”ஹெலிகொப்டர் முயற்சி சாத்தியமற்றுப் போனது. நெடியவன், காஸ்ட்ரோ மீது சினங்கொண்டேன்.” குமரன் பத்மநாதன்

Kumaran_PathmanathanNediyavan_Sivaparan_Perinbanayakamவிடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் டெய்லிமிரர் ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் மூன்றாவது பாகம் ஓகஸ்ட் 21 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:-

குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்:

(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

கேள்வி: பிரபாகரனையும் அவரது குடும்பத்தையும் ஹெலிகொப்ரர் மூலம் காப்பாற்றும் உங்கள் திட்டத்திற்கு இறுதியில் என்ன நடந்தது? ஏன் அது செயற்படவில்லை?
பதில்: அது மிகவும் துயரமான கதை. பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி அவரது குடும்ப அங்கத்தவர்களை காப்பாற்றும்படி என்னைக் கேட்டபின் நான் ஒரு திட்டம் வகுத்து வான்வழி மூலம் ஆரம்ப ஏற்பாடுகளை செய்தேன். இலங்கை கடற்படை அணுகமுடியாத தொலைவிலுள்ள துறைமுகம் ஒன்றில் காத்திருக்கும் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்தேன். உக்ரேய்ன் நாட்டிலிருந்து எனக்குத் தெரிந்தவர் மூலமாக ஒரு பாவித்த ஹெலிகொப்டரை வாங்கவும் நான் ஒழுங்கு செய்தேன். எல்.ரீ.ரீ.ஈ. இன் விமானப் படையின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு பயிற்றப்பட்ட விமானிகள் வன்னிக்கு ஹெலிக்கொப்டரை கொண்டு செல்வர் என்பதே திட்டம். பிரபாகரன் விரும்பினால் சார்ள்ஸ் அன்ரனியை தவிர  குடும்பத்தின் ஏனையோர் வெளியே கொண்டுவரப்படுவர். தலைவருக்கு விருப்பமில்லையென்றால்  அவரும் அவரது மெய்ப்பாதுகாவலர்களில் சிலரும் சிரேஷ்ட தலைவர்களும்  ஹெலிகொப்டரர் மூலம் இலங்கையில் ஒரு குறித்த காட்டுப் பகுதியில் இறக்கப்படுவர். அதன்பின் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் இன்னும் ஒரு சிலர் ஆகியோரை கப்பலுக்கு ஹெலிகொப்ரர்  கொண்டு செல்லும். நான் கப்பலில் இவர்களுக்காக காத்திருந்திருப்பேன். பின்னர் இந்த குடும்பத்தை மூன்று நாடுகளில் ஒன்றில்,  சில சமயம் சுழற்சி முறையில் வைத்திருக்க எண்ணினேன்.

கேள்வி: இந்த நாடுகள் இவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனவா? இவை மேற்கத்தைய நாடுகளா?
பதில்: இல்லை. அவை மேற்கத்தைய நாடுகள் இல்லை. அவற்றில் இரண்டு ஆபிரிக்க நாடுகள்; ஒன்று ஆசிய நாடு. எனது பிரதிநிதிகள் மூலம் இந்த நாடுகளின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் நான் தொடர்பிலிருந்தேன். இதைப்பற்றி அவர்களுடன் பேசியபோது அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

கேள்வி: இந்தத் திட்டம் பெரும் ஆபத்துகளுக்கு முகங்கொடுக்கக் கூடியதாக இருந்ததே? இது வெற்றிபெறும் என நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தீர்களா?
பதில்: ஆம். ஆபத்துமிருந்ததுதான். ஆனால் நான் அதை முன்னெடுக்க தயாராகவிருந்தேன். இந்த ஆபத்துக்கு முகங்கொடுக்க தயாராக இருக்கவில்லையென்றால் அடுத்தது மரணம்தான். பிரபாகரன் கடைசி நிமிடத்தில் வெளியேவர சம்மதிக்கலாம் என்ற இரகசியமான எண்ணம் எனக்கிருந்தது. இதனால்தான் நான் இந்த திட்டத்தை தீட்டினேன். எதிர்பாராத செயற்பாடு என்பதே முக்கியம். முதல் கட்டம் வெற்றி பெற்றால் வேறு ஆட்களையும் காப்பாற்ற முயன்றிருக்கலாம்.

கேள்வி: அப்படியானால் எங்கு பிழை நடந்தது?
பதில்: அது ஒருபோதும் நினைத்த மாதிரி இருக்கவில்லை. அந்த திட்டத்தை செயற்படுத்த 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்பட்டது. என்னிடமோ அவ்வளவு பணம் இல்லை. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புதான் இந்தப் பணத்தை தந்திருக்க வேண்டும். நோர்வேயில் இருந்த நெடியவன் எனக்கு பணத்தை அனுப்புவார் என காஸ்ட்ரோ, சாள்ஸ் அன்ரனியிடம் உறுதியாக கூறியிருந்தார். ஆனால் அவர் அதை செய்யவே இல்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. பணம் அவசரம் தேவை என நான் பல முறை கேட்டேன். பணம் வந்து  கொண்டிருக்கிறது, பணம் வந்துக்கொண்டிருக்கிறது என கூறப்பட்டபோதும் அது ஒருபோதும் வரவில்லை. வெளிநாடு ஒன்றிலிருந்து விமானப்பிரிவு தலைவர் அச்சுதனுடன் நெடியவன் தொடர்பு கொண்டிருந்தார்.  அச்சுதன் முதலில் அந்த நடவடிக்கைக்கு தேவையான எல்.ரீ.ரீ.ஈ  விமானிகளை தருவதற்கு சம்மதித்திருந்தார். ஆனால், பின்னர் திடீரென என்னோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். சிலவேளை இது நெடியவனின் கட்டளையாகவும் இருக்கலாம். நான் அந்தரப்பட்டேன். ஊதியத்திற்கு பணியாற்றும் விமானிகளை நாடினேன். ஆனால் நிதி இன்மையால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை.

மே மாதத்தின் நடுப்பகுதியில்  இலங்கை இராணுவம் மும்முனைத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டது. அதன்போது வலைஞர்மடம் – முள்ளிவாய்க்கால் – வட்டுவாகல் பகுதிகளை முற்றுகை அரணுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின் ஹெலிகொப்டர் மூலம் காப்பாற்றும் முயற்சி சாத்தியமற்றுப்போனது. பெரும் சோகத்துடன் நான் அந்த திட்டத்தை கைவிட்டேன். நெடியவன், காஸ்ட்ரோ ஆகியோர் மீது நான் பெரும் சினங்கொண்டேன். ஆனால் எதுவுமே செய்யமுடியாத நிலை.

கேள்வி: சில நாட்களுக்குள் எல்லோரும் இறந்துவிட்டனரா?
பதில்: ஆம். அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். முழுக் குடும்பமுமே போய்விட்டது.  பாலச்சந்திரனின் மரணம் என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவனுக்கு 12 வயது மட்டுமே. நான் அவனை நேரில் கண்டதில்லை. ஆனால் அவன் சிறுபையனாக இருந்தபோது நான் பிரபாகரனுடன் அடிக்கடி பேசுவேன். பிரபாகரன் தொலைபேசியை அவனிடம் கொடுத்து இந்தா கேபி மாமாவுடன் கதை  என்பார். நான் அவனுடன் கதைப்பேன். பின்னாளில் அவனுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் நான் இன்னும் அவன் நினைவாகவே உள்ளேன். சண்டை உரத்து ஷெல் வீச்சு அதிகரித்தபோது அவன் பயந்து போயிருந்தான். பின்னர் சாள்ஸ் வான்வழியே தப்புவதற்கான ஒழுங்கை மேற்கொள்ளும்படி என்னை கேட்டிருந்தபோது பயப்படாமல் இருக்கும்படியும் விரைவில் கேபி மாமாவிடம் போய்விடுவாய் என்றும் கூறப்பட்டது. இந்த சின்னப்பையன் தனது பொருட்களில் சிலவற்றை பையொன்றில் போட்டு போகுமிடமெல்லாம் கொண்டு திரிந்தான். நான் கேபி மாமாட்ட போறன் என்று கூறுவானாம். சில சமயம் பாலச்சந்திரன் பையை வைத்துக்கொண்டு தான் கே.பி மாமாவுடன் போகப்போவதாக ஆட்களுக்கு கூறிக்கொண்டு நடக்கப்போகாத காப்பாற்றும் நடவடிக்கைக்காக காத்திருப்பதை எனது மனத்திரையில் காண்பேன். இப்படி நினைக்கும் போது நான் பெருங்கவலைப்படுவேன். திட்டத்தை செயற்படுத்தாது குழப்பிய நெடியவன் மீது கோபங்கோபமாக வரும்.

கேள்வி: ஏன் அவர் அப்படிச் செய்தார்?
பதில்:  எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் இது காஸ்ட்ரோவின் கட்டளைப்படி நடந்திருக்கலாம். கே.பிக்கு இந்த பெருமை கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை என நான் நினைக்கின்றேன். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ இல் காணப்பட்ட பிழையின் வெளிப்பாடுதான், தனிநபர்கள் தங்களது சிறுபிள்ளைத்தனமான பொறாமைகள், பிரிவுகள் காரணமாக ஒட்டுமொத்தமாக இயக்கத்தையும் போராட்டத்தையும் கெடுத்துக்கொண்டனர்.

கேள்வி: முழுக்குடும்பமுமே கொல்லப்பட்டுவிட்டது என உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், மதிவதனி உயிரோடு இருக்கிறார் என்றெல்லாம் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் சில பகுதியினராலும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளாலும் கதைகள் பரப்பப்பட்டுள்ளனவே? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.?
பதில்: இப்படியான கதைகள் சிலரது சுயநலனுக்காகப் பரப்பப்படுகின்றன. மற்றும் சிலர் இப்படி நடந்து விட்டதை ஏற்க மனமில்லாமல் இந்த கதைகளை நம்புகின்றனர்.

கேள்வி: இதுப பற்றி நேரடியாகக் கண்டக் சாட்சிகள் உங்களிடம் இல்லையல்லவா?பதில்:  உண்மைதான். கடைசிக் கட்டம்வரை  நான் சூசையுடன் தொடர்பிலிருந்தேன். இது பற்றி நான்  உத்தியோக பூர்வமான மூலங்களிலிருந்தும் கேள்விப்பட்டுள்ளேன். முக்கியமாக நான் பிரபாகரனின் உடலை ரிவியில் பார்த்தேன்.

கேள்வி: அது அவர்களது உடல் அல்ல என இவர்கள் கூறி மறுக்கின்றனரே?
பதில்: முழு முட்டாள்தனமான கதை. ரிவியில் பார்த்தவுடனேயே நான் உடனேயே இது பிரபாகரன் உடல்தான் என்பதை அறிந்துகொண்டேன். நான் மிக மனமுடைந்து போனேன். பல மணித்தியாலங்களாக நான் யாருடனும் தொடர்பின்றி இருந்து தியானம் செய்தேன்  பழையதை நினைத்து அழுதேன்.

கேள்வி: இந்த குழப்பத்துக்கு நீங்களும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றீர்கள். பிரபாகரனின் மரணம் பற்றி செய்திகள் வந்தபோது அவர் மரணிக்கவில்லையென்றும் பாதுகாப்பான இடத்தில் உயிருடன் உள்ளதாகவும் நீங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் மறுப்புரையை வாபஸ் பெற்றீர்கள். இதனால் உங்கள் மீதான நம்பிக்கை பெரிதும் சிதறிப்போனது. இது உங்களை விமர்சிப்பவர்களுக்கு நல்ல ஆயுதமாயிற்று. ஏன் இந்த தடுமாற்றம்? விளக்கமுடியுமா?
பதில்: ஆம். இதற்கான விளக்கத்தை தருவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நடந்தது இதுதான். பிரபாகரன் பொட்டம்மான் மற்றும் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து இரகசியமாக நந்திக்கடல் வழியாக அதன் கரையூடாக வெளியேறினர். வேறு இரண்டு குழுக்கள் வேறு திசையால் சென்றனர். காட்டுக்குள் போய்ச் சேர்வதுதான் இவர்களது எண்ணமாக இருந்தது.முற்றுகையிடப்பட்ட பகுதியைச் சுற்றி மூன்று அடுக்குகளாக படைவீரர்கள் நிற்பதனை முன்னைய உளவுபார்ப்புகள் கண்டறிந்திருந்தன. என்னோடு தொடர்பிலிருந்த சூசை, பிரபாவும் பொட்டுவும் மூன்று அடுக்கு காவலையும் தாண்டி சென்றுவிட்டதாக எனக்கு அறிவித்தார். இதன் பின்  பிரபாகரன் குழுவுடன் தொடர்பேதும் கிடைக்கவில்லை. எனவே நானும் சூசையும் தலைவர் பாதுகாப்பான இடத்துக்கு போய்ச் சேர்ந்து விட்டார் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்பு சாதனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கருதினோம்.

இதன் பின்னரே எமது ஆயுதங்களை மௌனிப்பது பற்றிய அறிக்கையை வெளியிட்டேன். இதை நான் சூசையுடன் பேசிய பின்னர்தான் செய்தேன். சமாதான முன்னெடுப்புகளை விரைவுப்படுத்தவும் எஞ்சியுள்ளோரை காப்பாற்றவும் ஒரு அத்திவாரம் இடும் வகையில்தான் நான் அறிக்கையை வெளியிட்டேன்.  வேறு ஒரு இடத்திலிருந்த நடேசனும் புலித்தேவனும் கூட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்தனர். பிரபாகரன் இராணுவத்தின் பாதுகாப்பு அடுக்களை கடந்து சென்றுவிட்டார் என முதலில் எனக்கு கிடைத்த தகவல்தான் அவர் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட்டார் என நம்பவைத்தது. இந்த நம்பிக்கைதான் பிரபாகரன் இறந்ததுவிட்டார் என்ற செய்தியை மறுக்கவும் அவர் பாதுகாப்பாக உள்ளார் எனவும் கூறவைத்தது. அத்துடன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற முதலாவது ஊடக அறிக்கை அம்புலன்ஸில் தப்பிப்போகும் முயற்சியுடன் தொடர்பாக வெளிவந்தது. ஆனால் அந்த அறிக்கை தவறானது. பிரபாகரன் அம்புலன்ஸ் எதிலும் இருக்கவில்லை.

சூசையுடன் நான் தொடர்பை இழப்பதற்கு சற்று முன் பிரபாகரனால் முற்றுகையை தாண்ட முடியவில்லை. அவர் திரும்பிவந்துவிட்டார் என பதறி சூசை என்னை திகைப்படைய செய்தார். பிரபாகரன் இருந்த இடத்திலிருந்து சில நூறு மீற்றர் தூரத்திலேயே தான் நின்றதாக கூறினார். இராணுவத்தின் பாதுகாப்பு அடுக்குகளை தாண்டும் முயற்சி சரிவரவில்லை என்றும் பொட்டம்மான் இன்றி பிரபாகரன் தனியே திரும்பிவிட்டதாக சூசை கூறினார். சண்டை கடூரமாக நடக்கின்றது என்பதற்கு மேலாக எந்த தகவலையும் அவரால் தரமுடியவில்லை. சிறிது நேரத்தின்பின் நான் சூசையுடன் தொடர்பை இழந்துவிட்டேன்.

சிறிது நேரத்தின்பின் தொலைக்காட்சியில் பிரபாகரனது உடலை பார்த்தேன். எல்லாம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால். பிரபாகரனின் இறப்பை மறுத்த முதலாவது அறிக்கை பின்னர் அதை உறுதி செய்து விடப்பட்ட அறிக்கை எல்லாமே நேர்மையாக விடுவிக்கப்பட்டவை என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். யாரையும் பிழையாக வழிப்படுத்தும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. அந்த அறிக்கைகள் அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் என்னால் விடுக்கப்பட்டவை. சண்டை தொடர்ந்து கொண்டிருந்ததது. தொடர்பாடல் கஷ்டமாக இருந்தது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நிலைமைகள் பற்றி மக்கள் தவறான தகவல்களை பெற்றுக்கொள்ளும் போர் நிலைமைகளை போரின் மூடுபனி எனக் கூறுவர்.

கேள்வி: ஆம். கிளொஸ்விற்ஸ் என்பவர்தான் இந்த பதத்தை முதலில் பயன்படுத்தினார். பின்னர் இந்த சொல் றொபேட் மக்னமராவினால் பிரபல்யப்படுத்தப்பட்டது. சரி பிரபாகரன் எப்படி இறந்தார் என்று சொல்லுங்களேன்? அது உங்களுக்குத் தெரியுமா?
பதில்: ஒன்றை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நான் அங்கு இருக்கவில்லை. எனக்கு சொல்லப்பட்டதையும் நான் கேள்விப்பட்டதையும் வைத்துத்தான் கூறவேண்டும். பிரபாகரனின் மரணத்தை பொறுத்தவரை எனக்குக் கிடைத்த தகவல் இது. பிரபாகரனும் 60 பேர் கொண்ட புலிகளின் குழுவும் நந்திக்கடல்  அருகே ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் யாவருமே கடைசிவரை போராடினார். மரணத்தை தழுவிக்கொண்டனர்.

கேள்வி: பிரபாகரன் சரணடைந்தார் அவர் மானபங்கப்படுத்தப்பட்டபின் சுடப்பட்டார் என்ற கதைகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்.?
பதில்:   இல்லை. அது நடக்கவில்லை. எனக்கு பிரபாகரனை தெரியும். அவர் ஒருபோதும் சரணடைந்திருக்க மாட்டார். எனக்கு இந்த கதைகள் தெரியும். சிலர் வேண்டுமென்றே இதை செய்கின்றனர். சிலர் காதில் விழுவதை யோசிக்காமல் திருப்பிக் கூறுகின்றனர். எனக்கு நன்றாகத் தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவர் ஒருவர் பிரபாகரன் சரணடைந்தார் எனவும் பின்னர் சரத்பொன்சேகாவிடம் கொண்டுவரப்பட்டதாகவும் அங்கே சரத்பொன்சேகா அவரை முழங்காலில் இருக்கவைத்து சுட்டதாகவும் கூறித்திரிந்தார். அபத்தமானகதை. பழைய தமிழ் தலைவர் பிரபாகரன் முன்னால் பயந்து நெளிபவர் அவர் இறந்தபின் இந்த மாதிரி ஏன் பேசவேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால் பிரபாகரனை தோற்கடித்த இராணுவத்தினர் அவரைப் பற்றியும் அவர் மரணித்த விதம் பற்றியும் உயர்வாகவே பேசுகின்றனர். பாதுகாப்பு அமைப்பில் உச்ச நிலையில் உள்ள சிலர் – உங்களுக்கு இவர்கள் யார் என விளங்கும் என நினைக்கின்றேன். இந்த குழு கடைசிவரையும் வீரத்துடன் போராடி சரணடையாமல் மரணத்தை தழுவினர் என்பதையிட்டு மிகவும் கௌரவமாக என்னிடம் கூறினார். ஆனால் எமது ஆட்களில் சிலர் பிரபாகரனை பற்றி அவர் இறந்தபின் கேவலமாக பேசுகின்றனர். நான் திருப்பித் திருப்பிச் சொல்கின்றேன். எனது தலைவர் கடைசிவரை போராடி வீர மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

கேள்வி: இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பிரபாகரனின் ஒரு மெய்ப்பாதுகாவலரிடம் பெற்றோல் கலன் ஒன்று இருக்குமாம். தான் இறந்தால் இராணுவத்திடம் தனது உடல் அகப்பட்டக் கூடாது. என்பதற்காக தனது உடலை கொளுத்திவிட வேண்டும் என்பது பிரபாகரனின் கட்டளை. ஆனால் இது இந்தமுறை நடந்ததாகத் தெரியவில்லையே. என்ன நடந்தது?
பதில்: இந்த முறையும் இப்படியான ஒழுங்கு செய்யபட்டிருந்தது என நான் கேள்விப்பட்டேன். தனது உடல் வேறு யார் கையிலும் போய்ச் சேராது  அழிக்கப்பட வேண்டும் என்பது பிரபாகரனுக்கு மிக முக்கியமான விடயமாக இருந்தது. பெற்றோல் கான் நீரில் விழுந்திருக்கலாம். அல்லது பெற்றோல் கான் ஒப்படைக்கபட்ட போராளி பிரபாகரன் இறக்கும் முன் கொல்லப்பட்டிருக்கலாம். இது எனது ஊகம்தான். எனக்கு உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியாது.

கேள்வி: பொட்டு அம்மான் பற்றி….? அவருக்கு என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்?
பதில்: பிரபாகரனும் பொட்டுவும் ஒன்றாகவே சென்றனர். பிரபாகரன் மட்டுமே திரும்பி வந்தார். பொட்டு தப்பிச் செல்லும் முயற்சியின் போது கொல்லப்பட்டார் என்றே நான் நினைக்கிறேன். இல்லாதுவிடின் பிரபாகரன் பக்கத்திலேயே இருந்திருப்பார்.   பொட்டு அம்மானின் உடல் கிடைக்கவில்லை என்பதில் இராணுவம் உறுதியாக இருப்பதால் பொட்டு அம்மானின் உடல் இராணுவத்தின் கையில் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரபாகரனே பொட்டு அம்மானின் உடலை அழித்திருக்கலாம்.

கேள்வி: பொட்டு தப்பியிருக்க முடியுமல்லவா?
பதில்: விவாதத்திற்கு வேண்டுமானால் ஆம் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.  பிரபாகரனும் பொட்டுவும் உயிருடன் உள்ளனர். அவர்கள் சில வருடங்களின் பின்னர் தோன்றுவர் என்பது அவர்களின் நினைவை அவமதிப்பதும் கேவலப்படுத்துவதும் ஆகும். இந்த நகைப்புக்குரிய விடயத்தை தொடர்ந்து அழுத்தி கூறுபவர்கள் மடத்தனமான கதையை விட்டுவிட்டு பிரபாகரனையும் பொட்டுவையும் வெளிக்கொணர வேண்டும்.

கேள்வி: பிரபாகரனின் உடல் தொடர்பாக இன்னொரு கேள்வி. பிரபாகரனின் குடும்ப அங்கத்தவர்கள் பிரபாகரனின் உடலை தம்மிடம் வழங்கும்படி கோருவர் என்றும் வெளிநாட்டுப் புலிகள் அதனைப் பெற்றுக்கொண்டு 40 வருடங்களுக்கு மேலாக தான் வகுத்துக்கொண்ட கொள்கைக்காக தன்னை அர்ப்பணித்த மனிதனுக்கு இறுதி அஞ்சலியை ஒழுங்கமைப்பர் எனவும் நான் எதிர்பார்த்தேன்.
பதில்:  உங்களைப் போலவே நானும் அப்போது யோசித்தேன். இது தொடர்பில் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர வழிகளிலும் ஆலோசனையை பெற்றுக்கொண்டேன். பிரபாகரனின் சகோதரங்கள் பிரபாகரனின் உடலை தம்மிடம் தரும்படி கேட்டால் இலங்கை அரசுமீது இது தொடர்பில் சர்வதேச அழுத்தத்தை பிரயோகிக்க முடியும் என எனக்கு கூறப்பட்டது. எனவே நான் பிரபாகரனின் சகோதரனுடனும் அவரது சகோதரிகள் இருவரில் ஒருவருடனும் இந்த கோரிக்கை விடயமாக தொடர்பு ஏற்படுத்தினேன். நான் அவமதிக்கப்பட்டேன். உண்மையில் பிரபாகரனின் சகோதரியின் கணவர் தன் மனைவியின் கையிலிருந்த தொலைபேசியை பறித்து இனிமேல் போன் எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு தொலைபேசியை முகத்தில் அடித்தாற்போல வைத்துவிட்டார். எனவே என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. இதற்கிடையில் பிரபாகரனின் உடலை எரித்து சாம்பலை கடலில் தூவியதாக அரசாங்கம் அறிவித்தது. அவ்வளவுதான்.

கேள்வி:  சரி பிரபாகரன் சண்டையில் இறந்துவிட்டார். அந்த குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்கள் பற்றி என்ன தெரியும்.? என்ன நடந்தது?
பதில்: எனக்கு கிடைத்த தகவலின்படி மனைவி மதிவதினி ஷெல் வீச்சில் கொல்லப்பட்டார். இது பிரபாகரனின் வெளியேறும் முயற்சியின் முன் நடந்தது என நான் நினைக்கின்றேன். சாள்ஸ் அன்ரனி முன்னரே சண்டையில் காயபட்டிருந்தார். ஆனால் அவர் இறுதிவரை தனது அணியினரை சண்டைக்கு இட்டுச் சென்றார். நான் முன்பு கூறியது போலவே அவர் தப்பிப்போக விரும்பவில்லை. அவர் சண்டையில் உயிர் துறந்தார். இதில் இன்னொரு விடயத்தை கூறவேண்டும். சொர்ணலிங்கம் அல்லது சங்கரின் (செப்ரம்பர் 27 2001 இல் கொல்லப்பட்டவர்) மனைவி குகா பற்றி கூறவேண்டும். குகா சாள்ஸ்டன் இருந்து அவரோடு இறந்து போனார். மதிவதனியின் நெருங்கிய சிநேகிதி குகா. அவர் சாள்ஸ்டன் தான் எப்போதுமிருந்து தாயாக அவரைக் கவனிப்பேன் என மதிவதினியிடம் உறுதியளித்திருந்தார். அவர் ஏனைய தலைவர்களின் மனைவிமார் அல்லது விதவைகள் போலன்றி விட்டுப்போக மறுத்துவிட்டு சாள்ஸ்டன் இருந்துவிட்டார். மகள் துவாரகாவும் போர்க்களத்தில் போராடி மரணித்துவிட்டார். அவர் மே.14 இல் இறந்து விட்டதாக அறிந்தேன்.

ஆக இளைய பிள்ளையான பாலசந்திரனைப் பொறுத்தவரை எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. அவர் தன் தாயோடு நெருக்கமாக இருந்திருப்பார். எனவே ஷெல் வீச்சில் தாயோடு இறந்திருக்கலாம். ஆனால் இறந்த பாலசந்திரனின் உடல் என இன்ரநெற்றில் காட்டப்பட்ட படம் அவர் ஷெல்வீச்சில் இறந்தது போலல்ல. எனவே இதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

கேள்வி: பிரபாகரனும் அவரது குடும்பமும் இந்தமாதிரி கொல்லப்பட்டது உங்களுக்கு பேரிடியாக இருந்திருக்கும். அவரது திருமணத்தில் நீங்கள்தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தீர்கள் என நினைக்கிறேன். அவருடைய சிரேஷ்ட துணைத் தலைவர்களும் தளபதிகளும் இருந்தபோதும் நீங்கள் எப்படி மாப்பிள்ளைத் தோழனாக ஆகினீர்கள்?
பதில்: ஆம் நான் பிரபாகரனின் குடும்பத்துக்கும் நெருக்கமானவனாக இருந்தேன். அவர்களது மரணம் எனக்கு பேரிழப்பு. என்னால் அவர்களுக்கு உதவவோ காப்பாற்றவோ முடியாமல் போனமை எனக்கு நிரந்தரமான சோகத்தின் மூலமாகவே இருக்கும். நான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்ததைப் பற்றிக் கேட்டீர்கள். இதற்கு ஒரு காரணம் உண்டு. பிரபாகரன்,மதிவதனி மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்யவிரும்பிய போது அநேகமான சிரேஷ்ட தலைவர்களும் தளபதிகளும் அதை விரும்பவில்லை. இது இயக்கத்தை பாதிக்கும் என்னும் காரணத்தால் அவர்கள் எதிர்த்தனர்.

அந்தக் கட்டத்தில் பிரபாகரன் என்னிடம் வந்தார். முன்னர் நடந்த ஒரு விடயத்தால் இதைப்பற்றி என்னிடம் கூற வெட்கப்பட்டார். நான் இயக்கத்தில் சேர்ந்தபோது ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தேன். ஒரு புரட்சியாளன் காதலில் விழக்கூடாது எனக் கூறி எனது காதலை கைவிடும்படி பிரபாகரன் கூறினார். பெரும் தயக்கத்துடன் நான் அவருக்கு கீழ் படிந்து எனது காதலை துறந்தேன். பின்னர் சூழ்நிலைமாறி, பிரபாகரன் காதல் வயப்பட்டு எனது உதவியை நாடி வந்திருந்தார். அவர் அந்தரப்பட்டது ஆச்சரியமானது அல்ல. ஆனால் நான் உடனேயே எனது ஆதரவை வழங்கி திருமணம் செய்யக் கூறினேன். நான் பல சிரேஷ்ட தலைவர்களுடன் பேசி அவர்கள் மனதை மாற்றினேன். பிரபாகரனின் தந்தையை கண்டு அவரது மகனின் திருமணம் பற்றி கூறியது நான்தான். இந்த காரணத்தால் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாகினேன்.

கேள்வி: திருமணத்தின் பின்னரும் நீங்கள் அவருக்கும் குடும்பத்துக்கும் நெருக்கமானவராக இருந்தீர்களா?
பதில்: ஆம். நான் அதிகமாக வெளியே இருந்தபோதும் அக்காலத்தில் பிரபாகரனுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தேன். நான் பிள்ளைகளுடனும் மதிவதனியுடனும் பேசுவேன். நான் திருமணம் செய்தபின் எனது மனைவியும் மதிவதனியும் தொலைபேசி மூலம் பேசிக்கொள்வார்கள். நான் கப்பலில் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும்போது குடும்ப அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பரிசுப்பொருட்களை அனுப்புவேன். இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பிரபாகரன் வன்னிக் காட்டுக்குள் போக வேண்டியிருந்தபோது இரண்டு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு சமாளிப்பது மதிவதனிக்கு கஷ்டமாக இருந்தது. பிரபாகரன் அவர்களை சிறிது காலம் பாதுகாப்பான ஒரு இடத்துக்கு அனுப்ப விரும்பினார்.  அவர் அவர்களை சுவீடனில் இருந்த பழைய தோழனான ‘சிங்கம்’ என்பவரிடம் அனுப்ப விரும்பினார்.

அவரகள் படகு மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். அதன் பின் நான் பயண ஆவணங்களை தயாரித்து அவர்களை ஸ்கண்டிநேவியாவுக்கு அனுப்பி வைத்தேன். பின்னர் பிரபாகரனின் நண்பனுக்கு சில பிரச்சினைகள் இருந்ததையும் அதனால் அவருக்கு மதிவதனியையும் பிள்ளைகளையும் தன்னுடன் வைத்திருப்பது சிரமம் என்பதையும் அறிந்துக்கொண்டோம். எனவே நான் ஆபத்தான போதிலும் போலி ஆவணங்களை பயன்படுத்தி சுவீடனுக்கு சென்று தாயையும் பிள்ளைகளையும் டென்மார்க் அனுப்பி வைத்தேன். நான் அவர்களுக்கு அங்கு பாதுகாப்பான இடத்தை ஏற்பாடு செய்தேன்.

கேள்வி: மதிவதனியின் குடும்ப அங்கத்தவர்களுடனா?
பதில்: இல்லை அவர்களோடு அல்ல. அவர்கள் தயக்கம் காட்டினர். இது வேறு இடம்.  பின்னர் 1987 இல் பிரேமதாஸ அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தை வந்தது. இந்த சந்தர்ப்பத்தை நான் முறையான பயண ஆவணங்களை பெறுவதற்குப் பயன்படுத்திக்கொண்டு ஸ்கண்டினேவியா சென்றேன். அங்கிருந்து நானே தாயையும் பிள்ளைகளையும் கொழும்புக்கு அழைத்து வந்தேன். அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்துவிட்டேன் எனக் கூறி பிரபாகரனிடம் ஒப்படைத்தேன். பிரபாகரனுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி. பிரபாகரனின் குடும்பத்தை பாதுகாப்பாக கொண்டு வந்த அந்தக் காலத்தையும் என்னால் உதவமுடியாமல் போன இந்தக் காலத்தையும் நினைக்கும்போது எனக்கு கவலைக்கு மேல் கவலையாக உள்ளது. அந்த நாட்களில் மகனும் மகளும் என்மீது பிரியமாக இருந்தனர். நான் அவர்களை அடிக்கடித் தூக்கித் திரிவேன்.

கேள்வி: ஆம் எனக்கு முன்னர் நீங்கள் சார்ள்ஸை தூக்கி வைத்திருக்கும் படங்களை பார்த்த ஞாபகம் உள்ளது. சாள்ஸ் அன்ரனியும் அவரது சகோதரியும் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் படித்துக் கொண்டிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வந்தன. என்ன நடந்தது? அவர்கள் எப்போது திரும்பி வந்தனர்.? ஏன் வந்தனர்.?
பதில்: இல்லை. இல்லை. அவர்கள் ஒருபோதும் படிப்புக்காக வெளிநாடு செல்லவில்லை. அதெல்லாம் பொய்.

கேள்வி: அப்படியானால்?
பதில்: இரண்டு பேருமே மிகவும் கெட்டிக்காரர்கள். உயர்கல்வியில் அவர்கள் மிகவும் நன்றாகவே செய்திருப்பார்கள். தாயார் மதிவதனி இதில் மிக அக்கறையாக இருந்தார். பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 இல் வன்னிக்கு வந்திருந்தபோது மதிவதனி பிள்ளைகள் வெளிநாட்டில் படிப்பதற்கான ஆயத்தங்களை செய்யும்படி என்னிடம் கேட்டிருந்தார். எனவே நான் சிறிது காலம் எடுத்து கவனமான தயாரிப்புகளை மேற்கொண்டேன். இவர்களின் ஆளடையாளம் தெரியாமல் மிகவும் பாதுகாப்பான சூழலில் வெளிநாட்டில் கல்வியை ஆரம்பிப்பதற்கான,  ஒரு போதும் பிழைபோகாத ஏற்பாடுகளை செய்தேன். மதிவதனிக்கு பெரிய சந்தோசம். ஆனால் பிரபாகரன் முதலில் சம்மதித்திருந்தாலும் பின்னர் தன் மனதை மாற்றிக்கொண்டார். அவர் பிள்ளைகளை அனுப்ப மறுத்துவிட்டார். மதிவதனியால் அவரது நிலைப்பாட்டை மாற்றமுடியவில்லை. அவ்வளவுதான். அவர்கள் ஒருபோதும் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லவில்லை. பின்னர் இருவருமே தாமாகவே இயக்கத்தில் சேர்ந்து பயிற்றப்பட்ட போராளிகளாயினர்.

கேள்வி: பிரபாகரன் ஏன் இப்படிச் செய்தார்?
பதில்: அவரது கொள்கைதான் காரணமென நான் நினைக்கிறேன். மற்றவர்களின் பிள்ளைகள் வன்னிக்குள் இருக்க வேண்டிய நிலையில் தனது பிள்ளைகளை  பாதுகாப்புக்காகவும் உயர்கல்விக்காகவும் வெளிநாட்டுக்கு அனுப்புவது சரியில்லை என அவர் நினைத்தார். இதே கொள்கைதான் தனது மகனையும் மகளையும் இயக்கத்தில் சேரத் தூண்ட வைத்தது. மற்றவர்களின் பிள்ளைகள் சண்டையில் ஈடுபடும்போது தனது பிள்ளைகளை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது எனவும் அவர் எண்ணினார்.

கேள்வி: இந்த விடயம்  தொடர்பாக உங்கள் விளக்கத்துக்கு நன்றி. உண்மை நிலையை பற்றி எமக்கு பிழையான தகவல்கள் வழங்கபட்டது போல் உள்ளது. இருந்தாலும் பிரபாகரனின் மரணம்பற்றி பிழையாக தகவல் பரப்பப்பட்டுள்ளது. சரியான தகவல் தரப்படவில்லை. இது ஏன்? உங்களுக்கும் நெடியவனுக்கும் இடையில் ஏன் இது தொடர்பாக கருத்து வேறுபாடு உள்ளது?

பதில்: ஆரம்பத்தில் உண்மையை ஏற்றுக்கொள்வதை  மறுத்ததானது உணர்வுகளுடன் தொடர்பானதாக இருந்தது. உதாரணமாக பிரபாகரன் இறந்துவிட்டதாக நான் முதலில் அறிக்கை விட்டபோது உளவுத்துறையை  சேர்ந்த கதிர்காமத்தம்பி அறிவழகன் என்பவர் அதை மறுத்து அறிக்கைவிட்டார். பின்னர் அவர் உண்மையை விளக்கிக் கொண்டு பிரபாகரனின் மரணத்தை ஒப்புக்கொண்டு இன்னொரு அறிக்கையை வெளியிட்டார். நெடியவனையும் அவரது ஆட்களையும் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அவர்களுக்கு சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்களுக்கு பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது நன்றாகவே தெரியும். இருப்பினும் அவர்கள் வேண்டுமென்றே அதை வெளிப்படையாக ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்றும் தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டம் தொடர்கின்றது என்றும் கதைகளை பரப்பி வருகின்றனர்.

நாம் தமிழ் ஈழத்தை போராடிப்பெற்று பிரபாகரன் வெளிப்படும்போது அதை அவருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என தமிழ் நாட்டு தலைவர்கள் சொல்லி வருவதும் இவர்களின் பொய்ப் பிரச்சாரத்துக்கு உதவியாக உள்ளது.

கேள்வி: பிரபாகரன் உயிரோடு இருப்பது போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தும் நெடியவனின் உள்நோக்கம் என்ன?

பதில்:  பணம். இப்போது எல்லாம் பணம்தான். நான் பிரபாகரன் இறந்துவிட்டார் என அறிக்கை விட்டபோது தலைவர் உயிரோடு உள்ளார் எனக் கூறி அதை எதிர்த்தார்கள். பிரபாகரனுக்கும் ஏனைய சிரேஷ்ட தலைவர்களுக்கம் அஞ்சலி செலுத்த நான் திட்டமிட்டபோது அவர்கள் அதை தடுத்தார்கள். முதலில்   பிரபாகரன் உயிருடன் உள்ளார் என அவர்கள் மனதார நம்புகிறார்கள் என்றே நான் நினைத்தேன். பின்னர் அவர்கள் உண்மை தெரிந்தும் நடிக்கின்றனர் என்பதை கண்டுகொண்டேன்.

கேள்வி: அது எப்படி?
பதில்:  சிலகாலத்தின் பின் எமது முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினேன். நான் உறுதியாக இருந்த விடயங்களில் ஒன்று பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக்கொள்வதும், ஒருவாரகாலததுக்கு அனுஷ்டிப்பை நடத்துவது என்பதாகும். அதற்கு, நெடியவன் பிரபாகரனின் மரணத்தை நாம் ஒருபோதும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும்  அப்படி ஏற்றுக்கொண்டால் இயக்கத்தினால் வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமிருந்து பணம் சேர்க்க முடியாது என்றும் கூறினார். நான், இயக்கம் ஒன்றை பொய்களைக் கூறிக்கொண்டு நடத்தமுடியாது என அவர்களுக்கு கூறினேன். அது மாத்திரமல்ல, இவ்வளவு  காலமும் தமிழ் இலட்சியத்துக்காக ஓய்வின்றிப் போராடிய அந்த தலைவருக்கு நாம் புகழாஞ்சலி செலுத்த தவறுவோமானால் நாம் நன்றி கெட்டவர்களாக இருப்போம் எனவும் கூறினேனன்.

பிரபாகரன் எமது போராட்டத்தின் ஆத்மாவாக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டினேன். அவரின்றி போராட்டமோ இயக்கமோ தமிழ் ஈழமோ இல்லை. எமக்கு ஆயுதங்கள் வாங்கவே பெருமளவு பணம் தேவைப்பட்டது. ஆயுத போராட்டம் முடிந்துவிட்ட நிலையில் அவ்வளவு பெருமளவு பணம் எமக்கு தேவையில்லை. வெளிநாட்டில் உள்ள எமது வர்த்தக செயற்பாடுகள் எமது கொள்கைப்பிடிப்புள்ள ஆதரவாளர்களின் சிறு நன்கொடைகள் என்பன இயக்கத்தை நடத்தப் போதுமென்று கூறினேன்.

எமது புதிய கடமைப்பொறுப்பு எமது மக்களுக்கு உதவுவதுதான். போர் நடத்துவது அல்ல என்றும் நான் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை வெளியில் கொண்டு வருவதும் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதும்தான் உடனடியான நோக்கம் எனவும் கூறினேன். அடுத்து இடம் பெயர்ந்த தமிழர்களை விடுவித்து மீளக்குடியமர்த்தல் என்றேன்.

நெடியவன் தயக்கத்தோடு ஏற்றுக்கொண்டார். எமக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின் விளைவாக நான் மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ இன் தலைவராக ஆகினேன். இது ஜுலை 2009 இல் நடந்தது. நான் பிரதம செயலாளராகவும் நெடியவன் வெளிநாட்டுக் கிளைகளின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான செயலாளராகவும் இருந்தோம். நவம்பரில் மாவீரர் வாரத்தின்போது பிரபாகரனின் மரணத்தை நினைவு கூருவது என ஏற்கப்பட்டிருந்தது.

ஆனால், இது நடந்து சில வாரங்களுக்குள் ஓகஸ்ட் 05 இல் நான் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன். அதோடு எல்லாம் முடிந்துபோனது. நெடியவனின் கை ஓங்கியது. எனவே பிரபாகரனின் மரணம் ஏற்கப்படவில்லை. அவர் உயிரோடுள்ளார் என்ற மாயை தொடர்ந்து பேணப்படுகிறது.

கேள்வி:  இந்த மாயையை தொடர்ந்து பேணுவதில் பணம் முக்கிய பாத்திரம் வகிப்பதாக முன்னர் கூறினீர்கள் என்னால் இது ஏன், எவ்வாறு என்பதை ஓரளவு ஊகிக்க முடியும். ஆனால் இதை நீங்கள் விளக்கமாக கூறமுடியுமா?

பதில்: போரின் இறுதி மாதங்களின் போது வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பேரளவு விசேட நிதி சேகரிப்பு நடைபெற்றது. ஆனால் இதில் ஒரு சதம் கூட யுத்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. இது நெடியவன் மற்றும் அவரது ஆட்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு மேலாக எல்.ரீ.ரீ.ஈ நிதிப்படுத்தப்படும் அல்லது நேரடியாக நடத்தப்படும் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் பல உண்டு. இதெல்லாம் பெருமளவு பணம் சம்பந்தப்பட்டவை. தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தின் (சார்பில் சேர்க்கப்பட்ட ஒரு  தொகைப் பணமும் உண்டு. நெடியவனும் அவரது  ஆட்களும் இந்தப் பணம் தொழில் என்பவற்றின்  மீதான தமது கட்டுப்பாட்டை  தொடர்வதற்கும் இனிவரும் காலங்களில் மேலும் நிதி சேகரிப்பதற்கும் ஆயுதப்போராட்டம் முடியவில்லை, தமிழ் ஈழம் சந்திவரை வந்துவிட்டது என்ற நாடகங்களை ஆடவேண்டிய தேவை உள்ளது. இதற்காக பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற பச்சைப் பொய்யை தொடர்ந்து கூறத்தான் வேண்டும். ஏனெனில் பிரபாகரன் இன்றி வெற்றிகரமான ஒரு ஆயுதப்போராட்டம் எமது வாழ்நாளில் ஒருபோதும் இருக்கப்போவதில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இது நெடுகத் தொடரமுடியாது. உண்மை ஒரு நேரம் எல்லோருக்கும் தெரியவரும். அப்போது நெடியவனின் கூத்துக்கள் அம்பலமாகும்.

கேள்வி: நெடியவனின் அரசியல் சிறுபிள்ளைத்தனத்தை இது விளக்குகிறது.  ஆனால் ஏன் நெடுமாறன் , வைகோ (வை. கோபாலசாமி) போன்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூட பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனக் கூறுகின்றனர். அவர்கள் உண்மையாகவே இதை நம்புகிறார்களா?

பதில்: இல்லை. அவர்களுக்கும் உண்மை தெரியும். இவர்களுக்கும் நெடியவனால் கட்டுப்படுத்தப்படும் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. யுடன் தொடர்புகள் உண்டு. அத்துடன் அவர்களின் அரசியல்  எல்.ரீ.ரீ.ஈ. வெல்லப்பட முடியாது. பிரபாகரன் சாகாவரம் பெற்றவர் என்பவற்றை  மையமாக வைத்து நடத்தப்படுவது. எனவே அவர்கள் பிரபாகரன் உயிருடன் உள்ளார்,  தமிழ் ஈழம் மலரும் என்று சொல்லத்தான் வேண்டும்.

கேள்வி: நெடுமாறன்,  வைகோ போன்றவர்களுக்கு உண்மையை விளங்க வைக்க நீங்கள் முயற்சிக்கவில்லையா?
பதில்: சென்ற வருடம் நான் பிடிபடுவதற்கு முன் நெடுமாறனுடன் உண்மை நிலையை விளக்கி நீண்ட நேரம் பேசினேன். அப்போது அவர் எல்.ரீ.ரீ.ஈ. இன் மத்திய செயற்குழுவை பிரபாகரன் இறந்துவிட்டார் எனக் கூறும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வைக்குமாறு கூறினார். என்னால் அதை எப்படி செய்ய முடியும். தலைவர்கள் எல்லோருமே ஒன்றில் இறந்து விட்டனர், அல்லது காணாமல் போயிருந்தனர்,  அல்லது பிடிப்பட்டு இருந்தனர். பின்பு இந்த நெடுமாறன், வைகோவுடன் சேர்ந்து ஒரு ஊத்தை வேலை செய்தார். இவர்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; கே.பி. இந்திய உளவு நிறுவனமான றோவின் கையாள் எனக் கூறும் அறிக்கை ஒன்றை விடுத்தனர்.

அதன்பின் நான் அவர்களோடு பேச முயல்வதை நிறுத்திவிட்டேன். நான் வைகோவுடன் பேசவில்லை. ஆனால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது அவருக்குத் தெரியும் என்பதை நம்பகமான முறையில் நான் அறிவேன். பிரபாகரனின் மரணம்பற்றி தனிப்பட்ட முறையில் கூறப்பட்டப்போது வைகோ குலுங்கி குலுங்கி அழுதார். ஆனால் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற பொய்யை பகிரங்கமாக கூறிவருகிறார்.

இவர் இரகசியமாக எவ்வளவுதான் அழுதாலும் எல்.ரீ.ரீ.ஈ இன் வீழ்ச்சி தொடர்பில் இவரது குற்றவுணர்வு தொடரத்தான் செய்யும். இந்திய அனுசரணையுடன் கூடிய யுத்த நிறுத்தம் வரும் சாத்தியத்தை கெடுத்தவர் இவரே.

கேள்வி: என்ன சொல்கிறீர்கள்? வைகோ இது தொடர்பில் செய்தது என்ன? செய்யாமல் போனது என்ன?
பதில்: நான் ஒரு புறத்தில் யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு முயன்று கொண்டிருந்தபோது மறுபுறத்தில் நடேசனும் (பாலசிங்கம் மகேந்திரன்) இதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் தி.மு.க விலிருந்த எல்.ரீ.ரீ.ஈ அனுதாபிகளான முதலமைச்சர் கருணாநிதியின் மகளும் ராஜ்சபா உறுப்பினருமான கனிமொழி, கத்தோலிக்க குருவான வண. ஜகத் கஸ்பர் என்பவருடன் இணைந்து மத்திய அரசின் அமைச்சரான பி.சிதம்பரத்துடன் யுத்த நிறுத்தமொன்றினை கொண்டு வரும் நோக்கில் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தனர். இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்து கொண்டிருந்த சமயம் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தலைவி ஜெயலலிதா எல்.ரீ.ரீ.ஈ சார்ந்த நிலைப்பாட்டை எடுத்த நிலையில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் தோல்வியடைய வேண்டி வருமோவென பயந்திருந்தனர். எனவே சிதம்பரம் ஒரு திட்டத்தை முன்வைத்தார். அவர் எல்.ரீ.ரீ.ஈ இரண்டு அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை தனித்து விடுக்க வேண்டும் என விரும்பினார். ஒரு அம்சம் ஆயுதங்களை மௌனிக்க வைக்க ஒப்புக்கொள்வதுடன் ஆயுதங்களை காலகதியில் ஒப்படைப்பதாகும். மற்றையது தமிழ் ஈழத்துக்குப் பதிலாக ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக்கொளவதாகும்.

எல்.ரீ.ரீ.ஈ தனது பெயரில் வெளியிடுவதற்கான அறிக்கையை எல்.ரீ.ரீ.ஈக்காக சிதம்பரம் அவர்களே உத்தியோகப்பற்றற்ற முறையில் தன் கையாலேயே எழுதினார் என நான் கேள்விப்பட்டேன். இந்த அறிக்கை விடப்பட்டபின் மத்திய அரசு கொழும்பு மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் எனவும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் யுத்தநிறுத்தம் கொண்டு வரப்படும் எனவும உறுதியளிக்கப்பட்டது.

வைகோ,  நெடுமாறன் போன்றோருக்கு இந்த ஏற்பாட்டை பற்றிய விபரங்களை கூறவேண்டாம் என நடேசனுக்கு கூறப்பட்டிருந்தப்போதும் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரான கே.மகேந்திரன் என்பவருடன் இது விடயமாக ஆலோசித்துள்ளார்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்   தலைமையிலான தேர்தல் கூட்டணியில் வைகோவின் மக்கள் திராவிட முன்னேற்றக்கழகத்துடன் இவரது கட்சியான இந்தி கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்ஸிஸ்ட்) யும் சேர்ந்திருந்ததது. மகேந்திரன் இந்த திட்டம்பற்றி வைகோவுக்கு தெரிவித்துவிட்டார்.

இவர்கள் இருவரும் காங்கிரஸ{ம் தி.மு.கவும் யுத்தம் நிறுத்தத்திற்கான பெருமையை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என கவலைப்பட்டனர். எனவே இவர்கள் இந்த திட்டத்தை கெடுக்க விரும்பினர். வைகோ எல்.ரீ.ரீ.ஈ யுடன் கோபித்தார். தமிழ் ஈழத்திற்கு மாற்றாக வேறு எதையாவது எல்.ரீ.ரீ.ஈ ஏற்றுக்கொண்டால் மக்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும்  எல்.ரீ.ரீ.ஈ க்கு ஆதரவான வேறு கட்சிகளும். தமது எல்.ரீ.ரீ.ஈ க்கான ஆதரவை நிரந்தரமாக வாபஸ் பெற்றுக்கொள்ளும் என நடேசனுக்கு வைகோ எச்சரித்தார்.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு சட்ட சபைக்கான தேர்தலில் பாரிய வெற்றியை பெறும் எனவும் புதுடில்லியில் பி.ஜே.பி அரசாங்கம் அமையும் எனவும் நடேசனுக்கு பிழையான நம்பிக்கை ஊட்டப்பட்டது. இதன்பின் யுத்தநிறுத்தம் ஒன்றை கொண்டுவரும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் இ தேர்தலுக்கு முந்திய எந்த போர் நிறுத்தமும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்கு உதவுவதாக அமையும்.

எனவே இந்த நடேசன் அறிக்கையை வெளியிடும் எண்ணத்தை கைவிட்டார். சிதம்பரத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. எல்லாமே வைகோவால் வந்ததுதான். இவர்கள் சுயநலமானவர்களாக இருந்தனர். இதனால் தேர்தலில் தாம் வெற்றி பெறுவோம் என நினைத்து வரக்கூடியதாக இருந்த யுத்த நிறுத்தத்தை தடுத்துவிட்டனர்.

கேள்வி: கூறப்பட்டப்படி ஓர் அறிக்கையை எல்.ரீ.ரீ.ஈ வெளியிட்டுருந்தாலும் எல்.ரீ.ரீ.ஈ, தோல்வியின் விளிம்பில் இருந்த தருணத்தில் கொழும்பின் மீது யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்கும்படியான நிர்ப்பந்தத்தை பிரயோகித்திருக்க முடியுமா? இன்னுமொன்று பி.ஜே.பி.  வென்று அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி தமிழ்நாடு தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருந்தாலும் கூட இலங்கையில் நடப்பவற்றை ஓரிரு நாட்களில் மாற்றியிருக்க முடியாது. இராணுவத்தின் வேகமான முன்னேற்றம் காரணமாக இந்தியா விரும்பினாலும் கூட இந்தியா நடவடிக்கை தொடங்க முன்னரே எல்லாமே முடிந்து போயிருக்கும்?

பதில்: நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் சொல்வது என்னவென்றால், இந்தியாவின் உதவியுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை முயற்சிப்பதற்கான ஒரு வாய்ப்புக்கூட இந்த வைகோ என்ற மனிதனால் தொடக்க  நிலையிலேயே அழிக்கபட்டுவிட்டது என்பதைத்தான். தனது தேர்தல் நோக்கத்துக்காக எல்.ரீ.ரீ.ஈ ஐ பலியிடவைத்த ஒரு சுயநல அரசியல்வாதி. இப்போது அவர் பிரபாகரனுக்காக தனியாட்கள் முன்னிலையில் முதலைக் கண்ணீர் விடுகிறார். பகிரங்கத்தில் இன்னுமொரு ஈழ யுத்தம்பற்றிக் கதைக்கின்றார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்கள் எங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்போகின்றார்கள்?

கேள்வி: அண்மைக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். நன்றி. இவ்விடயங்கள் தொடர்பாக புதிய விளக்கங்களை நீங்கள் தந்துள்ளீர்கள். ஆனால் இப்போது நான் சமகால நடப்புகள் பற்றி கேட்க விரும்புகிறேன். இந்த அரசாங்கத்துடனான குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுடனான உங்கள் தொடர்புகள் பற்றி தொடங்க விரும்புகிறேன். நீங்கள் ஏற்கெனவே உங்களை கைது செய்தமை  பாதுகாப்பு செயலாளருடனான உங்கள் முதல் சந்திப்பு என்பன பற்றி கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் நல்லதொரு உறவை பேணுகிறீர்கள். ஆனால் இதைப்பற்றி பல குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. பல எதிர்க்கட்சி தலைவர்களும் ஊடகங்களின் ஒரு பகுதியும் உங்களிடையே இரகசியமான சந்தேகத்துகிடமான சில கூட்டுசெயற்பாடுகள் நடைபெறுவதாகக் குற்றஞ் சுமத்துகின்றனர். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

பதில்: உண்மை சொல்வதுதான் எனது பதில். இது உண்மையில் மிக எளிதான கதை………

(தொடரும்)
 
(தமிழில்: ந.கிருஷ்ணராசா)

மேலதிக வாசிப்பிற்கு:

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

 • padamman
  padamman

  பிரபாகரனின் அழிவுக்கு முளுப்பொறுப்பும் பிரபாகரன் வளத்த புலிகள்தான் காரனம் கேபி இப்போது சொல்லுவதை போல் மக்கள் அழிவுக்கு வைகோ நெடுமாறன் இவர்கள்தான் காரனம் இவர்கள் எங்களுடைய பிரச்சனையில் தலையிட்டினாதால் தான் இத்தனை அழிவுகளும் நான் நினைக்கின்றேன் இவர்கள் றோவின் ஆட்கள் என்று.

  Reply
 • sarma
  sarma

  கேட்பவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பார்களாம். ஆனால் தமிழ் மக்கள் கேனையர்கள் அல்ல என்பதை இந்த கே.பி யும் அவர்களை இயக்கும் இலங்கை இந்திய உளவுப்படைகள் வெகு விரைவில் உணர்ந்து கொள்வார்கள். தமிழ்நாட்டு தேர்தல் வர இருப்பதால் இனி இப்படி நிறைய செய்திகள் வெளிவரும். ஆனால் எத்தனை செய்திகளை வெளியிட்டாலும் இந்த அழிவு யுத்தத்தை நடத்தியது இந்திய அரசே என்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

  Reply
 • sangar
  sangar

  வெளியில் இருந்தபோது மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. தலைவரையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்ற ஹெலிகொப்டர் வாங்க முயற்சி செய்தவர். இப்போது பிடிபட்டவுடன் மக்களைப் பற்றி கவலைப்படுகிறாராம். அவர்களுக்கு உதவ தொண்டு அமைப்பு நிறுவி இருக்கிறாராம். முதலில் தனது தாய்லாந்து மனைவியின் பெயரில் இருக்கும் பல கோடி ருபா சொத்துக்களை விற்று மக்களுக்கு உதவட்டும். அதன் பின் மக்களிடம் பணம் கேட்கட்டும். தாய்லாந்து இரவு விடுதிகளில் இவர் போட்ட ஆட்டங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதை அவர் முதலில் நினைவில் கொள்ளட்டும்.

  Reply
 • Maikandan
  Maikandan

  தமிழ் வியாபாரிகள் வீழ்த்திய VP & Co.

  We Sri Lankan Tamils or Jaffna Tamils majority of them are business minded. They have the values like egotistical, sneakiness and egoism.

  In the company of this values very hard to form liberation organisation.
  What they can form is a business. If we evaluate our culture we do business with every thing…

  Education became a business (remember the tutorials in Jaffna)

  Matrimony is also business (remember dowry system in our culture one of the worst)

  Religion is also business (Temples specially Hindu temples is real cash cow )

  Likewise our so called liberation struggle also became a real business.

  If you start another struggle tomorrow it will become another business.

  My request is please do not invest people’s valuable life and lively hood as a principal in your business.

  Reply