மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு இன் போது தீர்மானிக்கப்பட்டபடி அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான செயற்குழுவொன்றை அமைப்பதற்கான சந்திப்பு மே 17 அன்று லெய்டன் ஸ்ரோன் குவார்கஸ் ஹவுஸில் இடம்பெறவுள்ளது. மாலை 4:30 மணி முதல் 7:30 வரை இடம்பெறும் இச்சந்திப்பில் செயற்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் அதற்கான பெயரும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். மேலும் குறுகிய கால நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்தரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
குறிப்பாக என்ஜிஓ மற்றும் அரச முகவர் ஸ்தாபனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவலத்திற்கு உள்ளான மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் அந்த ஸ்தாபனங்களை ஈடுபடச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மேலும் இதற்கு சமாந்தரமான மற்றுமொரு பிரிவு மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அரசின் நலன்புரி முகாம்களை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவுமான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது. இவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டு குறுகியகால வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கவும் மே 17 சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது. இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான வகையில் பங்களிக்க விரும்புபவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வதையும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் தேசம்நெற் வரவேற்கின்றது.
Little Aid – லிற்றில் எய்ட்
மேலும் Little Aid – லிற்றில் எய்ட் என்ற உதவி அமைப்பு தேசம்நெற் நண்பர்களால் உருவாக்கப்பட்டு உள்ளது. ஈழத்தமிழ் மக்களின் வரலாறு காணாத இந்த அவலத்தில் சிக்குண்ட மக்களுக்கு முடிந்த அளவிலான சிறிய உதவிகளைச் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வமைப்பு பிரித்தானியாவின் பொதுஸ்தாபன ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. இவ்வுதவி அமைப்பிற்கான வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதும் அவ்விபரங்கள் தேசம்நெற்றில் வெளியிடப்படும்.
மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு
‘மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி’ என்ற தலைப்பிலான சந்திப்பு மே 2ல் லண்டன் புறநகர்ப் பகுதியான சறேயில் இடம்பெற்றது. தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் வன்னி மக்களை நோக்கி தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டிய பலரும் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்கள் பலரும் பல்வேறு கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதும் மக்களுக்கான அவசர உதவிகளைச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தனர். இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை பாதுகாத்து ஆதரவளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தவறி இருப்பதாகத் தெரிவித்த நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்பைச் சரிவரச் செய்வதற்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இக்கருத்தை சந்திப்பில் கலந்துகொண்ட பலரும் வலியுறுத்தினர்.
இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் நேரடியான உதவிகளை முடிந்த அளவு செய்வதுடன் முக்கியமாக என்ஜிஓ க்களுடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிர்வாகம் அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எவ்வாறான நிவாரணப் பணிகளும் அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று மேற்கொள்ளப்படுவது தவிர்க்க முடியாதது என்பதும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வன்னி மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வெளியே வருகையில் இலங்கை அரசு அவர்களை விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு கம்பி வேலிக்குள் அடைத்து வைப்பதாக ஆர் புதியவன், சந்திப்பினை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார். தங்கள் வளர்ப்பு விலங்குகளைக் கூட கம்பி வேலிக்குள் அடைக்காத மக்களை அரசு கம்பி வேலி அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தாங்கள் பின்வாங்கிச் சென்ற இடங்களில் எல்லாம் மக்களை விட்டுவிட்டுச் செல்லாமல் ஆடு மாடுகள் போல் அவர்களையும் சாய்த்துக் கொண்டு சென்று இன்று தங்கள் தலைமையைப் பாதுகாக்க பணயம் வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டிய ஆர் புதியவன் அவர்களுக்கு புதுமாத்தளன் தான் பூர்வீக மண் என்று கதையளப்பதாகத் தெரிவித்தார். அடங்கா மண் வணங்கா மண் என்று புலத்தில் சேர்த்தெல்லாம் எங்கே? என்று கேள்வி எழுப்பிய ஆர் புதியவன் அரசாங்கத்தின் நலன்புரி முகாம்களில் செல்விழமாட்டாது என்ற ஒரே உத்தரவாதம் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார். கம்பி வேலிக்குள் மாளிகையைக் கட்டி குடியேற்றினாலுமே அது ஒடுக்குமுறையின் குறியீடே என்று தெரிவித்த ஆர் புதியவன் அரசாங்கத்தின் வன்னி நலன்புரி முகாம்கள் படுமோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆர் புதியவனைத் தொடர்ந்து நியூஹாம் துணைமேயர் போல் சத்தியநேசன் உரையாற்றும் போது ‘இந்த மக்களுடைய அவலம் இரு தரப்பினராலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் மக்களுக்கு பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் வழங்க வேண்டிய அரசாங்கம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது. இந்த மக்களை கௌரவமாகப் பராமரித்து அவர்களை மிக விரைவில் மீளக் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது அதனை இலங்கை அரசு தட்டிக்கழிக்க முடியாது’ என்று குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘மிகப்பெரிய அவலம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு உணர்வு ரீதியான பொறுப்பும் கடமையும் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்ததை உடனடியாகச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். ஆனால் அவர்களது உதவி ஒரு சிறிய அளவினதாகவே இருக்கும்’ என்று தெரிவித்தார். அதனால் ‘என்ஜிஓ க்களை அரச நிறுவனங்களைச் சந்தித்து அவர்களை பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிய செயற்திட்டங்களை இயக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். சுனாமி காலகட்டத்தின் போதும் தேசம் சஞ்சிகை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
துணைமேயருடைய உரையை அடுத்து நிகழ்வில் கலங்துகொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.
அண்மையில் இலங்கை சென்று வன்னி முகாம்களைப் பார்வையிட்டுத் திரும்பிய எஸ் சூரியசேகரம் கருத்துத் தெரிவிக்கையில் தாங்கள் சென்று பார்வையிட்ட முகாம்கள் குறிப்பிடத்தக்க அளவு வசதிகளுடனேயே இருந்ததாகவும் ஆனால் அண்மையில் மேலும் ஒரு லட்சம் மக்கள் அதிகரித்து இருப்பதால் நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார். அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் மிகவும் அணுகக் கூடியவர் என்று தெரிவித்த சூரியசேகரம் நிவாரணப் பணிகள் அவர்களுக்கூடாக செய்யப்படுவது தவிர்க்க முடியாதது எனத் தெரிவித்தார். இதே கருத்தை வெளிப்படுத்திய இலங்கைக்கு விஜயம் செய்த குழுவிலும் இடம்பெற்றிருந்த ரி கொன்ஸ்ரன்ரைன் புலத்தில் உள்ளவர்கள் அங்குள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். அம்மக்கள் மிக மோசமான வாழ்நிலையை எதிர்நோக்கி இருப்பதாகத் தெரிவித்த கொன்ஸ்ரன்ரைன் புலம்பெயர்ந்த சமூகம் அவர்களது வாழ்நிலையை மேம்படுத்த இயலுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
‘இலங்கை அரசாங்கம் ஒரு இனவாத அரசாங்கம். அது இனப்படுகொலை புரிகிறது. இங்குள்ள நீங்கள் அதனைச் சொல்லத் தயாராக இல்லை.’ என்று குற்றம்சாட்டிய சபா நாவலன் ‘அங்கு நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இனவாத அரசு உங்களை அதற்கு அனுமதிக்காது. அப்படி எதாவது செய்வதாக இருந்தாலும் அதனை கைக்கூலிகளாக இருந்தே செய்ய முடியும்’ எனத் தெரிவித்தார். சபா நாவலன் தொடர்ந்தும் பேசுகையில், ‘ஏசியன் டெவலொப்மன்ற் பாங்க் போன்ற பல்வேறு என்ஜிஓ க்கள் மூட்டைமூட்டையாக பணத்தைக் கொண்டு அலைகிறார்கள். ஆனால் இனவாத அரசாங்கம் அவர்கள் யாரையும் அந்த முகாம்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை’ எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ‘இனவாத அரசாங்கம் மக்களை அடைத்து வைக்கிறது. அவர்களுக்கு இப்ப புத்தகம் கொடுக்கிறம் என்றதெல்லாம் எப்படிப் போகும் எப்படிப் பயனளிக்கும்’ என்றும் சந்தேகம் எழுப்பினார்.
‘இன்று ஏற்பட்டுள்ள நிலைமை அரசியல் சார்ந்ததாக இருந்தாலும் நாங்கள் இங்கு அரசியல் விவாதம் ஒன்றை நடத்த விரவில்லை. அவலத்திற்கு உள்ளான மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியே பேச வந்துள்ளோம்.’ என்று தனது கருத்தை வெளியிட்டார் டேவிட் ஜெயம். இவர் வன்னி நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கருத்தைப் பலரும் பிரதிபலித்தனர்.
அதே கருத்தை வெளியிட்ட எஸ் முருகையா முடிந்த அளவில் சிறிய அளவில் செய்யப்படும் உடனடி உதவிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். தேசம்நெற் மேற்கொண்டுள்ள நூல் அன்பளிப்பு போன்றவை மிகுந்த பலனளிக்கும் என்று குறிப்பிட்ட முருகையா சூரியசேகரம் அவர்களிடம் முகாமில் இருந்த மாணவர்கள் புத்தகம் தரும்படி கேட்டதை அங்கு சுட்டிக்காட்டினார்.
‘போருக்கு உதவி புரிந்த புலத்து தமிழர்கள் வன்னி மக்கள் உதவியைக் கேட்கும் போது செய்யத் தயாரில்லாதவர்களாக உள்ளனர்’ எனக் குற்றம்சாட்டினார் ரி சோதிலிங்கம். ‘இன்று புலத்துதமிழர்கள் யுத்த முனையில் இருந்து உயிர்காக்க ஓடி வந்த மக்களை துரோகிகளாகப் பார்க்கின்றனர். இந்த மக்கள் பற்றிப் பேசுவது அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளாமல் எதிர்காலத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் பற்றிக் கதைப்பது அர்த்தமற்றது’ என்றும் குறிப்பிட்ட சோதிலிங்கம் ‘ஒரு செயற்குழு உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட வேண்டும்’ என்றும் கூறினார்.
இதே கருத்தை ஆதரித்த ஈசன் அரசாங்க அதிபருக்கு ஊடாகவோ எவ்வகையிலோ உதவிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறூத்திய அவர் இலங்கை அரசாங்கம் முகாம்களை சர்வதேச தரத்தில் வைத்திருக்கவில்லை என்றும் முகாம்களில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாயும் குற்றம்சாட்டினார். உடனடி உதவிகள் உடனடியாகவே செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
‘நீங்கள் உதவிகளைப் பெற்று நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறீரகள். ஆனால் ஏற்கனவே சேர்க்கப்பட்ட பொருட்கள் வணங்கா மண் கப்பலில் உள்ளது. நீங்கள் ஏன் அந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய முயற்சி எடுக்கக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பினார் எஸ் ஆர் நிஸ்தார் மொகமட். ‘வணங்கா மண் ஏற்பாட்டாளர்களுடன் கதைத்து இலங்கை அரசாங்கத்துடனும் கதைத்து அந்தக் கப்பலில் உள்ள பொருட்களை இலங்கைக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா இஸ்லாமிக் போறத்தைச் சார்ந்த மஹ்சூர் தனது கருத்தை வெளியிடுகையில் இஸ்லாமிக் போறம் மேற்கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டதுடன் ‘பல்வேறு பிரிவுகளாக அல்லாமல் இணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றாகச் செயற்பட முன்வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். தவறான நோக்கங்களுக்காக இருந்தாலும் எல்ரிரிஈ இன்று ஒற்றுமைப்பட்டு அவர்களுடைய போராட்டத்தை உயிரோட்டமாக வைத்துள்ளது’ என்று குறிப்பிட்ட அவர் ‘ஒன்றிணைந்து செயற்பட நாமும் முன்வர வேண்டும்’ என வலியுறுத்தினார்.
‘வன்னி மக்களுடைய இந்த அவலத்திற்கு இலங்கை அரசும் புலிகளும் சமபொறுப்புடையவர்கள்’ என்று தன் கருத்தை வெளியிட்ட த ஜெயபாலன் ‘இலங்கை அரசு இனவாத அரசு என்பதும் அது இவ்வாறுதான் நடந்த கொள்ளும் என்பதும் 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் கண்ட அனுபவம். அது பற்றி தமிழ் மக்களுக்கு வகுப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய அவல நிலைக்கு இரு தரப்பினருமே பொறுப்பு’ என்று ஜெயபாலன் குற்றம்சாட்டினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ஒரு பொட்டலத்திற்காக எத்தினை கைகள் போட்டி போடுகின்ற நிலையை நாம் உருவாக்கி விட்டுள்ளோம். அந்தக் கைகளில் ஒன்று எம் குழந்தைகளாக இருந்தால் நாம் தாங்குவோமா?’ என்று கேள்வி எழுப்பிய அவர் போராட்டம் தத்துவம் பற்றி நாம் இங்கிருந்து நாட்கணக்கில் கதையளக்கலாம் ஆனால் அந்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘நாம் நமது பிள்ளைகளுக்கு தனியார் கல்வி, கிரம்மர் ஸ்கூல் என்றெல்லாம் நேரமில்லாமல் ஓடித் திரிகிறோம். ஆனால் அந்த முகாமில் உள்ள மாணவர்களுக்கு அடிப்படைக் கல்விக்கு எம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பதற்காக தேசம்நெற்றும் சிந்தனை வட்டமும் இணைந்து புலமைப்பரிசில் நூல்களை முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது எமக்கு ஏற்பட்டுள்ள குற்ற உணர்வினைக் களையவும் ஒரு வடிகாலாகிறது எனத் தெரிவித்தார் ஜெயபாலன். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘அம்மக்களுடைய தேவைகள் மிக அதிகம் அதனை ஒரு தனி அமைப்பாகவோ ஒரு சிலராலோ செய்துவிட முடியாது. அதனால் இயலுமானவர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை தாங்கள் அறிந்த வழிகளில் உதவிகளை மேற்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக ஒரே கொடியின் கீழ் என்பதெல்லாம் யதார்த்தமற்றது’ என்றும் தெரிவித்தார். ‘முதலில் வன்னி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அவர்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.’ என்று கூறி தனது கருத்தை நிறைவு செய்தார் ஜெயபாலன்.
இறுதியாகக் கருத்து வெளியிட்ட தமிழர் தகவல் நடுவத் தலைவர் வரதகுமார், ‘இன்று ஏற்பட்டுள்ள அவலநிலை அரசினாலேயே கையாள இயலாதநிலையில் உள்ளது. தற்போது பெரும்பாலான என்ஜிஓ க்கள் வவுனியா முகாம்களுக்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்கின்றனர்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘இன்றைய இவ்வாறான சந்திப்பு மிகவும் அவசியமானது என்றும் புலம்பெயர்ந்தவர்கள் உடனடி உதவிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்’ என்றும் தெரிவித்தார். தேசம்நெற் ஊடகம் என்ற வகையில் இம்மக்கள் தொடர்பாக முக்கிய பொறுப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த வரதகுமார் ‘அங்குள்ள மனித உரிமை விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். ‘அந்த மக்கள் கைவிடப்பட்ட மக்கள். அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டக் கூடியவர்கள் புலம்பெயர்ந்த மக்களே’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சந்திப்பின் இறுதியில் அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான குழுவொன்றை அமைப்பது என்றும் அதற்கான சந்திப்பினை அடுத்த இரு வாரங்களிற்குள் தேசம்நெற் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.