இலங்கையின் இணைய செய்தி தளங்களிலும் – செய்தித்தாள்களிலும் பெரும்பாலும் முதல் பக்க செய்தியாக பேசப்பட்டு கொண்டிருக்க கூடிய மிக முக்கியமான விடயம் பழ. நெடுமாறன் அவர்களுடைய அறிவிப்பு.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உயிருடன் நலமாக இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இது நேற்றைய தினம் பெரிய பேசு பொருளாக மாறி இருந்தது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பிலேயே பல வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பழ. நெடுமாறன் என்னும் தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர் ஒருவரின் அறிவிப்பு – இதற்குப் பின்னுள்ள இந்தியாவின் அரசியல் ரீதியான திட்டம் – புலம்பெயர் புலித்தேசியவாத அமைப்புகள் பணம் சேர்ப்பதற்காக நடத்தக்கூடிய திட்டம் இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இவை தொடர்பில் வாய் திறக்க வேண்டிய – இந்த நேரத்திற்குள் அதற்கு பதில் வழங்கியிருக்க வேண்டிய இலங்கையின் தமிழ் தேசிய புலி அரசியல்வாதிகள் இன்னும் அமைதி காப்பது வேடிக்கையான விடயம்.
உண்மையிலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற தகவலை தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் கடந்த 13 வருடங்களாக அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் தரப்பில் இயங்கக்கூடிய அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் இந்த விடயம் தொடர்பில் வாய் திறப்பதே இல்லை. பாராளுமன்றத்தில் கூட விடுதலை புலிகள் பற்றி பேசி தமிழ் செய்தி நாளிதழ்களில் தங்களுடைய கடமையை நிறைவேற்றிக் கொள்கின்ற தமிழ் தேசிய பாராளுமன்ற அரசியல் தலைவர்கள் கூட பிரபாகரன் இருக்கின்றாரா..? இல்லையா? என்ற விடயம் தொடர்பில் வாய் திறப்பதில்லை.
காரணம் ஒன்றே ஒன்றுதான் தமிழ் மக்களை இன்னும் இன்னும் ஏமாற்றி – போலி தமிழ் தேசியம் பேசி அவர்களிடமிருந்து ஒட்டுமொத்தமான வாக்குகளை சுருட்டி கொள்ளத்தான் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இது தொடர்பில் வாய் திறப்பதில்லை.
பழ.நெடுமாறன் அவர்கள் முன்வைத்த இந்த கருத்து தொடர்பில் வடக்கில் இன்னமும் புலி அரசியலை பேசி தேர்தல் காலங்களில் ஓட்டு வாங்கிக் கொண்டிருக்கக் கூடிய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரர்களோ..? அல்லது பாராளுமன்றத்தில் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பற்றி பேசி தமிழ் தேசிய மக்கள் பாதையில் தான் பயணிப்பதாக காட்டிக் கொண்டிருக்கும் சி. ஸ்ரீதரன் அல்லது சி.வி விக்கினேஸ்வரன் தரப்பில் இருக்கும் புலிக்குட்டிகளோ ..? இது தொடர்பில் இதுவரை வாய் திறக்கவில்லை. கஜேந்திரர் குழுவில் இருக்கும் முக்கியமான சட்டத்தரணி ஒருவர் அவரிடம் கல்வி கற்று பல்கலைகழகம் சென்ற மாணவர்களிடம் தலைவர் இறுதியாக கைகாட்டிச்சென்ற கட்சி இது தான் என கூறினாராம். அந்தளவுக்கு தகவல் தெரிநிதவர்கள் எல்லாம் இங்கு இருக்கிறார்கள்.
இங்கு ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என பழ.நெடுமாறன் கூறுவதன் பின்புள்ள அரசியல் – பணம் கொள்ளை அடிக்கும் திட்டம் – இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஈழத்தில் இருக்கக்கூடிய முன்னாள் போராளிகளின் நிலை தொடர்பில் அதிகமாக சிந்திக்க வேண்டிய தேவையும் உள்ளது. இலங்கையில் உள்ளுராட்சி தேர்தல் ஒன்று நடைபெற உள்ள இந்த நிலையில் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில் ராஜபக்சர்களின் ஆட்சி காலம் முடிவடைந்துள்ளதால் தான் இந்த கருத்தை வெளியிடுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இதை காரணம் காட்டி தென் இலங்கையில் மீண்டும் தமிழர்கள் மீதான ஒரு இன ஒடுக்குமுறை கட்டமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இது தவிர சாதாரணமாகவே தமிழர் பகுதிகளில் நடைபெறக்கூடிய முக்கியமான உரிமை சார்ந்த போராட்டங்களில் புலனாய்வாளர்கள் அதிக அளவிற்கு ஊடுருவி மக்களை பயன்படுத்துவார்கள். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற இந்த தகவல் இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் அங்கவினர்களாகி – மீண்டும் ஒரு நம்பிக்கையான வாழ்க்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கக் கூடிய முன்னாள் போராளிகளுக்கு ஒரு ஆபத்தான சூழலை ஏற்படுத்தப் போகின்றது என்பதை அரசியலுக்காக இந்த கட்டுக் கதைகளை கூறி பிழைப்பு நடத்துபவர்கள் சிந்திப்பதில்லை.
இத்தனை அழிவுகளுக்குப் பின்னும் கூட எப்படி இந்த தமிழ் தேசியவாதிகளால் இன்னும் ஒரு போராட்டம் பற்றி சிந்திக்க முடிகின்றது…? 30 வருடப் போரினால் வன்னியில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, உள்ளிட்ட பல மாவட்டங்களில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, வறுமை நிலை அதிகரித்துள்ளது, அங்கவீனர்களின் தொகை அதிகரித்துள்ளது, யுத்தத்தால் அங்குமிங்கும் இடம் பெயர்ந்து கல்வியை தொலைத்த ஒரு மிகப்பெரிய இளைஞர் படை உருவாகியுள்ளது, இன்று இவர்களே போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்கள் என யாழ்ப்பாணத்து தமிழ்தேசிய ஊடகங்கள் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.
போரை ஆரம்பித்தவர்களும் சந்தோசமாக இருக்கிறார்கள் – போரை முடித்து வைத்தவர்களும் சந்தோசமாக தான் இருக்கிறார்கள்.
ஏன்.. தொலைத்தோம்..? எதற்காக தொலைத்தோம் என தெரியாது ஏதோ ஒன்றை தொலைத்து விட்டு எதிர்காலத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்த பின்பும் கூட எப்படி இந்த அரசியல்வாதிகளால் மீண்டும் ஒரு போருக்கு தயாராகுங்கள் என ஒரு அறிவிப்பை விடுத்து அதற்கு கைதட்டல்களும் பாராட்டுக்களும் வாங்கிக் கொள்ள முடிகிறதோ தெரியவில்லை..?
சரத் பொன்சேகா இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியது போல “பிரபாகரனின் பெயரைச் சொன்னால் மட்டுமே தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பல அரசியல்வாதிகளால் அரசியல் செய்ய முடியும்.” என்ற வார்த்தைகள் உண்மையிலேயே அர்த்தமுள்ளவை.
இதனைத் தமிழ் மக்களும் விளங்கிக் கொண்டு உணர்ச்சி அரசியலுக்கு அடிபணியாது – தங்களுக்கான உண்மையான தலைவர்களை அடையாளம் காண அடுத்தடுத்த தேர்தல்களில் முன் வர வேண்டும்.