உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட மனித அவலம் வன்னி மக்களை நீண்ட துயர்மிகு வாழ்விற்குள் தள்ளியுள்ளது. இளம்தலைமுறை மாணவர் சமூகம் காணாமல் போய்விட்டது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களும் அங்கங்களை இழந்தவர்களுமாக வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களுக்கு பல்வேறு வகையிலும் கைகொடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உள்ளது. இது உடனடியான நாளாந்த வாழவியல் தேவைகளுடன் மட்டுப்படுத்தப்படாமல் நீண்டகால நோக்கிலும் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
இந்நிலையில் ஏப்ரல் 4ல் வன்னிப் பகுதி வலயக் கல்விப் பணிப்பாளர் த மேகநாதன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் 1057 மாணவர்கள் (மார்ச் இறுதிப்பகுதி புள்ளிவிபரம்) இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கபக்பட்ட 13 நலன்புரி முகாம்களில் இருப்பதாகவும் அவர்களுக்கான பாட நூல்களை வழங்கி உதவுமாறும் தேசம்நெற்றைக் கேட்டுக்கொண்டார்.
தற்போது நலன்புரி முகாம்களில் உள்ள மாணவர்கள் மிகவும் கடினமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றீர்கள். அதற்கு மத்தியிலும் அவர்கள் கல்வியை கைவிடாமல் தொடர்வது மிக மிக அவசியம். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது முதுமொழி மட்டுமல்ல உண்மையானதும் கூட. ஒரு சமூகத்தின் அத்திவாரம் அந்த சமூகத்தின் இளம் தலைமுறையினருக்கு வழங்கப்படும் கல்வி. அது பரீட்சையுடன் மட்டும் முடிந்துவிடாது.
புலம்பெயர்ந்து வாழும் உங்கள் உறவுகளாகிய நாம் அவர்கள் எதிர்கொள்ளும் மிகத்துயரமான வாழ்வை எண்ணி வேதனைப்படுகின்றோம். சிலசமயம் குற்ற உணர்வுக்கும் உள்ளாகிறோம். அக்குற்ற உணர்வில் இருந்து எம்மை சற்று விடுவித்துக் கொள்ள அவர்களுக்கு ஆறுதலாக இருக்க நினைக்கின்றோம். அந்த வகையில் சிறுவர் சிறுமியராகிய அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு படிப்பதற்கு உதவும் வகையில் இப்பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கும் பொறுப்பை தேசம்நெற் ஆசிரியர் குழு ஏற்றுக்கொண்டு உள்ளது.
பரீட்சைக்காக மட்டுமல்ல மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள இப்புத்தகம் உதவியிருக்குமானால் அது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
இப்பாடநூல் பதிப்பினை சிந்தனை வட்டம் மேற்கொள்கிறது. இப்பாடநூலிற்காகும் செலவின் மூன்றில் ஒரு பகுதியான 200 000 ரூபாய்களைச் சிந்தனை வட்டம் பொறுப்பேற்பதாக அதன் அமைப்பாளார் புன்னியாமீன் தெரிவித்து உள்ளார். மிகுதியான 400 000 ரூபாயை தேசம்நெற் ஆசிரியர் குழுவினர் பொறுப்பேற்கின்றனர். ஆனால் தற்போது மாணவர் தொகை அதிகரித்து இருப்பதால் இத்தொகை அதிகரிக்க வேண்டி இருக்கும்.
மேலும் மாணவர்களின் கல்விக்கான மேலதிக பாடப்புத்தகங்களை வழங்கவும் சிந்தனை வட்டம் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
இலங்கையில் அரசாங்கப் பரீட்சை என்ற அடிப்படையில் 03 பிரதான பரீட்சைகள் நடைபெறுகின்றன.
1. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
2. க.பொ.த சாதாரணதர பரீட்சை
3. க.பொ.த உயர்தர பரீட்சை
இப்பரீட்சைகளுள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை பாடசாலை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதலாவது பரீட்சையாகும். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களை உயர்தர பாடசாலைகளுக்குத் தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப் பணம் வழங்குவதற்குமான பரீட்சையாக அமைந்துள்ளது. இப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெறும் மாணவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் பிரபல்யமான பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவர். அதேநேரம், இப்பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரம் சித்தியடையும் வரை மாதந்தோறும் (தற்போது) ரூபாய் 500 உதவிப் பணமாக அரசாங்கத்தால் வழங்கப்படும். உரிய மாணவன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டாலும் இத்தொகை அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையானது ஒரு போட்டிப் பரீட்சையாகும். சராசரியாக ஆண்டொன்றுக்கு 70000 மாணவர்கள் மட்டில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக தோற்றுவர். இவர்களுள் சுமார் 3500 மாணவர்கள் மட்டில் சித்தியடைவர்.
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள 1057 மாணவர்கள் 13 இடைத்தங்கல் முகாம்களில் தரம் 05 பரீட்சையை எழுதுகின்றனர். இம்மாணவர்களுக்கு மேலதிக உசாத்துணை வழிகாட்டிகளான தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் இணைந்து புதிய பாடத்திட்டத்திற்கமைய (2009ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்திற்கமைய முதற் தடவையாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.) 30 மாதிரி வினாத்தாள்களையும் நான்கு வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கவுள்ளது.
மே 2ல் (எதிர்வரும் சனிக்கிழமை) மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு என்ற தலைப்பிலான கலந்தரையாடல் ஒன்றினை தேசம்நெற் ஈழவர் திரைக்கலை ஒன்றியத்துடன் இணைந்து மேற்கொண்டு உள்ளனர். எதிர்கால உதவி நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்படுவதுடன் உதவி வழங்க முன்வரும் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றியும் இச்சந்திப்பில் ஆராயப்பட உள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளர் த மேகநாதனால் சிந்தனை வட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மடல்:
.
Thirumalai vasan
அரசியல் அலசல்களுக்கும் இன இழிப்புக்கு எதிரான போராட்டங்களுக்கும் அப்பால் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வேறும் பல பணிகள் முன்னெடுக்க வாய்ப்புள்ளது என்பதை இந்தப் பாடநூல் விநியோக உதவித்திட்டம் வெளிக்காட்டுகின்றது. தேசம் ஆசிரியர் குழு மாத்திரமன்றி அதற்கு பின்னூட்டக்காரர்களாகவும்> வாசகர்களாகவும் இருந்து எழுத்துப்போர் புரியும் தேசம் நண்பர்களும் எதிரிகளும் கூட இப்பொதுத்திட்டத்தில் இணையலாம். இத்தகைய சமூக நலன்களுக்கு உதவும் வகையில் தேசம் ஒரு வங்கிக் கணக்கைத் திறந்து அந்த விபரங்களை வெளியிடவேண்டும். சிறுதுளி பெருவெள்ளமாக இந்த நிதியம் நிச்சயம் வளர்ச்சிபெறும். எனது பங்களிப்பாக நானும் இந்நிதியத்திற்கு 50 பவுண்களை வழங்க விரும்புகின்றேன். அதனைச் செலுத்தும் பிரித்தானிய வங்கிக்கணக்கொன்றின் விபரத்தைத் தயவுசெய்த தெரிவிக்கவும். பிறருக்கும் அது பயன்படும். தொடர்ந்து இத்தகைய சமூக நலன்சார்ந்த பணிகளுக்கு உதவலாம்.
முஹம்மட் பரீட்
தேசம் நெட் சிந்தனை வட்டம் மேற்கொள்ளும் இந்நடவடிக்கையை பாராட்டுகிறோம்.
ஏனைய உதவி கோரல் அழைப்புகளை விட உதவி கோரா விட்டாலும் ஆதார பூர்வமாக இச்செய்தியை வெளியிட்டுள்ளமை சிறப்பாக உள்ளது.
ஜெயபாலன் அண்ணா
இது விடயமாக இலங்கைத் தொடர்பிற்கும் முகவரி ஒன்றைத் தந்தால் தங்களால் கட்டப்படும் குருவிக்கூட்டிற்கு சிறு துரும்புகளையாவது எமக்கும் சேர்க்க முடியும் அல்லவா?
தங்கள் முயற்சிகள் தரம் 5உடன் முடிந்து விடாமல் தேவை உணர்ந்து பல்கலைக்கழக மட்டம் வரை தொடருங்கள்
– முஹம்மட் பரீட் –
பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராதனை
accu
மிக ஆரோக்கியமான முயற்சி. என்னாலான உதவி செய்ய அவா. கனடாவில் உள்ள சிலரையும் உதவி கோர முடியும். விபரங்கள் தேவை. தயவு செய்து அறிவிக்கவும். நன்றி. அக்கு.
vasakan
நல்ல விடயம். ஆனால் எச்சரிக்கை. சுனாமி போல் ஆகிவிடக்கூடாது. தேசம் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பார்த்திபன்
நல்ல விடயம். எம் மக்களக்கு உதவ தேசம் நெற் மூலம் வாசகர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கு வழி சமைத்த திரு மேகநாதன் மற்றும் புன்னியாமீன் ஆகியோருக்கும் வாசகர்கள் சார்பாக நன்றிகள். விரும்புவோர் உதவி செய்ய இதற்கென தேசம்நெற் ஒரு வங்கிக்கணக்கை ஆரம்பித்து அதன் விபரங்களை இணைத்தால் நல்லது. இணையம் மூலம் பணம் செலுத்தவும் வேண்டிய தகவல்களை இணைத்து விடவும்.
PLO
இது இந்தக்காலகட்டத்தில் செய்யப்படவேண்டடிய மிக முக்கியமான விடயம். வெளிநாடுகளில் வாழும் நாம் எமது உறவுகளான எதிர்கால சந்ததியினர்க்கு எம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும். இவ்விடயத்திற்கு உதவி செய்ய விரும்புவோர் அனைவரும் பங்களிக்க தக்க வகையில் ஒரு ஏற்பாட்டை தேசம் நெற் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இம்முயற்சியை ஆரம்பித்து வைத்த திரு. மேகநாதன் திரு.புன்னியாமீன் ஆகியோருக்கு மிக மிக நன்றிகள்
indiani
உங்கள் முன்முயற்ச்சியையும் சரியான நேரத்தில் செய்யும் முயற்ச்சிக்கும் எனது பாராட்டுக்கள் மேலே பின்னுட்டம் விட்டவர்கள் போன்று நானும் தேசம் ஊடாக உதவி செய்ய முன்வருகிறேன்.
எதிர்வரம் சனிக்கிழமை நடைபெறும் உங்கள் கூட்டத்தில் ஒன்சேர்ந்து செய்யும் முயற்ச்சிகள் பற்றி கலந்தாலோசிக்கவும் பொதுவான திறந்த எல்லோரும் நேரடியாக பார்க்கக் கூடிய வங்கி கணக்கை ஆரம்பியுங்கள் தொடர்ந்து சேர்ந்து இயங்குவோம் முடிந்தவரையில் உதவிகள் செய்வோம் புலிகள் புலிகளின் ஆதரவாளர்களையும் உங்களோடு ஒன்றிணைக்கவும்.
முரண்பாடுகொண்டவர்களும் சேர்ந்து இயங்க சேர்ந்து விமர்சித்து பின்னர் ஒன்றுபட்டு இயங்க முயற்ச்சிக்கவும்.
தேசம் செய்யும் முயற்ச்சிக்கு நன்றிகள்