உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

அதிகரிக்கும் மதுபான சாலைகள் – கிளி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்! ஜனாதிபதிக்கு பறந்தது மகஜர் !!

அதிகரிக்கும் மதுபான சாலைகள் – கிளி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்! ஜனாதிபதிக்கு பறந்தது மகஜர் !!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறும் கோரி கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகிய இந்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. பேரணியைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சு. முரளிதரனிடம் மத தலைவர்கள் இணைந்து கையளித்தனர்.

ஏற்கனவே கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மதுபான சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தள்ளமையானது குடும்ப வன்முறைகள், தொடங்கி வாள்வெட்டு பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டிருந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிகள் சமூக பிறழ்வுகளை மீள தூண்டியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மக்களின் நம்பிக்கையை வென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூட கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான கடைகள் பற்றியோ அதனால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் பற்றியோ இதுவரை வாய்திறந்தது கிடையாது. “கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான சாலைகள் இல்லை. அங்கே மதுபான சாலைகளை திறக்க வேண்டும்” எனக் கோரியவர் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சி. சிறிதரன் என முன்னாள் யாழ்.மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

பெரும்பாலும் பாடசாலைகள் அமைந்துள்ள சுற்றுவட்டத்திற்குள் மதுபான சாலைகள் எவையுமே அமைக்கப்பபடக்கூடாது என வலியுறுத்தப்படுகின்றது. இருந்த போதிலும் கூட கிளிநொச்சியின் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் காணப்படும் நகரப்பகுதிக்குள் 07 வரையான மதுபான கடைகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இவற்றுள் வீரா எனப்படும் பெயர் கொண்ட மதுபானசாலைக்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தவர் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எலோன் மஸ்கின் இலங்கை முதலீடு ? அமெரிக்காவின் ஜனாதிபதி எலோன் மாஸ்கா? ‘இல்லவே இல்லை’ டொனால் ட்ரம்!

எலோன் மஸ்கின் இலங்கை முதலீடு ? அமெரிக்காவின் ஜனாதிபதி எலோன் மாஸ்கா? ‘இல்லவே இல்லை’ டொனால் ட்ரம்!

 

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட டொனால் ட்ரம் பதவியேற்கு முன்னரே அவரது ஆலோசகரகா வரவுள்ள உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மாஸ்க் சிக்கல்களை உருவாக்கி வருகின்றார். எலோன் மஸ்கின் கருத்துக்கள் நடவடிக்கைகள் அவர் அமெரிக்க ஜனாதிபதி என்ற பாங்கில் கருத்துக்களை முன்வைப்பதாக உள்ளது. அதனாலேயே அக்கேள்வி முன்வைக்கப்பட்டது. அதனை இல்லவே இல்லை என டொனால் ட்ரம் மறுத்திருந்தார்.

இதற்கிடையே எலோன் மாஸ்க் தனது Starlink செய்மதி இணைய சேவையை இலங்கையில் இயக்குவதற்கான உரிமைத்தைப் பெற்றிருந்தார். இதன்படி இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் இத்திட்டத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கான சட்டத்தையும் பாராளுமன்றம் செய்துள்ளது. இருப்பின் இச்சேவைகளை வழங்குவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய எலோன் மாஸ்க்கின் நிறுவனம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆளும் என்பிபி அரசாங்கம் எலோன் மஸ்க் விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

தென்னாபிரிக்காவில் பிறந்த கனேடியரான எலோன் மாஸ்க் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி, அமெரிக்காவில் பிறக்காத எவரும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது என்றார் டொனால் ட்ரம். ஜனவரியில் பதவியேற்கவுள்ள டொனால்ட் ரம்ப்பிடம், எலோன் மாஸ்க் என்றாவதொரு நாள் அமெரிக்காவின் ஜனாதிபதியாவாரா? என்று கேட்ட போது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

உலகத்தின் இரண்டாவது தொழில்நுட்ப கோடீஸ்வரரான எலோன் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். எலோன் மஸ்க்கின் நிறுவனங்கள் மற்றும் சேவைகள் போய்ச் சேராத நாடுகளே இல்லை எனலாம். மேம்படுத்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற இவரது முயற்சியால் பல புதுமையான கண்டுபிடிக்களை இவர் தலைமையிலான நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஆளில்லா ரக்சி, கண் பார்வையற்றவர்களுக்கான பார்வை வழங்கும் கருவி, தானியங்கி ரெஸ்லா கார்கள் எனப் பல கண்டுபிடிப்புக்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற டொனால்ட் ரம்ப்பின் வலதுகரமே எலோன் மஸ்க். ரம்பின் ஆலோசகராக செயற்படும் எலோன் மஸ்க் குடியரசுக்கட்சி மீது கொண்டுள்ள செல்வாக்கை பார்த்து மஸ்க்கை ‘ஜனாதிபதி மஸ்க்’ என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர் விமர்ச்சிக்கின்றனர்.

தமிழக அகதிகள் பற்றி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மௌனம்! ஆளுநர் அவர்களைக் அழைத்துவர தீவிர முயற்சி!

தமிழக அகதிகள் பற்றி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மௌனம்! ஆளுநர் அவர்களைக் அழைத்துவர தீவிர முயற்சி!
வடக்கு கிழக்கிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதற்கு கடிதம் கொடுக்கும், காரணம் கண்டுபிடிக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தமிழக முகாம்களில் அடிப்படை வசதிகள் உரிமைகள் இல்லாமல் வாழ்ந்துவரும் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரும் விடயம் தொடர்பில் மௌனமாகவே உள்ளனர். மாறாக இந்தியாவில் தொடர்ந்து தங்கியுள்ளவர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி வடமாகாண ஆளுநர் வேதநாயகன் யுஎன்எச்சிஆர் ருNர்ஊசு ரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேவதநாயகன் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் தலைவரான சஞ்சித்த சத்தியமூர்த்தியோடு டிசம்பர் 22 இல் கலந்துரையாடினார்.
தமிழகத்தின் பல்வேறு முகாம்களிலும் முகாம்களிற்கு வெளியேயும் 3 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்கிறார்கள். 1992 ஆம் ஆண்டளவிலேயே பெருந்தொகையானவர்கள் யுத்தத்திலிருந்து தம்மை காப்பாற்றும் பொருட்டு தமிழகத்திற்கு அகதியாக சென்றனர். இவர்களில் ஒரு தொகுதியினரே நாடு திரும்பியுள்ளனர். தமிழக அகதி முகாம்களில் இரண்டு தலைமுறையாக வாழும் இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் இலங்கை திரும்ப விரும்பவில்லை. இவர்களின் பிள்ளைகள் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, தொழில் புரிவதோடு அங்கேயே திருமணம் முடித்து அங்கேயே அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டார்கள்.
அவ்வாறே மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக சென்றுள்ளனர். மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்களின் இரண்டாவது தலைமுறையினரும் தங்களுடைய வாழ்க்கையை தங்கள் பெற்றோர் அகதியாக வந்த நாடுகளிலேயே அமைத்துக் கொண்டுவிட்டார்கள். அத்துடன் அவர்கள் வாழும் நாடுகளின் குடியுரிமையும் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது. அவர்களும் பெரும்பாலும் இலங்கைக்கு திரும்பி வர விரும்பவில்லை.
மாறாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை. தமிழக முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் நீண்டகாலமாக தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும்படி கோருகின்றனர். அவர்களும் கூட இந்தியப் பொருளாதாரத்திற்கு தங்களுடைய பங்களிப்பை செய்து வருகின்றனர்.
எவ்வாறெனினும் சுயவிருப்பின் பேரில் இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அவர்களை அழைத்து வருவதற்கான திட்டங்களை ஆலோசிப்பதும் அவசியமானதேயாகும். மேலும் தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு இலங்கையில் நிரந்தர வாழ்விடமோ, தொழிலோ இல்லாமையால் அவர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்ப விரும்பவில்லை.
ஒரு வேளை தமிழகத்திலிருந்து அவர்கள் அழைத்து வரப்படும் பட்சத்தில் இலங்கையில் அவர்களுக்கான மறுவாழ்த்திட்டம் ஒன்றை உருவாக்கி அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதத்தை வழங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்தலுக்கான அமைப்பானது உலகெங்கிலும் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்கள் தமது சுயவிருப்புடன் சொந்த நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை இலவசமாக செய்து கொடுக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்தலுக்கான
அமைப்பானது 100 மேற்பட்ட நாடுகளில் தனது அலுவலகத்தை கொண்டுள்ளது. சொந்த நாட்டிற்கு சுய விருப்புடன் மீள் திரும்பல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு திட்டத்தின் அகதிகள் நாடு திருப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும். இத்திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்ட்ட பலர் தங்கள் சொந்த விருப்பில் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ் அரச சார்பற்ற முறையில் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு, சட்டப்பூர்வமாக நாடு திரும்புவதற்கான ஆவணங்களையும் ஏற்பாடு செய்வதோடு விமானப் பயண ஒழுங்குகள் மற்றும் பயணப் பொதி தொடக்கம் ஒழுங்குகளையும் செய்து கொடுக்கும். மேலும் நாடு திரும்பியவர்களுக்கு தமது சொந்த இடங்களில் குடியமரவும் மற்றும் அவர்கள் தமது வாழ்வை தொடங்குவதற்கு உதவியாக ஆரம்ப கொடுப்பனவாக அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்குகின்றது. இதனை ஸ்ராற் கெல்ப் என அழைக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்பவர்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்கங்கள் ஊக்கத்தொகை வழங்குகின்றனர். ஜேர்மனியைப் பொறுத்தவரை 18 வயதிற்கு மேற்பட்டபவர்களுக்கு ஆயிரம் யூரோவும் குடும்பங்களுக்கு 4,000 யூரோக்களுக்கும் குறையாமலும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு 500 யூரோவும் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கு தலைக்கு ஒரு இலட்சம் ரூபாயும் விமானச் சீட்டும் வழங்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சனத்தொகை அடர்த்தி குறைந்த 5 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் வடமாகாணத்திலேயே உள்ளது. யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களே சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டங்கள். இம்மாவட்டங்களில் சகல வசதிகளோடுமான புதிய குடியிருப்புக்களை உருவாக்கி, நாடு திரும்பும் அகதிகளைக் குடியேற்ற முடியும். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஆலயங்கள், பழைய மாணவர்சங்கங்கள் தாங்கள் சேகரிக்கும் பெரும்தொகைப் பணத்தை வினைத்திறனில்லாமல் செலவழிக்கின்றனர். வடமாகாண அளுநர் இதற்கான நிதியம் ஒன்றை உருவாக்கி இந்நிதியை இந்த மக்களின் மீள் குடியிருப்புக்கு பயன்படுத்தப்பட முடியும்.

ரொஹின்யா அகதிகள் முல்லைத்தீவு கேபாப் பிளவு முகாம் கொண்டுவரப்பட்டனர்!

ரொஹின்யா அகதிகள் முல்லைத்தீவு கேபாப் பிளவு முகாம் கொண்டுவரப்பட்டனர்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடலில் தத்தளித்த ரொஹின்யா அகதிகள் கரையொதிங்கிய போதும் தற்போது தரையில் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டு, நேற்று கேப்பாப் பிளவு விமானப்படையினரின் தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளனர். 120 பேருடன் மியான்மரில் இருந்து புறப்பட்ட படகு பட்டினியில் ஐவர் மரணமடைய, டிசம்பர் 19இல் முள்ளிவாய்க்கால் கடற்பகுதியை அடைந்தது. மீனவர்களால் முதலுதவிகள் அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதணை செய்யப்பட்டு அன்று அந்த அகதிகள் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வெளிநாட்டு விவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அந்த அகதிகளை வரவேற்று அவர்களுக்கு வேண்டிய அடிப்படை மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிசெய்தார்.

மேலும் இவர்கள் திருமலை நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 12 மாலுமிகள் ஆட்கடத்தல் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட ஏனைய 103 பேரும் ஜமாலியா முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். டிசம்பர் 21இல் இவர்கள் மிரிஹனை இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி அளிக்காததால் அவர்கள் மீண்டும் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு நேற்று டிசம்பர் 23இல் முல்லைத்தீவு கேப்பாப்பிளவு விமானப்படைத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

படகோட்டும் போட்டியில் வெற்றி பெற்ற நெடுந்தீவு மாணவர்கள் !

படகோட்டும் போட்டியில் வெற்றி பெற்ற நெடுந்தீவு மாணவர்கள் !

படகோட்டும் போட்டியில் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்ட கொழும்புப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். வடமாகாணத்தின் தலைமைச்செயலர் எல் இளங்கோவனின் வேண்டுகோளுக்கு இணங்க நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களுக்கு ஒரு வாரப் பயிற்சி கொழும்பில் வழங்கப்பட்டு இருந்தது. அந்த ஒரு வாரப் பயிற்சியுடனேயே அவர்கள் களத்தில் இறங்கி இச்சாதனையைப் படைத்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் திவயன ஓயா நேவி ரோஇங் கிளப்பினால் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் கலந்துகொண்ட 42 மாணவர்களில் 32 மாணவர்கள் முதற்தடவையாக கொழும்புக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தங்களுடைய தந்தையர்களோடு பாடசாலைக்குச் செல்லுமுன் பயிற்சி பெற்ற இவர்களின் இரத்தத்தில் படகோட்டும் தறின் உள்ளதாக பார்வையாளர்கள் வியந்துள்ளனர். இவர்களுக்கு இந்த வாய்ப்பை அப்பிரதேச கடற்படையினர் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

வடக்கில் ஆபிரிக்க பெரும் நத்தைகள் ஜாக்கிரதை – பொன் ஐங்கரநேசன்

வடக்கில் ஆபிரிக்க பெரும் நத்தைகள் ஜாக்கிரதை – பொன் ஐங்கரநேசன்

வடமாகாணத்தில் சில இடங்களில் ஆபிரிக்க பெரு நத்தைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இலகுவாக இனம்பெருகும் இவை பயிர்களுக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செய்தியாளர் சந்திப்பில் பொன் ஐங்கரநேசன் தெரிவித்தார். டிசம்பர் 22 கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஒரே நத்தையில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருப்பதால் இவை இரண்டுமே முட்டைகளை உருவாக்கக் கூடியவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

5 முதல் 6 ஆண்டுகள் உயிர்வாழும் இந்நத்தைகள் தமது ஆயுள்காலத்தில் 1000 வரையான முட்டைகளையிடும் என்றும் இவற்றை இரையாக உட்கொள்ளும் உயிரினங்கள் இலங்கையில் இல்லை என்றும் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார். தனிப்பட்ட ஒருவர் விளையாட்டாக இங்கு கொண்டுவந்தது தற்போது வினையாகி இருப்பதாகத் தெரிவித்த ஐங்கரநேசன், இந்நத்தைகள் மனிதரைத் தாக்கும் கிருமிகளைக் காவக்கூடியவை என்றும் இவற்றை கைகளால் கையாளமால் பிடித்து உப்புநீரில் அமிழ்த்தி அழிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின்; பாதுகாப்புச் செலவீனம் – இரண்டு லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்கும் என்பிபி திட்டத்திற்குப் போதுமானது!

முன்னாள் ஜனாதிபதிகளின்; பாதுகாப்புச் செலவீனம் – இரண்டு லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்கும் என்பிபி திட்டத்திற்குப் போதுமானது!

 

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட முப்படைகளின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது இது தொடர்பான அறிவிப்பை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டிருந்தார். இந்தச் செலவீனம் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்கும் என்பிபி இன் திட்டத்திற்குச் சமனானது என மதிப்பிடப்படுகின்றது. இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இது மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் பழிவாங்களுக்காக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் முறையான காரணிகளை குறிப்பிட வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தியுள்ள பொலிசாருக்காகான வருடாந்த செலவீனத்திற்காக மக்கள் பணத்திலிருந்து ரூ. 1,100 மில்லியன் (வருடாந்தம் ரூ. 110 கோடி – மாதாந்தம் சுமார் ரூ. 9 கோடி) செலவிடப்பட்டமை பிரமுகர் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு மாத்திரம் வருடாந்தம் ரூ. 326 மில்லியன் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸாரின் ஒரு பகுதியின் 13ம் திகதி மீள பொலிஸ் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தலையெடுக்கும் மலேரியா – கிளிநொச்சியில் ஒருவர் பாதிப்பு !

மீண்டும் தலையெடுக்கும் மலேரியா – கிளிநொச்சியில் ஒருவர் பாதிப்பு !

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவுவதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து இந்த அறிவிப்புவிடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12ம் திகதி ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து நாடு திரும்பியவர், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவேளையிலே மலேரியா தொற்று இருப்பது தெரியவந்தது.

இலங்கை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றியுள்ள நாடுகளால் இலங்கையில் அவ்வப்போது மலேரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இனங்காணப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருவோர் மலேரியா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். மாலைதீவு தவிர்ந்த கிழக்கு மற்றும் ஆபிரிக்க, தென்னாசிய நாடுகளில் மலேரியா நோய்த் தாக்கம் இன்றும் உள்ளது.

இலங்கையில் இருந்து குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் இவ்வாறான நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகி குறித்த நாடுகளுக்கு சென்று வந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு மோகத்தினால் முகவர்களாக பயணத்தை மேற்கொள்பவர்கள் ஆபிரிக்க நாடுகளுக்கு ஊடாகவும் பயணிக்கின்றனர். இவ்வாண்டு முற்பகுதியில், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் செல்ல முற்பட்டு கானாவில் தங்கியிருந்த போது காய்ச்சல் வந்து அங்கேயே மரணமானார். அவரோடு தங்கியிருந்த மற்றையவர் அதற்கு முன்னரே பயணம் சரிவராது எனத் தெரிந்து நாடுதிரும்பிவிட்டார்.

 

உயிர் பறிக்கும் செல்ஃபி மோகம் !

உயிர் பறிக்கும் செல்ஃபி மோகம் !

செல்ஃபி மோகத்தால் இருவர் உயிரிழந்த சம்பவம் அனுராதபுரத்தில் நேற்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது. அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க இரத்தினபுரியிலிருந்து வந்த 18 வயதான மகளும், 37 வயதான தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிவேக ரயிலின் முன் அநுராதபுரம் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

செல்பி மோகத்தால் இலங்கையில் தொடர்ந்தும் விபத்துக்கள் பதிவாகிவருகின்றன. அண்மையில் ஓடும் ரயிலிருந்து புகைப்படம் எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண்ணொருவர் மரக்கிளை மோதி விபத்துக்குள்ளானார்.

2023ஆம் ஆண்டு கிளிநொச்சி ஊடகவியலாளர் நிபோஜன் ரயிலிருந்து காணொலி பதிய முற்பட்டவேளையில் தவறிவிழுந்து உயிரிழந்தார். இவ்வாறான மரணங்கள் தொடர்ச்சியாக ஆங்காங்கே பதிவாகிவருகின்றன.

இதேவேளை கைத்தொலைபேசி பாவித்துக்கொண்டு, பாடல் கேட்டுக்கொண்டு ரயில் கடவையை கடக்க முற்படுதல், நீர் நிலைகள், மலைகள் போன்ற சுற்றுலாத் தளங்களில் அட்வென்ஜர் என்ற பெயரில் புகைப்படங்கள் எடுத்தல் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களும் தொடர்ந்தும் பதிவாகிவருகின்றன.

இவ்வாறான மரணங்கள் பொறுப்புணர்வுடன் நடப்பதன் மூலம் தவிர்க்கப்பட வேண்டியவை. இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் சிறுவயதிலேயே பாடசாலைப் பிள்ளைகள் மத்தியில் விதைக்கப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களில், பொது இடங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் வழிப்புணர்வு கருத்துக்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆசிரியர்களைப் பேசி அனுப்பிய அதிகாரியின் நடத்தையைக் கண்டு வெட்கப்பட்ட ஆளுநர் வேதநாயகன்!

ஆசிரியர்களைப் பேசி அனுப்பிய அதிகாரியின் நடத்தையைக் கண்டு வெட்கப்பட்ட ஆளுநர் வேதநாயகன்!

தனக்குக் கீழுள்ள சில அதிகாரிகளின் செயற்பாடுகளைக் கண்டு தான் வெட்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் நா வேதநாயகன் டிசம்பர் 22இல் தெரிவித்துள்ளார். கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கலாச்சாரப் பெருவிழாவிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் வடக்கில் சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவது சவால் எனத் தெரிவித்தார். ஆளுநர் என்ன நடந்தது என்பதையும் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

ஆளுநர் வேதநாயகன், தொலைபேசியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அடுத்த நிலையில் உள்ள ஒருவரை அழைத்து, ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை அவரிடமே அனுப்பியும் உள்ளார். குறித்த அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, ஆசிரியர்களை இரவு 7 மணிக்குத் தான் சந்தித்துள்ளார். அப்போது ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசித் திருப்பி அனுப்பி இருக்கின்றார். “இவ்வாறான அலுவலர்கள் எங்களுடைய மாகாணத்தில் எனக்குக் கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இன்றைய இளையோர் மற்றவர்களை மதிக்கின்ற உதவி செய்கின்ற விழுமியங்களை வெளிப்படுத்துகின்றார்கள் இல்லை எனக் குறைப்பட்டார், தவறுகளை தட்டிக்கேட்க முடியாத நிலை இருக்கின்றது எனத் தெரிவித்தார். வீதிகளில் குப்பை போடுகின்றோம், வெள்ள வாய்க்காலை மறித்து, கட்டிடங்களைக் கட்டுகின்றோம், ஒழுக்கமில்லாத சமூகமாக மாறிவருகின்றோம் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஆளுநர் வேதநாயகன். இந்தப் பண்பாட்டு விழாவிலும் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக வந்திருப்பதையும் மக்கள் சமூகம் தராததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.