தேசியத் தலைவர் பிரபாகரன் தனது மனைவியையும் பிள்ளைகளையும் காப்பாற்றியிருக்க முடியும். அதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. ரூபனும் அவருடைய நண்பரும் கொழும்பு நோக்கிச் சென்றதை மாலைதீவுக்கு அனுப்பி மதிவதனி அக்காவையும் பிள்ளைகளையும் காப்பாற்றி இருக்க முடியும் ஆனால் தேசியத் தலைவர் குடும்பத்தோடு மக்களோடு மக்களாகவே நின்றார் என்கிறார்.

கலை இலக்கிய விமர்சகர் வஐச ஜெயபாலன் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பற்றிக் குறிப்பிடுகையில் இந்தியா தமிழர்களின் முதுகெலும்பை நொருக்கியது இருந்தாலும் புலிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக சீனாவையோ வேறு எந்த நாட்டையுமோ தெரிவு செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆய்வாளர் ரவி பிரபாகரனும் இதே கருத்தையே வெளியிட்டார்.

ஆனால் 1987இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தோடு தமிழ் மக்களுக்கு – தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அல்ல, ஊடல் ஏற்பட்டு 1991 ராஜீவ்காந்தி படுகொலையோடு தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்குமான உறவு ஒரு நெருக்கடி நிலைக்கு வந்தது. ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகள் இந்திய அரசோடு எப்போதும் ஒருதலைக் காதலிலேயே மூழ்கிக் கிடந்தனர். மூழ்ங்கிக் கிடக்கின்றனர். இனிமேலும் மூழ்கிக் கிடப்பர்.

இந்தியாவுடனான இந்தக் காதலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப்பெரிய விலையைக் கொடுத்தது. அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ அமிர்தலிங்கமும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் படுகொலை செய்யப்பட்டனர். ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகள் இந்தியாவை மட்டுமே நம்புகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவார்கள் என்ற உண்மை சில மாதங்களுக்கு முன்னரேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பான தமிழ் தலைமைகளுக்கு இந்தியா தெரிந்திருந்தது என்று 2009 பெப்ரவரியில் எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டாலேயே தாங்கள் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்றும் எந்தவொரு முயற்சியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கவில்லை.

தமிழ் தலைமைகள் இந்திய அரசுக்கு தங்களுடைய கேள்விக்குட்படுத்தாத விசுவாசத்தைக் காட்டி வந்தபோதும் இந்தியா அவர்களையும் தமிழ் மக்களையும் ஒரு கறிவேப்பிலையாகவே பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை அரசை தன்பக்கம் இருந்து விலகிவிடாமல் தடுப்பதற்கே இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்திய உளவுப்பிரிவான ரோ வடக்கு கிழக்கை தன் வசப்படுத்தவே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என ஆய்வாளர் ரவி பிரபாகரன் தெரிவிக்கின்றார்.

புவியியல் ரீதியாக இலங்கை இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பதால் அதன் அரசியல், பொருளாதார, சமூக தாக்கங்கள் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த ஒரே காரணத்திற்காக காலம் காலமாகவே இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்ளவில்லை. அவ்வளவு ஏன் தன்னுடைய உள்நாட்டிலும் கூட இந்தியா மனிதத் தன்மையோடு, மனிதப் பண்புகளோடு நடந்துகொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் அண்டை நாட்டு விடயங்களில் அதீத தலையீட்டை மேற்கொள்ளும் இந்தியா, தனது சொந்த மக்களின் வாழ்வியல் விடயங்களில் எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை.

அதற்கு பெரிய உதாரணம் எதுவும் தேவையில்லை. கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தபோது போது மோடி அரசு தன்னுடைய மத – கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, லட்சக் கணக்கான மக்களைக் கூடச்செய்து, மில்லியன் கணக்கான மக்களுக்கு கொரோனாவை பரவச் செய்து, ஐந்து மில்லியன் மக்களைப் படுகொலை செய்தது. உலக சனத்தொகையில் இரண்டாவது இடத்தில் இருந்து முதலாவது இடத்திற்கு நகரும் இந்தியா, தன் நாட்டில் 5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டது பற்றி எவ்வித வருத்தமும் கிடையாது. இது இன்றைய இந்திய அரசின் நிலைமட்டுமல்ல 1984இல் வட மாநிலமான போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயுக் கசிவினால் ஆயிரக் கணக்கானோர் இறந்தனர். அதன் தாக்கத்தால் அங்கு இன்னமும் குழந்தைகள் குறைபாடுகளுடன் தான் பிறக்கின்றனர். ஆனால் இந்திய அரசு அம்மக்களுக்கு அந்த அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து சரியான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கத் தவறியது.

அன்றும் இன்றும் இது தான் இந்திய அரசு. இது அத்தானி போன்ற பண முதலைகளுக்கு தீணி போடும் அரசே அல்லாமல் மக்களுக்கான அரசு அல்ல. தன்னுடைய சொந்த மக்களின் நலனைப் பற்றியோ அவர்களின் உயிர்வாழ்வு பற்றியோ எவ்வித கரிசனையும் கொள்ளாத இந்திய அரசு தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் என்று நம்புவது அடி முட்டாள்தனமானது.

கடந்த காலப் பாடங்களில் இருந்து தமிழர்கள் இந்தியா பற்றிக் கற்றுக்கொள்ளத் தவறுகின்றார்கள். தற்போது கலாச்சார மையத்தைக் கட்டிக்கொடுத்தது என்பது எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை. அங்கிருக்கின்ற ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்களையே பயன்படுத்துவதற்கோ பராமரிப்பதற்கோ அங்குள்ளவர்கள் திணறிக்கொண்டுள்ளனர். இவ்வாறான ஆர்வக்கோளாறான கட்டமைப்புகள் சிறிது காலத்தில் கவனிப்பாரற்று போவதே இயல்பாக உள்ளது. அந்தப் பட்டியலில் இந்திய கலாச்சார மண்டபமும் அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இக்கலாச்சார மண்டபம் இந்துத்துவ பா.ஜா.காவுக்கு பெருமையடிப்பதற்கு மட்டுமே உதவும்.

இலங்கையின் இந்துத்துவ ஆதிக்கம் பற்றி கலை இலக்கிய ஆர்வலர் வ.ஐ.ச ஜெயபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றையெல்லாம் உறுதிப்படுத்துவதுது போலவே இன்று வவுனியாவில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் ராமாயண யாத்திரை உரை அமைந்துள்ளது.

பழ நெடுமாறனின் பிரபாகரன் இருக்கின்றார் என்ற அறிவிப்புத் தொடர்பாகவும் இலங்கையில் இந்தியத் தலையீடுகள் பற்றியும் யாழ் சிவில் சமூகத்தின் பேச்சாளரான அருண் சித்தார்த் மிகக் கடுமையான விமர்சனத்தை இந்திய தலைவர்கள் மீதும் இந்திய அரசு மீதும் வைக்கின்றார். அருண் சித்தார் ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களைப் போன்ற சிறுபான்மையான வெள்ளாள ஆண்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியல்ல. இவர் வடக்கில் பெரும்பான்மையாகவுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மறுக்கப்பட்ட குரலாக ஒலித்துவருபவர்.

இந்திய உளவுத்துறையும் அதனோடு சேர்ந்த தமிழ் தேசிய உணர்வாளர்களாகக் தம்மைக் காட்டிக்கொள்ளும் பழ நெடுமாறன் போன்றவர்களும் காசி ஆனந்தன் போன்ற இந்தியாவில் வாழ்கின்ற புலிகளின் அங்கீகாரம் பெற்ற ஈழத்தமிழர்களும் இணைந்து இந்தியா அரசின் தேவைக்காக வெளியிட்ட “பிரபாகரன் இருக்கின்றார். மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என்ற அறிவிப்பு பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தவிடுபொடியாக்கி உள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர் அமைப்பின் தலைவர் பீற்றர் ஹெய்ன்ஸ் தலைமையில் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான சட்ட முன்னெடுப்புகள் கனியும் தருவாயில், “பிரபாகரன் இருக்கின்றார். மாபெரும் போராட்டம் வெடிக்கும்” என்ற அறிவிப்பு சில ஆண்டுகளாக பல்லாயிரம் பவுண்கள் நிதிச் செலவில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் அனைத்தையும் வீணடித்துள்ளதாக, இந்த நீதிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் வழக்குரைஞர் தேசம்நெற் க்கு தெரிவித்து இருந்தார். சர்வதேச குற்றவியல் நீதித்துறையில் 30 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்ட பீற்றர் ஹெய்ன்ஸ் இலங்கையில் நீதியை நிலைநாட்டுவது தொடர்பான குழுக்களுடனும் செயற்பட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் ஏனைய நாடுகளிலும் அவர்கள் பயங்கரவாதப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் அவ்வழக்குரைஞர் சுட்டிக்காட்டினார்.

தற்போது இந்திய உளவுப் பிரிவான ரோவோடு செயற்படுபவர்களில் அப்துல்லா, சிறி, குலம் (மிசைல் இன்ஜினியர்) மற்றும் பிரபாகரனின் செல் பக்ரிக்கு பொறுப்பான மணி ஆகியோரும் செயற்படுவதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற் க்கு தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு மில்லியன் பவுண்கள் வரை நிதி சேகரிப்பில் ஈடுபடும் இக்குழுவினர் பிரபாகரன் போன்ற ஒருவரை கொண்டுவந்து நிறுத்தப் போவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒக்ஸ்போர்ட் வரலாற்று மையத்தின் ஊடகப் பேச்சாளர் சங்கீதன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறானவர்களையும் இவர்களால் சேகரிக்கப்பட்ட பணத்தையும் கொண்டு இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிலருக்கு பயிற்சிகள் அளிக்கவும் ஏற்பாடுகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவருகின்றது. ஏற்கனவே இந்தியா ஈழத்து இளைஞர்களுக்கு ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அளித்து மிகக் கோரவிளைவை ஏற்படுத்தியது. அதன் வடுவே ஆறுவதற்கு முன் மீண்டும் ஒரு ஆயுதப் பயிற்சி முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனப் பல்கலைக்கழகம் புலமைப் பரிசில் வழங்கி அம்மாணவர்கள் சீனாவில் கற்கை நெறியைத் தொடர ஏற்பாடு செய்தது. இந்தியா யாழில் உள்ள தனது முகவர்களுடாக – தமிழ் ஊடகங்கள் இந்தியாவின் ஏஜென்டுகளாகவே செயற்படுகின்றன. காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் அதனை எள்ளிநகையாடினார். ஆனால் பேராசிரியர் சந்திரசேகரம் இவ்விவகாரத்தை நிதானம் தவறி கையாண்டு மொக்கையீனப்பட்ட ஒலிப்பதிவு தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது.

இந்தியா தற்போது பலாலி விமானப் போக்குவரத்து ராமேஸ்வரம் – மன்னார் கப்பல் போக்குவரத்து என வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் மும்முரமாகி உள்ளது. மோடியின் கோமயத்தில் இருந்து அனைத்துக் கழிவுகளும் வடக்கு கிழக்கில் கொட்டப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே வடக்கு கிழக்கில் மதவாதம் மிக மோசமடைந்து கொண்டு வருகின்றது. மேலும் சினிமாவின் தாக்கமும் வாள்வெட்டுக்களும், போதைப்பொருள் கடத்தல்கள், கடற்கரையோர ஆக்கிரமிப்புகள் என ஏற்கனவே இந்திய அரச செயற்பாடுகள் எதுவுமே தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக அமையவில்லை.

ஈழத் தமிழர்கள் என்றும் இந்திய மக்களின் நண்பர்கள். ஆனால் இந்திய அரசு தமிழர்களினதும் இலங்கையர்களினதும் எதிரியாகவே இப்போது வரை செயற்படுகின்றது.

இலங்கை மக்கள்: சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீகள் எல்லோருமே என்றுமில்லாதவாறு இந்தியாவின் ஆக்கிரமிப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆக்கிரமிப்பில் முதலில் அழிந்து போவது ஈழத்தமிழரின் அடையாளமாகவே இருக்கும். 1970க்களில் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்ட போது தமிழ் இலக்கியம் வளர்ந்தது, தமிழ் சினிமா உருவானது, தமிழர்கள் தன்னிறைவாகவும் வசதி படைத்தவர்களாகவும் மாறினர். ஆனால் இந்தியா எங்களை நோக்கி வர வர எங்களுக்கு கிடைப்பதெல்லாம் மூன்றாம்தர கலாச்சாரம், மூன்றாம் தர எழுத்துக்கள், ஆயுதங்கள், போதைவஸ்து, மற்றும் கழிவுகள் தான். இந்த ஆக்கிரமிப்பின் முதற்கட்டத்திலேயே குஜராத்தில், ஆயோத்தியில் நிகழ்ந்ததன் இரத்தவாடை அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அதனால் எங்களுக்கு வேண்டாம் உங்கள் மோடியின் கோமயம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *