குகநாதன் கைது – கடத்தல் விவகாரம் அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. தமிழகத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளினது செல்வாக்குடன் எஸ் எஸ் குகநாதனை தடுத்து வைத்து அவரிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டு உள்ளது. இக்கைது கடத்தல் நாடகத்தில் வை கோ வினதும் நெடுமாறனினதும் நெருக்கமான சட்டத்தரணிகள் ஈடுபட்டு இருந்துள்ளனர். அருள் சகோதரர்களின் ஊரவரும் நண்பரும் பல்லாயிரம் ஈரோக்கள் காணமல் போய்விட்டது என்று கணக்குக் காட்டியவருமான கஸ்பாரும் இச்சம்பவத்தடன் தொடர்புபட்டிருந்ததாக எஸ் எஸ் குகநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
குகநாதனை விடுவிக்க 20000 பவுண்ட் (15 லட்சம் இந்திய ரூபாய்) வழங்கப்பட்டது. இலங்கையில் இருந்து உண்டியல் செய்யும் ஒரு வர்த்தகர் மூலம் அனுப்பப்பட்ட பெரும்பகுதி பணத்தை கடன்பட்டு இப்போது செலுத்தி வருவதாக குகநாதன் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
எஸ் எஸ் குகநாதன் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளிலும் பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டு இருந்த போதும் ‘அவரின் குடும்பத்தாரிடம் அவருடைய குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றவே நிதி இருந்ததில்லை’ என எஸ் எஸ் குகுகநாதனின் நண்பரும் அவருடைய விவகாரத்தை சுமூகமாக தீர்க்க முற்பட்ட ஒருவர் தெரிவித்து இருந்தார். எஸ் எஸ் குகநாதன் மீது பல்வேறு பணப் பரிமாறல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவர் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு பணம் புரட்டுகிறார் எனக் கூறப்பட்ட போதும் அவரிடம் பணப் புழக்கம் இருக்கவில்லையென குகநாதனை விடுவிக்க 500 பவுண்களை தனது பங்காக செலுத்திய நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
குகநாதனை விடுவிக்க செலுத்திய இத்தொகையை கட்டி முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம் என திருமதி குகநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். ஏற்கனவே ஏற்பட்ட இழப்புகளால் இருக்கும் கடன்சுமையை இது மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது வேதனையைத் தெரிவித்தார்.
குகநாதனை விடுவிப்பது தொடர்பாக புலம்பெயர் குழுவில் சென்ற சிலர் தமிழக முதல்வரின் மகள் கனிமொழி உடன் நெருக்கமானவர்கள் மூலம் முயற்சி செய்ததாகவும் தற்போது தெரியவருகிறது. ஆனால் குகநாதன் விவகாரத்திற்கு பின்னால் இருந்தவர்களின் பலத்தை இவர்களால் மேவ முடியாததால் இம்முயற்சி கைவிடப்பட்டது. அதனால் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுவதே பாதுகாப்பானது என இவர்கள் குகநாதனின் மனைவிக்கு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் இவ்விவகாரம் இலங்கை அரசின் உயர்மட்டத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து இலங்கை அரசு டெல்லியில் உள்ள தனது தூதராலயம் ஊடாக அழுத்தங்களை வழங்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் குகநாதன் தங்களிடம் இல்லையென்றே தமிழக பொலிஸில் இருந்து தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது. அச்சமயத்தில் குகநாதனின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து இருக்கலாம் அல்லது உயிராபத்து நேரலாம் என்ற அச்சம் டெல்லி – கொழும்பு உயர் மட்டங்களில் இருந்துள்ளது.
2008 மார்ச் இறுதிப் பகுதியில் இலங்கைத் திரைப்பட இயக்குநர் துசார பீரிஸ் தமிழத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு பொலிஸாரின் தலையீட்டின் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தெரிந்ததே.
எஸ் எஸ் குகநாதன் விவகாரத்திலும் ‘இலங்கை அரச ஆதரவாளர் ஒருவரைப் பிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியிலேயே அவர்கள் இருக்கின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. தனிப்பட்ட விடயத்தையும் அரசியலுடன் இணைத்து அதனை நியாயப்படுத்துவதற்கான காரணங்களையும் அருள் சகோதரர்கள் மேற்கொண்டு உள்ளனர்.
அவர்களின் உரையாடல்களில் ‘அரச உளவாளியைக் கைதுசெய்துள்ளோம் என்று ஒரு இணையத்தைத் திறந்து விட்டால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இதிலும் பார்க்க பல லட்சங்களைத் தருவார்கள்’ என்றெல்லாம் உரையாடப்பட்டு உள்ளதாக எஸ் எஸ் குகநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். ’20 000 பவுண்களை வெஸ்ற்றன் யூனியன் ஊடாக அனுப்புகிறோம். இவனை விட வேண்டாம் என்றெல்லாம் தொலைபேசிகள் வந்தது’ என்றும் எஸ் எஸ் குகநாதன் தெரிவித்தார்.
‘அவர்களிடம் உள்ள விடியோவை அவர்கள் உண்மையானவர்கள் என்றால் வெட்டிக்கொத்தாமல் வெளியில் விட்டால் உண்மைகள் பெரும்பாலும் தானே வெளிவரும்’ என்று தெரிவித்த குகநாதன் தமிழக கொமிஸ்னர் அலுவலகத்திற்கு முன்னுள்ள ஹொட்டலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூம் எடுத்து தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக திருமதி குகநாதனின் ஒலிப்பதிவு ஒன்றை இனியொரு இணையத்தளம் வெளியிட்டு இருந்தது. இதன் ஊடக நியாயம் பற்றி தேசம்நெற் இல் கேள்வி எழுப்பி இருந்தோம். அதற்கு இனியொரு ஆசிரியர் சபாநாவலன் திருமதி குகநாதனின் அனுமதியுடனேயே அதனை வெளியிட்டதாகக் கூறியிருந்தார்.
ஆனால் அதனை திருமதி குகநாதன் முற்றாக மறுத்துள்ளார். தன்னிடம் இனியொரு ஆசிரியர் அவ்வாறு எந்த அனுமதியையும் பெறவில்லை என்றும் இது பதிவு செய்யப்படுவது தெரிந்திருந்தால் தான் அவருடன் பேசியிருக்கவே மாட்டேன் என்றும் தெரிவித்தார். தன்னை நடுஇரவு தூக்கத்தில் எழுப்பி அதனைப் பதிவு செய்து தனது அனுமதியின்றியே அவர் அதனைப் பிரசுரித்து உள்ளதாகவும் திருமதி குகநாதன் குற்றம்சாட்டினார்.
தான் எந்த விவகாரத்திலும் முன்னிலைக்கு வரவிரும்புவதில்லை எனக் குறிப்பிட்ட அவர் இவ்விவகாரத்தில் தன்னையும் தங்களது நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக வேதனைப்பட்டார்.
இச்சம்பவம் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் புலிகள் மீது விமர்சனம் உடையவர்களை தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுள்ள தமிழ் தேசியவாத சக்திகள் தங்கள் சுயலாபங்களுக்கு பயன்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக செயற்படுகிறோம் என்ற அரசியல் மூலம் தமிழக மார்க்ஸிய அமைப்புகளிடையே செல்வாக்குப் பெறவும் இதனைச் சிலர் பயன்படுத்தலாம் என்ற நிலையும் இப்போது ஏற்பட்டு உள்ளது.
._._._._._.
டான் ரிவி உரிமையாளர் குகநாதன் – அருள்சகோதரர்கள்: கடத்தல் – கைது விவகாரம்: ‘இது ஒரு சட்டபூர்வமான கடத்தல்’ எஸ் எஸ் குகநாதன்
‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ ஏன்று ஆரம்பித்த இனியொரு இணையம் தற்போது டான் தொலைக்காட்சி ஊடக உரிமையாளரும் வர்த்தகருமான எஸ் எஸ் குகநாதன் கைது செய்யப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா?: என்ற விவாதத்திற்கான வெளியாகி நிற்கின்றது. தான் கைது செய்யப்பட்டதாகவும் சொல்ல முடியாது, கடத்தப்பட்டதாகவும் சொல்லிவிட முடியாது. இது கைது பாதி, கடத்தல் பாதி இரண்டும் சேர்ந்து ‘சட்டப்படி கடத்தப்பட்டேன்’ என்று தெரிவிக்கிறார். மேற்படி கைதை அல்லது கடத்தலை முன்னின்று மேற்கொண்ட அருள் சகோதரர்கள் (அருள்செழியன் – அருள்எழிலன்) இது முற்றிலும் சட்டப்படி மேற்கொண்ட நடவடிக்கை என்றும் எஸ் எஸ் குகநாதன் தங்களால் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு பொலிஸாரினால் சட்டப்படி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக அருள் சகோதரர்கள் சபாநாவலன் ஆகியோரின் பதிவுகளை முழுமையாகக் காண:
“Fake Encounter ரயாகரன்” – எமது சமூகத்தின் புரையோடிப்போன புண்கள் : சபா நாவலன் inioru.com/?p=16707
குகநாதன் – நடந்தது என்ன..? : குகநாதன் – நடந்தது என்ன..? inioru.com/?p=16752
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள். எஸ் எஸ் குகநாதனால் குற்றம்சாட்டப்படும் அருள் சகோதரர்களில் ஒருவரான அருள்எழிலன் மற்றும் சபாநாவலன் ஆகியோர் இனியொரு இணையத்தளதின் முக்கியஸ்தர்கள். முன்னையவர் இனியொரு தளத்தின் முக்கிய கட்டுரையாளர். பின்ணையவர் இனியொருவின் ஆசிரியர். இவர் பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட புதிய திசைகள் அமைப்பினதும் முக்கிய உறுப்பினர். சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் பின்னணி காரணமாகவும் பெரும்தொகை (15 லட்சம் இந்திய ரூபாய்கள்) கைமாறப்பட்டு உள்ளதாலும் இவ்விடயம் அரசியல் முக்கியத்துவம் உடையதாகவும் மாறி உள்ளது. மேலும் அருள் சகோதரர்களில் மற்றையவர் அருள்செழியன் தமிழகத்தின் முன்னணி ஊடகங்களில் பணியாற்றியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தை நேர்காணுவதற்காக லண்டன் வந்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குகநாதன் தனக்குத் தரவேண்டிய வஞ்சகச் சூழ்ச்சியால் ஏமாற்றிய பலலட்சம் ரூபாய்களை அவரிடம் இருந்து பெறவும் அவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கவுமே தான் சட்டப்படி குகநாதனைக் கைது செய்யும் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாக அருள்செழியன் தெரிவித்திருந்தார். இக்கைது விவகாரத்தின் பிரதான கதாநாயகனும் இவர்தான். ‘’வாழ்வின் ஒட்டு மொத்த சேமிப்புகளையும் குகநாதனிடம் இழந்த ஒருவரான அருள்செழியன் அவரது தனிப்பட்ட திட்டங்களினாலும் சட்ட ரீதியான போராட்டங்களினாலும் மட்டுமே குகநாதனைப் பிடித்தார். இதற்கும் வேறு எவர் ஒருவருக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.’’ என்கிறார் அருள்எழிலன்
தன்மீதான இக்குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ள குகநாதன் தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் அருள்சகோதரர்களின் அரசியல் செல்வாக்கு அதன் மூலமான அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றினைப் பயன்படுத்தி அந்நிய மண்ணில் தன்னை சட்டப்படி கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கின்றார். இக்கடத்தல் சம்பவம் பற்றி இனியொரு இணையத்தள ஆசிரியர் சபாநாவலன் எழுதிய பதிவு ‘அப்பட்டமான பொய்’ என்றும் தெரிவிக்கின்றார். ‘’குகநாதன் தான் பெருந்தொகையான பணம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஆனால் அதனைக் கொடுப்பதற்கு தன்னிடம் போதிய வசதிகள் இல்லை என்றும் என்னை அவர்களை சமாதானப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்’’ அதனாலேயே தான் இவ்விவகாரத்தில் தலையிடவேண்டி ஏற்பட்டதாக இனியொரு ஆசிரியர் சபாநாவலன் தனது இணையத்தில் பதிவுசெய்து உள்ளார். எதேச்சையாக அருள்எழிலனுக்கு போன் செய்தபோது அவர் குகநாதனிடம் தொலைபேசியைக் கொடுத்து கதைக்கச் சொன்னபோதே இத்தொடர்பு ஏற்பட்டதாகவும் சபாநாவலன் எழுதியுள்ளார்.
ஆனால் எஸ் எஸ் குகநாதனின் வாக்கு மூலம் அதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. சட்டப்படி கடத்தி வைக்கப்பட்ட தன்னிடம் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு தப்பிக்கொள்ளுங்கள் என சபாநாவலன் கூறியதாக எஸ் எஸ் குகநாதன் தெரிவிக்கின்றார். எஸ் எஸ் குகநாதனின் இந்த சட்டப்படியான கடத்தலுடன் சபாநாவலனும் தொடர்புபட்டதாகவும் சட்டப்படி கடத்தியவர்கள் பணத்தைப் பெறுவதற்கு ஏதுவாக பொறுப்பு நிற்கக் கூடியவர்களை சபாநாவலனே முன்மொழிந்ததாகவும் குகநாதன் குற்றம்சாட்டுகின்றார்.
இவ்விவகாரம் இவ்வாறான வாதப் பிரதிவாதத்தில் நிற்க அருள் சகோதரர்கள் இவ்விடயத்தை நாவலாக வெளியிடப் போவதாக அறிவித்தனர். தற்போதே தங்களுக்கு நாவலின் பிரதிகளுக்கான கட்டளைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிவதாகவும் அறிவித்துள்ளனர். ‘நாவல் ஒன்றுக்கு நான் கருப்பொருளானதில் மகிழ்ச்சியே’ என்று தெரிவித்துள்ள எஸ் எஸ் குகநாதன் அடுத்த ‘புக்கர் பிரைஸிற்கான’ ஆன நாவலாக இது இருந்தால் மேலும் சந்தோசப்படுவேன் என்ற வகையில் கருத்துத் தெரிவித்தார்.
._._._._._.
குகநாதன் – அருள்சகோதரர்கள் : கடத்தல் – கைது விவகாரத்தை அடுத்து குகநாதன் குறிப்பிட்ட சட்டப்படியான கடத்தலுடன் தொடர்புடைய அருள்சகோதரர்கள் சபாநாவலன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை இனியொரு இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக முதற் தடவையாக எஸ் எஸ் குகநாதன் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.
சட்டப்படி கைது செய்யப்பட்ட அல்லது சட்டப்படி கடத்தப்பட்ட எஸ் எஸ் குகநாதன் உடன் நேர்காணல்:
தேசம்: நீங்கள் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டீர்களா அல்லது சட்டவிரோதமாக கடத்தப்பட்டீர்களா?
குகநாதன்: அருட்செழியன் என்பவர் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறிய பொலிசார், சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது புகார் பிரதியை எனது சட்டத்தரணி கேட்டபோது கூட காட்டத் தயாராக அவர்கள் இருக்கவில்லை. சட்டப்படி கைது செய்திருந்தால் 24 மணி நேரத்தில் என்னை நீதிமன்று ஒன்றில் ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யப்படவில்லை. அதிலிருந்து நடந்தது என்ன என்பதை புரிந்துகொள்ளலாம். இது ஒரு சட்டபூர்வமான கடத்தல் என்றும் செல்லலாம்.
தேசம்: இச்சம்பவத்தின் பின்னணி என்ன?
குகநாதன்: ரிஆர்ரி தொடங்கிய (1997) காலத்திலிருந்து அருட்செழியன் எமக்காக சென்னையில் பணியாற்றியவர். நான் ரிஆர்ரியிலிருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் டான் தொலைக்காட்சியை நடாத்திக் கொண்டிருந்தபோதும் எனக்கு சென்னையில் நிகழ்ச்சிகளைப் பெறுவதற்கு உதவியவர். 2003ம் ஆண்டு நாம் 6 தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பித்தபோது வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவாறு எமக்கும் பணியாற்றினார். அவ்வாறு பணியாற்றிய காலத்தில் எம்மிடமிருந்து அவருக்கு இந்திய ரூபாய் 55 லட்சம் செலுத்தப்பட்டது. அதிலிருந்து அவர் எமக்கான சேவையை செய்து கொண்டிருந்தார். 18 மாதங்களின் பின்னர் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியேற வேண்டியேற்பட்டது. இதனையடுத்து எமக்கு சொந்தமான உபகரணங்களை நான் புதிதாக நியமித்தவரிடம் கொடுக்குமாறு கேட்டபோது அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். அதனையடுத்து அந்த உபகரணங்களை அவரிடமிருந்து சட்டபூர்வமாகப் பெறுவதற்காக நான் அண்ணா சக்தி என்ற ஒருபத்திரிகையாளருக்கு அட்டோனி பவர் கொடுத்தேன். அவர் பொலிசில் இதுகுறித்து முறைப்பாடு செய்ததன்பேரில் அவர் அனைத்து உபகரணங்களையும் 3 லட்சம் ரூபா பணத்தினையும் அவரிடம் வழங்கியிருந்தார். இவை நடைபெற்றது 2005ம் ஆண்டில். அண்ணா சக்தி என்ற அந்தப் பத்திரிகையாளரைக் கூட எனக்கு அறிமுகம்செய்து வைத்தவர் வேறுயாருமல்ல, அருட்செழியனால் எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட அவரது நெருங்கிய உறவினரான ஒரு சட்டத்தரணிதான்.
இப்போது அவர் வழங்கியதாகக் குறிப்பிடப்படும் புகாரில், நான் அவருக்கு வழங்கிய 55 லட்சம் ரூபாவும் எனக்கு செலவிடப்பட்டதாகவும், அதனுடன் மேலதிகமாக 6 லட்சம் ரூபாவை தான் தனது சொந்தப்பணத்தில் செலவிட்டதாகவும், அதுதவிர தனக்கு 18 மாதம் சம்பளம் தரப்படவில்லை என்றும் தனக்கு மாதம் 50 ஆயிரம் சம்பளமாக நான் தருவதாக கூறியதாகவும் அதன்படி 9 லட்சம் சம்பளம் தரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொலிசார் என்னிடம் தெரிவித்தனர். அண்ணா சக்தி என்பவர் பொலிசாரின் துணையுடன் தன்னை கட்டப்பஞ்சாயத்து நடத்தியே தன்னிடமிருந்து பணத்தையும் உபகரணங்களையும் பெற்றுக்கொண்டதாகவும் அவர் அந்தப் புகாரில் தெரிவித்ததாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.
சில ஆயிரம் ரூபாக்கள் சம்பளத்தில் ஏற்கனவே வேறு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே எனக்கும் பணியாற்றிய அருட்செழியன் என்னிடம் எவ்வாறு 50 ஆயிரம் சம்பளம் கேட்டார் என்பது மற்றுமொரு தனிக்கதை. அவர் லண்டன் வர விரும்பியபோது, அவர் விசா பெறுவதற்காக அவர் எமது நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் அவருக்கு 50 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதனையே அவர் பொலிசாரிடம் கொடுத்து 9 லட்சம் ரூபா சம்பளம் கோரியிருந்தார்.
தனக்கு 15 லட்சம் ரூபா நான் தரவேண்டும் என்பதும் ஆனால் சமாதானமாக பேசுவதென்றால் 25 லட்சம் தரவேண்டும் என்றும் அவர் பேரம்பேசத் தொடங்கினார்.
தேசம்: இச்சம்பவம் எப்போது நடந்தது? எப்படி முடிவுக்கு வந்தது?
குகநாதன்: ஆகஸ்ட் 2ம் திகதி பிற்பகல் 3 மணியளவில் பொலிசார் என்னை அழைத்துச் சென்றனர். 3ம் திகதி இரவு 10 மணியளவில் வீடுசெல்ல அனுமதித்தனர். 5ம் திகதி கொழும்பு திரும்பினேன். அவர் நான் தரவேண்டும் என்று கூறியிருந்த 15 லட்சம் ரூபா வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை (மன்னிக்கவும் கைது அல்ல கடத்தல் விவகாரம்) முடிவுக்கு வந்தது.
தேசம்:அருள்செழியன் நீங்கள் தன்னை வஞ்சகமாக ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டி உள்ளார்? இதன் பின்னணி என்ன?
குகநாதன்: வஞ்சகம் என்பதற்கு தமிழ்நாட்டில் என்ன அர்த்தம் என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதனால் நான் அவரை வஞ்சகமாக ஏமாற்றியதாகவே வைத்துக்கொள்வோம். அப்படி நான் அவரை ஏமாற்றியிருந்தால், அவர் இது தொடர்பாக 2005 முதல் 2006 கடைசிவரை சென்னையில் அசோக் நகரில் அலுவலகத்தை வைத்து நான் அங்கேயே தங்கியிருந்து டான் தொலைக்காட்சியை நடாத்திய காலத்தில் அவர் ஏன் என்மீது இந்தப் புகாரைத் தெரிவிக்கவில்லை. அல்லது தெரிவித்திருந்தால் பொலிசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 5 வருடங்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம். நான் வஞ்சகம் செய்தது 5 வருடங்களின் பின்னர் தான் அவருக்கு தெரியவந்ததா?.
தேசம்: உங்களை சுவாரஸ்யமான நாடகம் ஒன்றை அரங்கேற்றி உங்கள் செலவிலேயே சென்னைக்கு வரவழைத்ததாகக் அருள்செழியன் குறிப்பிடுகின்றார்?
குகநாதன்: சென்னைக்கு நான் சென்றிருந்தது எனது சொந்த விடயமாக. நான் இப்போது மட்டுமல்ல, இந்த வருடத்தில் மாத்திரம் 6 தடவைகள் சென்னை சென்று வந்திருக்கின்றேன். அவர் என்ன நாடகம் நடத்தினார் என்பது எனக்கு தெரியவில்லை. நான் சென்னை செல்வது எனது செலவிலேயே தவிர வேறு யாருடையை செலவிலும் அல்ல.
தேசம்: இச்சம்பவத்தை நாவலாக எழுதவுள்ளதாக அருள்செழியன் தெரிவித்துள்ளார்?
குகநாதன்: நாவல் ஒன்றுக்கு நான் கருப்பொருளானதில் மகிழ்ச்சியே.
தேசம்: ”அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன் என்னிடம் உதவி கேட்பதற்கு எந்தத் தார்மீக நியாயமும் இல்லை” என சபாநாவலன் எழுதியுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கும் சபாநாவலனிற்கும் என்ன சம்பந்தம்?
குகநாதன்: எனக்கு அருட்செழியனைவிட சபா நாவலனின் எழுத்து மீதே வெறுப்பு ஏற்படுகின்றது. அவர் தனது இனியொரு இணையத்தளத்தில் எழுதியிருப்பது அப்பட்டமான பொய். நான் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சில நிமிடங்களில் அருள்செழியனின் சகோதரர் அருள்எழிலன் தனது தொலைபேசியை என்னிடம் கொண்டுவந்து தந்தார். எனக்கு தெரிந்த ஒருவர் பேசவேண்டுமாம் என்றே அவர் தனது கைத் தொலைபேசியை என்னிடம் தந்தார். நான் ஹலோ என்றதும் அவர் தன்னை சபா நாவலன் என்று அறிமுகம் செய்துகொண்டார். (அது சபா நாவலன் தானா அல்லது வேறுயாருமா என்பது கூட எனக்கு தெரியாது. ஏனெனில் அதற்கு முன்னர் அவர் குரலை நான் அறிந்திருக்கவில்லை) அப்போது நான் அவரை அறிந்திருக்கின்றேன் ஆனால் நேரில் கண்டதில்லை என்று ஆரம்பித்ததும், அவர் கூறியது இதுதான்:
‘அரசாங்கத்தின் ஆதரவாளர் ஒருவரை கைதுசெய்துவிட்டோம் என்றுதான் அவரது (செழியனின்) சட்டத்தரணிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகின்றது. நீங்கள் ஏதாவது கொடுத்துவிட்டு தப்பிக்கப் பாருங்கள்”.
எனக்கு முன் பின் தெரியாத ஒருவரிடம் எதுவும் விவாதிக்கவோ அல்லது கருத்துக்கூறவோ அப்போது முடியாததால், ‘நானும் அப்படித்தான் யோசிக்கின்றேன்” என்று அவரிடம் பதிலளித்தேன்.
பின்னர் அவர், ‘பாரிசில் சுபாசிடம் கதைத்தீர்களா?” என்று கேட்டார். எனக்கு சுபாசை தெரிந்திருந்தாலும் அவரிடம் அப்போது கதைக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.
நான் கதைக்கவில்லை. உதயகுமாருடன் மட்டுமே நான் பேசியதாக நான் கூறியபோது, அவராகவே சுபாஸ் பொறுப்பு நின்றால் நான் அவர்களிடம் சொல்கின்றேன் என்றார். நான் அதற்கு தேவைப்பட்டால் கேட்கின்றேன் என்று கூறிவிட்டு தொலைபேசியை எழிலனிடம் கொடுத்துவிட்டேன்.
இப்படி நடக்கவில்லை என்றால், நான் சொல்வது பொய்யா அல்லது சபா நாவலன் சொல்வது பொய்யா என்பதை அருட்செழியனிடமுள்ள வீடியோ வெளிவருகின்றபோது தெரிந்துகொள்ளலாம்.
குகநாதன் அவரிடம் உதவி கேட்பதற்கு தார்மீக உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குகநாதன் கேட்காமலே உதவுவதற்கு சபா நாவலன் முன்வந்தார் என்பதை நிரூபிக்க சட்டப்படி கடத்தப்பட்ட என்னிடம் எதுவும் இல்லை.
என்னுடன் இவ்வாறு பேசியவர், அப்போது அங்கே இருந்த இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், டான் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியுமான திரு. சல்தான் அவர்களிடமும் பேசியதாக பின்னர் அறிந்துகொண்டேன். அவருக்கு அவர் கூறியது இதுதான்:
‘நீங்கள் தான் மகிந்த அரசு எல்லாம் நல்லாக செய்கிறது என்று கூறுகின்றீர்களே ராஜபக்சவிடம் வாங்கிக் கொடுக்கலாம் தானே.”
அருள்செழியன் கேட்பது நியாயமானதுதானா? என்பதை அறியாமல் அவருக்கு பணத்தைக் கொடுங்கள் என்று சொல்வதற்கு சபா நாவலனுக்கு எந்த அருகதையும் இல்லை.
தேசம்: ”குகநாதனிடம் அவர் இலங்கை அரசின் ஊதுகுழல் என்பதால் இச் சம்பவத்தில் தலையிட விரும்பவில்லை என்பதைக் கூறியிருந்தேன். இலங்கை அரசின் பாசிசத்திற்கு எதிராக எழுதும் நான் இலங்கை செல்ல முற்பட்டால் குகநாதன் இன் வாக்குமூலங்களோடு இலங்கை அரச படைகள் என்னைக் கைது செய்யலாம்.” என சபாநாவலன் குற்றம்சாட்டுகிறார். இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்டு உள்ள அனைவருமே ஏதோ ஒருவகையில் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள். அப்படி இருக்கையில் இவ்வாறான ஒரு மோசமான சூழல் தேவையானதா?
குகநாதன்: அருள்செழியனின் என்மீதான புகார் தவறானது என்பதை நான் நிரூபிப்பது பெரிய விடயமல்ல. ஆனால் நான் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வதெனில் பொலிசார் என்னை நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும். அப்படி ஆஜர்படுத்தினால் நீதிமன்றம் எனது பாஸ்போட்டை தன்வசப்படுத்தும், நான் பிணையில் வந்தாலும் அந்த வழக்கு முடியும்வரை இந்தியாவில் நின்றிருக்க வேண்டி வரும். இவற்றைத் தவிர்க்குமாறு எனக்கு வேண்டிய சிலர் ஆலோசனை கூறினார்கள். நான் ஒரு வாரம் இந்தியாவில் நின்றிருந்தாலும் கொழும்பில் எனது நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுவிடும். அதனால் அவர் கோரிய பணத்தை கொடுத்துவிட்டு பிரச்னையிலிருந்து விடுபடுவது என்று முடிவெடுத்தேன்.
அருள்செழியன் கோரிய 15 லட்சம் ரூபாவையும் ஒரேநாளில் செலுத்துவது சிரமமானதாக இருந்ததால், உடனே 10 லட்சமும் மிகுதி 5 லட்சத்தையும் ஒருமாதத்தில் செலுத்துவதாகவும் முடிவானது. அந்த 5 லட்சத்தை ஒரு மாதத்தில் பெறுவதற்கு யாரேனும் ஒருவரை ஐரோப்பாவில் பொறுப்பு நிற்கச் சொல்லுங்கள் என்று அவர்கள் கேட்டபோது, முதல்நாள் சபா நாவலன் கூறியது எனது ஞாபகத்திற்கு வந்தது. இதனால் மனைவியிடம் கூறி முதலில் சுபாஸ் பொறுப்பு நிற்பாரா என்று கேட்கச் சொன்னேன். (ஏனெனில் என்னுடன் தொலைபேசியில் எனது மனைவி மட்டுமே கதைக்க அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரெஞ்சு பொலிசார் மட்டுமன்றி பிரான்ஸ் லியொன் நகரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இன்ரர்போல் பொலிசார் கூட என்னுடன் கதைக்க சென்னை பொலிசார் அனுமதி வழங்கவில்லை.). தான் பொறுப்பு நின்றால் சபா நாவலன் பொறுப்பு நிற்பார் என்றால் அதற்கு நான் தயார் என்று சுபாஸ் கூறியதும் சபா நாவலனிடம் எனது மனைவி தொடர்புகொண்டார்.
மறுநாள் 10 லட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து மிகுதி பற்றி கதைத்தபோது சபா நாவலன் தான் பொறுப்புநிற்க மறுத்துவிட்டதாகவும், பிரான்சிலிருந்து அசோக் பொறுப்பு நின்றால் தங்களுக்கு சரி என்றும் அவர்கள் கூறினார்கள்.
குகநாதனுக்கு பிரான்சில் எப்படி செல்வாக்கு இருக்கிறது என்று பார்ப்போம். எங்கே அசோக்கிடம் கதைத்து அவரை எமக்கு கதைக்கச் சொல்லுங்கள் என்றார்கள்.
அசோக் இது போன்ற விடயங்களுக்கு பொறுப்புக்கு நிற்கமாட்டார் என்பதை அவர்கள் மட்டுமல்ல, நானும் நன்றாக அறிவேன். இருந்தாலும் கேட்டுப்பார்ப்பதில் தவறில்லை என்பதால் மனைவியிடம் அசோக்கிடம் கதைக்குமாறு கூறினேன்.
ஆச்சரியமாக இருந்தது. கூடவே மகிழ்ச்சியாகவும் இருந்தது. அசோக் தான் உடனே எழிலனுடன் கதைப்பதாக கூறினார்.
அப்போது எழிலன் அங்கிருக்கவில்லை. சில நிமிடங்களில் அருள்செழியனுடன் தொடர்புகொண்ட எழிலன், அசோக்கிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் தன்னை இந்த விடயத்திற்குள் இழுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்து விட்டதாக எழிலன் கூறியதாக செழியன் கூறினார்.
ஆனால் அசோக் எம்மிடம் கூறியது, தான் தொலைபேசி எடுத்ததும் எழிலன் தன்னிடம் கூறினாராம், இந்த விடயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று. எழிலன் பொய் கூறினார் என்றே நான் நிச்சயமாக நம்புகின்றேன்.
தேசம்: இச்சம்பவத்தினுடைய பின்னணியில் அரசியல் செல்வாக்கு அல்லது அதிகார துஸ்பிரயோகம் என்பன பயன்படுத்தப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா?
குகநாதன்: நிச்சயமாக. அதுகுறித்து நேரம் வரும்போது பேசுவேன்.
தேசம்: நீங்கள் கடத்தப்பட்ட சூழலில் அல்லது கைது செய்யப்பட்ட சூழலில் உளவியல் ரீதியாகவோ உடலியல் ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டீர்களா?
குகநாதன்: உடல்ரீதியாக அல்ல. ஆனால் உள ரீதியாக.
அப்போது எனக்கு ஞாபகம் வந்ததெல்லாம், முதன்முதலில் அருள்செழியனை ஐரோப்பா அழைத்துவந்தபோது காரில் பிரான்சிலிருந்து ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது விரைவு பாதையில் உள்ள தரிப்பிடம் ஒன்றில் தரித்து நின்றபோது அவர், என் முன்னே மண்டியிட்டு ‘’அண்ணே….. இப்படியெல்லாம் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்திருந்தவனல்ல. இவற்றைக் காட்டிய உங்களை……’’ என்று இவர் மனமுருகிய காட்சி தான் எனக்கு ஞாபகம் வந்தது.
நான் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதும் பொலிசார் முதல்முதலில் செய்தது பத்திரிகைக்கு செய்தி எழுதியதுதான். நான் மண்டியிட்டு மன்றாடியதாக அருட்செழியன் ஒரு தளத்தில் எழுதியிருக்கிறார். கூடவே தன்னிடம் வீடியோ பதிவும் இருக்கிறது என்கிறார். அதனை பார்க்க நான் ஆவலாக இருக்கின்றேன். நண்பர்கள் சிலர் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள் என்று ஆலோசனை கூறியிருக்காவிட்டால் நிச்சயமாக சட்டரீதியாகவே எதிர்கொண்டிருப்பேன். அப்படியிருக்கையில் மன்றாட வேண்டிய தேவை எனக்கு இல்லை.
சம்பவம் நடைபெறுவதற்கு முன்னரும் பின்னரும் யார் யாரெல்லாம் செழியன், எழிலன் ஆகியோரின் கைத் தொலைபேசிகளுக்கு கதைத்தார்கள் என்ற விபரமும் தற்போது என்னிடம் இருக்கின்றது. இதுபற்றி பின்னர் எழுதுவேன்.
._._._._._.
குகநாதன் – அருள்சகோதரர்கள் : கடத்தல் – கைது விவகாரம் தொடர்பில் சில குறிப்புகள்
1. இச்சம்பவம் முற்றிலும் அருள்செழியன் – எஸ் எஸ் குகநாதன் சம்பந்தப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயம். இவர்களில் எவரும் புரட்சிகரமான நிறுவனங்களுக்கு பணிபுரிந்தவர்கள் அல்ல. இருவருமே ஒன்றாக இணைந்து வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்கள். தற்போது அது தொடர்பான சர்ச்சையில் இறங்கி உள்ளனர். இவர்கள் ஆளுக்கு ஆள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டவரம்பிற்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும்.
2. ‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ என்ற இலக்கு நோக்கிச் செயற்படும் இனியொரு இணையம், புதிய திசைகள் அமைப்பு (அவர்களும் ஒரு இணையத்தை குரல்வெப் என்ற பெயரில் செயற்படுத்துகின்றனர். சன்றைஸில் வானொலி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துகின்றனர்.) இச்சம்பவத்துடன் எவ்வித தொடர்பும் அற்றதாக இருந்திருந்தால் இவ்விடயத்தை உடனடியாக வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இச்சம்பவம் இடம்பெற்றது ஓகஸ்ட் 02 2010ல். இச்சம்பவத்தை தமிழ்அரங்கம் வெளிக்கொண்டுவந்தது சரியாக ஒரு மாதத்தின் பின்னர் செப்ரம்பர் 02 2010ல். நிர்ப்பந்தத்தின் பெயரில் இனியொரு ஆசிரியர் சபாநாவலன் பதில் எழுதியது செப்ரம்பர் 08 2010ல். ஒரு வகையில் தமிழ் அரங்கம் இந்நிகழ்வை வெளிக்கொணராது இருந்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றதோ பணப் பரிமாற்றம் இடம்பெற்றதோ வெளியே வந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் தமிழரங்கம் 6000 மைல்களுக்கு அப்பால் நடந்த ஒரு சம்பவத்தை சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ வெளிக்கொண்டுவந்துள்ளது. இந்தியப் பொலிஸ்சுடன் கூட்டுச் சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்திய சபா நாவலன், குகநாதனிடம் 30 இலட்சம் கோரினார்!
இலங்கையில் இருந்து ஐரோப்பாவரை ஒளிபரப்பாகின்ற ஒரு தொலைக்காட்சியின் உரிமையாளர் தமிழ்நாட்டில் சட்டப்படி கைது செய்யப்பட்டமை மிக முக்கியமான செய்தி. அது இருட்டடிப்புச் செய்யப்பட்டதன் நோக்கம் கேள்விக்குரியது.
3. இச்செய்தியை இருட்டடிப்புச் செய்ததுமல்லாமல் இச்செய்தி வெளியே வந்ததும் அதுவரை மௌனம் காத்த இனியொரு இணையத்தளம் ‘’ அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன்’’ என்றும் ‘’குகநாதன் போன்ற இலங்கை அரச ஊதுகுழல்’’ என்றும் குற்றம்சாட்டுகிறது. இது ஏதோ ஒருவகையில் அருள்சகோதரர்களின் செயலை நியாயப்படுத்த முயற்சித்து இருப்பதையே காட்டிநிற்கின்றது. வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவருக்கு இடையேயான பிரச்சினையில் அரசியல் தூய்மைவாதம் பேசுகின்ற நாவலன் ஒருபக்கம்சார்ந்து நிற்பது அவர்களுக்கு இருந்த நலன்களின் முரணையே காட்டி நிற்கின்றது. இது நாவலன் இச்சம்பவத்தில் தொடர்பட்டு இருந்தார் என்ற சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றது.
4. பிரித்தானியாவில் இடம்பெற்ற 20க்கும் மேற்பட்ட தமிழர்களிடையேயான படுகொலைகளில் கணிசமானவை பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பானவை. வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிடையே இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்கு எல்லையே இல்லை. இவற்றுக்கு அரசியல் முலாம்பூசி ஒரு தரப்பின் செயற்பாட்டை அரசியல் மூலம் நியாயப்படுத்துவது நீண்ட அரசியல் செயற்பாடுகளுக்கு ஆரோக்கியமாக அமையாது.
5. இலங்கையில் விடுதலையின் பெயரில் இயங்கிய விடுதலை இயக்கங்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்து மேற்கொண்ட நடிவடிக்கைகள் இன்னமும் எம்மனக் கண் முன்நிற்கின்றது. விசாரணையின்றியே தண்டனை. தண்டனைக்குப் பின் காரணங்களைத் தேடுவதும் தீர்ப்பு வழங்குவதும். எஸ் எஸ் குகநாதன் மீதான காலம் தாழ்த்திய வருகின்ற குற்றச்சாட்டுக்கள் இதனையே காட்டுகின்றன.
6. இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளின் பொலிஸ்படைகள் பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஒரு விவாதத்திற்காக ‘இனியொரு ஆசிரியர் சபாநாவலன் அருள்எழிலனுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் தமிகத்தின் பிரபல ஊடகங்களில் பிணியாற்றி செல்வாக்குள்ள அருள்எழிலனுக்கு சபாநாவலனை தமிழகம் வரச்செய்து அவரைக் கைது செய்து பணம்தரும்படி மிரட்டுவது ஒன்றும் கடியமான விடயம் அல்லவே.’ இனியொருவின் கூற்றுப்படி இலங்கை அரசின் ஊதுகுழல் ஊடகம் ஒன்றின் உரிமையாளரை அந்த அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் தமிழக அரசின் பொலிஸ்படையைக் கொண்டு சட்டப்படி கைது செய்து நீதிமன்றம் செல்லாமலேயே 15 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் வாங்கிக் கொண்டு விடமுடியும் என்றால் எதுவும் சாத்தியம் அல்லவா?
7. இங்குள்ள ஆபத்து என்னவென்றால் இது இவ்வாறான செயல்களுக்கு ஒரு முன்ணுதாரணமாக அமைந்து உள்ளது. இலங்கைத் தமிழர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தமிழக காவல்துறையை வைத்து மிரட்டி அவர்களிடம் இருந்து பணத்தைப் பெற முடியும் என்பதனை இச்சம்பவம் நடைமுறையில் நிரூபித்து உள்ளது. ஏற்கனவே இவ்வாறான கசப்பான சம்பவங்கள் சில இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அவ்வாறான சம்பவங்களை நானே செய்தியாக வெளியிட்டும் உள்ளேன். இச்சம்பவம் இவ்வாறானவர்கள் தங்கள் செயல்களை நியாயப்படுத்துவதற்கு வழிகோலி உள்ளது.
8. கைது செய்யப்பட்ட நிலையிலோ அல்லது கடத்தப்பட்ட நிலையிலோ மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் வழங்கும் வாக்குமூலத்தையோ அல்லது அவருடைய துணைவி வழங்கும் வாக்குமூலத்தையோ உண்மையானதாக எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது சாதாரணர்களும் அறிந்த விடயம். அதனால் தான் சட்டத்தை அமுல்படுத்துபவர்களிடம் இருந்து நீதித்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. தன்னை விடுவிப்பது அல்லது தனது துணைவரை விடுவிப்பதே அவருடைய அல்லது அவருடைய துணைவருடைய நோக்கமாக இருக்கும். அதனால் கைது செய்யப்பட்ட அல்லது கடத்தப்பட்ட நிலையில் பதிவு செய்யப்பட்ட விடயங்கள் சுயாதீனமான நிலையில் ஏற்றுக்கொள்ளப்படாதவரை அர்த்தமற்றவை. இருந்தாலும் எஸ் எஸ் குகநாதன் அப்பதிவுகளையும் மாற்றம் செய்யாது வெளியிடும்படி சவால்விட்டுள்ளார்.
9. அருள்சகோதரர்கள் குடும்பத்தினர் எஸ் எஸ் குகநாதனிடம் நிதியை இழந்தது உண்மையா இருந்தால் அவர்கள் குறைந்தபட்சம் நீதிமன்றத்தினூடாகவே அதனைப் பெற முயற்சித்து இருக்க வேண்டும். சமூகப் பொறுப்புடையவர்கள் இவ்வாறான வழிகளில் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது பிறழ்வான சமூகப் போக்கிற்கு முன்னுதாரணமாக அமையும்.
10. ஏற்கனவே எழுந்துள்ள அரசியல் நிலையினால் தமிழகத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு பலவீனமானதாகவே உள்ளது. இவ்வாறான தனிப்பட்ட சம்பவங்கள் இவ்வுறவை மேலும் மோசமாக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.