“இலங்கைக்கே நெல் வழங்கும் நிலமாக வடக்கை மாற்றுவேன் என கூறிய ஜனாதிபதி ரணில்” – நெல் உலர வைக்க கூட தளம் இல்லாமல் திணறும் கிளிநொச்சி விவசாயிகள்!

இலங்கையின் நெல் விவசாய உற்பத்தியை பொருத்தவரையில் கனிசமானளவான உற்பத்தியை வழங்குகின்ற பகுதியாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது. இரணைமடு குளமும் அதனோடு இணைந்த மண்வளமும் இப்பகுதியில் அதிகப்படியான நெல் உற்பத்திக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

முப்பது வருட போர்க்காலத்தில் கூட விவசாயம் நல்ல நிலையில் நடைபெற்ற நிலமாக கிளிநொச்சி காணப்படுகின்றது.

அண்மைய நாட்களில் நெல் அறுவடை முடிவடைந்துள்ளதால் கிளிநொச்சி மாவட்டத்தின் தெருக்களிலும் – புதிய பேருந்து நிலையத்திலும் (இயங்காது உள்ளது) நெல் காயப்போடுவதை அவதானிக்க முடிகின்றது.

இது இலங்கையின் பல பகுதிகளிலும் தொடர்கின்ற அவஸ்தை தான்.

உற்பத்தி செலவு , உரம் தொடர்பான செலவு, அறுவடை நேரம் பெய்த மழை அழித்த செலவு என விவசாயிகள் வாழ்க்கை மிக நட்டமான சூழலில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இவை போக நெல் உலர வைப்பதற்கான தளம் இல்லாமல் தமது அறுவடை நெல்லை மூட்டைகளாக்கி கட்டிக்கொண்டு பல கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பிரதான பாதைகளுக்கு கொண்டு செல்வதற்குள் விவசாயிகளுக்கு இன்னும் பெரிதான செலவுகள் ஏற்படுகின்றன.

கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பாதை தளத்தில் நெல்லை காயவைத்து விட்டு அமர்ந்திருக்கும் விவசாயிகள் சிலரிடம் நிலையை விசாரித்தால் அழாத குறையாக சுமையை இறக்கி வைக்கிறார்கள். ” உள்ளதே நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்குள் இயற்கையும் வாட்டி விடுகிறது. அறுவடை செய்த நெல்லை எனது கிராமத்தில் காய வைக்க நெல் தளம் வசதியாக – பெரிதாக இல்லை. ஊரில் இருக்கிற தளத்திலும் ஒருவர் காயவைக்கவே போதுமானது. வேறு வழியில்லாமல் இங்கு வரவேண்டியுள்ளது. இதற்கு பிரிதான செலவு. டிரக்டருக்கு தனியான காசு – உதவிக்கு வர்ர கூலிக்கு தனியான காசு – ஒரு நாள் முழுசா உழைப்பு இல்லாம இங்க காத்துக்கிடக்கனும். இப்படி நிறைய பிரச்சனைகள். மரத்தால விழுந்தவன மாடு மிதிச்சது போலத்தான் நம்ம நிலமை. இவ்வளவு கஷ்டத்துக்குள்ள நெல்லை விதைச்சு அறுவடை செய்து முடிஞ்சா காய வைக்குறதுக்காக படும் பாடு பெரும்பாடா இருக்குது. காய வைக்க கொண்டு வர்ர நெல் குறிப்பிட்டளவு சேதமாகிடுது. ரோட்டில காயப்போடுறதால நிறைய நெல் வீணாகுது. வேகமா ஒரு தளம் எல்லாருக்குமானதா அமைச்சு தந்தா நல்லம்”  என கூறி முடித்தார் அங்குள்ள பெரியவர்.

அண்மையில் கிளிநொச்சி வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவசாயிகளை சந்தித்து விட்டு இலங்கைக்கே நெல் வழங்கும் நிலமாக கிளிநொச்சியை மீண்டும் மாற்றுவேன் என கூறிவிட்டு சென்றுள்ள நிலையில் கிளிநொச்சி விவசாயிகள் படும் அவஸ்தை மிக மோசமானதாக மாறியுள்ளது.

முக்கியமாக கிளிநொச்சி; யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துடன் இணைந்துள்ளதால் பெரும்பாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்தே பாராளுமன்றம் செல்வோர் தொகை அதிகம் என்பதால் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பிரச்சினைகளை பேச யாருமே இல்லை. கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என பெயர் குறிப்பிடப்படும் சிலரும் புலி அரசியல் பேசவே நேரம் சரியாக உள்ளது. பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினைகளை கொண்டு செல்வதாக தெரியவில்லை.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரோ – விவசாய திணைக்களமோ இது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரிவதில்லை.

இலங்கை வரலாற்று காலத்தில் கீழைத்தேய தானியகளஞ்சியம் என குறிப்பிடப்பட்டதாக பாடப்புத்தகங்களில் தடித்த எழுத்துக்களில் மேற்கோள் காட்டுவதால் இலங்கையின் விவசாயம் வளரப்போவதில்லை.

ஒரு காலத்தில் அயல் நாடுகளுக்கு எல்லாம் நெல் வழங்கிய நாம் இன்று சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் நெல் கடன் வாங்கி கொண்டிருக்கின்றோம். இந்த நிலையை மாற்ற ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனித்தனியான கவனிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும்.

வடக்கின் பல இடங்களிலும் இதே பிரச்சினை நீடிக்கின்றது. விரைந்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படுத்தப்படுகின்ற தன்னிறைவே நாட்டின் பொருளாதார அடித்தளம் என்பதை உணர்ந்து இலங்கையின் அரசாங்கமும் – மாவட்ட செயலகங்களும் செயற்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *